Advertisement

ஜனக்நந்தினி திரும்பி அப்பாவை பார்க்க, தணிகைவேல் எவ்வளவு தள்ளி செல்ல முடியுமோ அவ்வளவு தள்ளி சென்று பேத்தியை ஆசுவாச படுத்தி கொண்டிருந்தார். பாரதிக்கு சைகை செய்து தண்ணீர் எடுத்து வர சொல்லி குடிக்க கொடுத்தார்.

பட்டு, பாவாடை சட்டை அணிந்திருந்தவளின்  உடை தளர்த்தி முகம் துடைத்து, முடியை ஒதுக்கி கிளிப் குத்திவிட்டார். ஜனக்நந்தினி, “இப்படி தான் என்னையும் வளர்த்தார்” என்றாள்.

“எல்லாம் இப்படி தான் மகளை வளர்ப்பாங்க” என்றான் ரகுராம்.

“என் அப்பா ஸ்பெஷல் தான்” மகள் சிலிர்த்துகொண்டாள்.

“என் பொண்ணும் இப்படி தாண்டி சொல்வா” ரகுராம் வெறுப்பேற்றி அவள் கையை கோர்த்துகொண்டான்.

“ஒன்னும் வேணாம் போங்க” அவள் கையை இழுக்க, கணவன் விட வேண்டுமே.

“ஏற்கனவே நமக்குள்ள பஞ்சாயத்து இன்னும் முடியல. இதையும் கூட்டாதீங்க” என்றாள் மனைவி.

“எல்லாம் நைட் பார்த்துப்போம். இப்போ சாமியை கும்பிடுடி” என்று இருவரும்  பூஜையில் கவனம் வைத்தனர்.

குறிப்பிட்ட நேரத்தில் அருணகிரி, ராமமூர்த்தி தம்பதி கைகளால் கட்டிட திறப்பு விழா முடிய, பெயர் பலகையை ஏற்றினர்.

“ஜனக் முகூர்த்தம்” என்று மிக பிரமாண்டமாக கட்டிடத்தின் மேல் உயர்ந்து நின்றது.

ரகுராம் அதை பார்த்தே இருந்தான். நிமிடமே அவன் நிற்க,  ஜனக்நந்தினி அவன் கை கோர்த்து கொண்டாள்.

“எழுந்துட்டோம் இல்லை” என்றான். குரல் கரகரத்து போயிருந்தது.

“நாம எப்போ விழுந்தோம்?” என்று மனைவி கேட்டாள்.

ரகுராம் அவளை பார்க்க, புருவம் உயர்த்தி அழகாக சிரித்தாள். கட்டிக்கொள்ள வேண்டும் போல பரபரத்தது. கட்டுப்படுத்தி அவள் கை நெறித்தான்.

“ரகு” என்று ராமமூர்த்தி அழைக்க, இருவரும் சென்றனர். மிச்சமிருந்த சிறு சிறு சடங்குகள் நல்ல படியே முடிய,  விருந்தினர்களும் குவிய ஆரம்பித்தனர்.

இன்றே வியாபாரமும் ஆரம்பிக்க, அதற்கான ஏற்பாட்டில் மொத்த குடும்பமும் மளமளவென இறங்கினர்.

புடவையில் எத்தனை விதம் உள்ளதோ அத்தனையும் அங்கு ரகம் ரகமாக பிரித்து அதற்கான பிரிவில்   அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ராஜேஸ்வரி பட்டுகளை வருடி எடுத்து கொடுக்க, ரகுராம் கவனிக்காதது போல் சென்றுவிட்டான்.

“பாட்டி போதும். நாங்க பார்த்துகிறோம். நீங்க போய் உட்காருங்க” என்று பேத்தி சொல்ல,

“இருக்கட்டும் பாப்பா. நான் உக்காந்துட்டு தானே செய்றேன்” என்றவர், அப்போது வந்திறங்கிய புடவைகளை அடுக்க எடுத்து கொடுத்தார்.

அருணகிரி மருமகளை அழைக்க, குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்தனர். அவள் ரகுராமை தேட, அவன் அவசரமாக வந்தான். மனைவி கையில் பணம் கொடுக்க, அவள் மாமனாரிடம் கொடுத்து புடவையை பெற்று கொண்டாள்.

கணவன் அவளுக்காக நெய்த புடவையை, ஆர்வத்துடன் அங்கேயே பிரித்து பார்த்தாள். மிகவும் பிடித்திருந்தது. மீனாட்சி குங்குமம் வண்ணத்திலான பட்டு அவளை கொள்ளையிட்டது.

ராமமூர்த்தி பில் எடுத்து கொடுக்க, அருணகிரி கல்லாவில் பணம் வைத்தார். ஜனக்நந்தினியை தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் வியாபாரம் செய்தனர்.

இறுதியாக ராஜேஸ்வரி பணத்துடன் அருணகிரி முன் வந்தார்.

குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அருணகிரி பணம் வாங்கி கொண்டு அவருக்காக தயாராக இருந்த புடவையை எடுத்து கொடுத்தார்.

அடுத்து உணவுக்கு அமர்ந்தனர். ஆட்கள் பரிமாறினாலும் ரகுராம், ராமமூர்த்தி முன் நின்றனர். தணிகைவேல் உணவுக்கு அமர, ராமமூர்த்தி ஸ்வீட்டை கைப்பற்றி கொண்டார்.

இலைக்கு முன் ராமமூர்த்தி முதல் ஆளாய்  நிற்க, தணிகைவேல் அரண்டு போய் மனைவியை தேடினார். ராமமூர்த்தி, “மாமா” என்றழைக்க,

‘ரைட் ஏதோ பண்ண போறார். எங்கடி போய் தொலைஞ்ச பாரதி?’ என்று மனைவியை வலை வீசி தேடி கொண்டிருந்தவர் பார்வையில் மருமகன் விழுந்தான்.

அடக்கப்பட்ட  சிரிப்புடன் வேறு பக்கம் செல்ல, “எல்லாம் கூட்டு களவாணிங்க” என்று உள்ளுக்குள் கடுப்பானார் மாமனார்.

“மாமா.. லட்டா, மைசூர் பாக்கா?” ராமமூர்த்தி பணிவுடன் கேட்க,

தணிகைவேல்,  “எனக்கு இட்லி வைக்க சொல்லுங்க போதும்” என்றார் உஷாராக.

“பொண்ணு விஷேசத்துல ஸ்வீட் சாப்பிட மாட்டிங்களா?” என்று சத்தமாக ராமமூர்த்தி கேட்க,

‘கத்தி கேட்கிறதை பாரேன்’ முறைத்தவர், “மைசூர் பாக் வைங்க” என்றார்.

“சரி” என்று எடுக்க, தணிகைவேல் வாயை இறுக்க மூடி, உடலை பின்னுக்கு இழுத்தார். ராமமூர்த்தி சமத்தாக இலையில் ஸ்வீட் வைக்க, தணிகைவேல்க்கு சந்தேகமே. திருந்துற ஆள் கிடையாதே. ஒருவேளை எல்லாம் இருக்கவும் இப்படியா?

யோசனையாக மைசூர் பாக் எடுத்து வாயில் வைக்க போக, அதற்குள் லட்டு நுழைந்திருந்தது. திகைத்து வாயடைத்து மனிதர் பார்க்க, ராமமூர்த்தி எங்ககிட்டியே அலர்ட்டா என்று பார்த்தார்.

“என்னப்பா மாமனுக்கு ஊட்டிவிட்டு ஒரே பாசம் போல” உறவினர் சிரிப்புடன்  சொல்ல,

“எங்கப்பா நாங்க பார்க்கலையே?” என்றனர் மற்றவர்கள்.

“அதுக்கென்ன இந்த பாருங்க” என்று திரும்ப ஒரு லட்டு ஊட்டிவிட, தணிகைவேல் இரும ஆரம்பித்துவிட்டார்.

“எப்போவும் என் பாசத்துல என் மாமாக்கு நெஞ்சடைச்சிடும்” என்று தண்ணீர் பாட்டிலை திறந்து வேறு கொடுக்க, பாரதி ஓடிவந்துவிட்டார்.

தணிகைவேல் விரல் நீட்டி, நீட்டி குற்றம் சொல்ல, “சரிங்க.. சரிங்க. நீங்க தண்ணீர் குடிங்க” என்றவர், “ஏன்ண்ணா?” என்றார் அண்ணனிடம்.

“ஊட்டிவிட்டா தப்பா தாத்தா” என்று பக்கத்தில் இருந்தவரிடம் அப்பாவியாக கேட்டார் ராமமூர்த்தி.

“இப்படி ஒரு மச்சான் கிடைக்க கொடுத்து வைச்சிருக்கணுமே” என்றார் அவர்.

“நீ கண்ட” தணிகைவேல் அவரை முறைக்க,

“நீங்க போங்கண்ணா. நான் பார்த்துகிறேன்” என்றார் பாரதி.

“முடியாது நான் தான் அவருக்கு பரிமாறுவேன்” என்று தணிகைவேலை வயிறு முட்ட சாப்பிட வைத்து தான் நகர்ந்தார்.

மாலை போல ஆரவாரம் கொஞ்சம் அடங்க, உறவுகள் ஓரிடத்தில் அமர்ந்தனர். மதிய உணவு முடிந்திருக்க, இப்போது காபி வந்தது. குடித்து தணிகைவேல் வீட்டினர் கிளம்பினர்.

சுந்தரம் குடும்பத்தார் சொல்லி கொண்டு காருக்கு சென்றனர். வேணி எப்போதும் போல எல்லைக்குள் இருக்க, மற்றவர்களும் அவரை பெரிதாக நெருங்கவில்லை.

ராஜேஸ்வரி பேத்தி, கொள்ளு பேத்திக்கு நெற்றி முத்தம் வைத்தவர், மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.  ரகுராம் இறுதி வரை வாங்க என்று அவரை அழைத்திருக்கவில்லை. கிளம்பும் போதும் அவரை பார்க்கவில்லை.

தணிகைவேல் எல்லோருக்கும் சொல்லிக்கொண்டு மருமகன், மகளிடம் வந்தார். ரகுராம் அவரின் நம்பிக்கையை கைப்பற்றிவிட்டான். மகளின் எப்போதுமான மலர்ந்த முகமே அவளின் மகிழ்ச்சியை சொல்லும்.

பணம், அந்தஸ்து எல்லாம் அவரின் மருமகன் முன் காணாமல் தான் போனது. உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் மருமகன் இரு கைகளையும் பற்றி கொண்டார். “வரோம்” என்றார். ரகுராம் அவரை புரிந்து கொண்டான்.

மாமனார் மேல் முன்பிருந்த கோவம் கூட குறைந்திருந்தது. நம்பிக்கை என்று வந்தபின் அவனிடம் மிகவும் மரியாதையாக, பண்பாக நடந்து கொள்கிறார்.

அருணகிரி சொல்வது போல் அப்பாவாக அவர் அப்படி தான் இருப்பார் என்று இப்போதெல்லாம் உணர்ந்து கொள்கிறான்.

ராஜேஸ்வரி போல் தனிப்பட்ட விரோதம் அவரிடம் என்றுமே இருந்ததில்லை. நல்ல மனிதர். ஆனால் சூழ்நிலை அவரை அப்படி எல்லோரிடமும் இருக்க விடவில்லை. அதை பாரதி மட்டுமே சரியாக புரிந்து வைத்திருக்க, உறவுகளும் உணர ஆரம்பித்தனர்.

ஜனக்நந்தினி அப்பாவின் கை பிடித்து பேச, பாரதி மருமகனிடம் சொல்லி கொண்டார். “சந்தோஷமா இருக்கீங்களா?” ரகுராம் மாமியாரிடம் கேட்க,

பாரதி கண்களில் இருந்து சடசடவென கண்ணீர் இறங்கிவிட்டது. எல்லோரும் பதறிவிட்டனர். “என்ன பாரதி இது. அழுகையை நிறுத்து” ராமமூர்த்தி மனம் தாங்காமல் தங்கையை அதட்டினார்.

“என் தப்பை எல்லாம் என் அண்ணா மகன் சரி பண்ணிட்டார். அந்த சந்தோசம்” என்றார் சிரித்தபடி.

“அதுக்கு அழுவியா நீ” ராமமூர்த்தி கண்டிக்க,

“தாங்கவே முடியலண்ணா. நிறைய.. நிறைய தப்பு பண்ணிட்டேன். எனக்கு தெரிஞ்சு தெரியாமல் நிறைய. ஆனா என் புண்ணியம் தான் ரகுராம்” என்றார் மருமகன் கை பிடித்து.

“பாரதி இப்போ எதுக்கு இதெல்லாம்? விடும்மா” அருணகிரி தேற்றினார்.

“ண்ணா. நான் நிச்சயம் பண்ணிட்டு கூட உறுதியா இல்லையே. முதல்ல அம்மா வீடு வேணும்ன்னு நினைச்சேன். எல்லாம் செஞ்சேன். அடுத்து மகள் மனசு பார்த்து, தள்ளி நின்னுட்டேன்”

“எனக்கு இரண்டு குடும்பமும் முக்கியம். எப்போ யார் பக்கம் நிக்கணும்ன்னு தெளிவு இல்லை. பயம். எங்க இன்னும் கூட உறவு உடைஞ்சு போயிடுமோன்னு பயம். தனியா நிக்க தைரியம் பத்தலை. உங்க எல்லோர் முன்னாடியும் நான் தோத்து போயிடுறேன்”

“ஆசை கழுத்து வரை இருந்தும் எனக்கு எதையும் யாரையும் கையாள தெரியல. என் அண்ணா மகன், என் மருமகன் எல்லாம் சரியா மாத்திட்டார். நான் எதுக்காக இத்தனை வருஷம் போராடினேனோ அதை எல்லாம் எனக்கு தூக்கி கொடுத்துட்டார்” என்றார் மகிழ்ச்சியுடன்.

“அத்தை. எல்லார் போலத்தான் நீங்களும். யாருக்கு பார்க்கங்கிற தடுமாற்றம். சில நேரம் குடும்பத்திற்குள்ள அதுவும் தான் தேவைப்படுது. விடுங்க” என்றான் ரகுராம்.

பாரதி சராசரி குடும்ப தலைவி. இங்கு யாரையும் தூக்கி எரிந்து சாகசம் செய்ய முடியாது. உறவுகளும், பாசமும் தான் அவருக்கு பிணை.

தணிகைவேல்க்கு மனைவியின் ஆனந்த கண்ணீர் புரிந்து கொள்ள முடிந்தது. மனைவிக்காக என்று அவர் இறங்கி வந்த நாட்களுக்கான பலன் தான் இன்றய நாள்.

ப்ரவீன் தங்கையை தோளோடு அணைத்து விடைபெற்றான். ரகுராமிடம் மரியாதையாக கை குலுக்கி கொண்டான்.

உறவுகள் கிளம்ப, இரவு போல இவர்களும் வீடு வந்தனர். குழந்தைகள் உணவு முடித்து உறங்கிவிட, பெரியவர்கள் அமர்ந்தனர். “பாரதி அழுதது கஷ்டமா போயிடுச்சு” என்றார் மஞ்சுளா.

Advertisement