Advertisement

அழகியல் 25

கந்தன் படத்துக்கு மாலையிட்டு, அலங்காரம் செய்தார் பாரதி. கைகள் சுறுசுறுப்பாக இயங்க, முகத்திலோ அளவில்லா மகிழ்ச்சி. இப்படி ஒரு நாள் வரும் என்று அவர் கனவிலும்  நினைத்து பார்த்ததில்லை.

எல்லாம் அவரின் அண்ணன் மகன் செயல். அவரின் தவறை மிக சரியாக திருத்தி, அவரை குற்ற உணர்ச்சியில் இருந்து விடுவித்துவிட்டான்.

“என்ன முகம் மின்னிட்டே இருக்கு?” மஞ்சுளா கேட்டபடி அவருக்கு உதவ,

“என் அண்ணன் மகனால தான்” என்றார் பாரதி வெள்ளி விளக்கில் திரி வைத்தபடி.

“ஏன் பாரதி மருமகன் எல்லாம் சொல்ல மாட்டியா?” என்று கேட்டபடி வந்தார் பத்மா.

“அண்ணி முதல்ல அண்ணா பிள்ளைங்க தான். அப்புறம் தான் மருமகன் எல்லாம்” என்றார் பாரதி.

அனுஷாவை தான் மருமகளாக்க  நினைத்தார். மிகவும் ஆசை. அது நடக்காமல் போக, ரகுராம் அவருக்கு மருமகனாக வாய்த்திருந்தான்.

‘எது நடந்தாலும் நல்லதற்கே!’ என்பது பாரதிக்கு எப்போதோ  ஊர்ஜிதிமாகிவிட்டது.

“என்ன பாரதி” என்று பத்மா கேட்க,

“இப்போ சொல்ல கூடாது அண்ணி, ஆனா சொல்லணும் போல இருக்கு” என்றவர், “அனுஷாவை  ப்ரவீனுக்கு கட்ட நினைச்சிருக்க கூடாது, அது மட்டும் நடந்திருந்தா அனுஷாவும் அந்த வீட்ல இன்னொரு பாரதியா இருந்திருப்பாளோன்னு தோணுது” என்றார் உணர்ந்து.

 “அப்படி சொல்ல முடியாது பாரதி. ப்ரவீன் நல்லா பையன். ஆர்த்தியை தாங்கிற மாதிரி” என்று மஞ்சுளா சொல்ல வர,

“இல்லை இல்லை அண்ணி. ஆர்த்தி விஷயம் வேற, அனுஷான்னு வரும் போது வேற. எப்படி இவர் அவரோட அம்மாக்காகன்னு யோசிச்சாரோ, அப்படி ப்ரவீனும் எனக்காக யோசிச்சிருப்பான்” என்றார்.

பத்மா, மஞ்சுளாவிற்கு புரிந்து கொள்ள முடிந்தது. குடும்பமா, மனைவியா என்று அல்லாடும் ஆண்கள் அநேகம். தணிகைவேல் போல. அதில் ப்ரவீனும் சேர்ந்துவிட்டால் என்ன நிம்மதி கிடைத்துவிட போகிறது?

“இங்க எல்லாம் முடிஞ்சது இல்லை” பத்மா சரிபார்த்து கொள்ள,

“முடிஞ்சது அண்ணி” என்ற பாரதி நிமிர்ந்து அந்த கட்டிடத்தை பார்த்து உவகை கொண்டார்.

கட்டிடம் இருக்கும் இடம். அவரின் இத்தனை வருட குற்ற உணர்ச்சி. ஆம். பாரதி கேஸ் போட்டிருந்த இடம் தான் இது. ராஜேஸ்வரி இதை வைத்து தான் ரகுராம் குடும்பத்தை சிக்கலில் சிக்க வைத்திருந்தார்.

இதற்காக தான் ரகுராம் கடன் வாங்கி ஓடி ஓடி உழைத்திருந்தான். நான்கு வருடங்கள் கடந்துவிட்டது.

இதோ இன்று அதே இடத்தில் தான் ரகுராம் வலுவாக கால் ஊன்றியிருந்தான்.

அவனின் தொழில் ஸ்தாபனமாக அதை உருமாற்றி உயர்த்திவிட்டான்.

தனியாக ‘ஜனக் முகூர்த்தம்’ ஆரம்பித்துவிட்டான்.

தொழில் உலகத்திற்குள் முதல் அடி என்றாலும்  நிலையான படியில் தான் ஏற ஆரம்பித்திருக்கிறான்.

ஒட்டு மொத்த குடும்பத்தினரின் உழைப்பையும் அதற்குள் கொண்டு வந்துவிட்டான்.

அருணகிரி, ராமமூர்த்தி முகம் மலர, விருந்தினர்களை வரவேற்று கொண்டிருக்க, மறுபுறம் ப்ரவீன், சுதாகரன்  இணைந்து விடுபட்ட வேலைகளை முடித்து கொண்டிருந்தனர்.

“என்னண்ணா இன்னும் உங்க மாப்பிள்ளையை காணோம்” என்று ராமமூர்த்தி அண்ணனிடம் கேட்க,

“ஏன் உனக்கு மாப்பிள்ளை இல்லையா?” என்றார் அருணகிரி.

“ண்ணா வர வர நீங்களும் எங்களோட சேர்ந்துட்டு வரீங்க பார்த்துக்கோங்க” என்ற மூர்த்தி, “நம்ம மாப்பிள்ளை வருவாரா, மாட்டாரா?” என்று கேட்டார்.

“வராம போயிடுவாரா? நம்மளை விட அவருக்கு தான் கொள்ளை சந்தோசம் மூர்த்தி. பார்த்த இல்லை மொத்த வேலையையும் எப்படி இழுத்து போட்டு செஞ்சார்ன்னு” என்றார் அருணகிரி.

“அது என்னமோ உண்மை தான், செல்ல மகள். மனுஷனுக்கு பாசம் பயங்கரமா கொதிக்குது” என்றார் ராமமூர்த்தி.

அருணகிரி தம்பியை பார்க்க, “நான் கடுப்புல தான் சொன்னேன். இதே ரகு அவனை ப்ரூப் பண்ண முடியாம போயிருந்தா மனுஷன் இப்படி இருந்திருப்பார்ன்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டார்.

“மூர்த்தி. அப்பாவா எனக்கு அவரை புரிஞ்சுக்க முடியுது. சீராட்டி வளர்த்த மகளை, கஷ்டப்படு போன்னு யாரும் தள்ளிவிட மாட்டாங்க. முதல்ல கொஞ்சம் முரண்டு புடிச்சாலும், இப்போ ஓகே தானே?” என்றார் அருணகிரி.

“என்ன ஓகே. ரகு மாதிரி மாப்பிள்ளைக்கு இதுவே கம்மி தான். அவரை மாதிரி மாப்பிள்ளைக்கு நாமளே அதிகம் தான்” என்றார் ராமமூர்த்தி.

“உனக்கு மகன் பாசம் கண்ணை மறைக்குது. உன்கிட்ட பேச முடியாது. நீ அவனுக்கு தான் நிற்ப” என்று முடித்துவிட்டார் அருணகிரி.

‘என்னமோ இவருக்கு மகன் மேல பாசம் இல்லாத மாதிரி என்னை சொல்றது’ மூர்த்தி சத்தமாக முணுமுணுக்க, அருணகிரி சிரித்து கொண்டர்.

இத்தனை வருட உழைப்புக்கு, கஷ்டத்துக்கு இப்போது தான் பலன் பார்க்க செய்கின்றனர். படிப்பும், அது தரும் அறிவும் என்றுமே அசைக்க முடியாதது தான்.  மகன் அதை நிரூபித்து கொண்டிருக்கிறான்.

“கஷ்டப்பட்டாவது பிள்ளைகளை படிக்க வைச்சுட்டோம்” என்று நொடிக்கு நொடி ஆசுவாசம் கொள்கிறார் மனிதர்.

“படிப்பறிவு பெரிதாக இல்லாமல், ஓடி ஓடி உழைக்க  மட்டுமே தெரிந்தவன் நான். ஆனால் என் மகன், படிப்பறிவோடு உழைப்புக்கான ஊதியத்தையும் எடுக்க தெரிந்தவன்” தந்தைக்கு கர்வம்.

“ண்ணா” என்று பாரதி வந்தார். “நீங்க என் மாமியாரை கண்டிப்பா வரணும்ன்னு கூப்பிட்டிருந்தீங்களா?” என்று கேட்டார்.

ராமமூர்த்தி அப்படியா என்று அண்ணனை கோவமாக பார்க்க, தம்பி பக்கமே திரும்பாமல், “ஆமா பாரதி. கூப்பிட்டிருந்தேன். பேத்தி நல்லபடியா வாழுறதை அவங்க பார்த்து சந்தோஷ படட்டுமே” என்றார்.

பாரதிக்கு மகிழ்ச்சி தான். “என்ன சொல்லன்னே தெரியலண்ணா. பேத்தி வீட்டுக்கு போக முடியாம, அவளோட வளர்ச்சியை பார்க்க முடியாம ஒரே புலம்பல் தான். இனி நிம்மதியா இருப்பாங்க” என்று சென்றார்.

“ண்ணா” என்று மூர்த்தி ஆரம்பிக்க,

“வயசானவங்ககிட்ட என்ன விரோதம் மூர்த்தி?” என்றார் அண்ணன்.

“அவங்க நமக்கும், பாரதிக்கும் பண்ணது”

“ராஜேஸ்வரி அம்மா மருமகளுக்கு ரொம்ப நல்ல பாட்டி. அளவுக்கு அதிகமான பாசம். பார்க்கிற இல்லை, மகளுக்கு செய்ற அளவு நகை, சொத்துன்னு”

“அதுக்காக அவங்களோட நாம உறவாடணுமா? யாருக்கு வேணும் அந்த நகை, சொத்து எல்லாம். நாம நம்ம மருமகளுக்கு செய்ய மாட்டோமா?”

“செய்வோம் தான். ஆனா மருமக உரிமையில, பாசத்துல நாம மூக்கை நுழைக்க கூடாது. உன் மகனே அமைதியா தானே இருக்கான்”

“அவனுக்கு பொண்டாட்டின்னா உயிர்”

“ஆமா அவன் சித்தப்பா போல”

“இல்லை அவன் அப்பா போல” என்று ஓடிவிட்டார் மூர்த்தி.

“ராஸ்கல். திரும்ப என்கிட்ட வா உன்னை” அருணகிரி கத்தி சிரித்துவிட்டார்.

ராஜேஸ்வரி அம்மா வரட்டும் திறப்பு விழாவிற்கு என்று மகனிடம் சொல்ல செய்தார் அருணகிரி. கேட்கவில்லை. அதிலே ரகுராம் புரிந்து ஒதுங்கி கொண்டான்.

அருணகிரி தானே சென்று முறையாக ராஜேஸ்வரியை அழைத்தார். ராஜேஸ்வரியிடம் பேச்சில்லை. தலையசைப்பு மட்டுமே.

இதோ மகன், மகள் குடும்பத்துடன் வந்திறங்கிவிட்டார் ராஜேஸ்வரி. கண் முன்பு பிரம்மாண்டமாக நின்றிருந்த இரண்டு மாடி கட்டிடத்தை, உணர்ச்சிவசத்துடன்  பார்த்தார்.

“நல்லா இருக்காம்மா?” தணிகைவேல் கேட்க,

“இதென்ன கேள்வி வேலா. ரொம்ப அருமையா இருக்கு” என்ற ராஜேஸ்வரி கட்டிடம் அருகே சென்று அதை வருடி பார்த்தார்.

ராகேஷ்க்கு திருமணம் முடிந்து, மனைவி, ஒரு வயது மகனுடன் வந்திருந்தான். சுந்தரம் குடும்பத்தாரை அருணகிரி குடும்பத்தார் வரவேற்று அமர வைக்க, “எங்க ராம், ஜானு காணோம்” என்று கேட்டார் சுந்தரம்.

“கிளம்பிட்டாங்க. வந்திடுவாங்க” என்று பத்மா சொல்லி குடிக்க கொடுக்க,

ராஜேஸ்வரியிடம் சென்ற அருணகிரி, “உள்ள போய் பார்க்கலாம் வாங்க” என்றழைத்தார்.

“இல்லை இருக்கட்டும்” அவரின் முகம் பார்க்காமல் சொன்னவர், மகனுடன் பந்தலில் அமர்ந்துகொண்டார்.

பாரதி மாமியாருக்கு குடிக்க கொடுக்க, ரகுராம், ஜனக் வந்துவிட்டனர். ராஜேஸ்வரியை  பார்த்து ஆனந்த அதிர்ச்சி கொண்ட பேத்தி, “பாட்டி” என்று ஓடி வந்து அணைத்து கொண்டாள்.

“ராஜாத்தி” என்று பேத்தியை நடுங்கும் கரங்களால் அணைத்து முத்தமிட்டார் ராஜேஸ்வரி.

தான் அழைக்காமல் அவர் இங்கு வந்தது ஆச்சரியமே. பாசம் குணத்தையும் மாற்றவல்லது போல. ரகுராம் நினைத்து கொண்டான்.

ராஜேஸ்வரி ஆசையாய் ரகுராம் கையில் இருந்த அவரின் கொள்ளு பேத்தியை பார்க்க, ரகுராம் புரிந்து மனைவியிடம் மகளை கொடுத்தான்.

ஜனக்நந்தினி மூன்று வயது மகள் ‘நிஹாரிகா’வை பாட்டியின் மடியில் அமர வைத்தாள்.

ராஜேஸ்வரி அவளை வாரியணைத்து முத்தமழை தான். கொள்ளு பேத்தி பாட்டியின் கன்னங்களை பற்றி சிரிக்க, அவருக்கு இன்னும் பூரிப்பு. “அப்படியே என் பாப்பா போல எப்போவும் சிரிப்பு தான்” என்று பெருமையாக எல்லோரிடமும் சொல்லி கொண்டார்.

ரகுராம் தள்ளி இருந்து கேட்டவன் மனைவியை பார்த்து, ‘அப்படியா?’ என்று புருவம் தூக்கினான்.

ஏன் இல்லையா? மனைவி முறைக்க, ரகுராம் சிரித்து வேலைகளை பார்க்க நகர்ந்துவிட்டான்.

ஆர்த்தியின் இரண்டு மகன்களோடு, அனுஷாவின் இரண்டு பிள்ளைகளும்  சேர்ந்து கட்டிடத்தை  சுற்றி வர, ஆர்த்திக்கு அவர்களை மேய்ப்பதே சரியாக இருந்தது.

ப்ரவீன் உதவி புரிய, நால்வரையும் அடக்கி பூஜை நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்தனர். எல்லாம் தயாராக இருக்க, பூஜை ஆரம்பமானது.

ஹோமத்தில் அருணகிரி, ராமமூர்த்தி தம்பதி அமர, பின்னால் தன் மகள், மனைவியுடன் ரகுராம் அமர்ந்தான்.

நிஹாரிகா புகைக்கு திணற, தணிகைவேல் தாங்க முடியாமல், “பாப்பாவை என்கிட்ட கொடுங்க” என்று மருமகனிடம் கேட்டு நின்றார்.

ரகுராம் கொடுத்துவிட்டவன், “என்ன பெரிய பாப்பாவை விட்டு, சின்ன பாப்பா பக்கம் உன் அப்பா போயிட்டார் போல” என்று மனைவியிடம் ரகசியமாக வம்பிழுத்தான்.

Advertisement