Advertisement

உண்மையில் ராஜேஸ்வரிக்கு பயம். எங்கே என் பேத்தியை என்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ என்று. அவர் செய்தது, பேசியது எல்லாம் அவரை மிரட்ட ஆரம்பித்திருந்தது.

“ம்மா. அவ உங்களுக்கு, வேணிக்கு எல்லாம் சொல்லிட்டு போகணும்னு தான் திரும்ப திருப்பூர் வந்தா. பாப்பா அப்படி இல்லை” என்றார் தணிகைவேல்.

“எனக்கு தெரியும் என் பேத்தியை” உடனே பாட்டி குளிர்ந்து போனார்.

“பாப்பா.. உன் பாட்டி இப்படி தான். உனக்காக நான் இனி உன் அம்மாவை ஒரு சொல் சொல்ல மாட்டேன், போதுமா” என்றார்.

கண்ணை குத்தி காயப்படுத்திவிட்டு, மருந்து போட்டுக்கோ என்னாலான தயவு என்பது போல் தான் அவர் பேச்சிருந்தது.

“உங்களுக்கு உங்க பேத்தி உயிர்ன்னு எனக்கு தெரியும் பாட்டி.  பேசமாட்டீங்க” என்றாள் ஜனக்நந்தினி.

அவள் குரலில், சொன்ன விதத்தில் இனி பேச கூடாது. பேசினால் நான் உங்களுக்கு கிடையாது என்பது மிக தெளிவாக இருந்தது. ராஜேஸ்வரிக்குள் அவரின் குணம் உதிக்காமல் இல்லை.

‘இத்தனை வருஷம் பாசம் காமிச்சு வளர்த்த என்னை விட, நேத்து வந்த அவங்க முக்கியமா போயிட்டாங்களா’ கேட்டுவிட முடியாத ஆங்காரம், கோவம் தான்.

அது அவரின் முகத்திலும் தெரிந்தது. “என்ன பாட்டி?” என்று பேத்தி தோளோடு அணைத்து கேட்டாள்.

“பேச மாட்டேன். முடிஞ்சதை வைச்சு நீ எப்போவும் என்கிட்ட  சண்டை போட கூடாது பாப்பா” உஷாராக இப்போதே உடன்படிக்கை போட்டு கொண்டார்.

ஜனக்நந்தினிக்கு இவர் ஏதோ செய்திருக்கிறார் என்ற உறுதியான அனுமானம் உண்டு.

ஆனால் “கெட்டவர்கள் எல்லோருக்கும் கெட்டவர்களாக இருப்பதில்லை. யாரோ ஒருவருக்கு அவர் நல்லவரா இருக்க தான் செய்கின்றார். அதையும் மறுத்து அவரை மனிதம் இல்லாமல் செய்துவிட கூடாது” என்று புரிய சரி என்றுவிட்டாள்.

மேலும் சிறிது நேரம் இருந்து வேறு பேசினாள். அவருடன் டீ குடித்தாள். ஆர்த்திக்கு வீடியோ காலில் அழைத்து விடைபெற்று கொண்டாள். மருமகனை போனிலே கொஞ்சி கொண்டாள்.

கிளம்பும் நேரம் வந்துவிட, ஜனக்நந்தினி அறைக்கு சென்றாள். உடமைகளை பேக் செய்து எடுத்து வைக்க, ப்ரவீன் வந்தான், “என்ன’ண்ணா?” என்று கேட்டாள்.

“நீ என்கிட்ட முன்ன மாதிரி இல்லை பாப்பா. ஏதோ வித்தியாசம் தெரியுது” என்றான்.

பாரதியும், தணிகைவேலும் கிளம்பி மகளின் அறைக்கு வந்தவர்கள்  கேள்வியாக பார்த்தனர். “ம்மா. நீங்க சொல்லுங்க. இவ முன்ன மாதிரி என்கிட்ட இருக்காளான்னு” என்று பாரதியிடம் கேட்டான்.

“என்ன ப்ரவீன், என்ன பேசுற” என்றார் தணிகைவேல்.

பாரதி மௌனம் காக்க, ஜனக்நந்தினி கட்டிலில் அமர்ந்தாள். “பதில் சொல்லு பாப்பா” என்றான் அண்ணன்.

“என்ன சொல்லணும்?” இப்போது அவளிடம் கோவம்.

ப்ரவீன் புரியாமல் பார்க்க, “உங்க மாமியார் அம்மாவை பேசினாங்க இல்லை. என்ன பண்ணீங்க நீங்க?” என்று கேட்டாள்.

“கண்ணு நான் தான் அவன்கிட்ட”

“ம்மா.. ப்ளீஸ்” என்றாள் மகள்.

“நீங்க சொல்லிட்டா இவர்  கேட்டுப்பாரா? பிறந்த மகனையும், பொண்டாட்டியும் பாருன்னு சொன்னீங்க எனக்கு தெரியும். நான் அங்கதான் இருந்தேன். இவரும் உடனே அதை ஏத்துக்கிட்டார். இனி நீங்க இப்படி என் அம்மாவை பேச கூடாதுன்னு அவங்க மாமியார்கிட்ட ஒரு வார்த்தை சொன்னாரா? இல்லை தானே. நாளைக்கு அவங்க திரும்பவும் உங்களை பேச மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?”

“பாப்பா நான்”

“ம்மா நாம  எல்லாம் குடும்பமா வாழணும்ன்னு தான் நீங்க நிறைய சகிச்சுக்கிட்டீங்க. ஆனா பாருங்க உங்க மகன் அதே அவர் குடும்பத்துக்காக உங்களை விட்டு கொடுத்துட்டாரான்னு”

“பாப்பா.. சத்தியமா இல்லை பாப்பா” ப்ரவீன் கலங்கிவிட்டான். உடன் தங்கை  மீது சிறு கோவமும். என்னை இப்படி நினைப்பாளா என்று

ஜனக்நந்தினிக்கு  புரிய தான் செய்தது. அண்ணனை கேள்வி கேட்கும் அளவு நானும் வளர்ந்துவிட இல்லை என்று.

“உங்களை நான் இப்படி கேட்க கூடாது தான்’ண்ணா. எனக்கு தெரியும் தப்புன்னு” என்ற தங்கை முகமும் கலங்கி தான் போனது.

“சாரிம்மா.. அன்னைக்கு உங்ககிட்டேயும் டார்கெட் அச்சீவ்ட்ன்னு சொல்லிட்டேன்” என்றாள்.

“கண்ணு. விடு. ஏன் என்னாச்சு” பாரதி அவளை தன் வயிற்றோடு அணைத்து கொண்டார்.

“எனக்கு கோவம் வருதும்மா. இனி எங்க வீட்டை யாரும் எதுவும் பேசினா நான் கேட்டுக்க மாட்டேன்னு தோணுது” என்றாள் மகள்.

ப்ரவீனுக்கு தங்கை பேச்சு நன்றாக புரிந்தது, அவன் மாமியாரை எச்சரித்தே ஆக வேண்டும். இல்லை தங்கை அவனுக்கு இருக்க மாட்டாள்.

“நீ கேட்டது ஒருவிதத்தில சரிதான் பாப்பா. நான் இவ்வளவு யோசிக்கலை. நீ ப்ரீயா விடு” என்றான் ப்ரவீன்.

பாரதிக்கு முகம் கொஞ்சம் கசங்கி போனது. நொடி தான். தெளிந்து கொண்டார். மகன் அவரை கவனித்து,   “என்னம்மா” என்று கேட்டான்.

ஜனக்நந்தினியும் அம்மாவை நிமிர்ந்து பார்க்க, தணிகைவேல், “அம்மா எனக்காக, உங்களுக்காகன்னு சகிச்சுட்கிட்ட விஷயங்களால தான் இன்னைக்கு நாம குடும்பமா இருக்கோம்ன்னு நீ சொன்னது ரொம்ப சரி பாப்பா” என்றார்.

“அவளோட இடத்துல அவ சரியா தான் இருந்திருக்கா. எனக்காகன்னு இந்த வீட்டுக்குள்ள வந்தா, எனக்காகன்னு வாழ்ந்தும் காமிச்சுட்டா. உங்க பெரிய மாமா சரியா தான்  சொல்லியிருக்கார். எல்லாம் எல்லார்கிட்டயும் ஜெயிக்க முடியாது. கடைசியா தோத்தது நான் மட்டும் தான்” என்றார்.

“என்னங்க” பாரதி பேச வர,

“இல்லை பாரதி. அம்மா வீடு இல்லைன்னா என்ன, நாங்க இருக்கோம். உன்னை நல்லா வைச்சிருக்கோம்ன்னு எனக்குள்ள ஒரு எண்ணம் இருந்தது நிச்சயம். மறுக்க கூடாது. தப்பாகிடும்”

“இப்போ என் பொண்ணுன்னு வரும் போது நானும், என் அம்மா, என் தங்கை எல்லாம் இறங்கி தானே வரோம். அதை உனக்கு செய்ய எங்களுக்கு முடியல தானே. உன் அன்பை நீ நிரூபிச்சுட்ட. நான் இல்லை” என்றார் வேதனையாக.

“ஒன்னு மட்டும் நல்லா புரியுது  சரியா கையாள படாத  உறவு காலத்துக்கும் நமக்கு சுமை தான்” என்றார் உணர்ந்து.

எல்லாவற்றுக்கும் ஆணி புள்ளியே நான் தானே? நான் சரியான இடத்தில், சரியான முறையில் பொருந்தியிருந்தால் இன்று சுற்றிலும் இவ்வளவு பிளவு வந்திருக்காது. முற்றும் முழுதாக புரிந்து கொண்டார்.

குடும்பத்தினர் மௌனம் காக்க, சூழ்நிலையை மாற்ற நினைத்தார்.

“சொந்தங்களை சேர்த்து பிடிச்சு போறதுங்கிறது எந்த அணு ஆயுத சோதனைக்கும்  குறைஞ்சதில்லை. எங்க, எப்போ எது வெடிக்கும்ன்னு திக்கு திக்குன்னு தான் இருக்கும்” என்றார் மெல்லிய சிரிப்புடன்.

குடும்பத்தினர் முகத்திலும் கீற்றாய் புன்னகை. “சரி நேரம் ஆச்சு. கிளம்பலாம்” என்று மகள் எடுத்து வைத்திருந்த உடமையுடன் ஹாலுக்கு வந்தனர்,

ராஜேஸ்வரி காத்திருக்க, “ப்ரவீன் நாங்க நாளைக்கு வந்திடுவோம். நீ பாட்டி கூடவே இருந்து கொஞ்சம் பார்த்துக்கோ” என்றார் தணிகைவேல் மகனிடம்.

“உங்க அம்மாவை நான் பார்த்துகிறதா? அவங்களை என்னை பார்த்துக்க சொல்லி சொல்லிட்டு போங்க” என்றான் ப்ரவீன்.

“அதை சொல்லு. பிள்ளை பெத்துட்டான். இன்னும் விவரம் பத்தலை. ஆபிஸ்ல இருந்து நாலு மணிக்கே ஓடி வந்துடறான். என்ன வேலை பார்க்கிறானோ?” என்றார் ராஜேஸ்வரி.

“பார்த்தீங்களா இவங்களுக்காக சீக்கிரம் வந்தா பேச்சை” பேரன் கடுப்பானவன், “கலவைப்படாதீங்க. உங்க கல்லா நிரம்பி வழியற அளவு தான் வேலை பார்த்திருக்கேன்” என்றான்.

“இந்த வருஷம் என் பேர்ல இன்னும் நிலம் ரெஜிஸ்டர் ஆகலை” என்றார் ராஜேஸ்வரி.

“இவனை தான் பார்க்க சொன்னேன்ம்மா. என்னாச்சு ப்ரவீன்” என்று தணிகைவேல் கேட்க,

“ஒருத்தர் பேர்லே அவ்வளவு நிலம் வாங்கினா கவர்மென்டுக்கு யார் பதில் சொல்றது? இனி வாங்குறதை என் பேர்ல எழுதிக்காலம்ன்னு இருக்கேன்” என்றான் அவன்.

“பார்த்தியா வேலா பார்த்தியா உன் மகன் திட்டம் போட்டு தான் செய்யாம இருக்கான். நீ என்னன்னு பாரு” என்றார் மகனிடம்.

“நான் வந்து பார்க்கிறேன்ம்மா. நீங்க பத்திரம்” என்றவரை தொடர்ந்து ஜனக்நந்தினி பாட்டியை அணைத்து விடைபெற்றாள்.

வேணி, சுந்தரத்திடமும் சொல்லிக்கொண்டு கார் கரூர் நோக்கி கிளம்பியது.

ரகுராம் போன் செய்து, “நான் சென்னை கிளம்பிட்டேன். நீங்க வாங்க” என்றான்.

மருமகன் அவர் காரில் வருவதை கூட விரும்பவில்லை என்று தணிகைவேல்க்கு புரிந்தது. பெருமூச்சு விட்டு கொண்டார். இவர்கள் நடுஇரவு சென்று சேர, மறுநாள் பால் காய்ச்ச எல்லாம் தயாராக இருந்தது.

முன்பிருந்த வீடு போல சகல வசதியுடன் தான் வீடு பார்த்திருந்தான் ரகுராம். அதில் தணிகைவேல்க்கு பரிபூரண திருப்தி. அதிகாலையிலே பால் காய்ச்சி பூஜை முடிந்தது.

ரகுராமும், ஜனக்நந்தினியும் அன்றே அலுவலகம் கிளம்பிவிட, பாரதி மகளுக்கு வீடு செட் செய்து வைத்தார். அங்கும் சமையலுக்கு, வீட்டு வேலைக்கு ஆள் சொல்லியிருந்தான் ரகுராம்.

மாலை ஜனக்நந்தினி சீக்கிரமே வந்துவிட, பெற்றவர்கள் ஊர் கிளம்பினர். இருந்துட்டு போங்க என்று மகள் எவ்வளவு வற்புறுத்தியும் கேட்கவில்லை. “பிளைட் தான் போட்டிருக்கேன் பாப்பா. நிறைய வேலை இருக்கு. நல்லவேளை நீயும் சீக்கிரம் வந்திட்ட, மாப்பிள்ளைக்கு சொல்லிடு” என்று நல்ல முறையிலே கிளம்பினர்.

அவர்களை ஏர்போர்ட்டில் விட்டு,  ட்ரைவர் காரிலே ஊருக்கு சென்றார்.

இரவு ரகுராம் வந்தவன், முதல் வேலையாக மனைவியை கையில் அள்ளி கொண்டான். “இனி நோ பஞ்சாயத்து. நீ என்னோட தான்” என்றான் அவளின் முகமெங்கும் முத்தமிட்டு.

“முதல்ல போய் குளிச்சுட்டு வந்து சாப்பிடுங்க” மனைவி சொல்ல,

“குளிக்கணுமா. செக்கிங் ப்ராசஸ் ஸ்டார்ட் பண்ணிடலாமே?” என்று முத்தமிட்டு கேட்டான்.

“குளிங்க. போங்க” மனைவி விரட்ட, அவசர குளியல் போட்டு வந்தான்.

வேஷ்டி மட்டுமே அணிந்து வர, “உங்களோட” என்று உணவு வைத்தாள்.

“நீ கையால மட்டுமில்லை, கண்ணாலயும் செக் பண்ணிக்கட்டும்ன்னு பார்த்தேன். என்னோட தாராள மனசை எப்போதான் புரிஞ்சுப்பியோ?” என்றான் நின்றிருந்த அவளை இடையோடு வளைத்து.

“உங்க தாராள மனசு தானே, நல்லா புரியும்.  சாப்பிடுங்க” என, அவளுக்கு ஊட்டிவிட வர,

“நான் நல்லா சாப்பிட்டேன்” என்றாள்.

“வாங்குடி” அதட்டல் போட்டு கொடுக்க, அவன் விரலை கடித்து வைத்தாள்.

“ஸ்ஸ்..” உதறி கொண்டவன், மனைவி இடையில் கிள்ளி வைத்தான்.

“சேரி கட்டுறது உங்களுக்கு தான் வசதியா போச்சு” அவள் இடை சேலையை இழுத்துவிட்டு கொண்டவள், “உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்” என்றாள்.

“என்ன” என்று கேட்டபடி சாப்பிட ஆரம்பித்தவன்,  அவள் சொன்னவற்றில் சாப்பிடாமலே எழுந்து கொண்டான்.

முதல் முறையாக ஜனக்நந்தினி கணவனின் கோவத்தை எதிர்கொண்டாள்.

Advertisement