Advertisement

அழகியல் 24

தறியில் பங்க்ஷன் முடியவும் அங்கேயே அனைவருக்கும் உணவு ஏற்பாடாகி இருந்தது. ராமமூர்த்தி, ரகுராம் பரிமாற, அவர்களுடன் இணைந்து  ஜனக்நந்தினியும்  ஸ்வீட் வைக்க ஆரம்பித்தாள்.

தணிகைவேல்க்கு மகளின் செயல் மனதை குளிரத்தான் வைத்தது. ஏனோ என் பொண்ணு ஏன் பரிமாறனும் என்றெல்லாம் தோன்றவில்லை.

உணவு முடியவும் அருணகிரி வீட்டிற்கு வந்தனர். ஓய்வாக அமர, “நைட் சென்னை கிளம்பலாமா?” என்று மனைவியிடம் கேட்டான் ரகுராம்.

“அங்க பால் காய்ச்சணுமே” பத்மா கேட்க,

“நீங்க எதுக்கு அலையணும்மா, நாங்க காய்ச்சிடறோம்” என்றான் மகன்.

தணிகைவேல்க்கு  கெடுத்து கொண்டோமா என்ற அந்த நொடி தோன்ற தான் செய்தது.  கொஞ்சம் நிதானித்திருந்தால் என் மகள் சொந்த வீட்டிலே இருந்திருப்பாள். இப்போது வாடகை வீட்டில் வாழ வேண்டும்.

செல்வமகள்!  மனது தாங்கவில்லை. இந்த நொடி நினைத்தாலும் சென்னையில் இடம் வாங்கி அவளுக்கென மாளிகை கட்ட முடியும். ஆனால் செய்ய முடியாது.

மருமகன் சுயமரியாதையில் கை வைத்துவிட்டோம் என்று அவரே சொல்லிவிட்டார். இறங்கி வர வாய்ப்பில்லை. கேட்கவும் முடியாது.

யாருக்கு நான் இவ்வளவு சம்பாதிச்சு வைச்சிருக்கேன்? என் மகன் அனுபவிக்கிறான். என் மகள்? அப்பாவாக மிகவும் வருத்தமே அவருக்கு.

“என்னப்பா?” மகள் அவரை கவனித்து கேட்க,

“நாங்க பால் காய்ச்ச வரட்டுமா?” என்று கேட்டார் தணிகைவேல்.

இப்போது அதை மட்டும் தானே செய்ய முடியும். ஜனக்நந்தினி கணவனை பார்க்க, அவன் “நாளைக்கு நல்ல நாள் தான்” என்றான்.

“எனக்கு வீட்டுக்கு போகணும். என் லேப் அங்க தான் இருக்கு” என்று ஜனக்நந்தினி சொல்ல,

“ட்ரைவரை எடுத்துட்டு வர சொல்லலாமா? இப்படியே கிளம்பிடலாம்” என்று கேட்டார் தணிகைவேல்.

“பாட்டி, அத்தைக்கு எல்லாம் சொல்லணும்ப்பா” என்றாள் மகள்.

“சரிம்மா.. சரிம்மா” தணிகைவேல் உடனே ஏற்று கொண்டார்.

பத்மா மகனுடன் சென்று பால் காய்ச்ச நினைத்தாலும், தறியில் வேலை கூடிவிட்டது. கணவர் தனியே சமாளிக்க வேண்டும். பாரதியே உடன் இருந்து செய்யட்டும் என்று அமைதியாகிவிட்டார்.

மஞ்சுளா எல்லோருக்கும் ஜுஸ் கொடுக்க, “முதலாளி மேடம் இந்த வேலை எல்லாம் செய்யலாமா?” என்று கேட்டார் ராமமூர்த்தி.

“என்னங்க கிண்டலா?” மஞ்சுளா கேட்க,

“நான் உண்மையை தான் சொன்னேன். நானே இனி உன்னை வாங்க மேடம், போங்க மேடம் கூப்பிடணுமோன்னு பயந்து போய் இருக்கேன்” என்றார்.

“என்னண்ணா சொல்றீங்க?” பாரதி புரியாமல் கேட்க,

“அட உனக்கு விஷயம் தெரியாதா? உன் அண்ணிங்க தான் ஜனக் முகூர்த்தமோட முதலாளிங்க. அவங்க பேர்ல தான் கம்பெனி ரெஜிஸ்டர் ஆகியிருக்கு. நானும், என் அண்ணனுமே அங்க வேலைக்காரங்க தான்” என்றார்.

“உண்மையாவா? அண்ணி சொல்லவே இல்லை” பாரதி மகிழ்ச்சி கொள்ள,

“நீ சும்மா இரு பாரதி. அவர் தான் சும்மா பேசிட்டு இருக்கார்ன்னா” என்ற பத்மா முகத்தில் பெருமையே.

“நிச்சயம் எங்க மகன் கம்பெனியை பெருசா கொண்டு போயிடுவான். இனி அவங்க ரேஞ்சே வேற தான். எனக்கும், என் அண்ணனுக்கும் மட்டும் சரியா சம்பளம் கொடுத்துட்டா போதும்” என்றார் சோகமாக.

“நீங்க என்ன வேலை செய்றீங்கன்னு சம்பளம் கேட்கிறீங்க?” மஞ்சுளா கேட்க,

“லீவ் நாள்ல செய்றேன் இல்லை. பார்த்தியா இப்போவே கேள்வி கேட்கிறதை. அண்ணே நாம பாவம்” என்றார் அருணகிரியிடம்.

ரகுராம் சிரித்தபடி தன் மடியில் இருந்த மருமகனை அணைத்து கொள்ள, பக்கத்தில் அனுஷா முகம் வாடி இருந்தது. “என்னக்கா?” என்று கேட்டான்.

“ஒன்னுமில்லடா” அவள் சிரிக்க, அதில் உயிரில்லை. என்னமோ அம்மா வீட்டில் இருந்து தான் மட்டும் விலகியது போல் ஓர் எண்ணம். இன்று தான் ஆரம்பமே நிகழ்ந்திருக்க, தன் எண்ணத்தை பகிர முடியவில்லை.

சரியான முறையில் புரிந்து கொள்ளவில்லை என்றால், அச்சமே பெண்ணுக்கு. சுதாகரனுக்கு மனைவியை புரிந்து கொள்ள முடிந்தது. ரகுராம் அப்பாவை பார்க்க அவர் எழுந்து உள்ளே சென்று வந்தார்.

“மாப்பிள்ளை. அனும்மா இங்க வாங்க” என்றழைத்தார்.

இருவரும் செல்ல, பத்மாவை உடன் வைத்து சாமி படம் முன் நின்று ஒரு பைலை கொடுத்தார். புரியாமல் நிற்க, “பிரிச்சு பாருங்க” என்றார் ராமமூர்த்தி.

சுதாகரன் பார்த்தவன், அதிர்ந்து போனான். நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை. “என்ன மாமா இது?” என்றான்.

“எங்களோட புது கம்பெனில அனுஷாவோட பங்கு. வர லாபத்துல அவளுக்கு மாசாமாசம் இவ்வளவு வந்திடும். அது ஒரு ரூபாயா இருந்தாலும் சரி, ஒரு லட்சமா இருந்தாலும் சரி நீங்க ஏத்துக்கணும்” என்றார்.

அனுஷா வேகமாக வந்து  தம்பியை கட்டிக்கொண்டாள். நிச்சயம் அவன் தான் செய்திருப்பான்னு என்று தெரியும். “மாமா.. நாங்க முதலே போடாம இது வேண்டாமே” சுதாகரன் மறுக்க,

“மாப்பிள்ளை.. நீங்க மறுப்பீங்கன்னு தான் உங்களை கேட்காம செஞ்சுட்டோம். எங்களுக்காக இதை  ஏத்துக்கோங்க. எங்க பொண்ணை விட்டு நாங்க தனியா வளர்ந்ததா இருக்க கூடாது” என்றார்.

சுதாகரனுக்கு விருப்பம் இல்லை. “சரி நான் ஏத்துக்கிறேன் மாமா. ஆனா முதல் போட நானும் பணம் தருவேன்” என்றான்.

அருணகிரி மகனை பார்க்க, சரி என்று தலையசைத்தான். “கடன் வாங்கி எதுவும் கொடுக்க கூடாது மாமா. நானே கேட்கிறேன். அப்போ கொடுத்தா போதும்” என்றான் ரகுராம். வீடு கட்டிய கடன் அவருக்கு உண்டு என்று தெரியுமே.

சுதாகரன் சரியென, “அப்போ நானும் என் அண்ணாவும், என் தங்கச்சியும் தான் அவுட்டா?” என்று ராமமூர்த்தி கேட்டார்.

“பாருங்கண்ணா வீட்ல பிறந்த நமக்கே கேட்டை மூடிட்டாங்க” என்று அண்ணனிடம் சொல்ல, அருணகிரி சிரித்தார்.

“பாரதி இதுக்கு நாம ஒரு வழி பார்த்தே ஆகணும்” என்று தங்கையை கூட்டு சேர்க்க,

“நான் இந்த ஆட்டத்துக்கே வரலை. என்னை விட்டுடுங்க. ஏற்கனவே நான் பார்த்த வழியே போதும்” என்று பாரதி அலறிவிட்டார்.

ஆனால் ரகுராம் அப்பாவின் மூலம் பாரதியிடம் பேசியிருந்தான். இப்படி பண்ண போறோம். உங்களையும் அனுஷா போல சேர்த்துக்கவா என்று. பாரதிக்கு கேட்டதே உள்ளம் நிறைந்து போனது. உறுதியாக மறுத்துவிட்டார்.

அவரிடம் பணத்துக்கு குறைவில்லை. சொந்தம் தானே வேண்டும். அதுவும் பெண் கொடுத்து உறுதிப்படுத்திவிட, இனி எதற்கு இதெல்லாம்?

பாரதி அலறலில் எல்லோரும் சிரித்துவிட, தணிகைவேலிடம் அளவான புன்னகை. ஏதோ மாதிரி உணர்ந்தார்.

‘உறவுகளை கையாள எனக்கு தெரியவில்லையா?’

“நாம திருப்பூர் போய்ட்டு வரணும்” என்றார் பாரதியிடம்.

சரியென, அவர்கள் மூவரும் கிளம்பினர். ரகுராம் உதடு பிதுக்கி மனைவியை அனுப்பி வைத்தான்.

இவர்கள் திருப்பூர் வந்து சேரும் போது வீட்டில் பிரவீன், வேணி,  சுந்தரமும் இருந்தனர். “வாங்க மாமா” என்று வரவேற்று அமர்ந்தனர்.

பாரதி அவருக்கு பிடித்த காபியை கலந்து எடுத்து வந்துவிட, “என் தங்கச்சியை பார்த்தியா?” என்று சந்தோஷமாக எடுத்து கொண்டார்.

“நான் சென்னை கிளம்புறேன்” என்றாள் ஜனக்நந்தினி நால்வரையும் பார்த்து பொதுவாக.

“எப்போ கண்ணு?” ராஜேஸ்வரி கேட்க,

“நாளைக்கு பால் காய்ச்சலாம்ன்னு பிளான் பாட்டி. இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பினா சரியா இருக்கு இல்லைப்பா” என்று அப்பாவிடம் கேட்டாள்.

தணிகைவேல் ஆம் என, “நீங்களும் கூட போறீங்களா. நல்லது. தனியா எப்படி பால் காய்ச்ச? உன் மாமியார் வீட்லயும் வராங்களா?” என்று கேட்டார் பாட்டி.

“இல்லை பாட்டி அவங்க வரலை. அதான் அப்பாவும், அம்மாவும் கூட வராங்க. உங்களுக்கு ஓகே தானே. இல்லை நீங்களும் எங்களோட வரீங்களா? வீட்ல ஒரு வாரம் இருந்துட்டு வரலாம்” என்று ஆசையாக கேட்டாள் பேத்தி.

ராஜேஸ்வரிக்கு கொள்ளை ஆசை தான். ஆனால் ரகுராம்? முடியவே முடியாது என்று தோன்றிவிட்டது. பேத்தி வீட்ல என்னால தங்கவே முடியாதா? அளவில்லா ஏமாற்றம். என்னமோ கண்கள் கலங்கிவிட்டது பாட்டிக்கு.

“என்ன பாட்டி?” பேத்தி பதறிவிட, வீட்டினரும் என்னவோ என்று பயந்துவிட்டனர்.

“ம்மா.. என்னம்மா?” என்று தணிகைவேல் அம்மா கை பிடித்து அமர,

தன்னை சமாளித்து கொண்டவர், “ஒன்னுமில்லை. பாப்பா ஊருக்கு கிளம்புறான்னு” என்றார். அவருக்கு தன்னை ஒப்புக்கொடுக்க முடியாது. ரத்தத்தில் ஊறிய ஊறலை அவ்வளவு சீக்கிரம் பிரித்துவிட முடியாது. நிமிர்ந்து கொண்டார் திரும்பவும்.

வேணிக்கு அம்மாவை கண்டுகொள்ள முடிந்தது. அவரும் பாரதியிடம் விலகி தானே இருக்கிறார். ஒட்ட முடிவதில்லை. பிறப்பின் பெருமையை, அந்தஸ்தை இறுதி வரை தொலைக்காத ஆட்களும் உண்டு.

“அதான் நீங்க என்னோட வாங்கன்னு சொல்றேன்” என்று பேத்தி அவருக்கு பாரதி கொடுத்த தண்ணீரை கொடுத்தார்.

“பேத்தி ஊருக்கு போனா என்ன அதான் பேரன் நான் இருக்கேனே. என்னை எல்லாம் பார்த்தா ஆளா தெரியலையா உங்களுக்கு?” ப்ரவீன் கேட்டான்.

ராஜேஸ்வரி குடித்தவர், “என்ன இருந்தாலும் நீ என் பேத்தியாக முடியாது போடா” என்றவர், “வயசாகிடுச்சு இல்லை கண்ணு. அலைச்சல் தாங்காது. நீ பாட்டியை பார்க்க ஓடி வந்திடுவேன்னு எனக்கு தான் தெரியுமே” என்றார் பேத்தி கன்னம் வழித்து முத்தமிட்டபடி.

“கண்டிப்பா வந்திடுவேன்” பேத்தி அவரை கட்டி கொண்டவள், “உங்ககிட்ட ஒன்னு மட்டும் கேட்கவா பாட்டி?” என்றாள்.

“கேளு தங்கம்” ராஜேஸ்வரி சொல்ல,

“என்னை அங்க கட்டி கொடுக்கிறேன்னு முடிவானதில் இருந்தே நீங்க அம்மாவை அவங்க அம்மா வீட்டை வைச்சு ஒரு வார்த்தை  பேசலை. பேத்திக்காக செஞ்சதை மகனுக்காக, மருமகளுக்காக செஞ்சிருக்கலாமே” என்று கேட்டுவிட்டாள்.

ராஜேஸ்வரிக்கு பேத்தி கண்டுகொண்டாளே என்றிருந்தது. “பாப்பா” என்றார் திகைப்புடன்.

“எனக்கு வீட்ல நடக்கிறது தெரியும் பாட்டி. அப்போ நீங்க இல்லாம நான் நிச்சயத்துக்கு ஒத்துக்கிட்டதே, இந்த காரணத்துக்காக தான். அம்மா அழுது நான் நிறைய பார்த்திருக்கேன். அவங்களுக்கு சப்போர்ட் பண்ண தான் நினைச்சேன்” என்றாள்.

ராஜேஸ்வரி மௌனம் ஆக, “இப்போ ஏன் கண்ணு இதெல்லாம்?” பாரதி மகளை கண்டித்தார்.

“நீ இரு. என் பேத்தி என்கிட்ட தானே கேட்கிறா” மாமியார் அதிகாரம் காட்டினார்.

தணிகைவேலும் மகளின் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்தார். “இங்க எல்லாம் எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்” என்றார் ராஜேஸ்வரி.

“என் பேத்திக்காக பேசுறதை விட்டேன். அதிலென்ன பாப்பா” என்றார்.

“எனக்காகன்றது ஏன் அப்பாக்காக இல்லை பாட்டி?” பேத்தி விடாமல் கேட்க,

“அவன் என்னை ஏமாத்திட்டான். பொண்ணை அவனே தேடிக்கிட்டான்” என்றார் கோவமாக.

“நான் விட்டா ஒரேடியா பொண்டாட்டி பின்னாடி போயிட ரெடியா இருந்தான். எப்படி விடுவேன். இழுத்து பிடிச்சுக்கிட்டேன். என்னால ஏத்துக்கவும் முடியல. அதான் காட்டினேன்”

“அம்மா என்ன பண்ணுவாங்க பாட்டி, அவங்களை ஏன் அவ்வளவு பேசணும்? உங்க எல்லோரோட சம்மதத்தோடே தானே அவங்க உங்க மருமகளா வந்தாங்க.”

“அதான் உனக்காக நிறுத்திட்டேன் இல்லை பாப்பா”

“அப்போ இத்தனை வருஷம் அம்மா கேட்டுக்கிட்டது”

“என்ன சொல்ல வர கண்ணு. உன் அம்மா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும்ன்னா?”

“பாட்டி”

“ம்மா என்னம்மா இது” மகன் வருத்தமாக கேட்டார்.

“என்னை அரக்கின்னு கூட சொல்லிகோங்க. நான் இப்படி தான். என்னால தலை வணங்க முடியாது. என்னை அப்படி என் புருஷனும், என் மகனும் வைச்சதில்லை. என்ன பண்ணட்டும் நான்?” என்று கேட்டார்.

“பாட்டி ப்ளீஸ்”

“என்ன பாப்பா? இந்த பாட்டி உனக்கு வேண்டாமா? அங்க, உங்க வீட்டுக்கு வாழ போகவும் நான் உனக்கு விரோதி ஆகிட்டேனா”

“பாட்டி. ப்ளீஸ் ரிலாக்ஸ் ஆகுங்க” என்றாள் பேத்தி.

Advertisement