Advertisement

அருணகிரி இருக்க, உணவு நேரம் அமைதியாக முடிந்தது. கேரட் அல்வாவை பத்மா கொடுக்க, அருணகிரி போன் பேச சென்றார். ராமமூர்த்தி நேரே தணிகைவேல் முன் சென்று நின்றார்.

அவர் இப்போ என்ன  என்று பார்க்க, “ஆஆ காட்டுங்க” என்று ஸ்பூன் நிறைய கேரட் அல்வாவை அவர் வாயில் வைக்க, தணிகைவேல்க்கு நெஞ்சடைத்து போனது.

பாரதி பதறி ஓடி வந்து கணவரின் நெஞ்சை நீவ, “என்னாச்சுப்பா” என்று மகளும் தண்ணீர் கொடுத்தாள்.

“அது ஒன்னுமில்லை. நான் ஊட்டினா உன் அப்பாக்கு பாசத்துல நெஞ்சு அடைச்சிடும்” என்றார் ராமமூர்த்தி.

அப்படியா? பெண் நம்ப, தணிகைவேல் சின்ன மச்சானை தீயாய் பார்த்தார். “உங்க பாப்பா தான் ஆசைபட்டுச்சு. அதான் ஊட்டினேன்” என்றார் ராமமூர்த்தி.

அல்வாவை விழுங்கி, “உனக்கு ஏன் பாப்பா இந்த ஆசை எல்லாம்?” என்று மகளிடம் கோவம் கொண்டார் தந்தை.

“ப்பா”

“அது அவருக்கு கொஞ்சம் ஷையா இருக்கும் இல்லை. நீ வா” என்று மனைவி தோள் மேல் கை போட்டு அழைத்து வந்துவிட்டான் ரகுராம்.

ராமமூர்த்தி தோள் குலுக்கி நகர்ந்துவிட, “இனி உன் அண்ணா என் பக்கமே வர கூடாது. போய் சொல்லிடு” என்று மனைவியிடம் சத்தம்.

“சரி சரி நான் சொல்லிடுறேன். நீங்க தண்ணீர் குடிங்க” என்று கொடுத்து ஆசுவாசம் செய்தார்.

அனுஷா குடும்பத்துடன் அத்தையை பார்க்க வர, அவர்களுடன் பேச்சு சென்றது. தணிகைவேல்க்கு கிளம்ப வேண்டும். ராஜேஸ்வரி போன் செய்துவிட்டார்.

சுதாகரன் வேலைக்கு செல்ல வேண்டும் என்று மனைவி, மகனுடன் கிளம்பிவிட்டான். வீட்டில் அமைதி நிலவியது. பாரதி எழுந்து பெரிய அண்ணன் முன் நின்றார்.

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. தவித்து நிற்க, தணிகைவேல் “உங்ககிட்ட கலந்து பேசாம பாப்பாவை நான் கூட்டிட்டு வந்திருக்க கூடாது” என்றார்.

பாரதிக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் ஆச்சரியம் தான். அருணகிரி அமைதியாக பார்த்திருக்க, “நான் அப்போ நிறைய விஷயங்கள் யோசிக்கலை. யோசிச்சிருக்கணும். நிதானிச்சிருக்கணும். பாப்பாவை காபி ஷாப்ல பார்க்கவும் கண்ணுமுன்னு தெரியாத கோவம்” என்றார்.

“அப்படி கோவப்படுற அளவு அங்க எதுவும் இல்லை. எங்க மருமக அங்க வேலையே செஞ்சிருந்தாலும் அது தப்பாகாது” என்றார் அருணகிரி.

“என்ன இப்படி சொல்றீங்க?” தணிகைவேல் கோவம் கொண்டார். ஜனக்நந்தினி அச்சம் கொள்ள, ரகுராம் அப்பா மேல் இருந்த நம்பிக்கையில் மனைவியை தைரியமாக இருக்க சொன்னான்.

“ஏன்.. வேலை பார்க்கிறது தப்பா என்ன? நீங்களும் நைட்டும் பகலும் உங்க கம்பெனில வேலை தானே பார்க்கிறீங்க?” அருணகிரி நிதானமாக கேட்டார்.

“நான் பார்த்தா. அவ. என் பொண்ணு ஏன் கஷ்டப்படணும்? அவளுக்கு தேவையானதை நாம செய்யலாம்”

“தட்டில சாதம் இருந்தாலும் கை அதோட வேலை செஞ்சா தான் அது வாய்க்கும், வயித்துக்கும் போகும்”

“என்ன என்ன பேசுறீங்க?”

“எதார்த்தத்தை பேசுறேன். மருமக கஷ்டப்பட்டு படிச்சதோட, அதை பயன்படுத்தவும் செய்யுது. காலையில் இருந்து சாயந்திரம் வரை வேலை பார்க்கிற தானேமா, எவ்வளவு உன் சம்பளம்?” என்று மருமகளிடம் கேட்டார்.

ஜனக்நந்தினி சொல்ல, “பாருங்க. படிப்பு, உழைப்பு, பணத்தோட அருமை தெரியாம இவ்வளவு சம்பாதிக்க முடியுமா? கூட புருஷன் கஷ்டமும் தெரியுது. கை கொடுக்க நினைக்குது புள்ள, அந்த புரிதலை ஏன் உடைச்சு விடணும்?”

தணிகைவேல் திகைக்க, “உங்களவு இல்லைன்னாலும் என் மகனும் நிச்சயம் உங்க பாப்பாவை சந்தோஷமா வைச்சுப்பான். நம்புங்க போதும். குற்றம் கண்டுபிடிக்க தோணாது” என்றார்.

ஆனாலும் தணிகைவேல்க்கு ஒப்பவில்லை. “பாரதியை நீங்க வீட்ல வைச்சுக்கிற மாதிரி ரகுவும் உங்க மகளை வைச்சுக்கணும்ன்னு எதிர்பார்க்கிறீங்களா?” ராமமூர்த்தி கேட்டுவிட்டார்.

“மூர்த்தி” அண்ணன் அதட்டினார்.

“ண்ணா. நான் கேட்கணும். ஏன் வேணாம் சொல்றீங்க. நம்மளை இவர் யோசிச்சாரா? இல்லை  தானே? ஊர்ல நாலு பேர்க்கு இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா என்ன ஆகியிருக்கும். அப்படியென்ன ஒரு கோவம்? நாமும் இவருக்கு சரிசமமா இருந்திருந்தா அப்போ நம்ம ஞாபகம் வந்திருக்கும் தானே? எத்தனை வருஷம் ஆனாலும் பணத்தை வைச்சு இவங்க நடந்துகிறது மாறாது இல்லை” என்றார் ராமமூர்த்தி.

“நான் அந்தஸ்து பத்தி யோசிச்சதில்லை”

“யோசிக்கவே வேணாம், அது உங்க ரத்தத்துல ஊறி போயிருக்கு” ராமமூர்த்தி பட்டென சொன்னார்.

“மாமா. ப்ளீஸ்” என்றாள் ஜனக்நந்தினி.

அப்பாவின் பக்கம் நின்று கொண்டாள். இனி என் அப்பாவை யாரும் பேச கூடாது என்பதாய் அவள் பார்வை இருந்தது.

ரகுராம் அப்பா என்ன  நினைத்து கொள்வார் என்று அவர் முகம் பார்க்க, அருணகிரியோ சிரித்து, “பிள்ளையை அருமையா வளர்த்து இருக்கீங்க. பெத்தவருக்கு எதிரா ஒரு சொல் கேட்க முடியல” என்றார்.

பாரதிக்கு கண்களில் சரசரவென கண்ணீர் இறங்கிவிட்டது. “இப்போ எதுக்கு நீ அழற?” ராமமூர்த்தி தங்கையை அதட்டினார்.

‘என் மகள் எனக்கு நிற்கும் போது, மனைவி அப்படி இல்லையே? என்னால் தானே?  எனக்காக வேண்டி நிறைய பேச்சு வாங்கிட்டா, வாங்கிட்டும் இருக்கா. அவளுக்கு இதுவரை நான் எந்த நியாயமும் செஞ்சதில்லை. இனியாவது செய்யணும்’

தணிகைவேல் நிமிர்ந்து அமர்ந்தவர் “பாப்பாவை அந்த நேரத்துக்கு நான் அப்படி கூட்டிட்டு வந்திருக்க கூடாது, அப்பாவா யோசிச்சேனா தவிர, சம்மந்தியா யோசிக்க தவறிட்டேன். தப்பு தான். நான் உணர்ந்து வருத்தம் சொல்லிக்கிறேன்” என்றார்.

இதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது. “பாரதி.. இங்க வா” அருணகிரி அழைக்க, தங்கை அண்ணனிடம் சென்றார்.

“நாம எப்போவும் எல்லோருக்கும் நல்லவங்களா வாழ முடியாதுன்னு உனக்கே தெரியும். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு நியாயம். உனக்கு உன் வீட்டுக்காரர். அவ்வளவு தான். பாரு உன் பொண்ணும் உன்னை மாதிரி தான் என் மகனுக்கு தூணா நிக்கிறா. எங்களுக்கு அதுல ரொம்ப சந்தோசம்”

“அதோட இப்போ உன் வீட்டுக்காரர் சொன்ன வருத்தம் கூட உனக்காக  மட்டும் தான். அப்பா உங்களை சரியா புரிஞ்சுதான் சேர்த்து வைச்சுட்டு போயிருக்கார். அவரை நீ பொய்யாக்கலை தானே?  அப்புறம் என்ன, விடு” என்றார்.

“எங்க வீட்ல வைச்சு எதுவோ நடந்திருக்கு, அது” பாரதி பேச வர,

“பாரதி. முடிஞ்சதை அப்படியே விட்டுடனும். தோண்ட கூடாது. புதையல் இல்லை அது. நம்ம பிள்ளைங்க நம்மளை பார்த்திட்டு இருகாங்க. அவங்க வாழ்க்கையை நாம பார்க்கணும். சரியா?” என்றார்.

பாரதி தலையசைத்து ஏற்று கொள்ள, “நாங்க கிளம்புறோம்” என்றார் தணிகைவேல்.

ஜனக்நந்தினி கணவனை பார்க்க, அவன் கிளம்பு என்றான். “நான் சென்னைக்கு போய்ட்டு, அங்க வேலை முடிஞ்சதும் சொல்றேன். வந்திடு” என்று வழியனுப்பி வைத்தான்.

தணிகைவேல் குடும்பம் நல்ல முறையில் கிளம்ப, ரகுராமும்  சென்னைக்கு பஸ் ஏறிவிட்டான். அவனுக்கு வழக்கத்தை விட இந்த முறை வேலை அதிகம்.

வேறொரு புதிய வேலையை செய்து கொண்டிருந்தான். வீடு ஷிப்டிங் அவன் முன்னின்று செய்ய முடியாத நிலை. ஜனக்நந்தினியிடமும் சரிவர பேசவில்லை.

ஒரு வாரம் அப்படியே முடிந்திருக்க, “நான் இல்லாம ஜாலியா இருக்கீங்களா?” என்று மனைவி சண்டை கட்டினாள்.

“ஜாலியா நான். போடி” என்று வைத்தான் அவன்.

இவள் தானே பேக்கர்ஸ்க்கு சொல்லிவிட்டாள். வார இறுதி நாளில் ஆட்கள் வந்து நிற்க, கிளம்பி கொண்டிருந்த ரகுராம் மனைவிக்கு போன் செய்தான்.

“அட்ரஸ் சொல்லி கீ கொடுத்துடுங்க. அவங்க பாத்துப்பாங்க” என்று வைத்தாள் அவள்.

ரகுராம்க்கும் அந்த யோசனை பிடித்து போனது. மனைவி சொன்னதை செய்து கிளம்பிவிட்டான். ஜனக்நந்தினி சென்னை வர கேட்க, “இன்னும் ஒரு மூணு நாள் மட்டும்டி” என்றான் கணவன்.

“அதான் வீடு  ரெடி ஆகிடுச்சே. நீங்க அங்க தானே இருக்கீங்க. நான் வந்தா என்ன?” என்று கேட்க,

அவனோ, “உன் மேனேஜர் ஒன்னும் சொல்ல மாட்டார் இல்லை. மூணு நாள் மட்டும் ஒர்க் பிரம் ஹோம் கொடுக்க சொல்லு” என்று வைத்துவிட்டான்.

ஜனக்நந்தினி பல்லை கடித்து நாட்களை தள்ளிவிட, ரகுராம் போனில் தணிகைவேல்க்கு அழைத்து பேசினான். பின் மனைவிக்கு அழைத்து, “நாளைக்கு உன் அப்பாவோட நம்ம வீட்டுக்கு வா” என்றான்.

“சென்னைக்கா” என்று கேட்க,

“கரூர்க்குடி. வரும் போது புடவை கட்டிட்டு வா” என்று வைத்தான் அவன்.

‘என்ன நினைச்சிட்டு இருக்கார் இவர்? புடவை கிடையாது, போ’ பெண் முகம் தூக்கி வைத்து கொண்டு மறுநாள் கிளம்பினாள். பாரதி கேட்க, “புதுசா என்னம்மா. சுடியே போதும்” என்றாள். அவருக்கும் குழப்பம். விட்டுவிட்டார்.

அதிகாலையிலே கிளம்பியிருக்க, கார் நேரே தறி இருக்கும் இடம் சென்றது. இங்க ஏன்? ஜனக்நந்தினி கேள்வியாக பார்த்து இறங்கினாள். புதிதான சிறிய கட்டிடம் ஒன்றில் அலங்காரம் செய்யபட்டிருந்தது. வீட்டு ஆட்கள் மகிழ்ச்சியுடன் இவர்களை வரவேற்றனர்.

ரகுராம் மனைவியை முறைத்து பார்த்தான். இருவரும் அருகருகே நிற்க, “எங்கடி சேரி” என்றான்.

“பங்க்ஷன்னு எனக்கு நீங்க சொல்லவே இல்லை” அவளுக்கு கோவம்.

“சர்ப்ரைஸ்ன்னா இப்படி தான் கொடுக்க முடியும்” ரகுராம் சொல்ல,

“எனக்கா? என்ன சர்ப்ரைஸ்?” பெண் ஆவலாக கேட்டாள்.

“சொல்ல முடியாது போடி” என்றுவிட்டான்.

அடுத்த சில நிமிடங்கள் பூஜை நடந்தது. மனதார வேண்டி கொண்டனர்.

ஒரு பெரிய போர்ட் முன் இருக்க, “அப்பா” என்றழைத்தான்.

“நான் எதுக்குப்பா. நீயும் மருமகளும் திறங்க” என்றார் அருணகிரி.

ரகுராம் உறுதியாக நிற்க, அருணகிரி மொத்த குடும்பத்தையும் தன்னோடு நிற்க வைத்து ரிப்பனை கட் செய்தார்.

பார்த்த ஜனக்நந்தினியின் கண்கள் விரிந்து போனது. அவளையே பார்த்திருந்த ரகுராம் பெண் தன் பக்கம் திரும்பவும் கண்ணடித்தான்.

“ஜனக் முகூர்த்தம்” என்று அதில் அச்சிட பட்டிருந்தது.

திறக்கபட்ட போர்டை கட்டிடத்தின் மேல் ஏற்றினர். அடுத்ததாக, “மருமகளே இங்க வாம்மா” என்றழைத்தார் அருணகிரி.

இன்னும் பிரமிப்பு தீராமல் கணவன் கை கோர்த்து அவரிடம் செல்ல, அருணகிரி ஒரு பெட்டியை அவள் முன் நீட்டினார்.

‘ஜனக் முகூர்த்தம்’ என்று அச்சிடப்பட்ட பெட்டிக்குள் பட்டு புடவை ஜொலித்தது.

ரகுராம் மனைவி கையில் பணம் கொடுத்தான். அவள் அருணகிரிக்கு கொடுத்து அந்த புடவையை வாங்கி கொண்டாள். எல்லோரும் கை தட்ட, எங்கும் மகிழ்ச்சி.

“முறையா எல்லா ப்ரொசீஜரும் செஞ்சு, கம்பெனியை ரெஸிஜிஸ்டர் பண்ணியிருக்கோம். இனி ஜனக் முகூர்த்தம்ங்கிறது  பிராண்ட். இன்னையில் இருந்து நம்ம புடவை பெரிய கடைகளில் கிடைக்கும்” என்று தள்ளி தயாராக இருந்த புடவைகளை காட்டினான்.

“டெக்ஸ்டைல் அசோஷியேஷன்ல பேசி ஏற்பாடு பண்ணியிருக்கோம். இப்போதைக்கு கரூர், திருப்பூர், கோயம்பத்தூர்ல கிடைக்கும். இன்னும் விரிவுபடுத்தணும். நேரம் எடுக்கும். ஆனா கண்டிப்பா பண்ணிடலாம்” என்றான்.

தணிகைவேல்க்கு நிச்சயம் இது ஆனந்த அதிர்ச்சி. மருமகனை பார்த்தே இருந்தார், அந்த மருமகன் கண்களோ மனைவி மேல் தான்.

இருவருக்கும் தனியே நேரம் கிடைக்க, “சர்ப்ரைஸ் பிடிச்சுதா” என்று நெற்றி முட்டி கேட்டான்.

“ரொம்ப” என்றவள், அதன் அளவை கணவனுக்கு காட்டினாள்.

“நைட் எப்போ வரும்ன்னு இருக்கு” என்றான் ரகுராம் ஏக்கத்துடன்.

பெண் முகம் சிவக்க, மேலும் சிவக்க வைத்தான் கணவன்.

“ஏன் ஜனக்?” என்று பெண் கேட்க,

“பிடிக்கும்” என்றான்.

“வித்தியாசமா இருக்கு. யாரும் என்னை இப்படி கூப்பிட்டதில்லை”

“அதான் நான் வைச்சேன். பிடிச்சிருக்கா?”

“இப்போ தானே எவ்வளவு பிடிச்சிருக்குன்னு காட்டினேன்”

“அது பத்தலைன்னு அர்த்தம் என் மக்கு பொண்டாட்டி”

“இந்த ஆட்டத்துக்கு நான் வரலை, போங்க”

“நான் ரெடியாகிட்டேன். நைட் ஆடி பார்த்துடலாம்” என்று கண்ணடிக்க, பெண் அவன் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள்.

Advertisement