Advertisement

அழகியல் 23

ஜனக்நந்தினி, ரகுராம் தம்பதி அறைக்கு சென்றுவிட, கீழே பெரியவர்களிடம் பெருத்த அமைதி. தணிகைவேல், பாரதி மௌனமாக உணவை உண்டு கொண்டிருந்தனர்.

 பாரதியுடன் திருமணம் முடிந்து மறுவீடு வந்த நேரம் இப்படி மாமியார் வீட்டில் விருந்து உண்ட நினைவு தணிகைவேல்க்கு. பழையதை யோசிக்க, அவரின் மாமனார் தானே நினைவிற்கு வந்தார். மிகவும் நல்ல மனிதர்.

“என் விருப்பத்தை சரியா புரிஞ்சு எனக்கு பொண்ணை கொடுத்தார். நான் என் மாப்பிள்ளைக்கிட்ட அப்படி இருக்கேனா?” திடுமென தானே ஒரு கேள்வி அவருள்.

ராஜேஸ்வரி மருமகளை பேசும் விஷயம் அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் மருமகனிடம் ஒரு சொல் ஏன் இப்படி என்று கேட்டதில்லை. சில மாதங்கள் தான் இருந்திருப்பார். ப்ரவீன் பிறக்கும் முன் தவறிவிட்டார்.

இப்போது வரை இருந்திருந்தாலும் என்னிடம் கேட்டிருப்பாரா என்றால் எனோ நிச்சயம் இல்லை என்று தான் தோன்றியது.

“ண்ணா.. இன்னொரு இட்லி” மஞ்சுளா கேட்டு கொண்டிருக்க, வயிறு நிறைந்து விட்டதை உணர்ந்து, மறுத்துவிட்டார்.

பாரதிக்கு உணவு இறங்கவில்லை. கணவனுக்காக உண்டார். இருவரும் உணவு முடித்து வர, “நைட் இங்கேயே தங்கிக்கோங்க” என்றார் அருணகிரி.

தணிகைவேல் மனைவி முகம் பார்த்தார். “ப்ளீஸ்” என்றார் கண்களால்.

“இனி திருப்பூர்க்கு வண்டி ஓட்ட கஷ்டமா இருக்கும். இருங்க” என்றார் அருணகிரி.

“பாரதி உன் வீட்டுக்காரர்க்கு ஏசி இல்லைன்னாலும் ஏர் கூலர் இருக்குன்னு சொல்லு” என்றார் ராமமூர்த்தி. என்னமோ வசதிக்காக மறுப்பதாய்!

“எனக்கு பேன் போதும்” என்றார் தணிகைவேல்.

“அப்போ ஏர் கூலர் நான் எடுத்துகிறேன்” என்றார் ராமமூர்த்தி உடனே.

‘என் மருமகளை கூட்டிட்டு போனீங்க  இல்லை, உங்களுக்கு ஒன்னும் கிடையது போங்க!’

“நான் முதல்ல ஏர் கூலர் கேட்டேனா?” பாரதியிடம் பார்வையால் கேட்டார் தணிகைவேல்.

“ப்ளீஸ்ங்க” என்றார் பாரதி வாயசைத்து.

“பாரதி ரூம் ரெடியா இருக்கு. போய் ரெஸ்ட் எடுங்க. காலையில பேசிக்கலாம்” என்று அருணகிரி சென்றுவிட, பாரதியும் கணவருடன் அறைக்கு வந்துவிட்டார்.

“உன் மாப்பிள்ளைக்கு பால் வேணாமா?” ராமமூர்த்தி கதவு தட்டி கேட்க,

“எனக்கு வேணாம்” என்றார் தணிகைவேல் வேகமாக. அதில் என்ன வினயமோ? சின்ன மச்சான் மேல் நம்பிக்கையில்லை.

“பாதாம் பால் தான், கேட்டு சொல்லு”

“எனக்கு வயிறு புல்லா இருக்கு”

“காஸ்டலி பாதாம் தான் கலந்திருக்கோம் பாரதி”

“எனக்கு பாதாமே பிடிக்காது” ஒரேடியாக சொல்லிவிட்டார் தணிகைவேல்.

“அப்போ பிஸ்தா”

“பாரதி நான் தூங்கிட்டேன்” மாப்பிள்ளை  கட்டிலுக்கே போயாச்சு.

“ஏன்ண்ணா?” பாரதி கேட்க,

“நீ பேசாத. நாளைக்கு இருக்கு உனக்கு” என்று சென்றார் ராமமூர்த்தி.

“இப்போ எதுக்கு அவருக்கு கரைச்சல் கொடுக்கிறீங்க. இத்தனை வருஷம் கழிச்சு இப்போதான் மாமியார் வீடுன்னு தங்குறார். முடிச்சு விட்டுடாதீங்க” மஞ்சுளா கணவனை கடிந்து கொண்டார்.

ராமமூர்த்தி எதையோ யோசித்தவர், “பேசாம ஆபிஸ்க்கு போன் பண்ணி கரண்டை கட் பண்ணிடலாமா?” என்று மஞ்சுளாவிடம் கேட்டார்.

“ஏங்க”

“வேணாம். நமக்கு தூங்க முடியாது. பொழைச்சு போகட்டும்” என்று படுத்துக்கொண்டார் மனிதர். அதன் பின்னே மஞ்சுளாவிற்கு தூக்கம் வந்தது.

பத்மா, மகன் அறைக்கு வெளியே உணவு வைத்து வந்து படுத்தார். அனுஷா கணவன் இரவு உணவு முடித்து மனைவி, மகனை அழைத்து சென்றிருந்தார்.

நாளை பாரதியை பார்க்க வருவாள். எல்லோருக்கும்  அசைவம் எடுக்க வேண்டும். அருணகிரியிடம் சொன்னார் பத்மா. “காலையிலே போய்ட்டு வந்துடுறேன்” என்றார் அருணகிரி.

பாரதி அறையில் பேன் ஓடும் சத்தம் மட்டுமே. இருவருக்கும் தூக்கம் இல்லை. தணிகைவேல் அவரின் பழைய நாட்களை நினைத்திருக்க, மனைவியிடம் இருந்து விசும்பல் சத்தம்.

“பாரதி” என்று அவரை தன் பக்கம் திருப்ப, இன்னும் நல்ல அழுகை.

தணிகைவேல் சமாதானம் எல்லாம் காதில் ஏறவில்லை. சில நிமிடங்களில் அவரே நிறுத்த, தண்ணீர் பாட்டிலை கொடுத்தார். “என்னாச்சு?” என்று கேட்க,

“அண்ணா என்கிட்ட சரியா பேசலை” என்றார்.

தணிகைவேல் புருவம் சுருக்கி பார்க்க, “அப்பா அமைச்சு கொடுத்த வாழ்க்கையில தோத்துட கூடாதுன்னு நினைச்சேனே தவிர, பாரதியா நான் நிமிர்ந்து நிக்கணும்ன்னு நினைக்கலை. ரொம்ப மோசமா தோத்துட்டேன்” என்றார்.

தணிகைவேல்,  “பாரதி என்ன பேசுற நீ” என்றார் கலக்கத்துடன்.

“உண்மையை தான் சொல்றேன்ங்க. நம்ம வீட்ல கடைசியா இரண்டு அண்ணன்ங்க வந்தப்போ என்னமோ நடந்திருக்கு. எனக்கு தெரியல” என்றார் மேலும் கண்ணீர் சிந்தி.

அவருக்கும் அந்த நாள் நினைவில் இருந்தது. எவ்வளவு கேட்டும் இருவரும் சாப்பிடாமல் கிளம்பி வந்திருந்தனர். அது தான் கடைசி. அம்மா ஏதும்? நினைக்கவே கொஞ்சம் பயமாக இருந்தது.

“என்ன நடந்திருந்தாலும் அவங்க என்னை விட்டிருக்க கூடாதுன்னு தான் நான் வைராக்கியம் வைச்சேனே தவிர, அவங்களோட மரியாதையை நான் யோசிக்கலை. தப்பு தானே?” என்று கணவனிடம் கேட்க, தணிகைவேல் என்ன சொல்வார்?

“நீங்க குடும்பத்தோட வந்து பொண்ணு  கேட்டு தானே அப்பா என்னை உங்களுக்கு கட்டி கொடுத்தார். முறையா தானே மருமகள் ஆனேன். ஆனாலும் அத்தை என்னை பேசும் போது, நான் ஏன் அவங்ககிட்ட கேட்கலை? அன்னைக்கு நான் அவங்ககிட்ட நிமிர்ந்து நின்னிருந்தா,  இன்னைக்கு நீங்க ரகுராம்கிட்ட இப்படி நடந்திருக்க மாட்டீங்க தானே?”

“பாரதி”

“ரகு.. என் அண்ணா மகன் என்கிட்ட இப்படி கேட்டாங்க. உண்மை தானே. இப்போவரை அதுக்கு என்கிட்ட பதில் இல்லை” என்றார் நிற்காத கண்ணீருடன்.

“பாரதி.. அப்போ நான்.. நான் பாப்பாவை மட்டும் யோசிச்சு”

“என் அண்ணா உங்களுக்கு மச்சான் மட்டுமில்லை, சம்மந்தி கூட. நீங்க அவர்கிட்ட ஒரு வார்த்தை பேசாமல் அவர் மருமகளை அந்த நேரத்துக்கு கூட்டிட்டு வந்துட்டிங்க. அப்போ சம்மந்தியா அவருக்கு என்ன மரியாதை இருக்கு. பணம் இருந்தா மரியாதை காணாம போயிடுமா?”

“பாரதி”

“இது என் அண்ணி கேட்டாங்களாம். மஞ்சுளா சொன்னா, எனக்கு இதுக்கும் பதில் இல்லைங்க. நான். நான் எப்படி நாளைக்கு அண்ணா முன்னாடி நிற்பேன்”

“அப்போ தான் அவருக்கு மரியாதை கிடைக்க விடாம பண்ணேன். இப்போ துரத்தி வந்து பொண்ணு கொடுத்ததும் மரியாதை இல்லாம பண்றேன். இப்படி ஒரு தங்கச்சி அவங்களுக்கு தேவையா? வேணாம் தானே?”

“பாரதி. ப்ளீஸ். ப்ளீஸ்டி. கொஞ்சம் நிதானமா இரு”

“எனக்கு முடியலைங்க. என் பொண்ணு கட்டி கொடுத்ததோட டார்கெட் அச்சீவ்ட்ன்னு சொல்றா. அப்போ அம்மாவாவும் நான் சரியில்லை தானே?”

“பாரதி.. பாரதி. கொஞ்சம் அமைதியா இரு. நாம பேசலாம்”

“இனி பேசி என்ன ஆக போகுது, பேசவும் என்ன இருக்கு? என் கூட பிறந்தவங்க ஏன் என்னைவிட்டு விலகுறாங்கன்னு கவனிச்சு சரி பண்ணியிருந்தா நான் நல்ல தங்கச்சி. இங்க நானே சரியில்லாம அவங்க மேல வைராக்கியம் வைச்சு என்ன சாதிச்சுட்டேன். இதோ அழுதுட்டு தான் இருக்கேன். சுயநலமா யோசிச்சேன். அனுபவிக்கிறேன்” என்றார் விரக்தியாய்.

‘மகளை யோசித்து மனைவியை விட்டுட்டோமா? எத்தனை நாள் வேதனை அவளுள் இது’

பாரதி சுருண்டு படுக்க, தணிகைவேல் ஆதரவாக தட்டி கொடுத்தார். “வேண்டாம்ங்க” என்று அவர் கையை விலக்கிவிட்டார்.

“பாரதி”

“ப்ளீஸ். என்னை விடுங்க” என்றார். உடன் தள்ளியும் படுத்து கொண்டார்.

இத்தனை வருடங்களில் அவர் இப்படி நடந்து கொண்டதில்லை. முதல் முறை என்பதில் கணவரின் உள்ளம் குத்தியது.

தணிகைவேல் பேச முனைய, பாரதியிடம் பிரதிபலிப்பு இல்லை. அந்த இரவு இருவருக்கும் கடினமாக கழிந்தது.

மறுநாள் விடியற்காலையில் ரகுராம் சென்னை கிளம்ப வேண்டும். அவனோ ஆழ்ந்த தூக்கத்தில். ஜனக்நந்தினி தான் அவனை எழுப்ப போராடி கொண்டிருந்தாள். “விடுடி” என்று புரண்டு படுத்தான்.

“எனக்கு ஒன்னுமில்லை. உங்களுக்கு தான் லேட் ஆகும்” மனைவி சொல்ல,

“ஆனா ஆகிட்டு போகுது. நைட் எல்லாம் உழைக்க வைச்சுட்டு எழுப்புறா” என்றான்.

“நானா உங்களை உழைக்க சொன்னேன்” மனைவி உர்ரென்று கேட்க,

“நீ ஏன் கேட்க போற? உன்னை பார்த்தாலே உழைக்க ரெடியாகிடுறேன். என்ன பண்ணட்டும்” என்று நியாயம் பேசினான்.

“இனி பார்க்காதீங்க. கண்ணை மூடிக்கோங்க” அவள் கட்டிலை விட்டு எழ போக, பிடித்து வளைத்து கொண்டவன், “என் பொண்டாட்டியை நான் பார்க்காம எப்படி?” என்றான் முத்தம் வைத்து.

“முதல்ல போய் குளிச்சுட்டு வாங்க”

“அதான் நீ குளிச்சுட்ட இல்லை போதும். பேலன்ஸ் ஆகிடும்” என்றான்.

“உண்மையாவே நீங்க கிளம்பலையா?”

“வெடிகுண்டை வீட்ல வைச்சுட்டு எப்படி கிளம்புறது?” என்று கேட்டான்.

ஜனக்நந்தினி வெடிகுண்டா என்று முழிக்க, “உன் அப்பா தாண்டி” என்று கழுத்தில் புதைந்தான்.

மகளுக்கு கோவம் வந்துவிட்டது, கணவனின் உச்சி முடி பிடித்து தூக்கியவள், “என் அப்பாவை இப்படி சொல்வீங்களா?” என்று கேட்டாள்.

“ஆட்டம் பாம் சொல்லவா?” அவன் வம்பு வளர்த்தான்.

“உங்களை. போங்க” என்று அவள் மேலிருந்து தள்ள, அவனோ அவளை கட்டி கொண்டு கட்டிலில் உருண்டான்.

இரவு பசிக்கு வெளியே வர, பத்மா வைத்திருந்த உணவுடன், தணிகைவேலின் காரையும் பார்த்த ரகுராம்க்கு ஆச்சரியம் தான். “என்ன உன் அப்பா புதுசா மாமனார் வீட்ல எல்லாம் தங்குறார்?” என்று மனைவியிடம் கேட்டான்.

“ஏன் தங்கினா என்ன? கவனிக்க மாட்டிங்களா?” என்று கேட்டாள் மகள்.

“என் சித்தப்பா போதுமே உன் அப்பாவை கவனிக்க. ஆக்சுவலி அவருக்கு உன் அப்பா மேல ரொம்ப பாசம், நம்ம கல்யாணத்துல ஊட்டியெல்லாம் விட்டார் தெரியுமா?” என்று சொல்ல,

மனைவி, “அப்படியா? நான் பார்க்கலையே?” என்று வருத்தம் கொண்டாள்.

“வேணும்ன்னா உனக்காக நாளைக்கே அவருக்கு ஊட்டி விட சொல்றேன் இரு” என்றான்.

“சொல்லுங்க, அப்படியாவது அப்பா நம்மளோட நல்லா மிங்கிள் ஆகட்டும்” என்றாள்.

“மிங்கிள்  தானே பக்காவா ஆகிடுவார், அப்படியே காந்தம் மாதிரி ஒட்டிக்குவார்.  நீ வேணா பாரேன்” என்றவன், இட்லியை சிரிப்போடு விழுங்கி கொண்டான்.

இப்போதும் அதை நினைக்க ரகுராம்க்கு அப்படி ஒரு சிரிப்பு. “என் அப்பாவை ஆட்டம் பாம் சொல்லிட்டு சிரிக்கிறீங்க?” மனைவி கவனித்து கேட்க,

“அவரை மத்தாப்பா மாத்த தான் என் சித்தப்பா இருக்காரே?” என்றான்.

“உண்மையா சொல்றீங்களா? உங்க கண்ணு சிரிக்குது” என்றாள் சந்தேகத்துடன்.

“அது சந்தோஷத்துல சிரிக்குதுடி” என்றவன் அவளை மேலும் பேசிவிடவில்லை.

ரகுராம் கீழே வாரதாதில் வீட்டினர் அவன் சென்னை போகாததை  புரிந்து கொண்டனர். ராமமூர்த்தி அண்ணனை மறுத்து தானே சென்று அசைவம் எடுத்து வந்தார். தணிகைவேல், பாரதிக்கு  புது உடை கொடுக்கப்பட, அவர்கள் குளித்து வந்தனர்.

ரகுராம், ஜனக்நந்தினியும் வந்துவிட காலை உணவுக்கு அமர்ந்தனர். “சித்தப்பா” என்று பக்கத்தில் இருந்தவரின் காதை கடித்தான் மகன்.

“உங்க மச்சானுக்கு நீங்க ஊட்டிவிட்டதை என் பொண்டாட்டி பார்க்கலையாம். இப்போ ஊட்டி விடுங்க” என்றான்.

ராமமூர்த்தி அப்படியா என்று மருமகளை பார்க்க, அவள் ஆமாம் என்று உற்சாகமாக தலையாட்டினாள். ராமமூர்த்தி கண்கள் மகிழ்ச்சியில் மின்ன, உண்மை தானோ என்று ஜனக்நந்தினி நம்பி சந்தோஷம் கொண்டாள்.

Advertisement