Advertisement

அழகியல் 22

ஜனக்நந்தினி, ரகுராம் மட்டும் வெளியில் நின்றனர். மனைவி கணவனை ஒட்டி நின்றாள். “நான் கிளம்பவா?” அவன் கேட்க, பெண் தலை மட்டுமே  அசைத்தாள். “என்னடி” என்று அவள் கை பிடிக்க, அமைதி.

“நான் அதிகமா ஏதும் பேசிடலை தானே. அப்செட் ஆகிட்டியா?” என்று கேட்டான்.

மொத்த பேச்சு வார்த்தையிலும் மனைவி மௌனமாக இருந்ததை கவனித்து தான் இருந்தான்.

“வீடு வேணாம் சொன்னதுக்கு என் மேல கோவமா”

“உன் அம்மாகிட்ட கேட்டது பிடிக்கலையா?”

“என்னன்னு சொன்னாதானே தெரியும்” அவனுக்கு புரியவில்லை.

திருமணம் ஆன மறுநாளே, “எனக்கு அம்மா வீடு வேணும்” என்று கேட்டிருந்தாள். அதன் பொருட்டே அவனும் நிறைய பொறுத்து தான் இன்று கொஞ்சம் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தான்.

“இதனால இரண்டு வீட்டுக்குள்ள எதாவது பிரச்சனை வரும்ன்னு நினைக்கிறியா?” என்று கேட்டவன், “நான் அப்படி எதுவும் நடக்க விட மாட்டேன்டி. பார்த்துகிறேன்” என்றான் ஆதரவாக.

ஜனக்நந்தினி வார்த்தைகளை உதிர்க்கவே இல்லை. ரகுராம் தலை கோதி கொண்டான்.

“என்கிட்ட சண்டை போடணும்ன்னு தோணுதா”

“எதாவது பேசுடி, படுத்தாத”

“ம்ப்ச்” மனைவி மௌனமாக இருக்க, ரகுராமன் போன் ஒலித்தது. “சித்தப்பா” என்று எடுத்தான்.

“நான் வரவா சாமி. அங்க ஓகே தானே?” அவர் கேட்க,

“நீங்க இன்னும் கிளம்பலையா? நான் உங்களை பஸ் ஏத்தி தானே விட்டேன்” ரகுராம் கேட்டான்.

“ஆமா ஏத்திவிட்டா இறங்க தெரியாது பாரு. நீ சொல்லு நான் வரவா. இங்க பக்கத்துல தான் இருக்கேன்” என்றார் அவர்.

ரகுராம் கேட்டுக்கு வெளியே சென்று பார்க்க, ராமமூர்த்தி தள்ளி ஆட்டோவில் இருந்தார்.

“சித்தப்பா” என்றான் இவன்.

“நான் வரேன்” என்று அவர் கை காட்டி வர,

“இருங்க.. நானே வரேன்” என்று அவரை நிறுத்திவிட்டான்.

ஜனக்நந்தினி கணவனிடம் வர, “நான் கிளம்புறேன்டி” என்றான்.

அவளுக்கு மனதே இல்லை. ஆனால் தலை அசைத்தாள். “சரின்னு கூட சொல்ல மாட்டியா?” ரகுராம் கொஞ்சம் கோவமாக கேட்டவன், “போன் பண்றேன். அப்போவாவது பேசு. சண்டை போடணும்ன்னா கூட ஓகே” என்று அவள் கை கோர்த்து விலகி சென்றான்.

ஜனக்நந்தினி கேட்டில் நின்று கணவனை பார்க்க, அவன் ராமமூர்த்தியிடம் ஏதோ கேட்டு கொண்டிருந்தான். ராமமூர்த்தி அவனுக்கு பதில் அளிக்காமல், இவளுக்கு அங்கிருந்தே கை காட்டி மகனுடன் ஆட்டோவில் ஏறிவிட்டார்.

“நான் என் பொண்டாட்டிக்கு பை சொல்ல வேணாமா?” ரகுராம் கேட்க,

“கை என்ன பண்ணுது. வெளியே நீட்டி காட்டு” என்றார் அவர்.

“உங்களோட” என்றவன், கரூருக்கு கிளம்பிவிட்டான்.

ராமமூர்த்தி பஸ்ஸில் ஏறியபின் மகனிடம் கேட்க, “வீட்ல போய் மொத்தமா சொல்றேன் சித்தப்பா” என்று கண் மூடி சாய்ந்து கொண்டான். மனைவி அமைதி உறுத்தல் தான்.

‘கோவிச்சுக்கிட்டாளா’

‘வீடு காலி பண்றேன் சொன்னது பிடிக்கலையா’

‘அப்பா செல்லம் வேற’

‘அவர்கிட்ட ஏன் இப்படி பேசுனீங்கன்னு சண்டை போடுவாளா?’

‘அவங்க அம்மாவை கேட்டது ஏதும் தப்பா எடுத்துகிட்டாளா?’

‘ஆனா அவளுக்கு என்னை புரியுமே? தெரியுமே?’

சில நிமிடங்களில் அவனே அலைச்சலில் அசந்து போனான். ராமமூர்த்தி மகனையே பார்த்து வந்தார். கொஞ்சம் இல்லை அதிக வருத்தமே அவனை நினைத்து.

பாரதி பேச்சை கேட்டிருக்க கூடாதோ? அடிக்கடி நினைத்து கொள்கிறார்.

ப்ரவீன், அனுஷா வரன் கூடவில்லை என்றதும் அப்படியே விட்டிருக்க வேண்டும். இவனை உள்ளே இழுத்து விட்டிருக்க கூடாது.

‘என்ன இருந்தாலும் பெத்தவங்க பெத்தவங்க தான், அவங்களுக்கு அப்போவே விருப்பம் இல்லை. அவங்க மனசுல ஏதோ பட்டிருக்கு. நான் தான் தங்கச்சி பொண்ணை கட்டினா இவன் சந்தோஷமா இருப்பான்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்’ அவருக்குள் குற்ற உணர்ச்சி.

இருவரும் வீடு வந்து சேர, முதலில் உணவு முடிந்தது. அருணகிரி மகனை பார்க்க, “அவருக்கு என்மேல நம்பிக்கை இல்லை போல. அதான் இப்படி பண்ணியிருக்கார்” என்றான்.

“யோசிச்சு பார்த்தா அவர் சரின்னு தான் தோணுது” என்றார் அருணகிரி.

“ண்ணா” என்று ராமமூர்த்தி கோவபட,

“இரு மூர்த்தி. அவருக்கு முதல்ல இருந்தே மகளை இங்க கொடுக்க விருப்பமில்லை. வசதியா வளர்ந்த பொண்ணு, நம்ம வீட்ல கஷ்டப்படும்ன்னு நினைச்சார். அதுக்கேத்த மாதிரி சூழ்நிலையும் அமைஞ்சு போச்சு. பிடிச்சுக்கிட்டார். இவ்வளவு சீக்கிரம் அவரோட அந்த எண்ணம் மாறிடுமா என்ன?” என்று கேட்டார்.

“அதுக்காக அந்த நேரத்துக்கு மருமகளை கூட்டிட்டு வருவாரா?” என்று கேட்டார் ராமமூர்த்தி.

“அது தப்பு தான்” அண்ணா ஒத்துக்கொள்ள,

“தப்புன்னு சாதாரணமா சொல்றீங்க?” என்று பத்மா கேட்டார்.

“அவருக்கு எப்போவும் நம்ம மேல மட்டு மரியாதை கிடையாது, பொண்ணு கொடுத்தும் அப்படி தான் இருக்கார்” என,

“பத்மா, ஒரேடியா அப்படி சொல்லிட முடியாது. ஏதோ  அவசரப்பட்டு, கோவத்துல பண்ண மாதிரி தான் இருக்கு”

“இல்லைங்க. என்னால ஏத்துக்க முடியாது. அவருக்கு நம்ம மேல மரியாதை இல்லை. இதுவே அவங்க வேற இடத்துல பொண்ணு கொடுத்திருந்தா இப்படி பண்ணியிருப்பாரா? பண்ணியிருக்க தான் முடியுமா? நாமங்கிற அஜாக்கிரதை தானே அவரை இந்தளவு பண்ண சொல்லுது” பத்மாவின் கோவம் நன்றாகவே தெரிந்தது.

யாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை. அது உண்மை தானோ என்று யோசித்தனர்.

“என்ன ரகு நான் சொல்றதுல தப்பு இருக்கா?” என்று மகனை பார்த்தார் அவர்.

ரகுராம் மூச்சிழுத்துவிட்டவன், “அவருக்கு நம்ம மேல மரியாதை இருக்கா, இல்லைங்கிறதை விட, மாமியார் வீடு தானேன்னு கொஞ்சம் அட்வான்டேஜ் எடுத்துகிற மாதிரி இருக்கும்மா ” என்றான்.

“எல்லாம் ஒன்னு தானே. பாரதியை கட்டிட்டு போய் மாமியார்ன்ற முறையில அந்தம்மா எவ்வளவு பேசுச்சு, நாம பொண்ணு எடுத்தும் அப்படி ஏதும் நடந்துக்கிட்டோமா என்ன? இல்லை மருமககிட்டேயும் ஒரு சொல் மனசு கோணுற மாதிரி பேசியிருப்போமா? தெரிய வேணாம். யோசிக்க வேணாம். பணம் காசு இருந்தா என்ன வேணா செஞ்சிடலாமா?” என்று பத்மா வெடிக்க, மஞ்சுளாவிற்கு பயம் பிடித்து கொண்டது.

அருணகிரி வீட்டின் தலைவர் என்றால், பத்மா தானே வீட்டின் தலைவி. அவருக்கு அங்கு அதிகளவில் மரியாதை உண்டு. அருணகிரி மனைவி சொல்வதில் நியாயம் இருந்தால் ஏற்று கொள்ளுபவர் தான். இப்போதும் அப்படி ஏதும் நடந்துவிட்டால்?

ஏன் ராமமூர்த்தியும் இதுவரை அண்ணியை எதிர்த்து பேசியதில்லை. சரி அண்ணி, செஞ்சுடலாம் அண்ணி தான். இத்தனை வருடங்களில் அண்ணா குடும்பத்திற்கு அவர் எதிர்த்து செய்தது, பேசியது என்றால், அது பாரதிக்காக மட்டும் தான்.

அதுவும் தப்பு என்றளவில் தணிகைவேல் செய்துவிட, இவரால் வாயே திறக்க முடியவில்லை. பேசினால் நிச்சயம் பத்மா இப்போதிருக்கு கோவத்திற்கு முகதாட்சண்யம் பார்க்க மாட்டார் என்று வெளிப்படையாகவே தெரிந்தது.

பத்மாவிற்கும்  இவர்களால் தானே? என்ற கோவம் அதிகளவில் உண்டு. என் மகனுக்கு நாங்க கல்யாணம் செஞ்சு வைக்க மாட்டோமா என்று கேட்டுவிடலாம். கேட்டும் இருப்பார். ஆனால் ராமமூர்த்தி தம்பதி ரகுராமை மகன் போல் பார்ப்பதால் கேட்க முடியவில்லை.

கட்டுப்படுத்தி கொண்டார். அவர்களை மனம் நோக வைத்து என்ன ஆக போகிறது. நல்லது தானே நினைத்தார்கள்!

“என்ன ரகு என்ன பேசிட்டு வந்த? அவர்கிட்ட ஏன் இப்படி பண்ணீங்கன்னு கேட்டியா?” பத்மா மகனிடம் கேட்டார்.

“கேட்டேன்ம்மா. வீடு காலி பண்றேன் சொல்லிட்டு வந்துட்டேன்” என்றான். அம்மா கோவம் இதில் தணியும் என்று தெரிந்து சொன்னான்.

நினைத்தது போல, “நானே சொல்ல நினைச்சேன். அவர் வீடா இருக்க போய் தானே அதிகாரம். நினைச்ச நேரத்துக்கு மகளை கூட்டிட்டு கிளம்புறது. சொந்தமோ, வாடகையோ  நம்ம வீடா இருக்கட்டும்” என்றார் பத்மா.

“வீடு பார்த்துட்டியா?” அருணகிரி கேட்க,

“பார்த்துட்டேன்ப்பா” என்றவன், வீடு பற்றி தகவல் சொன்னான்.

“அதே ஏரியாவா? இப்போவாவது இரண்டு பேர் ஆபிஸ்க்கு இடையில இருக்கிற மாதிரி பார்க்கிறது?” அருணகிரி கேட்க.

“இருக்கட்டும்ப்பா. எனக்கு காபி ஷாப் அங்க கிட்ட இருக்கு. காலையில பைக் ஓட்டிடுவேன். நைட் கொஞ்சம் கஷ்டமா இருக்கு” என்றான்.

“ம்ம்” என்றவர், “நாளைக்கு கிளம்புறியா?” என்று கேட்டார்.

“இல்லைப்பா லீவ் தான். அடுத்த நாள் காலையில நேரா ஆபிஸ்க்கு போறேன்” என்றான்.

மேலும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு, ரகுராம் அறைக்கு வந்தான். ராமமூர்த்தி பின்னால் வந்தவர் கதவு தட்டி மகனை மொட்டை மாடிக்கு அழைத்தார்.

“என்ன சித்தப்பா” என,

“எங்க மேல உனக்கு ஏதும் கஷ்டம் இல்லையே” என்றார். மஞ்சுளாவும் வந்தார்.

“உங்கமேல எனக்கென்ன கஷ்டம் சித்தப்பா?” அவன் புரியாமல் கேட்க,

“அன்னைக்கு நான்.. நான் பாரதிக்கு சப்போர்ட் பண்ண போய் தான் உனக்கு, நீ அங்க பொண்ணு கட்ட”

“சித்தப்பா.. சித்தப்பா” என்று அவரை நிறுத்தினான்.

“இதென்ன புதுசா பேசுறீங்க?” என்று கேட்க,

“இல்லை சாமி. அக்கா கோவம் நியாயம் தானே. பாரதி வீட்டுக்காரர் பண்ணது தப்பு. பெரிய மாமா மேல கொஞ்சம் கூட மரியாதை இல்லாம ஜானுவை கூட்டிட்டு வந்துட்டார்”

“சித்தி. அவர் என்ன நினைச்சு அப்படி செஞ்சார்ன்னு நமக்கு தெரியாது. என்னை பொறுத்தவரை அவர் இதெல்லாம் யோசிச்ச மாதிரி கூட தெரியல. மகளை கஷ்டப்படுத்திட்டேன்னு என்மேல கோவம். அதை என்கிட்ட காமிக்கணும். அவ்வளவு தான்” என்றான்.

“உன்கிட்ட கூட அவர் அப்படி நடந்துக்கலாமா சாமி. மருமகன்  மாமனாரை மதிக்கும் போது அவரும் அப்படி நடந்துக்கணும் தானே?”

“விடுங்க சித்தி. பார்த்துக்கலாம்” என்றான்.

உறவுகளின் உணர்வுகள் எப்போதும், எங்கு வெடிக்கிறது என்பது அனுபவ பாடம் தான். படித்து கொண்டே இருக்கிறான்.

“நீங்க கவலைபடாம தூங்க போங்க. மேனேஜ் பண்ணிக்கலாம்” என்று அவர்களை அனுப்பி வைத்தான்.

ராமமூர்த்தி தம்பதி முகம் தெளியவில்லை. புரிகிறது தான். ஆனால் இப்போது உடனே என்ன செய்திட முடியும்?

அறைக்குள் வந்தவன், முதல் வேலையாக மனைவிக்கு அழைத்தான். அவள் எடுக்கவில்லை. தூங்கியிருப்பாளா? சந்தேகம் தான். திரும்ப அழைத்தான். எடுக்காமல் மெசேஜ் மட்டும் வந்தது. “வீட்டுக்கு போயிட்டீங்களா?” என்று கேட்டிருந்தாள் ஜனக்நந்தினி.

“வந்துட்டேன். நீ போன் எடு” என்று அனுப்ப,

“எனக்கு தூக்கம் வருது. தூங்க போறேன்” என்று ஆப்லைன் போய்விட்டாள்.

இவன் திரும்ப செய்த மெசேஜ், கால் எதற்கும் பதில் இல்லை. “போடி” என்று படுத்துவிட்டான். ஆட்டம் காட்டிய தூக்கம் ஒரு நேரத்தில் அவனை அரவணைத்து கொண்டது.

மறுநாள் மிகவும் தாமதமாகவே எழுந்தான். இது போலெல்லாம் அவனுக்கு அடிக்கடி வாய்க்காது. குளித்து கீழிறங்கினான். பத்மா மகனுக்கு உணவு பரிமாற, சாப்பிட்டு அவருடனே தறி சென்றான்.

“நீ வீட்ல ரெஸ்ட் எடு” என்று பத்மா வற்புறுத்தியும் கேட்கவில்லை.

அப்பா, சித்தப்பா, சித்தி எல்லாம் தறியில் தான் இருந்தனர். மஞ்சுளா, ராமமூர்த்திக்கும் தறி வேலை பழக்கம் என்பதால் முன் மாலை வரை ஆளுக்கொரு வேலை செய்தபடி அங்கிருந்தனர்.

அனுஷா குடும்பத்துடன் மாலை வீட்டுக்கு வர, விரைவாகவே எல்லாம் வந்துவிட்டனர். தம்பியை முறைத்த அனுஷா, “அக்கா வீட்டுக்கு எல்லாம் வர தோணாதா? நான் தான் உன்னை பார்க்க வரணுமா?” என்று கேட்டாள்.

“நீ வரலைன்னா நானே ஈவ்னிங் வந்திருப்பேன்” என்றவன், அக்கா மகனுடன் பைக் ரைட் சென்றான். அப்படியே எல்லோருக்கும் சாப்பிட பலகாரம் வாங்கி வந்தான்.

பத்மா, மஞ்சுளா வேலை செய்து வந்திருக்க. வீட்டில் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டான். அவர்களும் ஒரு டீ மட்டும் போட்டு வைத்திருக்க, பொதுவான பேச்சுக்கள் சென்றது.

ரகுராம் மனைவிக்கு அழைத்தான். இப்போதும் எடுக்கவில்லை. எத்தனை கால், ஒன்னுக்காவது ரெஸ்பான்ஸ் பண்றாளா பாரு? மொபைலை வெறித்திருந்தான்.

சில நொடியில், “சென்னை கிளம்பிட்டீங்களா?” என்று மெசேஜ் அனுப்பினாள்.

“நீ ஏன் என் போனை எடுக்க மாட்டேங்கிற, என்ன பிரச்சனை உனக்கு?” என்று கேட்டான்.

பார்த்தும் பதில் இல்லை. இவனே “நம்ம வீட்ல இருக்கேன். நாளைக்கு காலையில தான் கிளம்புறேன்” என்று அனுப்ப, ஆள் காணாமல் போயாச்சு.

“ரகு” என்று தந்தை வர,

“சொல்லுங்கப்பா” என்றான் மொபைல் வைத்து.

“இந்தா” என்று ஒரு சிறிய பை கொடுக்க, அதில் பணம்.

“என்னப்பா”

“உனக்கு தான்”

“எனக்கு எதுக்குப்பா? நீங்க வைங்க. இங்க தேவைப்படும்”

“முதல்ல பணம் கொடுத்தா வாங்கி பத்திரப்படுத்து ரகு” என்றார் தந்தை.

ரகு கையில் வைத்து கொள்ள, “தறி வருமானம் உனக்கு தெரியும். கூடியிருக்கு. லோன் பணம் கட்ட வைச்சுக்கோ. இனி மாசாமாசம் நான் கொடுக்கிறேன்” என்றார்.

Advertisement