Advertisement

அருணகிரி தவிர்த்து, பத்மா, ராமமூர்த்தி தம்பதி வந்தனர். அதிலே பாரதிக்கு சுருக்கென இருந்தது. பத்மாவிற்கு அவ்வளவு கோவம். பணம் இருந்தால் இப்படி எல்லாம் நடந்து கொள்வார்களா? என்று.

பாரதி வரவேற்க, முகம் காட்டவில்லை. அதே நேரம் பழையபடியும் இல்லை. மஞ்சுளாவும் அமைதியாக தான் இருந்தார். மருமகள் தன் வீட்டினரை தன்னுடன் வைத்துக்கொண்டாள்.

ரகுராமும் வந்துவிட, பாரதி வாசலுக்கே சென்றார். தணிகைவேல் மருமகனை வரவேற்க, ஆர்த்தி வீட்டிலும் அவனை வரவேற்று உபசரித்தனர்.

ஜனக்நந்தினி தள்ளி இருந்தபடி எல்லாம் பார்த்திருக்க, ரகுராம் இவர்கள் இருக்குமிடம் வந்தான். இயல்பாக மனைவி பக்கத்தில் அமர்ந்தான். அம்மா, சித்தியிடம் பேசினான்.

ராமமூர்த்தி அவனை முறைத்திருக்க, “என்ன மாப்பிள்ளையை கவனிக்க முடியலன்னு கவலையா?” என்று வம்பிழுத்தான்.

“நீ விட்டா போதும் நல்லா கவனிச்சிடுவேன்” என்றார் அவர்.

ரகுராம் சத்தமாக சிரித்துவிட, மனைவி கண்கள் அவனை தயங்காமல் ரசித்தது. வீட்டினர் இவர்களை பார்த்திருக்க, “திரும்புடி” என்றான் அவள் பக்கம் சாய்ந்து.

“ஏன் உங்க மாமனார் பார்க்கிறாரா?”

“காய்ஞ்சு போய் கிடக்கேன். தூக்கிட்டு போயிடுவேன்”

“போங்களேன்” என்றாள் இவள்.

“என்னை கிளப்பி விடாத. சீரியஸ் மூட்ல இருக்கேன். என் மாமனார்கிட்ட பஞ்சாயத்து பேசணும்” என்றான் கண்ணடித்து.

“பேசுங்க பேசுங்க” என,

பெயர் வைக்க அழைத்தனர். குழந்தை காதில், “அஷ்வந்த்” என்றனர். “நீங்களும் சொல்லுங்க” என்று ராஜேஸ்வரி சொல்ல, அத்தை, அத்தை கணவன் என்ற முறையில் இவர்களும் குழந்தை காதில் சொன்னார்கள்.

அடுத்து உணவு முடிய, விழாவும் முடிந்தது. பத்மா, மஞ்சுளா மட்டும் ஊருக்கு கிளம்ப, ராமமூர்த்தி மகனுடனே இருந்தார்.

தணிகைவேல் குடுமபம் அங்கிருந்து கிளம்ப, “நீங்களும் எங்களோட வாங்க” என்றார் பாரதி. தயங்கி, பயத்துடன் தான்.

ராமமூர்த்தி தங்கையிடம் கோவமாக பேச போக, கை பிடித்து தடுத்தவன், “நாங்க ஈவினிங் வரோம். இப்போ வேலை இருக்கு அத்தை” என்றான் நல்லபடியே.

“நானும் உங்களோட இருக்கேன்” என்றாள் ஜனக்நந்தினி.

“கொஞ்சம் அலையணும்டி. தொழில் சம்மந்தமா பேச போறோம். உனக்கு அப்புறம் சொல்றேன். இப்போ கிளம்பு” என்றான் கணவன்.

அவர்கள் எல்லாம் கிளம்பிவிட, அப்பாவும் மகனும் தொழில் பேச சென்றனர். பாசிட்டிவான பதில் என்பதில் மகிழ்ச்சி. “நீங்க கிளம்புங்க சித்தப்பா, நான் பார்த்துட்டு ஊருக்கு வரேன்” என்றான்.

ராமமூர்த்தி ஒத்துக்கொள்ளவே இல்லை. “நான் வரேன். அவரை நாலு கேள்வி கேட்டா தான் என் மனசு ஆறும். என்ன நினைச்சிட்டு இருக்கார்? அந்த நேரத்துக்கு எங்க மருமகளை  கூட்டிட்டு வருவாரா?” என்று நின்றார்.

ரகுராம்க்கு தெரிந்ததாலே அவரை மறுத்து தான் மட்டும்  திருப்பூர் வந்தான். தணிகைவேல் எதிர்பார்த்திருந்தவர், மருமகன் தனியே  வர, முகம் சுருங்கி போனது.

பாரதி வரவேற்று காபி கொடுக்க, மறுக்காமல் எடுத்துக்கொண்டான். ஜனக்நந்தினி பாட்டியுடன் அமர்ந்திருந்தாள். ப்ரவீன், வேணி, சுந்தரமும்  இருந்தனர்.

“வீட்ல பெரியவங்க, உங்க அப்பா வரலையா?” என்று தணிகைவேல் கேட்க,

“அவர் ஏன் வரணும்?” என்று கேட்டான் ரகுராம்.

“நான் அவர்கிட்ட பேசணும்” என,

“அவருக்கும் உங்களை போல எங்க கல்யாணத்துல இஷ்டம் இல்லைங்க. ஏதா இருந்தாலும் நான் தான். என்னோட முடிவு தானே என் வாழ்க்கை” என்றான் அவன்.

தணிகைவேல் மட்டுமில்லை மொத்த குடும்பத்துக்கும் திகைப்பு.

ஆனால் அருணகிரி மகனிடம் கேட்டிருந்தார். இவன் மறுத்துவிட்டான். கங்கு தீயாக பற்றி கொள்வதை அவன் விரும்பவில்லை. பாரதி வரை பேச்சு போகும் என்பது அவன் கணிப்பு.

“சொல்லுங்க” என்றான் ரகுராம்.

தணிகைவேலிடம் முன்பிருந்த ஆவேசம் இல்லை. அதிலும் மருமகன் மிக நிதானமாக இருக்க, சுந்தரத்தை பார்த்தார்.

அவர் மறுப்பாக தலையசைத்தார். ராஜேஸ்வரியும் கை கொடுக்கவில்லை. அவருக்கு ரகுராமிடம் எப்போதும் இடைவெளி உண்டு. அதை முள்வேலியாக ரகுராம் அமைத்திருந்தான்.

தணிகைவேல் வேறு வழி இல்லாமல், தானே ஆரம்பித்தார். சென்னை வந்தது, குக் சொன்னது, காபி ஷாப் வந்து மகள் வேலை பார்த்தது என்று எல்லாம் சொன்னார்.

“உங்களுக்கு கமிட்மென்ட் இருக்குங்கிறதுக்காக என் மகளை கஷ்டப்படுத்த கூடாது இல்லை” என்றார்.

“அவ அங்க வேலை செய்யலை. எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் தான் செஞ்சா” என்றான் ரகுராம்.

“சரி அது அப்படியே இருக்கட்டும். நீங்க.. நீங்க சுத்தமா வீட்ல இல்லைன்னு சொல்றாங்க. உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆகியிருக்கு. பார்ட் டைம் வேலை எல்லாம் விட்டா தான் என்ன?” என்றவர்,

“ஹனிமூன் கூட போகலை. நாங்க ஏற்பாடு பண்ணதையும் மறுத்திட்டீங்க” என்று கேட்டார்.

“சில விஷயம் எங்களுக்கு உள்ளதுன்னு நான் நினைக்கிறேன்” என்றான் மாப்பிள்ளை அழுத்தமாக.

“சரி ஹனிமூன் பேசல. உங்க பார்ட் டைம் வேலை”

“அது விட முடியாதுங்க. உங்களுக்கு முதல்லே அது பத்தி சொல்லியிருக்கேன்”

“சொன்னீங்க தான். ஆனா இப்போ பொண்டாட்டிக்காக டைம் ஸ்பென்ட் பண்ணாதான் என்ன?”

“அவ கம்பளைண்ட் பண்ணா சொல்லுங்க. நான் ஜாப் நிறுத்திக்கிறேன்” என்றான் உறுதியாக.

தணிகைவேல் திரும்பி மகளை பார்க்க, அவள் அமைதியாக இருந்தாள். நிச்சயம் சொல்ல மாட்டாள் என்று புரிந்து போனது.

“அவ உங்களுக்காக யோசிக்கிறா. நீங்களும் அவளுக்காக பார்க்கலாம் இல்லை” என்றார்.

“நிச்சயம் பார்ப்பேன். இந்த உழைப்பும் எங்களுக்காக தானே” என்றான் மாப்பிள்ளை.

“இவ்வளவு ஏன் கஷ்டப்படணும். வேற வழி, உங்க தறியை டெவலப் பண்ணலாம் இல்லை”

“பண்ணுவோம். டைம் ஆகும்”

“ஏன்.. ஏன் டைம்? நான். நாங்க பணம், இடம் போல”

“நீங்க என்னை விலைக்கு ஏதும் வாங்கியிருக்கீங்களா?” ரகுராம் வெகு தெளிவாக கேட்க,

“என்ன பேசுறீங்க?” என்று மொத்த குடும்பமும் பதறிவிட்டனர். பாரதிக்கு சொல்லவே வேண்டாம். கண்ணீருடன் மருமகன் பக்கம் வந்து நின்றார்.

ஜனக்நந்தினி இமை சிமிட்டி கொண்டாள். ரகுராம் மட்டும் சாதாரணமாக இருந்தவன், “இரண்டு விஷயம் தான் இதுக்கெல்லாம் காரணமா இருக்கணும்” என்றான்.

“நம்பிக்கை!  உங்களுக்கு ஆரம்பித்துல இருந்தே என் மேல நம்பிக்கை இல்லை. நான் உங்க பொண்ணை சந்தோஷமா வைச்சுக்க மாட்டேன்னு ரொம்ப ஆழமா நம்புறீங்க”

“அது இல்லன்னா ஈகோ. எங்க கல்யாணம் மேல உங்களுக்கு இருக்கிற அதிருப்தி. அதை இப்படி காட்டுறீங்கன்னு”

“இல்லை.. இல்லை.. ஈகோ நிச்சயம் இல்லை” என்றார் தணிகைவேல் பதறி.

“அப்போ நம்பிக்கை தான் இல்லை. அப்பாவா உங்களை நான் புரிஞ்சுக்கிறேன். ஒரு மாசத்துல என்னால உங்க நம்பிக்கையை பெற முடியாது. கொஞ்சம் டைம் கொடுங்க” என்றான்.

 தணிகைவேல் மேற்கொண்டு என்ன பேச என்று திகைத்தார். அவரின் கோவம் எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து கொண்டிருந்தான்.

“இது வாடகை பணம். நாங்க வீடு காலி பண்ணிக்கிறோம்” என்றான் அவர் முன் பணம் வைத்து.

தணிகைவேல், “ஏன்.. ஏன்” என்றார் வார்த்தை வராமல்.

சுந்தரம் தான், “அவர் பெண்ணுக்கு சீரா கொடுத்த வீடு தானே ராம். ஏன் வாடகை எல்லாம் கொடுத்து. இப்படி” என்றார்.

“அவர் எங்ககிட்ட சொல்லும் போது சீர்ங்கிற வார்த்தையை பயன்படுத்தல. அவளுக்காக வாங்கின வீடு, அவளுக்கு ஆபிஸ் பக்கம். அவ கஷ்டப்பட கூடாதுன்னு தான் சொன்னார். நான் இப்போ பார்த்திருக்கிற வீடும் அவ ஆபிஸ் பக்கம் தான். கஷ்டப்படுத்த மாட்டேன்” என்றான்.

“ராம்.. இது வேண்டாமே. அவர் பண்றார்ன்னு நீங்களும்” சுந்தரம் சொல்ல,

“எனக்கு ஈகோ இல்லை. ஆனா சுயமரியாதை இருக்கு” என்றான்.

“அவர் பொண்ணுக்கு செஞ்ச எதையும் நான் தடுக்கலை. அவளுக்கு உரிமைப்பட்டதுன்னு ஒதுங்கிட்டேன். ஆனா இவர் வீட்டுக்கு வந்து பண்ணது, அது என்னால ஏத்துக்க முடியல. அந்த டைம்ல என் பொண்டாட்டியை கூட்டிட்டு போற அளவுக்கு அங்க எதுவும் நடந்திடலையே” என்று கேட்க, யாரும் என்ன சொல்ல முடியும்?

“சில விஷயங்கள் நாம அமைதியா, விட்டு கொடுத்து போறோம்ன்னா அதுக்கு அர்த்தம் இது கிடையாது”

“அந்த நேரத்துக்கு நான் என் பொண்டாட்டியை அனுப்ப முடியாதுன்னு சண்டை போட்டிருந்தா இவர் என்ன பண்ணியிருப்பார்?”

“இப்போவும் என் அப்பா வரலையான்னு  கேட்கிறார். எல்லாம் சேர்ந்து பேசினா பிரச்சனை தீராது. வெடிக்கும். என் பொண்டாட்டிக்கு கடைசிவரை அம்மா வீடு வேணும்ன்னு நான் நினைக்கிறேன். இன்னொரு பாரதி அத்தையா அவ இருக்கிறதுல எனக்கு விருப்பமில்லை” என்று முடித்ததோடு எழுந்து கொண்டான்.

தணிகைவேல் மருமகன் வார்த்தைகளில் பேச்சற்று விட,  ரகுராம் கிளம்பிவிட்டான். ஜனக்நந்தினி கணவனுடன் வர, “ரகு” என்று பின்னால் வந்தார் பாரதி.

“அவர் இப்படி பண்ணுவார்ன்னு நினைக்கலை” என்று பேச வர,

“அத்தை” என்று நிறுத்தினான் மருமகன்.

“உங்ககிட்ட மட்டும் ஒன்னு கேட்க நினைக்கிறேன். கேட்கலாமா?” என, பாரதி தலையசைத்தார்.

“ஒரு நேரம், ஒரு செகண்ட் கூட  இவங்க நம்மளை பேசும் போது நிறுத்தணும்ன்னு உங்களுக்கு தோணாதா?”

“ரகு நான்.. என்னை பேசுறாங்கன்னு”

“எல்லாம் ஒன்னு தானே! உங்க வீட்டுக்காரர் அளவு இல்லைன்னாலும் நாமளும் கௌரவமா வாழுற குடும்பம் தான். இவங்க சொல்ற மாதிரி நாம கஷ்டப்பட்டுட்டு இல்லை”

“உங்களை தாத்தா படிக்க வைக்கலையே தவிர, நல்லா  வளர்த்து, அவர் சக்திக்கு மீறி தான் கல்யாணம் செஞ்சு கொடுத்தார். நேர்வழியில தான் மருமகளா வந்திருக்கீங்க. உங்க வீட்டுக்காரர் மேல இருக்க பாசத்தில பிறந்த வீட்டை விட்டு கொடுத்திருக்க வேண்டாம்”

“என் அப்பாக்கும், சித்தப்பாக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை நீங்க கவனிச்சிருந்தா, இன்னைக்கு உங்க வீட்டுக்காரர் என்கிட்ட இந்தளவு  நடந்திருக்க மாட்டார்”

“தங்கச்சிக்காக அவங்க பொறுத்து போகணும்ன்னு நினைக்கிறது பாசத்துல வராது. சுயநலத்துல தான் வரும்”

“சொந்த பந்தமும்  பூ மாதிரி தான் அத்தை, ரொம்ப கசக்க கூடாது. எந்தளவு பொத்தி வைக்கிறோமோ அந்தளவு தான் மணக்கும்” என்றவன் மனைவியுடன் நகர்ந்துவிட, பாரதி அங்கேயே நின்றுவிட்டார்.

Advertisement