Advertisement

அழகியல் 21

அதிகாலையில் மகளுடன் திருப்பூர்  வந்து சேர்ந்தார் தணிகைவேல். எதற்காக அவர் சென்னை சென்றாரோ அந்த பார்ட்டிக்கே  மனிதர் செல்லவில்லை.

ட்ரைவர் வண்டி ஓட்ட, வழியெல்லாம் ஒரு பொட்டு கண் மூடவில்லை. மனதிற்குள் பொருமி கொண்டே வந்தார்.  ஜனக்நந்தினியோ பின் சீட்டில் கால் நீட்டி வசதியாக படுத்துவிட்டாள்.

“உனக்கு எப்படி தூக்கம் வருது பாப்பா?” மனம் தாங்காமல் கேட்டும்விட்டார்.

“தூங்கிறது கூட தப்புங்களாப்பா” மகள் கேட்க,

தணிகைவேல் ட்ரைவர் இருப்பதால் பொறுமை காத்து கொண்டார். மகளோ,  “பால் வாங்கி கொடுங்க” என்று கேட்டு குடித்து திரும்ப தூக்கம்.

இருவரும் வீட்டிற்குள்ளும் வர, பாரதி தான் முதலில் பார்த்தார். “வா வா கண்ணு?” என்று மகளை வரவேற்றவர்,  கணவரின் முகம் கோவமாக இருப்பதை யோசனையாக பார்த்தார்.

“எனக்கு தூக்கம் வருதும்மா. நான் தூங்க போறேன்” மகள் சொல்ல,

“பாப்பா” என்று அதட்டினார் தந்தை. “வழி நெடுக தூங்கிட்டு தான் வந்த, உட்காரு உன்கிட்ட பேசணும்” என்றார்.

ராஜேஸ்வரி அறையில் இருந்து வந்தவர், பேத்தியை பார்த்து முகம் மலர்ந்தார். “பாட்டி” என்று ஜனக்நந்தினி அவரை கட்டிக்கொள்ள,

“எப்போ வந்த கண்ணு?” என்று கேட்டார் மகிழ்ச்சியுடன்.

“இதே தான் வந்தேன் பாட்டி” என்றவள், ப்ரவீன் வரவும், “ஹாய் ப்ரோ” என்றாள்.

“என்ன பாப்பா திடீர்ன்னு” என்று கேட்டான் அண்ணன். அவளோ தோள் குலுக்கினாள்.

“பாப்பா.. நாம பேசணும்” என்றார் தந்தை.

“எனக்கு டையர்டா இருக்குப்பா” என்றாள் மகள்.

“உன் புருஷன் கூட காபி கடையில வேலை பார்க்கும் போது உனக்கு டையர்டா இல்லையா?” அவர் வெடிக்க,

“இல்லையே” என்றாள் மகள் சாதாரணமாக.

குடும்பத்தினர் அதிர, “பாப்பா சரியா பேசு” என்றார் தந்தை.

“வேலை பார்த்தாளா? என்ன நடக்குது இங்க? நீ முதல்ல எங்களுக்கு விஷயத்தை சொல்லு” என்று மகனிடம் கேட்டார் ராஜேஸ்வரி.

“பார்ட்டிக்கு போக இன்னும் நேரம் இருக்கேன்னு பாப்பா வீட்டுக்கு போனா இரண்டு பேருமே வீட்ல இல்லை. குக்’கிட்ட கேட்டா அவங்க என்னென்னமோ சொல்றாங்க” என்றார்.

“குக்’கிட்ட எங்களை பத்தி விசாரிச்சீங்களாப்பா” மகள் நிதானமாக  கேட்க,

“நீங்க எங்கன்னு தான் கேட்டேன்”

“வேலா என்னன்னு தெளிவா சொல்லு” ராஜேஸ்வரி கேட்க,

“இவங்க வீட்ல இருக்கிறதே இல்லையாம்மா. லீவ் நாள்ல கூட இவ அண்ணன் மகன், பார்ட் டைம் வேலைக்கு போயிடுறாராம். தினமும் நைட் எத்தனை மணிக்கு வரார்ன்னே தெரியறதில்லை. நானே 8 மணிக்கு தான் சமைச்சு வைச்சுட்டு போறேன். அதுவரைக்கும் கூட அவர் வந்து நான் பார்த்ததில்லை. உங்க பொண்ணு எப்போவும் தனியா தான் இருக்காங்க. இப்போ எல்லாம் அவங்களும்  சார் கூட வேலை பார்க்கிற மாதிரி இருக்குன்னு சொல்றாங்க” என்றார் கோவமாக.

“என்ன பாப்பா இது” பாட்டி கேட்க,

“அவர் பார்ட் டைம் ஜாப் பண்றது பத்தி உங்களுக்கு முதல்லே  தெரியாதாப்பா?” மகள் தந்தையிடம் கேட்டாள்.

“தெரியும் தான். அதுக்காக இப்படி, உன்னை தனியா விட்டுட்டு அதே வேலையா இருப்பார்ன்னு எனக்கெப்படி தெரியும்? கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆகியிருக்கு. ஏன் கொஞ்ச நாள் அதை எல்லாம் விட்டா தான் என்ன?”

“ஏங்க.. நீங்க என்ன.. ஏதாவது ரகுராம்கிட்ட கேட்டு” பாரதி அச்சத்துடன் கேட்க.

“என்ன இப்போ கேட்டேன் தான். அவர் சம்பாதிக்க என் மகள் கஷ்டப்படணுமா? அதான்  பார்த்துக்கலாம்ன்னு   என் மகளை கையோட  கூட்டிட்டு வந்துட்டேன்” என்றார் தணிகைவேல்.

“என்னங்க இது” பாரதிக்கு அதிர்ச்சியுடன், ஆதங்கமும். “பொறுமையா பேசிட்டு வராம ஏன் இப்படி பண்ணிட்டு வந்திருக்கீங்க” என,

“என்ன பொறுமையா பேச சொல்ற? உன் அண்ணன் மகன்கிறதுக்காக சப்போர்டுக்கு வந்து நிக்காத பாரதி”

“வேலா கொஞ்சம் நிதானமா இரு. இப்படி எடுத்தோம், கவுத்தோம்ன்னு நீ பண்ணியிருக்க கூடாது”  என்ற ராஜேஸ்வரிக்கும் உறுத்தல்.

“என்னம்மா.. நீங்களும் இவளை மாதிரி கேட்கிறீங்க?”

“நம்ம பொண்ணு வாழ்க்கை இது. உனக்கு கோவம்ன்னா கேட்டுட்டு விட்டிருக்கணும். இப்படி கையோட. ச்சு. தப்பு வேலா” என்றார்.

ஜனக்நந்தினி அவள் ரூம் செல்ல ஆரம்பித்தாள். “பாப்பா நில்லு நாம பேசி முடிக்கலை?” தந்தை நிறுத்த,

“அங்க வைச்சே நான் உங்ககிட்ட பொறுமையா பேசினேன். எல்லாம் சொன்னேன். ஆனா நீங்க அவரை கேள்வி கேட்டு, இன்சல்ட் பண்ற மாதிரி நடந்துக்கிட்டிங்க”

“இதுல இன்சல்ட் எங்கிருந்து வருது?”

“அப்போ நீங்க பண்ணதுக்கு பேர் என்னன்னு நீங்களே சொல்லுங்க. நான் தெரிஞ்சுக்கிறேன்”

“கண்ணு. இரு, நாம பேசலாம்” பாரதி சொல்ல,

“ம்மா.. நீங்களா? நீங்க என்ன பேசணும்? எங்க கல்யாணம் முடிஞ்சதோட உங்க கடமை தான் முடிஞ்சதே. டார்கெட் அச்சீவ்ட்” என்றாள் மகள்.

“கண்ணு” என்ற பாரதி கண்களில் இருந்து கண்ணீர் மளமளவென இறங்கிவிட்டது.

“இப்போ எதுக்கு அவகிட்ட இப்படி பேசுற பாப்பா?” தணிகைவேல் கேட்க,

“இது நேத்து நைட் நீங்க என் ஹஸ்பண்ட்கிட்ட கேள்வி கேட்கும் போது உங்களுக்கு தெரியலையாப்பா?” மகள் கேட்டாள்.

“பாப்பா என்ன ஆச்சு உனக்கு? அமைதியா இரு” ப்ரவீன் கண்டிக்க,

“சரி நான் அமைதியாகிட்டேன். நீங்களும் அமைதியாகிடுங்க” என்று அறைக்கு சென்றுவிட்டாள்.

நேரம் பார்த்தவள், திரும்ப ஒரு தூக்கம். அதன்பின் எழுந்தவள், ரகுராம்க்கு அழைத்தாள். அவன் எடுக்கவில்லை. அலுவலகம் சென்று கொண்டிருப்பான்.

இவள் குளித்து வர, கணவனிடம் இருந்து அழைப்பு. “வீட்டுக்கு போயாச்சா?” ரகுராம் கேட்க,

“அந்த குக் வேணாம் நமக்கு” என்றாள் அவள்.

“ஏன் என்னாச்சுடி”

“வேணாம். நான் வேற ஆள்”

“நானே பார்த்துகிறேன். நீ வந்ததுக்கு அப்புறம் வேற பார்ப்போம்” என்றான்.

“நீங்க வேலை பாருங்க. நான் என் மேனேஜர்கிட்ட பேசணும்” என்று வைத்தாள். இப்போது தான் அண்ணா மகன் பிறந்த நேரம் ஒர்க் ப்ரம் ஹோம் எடுத்தாள். திரும்பவும் என்றால், நிச்சயம் கோவப்படுவார். வேறு வழி இல்லை.

லேப் பேக் கீழே இருக்க, இறங்கியபடி, அவருக்கு அழைத்து பேச, அவர் மரியாதையாக திட்டி பர்மிஷன் கொடுத்தார். தணிகைவேல் உர்ரென்று மகளை பார்த்திருக்க,  “இனி என்னை கூட்டிட்டு வருதுன்னா நீங்களே என் மேனேஜர்கிட்ட பேசிட்டு கூட்டிட்டு வாங்க” என்றாள் தந்தையிடம்.

“அப்படி ஒன்னும் நீ வேலை பார்க்க வேணாம்” என்றார் தந்தை.

“அதுக்கு நீங்க என்னை MTECH வரை படிக்க வைச்சிருக்க கூடாதுப்பா”  என்றவள்,  லேப் எடுத்து வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

பாரதி அங்கேயே மகளுக்கு உணவு கொடுக்க, திருப்தியாக உண்டாள். காபி குடித்தாள். மதிய உணவு உண்டாள். மாலை பலகார மெனு கொடுத்தாள். சாப்பிட்டு படம் பார்த்தாள். திரும்ப இரவு உணவு, தூக்கம். நாள் முடிந்தது.

 மறுநாளும் இதே என, அந்த வாரம் முழுதும் அப்படி தான் இருந்தாள். வீட்டினர் யார் பேச முயற்சித்தாலும், பலன் இல்லை. வேணி தம்பதி கேட்க, “நானா வரலை. என்னை கூட்டிட்டு வந்த என் அப்பாவை கேளுங்க” என்று முடித்துக்கொண்டாள்.

தோணும் போதெல்லாம் கணவனுக்கு அழைத்து பேசுவாள். சில நேரம் வீடியோ காலும். தணிகைவேல்க்கு மகள் நடந்து கொள்வதில் தலையிடி. வீட்டினரும் மண்டை காய்ந்து போயினர். அவள் மட்டும் சூப்பர் கூல்!

பாரதிக்கு எப்போது அம்மா வீட்டில் இருந்து போன் வருமோ என்று பயம். மஞ்சுளா மூலம் இவரே விஷயத்தை சொல்லிவிட்டார். ஆனாலும் யாரிடம் இருந்து போன் இல்லை.

ரகுராம்க்கு இவர் அழைத்து பேச, அவனோ பொதுவான நலம் விசாரிப்புடன் வைத்துவிட்டான். ஒருமாதிரி திணறி போனார். “உங்களுக்கு ஏன்ம்மா இந்த டென்ஷன் எல்லாம். பேசாம பழையபடி இருந்திருக்கலாம்” என்றான் ப்ரவீன்.

ஜனக்நந்தினி அதற்கு மட்டும் அண்ணனை நேரே பார்த்தாள். “என்ன பாப்பா தப்பா சொல்லிட்டனா?” அவன் கேட்க,

“நீங்க எல்லாம் எப்போ தப்பா இருந்திருக்கீங்க. ஆல்வேய்ஸ் ரைட்” என்றாள் சிரிப்புடன்.

ப்ரவீனுக்கு தங்கை பார்வை, சிரிப்பு ஒருமாதிரி ஆகி போனது.

அந்த வார இறுதியில் ப்ரவீன் மகனுக்கு பெயர் வைக்கும் விழா ஏற்பாடாகி இருந்தது.  அருணகிரி, ராமமூர்த்தி, அனுஷா தம்பதிகளுக்கு போன் செய்து அழைத்தார் தணிகைவேல்.

அவர்களும் சரி வரோம் என்றதோடு முடித்து கொண்டனர். பாரதிக்கு அதில் தவிப்பு என்றால் தணிகைவேல்க்கு கோவம்.

 “பார்த்தியா உன் அண்ணன்களை,  என் பொண்ணு வந்து ஒரு வாரம் ஆச்சு. இதுவரை ஒரு போன் இல்லை. நாமளே  போன் பண்ணும் போது என்ன மாப்பிள்ளை ஆச்சு, ஏன் எங்க மருமகளை கூட்டிட்டு வந்துட்டீங்கன்னு விசாரிக்கலை” என்றார்.

“நீங்க ரகுராமை கூப்பிடுங்க” என்றார் பாரதி.

தணிகைவேல் மறுக்காமல் அழைத்தார். மருமகன் எடுத்தான். விழாக்கு அழைத்தார் மாமனார்.

“பங்கஷனுக்கு கூப்பிடுறீங்களா, பஞ்சாயத்துக்கு கூப்பிடுறீங்களா?” என்று கேட்டான் ரகுராம்.

தணிகைவேல் ஒரு நொடி சமைந்துவிட்டார். “என்ன ரகு?” என்று பாரதி கேட்க,

“அவர் தான் பங்க்ஷன் முடியவும் பார்த்துக்கலாம் சொன்னார். அதான் கேட்டுக்கிட்டேன்” என்று வைத்தான் அவன்.

“என்னை மட்டுமே குறை சொல்ற, உன் புருஷன் என்கிட்ட இப்படி கேட்கிறார்?” என்று மகளிடம் குதித்தார் தந்தை.

“அப்புறம் நீங்க என்னை பஞ்சாயத்துக்கு தானே கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்றாள் மகளோ.

“பாப்பா நீ ரொம்ப மாறிட்ட?” தந்தை வருத்ததுடன் அமர்ந்தார்.

மகளுக்காக தானே இவ்வளவு போராட்டம். இவளுக்கு யோசித்து தானே பெண் கொடுக்க மாட்டேன் என்றேன். இப்போதும் அவள் கஷ்டப்பட கூடாது என்று தானே அழைத்து வந்தேன். தலை பிடித்தார் மனிதர்.

மகள் அவருக்கு காபி எடுத்து வந்தாள். “எனக்கு வேணாம் பாப்பா” என்றார்.

“குடிங்கப்பா. உங்க மருமகன் பேசுவார். அப்போவாவது பொறுமையா பேசுங்க.  நான் உங்ககிட்ட அவரை கம்பளைண்ட் பண்ணாம நீங்க பண்ணது சரியான்னு யோசிங்க போதும்” என்று காபியை கொடுத்து சென்றாள்.

அவர் மிகவும் மதிக்கும் சுந்தரம், “நீங்க பண்ணது ரொம்ப பெரிய தப்பு” என்று கண்டித்திருந்தார். அதுவேறு அவருக்கு குடைந்தது.

பெயர் வைக்கும் விழாவும் வந்தது. ஆர்த்தி வீட்டில் என்பதால் எல்லாம் அங்கு சென்றனர். ரகுராம் வருகிறேன் என்றிருக்க, ஜனக்நந்தினி கணவனை தேடி வாசல் பார்த்திருந்தாள்.

Advertisement