Advertisement

ஜனக்நந்தினிக்கு நிற்க நேரமில்லை. தணிகைவேல் “கிளம்பிட்டியா” என்று போன் செய்தே கொண்டே இருந்தார். அடித்து பிடித்து கடைசி நேரத்தில் செக் இன் முடித்து பிளைட்டில் அமர்ந்துவிட்டாள்.

ரகுராம் மெசேஜ் அனுப்பி கேட்க, பதில் சொன்னாள். கோயம்பத்தூர் தான் ஆர்த்தியின் அம்மா வீடு என்பதால், தணிகைவேலுடன் ஏர்போர்ட்டில் இருந்து நேரே அங்கிருக்கும் மருத்துவமனைக்கு சென்றாள்.

 அண்ணியிடம் நலம் விசாரித்து, பாட்டி கையில் இருந்த அண்ணன் மகனை பார்க்க  அவளுக்கு தெவிட்டவில்லை.

“செம கியூட்டா இருக்கான் பாட்டி” என்று விரல் நுனியில் தொட்டு கொண்டாள்.

அருணகிரி, ராமமூர்த்தி தம்பதி மருத்துவமனைக்கு வர, ஜனக்நந்தினி அவர்களை எதிர்கொண்டு அண்ணியிடம் அழைத்து சென்றாள். வாங்கி வந்ததை கொடுக்க, பாரதி பேரனை காட்டினார்.

“பாட்டியாகிட்ட” என்று மஞ்சுளா சிரிக்க, பாரதியும் சிரித்தார். ப்ரவீன் அவர்களுக்கு குடிக்க கொடுத்தான். ஆர்த்தி அம்மாவிடம் பத்மா, மஞ்சுளா பேச அவரும் பேசினார். அதில் பாரதிக்கு ஆசுவாசம்.

தணிகைவேல் மச்சான்களை வரவேற்று பேசினார். சிறிது நேரம் இருந்து அவர்கள் கிளம்ப, ஜனக்நந்தினி அண்ணனிடம் இருந்து கார் கீ வாங்கி கொண்டு வந்தாள்.

“நாங்க போயிக்கிறோம்” என்று மஞ்சுளா சொல்ல, மருமகள் கேட்கவில்லை. நால்வரையும் காரில் ஹோட்டலுக்கு அழைத்து வந்தாள். “எதுக்குமா?”பத்மா மறுக்க,

“எனக்கு பசிக்குது அத்தை” என்றாள் பெண். யாரும் அடுத்து ஒருவார்த்தை பேசவில்லை. மாலை நேரம் என்பதால், டிபன், டீ, காபியுடன் முடித்தனர்.

அருணகிரி பணம் கொடுக்க, மருமகள் அவர்களை பஸ் ஏற்றிவிட்டாள். பாரதிக்கு உள்ளம் குளிர்ந்து போனது. ராஜேஸ்வரி மட்டும், ” நீ ஏன் கண்ணு அலையுற. ட்ரைவர்கிட்ட சொன்னா செய்ய போறான்” என்றார்.

“மருமக நான் இருக்கும் போது ட்ரைவர் ஏன் செய்யணும் பாட்டி” என்று கேட்டாள் பேத்தி.

“உனக்கெதுக்கு கஷ்டம் தான்னு கண்ணு”

“பாட்டி. இது பேச்சில்லை. விடுங்க” என்று நகர்ந்துவிட்டாள்.

அன்றிரவு ப்ரவீன், பாரதி மருத்துவமனையில் இருக்க, அப்பா, மகள், பாட்டி மூவரும் வீடு திரும்பினர்.

“இந்த வாரம் முழுசும் இங்கிருந்துட்டு போ பாப்பா” என்றார் தணிகைவேல் மகளிடம்.

“அவர்.. அவரை பார்க்கணுமேப்பா” மகள் சொல்ல,

“அதான் சமையலுக்கு, மேல் வேலைக்கு எல்லாம் ஆள் இருக்கே. அப்புறம் என்ன கவலை. நீ இரு. ஒரேடியா உன் அண்ணன் மகனுக்கு பேர் வைச்சதுக்கு அப்பறம் போலாம்” என்றார் ராஜேஸ்வரி.

வேலைக்கு ஆள் இருந்தா பொண்டாட்டி வேணாமா? வாய்வரை வந்து அடக்கி கொண்டாள். இரவு கணவனிடம் பேச, அவன் காபி ஷாப்பில் இருந்தான்.

“சாப்பிட்டீங்களா, எந்த ஷாப். சீக்கிரம் வேலை முடிச்சுட்டு போய் தூங்குங்க” என்று பேசி வைக்க, ரகுராமோ மனைவி ஊரில் இல்லாத நேரம் முடிந்தவரை கடைகளை முடித்துவிட வேண்டும் என்று இரவு பனிரெண்டு மணி வரையிலும் வேலை பார்த்தான்.

மறுநாள் ராஜேஸ்வரி வீட்டில் இருக்க, அப்பாவுடன் மருத்துவமனை சென்றாள். அவர்கள் இருக்க  ப்ரவீன், பாரதி வீட்டுக்கு வந்தனர். ஆர்த்தியின் அம்மா தவிர அங்கு உதவிக்கென்று உறவுகள் இல்லை.

ஆர்த்தியின் அப்பா, “பார்த்துக்கோ” என்று மனைவியிடம் சொல்லி சென்றார். அவரும் எல்லாம் புரிந்து அமைதியாக தான் இருந்தார்.

நான்கு நாள் சென்று ஆர்த்தியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தணிகைவேல் மொத்த குடும்பமும் மருமகளை அவள் அம்மா வீட்டில் விட்டனர். பாரதி “அண்ணி” என்று ஆர்த்தியின் அம்மா முன் நின்றார்.

“தனியா குழந்தையை பார்த்துக்க சிரமமா இருக்கும். உங்களால முடியதாப்போ சொல்லுங்க. நான் வரேன்” என்றார். அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை உண்டு. இரவு நேரங்களில் முழித்திருக்க முடிவதில்லை. பாரதி தான் இந்த நான்கு நாளும் பார்த்து கொண்டார்.

ஆர்த்தியின் அம்மா தலையசைக்க, “அத்தை” என்றான் ப்ரவீன். அவருக்கு திகைப்பு தான்.

“நான் நைட்டுக்கு வந்திடுவேன். மேனேஜ் பண்ணிக்கலாம்” என்றான் ப்ரவீன்.

ஆர்த்திக்கு கண்கள் கலங்கிவிட்டது. கணவன் தனக்காக தான் இறங்கி வந்துள்ளான் என்று புரியாமல் இல்லையே.

குழந்தை பெற்றவளின் மனநிம்மதி முக்கியம். அழுத்தம் வந்துவிட கூடாது என்று பாரதி பெண்களின் மனநிலையை மகனுக்கு சொல்ல, அவன் யோசிக்கவே செய்தான்.

“இப்போ என்ன என்னைதானே பேசினாங்க. எனக்கே பிரச்சனையில்லை. உனக்கு என்ன ப்ரவீன்? இந்த பேச்சுக்கு எல்லாம் நான் சண்டை போடணும்ன்னா உங்களுக்கு அப்பாவே இல்லாமல் போயிருப்பார். விட்டு தள்ளு. உன் மகனுக்கு என்ன செய்ய முடியும்ன்னு பார்” என்றுவிட்டார்.

ப்ரவீன் சரியென, ஜனக்நந்தினி அமைதியாக இருவரையும் பார்த்திருந்தாள்.

ஆர்த்தியை வீட்டில் விட்ட அடுத்த நாள் ஜனக்நந்தினி சென்னை கிளம்ப தயாரானாள். “ஏன் போற? இரு” என்று பாட்டியும், அப்பாவும் மறுத்தனர்.

“நான் போய்ட்டு பேர் வைக்க வரேன்” என்று ஒரே முடிவாக கிளம்பி சென்னை வந்துவிட்டாள். அவள் காரை எடுத்து கொண்டு ரகுராம் ஏர்போர்ட் வந்தான்.

இரவு ஆகிவிட்டது. கணவன் வேலையை விட்டு வந்து தனக்காக காத்திருக்க, பெண் முகம் மலர்ந்து போனது. “இரண்டு நாள்ல வரேன்னுட்டு இதென்னடி” என்று ரகுராம் முகம் சுருக்க,

“ஏன் பொண்டாட்டியை தேடுனீங்களா?” என்று கேட்டபடி காரில் ஏறிக்கொண்டாள்.

இன்று தான் கணவன் அவளின் காரை எடுத்திருக்கிறான், மகிழ்ச்சியாக இருந்தது. அவன் ட்ரைவ் செய்வதை ரசித்து கொண்டிருக்க, “ஏன் நீ என்னை நினைக்கலையா?” என்று கேட்டான் அவன்.

பெண் சிரிக்க, “என்ன ஒரே ஜொலிப்பா இருக்கு” என்று அவள் கன்னத்தை கிள்ளினான்.

“ஸ்ஸ்” என்று தேய்த்தவள், “சாப்பிடலாமா?” என்று கேட்டாள்.

“உன் புருஷன் உனக்காக சமைச்சு வைச்சிருக்கான்” என,

“அப்போ வேகமாக போங்க” என்றவள், வீட்டிற்கு வந்ததும் உடைமாற்றி உணவுண்ண அமர்ந்துவிட்டாள். “நீங்க சாப்பிட்டீங்களா?” என்று கேட்க,

“ஆச்சு. நேரம் பார்த்தியா?” என்றான்.

ஜனக்நந்தினி திருப்தியாக உண்டு முடிக்க, தூங்க வந்தனர். ஜனக்நந்தினி கணவன் நெஞ்சில் படுக்க, “டையர்டா இருக்கியா?” என்று கேட்டான்.

மனைவிக்கு புரிய, தானே அவன் இதழில் இதழ் பதித்தாள். ரகுராம் தொடர்ந்தான்.

மறுநாள் ரகுராம் ஆபிஸ் கிளம்பும் நேரம், “இன்னைக்கு என்ன ஷாப்?” என்று கேட்டாள்.

“சொல்ல மாட்டேன்” என்றான் கணவன்.

“ஏங்க.. நான் வந்தா உங்களுக்கு சீக்கிரம் வேலை முடிஞ்சிடும். ஒர்க் லோட் இருக்காது. நானும் உங்களை மிஸ் பண்ண மாட்டேன். வேலை முடிச்சுட்டு வந்து நான் வீட்ல ப்ரீயா தானே இருக்கேன்”

“நீ ஆபிஸ்க்கு போய் பார்க்கிற வேலையே போதும். இதை எல்லாம் ஏன் தூக்கி தலையில போட்டுக்கிற?”

“எனக்கொண்ணும் கஷ்டம் இல்லையே”

“அதெப்படி இல்லாம போகும். ஒவ்வொரு ஏரியாக்கும் போகவே உடம்பு நொந்துடும். நீ வீட்ல இரு” என்றான் முடிவாக.

“ஏங்க”

“நோடி”

“சரி நம்ம பக்கத்து ஏரியாக்கு வரும் போது மட்டும் வரேனே”

“ம்ம்.. வா. ஆனா வேலை கிடையாது”

“அப்புறம் எதுக்கு நான் வரணும்”

“என்கூட இருக்க தான்” என்று நெற்றி முட்டி கிளம்பினான்.

ஜனக்நந்தினி அன்றிரவு பேசியும் அவன் ஒத்துகொள்ளவில்லை. இவள் தான் அவன் வழிக்கு செல்ல வேண்டியிருந்தது. ரகுராம் சொன்னது போல, அக்கம், பக்கம் மட்டும் சென்றாள்.

“இந்த ஏரியா எல்லாம் உனக்கு பக்கமாடி” இவள் மறுவாரம் வேளச்சேரி வந்துவிட, ரகுராம் கோவம் கொண்டான்.

“இன்னைக்கு சீக்கிரமே வேலை முடிஞ்சுட்டு. அதான்” என்று அவன் கன்னம் பிடித்து கொஞ்ச, தட்டி விட்டு ஸ்டாக் எடுக்க சென்றான்.

மனைவி அவனுடனே இருந்தவள், அவன் செய்யும் வேலைகளை கவனித்து கொண்டாள்.

தணிகைவேல் அன்று ஒரு பார்ட்டிக்காக சென்னை வந்திருந்தார். இரண்டு மணி நேரம் இருக்க, மகளை பார்க்க வீடு சென்றார்.

சமையல் செய்பவர் இருக்க, மகள், மருமகன் இல்லை. “எங்க” என்று அவரிடம் கேட்க, அவர் சொன்ன பதிலில் தணிகைவேல் முகம் சிவந்து போனது.

“பார்த்துக்கோங்க சார். நான் வரேன்” என்று அவர் கிளம்பிவிட, தணிகைவேல் மகளுக்கு போன் செய்தார்.

“எங்க இருக்க பாப்பா?”

“இங்க வேளச்சேரி காபி ஷாப் ப்பா”

“நான் வரேன்” என்று வைத்தார் தந்தை.

ஜனக்நந்தினி அப்பா வரவில் மகிழ்ச்சி கொண்டு கணவனிடம் சொல்ல, “சரி நான் சீக்கிரம் வேலை முடிச்சிடுறேன்” என்று செய்தான்.

ஜனக்நந்தினி அப்பாவை எதிர்பார்த்திருக்க, மேனேஜர் வந்தார். “இந்த ஸ்டாக் என்ன” என்று ரகுராமிடம் கேட்க,

அவன் கேள்வியாக புருவம் சுருக்கினான். “நான் பார்த்துட்டு வரேன்” என்று சிஸ்டமில் இருந்து எழ,

“நீங்க இருங்க. நான் பார்த்துட்டு வரேன்” என்று சென்றாள்.

தணிகைவேல் எதிர்ப்பட்ட ஆளிடம் கேட்க, அவன் ஸ்டாக் ரூம் கைகாட்டி சென்றான். ரகுராம் அவரை பார்த்து எழுந்து வர, அவரோ மகளை தேடி சென்றார்.

ரகுராம் அமைதியாக நின்றான். “பாப்பா” என்று மகளை இவர் அதட்ட,

“அப்பா வந்துட்டீங்களா” என்று மகள் வந்து இவர் கை பிடித்தாள்.

“இங்க என்ன பண்ணிட்டிருக்க பாப்பா” பல்லை கடித்து கேட்க, அவரின் கோவத்தில் மகள் புருவம் சுருக்கினாள்.

“என்னோட வா” என்று கை பிடித்து கூட்டி வந்தவர், “நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்” என்று மருமகன் முகம் பார்க்கமாலே சொல்லி சென்றார்.

ஜனக்நந்தினி கணவனை திரும்பி பார்க்க, “போ” என்று தலையசைத்தான்.

ரகுராம் வேலையை முடித்தே வீட்டுக்கு வர, “இது தான் நீங்க என் மகளை சந்தோஷமா பார்த்துகிறதா?” என்று கேட்டார்.

“ப்பா”

“பாப்பா நீ வாயே திறக்க கூடாது” அப்படி ஒரு சத்தம் மகளிடம்.

ரகுராம்க்கு இப்போது அவரிடம் பேச முடியும் என்று தோன்றவில்லை. மௌனமாக உள்ளே வர,

“உங்ககிட்ட தான் கேட்கிறேன். எனக்கு பதில் சொல்லுங்க” என்றார் விடாமல்.

“ப்பா.. நான் தான் சொன்னேன் இல்லை. நீங்க ஏன் அவரை கொஸ்டின் பண்றீங்க” மகளுக்கு கோவம் வந்தது.

“உனக்கு ஒன்னும் தெரியாது பாப்பா. நீ பேசாம இரு” என்று அவளை அடக்க,

“என்னோட இருக்கட்டும்ன்னு வந்தா” என்றான் ரகுராம்.

“நீங்க வீட்ல இருந்தா என் மக ஏன் உங்களை தேடி அங்க வரணும்?” என்று கேட்டார் மாமனார்.

ரகுராம் மனைவி முகம் பார்த்து தன்னை கட்டுப்படுத்தி நின்றான்.

“பாப்பா.. இவர் பேச மாட்டார். நீ என்னோட ஊருக்கு கிளம்பு. அண்ணா மகனுக்கு பேர் வைச்சுட்டு நாம இதென்னன்னு பார்க்கலாம்” என்றார் தந்தை.

“ப்பா”

“நீ கிளம்பு” என்றான் ரகுராம்.

“என்ன பேசுறீங்க”

“அதான் அவரே சொல்லிட்டார் இல்லை. நீ என்னோட கிளம்பு” என்று நின்றார் தந்தை.

ஜனக்நந்தினி வேகமாக அறைக்கு சென்றாள். ரகுராம் பின்னோடு சென்று அவளை அணைக்க, “ஒன்னும் வேணாம் போங்க” என்று சீறினாள் பெண்.

“ஷ்ஷ்ஷ்” என்று அவள் உதட்டின் மேல் விரல் வைத்தவன், “எப்படியும் நீ குழந்தைக்கு பேர் வைக்க ஊருக்கு போக தான் வேணும். அவரோட கிளம்பு. பார்த்துக்கலாம்” என்றான் சமாதானமாக.

“அப்போ நீங்க அவர்கிட்ட கேட்க மாட்டீங்களா?”

“மாட்டேன். நான் கேட்கணும்ன்னு நினைச்சா நிறைய பேரை கேட்கணும். விடு” என்றான்.

“பாப்பா” என்று அப்பா குரல் கொடுக்க,

ரகுராம் ஆழ்ந்த முத்தத்துடன் அவளை வழியனுப்பி வைத்தான்.

Advertisement