Advertisement

அழகியல் 20

ரகுராமின் எதிர்பாரா அணைப்பில் பெண் ஒரு நொடி அதிர்ந்து அவனோடு இணைவாக ஒன்றி கொண்டாள். கணவனின் இதய துடிப்பு அவளுக்குள் இறங்க, தன் முகத்தை உரசி அவனை விட்டு விலக போக, ரகுராமோ அவளை விட மறுத்தான்.

“என்னங்க” என்றாள் இருக்கும் இடம் கண்ணால் காட்டி.

 ரகுராம்க்கு அதெல்லாம் எங்கு தெரிந்தது? மனைவி ஒருத்தியே அவன் கண்ணுக்குள்  ம்ஹூம்.. அவனின் மொத்த உலகத்திற்குள்ளும் நின்றாள்.

“யாரோ வர மாதிரி இருக்குங்க” என்று அவள் வலுவாக விலகிவிட, வேலை செய்யும் ஒருவர் வந்து ஏதோ எடுத்து சென்றார்.

“தண்ணீர் குடிக்கிறீங்களா?” என்று கேட்டு தன் ஹாண்ட் பேக்கில் இருந்த பாட்டிலை எடுத்து வந்து கொடுத்தாள்.

ரகுராம் ஒரு சிப் குடித்தவன், “நீ.. க்கும்.. நீ எங்கடி இங்க?” என்று கேட்டான். அவன் விரல்கள் அவளின் விரல்களுடன் பிணையவே பார்த்தது.

என்னாச்சு இவருக்கு? அவள் கொடுக்காமல் பின்னால் இழுத்து கொண்டவள், “சும்மா.. சும்மா வந்தேன். ஏன் என்னை உங்க அஸிஸ்டண்ட்டா வைச்சுக்க மாட்டீங்களா?” என்றாள்.

ரகுராம்க்கு இன்னும் இயல்புக்கு வர முடியவில்லை. உணர்ச்சிவசப்பட்டவனாகவே இருந்தான். திரும்ப தண்ணீர் குடித்தவன், “வா வீட்டுக்கு போலாம்” என்றான்.

அவனுக்கு அவள் வேண்டும். தன்னை சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை.

“வீட்டுக்கா? இப்போத்தானே வந்தோம்” அவள் புரியாமல் கேட்க,

“நாளைக்கு பார்த்துக்கலாம். இப்போ கிளம்பலாம்” என்றான்.

“ராம்” என்று மேனேஜர் அவனை தேடி கொண்டு வந்தவர், “உன் வைப் ஸ்டாக் எடுப்பேன்னு நின்னாங்க. அதான், என்ன ராம்” என்றார்.

“சார். நாங்க வீட்டுக்கு கிளம்புறோம். நான் நாளைக்கு வந்து முடிச்சு கொடுக்கிறேன்” என்றான்.

“ராம்.. நாளைக்கா? ஏற்கனவே வேலை பெண்டிங் இருக்கு. இப்போ போய்”

“சார். நான் கண்டிப்பா முடிச்சிடுவேன். இப்போ விடுங்க”

“ராம்.. என்னாச்சு உனக்கு? ரிப்போர்ட் அனுப்பணும்”

“சார்.. ப்ளீஸ்” என்று நின்றான் அவன்.

மேனேஜர் கொஞ்சம் கோவமாக அங்கிருந்து செல்ல, “ஏன் இப்படி பண்றீங்க?” என்று கேட்டாள் மனைவி.

“நீ வா” என்று அவள் கை பிடித்து கொண்டவன், பேக்கை மாட்டி கொண்டு வந்துவிட்டான். மனைவி கார் வெளியே நிற்க, அதை கூட கவனிக்காமல் உள்ளே சென்ற தன் அப்போதைய நிலையை நினைத்தான்.

ஐந்து நிமிடம் கூட இல்லை. மனைவி என்னை மீட்டு விட்டாள்!

“நீ கார்லே வா” என்றான் அவளை கையை விடாமல்.

“ஏங்க” என்றாள் மனைவி கை பார்த்து.

கோவமா இருக்கிற மாதிரி தெரியல. ஆனா ஏன் இப்படி நடந்துகிறார்? கணவனின் நுண்ணர்வுகள் அவளுக்கு இனம் காண முடியவில்லை.

ரகுராம் ஒரு அழுத்தம், இறுக்கம், இதம் கொடுத்தே அவளின் கையை  விட்டான். ஜனக்நந்தினி கார் எடுக்க, அவளுக்கு பக்கத்திலே வந்தான் இவன். டிராபிக் இன்று அவனுக்கு எரிச்சலை கொடுக்கவில்லை.

வீட்டுக்குள் வரவும், கதைவடைத்தவன் மனைவியை அள்ளி கொண்டான். அவள் கழுத்தில் புதைந்தான். மார்பில் முகத்தை புரட்டினான். இடையை வளைத்து கொண்டான். இதழ்களை கொய்தான்.

இதையே திரும்ப திரும்ப செய்தானே தவிர முன்னேறவில்லை. மனைவி ஒரு கட்டத்தில் அவன் தலை முடி பிடித்து தன்னை பார்க்க வைத்தாள். அவள் மூக்கை உரசினான்.

“என்ன ஆச்சுங்க” என்றாள்.

“ஏண்டி வந்த” என்றான்.

அவள் பதில் சொல்லும் முன் வாயை வேகமாக அடைக்கவும் செய்தான். ம்ம்ம்.. பெண் முனக, விடுவித்தவன், “சொல்லுடி.. ஏன் வந்த?” என்று கேட்டு திரும்ப அடைத்தான்.

பெண் மூச்சு வாங்கி அவனை தடுத்தவள், “பதில் சொல்ல விடாம இதென்னங்க” என்றாள்.

“எனக்காகவா?” என்று அவள் கண்களை நெருக்கமாக பார்க்க, பெண்ணுக்கு வார்த்தைகள் வரவில்லை.

அவன் பின் முடியை இறுக்கமாக பிடித்து கொண்டாள். ரகுராம்க்கு அவள் பதில் தேவையில்லை போல். திரும்ப அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

“ஏன் இப்படி? நான் எனக்காகவும் தான் வந்தேன். வீட்ல தனியா இருக்க போரடிக்குது. உங்களோட இருக்கலாம்ன்னு”

“நீங்க  நார்மலா இல்லை. முதல்ல கொஞ்சம் தள்ளுங்க” என்று அவளை தன் மேலிருந்து விலக்கினாள்.

“அப்போ நீ என் மேல வா” என்று இழுத்து மேல் போட்டு கொண்டான்.

“என்னங்க. முதல்ல எழும்புங்க” என்று அவன் கை பிடித்திழுத்து அமர வைத்தாள். “குளிக்கிறதுன்னா குளிச்சுட்டு வாங்க. சாப்பிடலாம்” என்றாள்.

ரகுராம் அவளையே வளைக்க பார்க்க, “ப்ளீஸ். போங்க. சாப்பிடுங்க. அப்போதான் தெளிவீங்க” என்றாள் கண்டிப்புடன்.

“இங்கேயே எடுத்துட்டு வா, சாப்பிடலாம்” என்றான் அவன்.

“அட்லீஸ்ட்  ட்ரஸ் மட்டுமாவது மாத்துங்க”

“நானே எடுத்துட்டு வரேன்” என்று கிட்சன் சென்றான் அவன்.

ஜனக்நந்தினி முதல் வேலையாக, மாற்று துணியுடன் குளிக்க ஓடி விட்டாள். ரகுராம் வந்தவன், உணவை வைத்து அமர்ந்து கொண்டான். மாலை வரை இருந்த வெறுப்பு இல்லை. முகம் பழைய கலைக்கு திரும்பியது.

கண்ணாடி பார்த்து தலை கோதி கொண்டான். அப்போதும் உடை மாற்றவில்லை. சுகமான சோம்பல். மெலிதாக விசில் அடித்தபடி மனைவியை எதிர்பார்த்து காத்திருந்தான்.

அவன் உழைக்க தெரியாதவனோ, உடல் வளையாதவனோ இல்லை.

அதிகளவில் ஓட்டம், மனைவியின் ஏக்கம், அலைச்சல் என்று அலண்டுவிட்டான்.  காலை மாலை சேர்ந்து நான்கு மணி நேரமாவது பைக் ஓட்ட வேண்டும். இடையில் முழுமூச்சாக வேலை பார்க்க வேண்டும். மனைவி ஓராமாக அவனை அரித்து கொண்டே இருப்பாள்.

முன்பு என்றால் வாடகை, உணவு, பெட்ரோல் செலவு என்று எல்லாம் பதினைந்து ஆயிரத்துக்குள் அடங்கிவிடும். அடக்கிவிடுவான். இப்போது இருக்கும் வீட்டின் வாடகையே இருபதாயிரத்துக்கு மேல் வரும்.

அதனுடன் வேலை செய்பவர்களுக்கு சம்பளம், வீட்டின் அன்றாட செலவு, இவன் தனிப்பட்ட செலவு, லோன் தொகை என்று கட்டுக்குள் நிற்கவில்லை. முதல் மாதம் கூட இன்னும் முடியவில்லை தான். ஆனால் இவன் கணக்கு பார்த்து எடுத்து வைத்தால் மட்டுமே தடுமாறாமல்  இருக்க முடியும்.

மனைவி, தன் வீட்டினர் வருமானம் எல்லாம் அவன் கணக்கிலே இல்லை. நிற்க கூடாது என்று தொடர்ந்து ஓடி விட்டதன் பலன் தான் சோர்வில் முடிந்துவிட்டது.  ஆனால் அது கூட மனைவி தனக்காக என்று வந்து நின்ற நொடி, காற்றில் கரைந்தே போனது.

“இது போதுமே. இன்னும் கூட உழைப்பேன்” என்று புத்துணர்ச்சி கொண்டான்.

ஜனக்நந்தினி குளியல் போட்டு வர, இருவரும் அறையிலே உணவை முடித்தனர்.

மனைவி அவனுக்கு பாதம் பால் கொடுக்க, குடித்தவன், அவளுக்கும் கொடுத்தான். விளக்குகளை அணைத்து சீக்கிரமே மனைவியுடன் பெட்டுக்கு வந்துவிட்டான்.

“வாசனையா இருக்கடி” என்றான்.

“நீங்க குளிக்கலை” அவள் சொல்ல,

“குளிச்சுட்டு வரவா?” உடனே கேட்டான்.

“ஒன்னும் வேணாம். தூங்குங்க” என்றாள்.

“தூங்கவா?”

“ஆமா.. இன்னைக்கு தான் சரியான நேரத்துக்கு தூங்க வந்திருக்கீங்க. தூங்குங்க” என்றாள் முடிவாக.

“தூக்கம் வராதுடி. புரிஞ்சுக்கோ”

“ஏன் வராது? எவ்வளவு அலையுறீங்க. அதெல்லாம் நல்லா தூக்கம் வரும்”

“மக்கு. உன்மேல ஆசை ஜாஸ்திடி. எப்படி தூக்கம் வரும்”

“இன்னைக்கு கண்டிப்பா நீங்க தூங்குறீங்க” என்று கன்னம் பிடித்து கொஞ்சியவள், எழுந்து சம்மணம் இட்டு அமர்ந்தபடி அவன் முடியை கோதி கொடுத்தாள். நெற்றி, புருவம் வருடி விட்டாள்.

ரகுராம் அவள் மடிக்கு நகர்ந்தவன், மனைவி கை பிடித்து கொண்டான். லேசான உணர்வால், சில நிமிடத்தில் நன்றாக தூங்கியும்விட்டான்.

மறுநாள் ரகுராம் தான் முன் எழுந்தான். குளித்து வர, “ஹேய் எப்போ?” என்று ஆர்ப்பாட்டமாக பேசி கொண்டிருந்தாள் மனைவி.

ரகுராம் முன் நின்று கேள்வியாக புருவம் தூக்க, “அண்ணாக்கு பாய் பேபி பிறந்திருக்கான். நாம அத்தை, மாமா ஆகிட்டோம்” என்றாள் அவனை கட்டிக்கொண்டு.

“ஆஹ்ன். அண்ணா, அவர் தான் கொடுக்கிறேன்” என்று ரகுராமிடம் கொடுக்க, ப்ரவீன் அவனுக்கும் விஷயம் சொன்னான்.

ரகுராம் வாழ்த்த, ஜனக்நந்தினி ஊருக்கு கிளம்ப தயாராக ஆரம்பித்தாள். “உங்க இரண்டு பேருக்கும் அப்பா பிளைட் டிக்கெட் போட்டிருக்கார். பத்து  மணிக்கு பிளைட். கிளம்பி வாங்க” என்று ப்ரவீன் சொல்ல,

ரகுராம் கண்களை இறுக்க மூடி திறந்தான். அவனிடம் ஒரு வார்த்தை கூட உங்களுக்கு ஓகேவா, வேலை இருக்கா என்று எதுவும் கேட்கவில்லை.

“உங்க தங்கச்சி வருவா. பிக்கப் பண்ணிக்கோங்க” என்று பொறுமையாக சொல்லி வைத்துவிட்டான்.

“என்ன சொல்றாங்க. சீக்கிரம் கிளம்ப சொல்லு. செக் இன் பண்ணனும்” என்று தணிகைவேல் பக்கத்தில் கேட்க,

“உங்க மருமகன் எதுக்கும் சரிப்பட்டு வர மாட்டார்.  பாப்பா மட்டும் வருவா, பிக்கப் பண்ணிக்கோங்கன்னு வைக்கிறார்” என்றான் ப்ரவீன்.

தணிகைவேல் முகம் மாறியது. “பாப்பா வரா இல்லை. விடு, பார்த்துக்கலாம்” என்றுவிட்டார்.

பாரதி பேரனை கையில் வைத்திருந்தார். அதிகாலையில் தான் திடீரென வலி கண்டு மருத்துவமனைக்கு வர இதோ குழந்தை பாட்டி கையில் மிதந்தான்.

இந்த உணர்வு பாரதி தம்பதிக்கு புதிதாக இருந்தது. கொள்ளை மகிழ்ச்சியாகவும் இருந்தது. பாரதி தன் கண்ணீரை துடைக்க, ப்ரவீன் மகனை எட்டி பார்த்தான். கையில் வாங்க பயம்.

ஆர்த்திக்கு சுகப்பிரசவம் என்பதால் சில நிமிடங்களில் அறைக்கு கொண்டு வந்துவிட்டனர். ஆர்த்தியின் அம்மா, பேரனை கையில் வாங்கி கொள்ள, பாரதி மருமகளிடம் சென்றார்.

அவளுக்கு தேவையானதை பார்த்து செய்ய, ஆர்த்தி அம்மாவை தேடினாள். பாரதிக்கு மருமகளை புரியாமல் இருக்குமா? என்ன தான் மாமியார் நன்றாக பார்த்தாலும் அவரிடம் உரிமையாக கேட்க முடியா தயக்கம் உண்டே.

தணிகைவேல் உறவுகளுக்கு போன் செய்து சொல்லி கொண்டிருக்க, ராஜேஸ்வரி டிரைவருடன் வந்துவிட்டார். கொள்ளு பேரன் ஆகிற்றே, அவருக்கு கால்கள் தரையில் நிற்கவில்லை.

கையோடு கொண்டு வந்திருந்த பதினோரு பவுன் செயினை அவன் கழுத்தில் போட்டுவிட்டார். சில நொடி தான். உடனே எடுத்துவிட்டனர்.

வேணியை தொடர்ந்து உறவுகள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, வீட்டினருக்கு வேலை தான். ப்ரவீன் மருத்துவமனைக்கும், வெளியேயும் அலைந்தான்.

அருணகிரி வீட்டினருக்கும் தகவல் செல்ல, பத்மா போன் செய்து மகனிடம் பேசினார். “ஆமாம்மா சொன்னாங்க. உங்க மருமக மட்டும் வரா. எனக்கு வேலை இருக்கு” என்றான் ரகுராம்.

ஜனக்நந்தினி குளித்து இதை கேட்டபடி வர, “இதுல என்ன நல்லா இல்லாம போக. வீக் எண்டு வரேன்ம்மா” என்று வைத்தான் மகன்.

“நீங்க வரலையா?” மனைவி முகம் வாடி கேட்க,

“வேலை இருக்குடி. அதான் அத்தை நீ போறியே. எனக்கும் சேர்த்து பார்த்து, கொஞ்சிட்டு வா” என்றான்.

ஜனக்நந்தினி தலையசைக்க, அவளுக்கு முத்தம் வைத்து வெளியேறினான். காலை உணவு டேபிளில் இருக்க, தானே எடுத்து உண்டவன், மதியத்துக்கு எடுத்து கொண்டு கிளம்பினான்.

ஜனக்நந்தினி அவசரமாக வந்து கணவனுக்கு பை சொன்னாள். “பார்த்து பத்திரமா போ. சாப்பிட்டு சீக்கிரம் கிளம்பிடு. டிராபிக்ல லேட் ஆகிடும்” என்றவன், “நான் வந்து உன்னை ஏர்போர்ட்ல டிராப் பண்ணவா?” என்று கேட்டான்.

“இல்லை. டேக்சி புக் பண்ணி போயிக்கிறேன். நீங்க கிளம்புங்க” என்றாள் மனைவி.

“சரி” என்று கிளம்பிவிட்டவன், சட்டென உள்ளே வந்து, “எப்போ ரிட்டர்ன்” என்று கேட்டான்.

“தெரியல”

“இரண்டு நாள்ல வந்திடு. வந்திடுவ தானே?”

“ட்ரை பண்றேன்” என்றாள் பெண்.

“வந்திடுடி” என்று கிளம்பினான்.

Advertisement