Advertisement

அங்கு அருணகிரி முட்டி மோதி பார்த்துவிட்டு வேறு வழி இல்லாமல் தங்கையிடம் பேசும் முடிவினை எடுத்தார். இருக்கும் சில சொத்துக்கள் பரம்பரை சொத்து. எதில் கை வைத்தாலும் பாரதி வந்து நிற்பார். சேமிப்பு இல்லை. பிள்ளைகளின் படிப்பே கடினமாக தான் இருந்தது.

மகன் இப்போது தான் வேலைக்கு சேர்ந்திருக்க, அவனிடமும் எதிர்பார்க்க முடியாது.

முட்டு சந்து போல் எந்த பக்கம் போனாலும் தடையே. ஆனாலும் மனிதர் பத்திரிக்கை கொடுப்பதை மட்டும் நிறுத்தவில்லை. உள்ளுக்குள் அவருக்கும் ஓர் உறுதி.

ராமமூர்த்தி தான்,  “பேசுண்ணா.. நம்ம தங்கச்சி தானே. கூப்பிட்டு வைச்சு பேசுண்ணா” என்று சொல்லி கொண்டே இருந்தார்.

பத்மாவிற்கு மகள் வாழ்க்கையல்லவா? அவரும் சொல்லி அருணகிரி இறுதியாக ஒத்து கொண்டார்.

அனுஷா தம்பிக்கு அழைத்து, ஊருக்கு வர சொன்னாள். “எனக்கு பயமா இருக்குடா. வா” என்றாள். ரகுராம் ஊருக்கு வந்தான்.

பாரதிக்கு தகவல் சென்றது. பேசும் போது நம்ம நெருங்கிய சொந்தங்கள் உடன் இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் பாரதி.

“எப்படிம்மா கிளம்ப, என்ன சொல்லி ஊருக்கு போக?” ப்ரவீன் கேட்டான்.

“நான் அப்பாகிட்ட பேசிட்டேன். வேண்டுதலுக்காக திருச்செந்தூர் போறோம்ன்னு” என்றார் பாரதி. தயாராக தான் இருக்கிறார். மகன் பெருமூச்சு விட்டு கொண்டான்.

ராஜேஸ்வரி மட்டும் என்ன திடீர் வேண்டுதல் என்று கேள்விகளை அடுக்கினார். எல்லாவற்றுக்கும் பதிலை வைத்திருந்தார் பாரதி.

அந்த வார இறுதியில் அம்மாவும் மகனும் காரில் கிளம்பினர். இரு ட்ரைவர்கள் உடன், இரு கார்  வந்தது. ப்ரவீனின் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்பதால் வழியிலே நிறுத்திவிட்டான்.

கரூர் சாலையில் கார் சென்றது. பாரதிக்கு படபடப்பு தான். ஆனாலும் ஊரின் வாசம் அவரை மகிழ்ச்சியாக இருக்க வைத்தது. மகனுக்கு சொல்ல வழி நெடுக ஆயிரம் கதை இருந்தது.

அம்மாவின் மலர்ந்த முகத்தை பார்த்தவாறே அருணகிரி வீட்டின் முன் காரை நிறுத்தினான். அதே வீடு. சிறு சிறு மாற்றம் மட்டுமே. உடனே காரில் இருந்து இறங்கிவிட முடியவில்லை.

ராமமூர்த்தி தங்கை பக்கம் கதவை திறந்தார். “வாம்மா” என்றார். பாரதிக்கு கண்கள் கலங்கியது. “பாரதி” ராமமூர்த்தி குரலில் கண்களை ஒற்றி கொண்டு கீழிறங்கினார்.

ப்ரவீன் அம்மாவுடன் நடந்தான். மாமா மச்சான்கள், பங்காளிகள் கூடியிருந்தனர். பாரதியிடம் எல்லாம் பேசினர். மஞ்சுளா தண்ணீர் கொடுத்தார்.

அருணகிரி குடும்பம் மட்டும் அமைதியாக நின்றிருந்தது. ப்ரவீன் எல்லோரையும் ஆராய்ச்சியாக பார்த்தான். தெரியாத சொந்தம் எப்படி என்று கணிக்க முயன்று கொண்டிருந்தான்.

“பேசலாமா?” பெரியவர் ஒருவர் ஆரம்பித்தார்.

பாரதி காட்டிய இருக்கையில் அமராமல் தள்ளி நின்றார். நின்றிருந்த அவரின் பிறந்த மண் அவருக்கான தைரியத்தை கொடுத்தது போல். நன்றாக நிமிர்ந்து நின்றார்.

அருணகிரி தங்கை முகம்  பார்க்க மறுத்தார். பத்மாவிற்கு கொஞ்சம் ஆற்றாமை, பாசம், கோவம் எல்லாம் தான்.

“பாரதி ஏம்மா இந்த வேலை எல்லாம். ஏதா இருந்தாலும் அண்ணன்கிட்ட பேசியிருக்கலாம் இல்லை. அவன் கல்யாணம் வைச்சிருக்கிற நேரம் இப்படி பண்றது அழகா சொல்லு?” என்று கேட்டார் பெரியவர்.

“நான் அண்ணன்கிட்ட பேசினேன் பெரியப்பா” என்றார் பாரதி.

“பேசுனியா” பெரியவர் இப்போது அருணகிரியை பார்த்தார்.

அவர் எங்கோ பார்த்தார். “என்ன ராமமூர்த்தி உண்மையா?” அவரிடம் கேட்க,

“பாரதி பேசுச்சு பெரியப்பா. அண்ணன் தான் பிடிகொடுக்கலை” என்றார் அவர்.

“என்ன அருணகிரி இது. தங்கச்சி தான் பேசியிருக்கு இல்லை. கூட குறையன்னாலும் பேச்சிலே முடிச்சிருக்கலாம் இல்லை” என்று மற்றவர் கேட்க,

அருணகிரியிடம் முழு மௌனம். பாரதி கேட்டதை சபையில் சொல்ல இஷ்டமில்லை. பாரதிக்கு அதுவே இன்னும் வைராக்கியத்தை தூண்டிவிட்டது.

“என் மகனுக்கு அவர் பொண்ணை கொடுக்க சொல்லி கேட்டேன். அவர் மாட்டேன் சொல்லிட்டார்” என்றார் கணீரென உடைத்து.

“என்ன” எல்லோருக்கும் அதிர்ச்சியே இது.

தங்களுக்குள் பேசியவர்களுக்கு இது நல்ல செய்தியே. “ஏன் கொடுத்தா என்ன, தங்கச்சி மகன் தானே. வசதியாவும் இருக்காங்க. பையனும் நல்லா இருக்கான். என்ன குறை?” என்றனர்.

இப்படி தான் பேசுவர் என்று தெரிந்தே தான் அருணகிரி மௌனம் சாதித்தார். அதே போல பேச, அனுஷா கண்கள் நிரம்பியது. தம்பி சட்டையை ஜன்னல் வழி இழுத்தாள்.

“க்கா.. பார்த்துக்கலாம். அழாத. நான் இருக்கேன்” என்றான் தம்பி தைரியம் கொடுத்து.

பாரதி இருவரையும் பார்த்திருந்தார். அண்ணன் மகள் அழுகை அவரை வருத்தப்பட வைத்தது. நிச்சயம் பண்ண மாப்பிள்ளையை ரொம்ப பிடிக்குமோ?

“என்ன அருணகிரி தங்கச்சி கேட்கிறதுல என்ன தப்பு, அவளுக்கு தானே முதல் உரிமை. அவ கேட்டும் நீ வெளியே பார்த்திருக்க. தப்பில்லையா இது?” என்றனர்.

“எனக்கு அங்க கொடுக்க இஷ்டமில்லை பெரியப்பா, வேற பேசுங்க” என்றார் அருணகிரி.

“ஏன்? ஏன் கொடுக்க இஷ்டமில்லை?”

“வசதி இருந்தா மட்டும் போதாது. அங்க என் மக நல்லா இருக்க மாட்டா” அவர் சொல்லிவிட, ப்ரவீனிடம் கோவம்.

“நான் எதுக்கு இருக்கேன் பெரியப்பா. என் மருமகளை நான் நல்லா வைச்சுக்க மாட்டேனா?” பாரதி கேட்க,

“அவளே முதல்ல அங்க நல்லா இருக்காளான்னு கேளுங்க” என்றுவிட்டார் அருணகிரி.

“என்னப்பா சொல்ற? பாரதிக்கு என்ன குறை? நீ பேசணும்ன்னு பேசாத” என.

“சரி.. அவ நல்லாவே இருக்கட்டும். என் பொண்ணை அங்க நான் கொடுக்க மாட்டேன்” என்றார்.

“அப்படி சொல்ல முடியாது மாமா. என் அண்ணன் மகளை கட்டிக்க என் மகனுக்கு முழு உரிமை இருக்கு. அவனுக்கு மிஞ்சி தான் எல்லோருக்கும்” பாரதி சொன்னார்.

“எங்க அக்காவுக்கு இப்போ பார்த்திருக்கிற மாப்பிள்ளையை தான் பிடிச்சிருக்கு. உங்க சண்டையில அவளை அழ வைக்காதீங்க” என்றான் ரகுராம் வாய் திறந்து.

“ரகுராம் என்ன இது பெரியவங்க பேசும் போது” ராமமூர்த்தி கண்டிக்க,

“என் அக்காவுக்காக நான் பேச கூடாதா சித்தப்பா?” என்றான் அவன்.

“ரகுராம் இது வேற”

“என்ன வேற, உங்க தங்கச்சிக்காக நீங்க பேசுறீங்க இல்லை” என்றான் சித்தப்பா மேல் இருந்த மனக்கஷ்டத்தில்.

“தம்பி இப்போ பேசியிருக்க இடத்தை விட, உன் அத்தைக்கு கொடுத்தா உங்க அக்கா இன்னும் நல்லா இருப்பாப்பா” என்றனர்.

“அவளுக்கு பிடிச்ச இடத்துல கொடுத்தா தான் அவ நல்லா இருப்பா பெரியப்பா. என் அக்காவை கட்டாயப்படுத்தி எதுவும் செய்ய நினைக்காதீங்க” என்றான்.

“என்னப்பா இது உன் அப்பா சம்மதிச்சா கூட நீ ஒத்துக்க மாட்ட போல”

“அக்காவுக்கு இஷ்டம் இருந்தா வேற மாமா. அவளுக்கு பிடிக்காததை எப்படி செய்ய வைக்க”

“சரி. அப்போ உன் அத்தைக்கு என்ன வழின்னு நீயே சொல்லு. இத்தனை வருஷம் அவ பிறந்த வீட்டு சொந்தம் இல்லாம  தனிச்சு நின்னிருக்கா. இப்போ உறவு வேணும்ன்னு உரிமையா கேட்டு நிக்கிறா. என்ன பண்ணலாம் சொல்லு. உன் அக்காவுக்கு நீ பார்க்கிற மாதிரி என் தங்கச்சி நான் பார்க்கிறேன் தான். சொல்லுடா” என்றார் ராமமூர்த்தி கோவமாகவே.

“மூர்த்தி”

“என்ன அண்ணா.. உன் மகனை கேட்க கூடாதா, சரி நீயே சொல்லு. நம்ம தங்கச்சிக்கு என்ன பதில்? அவ என்ன நம்மகிட்ட சொத்துபத்து கேட்டா நிக்கிறா. சொந்தம் வேணும்ன்னு தானே கேட்கிறா. கொடுத்தா என்ன உனக்கு? அப்படி என்ன ஆகாதவளா போயிட்டா?”

“மூர்த்தி இருப்பா பேசலாம். உன் அண்ணா அப்படி எல்லாம் பாரதி உரிமையை தட்டி கழிச்சிட முடியாது. நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம். பேசலாம். என்ன அருணகிரி சொல்லு. என்ன பண்ணலாம். கூட பிறந்த பிறப்பை நீ மாத்திட முடியாது. அவளுக்காக நீங்க எதுவும் செஞ்சதில்லைன்னு ஊருக்கே தெரியும். ஆனாலும் சொந்தம் வேணும்ன்னு வீட்டு பிள்ளை வாசல் ஏறி வந்து நிக்குது. நீ முடியாதுன்னு சாதாரணமா சொல்ற”

“பொண்ணை பெத்தவன் எனக்கு அந்த உரிமை கூட இல்லையா” அருணகிரி கோவமாக கேட்டார்.

“சரி அதுக்கு காரணம் சொல்லு”

“அங்க என் பொண்ணு சந்தோஷமா இருக்க மாட்டா”

“அப்போ இத்தனை வருஷம் பாரதி அங்க இருந்தது” ராமமூர்த்தி கேட்க, அருணகிரியிடம் பதில் இல்லை.

“என்னை பத்தி அவருக்கு என்னண்ணா. என்னை பெத்தவர் அவர் இல்லையே. அவர் பொண்ணுக்கு அவர் பார்க்கிறார் சரிதான்” என்ற பாரதி தொண்டை கட்டிவிட்டது.

அருணகிரி முகம் கசங்கிவிட்டது. ரகுராம் அத்தையின் கலங்கிய கண்களை பார்த்து நின்றான்.

ப்ரவீன் அம்மா கை பிடித்து கொண்டான். இப்படி வந்து இவர்கள் முன் நிற்க வேண்டுமா என்ன? அவனுக்கு பிடிக்கவே இல்லை.

“என்ன அருணகிரி இது. வீட்டு பொண்ணை அழ வைக்கிற?”

“என் பொண்ணுக்கு பேசியிருக்கிற மாப்பிள்ளையை தான் பிடிச்சிருக்கு நாங்க என்ன பண்ணட்டும் மாமா?” அருணகிரி அதிலே நின்றார்.

“பொண்ணுக்கு எடுத்து சொன்னா புரிஞ்சுக்க போகுது”

“அப்படி அவளை வற்புறுத்தி எல்லாம் செய்ய முடியாது பெரியப்பா”

“இப்போ என்னதான் சொல்ல வர”

“இந்த சம்மந்தம் எல்லாம் சரி வராது. அவளை கேஸ் வாபஸ் வாங்க சொல்லுங்க” என்றார் முடிவாக.

பாரதிக்கு பயம் பிடித்து கொண்டது. இவ்வளவு தூரம் போராடி வெறும் கையோடு போவதா?

பிறந்த வீடு சொந்தம் எனக்கு இல்லாமலே போய்விடுமா? இதை விட்டால் வேறென்ன வழி உள்ளது. அனுஷா அழுகையை பார்த்தால் நிச்சயம் அவளிடம் செல்ல முடியாது. கடவுளே என்ன அதிர்ஷ்டம் இவ்வளுவுதானா?

உள்ளுக்குள் ஏதோ உடைய தயாராக, நோ நோ என்று இறுக்கி பிடித்து நின்றார். இன்று நேற்று இல்லை. பல வருட போராட்டம் இது. எப்படி விடுவது?

“பாரதி வேற எதாவதுன்னா பேசலாம். பொண்ணு பிரச்சனை. அனுஷாக்கு அந்த மாப்பிள்ளை தான் பிடிச்சிருக்குன்னு போது நாம என்ன செய்ய?” உறவுகள் இவரிடம் கேட்டனர்.

பாரதி நிராசையுடன் அண்ணனை பார்த்தார். எப்போவும் என்னை விட்டு கொடுக்கிற இல்லை. கண்ணீரை அடக்க கண்களை சுழட்டியவருக்கு பளீரென மின்னல் வெட்டியது.

மறுபடி நிமிர்ந்து  நின்றார். முகம் துடைத்து கொண்டவர், நேரே அருணகிரியிடமே சென்றார். அவர் முன் நின்றார். அருணகிரி திகைத்து நிற்க,

“ண்ணா.. உன் பொண்ணை எனக்கு கொடுக்க மாட்டேன் சொல்லிட்ட. சரி. நான் ஏத்துக்கிறேன். அவளுக்கு பிடிச்சவனையே கட்டி கொடுங்க..” என, அருணகிரி முகம் மலர்ந்து போனது.

“பாரதி” ராமமூர்த்தி மறுக்க வர, பாரதி பெரிய அண்ணனையே பார்த்து நின்றிருந்தவர்,

“ண்ணா.. நான் இப்போ கேட்கிறேன் என் பொண்ணை உன் மகனுக்கு கொடுக்கிறேன். என்ன சொல்ற?”  என்றார்.

மலர்ந்த முகம் அதிர்ச்சிக்கு சென்றது. ரகுராம்க்கு புரியவே நொடிகளானது. திரும்ப ஒரு சலசலப்பு.

“இப்போ நீ மாட்டேன்னு சொல்ல முடியாது அருணகிரி. பாரதி இதுக்கு மேல இறங்கி வர முடியாது. சரி சொல்லு” பெரியப்பா முழு சப்போர்ட்டுடன் பாரதி பக்கம் நின்றார். மற்ற உறவுகளும் கூட.

“அவனுக்கு இப்போ தான் இருபத்தி மூணே ஆகுது” அருணகிரி வேகமாக சொல்ல,

“எல்லாம் கல்யாணம் கட்டிக்கிற வயசு தான்” என்றனர் உறவுகள்.

ப்ரவீனுக்குள் இருக்கும் பாசக்கார.. பணக்கார அண்ணன் விழித்து கொண்டான். முகம் கோவத்தில் சிவந்து போனது. “ம்மா.. என்ன பண்றீங்க” என்று பாரதியிடம் கோவத்தை மறைக்காமல் கேட்டான்.

“இந்த வீட்டில் என் தங்கை வாழ்வதா?” அவனுக்கு ஏற்கவே முடியவில்லை.

“இப்போ தான் காலேஜ் படிச்சிட்டிருக்கா அவளுக்கு கல்யாணமா? ம்மா. நோ. நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்” என்றான்.

பாரதி அவர் கொண்ட முடிவில் உறுதியாக, பிடிவாதமாக நின்றார். அருணகிரி மறுக்க ஆயிரம் காரணம் தேடினார். உறவுகள் ஒரே பிடியாக நின்றனர்.

அருணகிரி மகனை பார்க்க, அவன் மறுப்பாக தலையாட்டினான்.

கல்யாணம் செய்ற வயசா இது?

Advertisement