Advertisement

அழகியல் 2

தன் கையில் இருக்கும் நோட்டீஸையே அதிர்ந்து பார்த்திருந்தார் அருணகிரி. பேச்சு வருவேனா என்றது. பாரதி இப்படி செய்வாள் என்று அவர் ஒரு சதவீதம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.

நிச்சயம் முடித்து தேங்கி நின்றிருந்த நெருங்கிய உறவுகள் ஆளுக்கொன்று பேச, பத்மாவிற்கு கண்களை இருட்டி கொண்டு வந்தது. மஞ்சுளா அவரின் கை பற்றி கொள்ள, ரகுராம் அப்பாவிடம் சென்றான்.

அவரிடம் இருக்கும் நோட்டீசை வாங்க, மகனை பார்த்து கொடுத்தார். தன் அப்பா வாங்கிய இடத்தில் தனக்கும் பங்கு இருப்பதாகவும், அதை விற்க கூடாது என்றும் அதில் தெளிவாக அச்சிட பட்டிருந்தது.

ரகுராமிற்கு இதனை பற்றிய புரிதல் ஓரளவே இருந்த போதும், விஷயம் சீரியஸ் என்று உணர்ந்து கொள்ள முடிந்தது. மற்ற நேரம் என்றாலும் பரவாயில்லை. அக்காவின் திருமண நேரம் இப்படி என்பது அவனுக்கும் அச்சத்தை கொடுத்தது உண்மை.

“அருணகிரி என்னப்பா இது? இப்படி ஆகி போச்சு?” உறவுகள் மெல்ல ஆரம்பித்தனர்.

“பாரதி இந்த இடத்துக்கு போய் நோட்டீஸ் அனுப்பியிருக்கு, அவளுக்கு இல்லாத சொத்தா?” என்றனர்.

“அதுவும் கல்யாண முடிவான நேரத்துல பாரதி இப்படி பண்ணியிருக்க வேணாம்”

“ஏதா இருந்தாலும் நேரா பேசி தீர்த்திருக்கலாம், படக்குன்னு நோட்டீஸ் அனுப்பி இருக்க வேணாம்” என, அருணகிரிக்கு வாயே திறக்க முடியா நிலை.

பாரதி பேச மட்டுமா செய்தார். சின்ன அண்ணன் ராமமூர்த்தி மூலம் கெஞ்சவே செய்தார். அருணகிரி தான் பிடிகொடுக்கவில்லை. மகளின் வாழ்க்கை அல்லவா இது.

அதற்காக பாரதி இப்படி செய்யலாமா? மெல்ல அண்ணனுக்கு கோவம் உதயமானது.

தன் தம்பி மனைவி மஞ்சுளாவை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார். அவரோ இவரின் பார்வையை நேர்கொண்டு எதிர்கொள்ள, அருணகிரியின் சந்தேகம் ஊர்ஜிதமானது.

‘எல்லாம் கூட்டு களவாணிக’  விருட்டென வெளியே கிளம்பிவிட்டார்.

பத்மா வீட்டுக்குள் முடங்கி கண்ணீர் வடிக்க, அனுஷா திகிலடைந்து போயிருந்தாள். ரகுராம் அக்காவை கவனித்து அவளிடம் செல்ல, அவளோ இரு கைகளாலும் தம்பி கையை கெட்டியாக பற்றி கொண்டாள்.

“பயமா இருக்குடா” என்றாள் கலங்கிய குரலில். சுகுமாரை விரும்பிவிட்டதின் கலக்கம் அது.

ரகுராமுக்கு புரிய, ஆறுதலாக அக்காவின் கை பற்றி கொண்டான். அப்பா என்ன செய்வார், என்ன முடிவெடுப்பார் என்று ஒன்றும் தெரியவில்லை.

பொங்கல் முடித்து அடுத்த வாரம் பத்திரப்பதிவு. இந்த மாதத்திற்குள் முகூர்த்தம் குறிக்கப்பட்டு, பத்திரிக்கை வரை தயாராகிவிட்டது. இப்போது போய் நோட்டீஸ் என்றால்?

அருணகிரி நேரே தம்பியின் முன் தான் போய் நின்றார். அவரின் வீட்டிலே இருந்தார் ராமமூர்த்தி. அண்ணன் வருவார் என்று தெரியும் போல. வீட்டுக்குள் வராதவருக்கு வெளியே அமர சேர் எடுத்து போட்டார்.

அதை கையால் தள்ளி விட்டவர், “என்ன மூர்த்தி நடக்குது” என்றார்.

தம்பியிடம் பதில் இல்லை. “உன்கிட்ட தாண்டா கேட்கிறேன். என் பொண்ணுக்கு அந்த இடத்தை வித்து தான் கல்யாணம் பேசியிருக்கேன்னு உனக்கு தெரியும் இல்லை. அவளுக்கு சொல்ல மாட்டியா நீ” என்று கேட்க,

“சொன்னதனால தான் நோட்டீஸ் அனுப்பியிருக்கா” என்றார் தம்பி.

“என்னடா எல்லாம் சேர்ந்து என்னை பழி வாங்குறீங்களா” என்ற அருணகிரி குரல் உடைந்து போனது.

“ஏற்கனவே அவளுக்கு இருபத்தைஞ்சு வயசு ஆகிடுச்சுடா. இந்த சம்மந்தமும் கை விட்டு போனா நான் என்னடா பண்ணி என் பொண்ணை கரையேத்துவேன்?” அருணகிரி தளர்ந்து தரையிலே அமர்ந்துவிட்டார்.

ராமமூர்த்திக்கு  எந்த பக்கமும் அசைய முடியாத இக்கட்டு. அண்ணனின் சூழ்நிலையும் தெரியும். தங்கையின்  நிலையும் புரியும். யாருக்கு பேச? மௌனம் சாதித்தார்.

அருணகிரிக்கு தம்பியின் மௌனம் குத்தியது. இவரின் துணை இல்லாமல் பாரதியால் அந்த இடத்தை பற்றிய தகவல்களை திரட்டி நோட்டீஸ் அனுப்பி இருக்க முடியாது. நன்றாக புரிகிறது.

சில நிமிடங்கள் இருந்தவர், ஏதும் பேசாமல் கிளம்பிவிட்டார். பங்காளின்னு காமிச்சுட்டான். உள்ளுக்குள் பொறுமல். ஏதாவது செய்து என் மகளின் திருமணத்தை நடத்தியே தீருவேன் என்று தந்தையாக உறுதி பூண்டார்.

ஆனால் எதார்த்தம் மிகவும் கடினமாக இருந்தது. முதலில் இடத்தை வாங்கியவரிடம் பேச, அவரோ பிடிவாதமாக நின்றார். “ஒன்னு அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுங்க.  இல்லை உங்க தங்கச்சியை கேஸ் வாபஸ் வாங்க சொல்லுங்க” என்றார்.

வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க அது அவர் கையில் இருக்க வேண்டுமே. அதை வைத்து தான் மகளின் நிச்சயம், திருமண ஏற்பாடு எல்லாம் செய்ததுடன், அவரின் பட்டு தறிக்கும் செலவிட்டிருந்தார்.

அருணகிரி குடும்பத்தாரின் தொழில் பட்டுத்தறி. காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ள முடியாமல் பின் தங்கிய நிலையில் இருந்தவர், இப்போது தான் சில வசதிகளை செய்து கொண்டார்.

மீதம் கையில் இன்னும் சிறிதளவே தான் உள்ளது. நகை, சீர், மண்டபம், உணவு என்று பெரிய செலவுகள் எல்லாம்  இனி தான்.

பொங்கலே வந்துவிட, முடிவு கிட்டவில்லை. பொங்கல் அவர்களுக்கு மிகவும் எளிமையாக நடந்தது. புது உடை எடுக்க கூட மனமில்லை. ஒரு சர்க்கரை பொங்கலோடு முடிந்துவிட, பாரதியின் வீட்டில் பொங்கல் அமர்க்களபட்டது.

நான்கு நாட்களும் கோலாகலம் தான். தணிகைவேல் குடும்பத்திற்கு பரம்பரை விவசாய நிலங்கள் உண்டு. அதனுடன் இவர்கள் சேர்த்ததும் என நூறு ஏக்கரை தொட்டுவிட்டனர். ராஜேஸ்வரிக்கு வாங்கி கொண்டே இருக்க வேண்டும். வருடாவருடம் அவரின் பெயரில் நிலம் ரெஜிஸ்டர் ஆக வேண்டும்.

கணவனில் இருந்து மகன் வரை அதை செய்து கொண்டிருக்க, இதோ இந்த வருடமும் புதிதாக வாங்கிய நிலத்தில் தான் பொங்கல். தை ஒன்றாம் தேதி தணிகைவேல் குடும்பம் தங்கள் வீட்டில் பூஜை முடித்து, வேணி வீட்டிற்கு கிளம்பினர்.

சுந்தரத்தின் அன்பு கட்டளை அது. பாரதிக்காக அவர் மனம் விரும்பி செய்வதில் வேணி, ராஜேஸ்வரிக்கு ஏகப்பட்ட  கடுப்பு. காலை உணவு தயாராக இருக்க, உணவுக்கு அமர்ந்தனர்.

 பாட்டி, அத்தை பற்றி நன்கு தெரியும் என்பதால் ப்ரவீன் அம்மாவுடனே இருந்தான். முதலில் பாரதிக்கு தான் உணவு வைத்தனர். தன் மனைவிக்கான மரியாதையில் தணிகைவேலுக்கு எப்போதும் போல ஆனந்தம் பெருமை.

“சாப்பிடுங்க அண்ணி” வேணி சொல்ல, பாரதி சர்க்கரை பொங்கலில் ஆரம்பித்து அளவாக உண்டுவிட்டு எழுந்தார்.

வேணிக்கு மாமனார், மாமியார் இருக்க அவர்களுடன் பேச்சு சென்றது. உணவு முடித்து ஆண்கள் ஏதோ தொழில் பற்றி பேசி கொண்டிருக்க, பெண்கள் ஓரிடத்தில் இருந்தனர்.

“என் மருமகளுக்கு அந்த அம்மா வீடு இல்லாமல் போனதே நல்லது. இல்லைன்னா இவ்வளவு பெரிய அம்மா வீடு அவளுக்கு கிடைச்சிருக்குமா?” என்றார் ராஜேஸ்வரி.

“என்ன சொல்றீங்க” வேணியின் மாமியார் கேட்க,

“அண்ணி.. நான் பணம், அந்தஸ்து, பெரிய வீடு, நீங்க அவளுக்கு கொடுக்கிற சீர், விருந்து வைச்சு சொல்லலை. உங்க சொந்த பந்தம் வைச்சு சொன்னேன்” என்றார் ராஜேஸ்வரி விளக்கி.

பாரதிக்கு என் அம்மா வீடு எப்படி இருந்தாலும் என் அம்மா வீடு என்று கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் கத்தி அந்த அம்மா வீடு எங்க என்று கேட்டால்?

“பணம் அந்தஸ்துல என்ன இருக்கு சம்மந்தி. பாரதிக்காக எங்க மகன் பாசத்துல செய்றது அது. நீங்க இதை சொல்லுங்க ப்ரவீனுக்கு ஜாதகம் கேட்க போறேன்னு சொன்னீங்க, என்ன சொன்னாங்க” என்று அவர் கேட்க, பாரதிக்கு திக்கென்றது.

“கேட்டேன் அண்ணி. அவனுக்கு இருபத்தி ஆறு ஆகுது. இருபத்தி ஏழுல கல்யாணம் முடிச்சிடலாமான்னா கேட்டோம். சரின்னு சொல்லிட்டார். பொங்கல் முடியவும் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிடணும்” என்றார் ராஜேஸ்வரி மகிழ்ச்சியுடன்.

‘என் மகனுக்கு என்னை கேட்காம இவங்களே முடிவெடுப்பாங்களா’

“என்ன பாரதி. உனக்கு தெரியாதா, புதுசா கேட்கிற மாதிரி இருக்க” வேணி மாமியார் கேட்க,

“அவளுக்கு தெரியாம என்ன அண்ணி. நாங்க தான் எடுத்து செய்ய போறோம். வழக்கம் போல என் மாப்பிள்ளை தான் அதுக்கும் சீர் செய்ய போறார். என் மருமகளுக்கென்ன, கல்யாணம் பண்ணிட்டு வந்த நாள்ல இருந்து இப்போ வரை அவ ராணி தான்” ராஜேஸ்வரி சொல்ல,

“அப்படி சொல்லும்மா. இந்த பேரி டேல் கதை மாதிரி அண்ணி வாழ்க்கை குடிசையில இருந்து கோபுரமாகிடுச்சு” வேணி உடன் சேர்ந்து கொண்டாள்.

“ம்ப்ச் வேணி என்ன இது” அவரின் மாமியார் கேட்க,

“அவளுக்கு அவங்க அண்ணா மேல பெருமை ஜாஸ்தி அண்ணி. நமக்கு சமமான அந்தஸ்துள்ள பொண்ணுங்க வரிசை கட்டி நின்னும் பாரதி தான் வேணும்ன்னு தணிகைவேல் போராடி கட்டிக்கிட்டான் இல்லை. அதுக்கு சொல்வா. நீங்க இதை சொல்லுங்க  ப்ரவீனுக்கு நம்ம லெவலுக்கு ஏத்த மாதிரி குடும்பம் அவங்களா, இவங்களான்னு” என்று கேட்க, பாரதி எழுந்து தோட்டம் வந்துவிட்டார்.

இவர்களின் வழமையான  பேச்சை விட ப்ரவீனின் திருமண பேச்சு தான் அவரை நிலை கொள்ளாமல் செய்தது.

என் இத்தனை வருட கனவு, ஏக்கம், ஆசை எல்லாம் என்னவாவது?

இனியும் பொறுமை காக்க முடியாது. மாமியார் பற்றி நன்கு தெரியும். எடுத்த வேலையை முடிக்காமல் ஓய மாட்டாரே!

“என்னாச்சும்மா” ப்ரவீன் அம்மாவை தன் கண் பார்வையில் வைத்திருந்தவன் உடனே அவரிடம் வந்துவிட்டான்.

“ப்ரவீன்.. பாட்டி உன் கல்யாணம் பத்தி பேசுறாங்கடா” என்று பாரதி மகன் கை பிடித்து படபடத்தார்.

“அவங்களுமா” ப்ரவீனுக்கு  ஆயாசம்.

அவனுக்கு இப்போதான திருமணத்தில் ஒப்புதல் இல்லை. இரண்டு மூன்று வருடம் போகட்டும் என்பது தான். அம்மாவிற்காக மட்டுமே சம்மதம் சொல்லியிருந்தவனுக்கு, பாட்டியும் ஆரம்பித்துவிட்டதில் எங்காவது ஓடி விடலாம் போலானது.

“பொங்கல் முடியவும் அங்க என்ன நிலவரம்ன்னு பார்த்துட்டு உடனே ஏதாவது செய்யணும்” என்றார் பாரதி உறுதியாக.

நோட்டீஸ் எல்லாம் அனுப்பி இந்தளவு போக வேண்டுமா? என்று அம்மாவிடம் கேட்க எப்போதும் போல் வார்த்தைகள் வந்துவிட்டது. ஆனால் கட்டுப்படுத்தி கொண்டான் மகன். அம்மாவுக்காக. பாசம் அதிகமே.

பாரதி தொடர்ந்த நாட்களில் தீவிர சிந்தனையிலே இருந்தார். மாமியார், நாத்தனார் பேச்சுக்களை அவர் கண்டு கொள்ளவில்லை. புதிய நிலத்தில் இரு குடும்பமும் சேர்ந்து பொங்கலை கொண்டாடிவிட்டு வீடு திரும்பினர்.

Advertisement