Advertisement

இரண்டு நாளில் முடிவானது போல் சென்னை கிளம்பினர். தணிகைவேல் கொடுத்த சீர் ஒன்று விடாமல் பத்மா ஏற்றிவிட்டார். ராமமூர்த்தி, அனுஷா குடும்பம் வர, வேனில் பயணித்தனர்.

முந்தின இரவு சென்று சேர, இவர்களுக்கு முன் தணிகைவேல் குடும்பம் அங்கிருந்தது. ஆர்த்தி தவிர்த்து, ராஜேஸ்வரி, வேணி உட்பட,

பெண் “பாட்டி” என்று அவரை அணைத்து கொள்ள, ராஜேஸ்வரிக்கு கண்கள் கலங்கி போனது. “கண்ணு” என்று அவள் முகம் வழித்து முத்தம் கொடுத்தார். வேணி அண்ணன் மகளிடம் நலம் விசாரித்தார்.

இவர்களுக்கு வேலை ஒன்றும் இல்லை. ஆட்களின் மூலம் ஏற்பாடு எல்லாம் முடிந்தது. பெயிண்ட் வரை அடித்து புதிதாக மாற்றியிருந்தார் தணிகைவேல். விடிந்ததும் ஜனக்நந்தினி கையால் பால் காய்ச்சி பூஜை முடித்தனர்.

காலை உணவு முடிய, இரண்டு பெண்கள் வந்தனர். “இவங்க குக், இவங்க வீட்டு வேலைக்கு வழக்கமா வரவங்க” என்று ரகுராம்க்கு சொன்னார் மாமனார்.

பத்மா திரும்பி கணவரை பார்த்தார். மகன் எப்படி சமாளிப்பான் என்ற கவலை அதில். அருணகிரி முதலிலே சொல்லிட்டார். “நீ ஏதும் பேசாத. அவன் சமாளிப்பான். தேவைப்பட்டா நாம பார்த்துப்போம்” என்று.

பாரதிக்கு அண்ணியின் கவலை புரிந்தது. தணிகைவேலிடம் பலமுறை பேசியும் பயனில்லை. மகளிடம் தான் சிறிது நாள் சென்று பேச நினைத்திருந்தார்.

அன்றைய நாள் முழுதும் அங்கிருந்து மறுநாள் இரு குடும்பமும் கிளம்பினர். ஜனக்நந்தினிக்கு எல்லாம் கிளம்பவும் முகம் வாடிப்போனது.

அமைதியாக ஏதேதோ செய்து கொண்டிருந்தாள். ரகுராம், “சும்மா எதாவது செய்றதுக்கு என்னை கவனிக்கலாம் இல்லை” என்று கேட்டான்.

“நான் கவலையா இருக்கேன்” என்றாள் மனைவி.

“என்கூட இருக்கிறதுக்கா?” அவன் கேட்க, முறைத்தாள் ஜனக்நந்தினி. உடன் கண்களில் கண்ணீரும்.

ஆறுதலாக அவள் கை பிடித்திழுத்து கட்டி கொண்டான். மாலை வரை ஒரு மாதிரி இருந்தவள் தேறி கொண்டாள். இரவு அவர்களுக்குறிய வகையில் கழிந்தது.

மறுநாள் ரகுராம் தன் பிளாட் காலி செய்து வந்தான். “நம்ம கார் எடுத்துட்டு போயிருக்கலாம் இல்லை” என்று கேட்க,

“இவ்வளவு வரும்ன்னு நினைக்கலைடி” என்றான் டேக்சியில் இருந்து எடுத்தபடி. அன்று முழுதும் அவன் உடமைகளை செட்டில் செய்தார்கள்.

மிச்சமிருந்த விடுமுறை நாட்கள் மகிழ்ச்சியுடன் கழிய, இருவரும் தங்கள் பணிக்கு திரும்பினர்.

காலை உணவுடன், மதிய உணவும் தயாராக இருந்தது. முதல் பிரிவு என்பதால், இருவரும் அளவில்லா முத்தத்துடன் சுணங்கி கொண்டே சென்றனர். மாலை ஜனக்நந்தினி சீக்கிரம் வந்துவிட, ரகுராம் எப்போதும் போல் காபிஷாப் சென்றுவிட்டான்.

“எங்க இருக்கீங்க” என்று மனைவி போன் செய்து கேட்க, சொன்னவன், “பக்கத்துல தான் இருக்கேன். சீக்கிரம் வந்திடுவேன்” என்று வைத்தான்.

சீக்கிரமே பத்து மணி. காத்திருந்து மனைவி கடுப்பானாள். ரகுராம் குளியல் போட்டு வந்து உணவுண்டான். முகம் தூக்கி வைத்திருந்த மனைவியை, கொஞ்சி, கெஞ்சி, மிரட்டி, முத்த லஞ்சம் கொடுத்து சமாதானம் செய்தான்.

மறுநாள் ரகுராம் ஆபிஸ் கிளம்பும் நேரம், மனைவியை தன் கைவளைவுக்குள் நிறுத்தினான். “இன்னைக்கும் லேட் ஆகும். தினமும் இப்படி இருக்கும். நேத்து மாதிரி மேடம் முகம் தூக்காதீங்க” என்றான்.

“தூக்க மாட்டேன். நீங்க கிளம்புங்க. உங்களுக்கு தான் தூரம் போகணும்” என்றாள் காலர் சட்டையை நீவியபடி.

“ம்ம்ஹ்ம்”

“கஷ்டமா இருக்கா. நாம உங்க ஆபிஸ் கிட்ட வீடு பார்க்கலாமா?” என்று கவலையாக கேட்டாள்.

“அவ்வளவு இல்லைடி” என்றான் அவன் முத்தமிட்டு.

“நான் இது யோசிக்கலை. சாரி” என்றாள் வருந்தி.

“எனக்கு ஒன்னும் பிரச்னையில்லை. காபி ஷாப் இங்க சுத்தி மூணு இருக்கிறதால அந்த நாள்ல நைட் வீட்டுக்கு சீக்கிரம் வந்திடுவேன். பிளஸ்சும் இருக்கு. நீ ஒர்ரி பண்ணிக்காத” என்றான்.

ஜனக்நந்தினி தலையாட்டி கொண்டாள். ரகுராம் கிளம்பினான். ஒரு மணி நேரம் செல்ல வேண்டும். ஜனக்நந்தினி மெல்ல கிளம்பினால் போதும். அவள் காரிலே சென்றுவிடுவாள்.

ரகுராம் சொன்னது போல் தினமும் இரவு லேட்டாக தான் வந்தான். ஓரிரு நாட்களில் பதினொன்று கடந்தது. ஜனக்நந்தினி குட்டி தூக்கமே தூங்கிவிடுவாள்.

ஒரு வாரம் சமாளித்து கொண்டாள். வார இறுதி நாளில் கணவன் உடன் இருப்பான் என்று மகிழ, அவன் காலையிலே கிளம்பினான்.

“எங்க?” என்று இவள் அதிர்ந்து கேட்க,

“காபி ஷாப் தான்” என்றான்.

“வீட்ல இருக்க மாட்டிங்களா?” என்று கேட்டவளிடம் அளவில்லா ஏமாற்றம்.

 ரகுராம் வாட்ச் கட்டுவது நிறுத்தி அவளை பார்த்தான். கண்கள் கலங்கி போய் இருந்தது. “ஹேய் என்னடி” என்று அணைத்து கொண்டான்.

“நீங்க என்னோட இருப்பீங்கன்னு நினைச்சேன்” என்றாள் ஏங்கி.

ரகுராம்க்கு அந்த நொடிகளை கடக்கவே மிகவும் சிரமமாக இருந்தது. இவளுக்கு எப்படி சமாதானம் சொல்வேன்? திணறினான்.

மௌனமாக கைக்குள் வைத்திருக்க, மனைவி நிமிர்ந்து அவனை பார்த்தாள். கணவன் முகம் கசங்கி போயிருந்தது.

ஜனக்நந்தினி திரும்ப அவன் நெஞ்சில் முகம் சாய்த்து கொண்டாள். ரகுராம் போன் ஒலிக்க, அவளே விலகி எடுத்து கொடுத்தாள். காபிஷாப் மேனேஜர் தான்.

“பேசுங்க” என,

“இருக்கட்டும். விடுடி” என்றான்.

“ம்ப்ச். பேசுங்க” என்று ஆன் செய்ய,

“ராம் எங்க இருக்கீங்க. நான் ஷாப்ல உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்” என்றார்.

ரகுராம் கண்களை சுருக்கி புருவம் அழுத்தினான். “ராம்.. ராம்” என்று அவர் அழைக்க, கட்டே செய்துவிட்டான்.

“என்ன பண்றீங்க? நான்.. நான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன். நீங்க கிளம்புங்க” என்றாள் ஜனக்நந்தினி.

இடையில் திருமண விடுப்பு எடுத்திருந்ததால், வேலை அதிகமாக இருந்தது. ரிப்போர்ட் அனுப்பியாக வேண்டும். மனைவி வேறு கண் கலங்குகிறாள். என்ன செய்ய என்று தவித்தான்.

“ப்ளீஸ். நீங்க அவருக்கு பேசிட்டு கிளம்புங்க” என்று ஜனக்நந்தினி சொல்ல,

“நீ அழ மாட்ட தானே” என்று கேட்டான்.

“கண்டிப்பா மாட்டேன். நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்க போறேன். நீங்க கிளம்புங்க” என்று கிளப்பிவிட்டாள்.

இன்று அவனுடன் வெளியே செல்லலாம் என்று ஆட்களை மறுத்திருந்தாள். மதிய உணவு செய்யவில்லை. சாப்பிடவும் இல்லை. அழுகை அழுகையாக வந்தது. கணவன் ஏக்கம் அவளை வாட்டியது.

ரகுராம்க்கு மனைவியை புரியாமல் இல்லை. அவனும் அதே ஏக்கத்தில் தானே இருக்கிறான். மனைவியுடன் இருக்க கழுத்து வரை ஆசை. ஆனால் எதார்த்தம் என்ற ஒன்று உள்ளதே.

உழைக்க வேண்டும். ஓட வேண்டும். ஓடி கொண்டே இருக்க வேண்டும். நின்றால் மொத்தமாக நின்று விடும். பயமே வாழ்க்கையை பற்றி. கடமைகள் கூடி விட்டது.

‘அதற்காக இவளை ஏங்க வைக்க கூடாது. இனி ஒரு நொடி கிடைத்தாலும் அது அவளுக்கு தான்’ என்று முடிவெடுத்து கொண்டவன், அன்று வேகமாக வேலை முடித்து, சீக்கிரம் ஓடி வந்துவிட, மனைவி கொஞ்சம் முகம் தெளிந்தாள்.

“மதியம் என்ன சாப்பிட்ட” என்று கேட்க,

“நூடுல்ஸ்” என்றுவிட்டாள்.

“சரி நான் நைட் உனக்கு சமைச்சு கொடுக்கிறேன். அவங்களை வர வேணாம்ன்னு சொல்லிடு” என்றவன், அசைவம் செய்து கொடுத்தான்.

ஜனக்நந்தினி விரும்பி சாப்பிட்டாள். கணவன் தனக்காக சமைத்த உணவு என்பது அதன் ருசியை கூட்டியது. ரகுராம் அவளை ஊட்டிவிட சொல்லி உண்டான்.

அவளுடனே, அவளுக்காகவே.. இருக்கும் நேரங்களை கொடுத்தான். ஆனாலும் போதவில்லை. மறுநாள் வேகமாக விடிந்துவிட்டது.

ரகுராம் அலுவலகம் கிளம்ப, அவனை பின் பக்கமாக அணைத்து கொண்டாள். “சட்டையை கசக்காதடி. எல்லாம் ஓட்டுறாங்க” என்றான்.

புதுமாப்பிள்ளை என்பதால் கேலி, கிண்டல் சொல்லவா வேண்டும். “என்னையும் தான் கேட்கிறாங்க. ஏன் உதடு எப்போவும் வீங்கியே இருக்குன்னு” என்று கணவனின் கழுத்தில் முத்தம் வைத்தபடி சொன்னாள்.

“கிளப்பி விடாதடி” என்றவன், அவளை முன்னிழுத்து அணைத்து கொண்டான்.   சிறிது தாமதாகவே அன்று அலுவலகம் சென்றடைந்தான்.

தொடர்ந்த நாட்கள் இப்படியே செல்ல, ரகுராம் அன்று இரவு பதினொன்று ஆகிவிட்டது வீடு வர. குளிக்க செல்லாமல், உணவுண்ண அமர்ந்துவிட்டான். ஜனக்நந்தினி எடுத்து வைக்க, “சாப்பிட்டியா” என்று எப்போதும் போல கேட்டு அவளுக்கு இரண்டு வாய் கொடுத்து தான் சாப்பிட்டான்.

“இன்னும் ஒரு இட்லி” என்று வைக்க, அதில் பாதியை அவளுக்கே கொடுத்து, முடித்து கொண்டான்.

அறைக்கு வர, மனைவியை இழுத்து மேலே போட்டு கொண்டான். தன்னை முத்தமிட்டு ஓய்ந்தவனை ஜனக்நந்தினி   தலை கோதி கொடுக்க, தூங்கிவிட்டான்.

இவளுக்கு தூக்கம் வருவேனா என்றது. மறுநாள் காலையிலே காபி ஷாப் மேனேஜர் அழைத்தார். ரகுராம் தலை வாரி கொண்டே போனை ஸ்பீக்கரில் போட்டான்.

“ராம்.. நான் சொன்னதை நீ யோசிச்சியா?” என்று கேட்டார்.

“இல்லை சார். எனக்கு அசிஸ்டன்ட் எல்லா வேண்டாம்” என்றான்.

“புரிஞ்சுக்கோ ரகு. ஒர்க் லோட் ரொம்ப வைச்சுக்காத. ஸ்டாக் எடுக்க மட்டுமாவது ஆள் இருந்தா உனக்கு நல்லது தானே”

“மேனேஜ் பண்ணிப்பேன் சார். நீங்க இன்னைக்கு வேளச்சேரி வாங்க?” என்று வைத்தான்.

ஜனக்நந்தினி எல்லாம் கேட்டபடி அமைதியாக இருந்தவள், “அவர் சொல்றது சரி தானே. அசிஸ்டன்ட் வைச்சுக்கோங்க” என்றாள்.

“எனக்கெதுக்குடி அசிஸ்டன்ட். அவ்வளவு கஷ்டமான வேலை ஒன்னும் நான் பார்க்கலை” என்று அவளின் நெற்றி முட்டி சிரித்தான்.

சிரிப்பு என்றால் கண்ணை எட்ட வேண்டும். இவனுக்கு அது சோர்ந்து தான் இருந்தது. அளவுக்கதிகமான ஓட்டம். கவனித்து தான் நேற்று மேனேஜர் சொன்னதே, மறுத்துவிட்டான்.

இத்தனைக்கும் ஜனக்நந்தினி சத்துள்ள காய்கறிகள், அசைவம், பழங்கள், ஜுஸ் என்று கேர் எடுத்தாலும் உழைப்பு, அலைச்சல் தாங்கவில்லை.

உடல்  ஓய்வுக்கு கெஞ்சுவது  நன்றாக புரிந்தது. என்ன இளைப்பாறும் இடம் தான்  கண்ணுக்கு தெரியவில்லை.

 ‘ஒரே மாதிரி வேலை. மெஷின் கூட வெடிச்சிருக்கும். உனக்கு அந்த பாக்கியம் கூட இல்லைடா  ரகுராமா!’ தன்னையே வெறுத்து கொண்டு வேளச்சேரி காபி ஷாப்பிற்குள் நுழைந்தான்.

வேலை செய்பவர் எதோ சொல்ல, நின்று கவனித்து கேட்கவில்லை. ஸ்டாக் எடுக்கும் இடம் சென்றான். ஸ்டார் ரூமில் நுழைய, கிட்சன் அனல் அங்கு வரை அடித்தது.

“ச்சு” என்று கழுத்தை தேய்த்து கொண்டவன் திரும்ப அவன் மனைவி. கனவோ என்று பார்க்க, அவளே தான்.

ஸ்டாக் கணக்கெடுத்து கொண்டிருந்தவள், யாரோ என்று திரும்பி பார்க்க ரகுராம்.

கணவனை கண்ட நொடி, ‘பளிச்’ சிரிப்பு பெண்ணிடம்.

 “வந்துட்டீங்களா” என்றாள்.

காதோரம் வேர்வை வடிய, அவனை நெருங்கினாள்.

“என்னை உங்க அசிஸ்டண்டா வைச்சுப்பீங்களா?” என்று கண்ணடித்து கேட்க, ரகுராம் தொண்டை வறண்டு போனது.

“வேலை தெரியாது. சொல்லி கொடுத்தா கத்துப்பேன்” என்றாள்.

லேப் பேக் கையில் இருந்து வழுவி கீழே விழுக, “ஏங்க” என்று பிடித்தாள் பெண்.

என்னமோ சொன்னாள். காதுகள் அடைத்து கொண்டதா? கேட்கவில்லை.

“என்னங்க” என்று அவன் தோளில் கை வைத்த நொடி, கணவனின் அணைப்பில்  இருந்தாள்.

அழுத்தம் இல்லை. இறுக்கம் இல்லை. நெருக்கம் மட்டுமே. அவளின் பின் தலைக்குள் விரல் நுழைத்து, இடையை வளைத்து தன் நெஞ்சில் அவளை சாய்த்திருந்தான்.

எனக்கென வந்த தேவதையே

சரிபாதி நீயல்லவா!

நடக்கையில் உந்தன்  கூட வரும்

நிழல் போலே  நானல்லவா!

கண்ணன் கொண்ட ராதையென

ராமன் கொண்ட சீதையென

மடி சேர்ந்த பூரணமே!

மனதில் வீசும் மாருதமே!

Advertisement