Advertisement

ரகுராம்க்கும், பாரதிக்கும் ஏதோ புரிந்தது. ஜனக்நந்தினி மிரட்சியுடன் அம்மா கை பிடித்து கொண்டாள்.

“உன்னை பேசாதன்னு சொல்லி தானே கூட்டிட்டு வந்தேன்” ஆர்த்தியின் அப்பா அவரின் மனைவியை சத்தம் போட்டார்.

“எல்லாம் என்னையே திட்டுறீங்க. நான் தப்பா ஒன்னும் சொல்லலை. இருக்கிறதை தான் சொன்னேன்” என்றார் அவர்.

“என் பொண்ணு நேத்து தாலி கட்டி, இன்னைக்கு அம்மா வீடு வந்திருக்கா. இப்போ இந்த பஞ்சாயத்து எல்லாம் தேவையில்லைன்னு நான் நினைக்கிறன். பாரதி எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வை. பாப்பா நீ மாப்பிள்ளையை சாப்பிட கூட்டிட்டு வா” என்றார் தணிகைவேல் வீட்டின் தலைவராக.

“இரு வேலா இந்தம்மாக்கு என்ன தைரியம் இருந்தா என் மருமகளை பேசியிருக்கும். இன்னைக்கு இரண்டுல ஒன்னு பார்க்காம விட மாட்டேன்” ராஜேஸ்வரி வரிந்து கட்டி கொண்டு நின்றார்.

“இங்க பாருங்கம்மா அவங்க அந்தளவு வசதியில்லைன்னு நீங்க சொன்னதை தான் நான் சொன்னேன். சம்மந்தியம்மா அவங்க அண்ணா மகனை மாப்பிள்ளையா கொண்டு வந்துட்டாங்கங்கிறதுக்காக என் மகளுக்கும், எனக்கும் இங்க மரியாதை இல்லாம போயிடுச்சா” என்றார் அவர்.

“நான். நான் சொன்னா.. நீ பேசலாமா? நான் ஏதோ பெரியவ”

“அத்தை” என்று இடையிட்டார் பாரதி.

“இதுவரைக்கும் யாரும் பேசாததை, அவங்க பேசியிருக்க போறதில்லை. இப்போ இந்த பேச்சை விட்டு நாம விருந்தை கவனிப்போம். கெஸ்ட் வந்திருக்காங்க. நிறைமாசமா இருக்க மருமக இன்னும் சாப்பிட்ட மாதிரி தெரியல. நேத்து கல்யாணம் முடிச்சவங்களையும் எந்த வம்புக்காகவும்  காக்க வைக்க முடியாது. முதல்ல எல்லாம் சாப்பிட வாங்க” என்றார் பாரதி வீட்டின் தலைவியாய்.

“ம்மா.. நீங்க கொஞ்சம் இங்க வாங்க” வேணி அவரின் அம்மாவை கை பிடித்து அழைத்து சென்றார்.

ரகுராம் முன் ‘என் வீட்டில் நான் வைத்தது தான் சட்டம். எனக்கு நீ வணங்கியே ஆக வேண்டும்’ என்று காட்ட நினைத்ததின் பலன் இதெல்லாம்.

தணிகைவேல்க்கு இந்த முறை அம்மா மேல்  அதிகமான அதிருப்தி. பெரிய மனுசின்னு சொல்லிக்கிறாங்களே தவிர, எப்போ எதை பண்ணனும்ன்னு தெரியல. உள்ளுக்குள் கோவம்.

அடக்கி கொண்டவர், எல்லோரையும் டேபிளில் அமர வைத்தார். மிகப்பெரிய டேபிள் என்பதால் பிரச்சனையில்லை. ஆர்த்தியின் அப்பாம்மா மறுக்க, அவர்களையும் விடாமல் அமர வைத்தனர்.

ஆர்த்தியின் அம்மாவிற்கு முள்ளாய் இருக்கை குத்தியது. ப்ரவீன் மனைவி பக்கம் திரும்பாமல் பக்கத்தில் அமர, ஆர்த்தி டேபிளுக்கு அடியில் அவன் கை பிடித்தாள். அவன் இழுக்க, ஆர்த்தி கண்களால் ப்ளீஸ் என்றாள்.

அந்த  நிலையில் அவளை தொடர்ந்து அழ வைக்கவும் அவனுக்கு மனமில்லை. நிச்சயம் அவளின் அம்மா தான் அவளை நிறுத்தியிருப்பார் என்று தெரியும் என்பதால், ப்ரவீன் அவள் கை கோர்த்து தட்டி கொடுத்தான்.

ராஜேஸ்வரி நடு இருக்கையில் அமர்ந்திருக்க, வேணி அவருடனே இருந்தார். ரகுராம்,  ஜனக்நந்தினி முன் வெள்ளி தட்டை வைக்க, “எனக்கு வேண்டாம்” என்றான் ரகுராம்.

“ஏன்..? ஏன் என்னாச்சு” தணிகைவேல் தான் வேகமாக கேட்டார்.

“எனக்கு வாழை  இலை இருந்தா போதும்” என்றான் அவன்.

பாரதி அவன் அருகில் வந்தவர், “ஏன் வேணாம் சொல்ற? என்னாச்சு?” என்று கேட்டார்.

“இலை போடுங்க” என்றான் அவரிடம் முடிவாக.

பாரதிக்கு அவனின் புதிதான அழுத்தத்தில் மனது பிசைந்தது. வெள்ளி தட்டை எடுத்துவிட்டு, தோட்டத்தில் இருந்து வந்த  இலை விரிக்கப்ட்டது. “எனக்கும்” என்று ஜனக்நந்தினியும் வெள்ளி தட்டை நகர்த்திவிட்டாள்.

“யாருக்கு விருந்தோ அவங்களே வெள்ளி தட்டுல சாப்பிடல. நமக்கு மட்டும் என்ன, எங்களுக்கும் இலை போடுங்க” என்றார் சுந்தரம்.

அதன்படி எல்லோருக்கும் வாழைஇலை தான்,  ராஜேஸ்வரி உட்பட. தன்னிடம் இருந்து எடுத்து சென்று வெள்ளி தட்டை பார்த்து ரகுராமை பார்த்தார்.

பல வருடங்களுக்கு முன்பு அவர் செய்தது நினைவிற்கு வந்தது.

ரகுராம் அவர் பக்கமே திரும்பவில்லை. அவனுக்குள் தகிப்பு. மனதோடு உடலும் விறைத்தது. அப்பா, சித்தப்பா எழுந்த டேபிளில் நான் அமர்ந்து சாப்பிட தான் வேண்டும் என்று அவனுக்கு தெரியும்.  ஆனால் நடக்கும் போது, வெப்பம் இறங்குவேனா என்றது.

ராஜ விருந்து அவனுக்கு மண்ணாக தெரிந்தது. எந்த சுவையும் உணரவில்லை. மனைவி, அத்தைக்காக பொறுத்து கொண்டான்.

அருணகிரி சொன்ன, “என் மகன் விட்டு கொடுக்கிறது ரொம்ப பெருசு” இந்த வார்த்தை, அதன் முழுமையான அர்த்தம் அந்த நொடிகள் தான்.

ஜனக்நந்தினிக்கு அவன் உடல் மொழியில் உணவு இறங்குவேனா என்றது. யாரையும் பார்க்கவில்லை அவன். சுந்தரம் ஏதோ கேட்டதற்கு கூட தலை மட்டுமே அசைத்தான்.

ராஜேஸ்வரி, ஆர்த்தி அம்மா பேச்சு அவனை பாதித்துவிட்டதா? புதுப்பெண்ணுக்கு தவிப்பு.

ரகுராம் அமைதியில், உணவும் அமைதியாக முடிந்தது. தணிகைவேல் கவனித்து கொண்டிருந்தவர், மகளின் தவிப்பில் கவலை கொண்டார்.

பாரதிக்கு சொல்லவே வேண்டியதில்லை. அவன் மனசுல என்னமோ இருக்கு, என்னன்னு தெரியலையே? கேட்டாலும் சொல்ல வாய்ப்பில்லை.

ரகுராம் டேபிளில் இருந்து எவ்வளவு வேகமாக எழ முடியுமோ எழுந்துவிட்டான். அந்த வீட்டின் உணவு அவன் வயிற்றை நிரப்பவில்லை.

எல்லோரும் ஹாலில் அமர, இனிப்பு கொடுக்கபட்டது. ரகுராம் மறுத்துவிட்டான். வேணி, ஆர்த்தி தவிர மற்றவர்கள் கிளம்பினர். ப்ரவீனுடன் இருக்க வேண்டும் என்று ஆர்த்தி நின்றுவிட, வேணிக்கு ராஜேஸ்வரி அச்சம்.

“பாப்பா.. மாப்பிள்ளையை கூட்டிட்டு ரூம் போ, அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார் தணிகைவேல்.

ஜனக்நந்தினி அதற்காகவே காத்திருந்தவள், கணவனுடன் அறைக்கு வந்துவிட்டாள். ரகுராம் அவளின் ரூமை பார்க்க, லாக் செய்து வந்தவள், அவன் கை பிடித்து கொண்டாள்.

“அப்செட்டா இருக்கீங்களா?” என்று கேட்டாள்.

“இல்லையே” என்றவன், அவளின் இடையை வளைத்து தன்னோடு நெருக்கமாக நிற்க வைத்தான்.

“எனக்கு தெரியும். நீங்க நார்மலா இல்லை” என்றாள் மனைவி.

ரகுராம் அவள் நெற்றி முட்டி, முத்தம் வைக்க, “அண்ணியோட அம்மா பேசினது தப்பு, அவங்க அப்படி பேசியிருக்க கூடாது” என்றாள் கொஞ்சம் கோவமாக.

“அம்மா மேல ரொம்ப பாசம் போலயே” என,

“இப்போ என் வீடு, அவங்க எப்படி அப்படி பேசலாம்” என்றாள் அவள்.

ரகுராம் இறுக்கம் அப்படியே கரைந்து போனது. அணைப்பை கூட்டியவன், அவள் கன்னத்தில் முத்தமிட்டு செல்லமாக கடித்து வைத்தான்.

“ஸ்ஸ்” என்ற பெண் தேய்த்தபடி, “அதுக்கெல்லாம் நீங்க அப்செட் ஆக கூடாது. இனி நான் பேசிக்கிறேன் சரியா?” என்றாள்.

“நான் அதுக்கெல்லாம் அப்செட் ஆவேன்னு நினைச்சியா? நாம மிடில் கிளாஸ் தான். அதை அக்சப்ட் பண்றதுல என்ன கஷ்டம் இருக்கு?”

“ஆனா அவங்க நாம கஷ்டப்படுற மாதிரி”

“அவங்க மைண்ட் செட் அது. அவ்வளவு தான். நாம எப்படி, என்னன்னு நமக்கு தான் தெரியும். யாரோ ஒருத்தருக்கு  நம்மோட மதிப்பை நாம ஏன் ப்ரூப் பண்ணனும்?”

“அப்போ நீங்க அதுக்கு அப்செட் ஆகலையா?”

“நிச்சயம் மாட்டேன். நம்மோட  வேரை நானே குறைச்சு மதிப்பிட மாட்டேன். அது எவ்வளவு ஸ்ட்ராங்க்ன்னு நமக்கு தெரியுமா, அவங்களுக்கு தெரியுமா?”

“நமக்கு தான் தெரியும்”

“அதே தான். எல்லோரோட பார்வைக்கும் நீ பதிலாக முடியாது. நான் என்னை அக்சப்ட் பண்றேன். என்னோட லைப் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக நான் பாடுபடுவேன். உழைப்பேன், போராடுவேன். இது எனக்காக மட்டும் தான், மத்தவங்களுக்கு காட்ட இல்லை. என் லைப் இது. எனக்கு தானே”

“அப்போ நான்”

“மக்கு.. அந்த எனக்குலே நீ, நம்ம பேமிலி எல்லாம் தான்” என்றான் மூக்கு நுனி கடித்து.

“அப்போ ஏன் சாப்பிடும் போது அப்படி இருந்தீங்க?”

“எப்படி இருந்தேன்” அவளை மடியில் அமர வைத்து கட்டிலில் அமர்ந்தான்.

“எனக்கு சொல்ல தெரியல. ஒரு மாதிரி கோவமா, பிடிக்காம, யாரையும் பார்க்காம, பேசாம”

“தெரியலைன்னுட்டு  இவ்வளவு சொல்ற”

“நீங்க என் பக்கம் கூட திரும்பல” என்றாள் குறையாக.

“அப்புறம் உன்னை பார்த்தா சாப்பாடு எப்படி சாப்பிட முடியும்?”

“ஏன் நான் என்ன பண்ண?”

“நாம ஒன்னும் பண்ணலைங்கிறது தான்”

“நீங்க தானே தூங்க வைச்சீங்க” அவன் கழுத்தை கட்டிக்கொண்டு சொன்னாள்.

“உன் வீட்ல பாப்பா, பாப்பான்னு கூப்பிட்டு நானும் அப்படியே நினைச்சுட்டேன் போல”

“நம்பிட்டேன். கேடி நீங்க” என, ரகுராம் வாய்விட்டு சிரித்தான்.

“பர்ஸ்ட் டைம் உங்களை பார்த்தப்போ இந்த சிரிப்பு தான் நீங்க ஓகேன்னு தோண வைச்சது” என்றாள் பெண் குறும்பாக.

“மேடம் என்ன சொல்ல வரீங்க. உங்க அளவுக்கு நான் இல்லைன்னா” அவன் கைகள் இடையில் ஊர்ந்தது.

“அப்போ அப்படி. இப்போ இல்லை” பெண் நெளிந்தாள்.

“இப்போ உனக்கு மேட்ச்சா இருக்கேனா?”

“சூப்பர் மேட்ச்”

ரகுராம் தாங்காமல் அவள் இதழை அணைத்து கொண்டான். பெண் சிலிர்த்து போனவள், அவன் பின் முடியை இறுக்கமாக பிடித்து கொண்டாள்.

“நம்ம வீட்டுக்கு போற வரை இது தான்” என்றான் அவள் இதழ் வருடி தாபத்துடன்.

“ஏன்?” பெண்ணின் கண்கள் கேள்வி கேட்டது.

“எனக்கு இங்க நம்ம லைப் ஸ்டார்ட் பண்ண வேணாமே” என்றான்.

“உங்களுக்கு என்னமோ இங்க பிடிக்கலை. என்னன்னு எனக்கு சொல்ல மாட்டீங்களா?”

“எனக்கு இந்த வீட்டு பொண்ணை பிடிச்சிருக்கு. அதைவிட வேறென்ன பிடிக்கணும்ங்கிற?” என்றவன், அவளின் இதழில் அழுத்தமாக இதழ் ஒற்றி எடுத்தான்.

பெண் பதில் சொல்லாமல் அவனை பார்த்தாள். “என்னடி” என்றான் கன்னத்தோடு கன்னம் இழைத்து.

நிச்சயம் அவனுக்குள் ஏதோ இருக்கிறது. வெறுப்பா, வருத்தமா, கோவமா கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் எதுவாக இருந்தாலும் பெண்ணுக்கு அது பயத்தை கொடுத்தது.

“எனக்கு அப்பா, இவங்க எல்லாம் வேணும்” என்றாள்.

ரகுராம் முகம் தள்ளி வைத்து அவளை பார்க்க, “என்னை.. நான் இங்க டச்ல இருக்க.. இருக்கலாம் தானே?” என்று கேட்டுவிட, கணவன் முகம் இறுகிவிட்டது.

“நான் உன்னை இவங்ககிட்ட இருந்து பிரிச்சிடுவேன்னு நினைக்கிறியா?”

“இல்லை நீங்க இப்படி இருந்தா நானே.. நானே. எனக்கு மட்டும் எப்படி ஒட்ட முடியும்?” என்றாள் கலங்கிய குரலில்.

ரகுராம் புருவங்களை சுருக்கி அழுத்தி கொண்டான். ஜனக்நந்தினி அவன் மடி விட்டு விலகி அமர்ந்தாள்.

சில நிமிடங்கள் அப்படியே செல்ல, “நாளைக்கு நாம ஊட்டி போலாம்” என்றான்.

“ஏன்.. இங்க”

“புரிஞ்சுக்கோடி.. நாம போய்ட்டு,  மறுநாள் வந்துடலாம்” என்றான்.

‘இங்க நான் நானா இருக்க மாட்டேன்!’ புரிந்தது அவனுக்கு. இதை அவளிடம் சொல்லி மேலும் அவளை கலங்க வைக்க முடியாதே!

Advertisement