Advertisement

இன்று ஆர்த்தியை பார்க்க சென்ற போது  அவன் மாமியார், “உங்க அம்மாக்கு அங்க வசதி எல்லாம் இருக்குமா மாப்பிள்ளை. நம்மளவு அவங்க இல்லைன்னு கேள்விப்பட்டேனே. பிறந்த வீடு எப்படியோ, உங்க அம்மாக்கு மாமியார் வீடு நல்லா வசதியா அமைஞ்சிடுச்சு” என்று கேட்டிருந்தார்.

அந்த கோவத்திலே சாப்பிட கூட மறுத்து தான் கிளம்பி வந்திருந்தான். இங்கு ராஜேஸ்வரி அதற்கேற்றது போல பாரதியை பேச அவனுக்கு கோவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

“ண்ணா” என்றாள் தங்கை அவன் கை பிடித்து.

“ஒன்னுமில்லை பாப்பா” என்று அமர்ந்துவிட்டான்.

“ம்மா.. கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்கோங்க. அவளை பேசுறதை நீங்க நிறுத்தலைன்னா என் பிள்ளைகளுக்கு அப்பா இல்லாம போயிடுவேன் போல. எல்லோரையும் என்னை வெறுக்க வைச்சிடதீங்க” என்றார் தணிகைவேல்  வேண்டுதலாய்.

“வேலா நான் இருக்கிறதை தானே கேட்டேன். அதுக்கெதுக்கு இவ்வளவு கோவம்” ராஜேஸ்வரி கேட்க,

“நீங்க எப்போவும் சரி தான்ம்மா. நான் தான் தப்பு. ஒரு மகனா போயிட்டேன். அப்பா இல்லை. தொழில் கழுத்து வரைக்கும் இருக்கு. அம்மாக்கு மகனா நாம வேணும். நம்ம கடமையை விட்டுட கூடாதுன்னு பல்லை கடிச்சுட்டு எல்லாம் பொறுத்தாலும் என் பொண்டாட்டியை நீங்க பேசுறதை விட மாட்டீங்க இல்லை. எனக்காக கூட”

“வேலா நான்”

“நீங்க கண்டிப்பா புரிஞ்சுக்க மாட்டீங்கம்மா, எனக்கு தெரியும். உங்ககிட்ட நான் சண்டை போட்டுட்டேன். கெஞ்சிட்டேன், பேசி பார்த்துட்டேன். ஒரு பிரயோஜனமும் இல்லை. நீங்க அப்படியே தான் இருக்கீங்க. கடைசியா உங்க காலுல தான் நான் விழுகணும்”

“வேலா”

“அவங்க அம்மா பார்த்த மாப்பிள்ளையை அவ கட்டிக்கிட்டு போயிருந்தா கூட நிம்மதியா இருந்திருப்பாம்மா. என்னை கட்டிக்கிட்டு.. நான்”

“மச்சான். ஏன், விடுங்க” சுந்தரம் அவர் தோள் தட்டி சமாதானம் சொன்னார்.

“விட்டுட்டு தான் இருக்கேன் மாமா. இன்னும் எத்தனை வருஷத்துக்கு விடன்னு தான் தெரியல. என் ஒரு பொண்ணு கல்யாணம் பேசுறேன். அவ வாழ்க்கை பத்தி யோசிச்சு யோசிச்சே நெஞ்சடைச்சு நிக்கிறேன். ஆனா இவங்க. ம்ப்ச்”

“இப்போ என்ன வேலா உன் பொண்ணை உன் மச்சான் மகனுக்கு கொடுக்க நான் தடை சொல்ல கூடாது. அதானே. நான் அமைதியாகிட்டேன். நீங்க நடத்துங்க. நான் இனி வாயே திறக்க மாட்டேன்” என்றார் ராஜேஸ்வரி.

மொத்த பேருக்கும் வெறுத்து போனது. ஏன் வேணியும் அம்மாவின் பேச்சில் ஆயாசம் கொண்டார்.

“மச்சான். பெரியவங்க சரி சொல்லிட்டாங்க. நீங்க ஆக வேண்டியதை பாருங்க” என்றார் சுந்தரம்.

“மாமா”

“நான் சொல்றதை கேளுங்க. ஆரம்பிங்க போங்க” என்று முடித்துவிட்டார்.

இரண்டு நாள் சென்று, தணிகைவேலே மனைவியிடம் விஷயத்தை சொன்னார். பாரதிக்கு நம்பவே முடியவில்லை. “நீங்க உண்மையா தான் சொல்றீங்களா?” என்று திரும்ப திரும்ப கேட்டார்.

“உன் அண்ணா குடும்பத்தை வந்து பேச சொல்லு. முகூர்த்தம் குறிக்கலாம்” என்றார் தணிகைவேல்.

பாரதிக்கு மகிழ்ச்சியில் கண்களில் கண்ணீர் கட்டிவிட்டது. “என்ன பாரதி” என்றார்.

“ம்ம்ம்” என்றார் பாரதி வார்த்தை வராமல்.

“என்ன அழுறியா?” தணிகைவேல் கேட்க,

“இல்.. இல்லையே” என்றார் திக்கி.

“தெரியுது. கண்ணை துடைச்சிட்டு, தண்ணீர் குடிச்சுட்டு எனக்கு போன் பண்ணு” என்று வைத்தார்.

மஞ்சுளாவிற்கு பாரதியின் திடீர் அழுகை திகிலை கிளப்ப, “என்ன பாரதி” என்றார் படபடப்புடன்.

“இரு” என்று கை காட்டியவர், குடிக்க தண்ணீர் சைகையில் கேட்டார்.

மஞ்சுளா வேகமாக எடுத்து வந்து கொடுக்க, குடித்து தன்னை சமன் செய்தவர், “இவர்.. இவர் போன் பண்ணியிருந்தார். அண்ணா.. அண்ணாவை பேச வர சொல்றார்” என்றார் திரும்ப தேங்கிவிட்ட ஆனந்தத்துடன்.

“என்ன பேச? தெளிவா சொல்லு பாரதி”

“அதான்.. ரகு, பாப்பாக்கு” என்று மாங்கல்யம் கட்டுவது போல காட்ட,

“நிஜமா தான் சொல்றியா? இல்லை கனவு ஏதும் கண்டியா”

“உன்னை” என்று மஞ்சுளா தோளில் அடி போட்டவர், அவர் தலையிலே கை வைத்து சத்தியம் என்றார்.

மஞ்சுளா ஆர்ப்பரித்து, பாரதியை கட்டிக்கொள்ள, சத்தம் கேட்டு வந்த பத்மாவிற்கும் விஷயம் சொல்லப்பட, அவரும் இணைந்து கொண்டார். உடனே அருணகிரி, ராமமூர்த்திக்கு போன் போனது.

அருணகிரி நிதானமாக எதிர்கொள்ள, ராமமூர்த்தியோ, “தப்பிச்சார் உன் புருஷன்” என்றார்.

அன்றே பாரதி வீட்டுக்கு செல்ல நல்ல நாள் பார்த்துவிட, பாரதியும் தன் வீடு கிளம்ப தயாராகிவிட்டார்.

“இன்னும் ஒரு வாரம் இருக்கு. முன்னாடி நாள் போனா போதும்” என்று ராமமூர்த்தி நிறுத்திவிட்டார்.

ரகுராம் விஷயம் கேள்விப்பட்டு ஜனக்நந்தினிக்கு அழைக்க, பெண் எடுத்தவள், “கங்கிராட்ஸ்” என்றாள்.

“என்ன உன் அப்பா திடீர்னு சம்மதம் சொல்லிட்டார்” என்று கேட்டான் அவன்.

“பதிலுக்கு விஷ் பண்ணலைன்னா கூட போகுது. நன்றி கூட சொல்லலை” பெண் சுளிப்புடன் கேட்டாள்.

“நேர்ல இருந்தா கண்டிப்பா டைட்டா கட்டிப்பிடிச்சு விஷ் பண்ணியிருப்பேன். போன்ல போய் என்ன சுவாரசியம் இருக்கு” என்றான் அவன் சலிப்பாய்.

“நீங்க வர வர ரொம்ப பேசுறீங்க”

“உன்கிட்ட தானே. தப்பு ஒன்னுமில்லை”

“கல்யாணம் முடியாம தப்பு தான்”

“அப்போ உன் கழுத்துல தாலி கட்டிட்டு தப்பை சரி பண்ணிடலாம்ன்னு சொல்றியா?”

“நான் அப்படி சொல்லவே இல்லை”

“நான் அப்படி தான் எடுத்துப்பேன்”

“உங்ககிட்ட பேச முடியாது, நான் வைக்கிறேன்”

“இருடி.. அப்பா எப்போ முகூர்த்தம் வைக்கலாம்ன்னு கேட்கிறார். நீ சொல்லு” என்று கேட்டான்.

“நான் சொல்லனுமா?”

“ஆமா.. நீ தான் சொல்லணும். ஒரு மாசமா, இரண்டு மாசமா, ஆறு மாசமான்னு”

“ஏன் இத்தனை வருஷம் வெய்ட் பண்ணது உங்களுக்கு பத்தலையா?”

“எனக்கு நாளைக்கே கூட ஓகே தான். உனக்கு எப்படின்னு சொல்லு” என்றான் அவன்.

“சீக்கிரம் பண்ணிக்கலாம்பா. அப்புறம் திரும்ப யாராவது எதாவது ஆரம்பிச்சுட்டா” என்றாள் ஐயத்துடன்.

“அதுவும் சரி தான்” என்றவன், “கல்யாணம் கல்யாணம் தான். நீ மறந்திடாத” என்றான் குறும்பாக.

“என்ன சொல்றீங்க நீங்க” பெண் புரியாமல் கேட்க,

“எல்லா சடங்கும் சரியா நடந்தாகணும்ன்னு சொல்றேன்” என்றான் அவன்.

“என்கிட்ட ஏன் சொல்றீங்க. பெரியவங்க தானே செய்வாங்க”

“நாம செய்ற சடங்கு ஒன்னு இருக்கே”

“நாம என்ன?”

“மக்குடி நீ” என்றவன்,

‘ஜாதிமல்லி பூவே

தங்க வெண்ணிலாவே

ஆசை தீர பேசலாம்

முதல் நாள் இரவு..’ என்று பாட, ஜனக்நந்தினி கன்னங்கள் சிவந்து போனதுடன், போனையும் வைத்துவிட்டாள். ரகுராம் வாய்விட்டு  சிரித்து கொண்டான்.

அருணகிரி போன் செய்து மகனிடம் கேட்க, “அடுத்த மாசம் இருந்தா கூட ஓகே தானேப்பா” என்று அவரிடமே கேட்க, புரிந்து கொண்டார் தந்தை.

பாரதி அங்கிருந்த ஒரு வாரமும், இன்னும் மகிழ்ச்சியில் திளைத்து போனார். “அடுத்த முறை நான் இங்க வரும் போது  உங்க சம்மந்தி” என்றார் கெத்தாக.

“சம்மந்தியா.. அது  யாரு இங்க? நீ அம்மா வீடு தானே கேட்ட. அது மட்டும் தான் உனக்கு  கிடைக்கும். ஓடு” என்றார் ராமமூர்த்தி கிண்டலாக.

 “கல்யாணத்துக்கு எனக்கும் நீங்க தான் புடவை நெஞ்சு கொடுக்கணும்” என்று கேட்க,

“உன் மாப்பிள்ளையை கேளு. எங்களை ஏன் கேட்கிற?” என்பார் ராமமூர்த்தி. அருணகிரி தம்பி, தங்கை கலாட்டாவில் சிரித்து கொள்வார்.

பாரதி இங்கிருக்கும் போதே அவர் மூலம் மண்டபம் வரை எல்லாம் பேசி வைத்து கொண்டனர். ஜாதகம் பார்க்கவில்லை. நாள் மட்டும் ஜோசியர் மூலம் குறித்து கொண்டனர். தணிகைவேல் “நீங்க பார்த்து சொல்லுங்க” என்றுவிட்டார்.

பாரதி நன்றாக தேறி, உடலும் வைத்திருக்க, அழைக்க வந்த ப்ரவீனுக்கு ஆச்சரியம் தான். “செமயான அம்மா வீடு கவனிப்பு போல. பிள்ளைங்ளை விட்டுட்டு வந்தோம்ன்னு கவலை இல்லை” என்று கேட்டான். பாரதி சிரிக்க, அவரை திருப்தியுடன் அனுப்பி வைத்தனர் உடன் பிறந்தோர்.

மறுநாள் அருணகிரி தன் சொந்த பந்தங்களுடன் தணிகைவேல் வீடு சென்றார். அங்கும் அவரின் உறவுகள் நிறைந்திருக்க, ஜனக்நந்தினி சென்னை சென்று வந்திருந்தாள். பெரியப்பா தவறி இருக்க, மாமா எல்லாம் பார்த்து கொண்டார்.

பெரிதாக பேச ஒன்றும் இல்லை. முன்பே குறித்திருந்த முகூர்த்த நாளை சபையில் அறிவித்தனர். அதனுடன் பந்தி நடந்தது. ராஜேஸ்வரி உம்மென்று அமர்ந்திருந்தார். வேணிக்கு அம்மாவை சமாளிக்க முடியாமல் போனது.

ஒரு மாத இடைவெளி என்பதால் உடனே ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டனர். தாலி செய்ய கொடுத்து, பத்திரிக்கை ஆர்டர் கொடுத்தனர். மண்டபம் திருப்பூர். திருமணம் இரு வீட்டு செலவு என்று முடிவானது. ரகுராம் அதில் நிலையாக நின்றான்.

ஜனக்நந்தினி வீட்டில் இருந்தே வேலை பார்த்தாள். ஷாப்பிங், திருமண வேலை என்று நாட்கள் நொடியில் ஓடி மறைந்தது. முகூர்த்த பட்டுக்கான பிளவுஸ் மட்டும் இரு கலரில் வந்தது. “இது உன் விருப்பம்” என்றான் ரகுராம்.

“ரொம்ப சந்தோஷம்” என்று வைத்தாள் பெண்.

ரகுராம் இரண்டு நாள் முன்பு தான் ஊர் வந்தான். அருணகிரி தன் குடும்பத்துடன் தங்கை மகளுக்கு  நலங்கு வைக்க திருப்பூர் சென்று வந்தனர்.

முதல் நாள் ரகுராம் குடும்பத்துடன் மண்டபம் வந்தடைந்தான். அதன்பின் ஜனக்நந்தினி வந்தாள். மண்டபத்தினுள் நின்று அவளை பார்த்து கொண்டான். ஒருமாதிரி நெஞ்சம் உவகையில் நிறைந்தது.

நிச்சயம் முடிந்துவிட்டதால், சடங்குகளும் சொல்லி கொள்ளும்படி இல்லை. பாட்டு கச்சேரி, வானவேடிக்கை நடந்தது.

ராஜேஸ்வரி பேத்தியை தன்னுடனே வைத்திருந்தார். ரகுராம் அவளை நெருங்கவில்லை. கடுப்பு தான் என்ன செய்ய?

மறுநாள் விடிந்தது. அதிகாலை முகூர்த்தம். மண்படம் நிறைந்து, இரண்டு மாடியிலும் ஆட்கள் குவிந்தனர்.

பாரதி அழ கூடாது. கண் நிறைய எல்லாம் பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் நின்றார். ஆர்த்திக்கு நிறைமாதம் என்பதால் ஓரிடத்தில் அமர வைக்கபட்டாள். அனுஷா மகனுக்கு தான் அதிக கொண்டாட்டம். முதல் பேரன் செல்லம் வேறு.

ரகுராம் காத்திருப்புடன் மணமேடையில் அமர்ந்திருந்தான். எல்லார் கண்களும் திரும்ப, ரகுராம் முகத்தில் வண்ணங்களின் மத்தாப்பு. அவன் மனக்கண்ணில் கண்டது போல் ஜனக்நந்தினி தங்க ரதமாகவே நடந்து வந்தாள்.

அவளின் பட்டும் தங்க நிறமே. அதில் மெல்லிய கொடிகள் ஒன்றோடு ஒன்று பிணைந்திருந்தது. அதற்கு அடர் வண்ண மெரூன் பிளவுஸ், வைரம் அணிந்து ஜொலித்தாள் பெண்.

தலையில் அளவாக மல்லி, முகத்தில் மென் புன்னகை, சிறிதே திணறும் நடை. சமாளிக்கும் அவளின் கண்களின் மினுமினுப்பு. ம்ம்ஹ்ம்.. ரகுராம் நெஞ்சம் பலமுறை ஏறி இறங்கியது.

ஜனக்நந்தினி அவனருகில் அமர, ரகுராம் முகத்தில் வசீகரம் கூடி போனது. பொருத்தமான நிறைந்த ஜோடியாக தென்பட்டனர். தணிகைவேல் அவர்கள் பொருந்தும் அழகில் அசந்து தான் போனார்.

பாரதிக்கு சொல்லவே வேண்டியதில்லை. எவ்வளவு கட்டுப்படுத்தியும் கண்ணீர் இறங்கிவிட, வேகமாக துடைத்து நின்றார்.

மறுபக்கம் அருணகிரி, பத்மா தம்பதி மகிழ்ச்சியில் திளைக்க, ராமமூர்த்தி தம்பதியோ மகனின் திருமண வைபோகத்தை இமைக்க மறந்து பூரித்து பார்த்திருந்தனர்.

ராஜேஸ்வரிக்கு பேத்தியின் மகிழ்ச்சியோ என்னமோ முகம் கொஞ்சம் புன்னகையை தத்தெடுத்து கொண்டது. ராக்கி பாட்டியை தோளோடு அணைத்து கொண்டான்.

கெட்டிமேளம் கொட்ட, ரகுராம் கையில் மாங்கல்யம். மணமக்களுக்கு படபடப்பு எல்லாம் மறைந்து, பேரமைதி. அந்த சில நொடிகளை தங்களுக்குள் சேமிக்க ஆரம்பித்தனர்.

ரகுராம் தனக்கான பெண்ணை பார்த்தவாறே அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான். ஜனக்நந்தினி பரிபூரணத்துடன் மாங்கல்யத்தை ஏற்று கொண்டாள்.

தன் மனைவியானவளை ரசித்த ரகுராம் கண்கள் திடீரென பளிச்சிட்டது. வைரங்களுக்கு நடுவில் அவன் செயின். கட்டுப்படுத்த முடியாமல் ஒற்றை விரலால் வருட, “ஸ்ஸ்” என்றாள் பெண். சுற்றம் உணர்ந்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டான்.

மனங்களுடன், கைகளும் வெகு உரிமையாக இணைந்து கொண்டது!

Advertisement