Advertisement

அழகியல் 15

சுந்தரம் சொன்னவற்றில் இரண்டு விஷயங்கள் தணிகைவேல்க்கு ஏற்புடையதாக இருந்தது. ஒன்று.. காதல் திருமணம் என்பது. இதுவும் கிட்டத்தட்ட அப்படி தானே?

பாரதி ஆரம்பித்து வைத்தது தான் என்றாலும், பின்னர் பாரதியுமே மகளிடம் தானே முடிவை விட்டுவிட்டார்.

எல்லா விதமான வேற்றுமையும்  காதல் திருமணம் என்பதிலே அடிபட்டு போகிறதே!

பெரியவர்கள் தங்களுக்கு சமமாக பார்ப்பார்கள். இளையவர்கள் அப்படி இல்லையே? தங்களுக்குள் பிடித்தால் போதும், மற்ற எதையும் கண்டுகொள்வதில்லை.

நிகழ்காலத்தில் நடப்பவை மட்டுமில்லை, அப்போது நானுமே  அதை தான் செய்தேன்!

அடுத்து, “உங்க மகளுக்கு ரகுராம் மட்டுமே இருப்பதில்லை. நீங்களும் தானே இருப்பீங்க” என்ற சுந்தரத்தின் கேள்வி.

உண்மை தானே. கட்டி கொடுத்துவிட்டால் என் மகள் மேல் எனக்கு உரிமை இல்லை என்றாகிவிடுமா என்ன? நான் இருக்கும் வரை மட்டுமில்லாது நான் இல்லாது போனாலும் என் மகள் கஷ்ட பட மாட்டாள். அதற்கு நான் விட மாட்டேன்.  பார்த்து கொள்ளலாம்.

ஓரளவு தன்னை தயார் செய்து கொண்டார் தந்தை.!

இறுதியாக முடிவெடுக்கும் முன் மகளிடம் ஒரு வாய்ப்பெடுத்து பேசி விட வேண்டும். உறுதியாக அவள் முடிவில் நின்றுவிட்டால்? ம்ஹ்ம். வேறு வழி இல்லை. ரகுராம் தான் என் மாப்பிள்ளை!

சுந்தரம் குடும்பம் அங்கு இருக்கும் போதே,  ஜனக்நந்தினியிடம் பேச தயாரானார் தணிகைவேல்.  ராஜேஸ்வரியை சமாளிக்க நிச்சயம் உதவி தேவை. அத்தோடு நான் அவருக்கு போராடி புரிய வைப்பது விட, பேத்தியின் வாயிலாகவே உணர்ந்து கொள்ளட்டும்.

ப்ரவீனும் மனைவியை பார்த்துவிட்டு வந்திருக்க, பாரதி இல்லாததும் நல்லது தான். இல்லையென்றால் பேத்தி முடிவுக்கு மனைவியை தான் அவர் குற்றம் சாட்டுவார். தணிகைவேல் பலவாறாக யோசித்து,  இரவு உணவு முடியவும் எல்லோரையும் ஹாலில் அமர வைத்தார்.

“என்ன வேலா?” என்று ராஜேஸ்வரி கேட்க,

“உங்க பேத்திகிட்ட பேசணும். நீங்க எல்லாம் இருந்தா நல்லா இருக்கும். ஒரே பேச்சா முடிஞ்சுடும்” என்றார் தணிகைவேல்.

அம்மா, மகள் தவிர மற்ற மூவருக்கு புரிந்தது. அப்பா இப்படி திடுமென பேசுவார் என்று ஜனக்நந்தினி எதிர்பார்த்திருக்கவில்லை. சிறிது பதட்டம் தான். ப்ரவீன் எதுவாக இருந்தாலும் சரி என்ற நடுநிலையில் நின்றான்.

“பாப்பா.. உன் கல்யாணம் பத்தி தான் பேச போறேன்னு உனக்கு புரிஞ்சிருக்கும். உன் முடிவுல எதாவது மாற்றம் இருக்கா?” என்று கேட்டார்.

அவள் பேசும் முன்பே, “அவகிட்ட கேட்டா அவளுக்கு என்ன தெரியுமா வேலா. பெரியவங்க நாம தான் பார்த்து செய்யணும்” என்றார் ராஜேஸ்வரி.

“ம்மா.. ப்ளீஸ். அவ பேசட்டும். அப்பறம் நீங்க பேசுங்க. உங்க சம்மதம் இல்லாம இங்க எதுவும் நடக்காது” என்றவர், மகளை பார்த்தார்.

ஜனக்நந்தினி சுற்றி எல்லோரையும் பார்த்தவள், “அப்போ சொன்னதே தான்ப்பா” என்றாள்.

“எப்போ என்ன சொன்ன நீ? பழசை எல்லாம் ஏன் பேசுற பாப்பா நீ” ராஜேஸ்வரி பேச,

“ம்மா” என்றார் மகன்.

“நீ எப்போ இருந்து இவங்ககிட்ட முடிவு கேட்க ஆரம்பிச்ச? நாம செய்றது தான் எல்லாம்” என்றார் அம்மா.

“கட்டிக்கிறவங்க விருப்பம் ஒன்னு வேணாமாம்மா?” மகனே கேட்டார்.

“அவளுக்கு ஏத்த மாப்பிள்ளை காமிச்சா விருப்பம் தானா வந்துட்டு போகுது”

“ப்ரவீன் கல்யாணம் அப்போ அப்படி ஒரு மாப்பிள்ளையை தான் நாம காமிச்சதாக ஞாபகம்ம்மா”

“அது அப்போ ஏதோ பாப்பா தெரியாம பண்ணிடுச்சு. இப்போ நாம சொல்றதை தான் கேட்பா”

தணிகைவேல் அமைதியாகி மகளை பார்த்தார். இதற்கு நீ தான் பதில் சொல்ல வேண்டும் என்பதாய்.

ஜனக்நந்தினிக்கு புரிய, “என்னோட விருப்பம் எப்போவும் ஒருத்தர்கிட்ட தான் பாட்டி. ரகுராம் மாமா” என்றாள்.

“என்ன பேசுற நீ. அது விருப்பம் எல்லாம் கிடையாது. கட்டாயம். உன் அம்மா பண்ணி வைச்ச வேலை”

“அம்மாவும் என் முடிவுன்னு தான் சொல்லிட்டாங்க பாட்டி”

“அவ சொன்னா. அப்பறம் பெரியவங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம்”

“பேத்தி விருப்பத்தை நிறைவேத்தி ஆசீர்வாதம் பண்ண தான் பாட்டி” என்றான் ப்ரவீன்.

“நீ இடையில வராத. நான் என் பேத்திகிட்ட பேசுறேன்” என்றார் பாட்டி கொஞ்சம் கொஞ்சமாக ஏறும் கோபத்துடன்.

“நானும் என் பாட்டிகிட்ட தான் பேசுறேன் பாட்டி. அவ உங்க உரிமைன்னா, நீங்களும் என் உரிமை தான்” என்றான் பேரன்.

“பாப்பா நீ என்னை பாரு. இளவரசியா பிறந்து வளர்ந்துட்டு அங்க போய் கஷ்டப்படணும்ன்னு உனக்கென்ன தலையெழுத்து சொல்லு. கட்டிக்கிட்டு போற வீட்ல ராணியாய் ஆளணும். என்னை மாதிரி, உன் அத்தை மாதிரி”

“என் அம்மா இந்த லிஸ்ட்ல இல்லையே” என்றான் மகன்.

ராஜேஸ்வரி முறைக்க, “ஓஹ் சாரி பாட்டி நீங்க தான் இன்னும் ராணி போஸ்டிங்கிலே இருக்கீங்களே” என்றான் .

“ப்ரவீன்” என்று தந்தை அதட்ட,

“நியாயமாய் நீங்க என் அம்மாக்காக கேட்டிருக்கணும்” என்றான் மகன்.

“எனக்கு இந்த வீட்ல என் இடமோ, அது தான் என் பொண்டாட்டிக்கும். இதுபத்தி நாம அப்பறமா பேசிக்கலாம்” என்று முடித்தார் தந்தை.

“பாப்பா.. எட்டு மாசத்துக்கு முன்னாடி நான் பேசினப்போ நீ ரகுராம் கூட கமிட் ஆகிட்டதா தான் சொன்ன. அங்க விருப்பம் இல்லை. என்னை எதிர்க்கணும்னு பிடிவாதம் ஏதும் பிடிக்கிறியா?” என்று கேட்டார் தணிகைவேல்.

“முதல் விஷயம் நான் உங்ககிட்ட பிடிவாதம் பிடிச்சு என்ன பண்ண போறேன்ப்பா? செகண்ட் என் லைஃப் இது. எனக்கும் அதோட மதிப்பு தெரியும்ப்பா” என்றாள் மகள் தெளிவாக.

“அப்படி தெரியலை பாப்பா. உன்னோட விருப்பம் சரியில்லை. உனக்கு பொருத்தமில்லை” என்றார் ராஜேஸ்வரி.

“அவளுக்கு பொருந்துதா இல்லையானு உங்களுக்கு எப்படி தெரியும் பாட்டி?” ப்ரவீன் கேட்டான்.

“என்னை அவகிட்ட பேச விடு ப்ரவீன்” பாட்டி சொல்ல,

“அண்ணா நான். நானும் பேசவேன். அவளுக்கு எங்க விருப்பமோ அங்க தான் கல்யாணம் நடக்கும். நடக்கணும். இத்தனை மாசமா அவ ஊருக்கு கூட வராம இருந்ததிலே உங்களுக்கு அவ மனசு புரியலையா? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறீங்களா?

“அண்ணான்னு மட்டும் பேச தெரியுது இல்லை. அவ சந்தோஷமா வாழணும்ன்னு உனக்கு எண்ணம் இல்லையா?”

“இருக்கு பாட்டி. இல்லாம நான் ரகுராம்கிட்ட பேசலை. என்ன இவங்களுக்கு புரிய வைக்க போய் நான் தான் பல்ப் வாங்கினேன். நாம என்ன பண்ணாலும் இவங்க முடிவு தான் நடக்க போகுதுன்னு தெளிவா புரிஞ்சு போச்சு. அதுக்கெதுக்கு நாள் கடத்தணும்?”

“பாப்பா.. நீ இன்னொரு முறை கூட நல்லா யோசிச்சு” தணிகைவேல் சொல்ல,

“இதுவரை நிறைய யோசிச்சுட்டேன்ப்பா, இனி அங்க யோசிக்க ஒன்னுமே இல்லைன்னும் தான் உங்ககிட்ட பேசினோம். அப்போ எங்களுக்குள்ள விருப்பம் இல்லைன்னு சொன்னீங்க. இப்போ நான்.. எனக்கு அவரை பிடிக்கும். அவரை மட்டும் தான் பிடிக்கும். விருப்பம், பிடிப்பு எல்லாம் எனக்கு ஒன்னு தான்ப்பா” என்றாள் மகள்.

இனி என்ன பேச, எப்படி புரிய வைக்க? அவளுக்கு தெரியவில்லை. தலை வலித்தது.

தணிகைவேல் பெரு மூச்சுவிட, “என்ன எல்லாம் முடிவான மாதிரியே பேசிட்டு இருக்கீங்க? மாப்பிள்ளை. நீங்க எதாவது சொல்லுங்க. இவங்களுக்கு புரிய வைங்க” என்று சுந்தரத்திடம் கேட்டார் ராஜேஸ்வரி.

“அத்தை.. ஜானு பேச்சை கேட்டீங்க இல்லை. அவ தெளிவா இருக்கா” என்றார் சுந்தரம்.

“சின்ன பொண்ணு மாப்பிள்ளை அவ”

“வேலைக்கு போய் சம்பாதிக்கிறா, உலகம் பார்க்கிறாத்தை”

“வாழ்க்கை பாடம் நாம தான் சொல்லி கொடுக்கணும் மாப்பிள்ளை”

“நீங்க வாழ்ந்த வாழ்க்கை பாடம் அவளுக்கு எதுக்கு அத்தை? அவளுக்கு தனியா வாழ்க்கை இருக்கு. அவ வாழ்ந்தே தெரிஞ்சுக்கட்டும்” என்றார் சுந்தரம்.

“என்ன மாப்பிள்ளை நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ற மாதிரியே பேசுறீங்க” ராஜேஸ்வரி கோவப்பட முடியாமல் மனத்தாங்கல் கொண்டார்.

“நல்ல முடிவுகளுக்கு நம்ம சப்போர்ட் கொடுக்கிறது தப்பு ஒன்னும் இல்லையே அத்தை”

“எது நல்ல முடிவு. அந்த பையனா. என் பேத்திக்கு அவன் பொருத்தமா சொல்லுங்க. இப்படி தான் பாரதியை என் மகன் கட்டிக்கவும் சப்போர்ட் பண்ணீங்க” என்றார் குற்ற சாட்டுடன்.

“இப்போ அதுல என்ன குறைஞ்சு போச்சுன்னு சொல்லுங்க அத்தை. பாரதியை விடவா ஒரு மருமகளை நீங்க பார்த்திருக்க போறீங்க?”

“நம்ம வசதிக்கு அவங்க”

“அத்தை மருமகளா பாரதி உங்களுக்கு எப்படினு மட்டும் சொல்லுங்க. உங்க பணம், வசதி எல்லாம் பாரதி குணத்துக்கு ஈடு தான்” சுந்தரம் கேட்க, ராஜேஸ்வரி மௌனித்தார்.

“உங்க ஆஸ்தி, அந்தஸ்து ஒரு தராசு, என் அம்மா ஒரு தராசு. யார் மேல போவா பாட்டி? சொல்லுங்க” என்று கேட்டான் ப்ரவீன்.

“நீ அம்மா பிள்ளைன்னு எனக்கு தெரியும் ப்ரவீன். அதுக்காக எல்லா இடத்திலும் அவளுக்கு ஏத்துக்கிட்டு வரணும்ன்னு அவசியமில்லை” ராஜேஸ்வரி பதில் சொல்ல முடியா கோவத்தை பேரனிடம் காட்ட,

“அப்படி தானே என் அப்பா இருக்கார். அவர்கிட்ட கத்துக்கிட்டது தான் பாட்டி இது கூட” என்றான் பேரன்.

“இப்போ உன் அம்மா பேச்சு ரொம்ப முக்கியமா?”

“அப்புறம் நீங்க எதுக்கு என் அம்மாவை பத்தி பேசுறீங்க?”

“ப்ரவீன்” என்று தந்தை கண்டிக்க,

“ப்பா.. ப்ளீஸ். உங்க அம்மாக்கு நீங்க கொடுக்கிற மரியாதையை தான் என் அம்மாக்கு நானும் இந்த வீட்ல எதிர்பார்க்கிறேன். இன்னும் கொஞ்ச நாள்ல அவங்களுக்கு பேர பிள்ளையே வர போகுது. ஆனாலும் இன்னும் இந்த வீட்ல அவங்களுக்கு உண்டான மதிப்பு, மரியாதை இருக்கா? சொல்லுங்கப்பா. உங்களுக்கு எல்லாம் அவ்வளவு என் அம்மாவோட பேக்கிரவுண்ட்  குத்துதுன்னா எதுக்கு அவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு வரணும்?” என்று ஆவேசத்துடனே எழுந்து நின்று  கேட்டான்.

“ப்ரவீன் ரிலாக்ஸ். பேசலாம். நீ டென்ஷன் ஆகாத” என்றார் சுந்தரம்.

மற்றவர்களுக்கும் அவன் திடீர் கோவம் கேள்வி தான். ப்ரவீனை பார்க்க, அவன் தன்னை கட்டுப்படுத்தி  நின்றான்.

Advertisement