Advertisement

“சித்தப்பா”

“பின்ன என்ன ரகு. இதெல்லாம் ஒரு காரணம்ன்னு சொல்லிட்டிருக்கா” என்றார் அவர் அடங்கா கோபத்துடன்.

பாரதி அமைதியாய் இருக்க, “அத்தை.. நமக்காக நாம குரல் கொடுக்கும் போது கல்லடி படத்தான் செய்யும். கல்லடிக்கு பயந்து நீங்க வாயை மூடினா கல்லடி நின்னுடும் நினைக்கிறீங்களா?” என்று ரகுராம் கேட்டான்.

பாரதி இல்லையென்று தலையசைக்க, “நீங்க உங்க இடத்துல இருந்து அசையும் போதெல்லாம் விழுகும். ஆணி அடிச்ச மாதிரி நீங்க அதே இடத்துல நின்னு வாழணும், புரியுதுங்களா” என்று கேட்க,

“புரியாம இல்லை ரகு. அம்மா, அண்ணனை எதிர்த்து அப்பா எனக்காக அமைச்சு கொடுத்த வாழ்க்கை. தோத்துட கூடாதுன்னு வெறி. இவரோட அன்பும் உண்மை. பிள்ளைங்க. எல்லாம் பார்க்க, நான் கொஞ்சம் பொறுத்த தான் என்னன்னு”

“சாமி இவகிட்ட பேசாத. நான் கொதிச்சிடுவேன்”

“ஏன் சித்தப்பா? நீங்க அண்ணனா நின்னு அவங்களுக்கு சப்போர்ட் கொடுத்திருந்தா கூடத்தான் அவங்களுக்கு அந்த தைரியம் வந்திருக்கும். நீங்க ஏன் கொடுக்கலை” என்று ரகுராம் கேட்டான்.

“சாமி அவங்க மாமியார் பண்ணது அப்படி”

“அதே தான் அவங்களுக்கும் சித்தப்பா. இப்போ போய் கோவப்பட்டு பேசினா ஆச்சா?”

“இவ்வளவு சப்போர்ட் பண்றவ, அம்மா வீடு வேணும்ன்னு ஏன் வைராக்கியம் வைச்சா?” என்று ராமமூர்த்தி கேட்க,

“நீயே சொல்லு ரகு,  கூட பிறந்தவளை அவ்வளவு சுலுவா தூக்கி போட முடியுதுன்னா எனக்கு வேதனையா இருக்காதா? கோவம் வராதா? என்மேல கொஞ்சம் பாசம் இருந்திருந்தா கூட என்னை சேர்த்து பிடிச்சிருப்பாங்க இல்லை. அவங்க என்னை வந்து பார்க்கணும்ன்னு இல்லை, எனக்கு செய்யணும்ன்னு கூட இல்லை. அட்லீஸ்ட் நான் இங்க வந்து போக கூட முடியாதபடி மொத்தமா ஒதுங்கிட்டா? ஒரு நல்ல நாள்ல எவ்வளவு அழுவேன் தெரியுமா?” என்றவருக்கு இப்போதும் கண்கள் கலங்கியது.

“இப்போ என்னத்துக்கு கண்ணு கலங்குற. துடை முதல்ல” ராமமூர்த்தி அதட்டல் இட்டார்.

ரகுராம் தண்ணீர் கொடுக்க, குடித்தவர், “நான் கோழை எல்லாம் இல்லைண்ணா. அவங்க ஒருத்தரை  பார்த்து நான் என் வாழ்க்கையில தோற்கணுமா? எல்லோருக்கும் ஏதோ ஒரு கஷ்டம். எனக்கு அவங்க. அவ்வளவு தான். எனக்கு ஒரே ஒரு வேண்டுதல் தான். என்னை வைச்சு அவரை பேசாதீங்க.”

“பணம், சொத்துக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறவர் இல்லை. பொண்ணுக்கு மட்டுமே போராடுறார். பணத்துல பிறந்து வளர்ந்தவ அவ. அப்பாக்கு தெரியாதா பொண்ணோட வாழ்க்கை முறை. இங்க வரும் போது கஷ்டப்படுவான்னு பயம்”

“நம்மளோட அடிப்படை வாழ்க்கை முறை மாறும் போது என்னென்ன கஷ்டம் அனுபவிக்க வேண்டியிருக்கும்ன்னு என் மூலம் அவர் பார்த்துட்டார். என்னோட போராட்டம் அவர் பொண்ணு பட வேண்டாம்ன்னு மறுக்கிறார். மத்தபடி அவரோட ஸ்டேட்டஸ்க்கு யோசிக்கலை. யோசிக்கவும் மாட்டார்” என்றார்.

ரகுராம் ஏற்று கொண்டவன், “அவர் மறுக்கிற காரணம் எங்களுக்கு புரியாமல் இல்லை. என்ன பண்ண, எங்க மனசு கலந்துடுச்சு! ஆனாலும் அவர் கேட்டுக்கிட்டதுக்காக தள்ளி தான் நின்னேன். அதே தான் இப்போவும். எதுவும் மாற போறதில்லைன்னும் போது ஏன் நாள் கடத்தணும்?” என்று கேட்டான்.

“இவங்களுக்கு வயசு ஆகுது இல்லை பாரதி. அப்படியா உன் மகளை நாங்க கொடுமை படுத்திடுவோம். அவர் அம்மா மாதிரி இங்க யார் இருக்கா நீயே சொல்லு?” என, பாரதி அண்ணனை முறைத்தார்.

“அவர் அந்த மாதிரி சொல்லலைன்னு உங்களுக்கு நல்லா தெரியும்ண்ணா”

“தெரியும் தான். ஆனாலும் நாங்க இதை பதிவு பண்ண தான் செய்வோம். எனக்கு அன்னைக்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும், நீ பணக்காரன் தான். வசதி கொட்டி கிடக்குது தான். என் தங்கச்சியை என்ன கிளுகிளுன்னா வச்சுக்கிட்டிங்கன்னு கேட்க”

“ண்ணா”

“கேட்கலை. ரொம்ப பொங்காத”

“நான் உங்களை நம்ப மாட்டேன்”

“கேட்டாலும் அது எங்க மாமா, மச்சான்க்குள்ள. நீ இதுல தலையிட கூடாது பாரதி”

“இப்போ மட்டும் என் புருஷன் உங்களுக்கு மாமா, மச்சான் ஆகிட்டாரா?”

“எப்போவும் தான். இப்போ கூடுதலா சம்மந்தி பதவி வேற. போஸ்ட் மரத்துல உன் ஆளு ஏறாம இருக்கணும்”

“EBன்னு காட்டுறதை பாரு” என்றார் தங்கை கிண்டலாக.

ராமமூர்த்தி கடுப்பாக, ரகுராம் சிரித்துவிட்டான். அருணகிரி உள்ளே எல்லாம் கேட்டபடி இருந்தவர் முகத்திலும் மென்புன்னகை.

தணிகைவேல் தான் இன்னும் தேறாமல் இருக்க, ராஜேஸ்வரிக்கு மகன் கவலை பிடித்து கொண்டது. “பொண்டாட்டி அம்மா வீட்டுக்கு போனதுக்கா உன் அண்ணா இப்படி ஆகிட்டான். அவ மேல உயிரையே வச்சிருக்கான். முகம் மலரவே இல்லை” என்று மகளிடம் தினமும் புலம்பல் தான்.

ஜனக்நந்தினியும் வீட்டிலே வேலை செய்வது போல் அப்பாவுடன் தான் இருந்தாள். பாரதி வேறு உடன் இல்லை. இவரும் சரியில்லை என்பதால். “அம்மாவை பார்க்க போகலையா” என்று தணிகைவேலே மகளிடம்  ஒரு நாள் கேட்க,

“நீங்களும் வரதுன்னா வாங்கப்பா போலாம்” என்றாள் மகள்.

“நான் அங்க வரலை. திரும்ப எதாவது பேச்சு வளர்ந்தா உன் அம்மாக்கு தான்  கஷ்டம்” அவர் முடித்துவிட, மகள் முகம் வாடி போனது.

வேணி தான் ராஜேஸ்வரி புலம்பல் தாங்காது அன்றைய நாள் மாலை சுந்தரத்துடன் அண்ணனை பார்க்க வந்தார். ஜனக்நந்தினி அவர்களை வரவேற்று உபசரிக்க, ப்ரவீன் மனைவியை பார்க்க சென்றிருந்தான்.

தணிகைவேல்க்கு முதலில் இருந்தே சுந்தரத்தின் மேல் ஈடுபாடும், மதிப்பும் அதிகம். பாரதியை திருமணம் செய்து கொள்ள அவரின் ஆதரவு வெளிப்படையாக இருந்துள்ளது. இப்போதும் அவரிடம் பேச தான் நினைத்திருந்தார்.

அவரே வந்துவிடவும், தனியே தோட்டத்திற்கு வந்தனர். தணிகைவேல் தன் மனதில் இருந்ததை எல்லாம் அவரிடம் கொட்டினார். “என்னை யாரும் புரிஞ்சுக்கலை. நான் நினைக்கிறது தப்பா சொல்லுங்க” என்று கேட்டார்.

சுந்தரம் நிமிடம் எடுத்து கொண்டவர், “உங்க பொண்ணு மேல உங்களை விட யார் அக்கறை படுவா? அப்பாவா நீங்க சரி தான். உங்க எண்ணமும் சரி தான்” என்றார். தணிகைவேல் முகம் கொஞ்சம் தெளிய, சுந்தரம் தொடர்ந்தார்.

“நான் இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்க ரொம்ப யோசிச்சு காம்ப்ளிகேட் பண்ணிக்கிறீங்கன்னு தோணுது. இது ஒரு லவ் மேரேஜா மட்டுமே பாருங்களேன்”

“இப்போ எல்லாம் காதல் கல்யாணம் சர்வ சாதாரணம் ஆகிடுச்சு. மதம் என்ன, நாடு விட்டு நாடே கல்யாணம் பண்றாங்க. இதுவும் அப்படின்னு யோசிச்சு பாருங்களேன்”

“நாம செய்ற கல்யாணத்துக்கு தான் நீங்க கேட்கிறது எல்லாம் பார்க்க வேண்டியிருக்கும். பசங்களே முடிவெடுத்த பின்னாடி நாம என்ன பண்ண முடியும்ன்னு நினைக்கிறீங்க. இது விடலை பருவ காதல் இல்லையே? புரிய வைக்க. தெளிவான பிள்ளைங்க. உங்களை கம்ப்ரமைஸ் பண்ணிடுவாங்க” என்றார் சிரித்தபடி.

“அப்படி தான் பண்றாங்க” என்றார் தணிகைவேல்.

“நான் பார்த்தவரை பாரதி அம்மா வீட்டு ஆளுங்ககிட்ட நீங்க குறை காண முடியாது. வசதி என்ன வசதி. எல்லாம் இருந்தும் நாம என்ன நிம்மதியாவா இருக்கோம்?” என, தணிகைவேல் இல்லையென்று தலையசைத்தார்.

“எல்லாம் விட மாப்பிள்ளை பையன் ரகுராம். அவன் சுயம்பு. மண்ணுக்கு மேல வர தான் நேரம் எடுப்பான். வந்துட்டா வேகமா வளர்ந்துடுவான்”

“இப்போ எல்லாம் பிள்ளைங்க கடைசி வரை ஒன்னு சேர்ந்து வாழறதே சவால் ஆகி போச்சு. பெரும்பாலும் அவங்க பிரிய பணம், அந்தஸ்து காரணம் இருக்கிறதில்லை. அவங்க மனசு, ஈகோ தான். இவங்ககிட்ட அப்படி ஏதும் இல்லையே?”

“என்னை பொறுத்தவரை நான் ஒன்னு தான் சொல்வேன். துணிஞ்சு கொடுங்க. பார்த்துக்கலாம். உங்க பொண்ணுக்கு அவர் மட்டுமே இல்லை. நீங்களும் தான் இருக்கீங்க. இருப்பீங்க தானே”

“என்ன இப்படி கேட்டுட்டீங்க. அதெப்படி இல்லாம போவேன்”

“அப்புறம் என்ன, யோசிச்சு.. ம்ஹூம்.. நீங்க யோசிக்கவே வேணாம்.  சட்டு புட்டுன்னு நல்ல முடிவா எடுங்க. மண்டபத்தை புக் பண்ணுவோம்” என்றார்.

தணிகைவேல் தலையசைக்க, அங்கு ரகுராம் தானே ஜனக்நந்தினிக்கு  முகூர்த்த புடவை நெய்ய ஆரம்பித்தான். நல்ல நாள் பார்த்து, கடவுளை வேண்டி கைத்தறியில் அமர்ந்தான்.

வீட்டு ஆட்கள் உடனே கண்டுகொள்ள, ஜனக்நந்தினிக்கும் விஷயம் போனது. பெண் உடனே போன். “என் அப்பா சம்மதம் சொல்லாம ஏன் செய்றீங்க?” என்று.

“நான் பிசியா இருக்கேன்” என்றான் அவன்.

“கலர் என்னை கேட்கவே இல்லை” அவள் குறைபட,

“இது மாப்பிள்ளை செலக்ஷன் தான். வேணும்ன்னா மத்த சடங்குக்கு நீ செலக்ட் பண்ணிக்கோ” என்றான்.

“முக்கியமானதை நீங்க எடுத்துட்டு, வேறென்ன இருக்கு அங்க”

“இருக்கே”

“நிச்சயம் ஆல்ரெடி முடிஞ்சாச்சு. அதுவும் சுடியிலே”

“இப்போ என்ன பட்டு கட்டி திரும்ப நிச்சயம் பண்ணுவோம். ஆனா செயின் எல்லாம் கிடையாது”

“நீங்க போட்டுட்டாலும். இந்த முறை நான் வேணும்ன்னா உங்களுக்கு போட்டு விடுறேன்”

“போடுறதை தான் போடுற ஒரு ஆறேழு பவுன்ல போடு”

“நீங்க மட்டும் ஒரு பவுன் போட்டீங்க”

“அத்தை பொண்ணு திடிர்ன்னு வந்து கழுத்தை நீட்டுவான்னு எனக்கென்ன தெரியும்?”

“அப்போ தாலி சரடு ஒரு பதினோரு பவுன் எடுங்க”

“வேண்டாம்டி.. நீ வெய்ட் சுமந்தா எனக்கு தாங்காது”

“அடேங்கப்பா எவ்வளவு பாசம்”

“ஹேய் இருடி. இதுக்கு விதிவிலக்கும் உண்டு. இப்போவே சொல்லிடுறேன்” என்றான் குறும்பாய்.

“இதுல என்ன விதிவிலக்கு இருக்கு” பெண் யோசிக்க,

“ம்ம்ம்.. நிழல் படும்ன்னு கேட்டதுக்கு சொல்ல மாட்டேன்னு சொன்னியே அது தான்”

“பிராடு தெரிஞ்சே என் வாய பிடுங்க பார்த்திருக்கீங்க” பெண் வெட்கத்தில் சிணுங்கினாள்.

“அதான் உஷாரா சொல்லலையே. இதுல ஊர்கார பையன் வேற. எங்களை விடவாடி நீங்க விளைஞ்சிருக்க போறீங்க”

“அது இப்போ இப்போ தான் புரியுது”

“புரியட்டும். புரியட்டும். இப்போ போனை வை. நான் பட்டு நெய்யனும்” என்றான்.

“நீங்க கூப்பிடுறதே இல்லை. நானே கூப்பிட்டாலும் உடனே வைக்குறது” என்று ஜனக்நந்தினி நொடித்தாள்.

“என் பொண்டாட்டிக்கு புடவை நெய்ய கையும், மனசும் பரபரக்குது. கலர், டிசைன் எல்லாம் கண்ணுல நிக்குது. அது மட்டும் சரியா வந்தா நீ என் கையால தாலி வாங்கும் போது தங்கரதமா மினுமினுப்படி” என்றான் இப்போதே அவளை மனக்கண்னில் கண்டபடி.

“என்னை ரொம்ப எதிர்பார்க்க வைக்காதீங்க. அப்பறம் ஏமாந்திட போறேன்” என்றாள் பெண் ஏக்கமும், பயமும் கலந்த குரலில்.

“ஏன் ஏமாறுற? நான் இருக்கேன்டி. தைரியமாய் எதிர்பார்த்திட்டிரு. அப்போ தான் நடக்கும் போது என் கையை இறுக்கமாக பிடிச்சுக்க தோணும்” என்றவன் வைத்துவிட, அந்த நாளுக்காக ஜனக்நந்தினியிடம்  இப்போதே மாபெரும் கனவு தான்.

Advertisement