Advertisement

அழகியல் 14

இங்கே இருந்தால் இன்னும் தான் வார்த்தை வளரும் என்பதாலே ரகுராம் உடனே கிளம்பிவிட்டான். ராமமூர்த்தி அவன் பின்னே சென்றவர், பஸ் ஏற்றி விட்டு தான் வந்தார்.

“இந்த பேச்சை இப்படியே விடுங்க சித்தப்பா, அத்தைக்கு சரியானதும் பார்த்துக்கலாம்” என்றிருந்தான் அவரிடம்.

“நமக்கும் இப்போ பேசணும்ன்னு இல்லை ரகு. அவரே ஆரம்பிச்சது தானே” என,

“இல்லை சித்தப்பா.. எங்களால தான். அவர் கோவத்துல பேச, நானும் பேசன்னு போயிடுச்சு” என்றான்.

“சரி விடு. அண்ணாக்கும் இப்போ உங்க மனசு புரிஞ்சிருக்கும். அதான் அவரே மாப்பிள்ளைக்கிட்ட பேசினார்”

“எனக்கும் அது சந்தோசம் தான் சித்தப்பா. எப்போ இருந்தாலும் அப்பாகிட்ட நான் இதுக்காக போய் நின்னிருக்க வேண்டியிருக்கும். அவர் சரி தான் சொல்வார்ன்னாலும், இவங்க நடத்தின விதத்துக்கு, கேட்கவே எனக்கு ரொம்ப சிரமம் தான்.  இப்போ அவரே புரிஞ்சுக்கிட்டு எங்களுக்காக நிக்கிறார்” என்றான் நிம்மதியுடன்.

“உன் மாமனாரும் புரிஞ்சுப்பார் விடு. நாம புரிய வைக்கலாம். அவரை மாதிரி நாம நடந்துக்க மாட்டோம்” என்றார் ராமமூர்த்தி.

“அவரோட இந்தளவு எல்லாம் போயிட கூடாதுன்னு தான் தள்ளி நின்னது சித்தப்பா. அவர் அன்னைக்கு காபி ஷாப்ல வைச்சு என்கிட்ட கேட்டதும் சரியா இருந்துச்சு. அப்பாவாச்சே!  அதான் அமைதியா வந்திட்டேன். ஆனா இன்னைக்கு அவர் என்னை கேட்ட விதம், அது தான் எனக்கு தாங்கிக்க முடியல. எட்டு மாசமா அவர் பொண்ணுகிட்ட நான் பேச கூட ட்ரை பண்ணல” என்றான் ஆதங்கத்துடன்.

“அப்பா இல்லை ரகு. அப்படி தான். நாம அவர் பொண்ணை சந்தோஷமா வைச்சுக்கும் போது தானாவே புரிஞ்சுப்பார்”

“ம்ம்.. உண்மை தான் சித்தப்பா” என்றவன், பாரதியை ஊருக்கு அழைத்து செல்வது பற்றி பேசிவிட்டு சென்னை கிளம்பியிருந்தான்.

அன்றிரவு தணிகைவேலை யாரும் நெருங்கவில்லை. அவரை தனியே விட்டுவிட்டனர். ஜனக்நந்தினிக்கு கண்கள் கலங்கி கொண்டே இருந்தது. என்னால் தானே அப்பாவிற்கு இவ்வளவு கஷ்டம் என்று.

செல்ல மகள் ஆயிற்றே. அவர் வேதனை இவளை தாக்காமல் இருக்குமா?

ராஜேஸ்வரி தூங்கும் முன் மருமகளை பார்க்க வந்தவர், மகனின் சோர்ந்திருந்த முகத்தில், “என்ன வேலா” என்றார்.

அவர் ஒன்றும் இல்லையென தலையசைக்க, “நீ இன்னைக்கு புல்லா சரியா சாப்பிடலை. அதான் ஓய்ஞ்சு போயிட்ட. சாப்பிட்டு  நல்லா தூங்கு” என்றார்.

ப்ரவீன் அப்பாவிற்கு உணவு வாங்கி வந்திருக்க, மறுக்காமல் உண்டார். ஜனக்நந்தினி அவர் உறங்கும் வரையில் அவருடன் இருக்க, மகளுடன் பேசவில்லை அவர். மகளும் மௌனம் காத்தாள்.

மறுநாள் பாரதி ஓரளவு தெளிந்திருக்க, மஞ்சுளாவை அவரிடம் விட்டு, மிச்ச மூவர் ஊருக்கு கிளம்பினர். பத்மா நாளை வருவதாக சொல்லி சென்றார். ராஜேஸ்வரிக்கு அப்போதும் வீட்டுக்கு திரும்பும் எண்ணமில்லை. மஞ்சுளா உடன் இருப்பதே கடுப்பு தான்.

ஆனால் வேறு வழி இல்லை. முன்பனால் அவருக்கு வயதிருந்தது. இப்போது மருத்துவமனை சூழலே அவருக்கு ஒப்பவில்லை. சுந்தரம் குடும்பத்துடன் வந்திருக்க, மருமகளிடம் சொல்லி கொண்டு அவர்களுடனே வீடு திரும்பினார்.

ப்ரவீன் வீடு, தொழில் இரண்டையும் பார்க்க, அப்பாவும், மகளும் மருத்துவமனையிலே தான் இருந்தனர். பாரதிக்கு கணவனின் முகம் கேள்விகளை எழுப்பியது. “ஏன் என்னவோ போல இருக்கீங்க?” என்று அவரிடம் கேட்க,

“எனக்கு என்ன ஒன்னுமில்லை. நீ உன்னை பாரு முதல்ல” என்றார் அவர். மஞ்சுளா தான் மேம்போக்காக சொல்லியிருந்தார்.

நான்கு நாள் முடிய, வீட்டுக்கு போக சொல்லிவிட்டனர். மாலை கிளம்ப வேண்டும். பத்மா தான் அன்றைக்கு இருந்தவர், “ண்ணா” என்று தணிகைவேலிடம் சென்று நின்றார்.

இதுவரை அவரிடம் தேவைக்கு அதிகம் பேசாதவர் வர, “சொல்லுமா” என்றார் தணிகைவேல்.

“பாரதியை நாங்க கூட்டிட்டு போய் ஒரு பதினைஞ்சு நாள் வைச்சு அனுப்புறோம்” என்றார் பத்மா.

“என்னம்மா திடீர்ன்னு”

“பிள்ளை பிறந்தப்போவே நாங்க கேட்டோம்ண்ணா. வசதி இல்லைன்னு மறுத்திட்டீங்க. இப்போவாவது அவளை எங்களோட அனுப்பி விடுங்க”

“இல்லைம்மா. அது”

“ண்ணா.. மறுக்காதீங்க. வீட்ல பிறந்த பொண்ணுன்னு அவளுக்கு இதுவரை நாங்க ஒன்னும் செஞ்சதில்லை. எங்களை எதிர்பார்க்கிற அளவு அவளை நீங்களும் வைச்சுக்கிட்டதில்லைங்கிற வேற விஷயம். இருந்தாலும் இந்த ஒரு முறை மட்டும் எங்களை பார்க்க விடுங்க” என்றார் நைச்சியமாய்.

பத்மா அவருடை நல்ல முறையிலே போய்விட நினைத்தார். அதனாலே ஆண்களை தவிர்த்து தானே பேசினார்.

“அதுக்கில்லைம்மா. நான்” என்று திணறினார் மனிதர்.

மனைவியை தானே பார்த்துக்கொள்ள தொழிலை கூட மகனிடம் ஒப்படைத்திருந்தார்.

“எங்க வீட்ல தான் பேசுறேன்னு சொன்னாங்க. நான் தான், அண்ணாகிட்ட நானே கேட்டுக்கிறேன்னு சொல்லிட்டேன். வேணும்ன்னா அவங்க முறையா பேச”

“வேணாம்மா” நொடியில் மறுத்தார். திரும்ப அந்த அண்ணன், தம்பியிடம் பேச அவர் தயாரில்லை.

“பாரதிக்கு.. அவ என்ன நினைக்கிறான்னு”

“அவ என்ன சொல்வா, நீங்க சொல்றது தான் முடிவுன்னு சொல்லிட்டா” என்றார்.

“நான் அவகிட்ட பேசிட்டு வரேன்மா” என்று மனைவியை தேடி சென்றவர், “என்ன பாரதி இது” என்று விஷயம் சொல்லி கேட்டார்.

“நீங்க ஓகே சொன்னா தாங்க”

“அப்போ உனக்கு இஷ்டம் தான் இல்லை”

“இத்தனை வருஷம் நான் என் அம்மா வீட்ல தங்கினதே இல்லைங்க. இது ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு”

“அம்மா பிரச்சனை பண்ணுவாங்க பாரதி” என்றார் யோசனையாய்.

பாரதி முகம் சுருங்கி போனது. தன்னை சமாளித்து கொண்டவர், “சரி தான். வேணா விடுங்க. நான் அண்ணிகிட்ட சொல்லிடுறேன்” என்றார்.

“பரவாயில்லை. நான் பேசிக்கிறேன். எனக்காக நீ நிறைய பொறுத்துகிட்ட. இனியாவது உன்னை பாரு பாரதி” என்றவர், அனுமதி கொடுத்துவிட்டார்.

பத்மா உடனே வீட்டுக்கு சொல்ல, அண்ணனும், தம்பியும் காருடன் கிளம்பிவிட்டனர். ப்ரவீன் மட்டும், “அங்க அம்மாக்கு வசதி இருக்காது” என்று ஆரம்பித்தான்.

“நீ தான் பணக்கார வீட்டு பையன் ப்ரவீன். உன் அம்மா இல்லை” என்றார் பாரதி.

“ம்மா.. நான். சாரிம்மா” என்றுவிட்டான் அவர் பார்வையில்.

ராஜேஸ்வரி மருமகள் வீடு வர வீட்டிலே இருக்க, மருத்துவமனையில் எதிர்க்க ஆள் இல்லாமல் போனது. பாரதி அம்மா வீடு செல்ல முடிவானது. தணிகைவேலிடம், “ரொம்ப நன்றி மாப்பிள்ளை” என்றார் அருணகிரி.

ராமமூர்த்திக்கோ, ‘இத்தனை வருஷம் கழிச்சி என் தங்கச்சியை அம்மா வீடு அனுப்புறதுக்கு இவருக்கு நன்றி வேற சொல்லணுமா?’ என்பது தான். என்ன முகத்தில் காட்டி கொள்ளவில்லை.

பாரதிக்கு மகிழ்ச்சியுடன், கணவனின் வாடிய முகமும் வருத்தம் கொள்ள வைத்தது. “நான் உங்களோடவே வந்திடவா?” என்று கேட்டார்.

“பாரதி. ஒன்னுமில்ல. நீ கிளம்பு. உடம்பை பாரு. பழையபடி நீ என்கிட்ட வரணும்” என்றார்.

“நான் அத்தைகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுறேன்” என்றவர், யாரின் மறுப்பையும் கேட்கவில்லை. ராஜேஸ்வரிக்கு மகனே அழைத்து இப்படி என்று சொல்லியே கொடுக்க, அவர், “பார்த்துக்கோ” என்று மட்டும் சொல்லி வைத்துவிட்டார்.

அருணகிரி கொண்டு வந்தது பெரிய கார் என்பதால், இடையில் பாரதியை வசதியாய் அமர வைத்து கூட்டி சென்றனர். ப்ரவீன் பின்னாலே அம்மாவின் உடமைகளை கொடுத்துவிட்டு வந்தான்.

ஒரு வாரம் ஆகிவிட்டது. இப்போது பாரதி நன்றாகவே தெளிந்திருந்தார். மஞ்சுளாவும், ராமமூர்த்தியும் அங்கேயே வந்துவிட்டனர்.

“இங்கிருந்து நீங்க தூரம் போகணும்ண்ணா” என்று பாரதி தான் சொல்ல.

“இரண்டு வாரம் போறதில எனக்கு ஒன்னும் ஆகிடாது” என்றுவிட்டார் ராமமூர்த்தி.

பத்மா தறிக்கு செல்லவில்லை. அவருடனே இருந்தார். அருணகிரி உடன் அமர்ந்து மணிக்கணக்காக பேசும் ரகம் இல்லை என்பதால் அவரை தவிர்த்து, மீதி எல்லாம் நடுஇரவு வரை பேசி கொண்டிருப்பர்.

அனுஷா தோணும் போதெல்லாம் மகனுடன் வந்துவிட, பாரதிக்கு நேரம் போனதே தெரியவில்லை. ப்ரவீன் இடையில் மூன்று முறை வந்து சென்றுவிட்டான். ராஜேஸ்வரி போனில் நலம் விசாரிப்பதோடு சரி. தணிகைவேலும், மகளும்  வீடியோ காலில் பாரதியை பார்த்து கொண்டனர்.

அந்த வார இறுதியில் ரகுராம் ஊருக்கு வந்தான். இன்னும் வீடு அமர்க்களபட்டது. அன்றய இரவு பேச்சு நீண்டு கொண்டே சென்றது. பாரதியை தூங்க சொல்லி சொல்லி, மற்றவர்கள் தூங்கிவிட்டனர்.

ராமமூர்த்தி, ரகுராமுடன் அவரும் அமர்ந்திருந்தார். “என்ன சொல்றார் உன் புருஷர்” என்று ராமமூர்த்தி கேட்க,

“என்னமோ மாதிரி இருக்கார்ண்ணா. முகமும் வாடியே இருக்கு” என்றார் கவலையுடன்.

“அவர் பொண்ணை கொடுக்க சொல்லி கேட்டதுக்கா இவ்வளவும்?” ராமமூர்த்தி சொல்ல,

“அவருக்கு பாப்பான்னா உயிர், அதான்” என்றார்.

“நம்ம அப்பாக்கு கூட தான் நீன்னா உயிர். அவர் கேட்டதும் உனக்காக, நீ ஆசைப்பட்டேன்னு கொடுக்கலை. இப்போ அவர் பொண்ணுக்கு வரும் போது மட்டும் அந்தஸ்து முளைச்சிடுச்சு”

“ண்ணா அப்படி சொல்லாதீங்க. அந்தஸ்து பார்க்கிறவரா இருந்தா என்னையே அவர் கட்டியிருக்க மாட்டார்” என்றார் பாரதி.

“இதென்ன புதுசா”

“என்னை பிடிக்கும்ன்னு வீட்ல போராடி கட்டிக்கிட்டார். ஆனா அவர் அம்மா வார்த்தைகளை கொட்ட ஆரம்பிச்சுட்டாங்க. மாமனாரும் தவறிட்டார். வீட்டுக்கு ஒரே பிள்ளை, தொழில் இருக்கு. அம்மாவை பார்த்துக்க கடமை, அன்பு இருக்கு. என்னை பேசுறாங்கங்கிறதுக்காக எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டா போக முடியும்? ஆனா ஒரு கட்டத்துல அவர் அதுக்கும் ரெடியானார். நான் தான் தடுத்துட்டேன்”

“நீங்க மதர் தெரிசா” என்றார் ராமமூர்த்தி கோவமாக.

“சகிச்சுக்க மதர் தெரிசாவா தான் இருக்கணும்ன்னு இல்லைண்ணா. ஒருத்தர் மேல வைக்கிற அன்பே போதும். எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்”

“அதை மாமியார்கிட்ட பேச்சு வாங்கி ப்ரூப் பண்ணியிருக்க. உன் புருஷன் உன் தியாகத்தை பாராட்டி அவார்ட் ஏதும் கொடுத்தாரா?” ராமமூர்த்தி கிண்டலாக கேட்டார்.

“ண்ணா.. ப்ளீஸ். அவர் நிறைய முறை சொல்லியிருக்கார். நீ பேசு. அவங்ககிட்ட பேச்சு வாங்கணும்ன்னு இல்லை. எனக்காக பார்க்காத. நான் தலையிட்டா அம்மா இன்னும் அதிகமா போவாங்க. நீ தைரியமா நில்லு. நான் சப்போர்ட் பண்றேன்னு”

“ஆனா மேடம் நீங்க கேட்டிருக்க மாட்டீங்க. புருஷன் கவலை படக்கூடாதுன்னு”

“கேட்டேன்ண்ணா. ஒரு முறை அவங்களை எதிர்த்து பேசி, அவங்க எங்கேயோ கிளம்பி போயிட்டாங்க. ஒரு நாள் முழுசா கண்ணுல சிக்கலை. போலீஸ் வரை போய் தான் கண்டுபிடிச்சோம்”

“சூப்பர் இல்லை, நீ அங்க வாயே திறக்க கூடாதுன்னு கரெக்ட்டா பிளே பண்ணியிருக்காங்க. நீயும் அமைதியா ஆகியிருப்பியே”

“ண்ணா”

“பேசாத பாரதி. எப்பேற்பட்டவர் பேரை வைச்சுக்கிட்டு நீ இப்படி. ச்சு”

Advertisement