Advertisement

ஜனக்நந்தினியை ஒரு நொடி அதிகமாகவே பார்த்தார் பத்மா. மகன் மனது இந்த பெண்ணிடம் உள்ளதா என்ற சந்தேகம் அவருக்கு உண்டு. அருணகிரி இவருக்கு எதுவும் சொல்லவில்லை. ஆனாலும் தாய் மனது கண்டுகொண்டது.

ஜனக்நந்தினி அவரை பார்த்து இயல்பாய் சிரிக்க, “ம்ஹ்ம்.. நடந்தா நல்லா தான் இருக்கும்” என்ற ஆசையும் எழுந்தது.

பாரதி தூங்கும் நேரம் வர, அறைக்குள் அடங்கினர் மற்றவர்கள். தணிகைவேல், ராமமூர்த்தி மட்டும் வெளியவே இருந்து கொண்டனர். ஆளுக்கொரு பக்கம் தான்.

மறுநாள் பொழுது எல்லாருக்கும் சீக்கிரம் விடிந்துவிட, ரகுராம் முகத்தில் தான் மொத்த பேரும் விழித்தனர். பாரதியிடம் செல்ல, அவரின் முகம் புன்னகையை அள்ளி கொண்டது.

அவர் அழுததாக சொல்லியிருக்க, புன்னகை முகம் நிம்மதியை கொடுத்தது. “நீங்க ஓகே தானே?” என்று கேட்டான்.

பாரதி ஆம் என்றவர்,”காபி குடிக்கிறியா” என்று பாரதி கேட்கும் போதே, அவரின் மகள் அவன் முன் கப்பை நீட்டினாள்.

பத்மா அதனை ஆச்சரியமாக பார்த்திருக்க, மகன் இயல்பாய் வாங்கி குடித்தான். முடிவே செய்துவிட்டார். தணிகைவேல் மகள் அவனுக்காக காபி எடுத்து சென்றதிலே, இறுக்கத்தை தத்தெடுத்து கொண்டார்.

ப்ரவீன், “என்னடா நடக்குது இங்க. அப்போ நான் போட்டது புஸ்வானமா” என்று பார்த்தான்.

‘ஒன்னு சண்டை போட்டு பிரியனும்,இல்லைன்னா சேரனும். இவங்க என்ன இரண்டையும் கலந்து நம்மளை டார்ச்சர் பண்றாங்க?’

பாரதியை தியேட்டருக்குள் அழைத்து செல்ல, எல்லோரும் அவர் முன் நின்றனர். சுற்றி உறவுகளே. அழகான நொடிகள் அது அவருக்கு.

“அழ வைக்கவும் இவங்களால் தான் முடியும். சிரிக்க வைக்கவும் இவங்களால் தான் முடியும். ரயிலும், தண்டவாளமும் போல தான் சொந்தங்கள்!”

ராஜேஸ்வரி, வேணி குடும்பம் ஒரு பக்கம் இருக்க, அம்மா வீடு சொந்தங்கள் மறுபக்கம் நின்றனர். கணவன், மகன், மகள், ஆர்த்தியுமே இருக்க, எல்லோருக்கும் பொதுவாக  தலையசைத்தார்.

பாரதி உள்ளே செல்ல, ஆளுக்கொரு பக்கம் அமர்ந்தனர். தணிகைவேலின் நெருங்கிய நண்பரின் மருத்துவமனை என்பதால் எல்லோரும் அங்கிருப்பதில் பெரிதான சிக்கல் இல்லை.

ரகுராமும், ப்ரவீனும் குடிக்க கொடுத்தனர். தணிகைவேல் மறுத்துவிட்டார். பக்தி அவருக்கு அதிகம் என்பதால் புரிந்து கொண்டு அவரை வற்புறுத்தவில்லை.

சில மணி நேரங்களில் பாரதிக்கான சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவரை அறைக்கு எடுத்து வர நேரம் ஆகும் என்றுவிட, அதன் பின்னே எல்லோரும் உண்டனர்.

தணிகைவேல் பால் மட்டும் எடுத்து கொண்டார். ஜனக்நந்தினி அப்பாவுடன் இருக்க, ரகுராம் தள்ளி இருந்து கொண்டான். அந்த நேரம் மகளின் அருகாமை தந்தைக்கு அதிகமே தேவைப்பட்டது.

மதியம் போல் பாரதி அறைக்கு வந்துவிட, முதலில் ராஜேஸ்வரி தான் சென்று பார்த்து வந்தார். அதன் பின் ஒவ்வொருவராக பார்த்து  வர, பாரதி அரை மயக்கத்தில் நன்றாக இருப்பதாக எல்லோருக்கும் கை காட்டினார்.

அதன்பின்னும் அருணகிரி குடும்பம் அங்கிருந்து கிளம்பாததில் ராஜேஸ்வரியும் கிளம்பவில்லை. மற்ற சொந்தங்கள் மாலை போல் கிளம்பிவிட்டனர்.

ரகுராம் இரவு சென்னை திரும்ப வேண்டும். பாரதி இப்பொது கொஞ்சம் தெளிவாக இருக்க, “நம்ம வீட்டுக்கு வறீங்களா” என்று கேட்டான்.

பாரதி கண்களை விரித்தார். “கேட்க கூடாது. ஆனா உங்களுக்கு அங்க சவுகரியமா இருக்குமான்னு பார்க்கணும் இல்லை” என்றான்.

“நான் பிறந்து வளர்ந்த வீட்டுல என்ன சவுகரியம் வேணும்” என்று பாரதி மெல்லிய குரலில் சொல்ல,

“அப்பா, சித்தப்பா எல்லாம் முடிவா இருக்காங்க. முன்ன அங்க என் பேர பிள்ளைகளுக்கு வசதி இருக்காதுன்னு பாட்டிம்மா அனுப்பலையாம். இப்போ உங்க முடிவு தான்” என்றான்.

“மூணு நாள் கழிச்சு தான் அனுப்புவாங்க. யோசிங்க” என்றவன், அவரின் உடல்நிலைய பார்த்துக்க சொல்லி கிளம்பினான்.

ஜனக்நந்தினி வெளியே போன் பேசி கொண்டிருக்க, “நான் கிளம்புறேன்” என்றான் அவளிடம் சைகையில்.

பெண் போனை வைத்தவள், கைகட்டி அவனை முறைத்தாள். “ஏதும் ஆரம்பிக்காத. நேரம் ஆச்சு. கிளம்பனும்” என்றான்.

“அப்போ எதுக்கு என்கிட்ட வந்து கிளம்புறதா சொன்னீங்க. அப்படியே போக வேண்டியது தானே”

“அதெப்படி. சொல்லாம போறது? அத்தையை பார்த்துக்கோ”

“அத்தை மகளை நீங்க எப்போ பார்ப்பீங்க”

“உன் அப்பா ஓகே சொன்னா அடுத்த செகண்ட்”

ஜனக்நந்தினி கண்களை சுருக்கி உர்ரென்று பார்த்தாள்.

“அப்பா, சித்தப்பா வெளியே வெய்ட் பண்ணிட்டிருக்காங்க. கிளம்பவா” என்றான் மனதே இல்லாமல்.

“போங்க.. கிளம்பிடுங்க”

“காலையில இருந்த இங்க தான் இருந்தேன். அப்போ எல்லாம் கிட்ட வரலை. கிளம்பும் போது ஆரம்பிக்கிறியா?”

“அப்போ என் அம்மா டென்ஷன், அப்பாக்கு என் சப்போர்ட் வேணும்”

“இப்போ உன் அப்பாக்கு தூண் தேவை  இல்லையா?”

“அப்பறம் என் தூணை பார்க்கணுமே நான்”

“மாத்தி மாத்தி பார்த்துட்டே இருக்க வேண்டியது தான்?” அவன் சலித்தான்.

“அவ்வளவு சலிச்சு ஒன்னும் என்னை பார்க்க வேணாம். கிளம்புங்க” அவள் நகர போக,

எட்டி கை பிடித்தவன், “கூட இருக்கிறதே சில நிமிஷம். அதுலயும் முறுக்கல் தான்” என்றான்.

“முறுக்கினா நீங்க நேராக்குங்க. எல்லாம் சொல்லி தரணும்” பெண்ணிடம் கிண்டல்.

“என் நேரம்டி” என்றவன், “எப்போதான் என் செயினை சரி செஞ்சு கழுத்துல போடுவ” என்று கேட்டான்.

“அவ்வளுவா எதிர்பார்க்கிறீங்க. இதுக்காவே போட மாட்டேன்”

“என்கிட்ட கொடுத்துடு. நானே வைச்சுகிறேன்”

“தூக்கிட்டு போக எதுடா சேன்ஸ்ன்னு இருக்கிறது?”

“உன்னை தூக்க முடியலை. அதையாவது தூக்கிட்டு போலாம்ன்னு தான். இரண்டுமே எனக்கு உடந்தை பட்டது தானே” என,

“பாப்பா” என்று வந்தார் தணிகைவேல். அவருடன் ப்ரவீனும்.

இருவரின் கைகளும் இன்னும் இணைந்திருக்க, தீயாய் பார்த்தவர், “என்ன இது? என்கிட்ட முடிச்சுக்கலாம் சொல்லிட்டு என் பொண்ணுகிட்ட என்ன பண்றீங்க?” என்று ரகுராமிடம் ஒருவித குற்ற சாட்டாக கேட்டார்.

ஜனக்நந்தினி கையை விலக்க பார்க்க, ரகுராம் விடாமல் இறுக்கி பிடித்தான். அவரின் கேள்வி அவனை பிடிக்க வைத்தது.

“நான் முடிச்சுக்கலாம் சொல்லலை. நீங்களே சொன்னீங்க. அதோட நீங்க விலகுங்க பாக்கி நான் என் பொண்ணுகிட்ட பேசிக்கிறேன் சொன்னீங்க. எட்டு மாசம் ஆகிடுச்சு அவ இன்னும் அப்படியே தான் இருக்கா. நான் நிச்சயம் பண்ண மாதிரியே. இப்போவும் நான் என் உரிமையை ஏன் விடணும்” என்றான் ரகுராம்.

“அது நிச்சயம் செல்லாதுன்னு”

“என் வீட்ல இருந்து யாரும் முறையா சொன்னாங்களா?”

“அவங்க ஏன் சொல்ல போறாங்க. இது என் பொண்ணு வாழ்க்கை நான் தானே போராடணும். உங்ககிட்ட, உங்க அத்தைகிட்ட, உங்க வீட்டு ஆளுங்ககிட்ட, இதோ என் பொண்ணுகிட்ட கூட நான் தான் மல்லுக்கட்டணும்” என்று குரலை உயர்த்த, ரகுராம் வீட்டு ஆட்களும் இவன் வாரததில் உள்ளே வந்துவிட்டனர்.

“என்னாச்சு ரகு?” என்று சித்தப்பா மகன் பக்கத்தில் முதல் ஆளாக நின்றார். அருணகிரி இணைந்த கைகளை பார்த்து  புரிந்து கொண்டார்.

“பாப்பா. இங்க வா” என்று ப்ரவீன் மறுபக்கம் நின்று அழைக்க,

“இல்லை அவ இருக்கட்டும்” என்றான் ரகுராம்.

“முதல்ல அவ கைய விடுங்க” என்று தணிகைவேல் கோவப்பட,

“விட்டாலும் இது தான்” என்றான் ரகுராம்.

“தம்பி.. என்ன இது” என்று அருணகிரி சொல்லவே, அவள் கையை விட்டான். ஆனாலும் பக்கத்திலே தான் நின்றான்.

“இது சரிவராதுன்னு தான் நான் உங்க மகன்கிட்ட பேசினேன். ஆனா இவர். ம்ப்ச் என் பொண்ணுமே தான். இவங்க.. இவங்க என்னை, நான் சொல்றதை கேட்க மாட்டேன்னு நிக்கிறாங்க. அப்பாவா நான் தப்பா சொல்லுங்க” என்று அருணகிரியிடம் கேட்டார்.

“இப்போ இந்த விஷயத்தை எல்லாம் பேச கூடாது தான். ஆனா ஆரம்பிச்சாச்சு. நீங்க கொஞ்சம் கோவத்தை விட்டா நாம பேசலாம்” என்றார் அருணகிரி.

“எப்படிங்க என் கோவத்தை விட? என் பொண்ணுக்கு அப்பாவா நான் அவளுக்கு யோசிக்க கூடாதா?”

“நானும் என் மகனுக்கு அப்பா தான். பணம், வசதி, அந்தஸ்து எல்லாம் பாசத்துல பார்த்தா தப்புங்க” என்றார் அருணகிரி.

“அப்போ நான்.. நான் மட்டும் தான் தப்பு இல்லை” தணிகைவேல் குமுற,

“இல்லை.. நாம எல்லோரும் தான் தப்பு. அதை சரி செய்ய பார்க்கணும். இன்னும் சுருக்கை இறுக்க கூடாது” என்றார் அருணகிரி நிதானமாக.

“சுருக்கு போட்டது நீங்க எல்லாம்தான். உங்க சொந்தம், உங்க தங்கச்சி”

“உங்க மக மேல உங்களுக்கு இருக்கிற உரிமை தான் எங்க தங்கச்சிக்கும் அவ மக மேல இருக்கு. உண்மை தானுங்களேன்”

“அன்னைக்கு நீங்க உங்க விருப்பம் தான் முக்கியம்ன்னு என் அப்பாவை வைச்சு மட்டுமே அவளை கட்டிக்கிட்டு வந்துட்டீங்க. ஆனா என் மகன் அப்படி இல்லை. அப்பா, அம்மா இரண்டு பேர் சம்மதமும் வேணும்ன்னு நிக்கிறான்” என்றார் அருணகிரி.

தணிகைவேல் பேச்சின்றி நிற்க, “இனியும் இவங்க மனசை மாத்த முடியும்ன்னு நினைக்கிறீங்களா? எங்க சுயகௌரவத்தை நீங்க மதிச்சதில்லை, அப்படியும் என் மகனால் உங்க மகளை விட முடியல. உங்க ஆஸ்தி, அந்தஸ்தை விட, என் மகன் விட்டு கொடுக்குறது ரொம்பவே பெருசுங்க” என்றார் சுரீரென இறக்கி.

ரகுராம் இத்தனை மாதங்களில் மறுபடி அவரிடம் சென்று பேசாதது அதனால் தானே?

“இத்தனை வருஷம் என் தங்கச்சி விஷயத்துல நாங்க பண்ண  தப்பை உங்க மகளுக்கு நீங்க பண்ணிடாதீங்க” என, தணிகைவேல் ஓய்ந்து தான் போனார்.

“அப்பாவா என் பொண்ணு நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிறது தப்பா?”

“நாங்களும் என் தங்கச்சி விஷயத்துல அப்படி தான் நினைச்சோம்” என்றார் ராமமூர்த்தி பட்டென.

“நிச்சயம் உங்க பொண்ணு சந்தோஷமா இருப்பா. என் வார்த்தை, நான்.. என் உயிர் தான் அதுக்கு கேரண்டி. இதுக்கு மேல வேறென்ன எதிர்பார்க்கிறீங்க சொல்லுங்க” என்றான் ரகுராம்.

அவன் உறுதியில் தான் தோற்பதாக தந்தை தளர்ந்தார். இருக்கையில்  சோர்ந்தமர, ஜனக்நந்தினி நொடியில் அப்பா கை பிடித்து கொண்டாள்.

“ப்ளீஸ்” என்றாள் ரகுராமிடம்.

“என்னை ப்ளீஸ் பண்ணாத” என்றான் ரகுராம்.

“நீ உன் அப்பாவை பாரு. ஆனா இப்போ பேசினது பேசினது தான். நீ எனக்கு தான்!”

“முதல்ல உன் அப்பாவை என்னை நம்ப சொல்லு. என் தாத்தா அன்னைக்கு இவர் சொத்தை பார்த்து இவரை நம்பியிருக்க மாட்டார். அவர் பொண்ணு மேல இவர் வைச்ச அன்பை தான் நம்பியிருப்பார். ஆனா இவர், இன்னைக்கு அவர் பொண்ணுன்னு வரும் போது அந்தஸ்தை உள்ள கொண்டு வரார்”

“அவர் பொண்ணுக்கு பணம், சொத்து தான் சந்தோஷம் கொடுக்கும்ன்னு நம்புறார். நான் என்னை நம்புறேன். உன்னை எனக்கு கொடுக்கிற எண்ணம் இல்லாமலே  நீ என்னோட சந்தோஷமா இருக்க மாட்டேன்னா நான் எப்படி என்னை ப்ரூவ் பண்ண முடியும்?”

“எல்லோருக்கும் ஒரே நியாயம் தான். விருப்பம், ஆசை ஒன்னு தான். இவருக்கும், எனக்கும் தனி தனி அர்த்தம் கொடுக்காது” என்றவன், பொதுவான தலையசைப்புடன் கிளம்பிவிட்டான்.

Advertisement