Advertisement

அழகியல் 13

இன்று தான் பாரதிக்கான சிகிச்சைக்கு  நாள் கொடுத்திருந்தனர். மருத்துவமனை கோயம்பத்தூரில் இருக்க, எல்லோரும் காலையிலே கிளம்பி வந்துவிட்டனர்.

ஆர்த்திக்கு வளைகாப்பு முடிந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது. ஒரு வாரத்திலே பாரதி வர வேண்டியது. “போகட்டும்.. போகட்டும்” என்று இரண்டு வாரம் ஆக்கிவிட்டார்.

ஜனக்நந்தினி அம்மாவை சென்னை அழைத்து கொள்ள  போராடி பார்த்துவிட்டாள். பாரதி மட்டுமில்லை வீட்டில் யாருமே ஒத்துக்கொள்ளவில்லை.

“ஏன் பாப்பா? எதுக்கு அவளை சென்னை கூப்பிடுற?” என்று ராஜேஸ்வரி தான் முதலில் ஆரம்பித்தார்.

“என்ன புதுசா ப்ரவீன்?” என்று தணிகைவேல் கேட்க,

“அதானே. இதென்ன கண்ணு, அம்மா பார்த்துப்பாங்க தானே. சின்ன பொண்ணு நீ என்ன பண்ணுவ?” என்று வேணியும் இணைந்தார்.

“என்னடா இது அதிசயம்” என்று பார்த்திருந்தனர் அண்ணனும், தங்கையும்.

வேணியிடம் இப்போது நிறையவே மாற்றம் தெரிந்த போதும் அவரை நம்ப பயமே. ஜனக்நந்தினி அவர் மகனை மறுத்த முதல் சில வாரங்கள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு தான் இருந்தார்.

வீடு பக்கமும் வருவதில்லை. இவர்கள் தான்  சென்று பார்த்து வந்தனர். ராக்கிக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பிக்க, அவர் தலைவலியும் ஆரம்பித்தது.

“ஏன் அண்ணன் மகளை தானே கட்டுறேன்னு சொன்னீங்க? இப்போ என்ன வெளியே பார்க்கிறீங்க?” என்று தான் முதல் கேள்வி வந்தது.

“சொந்தத்துல வேணாம்ன்னு பெரியவங்களாய் முடிவு எடுத்துட்டோம்” என்று அவர் சொல்ல,

“பாரதியை இவங்க எப்படி நடத்துவாங்கன்னு நமக்கு தெரியாதா? அதான் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க போல” என்று பேச செய்தனர்.

தன் குடும்பம் விஷயம், தங்களுக்குள்  என்று நினைத்திருந்தது எல்லோருக்கும் தெரிந்ததில் வேணிக்கு உதைப்பு.

“நாம என்ன பண்றோம், என்ன பேசுறோம், எப்படி நடந்துகிறோம்ன்னு  நம்மளை விட நம்மளை சுத்தி இருக்கிறவங்க தான் அதிகம் பார்ப்பாங்க. இனியாவது பார்த்து நடந்துக்கோ” என்று சுந்தரம் ஊசி ஏற்றிவிட்டு சென்றார்.

“எங்க குடும்பத்திற்கு அவர் தகுதியானவர் இல்லை” என்ற ராஜேஸ்வரியின் எண்ணம் அவர் மனதிலும் இருந்தது. அதன் வெளிப்பாடே அவர் பாரதியிடம் பிரதிபலித்தது.

வருடங்கள் கடந்தும் தன் நடத்தைக்கான நியாயத்தை மறு பரிசீலனை செய்யாதவரை, வெளியுலகம் செய்ய வைத்தது. பாரதியிடம் காமித்த தன் குணம், வெளியே அவரின் பிம்பத்தை சரித்திருப்பது தெரிந்து அதிர்ச்சி, அச்சம் தான்.

இரண்டு மகன்கள் அவருக்கு. ராக்கி மிகவும் நல்லவன். அவனுக்கே இப்படி என்றால், சின்ன மகனை நினைத்தால் நெஞ்சு இப்போதே வலித்தது. படித்து முடித்து தொழிலுக்குள் வராமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி கொண்டிருந்தான் அவன்.

முதலில் ராக்கி வாழ்க்கையை செட்டில் ஆக்கிவிட்டு அவனிடம் செல்வோம் என நினைத்திருக்க, ராக்கி வாழ்க்கையே கேள்வி குறியில் நின்றது. அதுவும் தன்னாலே? அம்மாவிற்கு வேறெதையும் விட இது குத்தாமல் இருக்குமா?

ஓர் அளவுக்கு மேல் தங்கள் அந்தஸ்துள்ள  பெண்ணே வேண்டாம் எனும் அளவுக்கு சென்றுவிட்டது. “திருமணம் முடிந்த கையோடு தனி வீடு தான் செல்ல வேண்டும். இவங்ககிட்ட என் பொண்ணு எப்படி இருப்பா?” என்று ஒரு அம்மா முகத்திற்கு நேரே பேசிவிட்டார்.

“இவங்க மாப்பிள்ளைக்கு ஒன்னும் கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை, எங்ககிட்ட இல்லாத சொத்தா? அம்மாவை பார்த்து நல்ல பையனை விட முடியுமா?” என்று உறுதி முடியும் முன்னே மகனை அவரிடம் இருந்து பிரிக்க பார்த்தனர் வேறொரு பெண் வீட்டார்.

மிகவும் நம்பிக்கை வைத்த குடும்பங்கள் இரண்டும். நிச்சயம் வரை பேசி முறிந்துவிட்டது. வேணி அதுவரை சிந்தாத கண்ணீரை சிந்தினார். ராக்கி தான் அம்மாவை சமாளிக்க, இளைய மகனோ, “ஏன் அழுறீங்க. ஆக்சுவலி யூ டிசர்வ் இட் மாம்” என்று சென்றான்.

விஷயம் கேள்விப்பட்டு, தணிகைவேல் மனைவி, அம்மாவுடன் அவரை பார்க்க செல்ல, வேணி நிமிர்ந்தே நின்றார். தன் துக்கத்தை காட்டி கொள்ளவில்லை. பாரதியிடம் அவர் கொண்ட குணம் அதன் இருப்பை காட்டியே நின்றது.

ஒரே மாற்றம், வார்த்தைகள் சிதறவில்லை. அதற்காக உறவாடவும் அவர் நினைக்கவில்லை. “உன்னை பேசுறேன்னு என் பேர் தான் வெளியே கெட்டு போச்சு, நீ உன் இடத்துல இரு. நான் என் இடத்துல இருக்கேன்” என்ற இறுதியான முடிவுக்கு வந்துவிட்டார்.

பாரதிக்கு அவரின் குத்தும் பேச்சுக்கள் இல்லாதது மகிழ்ச்சியை எல்லாம் கொடுத்துவிடவில்லை. ஒரு மாதிரி அமைதியான மனநிலை. எதுவும் கண்டு கொண்டதாக காட்டி கொள்வதில்லை.

இப்போதும் மகளிடம் அவர் தனக்காக பேச, பிள்ளைகளை போல் முகத்தில் கூட எதையும் அவர் காட்டவில்லை. மௌனமாகவே இருந்தார்.

“நான் வீட்ல இருந்தே வேலை பார்க்க கேட்டிருக்கேன் பாட்டி. அம்மாவை பார்த்துக்க என்னால முடியும்” என்று ஜனக்நந்தினி சொல்ல,

“அப்படி ஏன் நீயே  பார்த்துக்கணும்ன்னு தான் நான் கேட்கிறேன். அவளை பார்த்துக்க நாங்க இல்லையா?” என்றார் ராஜேஸ்வரி.

“உங்களுக்கு எதுக்கு சிரமம்”

“எனக்கு சிரமம்ன்னு நான் எப்போ சொன்னேன் கண்ணு? பாரதி நீ ஏதும் அவகிட்ட சொன்னியா?” என்று மருமகளிடம் கேட்டார் அவர்.

“நான் வேண்டாம்ன்னு தான் சொல்றேன் அத்தை. அவ தான் கேட்க மாட்டேங்கிறா” பாரதி சொல்ல,

“பாப்பா அம்மாவை பார்த்தா என்ன, இதுக்கு கூட ஒரு பஞ்சாயத்தா?” என்றான் ப்ரவீன்.

“ப்ரவீன் எல்லா நேரமும் பேசுற மாதிரி இப்போவும் பேசாத. உன் அம்மாவை பார்த்துக்க நான் இருக்கேன். நீங்க யாரும் தேவையில்லை” என்ற ராஜேஸ்வரியிடம் கோவமே.

“பாட்டி நான்”

“ப்ரவீன்” என்று நிறுத்தினார் பாரதி. “இதை இப்படியே விடுங்க” என்றார் பிள்ளைகளிடம் கண்டிப்புடன்.

ராஜேஸ்வரி பேரப்பிள்ளைகளை முறைத்து செல்ல, “ம்மா.. ஏன்ம்மா” என்றாள் மகள்.

“நான் தான் சொன்னேன் இல்லை கண்ணு. அவங்க பார்த்துப்பாங்க விடு” என்றார்.

 ராஜேஸ்வரி பார்த்துக்கொள்வார் தான். ஆனால் ஆறுதலாக பேசி, கேர் எடுத்து செய்வார் என்று இல்லை. நேரத்துக்கு எல்லாம் சரியாக வந்துவிடும். வேலைகளில் மட்டுமில்லை அவர் பேச்சில் இருந்தும் முழு ஓய்வு கொடுத்துவிடுவார். பாரதிக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

பிள்ளைகள் அம்மா பேச்சை ஏற்று கொண்டு சென்றுவிட, தணிகைவேல்  “அம்மா விட்டிருந்தா பாப்பா கூட  போயிருப்ப இல்லை” என்று மனைவியிடம் கேட்டார்.

“நீங்க தான் என்மேல கோவமா இருக்கீங்களே. என்னை பார்க்காம நிம்மதியா இருக்கட்டும்ன்னு தான்” என்று பாரதி சொல்ல,  தணிகைவேல் மனைவியை வெறித்தார்.

“என்னங்க”

“கோவப்பட கூட எனக்கு இந்த வீட்ல உரிமை இல்லாம போச்சு இல்லை”

“நான் அப்படி சொல்லலைங்க”

“வேணாம் பாரதி. உன்னை, இந்த ஊரை பொறுத்தவரை நான் கையாலாகாத புருஷன். பொண்டாட்டியை அம்மாகிட்ட பேச்சு வாங்க விடுறேன். இப்போ மகளுக்கும் நான் தேவையில்லாத அப்பா ஆகிட்டேன். விடு. என் தலையெழுத்து இவ்வளவு தான்” என்று வெளியேறிவிட்டார்.

“வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம் பாரதி நீ. இன்னும் அவரோட வம்பை கூடிட்டே போற” தன்னை தானே கடிந்து கொண்டார்.

ஜனக்நந்தினி இடையில் சென்னை சென்று மறுவாரம் ஊருக்கு வந்துவிட்டாள். பாரதி நாட்களை தள்ளி கொண்டே செல்ல, குடும்பத்தினர் ஒரே முடிவாக அவரை இன்று மருத்துவமனை அழைத்து வந்துவிட்டனர்.

நாளை காலை நேரம் குறித்திருந்தனர். பாரதியை அதற்குள்  தயார்படுத்த, அருணகிரி குடும்பத்துடன் வந்துவிட்டார்.

ராஜேஸ்வரி நொடித்து கொண்டவர், அவர்களிடம் இருந்து தள்ளியே இருந்தார். அருணகிரி குடும்பத்தாரும் அவரிடம் நலம் விசாரித்ததோடு சரி, அதன் பின் அவரை நெருங்கவில்லை.

பாரதிக்கு தான் அறை நிறைந்த தன் சொந்தங்களை பார்க்கவும் தானே கண்ணீர் சுரந்தது. மெல்லிய பயத்தோடு இருந்தவர், அண்ணன்களை பார்க்கவும் அழுகவே செய்துவிட்டார்.

“இப்போ எதுக்கு அழுற. இதெல்லாம் இப்போ சின்ன விஷயம் ஆகிடுச்சு” என்று ராமமூர்த்தி அதட்டி, தங்கை கண்ணீரை துடைத்தார்.  அருணகிரி தங்கை கையை ஆறுதலாக  பிடித்து கொள்ள, பார்த்திருந்த தணிகைவேல்க்கு எங்கோ, எதுவோ உடைந்தது.

“என் கை பிடித்து மனைவி ஆறுதல் தேடவில்லையே?”

“பாரதி. இப்போ அழுக கூடாது. உடம்பையும், மனசையும் சரியா வைச்சுக்கோ. முகத்தை துடை. நீங்க தள்ளி இருங்க முதல்ல அவளை அழ வைச்சுக்கிட்டு” என்று பத்மா முதல் முறையாக அண்ணி ஸ்தானத்தில் இருந்து கண்டித்தவர், துண்டு எடுத்து முகத்தையும் துடைத்துவிட்டார். மஞ்சுளா அவருக்கு குடிக்க ஜுஸ் கலந்து கொடுத்தார்.

பாரதிக்கு நெஞ்சம் விம்மி தான் போனது, தன் போராட்டம் கொடுத்த பலன் அவரை மகிழ்ச்சியில் நெஞ்சடைக்க வைத்தது.

தன் பிள்ளைகள் பிறந்த நேரம் மூன்றாவது ஆட்களாக வந்து சென்ற உறவுகள் இன்று உரிமையுடன் உடன் நிற்க, கேட்கவும் வேண்டுமா? கண்கள் கலங்கி, முகம் மகிழ்ச்சியில் விகசித்திருந்தது.

ப்ரவீனும், ஜனக்நந்தினியும் டாக்டரை பார்த்துவிட்டு வந்தவர்கள், அருணகிரி வீட்டினரிடம் நலம் விசாரித்தனர். அனுஷா மகனை மாமியாரிடம் விட்டு வந்திருக்க, பாரதியிடம் தைரியமாக இருக்க சொல்லி,  கணவனுடன் கிளம்பினாள்.

பின்மாலை போல சுந்தரமும், ராகேஷும் வந்தனர். “வாங்கண்ணா” என்று பாரதி வரவேற்க,

“சீக்கிரம் சரியாகி, வீட்டுக்கு வந்து எனக்கு காபி போட்டு கொடுக்கணும் பாரதி” என்றார் சுந்தரம் அன்பு கட்டளையாக.

பாரதி சரியென்று தலையசைத்து சிரிக்க, ராக்கி அவர் கை பிடித்து பேசி கொண்டிருந்தான். ஜனக்நந்தினியும், ப்ரவீனும் வந்தவர்களுக்கு குடிக்க காபி, டீ வர வைத்து கொடுத்தனர்.

சுந்தரம் மகனுடன் கிளம்ப, வேணி அவர்களுடனே நாளை வருவதாக சொல்லி கிளம்பினார். பாரதி தலையசைத்து விடை கொடுத்தார். “அம்மா நீங்களும் வீட்டுக்கு கிளம்புங்க. இங்க தங்க கஷ்டம்” என்று தணிகைவேல் சொல்ல, அவர் முடியாது என்றார்.

அருணகிரி குடும்பம் மருத்துவனை வளாகத்திலே இருக்க, அவரும் நகர மாட்டேன் என்றார். இத்தனை வருஷம் நான் தானே இருந்தேன். இப்போ என்ன புதுசா இவங்க? முகத்தை தூக்கி வைத்திருந்தார்.

தணிகைவேல் வேறு வழி இல்லாமல், அங்கேயே மேலும் இரு அறை வாடகைக்கு எடுத்தார். பத்மா இரவு உணவு எப்படி என்று பாரதிக்கு கேட்டு செய்ய, மற்றவர்களுக்கு உணவு வந்தது.

மஞ்சுளா தானே பொறுப்பெடுத்து செய்தவர், ராஜேஸ்வரிக்கு பேத்தியிடமே கொடுத்தப்பனுப்பினார். ஜனக்நந்தினி பாட்டியை உண்ண வைத்து, அவருடன் இருந்தாள்.

பாரதியை பற்றி கவலையில்லை. பத்மா வந்ததில் இருந்து அவரை விட்டு நகரவில்லை. ராமமூர்த்தி தோணும் போதெல்லாம் சென்று தங்கையை பார்த்து வர, தணிகைவேல் தான் விழித்து நின்றார்.

“நல்லவேளை நான் இவளை லவ் பண்ணும் போது இவர் அங்க இல்லை. காலேஜ் படிச்சுட்டு இருந்தார். இல்லைன்னா மனுஷன் ஆரம்பிக்கும் போதே முடிச்சிருப்பார்.” என்று ராமமூர்த்தியை பார்த்து தலையாட்டி கொண்டார்.

பத்மா இரவு உணவு எடுக்க போக, தணிகைவேல் மனைவி பக்கம் அமர்ந்தார். பாரதி மெலிதாக சிரிக்க, “என்னை கண்ணுக்கு தெரியுதா?” என்றார் அவர்.

“ஏங்க”

“உன் அண்ணாங்க கை பிடிச்சு அழுற. ஏன் என் கை பிடிக்க வாட்டமா இல்லையா”

“இல்லைங்க.. என்னமோ அவங்களை பார்க்க, தானே அழுகை வந்துடுச்சு”

“ம்ஹ்ம். நம்புறேன்” என்றவருக்கு பாரதி அந்த சூழலில் இருப்பதே ஒப்பவில்லை.

அந்த நேரம் அவரின் மேல் இருந்த கோவம் எல்லாம் இருந்த தடயமே இல்லை. மனைவி நல்லபடியே மீண்டு வந்தால் போதும் என்ற வேண்டுதல் மட்டுமே.

“உனக்கு ஒன்னும் காம்ப்ளிகேஷன் எல்லாம் இல்லை. ஒரு வாரத்துல ரெடியாகிடுவ” என்றார் தனக்கும் சேர்த்து.

மனைவி தலையசைக்க, “என்ன பாரதி” என்றார்.

தள்ளி இருந்த கைகள் சேர்ந்திருக்க, அழுத்தம் கொடுத்த பாரதி, “எனக்கும் தெரியுங்க. ஆனாலும் எதோ. ச்சு. விடுங்க” என்றார்.

“நெகட்டிவா எதாவது யோசிச்சா அவ்வளவுதான். என்ன பண்ற நீ”

“இல்லைங்க. தானே, தப்பு தான். என்னை சுத்தி இத்தனை பேர் இருக்கும் போது எனக்கென்ன கவலை. இப்போதான் எனக்கு கிடைக்காதது எல்லாம் கிடைக்குது. இதுக்காகவே நான் இன்னும் நல்லா வருவேன்” என்றார் மீண்டு கொண்டு.

“ம்ம்.. அதானே. என்னையே மறக்குற அளவு, நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். சரியாகி வா. அப்பறம் இருக்கு உனக்கு” என்றார் மிரட்டலாக.

அதற்குள் கதவு தட்டும் சத்தம் கேட்க, “இது கண்டிப்பா உன் சின்ன அண்ணனா தான் இருப்பார்” என்றார் கடுப்பாக.

“அவருக்கு நான் எப்போவும் கொஞ்சம் ஸ்பெஷல்ங்க” என்றார் பாரதி நெகிழ்ச்சியுடன்.

திரும்ப தட்ட, தணிகைவேல் முகம் சுருக்கி வைத்து கதவு திறந்தார். ராமமூர்த்தி தங்கையிடம் சென்றவர், “இத்தனை வருஷம் கூடவே தானே இருந்தார். என்னமோ புது மாப்பிள்ளை கணக்கா முகம் தூக்குறார்”   என்றார்.

தணிகைவேல் கேட்டபடி வெளியே செல்ல, பாரதி சிரித்தார். “அண்ணி நைட் உன் கூட இருப்பாங்க. அவரை போய் ரெஸ்ட் எடுக்க சொல்லு” என்றார்.

“ரகுராம் வரலையா?” பாரதி கேட்டேவிட்டார். அவனுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். ஆனாலும் ஒரு ஏக்கம்.

“காலையில வந்துடுவான்” என்றார் ராமமூர்த்தி. ஜனக்நந்தினி கேட்டபடி உள்ளே வர, “பாட்டி தூங்கிட்டாங்களா?” என்று கேட்டார் பாரதி.

“ம்ம் ம்மா” என்று மகள் சொல்ல, பத்மா வந்துவிட்டார்.

Advertisement