Advertisement

அழகியல் 12

அருணகிரி தறி செல்ல கிளம்பி கொண்டிருக்க, “ஏங்க” என்று வந்தார் பத்மா. “நாளைக்கு பொண்ணோட கிரகப்பிரவேசம். நாம அங்க போய் ஒன்னு இரண்டு உதவி பண்ண வேணாமா?” என்று கேட்டார்.

“நீ கிளம்பு பத்மா. நான் சாயந்திரம் வரேன்” என்றார் அவர்.

“நீங்களும் ஒரு எட்டு வந்துட்டு”

“பத்மா. இன்னைக்கு பார்சல் அனுப்ப வேண்டியது இருக்கு. நான் போகணும்” என்று முடித்துவிட்டார் அவர்.

பத்மா முகம் தூக்கி வைத்தபடி கிளம்பிவிட, அருணகிரி நேரே தறிக்கு சென்றுவிட்டார். அனுஷா வீடு கட்டி முடிந்து, நாளை கிரகப்பிரவேசம்.

சொந்த ஊரில் பெரிதாக வீடு இருந்தால் தான் கௌரவம் என்ற எண்ணம் சுதாகருக்கும் இருக்க, ஒரு கிரவுண்டில் நன்றாக எடுத்து கட்டியிருந்தான்.

பத்மாவிற்கு மகள் வீட்டை பார்க்கவும் பெருமை, மகிழ்ச்சி. “நல்லா இருக்குக்கா” என்று உடன் வந்த மஞ்சுளா சொல்ல, ஆமோதிப்பாக தலையாட்டி கொண்டார்.

அனுஷா வாசலுக்கு வந்து அம்மா, சித்தி இருவரையும் உள்ளே அழைத்து செல்ல, ஏற்பாடுகள் ஜோராக நடந்து கொண்டிருந்தது.  “வாங்க வாங்க” என்று சம்மந்தக்காரர்கள் வரவேற்க, இவர்களும் வேலைகளில் உடன் இணைந்து கொண்டனர்.

“தம்பி எப்போம்மா வரான்?” என்று அனுஷா கேட்க,

“கிரகப்பிரவேசம் அப்போ கண்டிப்பா இங்க இருப்பான்” என்றார் பத்மா.

“ஏதோ பார்ட் டைம் வேலை எல்லாம் செய்றான்னு கேள்விப்பட்டேன் அண்ணி. இன்னுமா செய்றான்” என்று அனுஷாவின் மாமியார் கேட்டார்.

பத்மா, “ஆமா அண்ணி. நல்ல சம்பளம்” என,

“செய்யட்டும். நாளை பின்ன நீங்களும் இந்த மாதிரி பெரிய வீடு கட்டணும் இல்லை. ஓடி ஓடி உழைச்சா தான் உண்டு” என்றார் அவர்.

என்ன அர்த்தத்தில இவங்க சொல்றாங்க என்று பெண்கள் முகம் பார்த்து கொள்ள, அவர் இயல்பாய் பூ தொடுத்தார். பத்மாவிற்கு தாங்களும் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உண்டு தான். ஆனால் கணவனும், மகனும் என்ன சொல்வார்கள் என்று அமைதி காத்திருந்தார்.

“ம்மா.. புடவை ரொம்ப நல்லா இருக்கு. டிசைன் எல்லாம் ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி இருக்கு” என்று அனுஷா சொல்ல,

“ஆமா அண்ணி நானும் சொல்ல நினைச்சேன். என் புடவை கூட ரொம்ப நல்லா இருக்கு. முன்ன விட நிறைய வித்தியாசம் இருக்கு” என்றார் அனுஷாவின் மாமியாரும்.

“ரகு தான் ஏதேதோ செஞ்சிட்டு இருக்கான் அண்ணி. ஆளுங்க இரண்டு மூணு பேரை எடுத்து, ஆன்லன்ல கூட விக்கிறான். முன்ன விட இப்போ பரவாயில்லை” என்றார் பத்மா.

“படிச்ச பிள்ளைங்களுக்கு காலத்துக்கு ஏத்த மாதிரி வியாபாரம் பண்ண தெரியுது. நம்ம காலம் தான் குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்டினது” என்றார் அவர்.

“ஆமா அண்ணி. ஆரம்பிச்ச புதுசுல ரொம்ப சுமார் தான். இப்போ ஒரு இரண்டு மூணு மாசமா தான் ஆர்டர் கொஞ்சம் வருது. சொன்ன தேதிக்கு அவங்களுக்கு கொரியர் பண்ணனும்ன்னு தான் அனுஷா அப்பாவும் வரலை” என்றார் பத்மா.

“நம்ம சொந்த பந்தம் கூட கேட்டாங்க. பன்க்ஷன் முடியவும் அனுப்பி விடுறேன்” என்றார் அவர்.

சுதாகரன் வெளியே சென்றுவிட்டு வந்தவன், மாமியார்களை வரவேற்று அமர்ந்தான். அனுஷா அவனுக்கு ஜுஸ் கொடுக்க, “எல்லோருக்கும் கொடு” என்றான்.

“இப்போ தான் காபி குடிச்சோம் மாப்பிள்ளை” என்று பத்மா சொல்ல, அதன் பின் பொதுவான பேச்சுக்களுடன் வேலைகளும் வேகமாக நடந்தது.

பின் மாலை போல உறவுகளும்,  அருணகிரியுடன், ராமமூர்த்தியும் வந்துவிட, புது வீடு சொந்தங்களால் நிறைந்தது. ரகுராம் இனி தான் பஸ் ஏறுவதாக சொல்லியிருந்தான்.

“என்ன மாப்பிள்ளை ஒரே சலிப்பா இருக்கீங்க” என்று சுதாகரிடம் தனியே ராமமூர்த்தி கேட்க,

“பின்ன என்ன மாமா யாரை பார்த்தாலும் வீடு கட்ட எவ்வளவு ஆச்சு. கடன் எவ்வளவு வாங்கின, யார்கிட்ட வாங்கின, உன் மாமியார் வீட்ல கொடுத்தாங்களான்னு தான் கேட்கிறாங்க. சொல்லி மாளலை” என்றான் அவன்.

“நீங்க தப்பு பண்ணிட்டீங்க மாப்பிள்ளை. பேசாம வாசல்லே ஒரு நோட்டீஸ் போர்ட் வச்சிட்டிருக்கணும்” என்றார் அவர்.

“என்ன மாமா கிண்டல் பண்றீங்க பார்த்தீங்களா”

“அட இல்லை மாப்பிள்ளை நான் உண்மையா தான் சொல்றேன்” என,

“அவங்களே பரவாயில்லை. போங்க நீங்க” என்று சென்றான் அவன். ராமமூர்த்தி சிரிக்க, “என்ன மாப்பிள்ளைகிட்ட வம்பு” என்று வந்தார் மஞ்சுளா.

“நீ உன் சிநேகிதிகிட்ட பேசிட்டியா? எப்போ வராங்களாம் மேடம்” என்று கேட்டார் அவர்.

“உங்க தங்கச்சி சொன்னா குறைஞ்சிடுவீங்களா?” மஞ்சுளா நொடித்தவர், “காலையில வரேன். நேரம் சொல்ல முடியலன்னு சொன்னா” என்றார்.

“ஏனாம். சீக்கிரம் வந்தா அவங்க சொத்தை யாராவது தூக்கிட்டு போயிடுவாங்களா?”

“மருமகளுக்கு ஏழு  மாசம். வீட்ல அந்த பாட்டிக்கும், அவளுக்கும் ஒத்தே வர மாட்டேங்குதாம். ஆர்த்தியை கூட கூட்டிட்டு வரலாம்ன்னா கூடாதுன்னு சொல்றாங்களாம். ஆர்த்தி நானும் வருவேன்னு நிக்கிறாளாம். என்ன பண்ணன்னு நீங்க சொல்லுங்க” என்றார் மஞ்சுளா.

“என்னை கேட்டா. அவளுக்கு தெரியாதா வேலையா. சமாளிக்க சொல்லு” என்றார் ராமமூர்த்தி.

“அப்போ இப்படி எல்லாம் நக்கலா பேச கூடாது. போய் வேலையை பாருங்க போங்க” என்று மஞ்சுளா செல்ல,

“என்னை போக சொல்லிட்டு இவ போறா பாரு” என்றார் ராமமூர்த்தி சத்தமாக.

“இப்போ என்ன நான் திரும்பி வரவா?” மஞ்சுளா நின்று கேட்க,

“வா. அப்படியே வீட்டுக்கு கிளம்பிடலாம்” என்றார் இவரும்.

“என்ன சித்தப்பா. வீட்டுக்கு போகணுமா?” அனுஷா எங்கிருந்தோ எட்டி பார்த்து கேட்டாள்.

“இங்க சும்மா. நீ பாரு அனுஷா” என்று ராமமூர்த்தி நழுவிவிட, மஞ்சுளா சிரித்து கொண்டார்.

சில கிலோ மீட்டர் தான் இடைவெளி என்பதால் அண்ணனும், தம்பியும் இரவு வீடு திரும்பிவிட்டனர். பெண்கள் மட்டும் அங்கேயே இருக்க, ரகுராம் விடியற்காலையில் கடலூர் வந்து இறங்கினான்.

ராமமூர்த்தி பைக் எடுத்து வந்திருக்க, மூவருமாக குளித்து அனுஷா வீடு வந்தனர். “வந்துட்டியா” என்று அனுஷா தம்பி கை பிடித்து மகிழ, “வாங்க மச்சான்” என்று சுதாகரும் வரவேற்றான்.

தாய் வீட்டு சீருடன், குறித்த நேரத்தில் கிரகப்பிரவேசமும் நல்ல படியே முடிந்துவிட, பந்தி ஆரம்பமானது. சித்தப்பாவும், மகனும் பரிமாற, சுதாகருக்கு உதவியாக இருந்தது.

உறவுகள் ஒவ்வொருவராக வர, எட்டு மணி போலவே பாரதி கார் வந்தது. “வர நேரத்தை பாரு” என்று ராமமூர்த்தி முணுமுணுத்து கொள்ள, “சித்தப்பா” என்றான் மகன்.

“நான் அவளை ஒன்னும் பேச மாட்டேன் போதுமா?” என்றார் அவர் கடுப்புடன்.

பாரதி பெரிய அண்ணனிடம் பேசிவிட்டு, இவர்களை தேடி வந்தார். “உட்காருங்க” என்று ரகு பந்தியில் அவரை அமர சொல்ல, “இல்லை இன்னும் வீட்டுக்குள்ள கூட போகலை” என்றார் அவர்.

ஆள் ஓய்ந்திருந்தார். கண்ணுக்கு கீழ் கருவளையம். பழைய ஜொலிப்பு இல்லை அவரிடம். ராமமூர்த்திக்கு கோவம் காணாமல் போக, பாரதி தலையசைப்புடன் வீட்டுக்குள் சென்றார்.

“மஞ்சுளா இங்க வா” என்று மனைவியை அழைத்தவர், “என்னாச்சு அவளுக்கு? ஏன் இப்படி இருக்கா. ரொம்ப மெலிஞ்சும் போயிட்டா” என்று கேட்டார்.

“தெரியலங்க. நானும் அவளை இப்போ தானே நேர்ல பார்க்கிறேன்” என்றார் மஞ்சுளாவும் கவலையுடன்.

“தினமும் மணிக்கணக்கா பேச தெரியுது, இதெல்லாம் தெரியாதா உனக்கு?” என்று அவர் சத்தமிட,

“சித்தி நீங்க போங்க” என்று அனுப்பி வைத்த ரகுராம், “பொறுங்க சித்தப்பா விசாரிக்கலாம்” என்றான்.

பாரதி சிறிது நேரத்தில் அனுஷா, பத்மா, மஞ்சுளாவுடன் பந்திக்கு வர, அப்பாவும், மகனுமே முன் நின்று பரிமாறினர். “என்ன கொறிச்சிட்டிருக்கவ. நல்லா சாப்பிடு” என்று தங்கையை அதட்டல் இட்டார் ராமமூர்த்தி.

பாரதி கலங்கும் கண்களை இமை சிமிட்டி நிமிராமல் சாப்பிட, வீட்டு ஆட்கள் முகம் பார்த்து கொண்டனர். உணவு முடியவும் பாரதி கிளம்ப போக, “என்ன பாரதி. எங்க இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட? இரு”என்று அருணகிரி வீட்டுக்கு பெரியவராய் அவரை நிறுத்தினார்.

“மருமக என்னை எதிர் பார்த்திட்டிருப்பாண்ணா” என்றார் அவர்.

“சரி வீட்டுக்கு வந்து போ” என,

“இல்லைண்ணா.. கிளம்பனும். மருமகளுக்கு செக் அப் இருக்கு” என்றார்.

ரகுராம் அவர் முன்னே ப்ரவீனுக்கு அழைத்தவன், “அவங்க இன்னைக்கு இங்கேயே இருக்கட்டும். நீங்க செக் அப் பாருங்க” என்றான்.

ப்ரவீன், “அம்மா பொறுமையா வந்தா போதும்” என்றவன், “நான் உங்ககிட்ட பேசணும்” என்றான்.

ரகுராம் சற்று தள்ளி வந்தவன், “சொல்லுங்க” என,

“இப்போ வேண்டாம். நீங்க பங்க்ஷன் பாருங்க. நைட் கூப்பிடுங்க, நான் வெய்ட் பண்ணிட்டிருப்பேன்” என்று வைத்தான்.

மதியம் போல் மொத்த குடும்பமும் கிளம்பி அருணகிரி வீடு வந்தனர். உணவு அங்கேயே முடிந்து விட்டதால், இளநீர் குடித்து அமர்ந்தனர். “வீட்ல எதாவது பிரச்சனையா பாரதி” என்று அருணகிரி கேட்க,

“இல்லைண்ணா.. எனக்கு தான் கர்ப்பபை எடுக்கணும் சொல்றாங்க. அடுத்த வாரம் மருமக வளைகாப்பு முடியவும் எடுக்கலாம்ன்னு இருக்கேன்” என்றார்.

“பேசறப்போ சொல்லவே இல்லை” என்று மஞ்சுளா கேட்க,

“ம்ப்ச்” என்றார் அவர்.

“வேற ஏதும் இல்லையே?” என்று பெரியவர் மீண்டும் கேட்க,

“இல்லைண்ணா” என்றுவிட்டார். ஆனால் மலையளவு உள்ளது. சொல்ல முடியவில்லை. ஆறுதல் தேட நெஞ்சம் தவித்த போதும், தொண்டைக்குள் முழுங்கி கொண்டார்.

காலையில இங்கு கிளம்பும் போது கூட அவ்வளவு ஆர்ப்பாட்டம். “உன்னால தான் என் பேத்தி கல்யாணம் பண்ணாம இருக்கா. நீ இன்னமும் அம்மா வீடு, அம்மா வீடுன்னு சுத்துற” என்று ராஜேஸ்வரி சத்தம்.

ப்ரவீன் தான், “ஆரம்பிச்சிட்டீங்களா” என்று அம்மாவை காப்பாத்தி அனுப்பி வைத்திருந்தான்.

மகளோ சென்னையிலே தங்கிவிட்டாள். ஊருக்கு கூட வருவதில்லை. தணிகைவேல் மகளுக்கு மேல் வீம்பில் இருக்க, பாரதி தான் இங்கும், அங்குமாக அலைந்து கொண்டிருக்கிறார். இதில் உடல் வேறு படுத்துகிறது.

அருணகிரி மட்டுமில்லை யாரும் பாரதி சொன்னதை நம்பவில்லை. “எங்ககிட்ட சொல்ல முடியாதளவு அப்படி என்ன உனக்கு?” என்று ராமமூர்த்தி தான் அதட்டி உரிமையாக கேட்க,

பாரதி தண்ணீர் வாங்கி குடித்தவர், “நீங்க இருந்தது தான் சரி. நான் தான் எல்லாத்தையும் குழப்பி, எல்லார் நிம்மதியையும் பறிச்சுட்டேன்” என்றார்.

“சில உறவுகள் எல்லாம் தள்ளி இருக்கிறதே நலம் தான். எனக்கு தான் அது புரியலை. வைராக்கியத்தோட ஏதேதோ பண்ணி உங்களையும் கடன்ல வைச்சுட்டேன்” என்றார்.

“கடன் எல்லோருக்கும் இருக்கிறது தான், நீ முதல்ல உன் உடம்பை பாரு. வம்பாக்கி வைச்சிருக்க” என்றார் ராமமூர்த்தி.

பாரதி தலையசைக்க, பத்மா மாலை பலகாரம் செய்தார். அருணகிரிக்கு  போன் வரவும், அவர் தறிக்கு கிளம்ப,  “நானும் வரவாண்ணா?” என்று பாரதி கேட்க,

“நான் கூட்டிட்டு போறேன்” என்று ரகுராம் பைக்கிலே அத்தையை அழைத்து சென்றான். இடத்தை விரிவாக்கியிருந்தனர். வேலை நடந்து கொண்டே இருந்தது. அங்கிருந்த புடவைகளை பாரதி ஆசையாக எடுத்து பார்த்தார்.

“சின்ன பிள்ளையிலே நானே நெய்வேன்” என்றார்.

“ஏன் இப்போ செய்ய மாட்டிங்களா?” என்று ரகுராம் கேட்டு அமர,

“செய்வேனே” என்று பாரதியும் மகிழ்ச்சியுடன் வேறொரு தறியில் அமர்ந்தார்.

Advertisement