Advertisement

தணிகைவேல் இவர்களை கவனிக்காமல் மகளிடம் சென்றவர், “பாப்பா.. பெரிய தாத்தா உன்னை கேட்கிறார். வா” என்றார்.

“நான் அப்பறம் பேசிக்கிறேன்ப்பா” என்றாள் மகள்.

“அது மரியாதையா இருக்காது பாப்பா வா” என,

“எனக்கு இந்த மரியாதை தான் தெரியும்ன்னு அவர்கிட்ட சொல்லிடுங்கப்பா” என்றாள் பெண்.

“பாப்பா.. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம். இங்க எல்லாம் பார்க்க வேணாம்”

“அவ்வளவு மோசமான பொண்ணாப்பா  நான்”

“பாப்பா.. மெல்ல. என்ன பேசுற நீ?”

“சரி நீங்க போங்கப்பா”

“பாப்பா. நீ வா. அப்பா பண்ணது தப்பாவே இருக்கட்டும். முகூர்த்தம் முடியவும் பேசிக்கலாம்”

“நீங்க எல்லாம் தப்பு இல்லைப்பா. நான் மட்டும் தான் தப்பு” என்ற ஜனக்நந்தினி குரல் நொடி உடைந்து, சட்டென மீண்டு கொண்டவள், “முகூர்த்தம் முடியவும் என்னை தேடாதீங்க. நான் வீட்டுக்கு கிளம்பிடுவேன்” என்றாள்.

“பாப்பா. இது அதிகம்” தணிகைவேல் குரலிலும் கோவம் தெரிந்தது.

“உன் அண்ணா கல்யாணத்துல நீ இப்படி தான் நடந்துக்குவியா பாப்பா. சரியில்லை. எல்லாம் உன்னை கேட்கிறாங்க. நீ இங்க நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்? வா என்னோட” என்று மகள் கை பிடித்திழுத்து சென்றார் மனிதர்.

மேடைக்கருகில் அவளை சென்றுவிட, அங்கும் கை கட்டி தான் நின்றாள் பெண். “பாப்பா போ. எல்லார்கிட்டயும் பேசு. மினிஸ்டர் வந்துடுவார். நான் அவரை வெல்கம் பண்ண போகணும்” என,

“நீங்க போங்கப்பா” என்றாள் மகள்.

ராஜேஸ்வரி வந்தவர், “நான் என் பேத்தி கூட இருக்கேன். நீ போ வேலா” என்றார்.

தணிகைவேல் மகளை பார்த்தவாறே சென்றார். “கண்ணு நான் இருக்கேன் உனக்கு. நீ தைரியமா இரு” என்றார் ராஜேஸ்வரி.

ஜனக்நந்தினி மௌனம் காத்தாள். ரகுராம் அவளையே பார்த்திருந்தான். “ஏன் இவ இப்படி நடந்துகிறா?” கேள்வி தான்.

ஜனக்நந்தினி அவ்வளவு தூரத்திலும் அவனை பார்த்தாள். நொடி பார்த்தே இருந்தாள். பின் சட்டென மணமகன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

ப்ரவீன் தங்கை வரவும், அவளின் கலங்கிய முகம் பார்த்து  “என்ன பாப்பா” என்றான்.

“நான் ரொம்ப மோசமா நடந்துகிறேன் இல்லை” என்றாள்.

“அப்படி எல்லாம் இல்லை. நீ கொஞ்சம் இரு. கல்யாணம் முடியவும்  நாம இவங்ககிட்ட பேசலாம்” என்றான் ஆதரவாக.

“எனக்கு யார்கிட்டேயும்,  எதுவும் பேச வேண்டாம்ண்ணா” என்றவள், ஓய்வறைக்குள் சென்றுவிட்டாள்.

கண்கள் கரித்து கொண்டு வந்தது. முகத்தில் தண்ணீரை அடித்து கொண்டாள். உடை எல்லாம் ஈரமானது. அதுபற்றி எல்லாம் பார்க்கும் நிலையில் அவள் இல்லை.

நேற்றிரவு நடந்ததையே மனம் மீண்டும் கிளறி பார்த்தது. ரிசப்ஷன் எல்லாம் முடிந்து மண்டபம் அடங்கிவிட, இவள் உடை மாற்ற அறைக்கு சென்றாள்.

ராஜேஸ்வரி வந்தவர், “அப்பா உன்னை கூப்பிடுறார் கண்ணு” என்று அழைத்து சென்றார்.

ஜனக்நந்தினி என்னவோ என்று போக, அங்கு இவள் குடும்பமும், வேறொரு குடும்பமும் இருந்தது. “என் பொண்ணு” என்று மகள் கை பிடித்து முன் நிறுத்தினார் தணிகைவேல்.

அதிர்ந்துவிட்டாள் ஜனக்நந்தினி. என் அப்பாவா இது?

“நான் அவங்ககிட்ட பேசலாமா?” மணமகனாக அறியப்பட்டவன் ஆர்வமாக கேட்டான்.

“பேசுங்க” என்ற குரலுடன்,

“நோ” என்ற இவளும் குரலும் ஒலித்தது.

“பாப்பா என்ன இது”

“சாரி எனக்கு டையர்டா இருக்கு. நான் ரெஸ்ட் எடுக்கணும்” என்று யார் கூப்பிட்டும் நிற்காமல் அறைக்கே வந்துவிட்டாள்.

சில நிமிட இடைவெளியில் அவளின் குடும்பமும் வந்துவிட்டது. “என்ன பண்ணிட்டு வந்திருக்கன்னு உனக்கு தெரியுதா பாப்பா” என்று தந்தை கோவமாக கேட்க,

“நீங்க என்னப்பா பண்றீங்க?” என்றாள் மகள்.

“அந்த பையனை பார்த்த இல்லை. அவனை மறுக்க என்ன காரணம் இருக்கு சொல்லு”

“அவரை பார்த்தா நான் ஓகே சொல்லிடுவேன்னு நினைச்சீங்களா?”

“ஏங்க கொஞ்சம் பொறுமையா இருங்க பேசலாம்” பாரதி சொல்ல,

“நீ இரு பாரதி. அவங்க பேசட்டும்” என்றார் ராஜேஸ்வரி.

“நான் உங்ககிட்ட டைம் கேட்டிருந்தேன்ப்பா. என்கிட்ட சரின்னு சொல்லிட்டு, நீங்க எனக்கு இதை பண்ணியிருக்க கூடாது”

“சும்மா பார்க்கிறதுல என்ன இருக்கு பாப்பா? ஹாண்ட்ஸம், பணம், பாரம்பரியம் எல்லாம் இருக்கு. ஏன் விடணும்?”

“அதுக்காக என்னை போர்ஸ் பண்ணுவீங்களா?”

“ஏன் கண்ணு அன்னைக்கு உன் அம்மா கேட்டான்னு நிச்சயம் வரைக்கும் போன. அவங்களை விட இவங்க எல்லா விதத்திலும் உயர்ந்தவங்க. ஏன் வேணாம் சொல்ற நீ?” என்று ராஜேஸ்வரி கேட்க,

“பாட்டி உங்க போட்டிக்கு நான் தான் கிடைச்சேனா?”

“பாப்பா சரியா பேசு”

“நான் உண்மையா தான் சொல்றேன்ப்பா. அம்மா சொல்லிட்டாங்க, அவங்க மரியாதைக்காக நான் ஓகே சொன்னேன் தான். இப்போ நீங்களும் அதையே ட்ரை பண்றீங்களா?”

“நான் உன் நல்லதுக்கு தான் பண்றேன்”

“என்னை கேட்காம, என் விருப்பம் இல்லாம பண்ற எதுவும் எனக்கு நல்லது ஆகாதுப்பா”

“நீ எதை மனசுல வைச்சு பேசுறேன்னு எனக்கு தெரியும் பாப்பா”

“நான் நினைக்கலைன்னாலும் நீங்க தான் என்னை நினைக்க வைக்கிறீங்க”

“இப்போ நீ முடிவா என்னதான் சொல்ல வர?”

“என்னை வைச்சு நீங்க குடும்பமா விளையாட வேண்டாம்ன்னு சொல்றேன்”

“பாப்பா” தணிகைவேல் கையை ஓங்கிவிட்டார்.

ஜனக்நந்தினி கண்கள் விரிய திகைத்து விட்டாள். “ப்பா. என்ன பண்றீங்க” என்று ப்ரவீன் தங்கை முன் நின்றான்.

“அவளை வைச்சு நான் விளையாடுறேன் சொல்றா. உனக்கு கேட்கலையா?”

“நீங்க எல்லாம் சேர்ந்து அவளை கார்னர் பண்ணா அவ இப்டி தான் பேசுவா”

“இப்போவே வயசு ஆகிடுச்சு? இன்னும் என்ன டைம்?” என்று ராஜேஸ்வரி பேச,

“பாட்டி நீங்க பேசாதீங்க. எல்லாம் உங்களால தான்” என்று ப்ரவீன் பாய்ந்தான்.

“ண்ணா.. விடுங்க. இங்க யாரும் என்னை பத்தி யோசிக்கவே இல்லை” என்றாள் ஜனக்நந்தினி வடிந்துவிட்ட கண்ணீருடன்.

சுந்தரம் வந்து கதவு தட்ட, “நாம அப்பறம் இது பத்தி பேசிக்கலாம்” என்று வெளியே சென்றுவிட்டனர்.

ப்ரவீன், பாரதி மட்டும் இருக்க, “கண்ணு” என்று மகள் அருகில் செல்ல போனார் பாரதி.

“வேண்டாம்மா. நீங்க வராதீங்க. உங்களால தான் நான் இன்னைக்கு.. இன்னைக்கு இப்படி நிற்கிறேன்” என்றுவிட்டாள்.

“நான் அப்போ அவசரப்பட்டேன் தான் கண்ணு. ஆனா இப்போ”

“இப்போ என்ன மாறிடுச்சும்மா?”

“இல்லை கண்ணு உன் விருப்பம்”

“சொல்லாதீங்கம்மா. சொல்லவே சொல்லாதீங்க. அன்னைக்கும் நீங்க என்னை பத்தி யோசிக்கலை. இன்னைக்கும் நீங்க என்னை பத்தி யோசிக்கலை”

“கண்ணு அப்படி சொல்லாத” பாரதி பதற, ஜனக்நந்தினி அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

திணிச்சதே எனக்கு பிடிச்சிடுச்சு. அதை சொன்னா யாரும் ஏத்துக்க தயாரில்லை. தணிகைவேலிடம் எவ்வளவு முயன்றிருப்பாள். எல்லாம் வீண். கடைசியில் அவரும் வேலையை காட்டிவிட்டார்.

அழுகை எல்லாம் போய் எல்லார் மேலும் கோவம் மட்டுமே மிஞ்சியது. அண்ணா திருமணம் என்று புரிகிறது. ஆனால் தன்னை சமாளிக்க முடியவில்லை. அவரை பார்த்ததும் இன்னும் ஏறி கொண்டது.

ப்ரவீன் கதவை தட்ட, முகம் துடைத்து வந்தாள். அருணகிரி, பத்மா, மஞ்சுளா அங்கு இருந்தவர்கள், இவளின் சிவந்த கண்ணில் கேள்வியாக பார்த்தனர்.

இதழ்களை விரித்தவள், அண்ணனுடன் நின்றாள். திருமண சடங்கு ஆரம்பமானது. மாமா மாலை போடப்பட்டு  மணவறைக்கு அழைத்து சென்றனர். ப்ரவீன் தங்கையை உடன் வைத்து கொள்ள, மொத்த குடும்பத்துக்கும் நிம்மதியானது.

குறித்த நேரத்தில் தங்கை விளக்கு பிடிக்க, ப்ரவீன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் இட்டான். அமைச்சர் வந்ததால் சிறிது நேரம் மிகவும் கெடுபிடியாக சென்றது. அதன்பின் உறவுகள் சூழ, ஜனக்நந்தினி கிளம்பிவிட்டாள்.

ரகுராம் அவளை ப்ரைவேட் பார்க்கிங்கில்  நிறுத்தி, “ஏன் இவ்வளவு சீக்கிரம் கிளம்புற, என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

“என்கிட்ட பேசாதீங்க” என்றாள் பெண்.

மஞ்சுளா அவள் அழுததாக சொல்லியிருக்க, இருப்பு கொள்ளவில்லை. “சொன்னா தானே தெரியும்” என்றான்.

“தெரிஞ்சுட்டு என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டாள்.

“இப்படி கேட்டா. முதல்ல சொல்லு”

“சொல்ல முடியாது. நான் ஏன் உங்களுக்கு சொல்லணும். நீங்க யார் எனக்கு?”

“ம்ப்ச். இப்படி பேசாத”

“பேசுவேன். இன்னும் கூட பேசுவேன்” குரல் உயர்த்த, கை பிடித்து  தூணின் மறுபக்கம் கூட்டி வந்தான்.

“என்னை தொடுறீங்க?” என்றாள் அவள் அதற்கும்.

“என்னன்னு சொல்லு?” என்றான் கனிவான குரலில்.

பெண்ணுக்கு தொண்டை அடைத்தது. செருமி கொண்டவள், “நீங்க எனக்கு யாருன்னு கேட்டேனே” என்றாள்.

“நான் உனக்கு யாரா வேணும்?”

“சொன்னா மட்டும் நடந்திடுமா?”

ரகுராமிடம் பதில் இல்லை. பெண்ணுக்கு கோவம் வந்தது. “உங்களை என் அப்பாக்கு புரிய வைக்க முடியலன்னு நிச்சயத்தை பிரேக் பண்ண ஆளு தானே நீங்க” என்றாள் ஊசியாய் குத்தி.

“உங்களுக்கு முதல்ல இருந்தே என்னை பிடிக்கலை. யோசிச்சுட்டே தான் இருந்தீங்க. என் அப்பா பேசவும் அதை காரணமா வைச்சு முடிச்சு விட்டுடீங்க அவ்வளவு தான்”

“பிடிக்கலை சொல்லாத”

“பிடிச்சா விடுவீங்களா?”

“என் தலையெழுத்து அப்படி இருந்தா நான் என்ன செய்யட்டும்”

“அப்போ என் கழுத்துல நீங்க செயினையே போட்டிருக்க கூடாது”

“அதான் அறுந்து போச்சே” என்றான் வெறுமையுடன்.

“சோ.. இதுல நீங்க சொல்ல வரது என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“அதை விடு. உனக்கு இப்போ என்ன பிரச்சனை சொல்லு”

“நீ தான் என் பிரச்சனை” என்றாள் அவன் நெஞ்சில் குத்தி.

ரகுராம் நெற்றி நீவிவிட்டு கொண்டான்.

 “நீ என்னை வேணாம் சொன்ன. வேற ஒருத்தன் வந்து நிக்கிறான்”

ரகுராம்க்கு அவள் கோவம் இப்போது புரிந்தது.

“சொல்லிட்டேன். இப்போ பேசுங்க” என்றாள் பெண்.

என்ன பேச அவன்?

“அட்லீஸ்ட் வாழ்த்தாவது சொல்லுங்க. ஆப்ட்ரால் நீங்க என்னோட எக்ஸ்”

“ஹேய் என்ன பேசுற நீ. எக்ஸ் அது இதுன்னு”

“ஓஹ் லவ் பண்ணாதான் எக்ஸா? நாம லவ் பண்ணலயா”

“ப்ளீஸ்டி.. கொஞ்சம் பொறுமையா இரு”

“எக்ஸ்கிட்ட மரியாதையா பேசுங்க”

“இவ்வளவு கோவம் வேண்டாம்”

“தெரியும். ஆனா என்னால கண்ட்ரோலுக்கு வர முடியல”  தளர்ந்து போனவளாய் தூணில் சாய்ந்து கொண்டாள்.

ரகுராம்க்கு அவள் போராட்டம் புரிய வருத்தம் கொண்டான். கண் மூடி, விரல்களை இறுக்கமாக கோர்த்திருந்த பெண்ணின் சோர்வு அவனை தள்ளி நிற்க விடவில்லை.

தன் விரல்களால் அவளின் கோர்த்த விரல்களை பிரித்தவன், கையுடன் கை பிணைந்து கொண்டான். ஜனக்நந்தினி கண் திறந்து அவனை பார்க்க, மெல்ல மெல்ல அவளை நெருங்கி நின்றான்.

ஓர் அடி இடைவெளி. அவனை அண்ணாந்து பார்த்தவள், அந்த இடைவெளியுடனே ரகுராம் நெஞ்சில் அவள் நெற்றி முட்டி நின்றாள்.

அணைக்கவில்லை. நெருக்கமில்லை. உடலோடு உடல் உரசவில்லை. ஆனால் நெருங்கி நின்றனர்.

இவனின் இதய துடிப்பு அவள் அறிய, அவளின் மூச்சு காற்று இவன் மேல் பட, ஒரு பிரிவின் தகிப்பு அங்கு.

பெண்ணின் இரு சொட்டு கண்ணீர் அவன் பாதத்தில் விழ, ரகுராம் கண்களும் சிவந்து போனது.

“இப்படியே இவளை தூக்கிட்டு போயிடலாமா?” ஒரு நொடி நினைத்தேவிட்டான்.

ரகுராம் மேல் விருப்பம் இல்லை, ஆசை இல்லை என்று சொல்லியே இப்போது அளவு கடந்த விருப்பத்தை அவனுக்காக சுமந்து நின்றிருந்தாள் பெண்.

யாரோ வரும் சத்தம் கேட்க, ரகுராம் தள்ளி நிற்க, பெண் அவனை குற்றச்சாட்டுடன் நிமிர்ந்து பார்த்தாள். அந்த கண்கள் கேட்ட கேள்வி, அந்த துடிப்பு, துக்கம்.

ரகுராம் சமைந்துவிட்டான். மின்னலாக அவளை நெருங்க, பெண் தள்ளி சென்று விட்டாள்.

அவள் கார் நோக்கி வேகமாக நடந்தாள். என்னெவன அவளை அழைத்து நிறுத்த என்று கூட தெரியவில்லை. நொடி திகைத்து, திணறி அவள் பின்னே செல்ல, பெண் அதற்குள் கார் எடுத்து கிளம்பிவிட்டாள்.

Advertisement