Advertisement

அழகியல் 11

இன்னும் சிறிது நேரத்தில் விடியல் பிறந்துவிடும். பேருந்து சூரிய உதயத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. பாதி தூக்கத்தில்  விழித்ததால் ரகுராமின் கண்கள் எரிச்சலை கொடுத்தது.

மொபைல் எடுத்து நேரம் பார்த்து கொண்டான். பஸ் திருப்பூரில் நிற்க,  பையுடன் இறங்கினான்.

ராமமூர்த்தி இவனுக்காக காத்திருந்தவர், “ரகு” என்றழைத்தார் கையை தூக்கி காட்டி.

ரகுராம் அவரிடம் சென்றவன், “நீங்க ஏன் சித்தப்பா வந்தீங்க?” என்றான்.

“வந்தா என்ன தம்பி? நீ வா” என்றவர், ஆட்டோவில் அவனுடனே பயணித்தார். இவர்கள் குடும்பமும், சொந்தபந்தமும் தங்கியிருந்த ஹோட்டல் முன் ஆட்டோ நிற்க,

“இந்த ரூமுக்கு போ தம்பி” என்று ரூம் நம்பர் சொல்லி அனுப்பி வைத்தார் ராமமூர்த்தி.

ரகுவிற்கும் சோர்வாக இருக்க, அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தான். “ரகு வந்துட்டியா” என்று அனுஷா மகனுடன் வர,

“இப்போ தான்க்கா” என்றவன், தன்னிடம் தாவிய மருமகனை பிடித்து கொண்டான். இருவரும் கட்டிலில் படுத்து உருள, ராமமூர்த்தி வந்தவர், “கொஞ்ச நேரம் தூங்கிறதுன்னா தூங்கு சாமி” என்றார்.

“இருக்கட்டும் சித்தப்பா” என்றவன், “அப்பாம்மா எங்க?” என்று கேட்டான்.

“மண்டபத்துக்கு போயிட்டாங்க. முன்னாடி நடக்கிற சடங்கு இருக்கே” என்றாள் அனுஷா.

“நீங்க போகலையா சித்தப்பா?” என்று கேட்க,

“அதான் அண்ணா போயிருக்கார் இல்லை. அதுவே போதும்” என்றமர்ந்தார் அவர்.

“சித்தப்பா வந்ததுல இருந்தே ஹோட்டல்ல தான் இருக்கார் ரகு. நேத்து நலங்கு வைக்க கூட அத்தை வீட்டுக்கு வரல” என்று அனுஷா சொல்லிவிட,

“என்ன சித்தப்பா இது” என்றான் ரகுராம் அதிர்வுடன்.

“ஏன் போகணும்? விடு தம்பி நீ” என்றார் அவர் பேரனை கொஞ்சியபடி.

“சித்திகிட்ட அழுகிற மாதிரி பேசினாங்க அத்தை” என்று அனுஷா சொல்ல,

“அவ அழுதா?” என்றவர், “சாமி நீ தூங்கு. நாங்க காபி குடிக்க போறோம்” என்று அவர்களுடன் கிளம்பிவிட்டார் மனிதர்.

ரகுராம் கட்டிலில் இருந்து எழுந்து ஸ்க்ரீனை திறந்து பார்த்தான். பளிச்சென ப்ரவீனின் கல்யாண பேனர் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரிந்தது. ஏதோ அமைச்சர் தலைமை தாங்குவதாக கேள்விப்பட்டிருந்தான்.

மண்டபம் பக்கத்திலே ஹோட்டல் என்பதால், இப்போதே கார்கள் செல்வது தெரிந்தது. இருபக்கமும் வெய்ட். தங்கள் பலத்தை காட்டி கொண்டிருந்தார்கள்.

ரகுராம் எவ்வளவு நேரம் நின்று பார்த்தானோ, ராமமூர்த்தி கதவு திறக்கவும் தான் தெளிந்தான். “என்ன சாமி நீ தூங்கவே இல்லையா?” என்றார்.

“குளிச்சிட்டு வந்துடுறேன் சித்தப்பா நாம கிளம்பலாம். எங்க அக்கா?” என்று கேட்டபடி உடை எடுத்தான்.

“இப்போ தான் எல்லாம் கிளம்பினாங்க. நீ பொறுமையாவே கிளம்பு” என்றார்.

ரகுராம் குளிக்க சென்றான். தலையில் தண்ணீர் விழுக, விழுக அப்படியே நின்றான். தணிகைவேல் அவனிடம் பேசி ஒரு மாதம் முடிந்துவிட்டது. ப்ரவீனின் திருமணம் இன்று. கலந்துகொள்ள அறவே விருப்பமில்லை.

பாரதி அவன் வேலை செய்யும் காபி ஷாப் வந்து மிகவும் வேண்டி கேட்டு கொண்டதின் பேரிலே வந்திருக்கிறான். அன்று அவரை அழைத்து வந்த மகள் அவன் கண்ணிலே படவில்லை.

இன்று வரையிலும் அவளை பார்க்கவில்லை. இனி பார்ப்பான். பார்த்தால் மட்டும் என்ன? ஒன்றுமில்லை.

தெளிந்து குளித்து வந்தான். வெள்ளை ஷர்ட், ஜீன்ஸ் அணிந்தான். ராமமூர்த்தி அவனையே பார்த்தபடி இருக்க, “என்ன சித்தப்பா” என்றான். தலை மட்டுமே ஆட்டினார் மனிதர்.

இன்னுமே அந்த நிச்சயம் உடைந்துவிட்டது என்பதை அவரால் ஏற்றுகொள்ள முடியவில்லை. தணிகைவேலிடம் பேசிய அன்றிரவே அப்பா, சித்தப்பா இருவருக்கும் கான்பிரன்ஸ் கால் செய்தான்.

தணிகைவேலை சந்திக்கும் முன்னே அருணகிரியிடம் இப்படி என்று சொல்லிவிட்டான். “திடீர்ன்னு என்ன தம்பி?” அவ்வளவுதான் அவர் கேட்டது. அதன் பின் அவர் மறுத்து ஏதும் பேசவில்லை. உடன் ஆதரவாகவும் பேசவில்லை.

“பேசினேன்.. அவர் ஒத்துக்கலை. முடிஞ்சு போச்சு” என்றான் சுருக்கமாக.

ராமமூர்த்தி தான் அவ்வளவு கோவம் கொண்டார். அருணகிரியிடம் இருந்து சத்தமே இல்லை. மகன் கவனித்து தான் இருந்தான். “என்ன அண்ணா நீங்க அமைதியாவே இருக்கீங்க?” என்று தம்பி கேட்க,

“நம்ம சுயமரியாதையை சுருக்கு போடுறவங்ககிட்ட வேறென்ன எதிர்பார்க்கிறீங்க?” என்றார் ஒரே வரியில்.

மகனுக்கு நன்றாகவே தைத்தது. உண்மை தானே!

“ண்ணா”

“மூர்த்தி.. நாம கடைசியா பாரதி வீட்டுக்கு போனப்போ நடந்ததை மறந்திட்டியா?” என்று கேட்க, ராமமூர்த்தியால்  பேசவே முடியவில்லை.

உணவு நேரம் வெள்ளி தட்டை இவர்கள் முன் வைத்துவிட்டார் அங்கு வேலை செய்பவர். பாரதி கிட்சனுக்குள் இருக்க, “இது வீட்டு ஆளுங்களுக்கு, எங்க அந்தஸ்து உள்ளவங்களுக்கு கொடுக்கிற மரியாதை.  இவங்களுக்கு  இல்லை” என்றார் ராஜேஸ்வரி.

அதோடு அங்கிருந்து கிளம்பியவர்கள் தான் அண்ணனும், தம்பியும். சாப்பிட என்ன, தண்ணீர் கூட தொடவில்லை. பாரதிக்கு என்ன நடந்தது என்று தெரியாமல், எவ்வளவு கெஞ்சினார். ஏன் தணிகைவேல் கூட வந்தவர், மிகவும் வற்புறுத்தினார். ஒரேடியாக மறுத்துவிட்டனர்.

இப்போது அதை நினைக்க, ராமமூர்த்திக்கு வார்த்தை தான் வருமா? “வெள்ளி தட்டுக்கே அப்படின்னா அவங்க வீட்டு பொண்ணுக்கு?” என்று தம்பியிடம் கேட்டார் அண்ணன்.

  ரகுவிற்கு புரிந்தது கோவத்தை கொடுத்தது. “இத்தனை வருஷமா ஏன்ப்பா சொல்லலை?” என்றான்.

“அவமானப்பட்டதை சொந்த குடும்பத்துக்கிட்ட கூட சொல்ல முடியாது ரகு” என்றார் தந்தை.

“பாரதிக்கு நம்ம சொந்தம் வேணும். அவ்வளவு தான். அதுக்கு பின்னாடி இருக்கிற நம்ம கௌரவத்தோட விலை அவளுக்கு புரியல”

“நாமளும் அவகிட்ட இப்போ வரை எதையும் சொன்னதில்லையேண்ணா?” ராமமூர்த்தி கேட்டார்.

“சொல்லி அவ இன்னும் கஷ்டபடவா? எப்படியோ குடும்பமா சந்தோஷமா இருந்தா போதும்னு  விலகியாச்சு. ஆனா அவ அதை ஒரு வைராக்கியமா எடுத்து, எல்லாத்தையும்  சிக்கலாகிட்டா. ராஜேஸ்வரி அம்மாவுக்கு நம்மமேல இன்னும் தான் கோவம் வரும்”

“கோவம் வந்தா வரட்டும்ண்ணா. அந்தம்மா பேசினத்துக்கு நாம பாரதியை தள்ளி வைச்சதும் தப்பு தானே. அவ கஷ்டத்தை சொல்லி அழ கூட நம்மளை விட்டா யார் இருக்கா அவளுக்கு?”

“அது அனுஷா கல்யாணம் அப்போ தான் எனக்கு புரிஞ்சது. உன்னளவு நான் அவளோட இல்லை மூர்த்தி. அதனால தானோ என்னமோ பட்டுன்னு அவளை விட்டு விலகிட்டேன்”

“சரி இப்போ இதுக்கு என்ன வழி? அவ்வளவுதானா எல்லாம்”

“இன்னும் என்ன எதிர்பார்க்கிற?  அவங்க இடத்துல நீ இருந்தாலும் இப்படி தான் இருந்திருப்ப மூர்த்தி. அவங்க பாரம்பரியம் வேற தானே”

“அது எனக்கு தெரியாதுண்ணா. ஆனா கண்டிப்பா மனுஷனா மனுஷனை மதிச்சிருப்பேன். அந்தம்மா மாதிரி யாரையும் காயப்படுத்தி சந்தோஷ பட்டுக்க மாட்டேன்” என்றார் ராமமூர்த்தி உறுதியாய்.

“ம்ம்.. இது நமக்கு புரியும். அவங்களுக்கு இல்லை. இது எல்லாம் நடந்திட கூடாதுனு தான் அன்னைக்கு மறுத்தேன். என்ன பண்ண? எல்லாம் முடிஞ்சது. இனியும் அதை பிடிச்சு தொங்காம நம்ம பொழைப்பை பார்ப்போம்” என்று வைத்துவிட்டார் அருணகிரி.

ரகுராம்க்கு இந்த நொடி வரையிலும் அந்த காயம் ஆறவில்லை. தணிகைவேல் அவனை மறுத்ததை விட, அப்பா, சித்தப்பாவிற்கு நடந்ததே அவனை அறுத்தது.

அந்த கோவம் அவன் முகத்திலும் தெரிந்துவிட, “என்ன ரகு?” என்றார் ராமமூர்த்தி.

“ஒன்னுமில்லை சித்தப்பா” என்றவன், போனை எடுத்து கொண்டான்.

“காபி குடிக்கலாம் ரகு” என்று வரவைத்தார். திருமணத்தில்  காபி கூட குடிக்க கூடாது என்பதில் அப்பாவும், மகனும் ஒரே மாதிரி இருந்தனர்.

பொறுமையாக குடித்து முடிக்க, “பக்கத்துல தானே சித்தப்பா நடந்தே போலாம்” என்றான் ரகுராம்.

“சரி வா. சீக்கிரம் போனாலும் ஒன்னுமில்லை” என்றவர், “எதுக்கு மேல லோன் எடுத்த ரகு?” என்று கேட்டார்.

 “அக்கா வீடு கட்ட நம்மால முடிஞ்சதை கொடுக்கணுமே சித்தப்பா. அப்போ தான் அவளுக்கு மரியாதையா இருக்கும்ன்னு”

“அதுவும் சரி தான். ம்ம்ம்.. இந்த மரியாதையை தான் நாம உன் அத்தைக்கு கொடுக்க முடியாம போச்சு” என்றார் வருத்தத்துடன்.

“அவங்க அளவு நம்மால செய்ய முடியாது சித்தப்பா. நாம செய்றதை முழு மனசோட ஏத்துகிற பக்குவம் அவங்களுக்கும் இல்லை. என்ன பண்ண” என்றான் ரகுராம்.

“உண்மை தான் ரகு” என்றவர், “அந்த லோன் பணத்தில தான் ப்ரவீன்க்கு செய்ய கொடுத்தியா? அண்ணா என்கிட்ட பாதி தான் வாங்கிக்கிட்டார். அவர் பங்குக்கு பணம் நீ கொடுத்தன்னு சொல்லிட்டார்” என்றார்.

“ஆமா சித்தப்பா அதுக்கும் சேர்த்து தான் லோன் எடுத்தேன். சீர் தட்டு நூத்தி ஒன்னோட, நகையும் செய்யணும் இல்லை” என்றான்.

ராமமூர்த்தி திடீரென சிரித்தவர், “அண்ணா சீர் வைச்சப்போ ராஜேஸ்வரி அம்மா முகம் கருகி போச்சாம். இந்தளவு செய்வோம்ன்னு எதிர் பார்த்திருக்க மாட்டாங்க. இதை வைச்சு பேசணும்ன்னு நினைச்சதும் புஸ்ஸு” என்றார்.

ரகுராமும் மெலிதாக சிரித்தபடி மண்டப வாசலை அடைந்தனர். “வாங்க. வாங்க” என்று முன் நின்றவர்கள் வரவேற்க, “முக்கியமான கெஸ்ட். சாக்லேட் கொடுங்க” என்ற குரல்.

அவளே! குரல் வந்த திசை பக்கம் பார்த்தான். கைகளை கட்டியபடி நின்றிருந்தாள் பெண். முகம் மிக மிக சாந்தமாக இருந்தது. ஆனால் குரல் அவளை காட்டி கொடுத்தது.

ராமமூர்த்தியிடம், “வாங்க. எப்படி இருக்கீங்க மாமா?” என்று நலம் விசாரித்தாள்.

“அண்ணா, ரகுராம்” என்று பரபரப்பாக ஓட்டமும் நடையுமாக வந்தார் பாரதி. ஆயிரம் சொந்தம் குவிந்திருந்தாலும் அவருக்கு இவர்கள் தான் முன் நின்றனர்.

வழி பார்த்திருந்து மேடையில் இருந்து இறங்கி வந்துவிட்டார். “ஏன் இவ்வளவு லேட்?” என்று கேட்க,

“இப்போ வந்ததே பெருசு” என்றார் ராமமூர்த்தி. பாரதி முகம் அப்படியே கசங்கிவிட,

“நீங்க மேடைக்கு போங்க. நாங்க வரோம்” என்றான் ரகுராம் சித்தப்பா கை பிடித்தபடி.

“நீ வா, மாப்பிள்ளைக்கு மாமா மாலை நீ தான் போடணும்” என்றார் ரகுராமிடம்.

“அப்பாவே பண்ணுவார்” என்று ரகுராம் மறுக்க, பாரதி நொடி நின்றுவிட்டார்.

“உங்களை பாட்டி கூப்பிடுறாங்கம்மா” என்றாள் மகள்.

“இதோ.. இதோ போறேன். நீங்க முன்னாடி வாங்க” என்றவர், “நீ வா கண்ணு. எவ்வளவு நேரம் தான் இங்கேயே நிற்ப. ப்ரவீன் உன்னை கேட்கிறான்” என்றார் மகளிடம்.

“அங்க வந்து என்ன பண்ண போறேன். இங்கேயே இருக்கேன் நான்” என்றாள் ஜனக்நந்தினி அசையாமல்.

“கண்ணு.. மேடையில எல்லாம் எடுத்து கொடுக்கணும். நீ வந்தா எனக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்”

“அதான் அத்தனை பேர் இருக்காங்களே. செய்வாங்க. நீங்க போங்க” என்றாள் மகள்.

“கண்ணு”

“ம்மா. ப்ளீஸ் போங்க”

“என்ன பண்ற நீ. அவங்களோட போ” என்றான் ரகுராம் பொறுக்க முடியாமல்.

“உங்க அத்தைக்கு நீங்க போய் செய்ங்க” என்றாள் பெண் அவனிடமும்.

“என்னாச்சு இவளுக்கு”

பாரதி செய்வது அறியாமல் மூவரையும் பார்த்தபடி செல்ல, ரகுராம் சித்தப்பாவுடன் அவள் இருக்கும் இடமே அமர்ந்து கொண்டான்.

Advertisement