Advertisement

ஜனக்நந்தினி அன்றைய தேதி பார்த்து கடுப்புடன் நின்றாள். ஒரு மாசத்துக்கு மேலே ஆகிடுச்சு. ரகுராமிடம் இருந்து சாதாரணமாக கூட ஒரு போன் இல்லை. இவரை என்ன செய்தால் தகும்?

இடையில் பாரதி சென்னை வந்து திரும்ப ஊருக்கும் சென்றாகிவிட்டது. தணிகைவேல் நீ எப்போ ஊருக்கு வர என்று அடிக்கடி கேட்கிறார். “முக்கியமான  ப்ராஜெக்ட்ப்பா” என்று எஸ் ஆகி கொண்டிருக்கிறாள் மகள்.

‘இவர் ஏதாவது சொன்னா தானே நான் ப்ரீபேர் ஆக முடியும். கேட்டுடலாம்’ என்று சென்ற வாரம், அவன் வேலை செய்யும் கெபே போக கிளம்பியவள்,  பின் தானே நின்றுவிட்டாள்.

பொறுமை கரைந்து போயி கொண்டிருந்தது. சும்மா கூட பேச மாட்டாரா? ஆதங்கம், ஏமாற்றம்.

நானே முன்னெடுக்கணுமா? போயா ஊர் அழகா!

குளித்து ஆபிஸ் கிளம்பினாள். வீட்டில் இருந்து வந்த யார் போனையும் எடுக்கவில்லை. ‘இவங்கிட்ட இப்போ பேசினா மொத்த கடுப்பும் காமிச்சிடுவேன். லன்ச்ல பேசிக்கலாம்’ என்று சைலென்ட்டில் போட்டுவிட்டாள்.

இவளுக்கு அழைத்து பார்த்த பாரதி, மகள் எடுக்காமல் போகவும், அடுத்து என்ன என்று யோசித்திருந்தார். அண்ணன் மகன் தான் அவர் கண்ணுக்குள் நின்றான். ஒருவேளை மகள் இந்த சம்மந்தத்திற்கு சம்மதித்துவிட்டால்? நெஞ்சம் திடுக்கென்றது.

ஆனாலும் ஒரு நம்பிக்கை. அன்று மண்டபத்தில் வைத்து மகள் தானே சென்று ரகுராமிடம் பேசியது.

மகள் அண்ணன் மகனை கட்ட வேண்டும் என்று கழுத்து வரைக்கும் ஆசை. ஆனால் அது அவளின் முடிவாக இருக்க வேண்டும்.

என்னதான் மகளின் விருப்பம் என்று  முடிவெடுத்திருந்தாலும், நடக்கும் போது படபடப்பு தான். மஞ்சுளா அந்த நேரத்துக்கு அழைக்க, அவரிடம் இப்படி என்று சொல்லிவிட்டார்.

“பயமா இருக்கு” என்று புலம்பி வைக்க,  அவர் மூலம் மொத்த குடும்பத்துக்கும் விஷயம் பரவியது. ரகுராம் உட்பட.

ராமமூர்த்தியை அடக்குவது தான் பெரும்பாடாகி போனது. “நான் இப்போவே கிளம்பி சென்னை வரேன். யார் மருமகளுக்கு யார் மாப்பிள்ளை பார்க்கிறது” என்று நின்றார் மனிதர்.

ரகுராம் நான் பார்த்துகிறேன் என்று வைத்தவன், அப்பாம்மா அவனிடம் இது பற்றி தெரிந்தும் பேசாததில் சஞ்சலம் கொண்டான்.

நேரம் பார்த்து ஜனக்நந்தினிக்கு அழைக்க, அவளுக்கு மாபெரும் ஆச்சரியம். அத்தனை அழைப்பையும் ஒதுக்கிவிட்டவள், அவனதை மட்டும் எடுத்தாள். “என்ன அதிசயம்?” என்ற கேள்வியுடன்.

“நீ உங்க வீட்ல யார்கிட்டேயும் பேசலையா?” என்று அவன் கேட்க,

“இல்லையே. ஏன் என்ன ஆச்சு” என,

“உங்க அப்பா உன்னை பார்க்க தான் வந்திட்டிருக்கார். மே பி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடலாம்” என்றான்.

“ஏன் திடீர்ன்னு” பெண் யோசிக்க,

“நான் அவர்கிட்ட பேசணும். ஈவினிங் காபி ஷாப் கூட்டிட்டு வரியா?” என்று கேட்டான்.

ஜனக்நந்தினிக்கு கணக்கிட முடிந்தது. “ம்ம்” என்று வைத்தாள்.

ரகுராம் சொன்னது போல் அடுத்த சில நிமிடங்களில் தணிகைவேல் அவளின் அலுவலகத்திற்கே வந்துவிட்டார். விடுமுறை எடுத்து கொண்டு அப்பாவுடன் வீடு சென்றாள் மகள்.

“பாப்பா உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்” என்று அவர் ஆரம்பிக்க,

“முதல்ல சாப்பிடலாம்ப்பா” என்ற மகள் அவருடன் உணவு முடித்தாள்.

“காலையிலே கிளம்பிட்டீங்க போலப்பா. கார்லே வந்தது டையர்டா இருக்கும். ரெஸ்ட் எடுங்கப்பா. நாம ஈவினிங் பேசலாம்” என்றாள் மகள்.

தணிகைவேல் மகளை பார்த்தவாறே அறைக்குள் சென்றார். மாலை அவர் வந்ததும் ஒரு டீயுடன் காபி ஷாப் கிளம்பிவிட்டாள்.

“அங்க ஏன் பாப்பா. வீட்லே பேசலாம்” என்றவரிடம்,

“ப்ளீஸ்ப்பா” என்றாள் மகள்.

தணிகைவேல்க்கு ஏதோ சரியில்லை என்று உணர முடிந்தது. மகள் மூலமே வரட்டும் என்று பொறுமை காத்தார். “காதல் என்று ஏதேனும் இருக்குமா?” ஐயம் தான்.

ரகுராம் இவர்களுக்கு முன் காத்திருக்க, பார்த்த தணிகைவேல்க்கு அதிர்ச்சி. நொடியில் மறைத்து கொண்டார். இருவரும் கை குலுக்கி எதிரெதிர் அமர்ந்தனர்.

அவர்களுக்கு குடிக்க வர வைத்தவன், “இங்க தான் பார்ட் டைமா ஒர்க் பண்றேன்” என்றான்.

“ஓஹ்” என்ற தணிகைவேல் மகளை பார்க்க, அவள் மும்மரமாக மெனு பார்த்திருந்தாள்.

சில நொடி அமைதிக்கு பிறகு, தணிகைவேலை நேரே பார்த்த ரகுராம், “மூணு வருஷத்துக்கு முன்ன எங்களுக்கு நடந்த நிச்சயத்தை நானும், உங்க பொண்ணும் மதிக்கிறோம். உங்க எல்லோரட விருப்பத்தோட கல்யாணமும்  பண்ணிக்கலாம்ன்னு நினைக்கிறோம்” என்றான்.

தணிகைவேல்க்கு சட்டென ஒரு கோவம். மகளை பார்க்க, அவள் அவரையே எதிர்பார்ப்புடன் பார்த்திருந்தாள்.   கையில் இருந்த மொபைலை சத்தத்துடன் டேபிளில் வைத்தார். தண்ணீர் குடித்து தன்னை நிதானித்தார்.

“பாப்பா.. இவர் சொல்றது உண்மையா?” என்று மகளிடம் கேட்டார்.

“ஆமா.. ஆமாப்பா. அந்த என்கேஜ்மென்ட் இவரோட என்னை கமிட் ஆக்கிடுச்சு. என்னால அதை கிராஸ் பண்ண முடியல. நானும் அவரும் மேரேஜ்”

“பாப்பா.. மேரேஜ்ங்கிறது விருப்பம், ஆசையில பண்றது” என்று அழுத்தமான குரலுடன் இடையிட்டார் தந்தை.

“என்கேஜ்மென்ட்.. அந்த நிச்சயம் ஜஸ்ட் ஒரு அவசரக்கோலம். உன் அம்மா பண்ண தப்பு. அதுக்கு நீ பொறுப்பாக முடியாது பாப்பா”

“இல்லைப்பா”

“பாப்பா.. நீ குழம்பிட்டேன்னு நினைக்கிறேன். கமிட்மென்ட் வேற. விருப்பம் வேற. வாழ்க்கைக்கு விருப்பம் தான் வேணும். கமிட்மென்ட் இல்லை” என, பெண் ரகுராமை பார்த்தாள்.

இவர் மேல எனக்கு விருப்பம் இல்லையா?

“ப்பா. ப்ளீஸ் நீங்க தான் இப்போ என்னை கன்பியூஸ் பண்றீங்க”

“இல்லை பாப்பா.. நீ உறுதியா இல்லை. உனக்கு இவர்மேல எந்த விருப்பமும் இல்லை. நீ கிளம்பு. வெளியே இரு நான் இவர்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார்.

ஜனக்நந்தினி எழவே இல்லை. “நோப்பா. எனக்கு இவரை பிடிக்கும்” என்றாள்.

“பாரு இப்போவும் பிடிக்கும் தான் சொல்ற, விருப்பம் இல்லையே” என்றவர், “நீ கிளம்பு பாப்பா” என்றார் தந்தையாய்.

அவள் ரகுராமை பார்த்தாள். தலையசைத்தான். பின்னே எழுந்து சென்றாள். தணிகைவேல் மகள் செல்லவும், “உங்களுக்கும் கமிட்மென்ட்” என்று ஆரம்பிக்க,

“எல்லா கல்யாணத்திலும் உண்மையான கமிட்மென்ட் அவசியம். அது எங்களுக்குள்ள இருக்கு” என்றான்.

“விருப்பம் இல்லன்னா”

“நீங்க அவகிட்ட பேசினதை என்கிட்ட பேச வேண்டாமே? உங்க மனசுல இருக்கிறதை பேசுங்க. என் அத்தையோட கணவர் நீங்க. கண்டிப்பா அந்த மரியாதை உண்டு” என, தணிகைவேல் திரும்ப தண்ணீர் குடித்தார்.

“எனக்கும், பாரதிக்கும் கல்யாணம் ஆன புதுசுல நான் உன் அப்பாவை தனியே மீட் பண்ணேன்” என்றார்.

“என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆன உடனே நான் பாரதியை கட்டிகிட்டேன். நிறைய போராட்டம். பணம், சொத்து, அந்தஸ்து, கேஸ்ட்ன்னு எதுவும் எங்களுக்கு சாதகமா இல்லை. யாருக்கும் பிடிக்கலை. ஒரே பையன்னு வேற வழி இல்லாம ஏத்துக்கிட்டாங்க. அவ்வளவு தான்”

“கல்யாணம் முடியவும் எங்க வீட்ல பாரதி அம்மா வீட்டை வைச்சு ரொம்ப பேசுனாங்க. நான் கேட்க போய் இன்னும் பேச்சு அதிகம் ஆகிடுச்சு. என்னால ஒரு அளவுக்கு மேல அம்மா கூட இறங்கி சண்டை போட முடியல. இதுக்கு என்ன வழின்னு யோசிச்சு தான் உன் அப்பாவை சந்திச்சேன்”

“தொழிலை விரிவு படுத்தலாம். ஆர்டர் பிடிச்சு தரேன். இடம் பெருசா பாருங்க. எல்லாத்துக்கும் பணம் நான் தரேன் சொன்னேன்”

“எங்க அப்பா மறுத்திருப்பார்”

“இதே தான் நீயும் பண்ணுவ”

“கண்டிப்பா”

“அப்போ என் பொண்ணு உன்னோட சேர்ந்து கஷ்டப்படணும் இல்லை. இது தான் உன் கமிட்மென்ட்டா” என்று தணிகைவேலிடம் இருந்து வார்த்தைகள் வேகமாக வந்து விழுந்தது.

“உங்க அளவுக்கு இல்லைன்னாலும் கண்டிப்பா அவ கஷ்டப்பட மாட்டா”

“எங்க அளவுல இருந்து அவ இறங்குறதே கஷ்டம்ன்னு தான் நான் சொல்றேன். உங்களோடது காதல்ன்னா கூட ஓகே. இது.. ஜஸ்ட் ஒரு அட்டச்மென்ட் மாதிரி அவ்வளவு தான். இதுக்காக அவ ஏன் மிடில் கிளாஸ் லைப் வாழணும் சொல்லுங்க?”

“அவளோட வருங்காலம் நிச்சயம் நல்லா இருக்கும். என்னை நம்புங்க” என்றான் ரகுராம்.

“இது படம் இல்லைங்க. பார்ட் டைம் வேலை. கடன்னு. ம்ஹூம். வேண்டாம். என் பொண்ணை விட்டுடுங்க”

“என்னை நீங்க நம்பவே தயாரில்லையா?”

“நீங்க என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. ஒரு பொண்ணுக்கு அப்பாவா என் நெஞ்சு இப்போ கொதிக்குது. நான் பெத்து, ராணியாய் அவளை வளர்த்து உங்ககிட்ட வந்து அவ மேரேஜ்க்கு கேட்டுட்டு இருக்கேன். ஒரு அப்பா இதுக்கு தான் தகுதியானவரா?” என்று குமுறலுடன் கேட்க, ரகுராமிடம் பதில் இல்லை.

“இப்போ உன் அக்காக்கு கல்யாணம் பண்ணீங்களே. நல்ல இடமா, அவ சந்தோஷமா இருக்கிற மாதிரி பார்த்து தானே பண்ணியிருப்பீங்க. உங்களுக்கும் கீழே பார்க்கலை இல்லை.  என் பொண்ணுக்கு நான் அப்படி நினைச்சா தப்பா?” என்று கேட்க,

ரகுராம் உடல் விறைத்தது. கைகளை இறுக்கமாக கோர்த்து கொண்டான்.

“நீங்க அவகிட்ட இந்த கமிட்மென்ட் எல்லாம் வேண்டாம். பிரேக் பண்ணிடலாம் சொல்லுங்க. பாக்கி நான் என் மகள்கிட்ட பேசிக்கிறேன்”

“இல்லாததை ஏன் பிரேக் பண்ண சொல்றீங்க?” என்று அவரிடம் தீர்க்கமாக கேட்டான்.

“அது.. அது அவ அப்படி நினைக்கிறா. அதுக்கு சொல்றேன். அவளோட வயசுக்கு இதெல்லாம் தெரியாது. பட்டா தான் புரியும். உன் அத்தை எங்க வீட்டுக்கு வந்தாங்க. பிரச்சனையில்லை. ஆனா என் பொண்ணு உங்க வீட்டுக்கு வரதுங்கிறது”

“முடியாதுங்கிறீங்க”

“அப்பாவா என்னால கண்டிப்பா முடியாது. என் பொண்ணு சகல வசதியோடு, ஆஸ்தி, அந்தஸ்தோட சந்தோஷமா வாழ தகுதியானவ. அவளுக்கு அந்த உரிமையை கொடுங்க சொல்றேன். அவளுக்கு இப்போ வந்திருக்கிற வரன் எங்களை விட பெரியவங்க. என் பொண்ணு அங்க வாழணும்ன்னு நான் ஆசைப்படுறேன்”

“எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க” என்றான் இறுதியாக. தனக்காக, அவளுக்காக கேட்டான்.

“என்னை மன்னிச்சிடுங்க” என்றுவிட்டார் தணிகைவேல்.

ரகுராம் எழுந்து கொண்டான். அவரும் எழுந்துவிட்டார். ஜனக்நந்தினி இவர்களையே பார்த்திருந்தவள் உடனே உள்ளே வந்துவிட்டாள். இருவரின் முகமும் மகிழ்ச்சியை தரவில்லை.

“என்னப்பா” என்றாள் மகள்.

“அவர் புரிஞ்சுக்கிட்டார் பாப்பா. கமிட்மென்ட் மட்டுமே  வைச்சு வாழ முடியாதுன்னு பிராக்டிகலா யோசிக்கிறார்”

“அப்படியா” என்று அவனை பார்த்தாள்.

ரகுராம், “இந்த என்கேஜ்மென்ட்டை பிரேக் பண்ணிக்கலாம்ன்னு உன் அப்பா சொல்றார்” என்றான்.

“நீங்க என்ன சொல்றீங்க?”

“என்னால என்னை அவருக்கு புரிய வைக்க முடியல. அவர் பொண்ணுக்கு அவர் பேசுறார். அவரோட எதிர்பார்ப்புக்கு நான் இல்லையே, அவுட். என்ன செய்யட்டும்” என்றான்.

வலித்தது. இருவருக்கும். குடும்பத்தை மீறி செய்யும் பிள்ளைகள் இல்லை. இருவரின் வீட்டிலும் ஒத்துழைப்பு இல்லை.

மற்றவர் கண்களில் ஏக்கம் அப்பட்டமாக பிரதிபலித்த போதும், கையறு நிலை.

தணிகைவேல்க்கும் அந்த நிமிடங்கள் ஏனோ கனமாக இருந்தது. இழுத்து பிடித்தார். “போலாம் பாப்பா” என்றவர், மகளுடன் விடைபெற்றார்.

Advertisement