Advertisement

அழகியல் 10

“என்னை  கட்டிக்க ஏற்பாடு பண்றேன்” என்று ஜனக்நந்தினியிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டான். ஆனால் அது ரகுராமிற்கு அவ்வளவு சுலபமானதாக இல்லை.

முதலில் தன் வீட்டில் இப்படி என்று சொல்ல வேண்டுமே. அவர்கள் நிச்சயித்த பெண், அதுவும் அத்தை மகள் தான் என்றாலும், ஏதோ ஒரு தயக்கம்.

ஏற்கனவே ப்ரவீன் நிச்சயத்தில் வைத்து ஜனக்நந்தினி பாட்டி அவர்களுக்கு நிச்சயித்தது செல்லாது என்றிருக்கிறார். ராமமூர்த்தி சித்தப்பா தவிர, அப்பா, அம்மா அதன் பற்றி பெரிதாக கவலைபட்டதாக கூட தெரியவில்லையே?

ஒருவேளை அவர்களின் மனம் மாறிவிட்டதா? ஏன் எதுவும் கேட்கவில்லை. குறைந்தபட்சம் என்னிடம் கூட?

அவர்களுக்கு முதலில் இருந்தே விருப்பம் இல்லை தான். அத்தையின் வற்புறுத்தலின் பேரில் மட்டுமே அன்று அந்த நிச்சயம் நடந்தேறியிருந்தது. இப்போது அதில் இருந்து பின் வாங்குகிறார்களா? பல யோசனை, குழப்பம்.

அதிலே அவன் நாட்கள் சென்று கொண்டிருந்தது. வேலை, வேலை மட்டுமே. பைக்கில் செல்லும் நேரங்களில், தனியாக இருக்கும் போது இப்படி தோணுவதும் உண்டு. ஒருவேளை தான் நல்ல நிலையில் இருந்திருந்தால், “கல்யாணம் பண்ணி வைங்க” என்றோ, “அத்தைகிட்ட பேசுங்க” என்றோ சொல்லியிருப்பேனா? என்று.

கடனில் செல்லும் வாழ்க்கையில், “இப்போ கல்யாணம் எல்லாம் தேவையா?” என்று பெற்றவர்கள் கேட்டுவிட்டால்? வாய்ப்பே இல்லை. ஆனாலும் ஒரு தடை.

இதோ இரு வாரங்கள் கடந்துவிட்டது. ஒரு அடியும் எடுத்து வைக்கவில்லை. அன்றய இரவு அவனுக்கே உறுத்தி, ராமமூர்த்திக்கு அழைத்தான். “என்ன பண்றீங்க சித்தப்பா?” என்று ஆரம்பித்து சில பொதுவான பேச்சுக்கள் முடிய, “அத்தைகிட்ட பேசுனீங்களா?” என்று கேட்டான்.

“நான் அவகிட்ட பேசுறதில்லை தம்பி. உனக்கு தெரியாதா?” என்றார் மனிதர்.

“அவங்க மாமியார் அந்த பேச்சு பேசியிருக்காங்க. இவ இப்போவரை அமைதியா இருந்தா என்ன அர்த்தம் தம்பி?”

“அவங்க பேசுனதுக்கு இவங்க என்ன பண்ணுவாங்க சித்தப்பா?”

“அப்போ அன்னைக்கு மட்டும் எதுக்கு நோட்டீஸ் விடணும்? நம்ம வீட்டு படியேறி வரணும்? நம்மளை கார்னர் பண்ணனும்? உனக்கும், அவ மகளுக்கும் நிச்சயம் பண்ணனும்?”

ரகுராமிற்கு பதில் தெரியவில்லை. மௌனம் காத்தான்.

“அன்னைக்கு அவளுக்கு அம்மா வீட்டு சொந்தம் தூரம் இருந்துச்சு, அந்தளவு இறங்கி எல்லாம் பண்ணா. இதோ இன்னைக்கு நீ அவ மகனுக்கு மாமாவா சபையில் உட்கார்ந்து எல்லாம் பண்ணிட்ட. அம்மா வீடு வந்துடுச்சு. அதான் அவ வேலை காட்டுறா”

“இருக்காது சித்தப்பா”

“உனக்கு இந்த பொம்பிளைங்களை பத்தி தெரியாது தம்பி. கிடைக்காத வரைக்கும் தான் சாகசம் எல்லாம்”

“அப்படி என்ன சாகசத்தை நீங்க கண்டுட்டீங்க?” பக்கத்தில் மஞ்சுளா குரல் உயர்ந்து ஒலித்தது.

“நான் உன்கிட்ட பேசல. என் மகன்கிட்ட பேசிட்டிருக்கேன். தம்பி அவ அக்காவை சொல்றேன் இல்லை. மேடத்துக்கு அந்த கோவம்”

“ஆமா அப்படி தான். நீங்க போனை கொடுங்க” என்ற மஞ்சுளா,

“ரகு நீ உன் சித்தப்பா பேசுறதை எல்லாம் மனசுல ஏத்திக்காத சாமி. பாரதிக்கு இன்னைக்கு நாளைக்கு கூட மகளை உனக்கு கொடுக்க தான் ஆசை. ஆனால் மகள் என்ன சொல்வாளோ, அவளுக்கு என்ன விருப்பமோன்னு தான் யோசனை?”

“அது அன்னைக்கு ஓடி ஓடி நிச்சயம் பண்ணும் போது இல்லையாமா?” ராமமூர்த்தி கேள்வி பாய்ந்து வந்தது.

“ஒரே நாள்! எங்க அண்ணனை சமாளிச்சு, நைட்டோடு நைட்டா ஊரே சேர்ந்து நிச்சயம் பண்ணி வைச்சா, அந்த அம்மா பகுமானா செல்லாதுன்னு சொல்லுமாம். இவ மகளுக்கு பார்த்துட்டு உட்கார்ந்திருப்பாளாம்? யார்கிட்ட உங்க கதை எல்லாம் கட்டுறீங்க?” என்றார் ராமமூர்த்தி அடங்கா கோபத்துடன்.

“அவர்கிட்ட போனை கொடுங்க சித்தி” என்றவன், “ஏன் சித்தப்பா இவ்வளவு கோவம்? விடுங்க பார்த்துக்கலாம்” என்றான்.

“என்ன பார்த்துகிறது ரகு? உனக்கு தெரியாது சாமி. அண்ணா அவளை சேர்த்து பிடிக்கணும்ன்னு அவளுக்கு மேல நினைச்சவன் நான். அதனால தான் அண்ணனையே எதிர்த்து அவ பக்கம் நின்னேன். ஆனா அவ எல்லாத்தையும் மறந்து கிணத்துல போட்ட கல்லு கணக்கா மூணு வருஷமா சத்தமே இல்லாம உட்கார்ந்திருக்கா. பத்திக்குமா பத்திக்காதா நீயே சொல்லு” என,

ரகுராம் நெற்றியை நீவிவிட்டு கொண்டான். இவன் பேச நினைத்ததை பேச முடியாது போல. ராமமூர்த்தி இருக்கும் இருப்புக்கு, பாரதி வீடேறி சண்டையிட்டு வந்திடுவார் மனிதர்.

“ஏங்க இவ்வளவு கோவம், கொஞ்சம் பொறுமையா இருங்க, பாரதி பத்தி நமக்கு தெரியாதா?” என்று மஞ்சுளா சமாதானம் சொல்வது கேட்டது.

“நமக்கு பிள்ளைங்க இல்லன்னு என்னைக்காவது நான் கவலைப்பட்டிருக்கேனா மஞ்சுளா. என் மகன் எனக்கு இருக்கான்னு தான் நான் நெஞ்சை நிமிர்த்திட்டு நடக்கிறேன். அவனுக்கு இப்படி பண்ண நினைச்சா எனக்கு கோவம் வராம இருக்குமா?”

“பாரு அவ நிச்சயம் பண்ணிட்டு நட்டாத்துல விட்டுட்டு போயிட்டா. இப்போ அது செல்லுமா, செல்லாதான்னு தெரியாம நாம இவனுக்கு எப்படி நல்லது பண்ண முடியும்? ஏற்கனவே அவ பண்ணி வைச்ச வேலையால கடனை தூக்கி தலையில் போட்டுட்டு உட்கார்ந்திருக்கான்.  இதுல கல்யாணம் பண்றதுலயும் சிக்கலை உண்டாக்கி விட்டா?”

“சித்தப்பா. சித்தப்பா. ப்ளீஸ்” என்று அவரை நிறுத்தினான் ரகுராம்.

“எனக்கு நீங்க எல்லாம் இருக்கும் போது நல்லது தானா நடக்கும். நீங்க இவ்வளவு எமோஷன் ஆகி உடம்பை கெடுத்துக்காதீங்க. சித்திகிட்ட சண்டை போடாதீங்க. பார்த்துக்கலாம்” என்றான்.

“சாமி நான்”

“சித்தப்பா உங்க மகன் அப்படி எல்லாம் எதையும் விட்டுட மாட்டேன். என்னை நம்புங்க” என்றான் உறுதியாக.

“இது போதும் கண்ணு. வா நான் இருக்கேன். மொத்த பேரையும் இரண்டுல ஒன்னு பார்த்திடலாம்” என்றார் புதிதான உற்சாகத்துடன்.

“இது எங்க சித்தப்பா. நான் நாளைக்கு பேசுறேன். நீங்க நிம்மதியா தூங்குங்க” என்று வைத்துவிட்டான்.

‘ஜனக்நந்தினிக்கு என்னை கட்டிக்க விருப்பம் தான் சித்தப்பா’ என்று மட்டும் அவரிடம் சொல்லியிருந்தால் அவ்வளவு தான். வீடு புகுந்து அவளை கூட்டி கொண்டு வந்திருப்பார் மனிதர். ரகுராம் சிரித்து கொண்டான்.

சித்தப்பாவின் பாசம் அவன் அனுபவிக்காததா, இல்லை உணராததா?

மூன்று வருடங்களுக்கு முன்பு கூட, அனுஷா திருமணம் செலவு மட்டுமே இல்லை. அருணகிரி இடத்தின் பேரில் வாங்கியிருந்த சில லட்ச முன் பணத்தையும் தான் திருப்பி கொடுத்தாக வேண்டும்.

எப்படி கொடுக்க, என்னவென்று சமாளிக்க என்று  திணறி தடுமாறும் போதும், அனாசயமாக சில லட்சங்களை இவன் கையில் வைத்தவர் அவர். “என்னோட சேமிப்பு பணம் இது” என்று.

குழந்தைக்கான வைத்திய செலவு எல்லாம் போக, அவர்களின் கடைசி காலத்திற்கு என்றே வைத்திருக்கும் பணம் அது. என்னதான் அவனை மகனாக நினைத்தாலும், அவங்க பாரம் இவன் தலையில விழுந்திட கூடாது என்று நினைப்பவர்கள்.

ரகுராமிற்கு இதெல்லாம் தெரியாமல் போனாலும், சித்தப்பா கை பிடித்து நின்றுவிட்டான். “இதுக்கு வட்டி” என்று ஆரம்பிக்க, கோவமாக அவனிடம் இருந்து கையை உருவி கொண்டார் மனிதர்.

“புள்ளகிட்ட வட்டி வாங்கிறவனா உன் கண்ணுக்கு தெரியாறனா?”

“அப்படி இல்லை சித்தப்பா. ப்ளீஸ் தப்பா நினைச்சுக்காதீங்க. உங்களோட உழைப்பு இது. நான் எப்படி சும்மா எடுத்துக்க?”

“அப்போ உன் உழைப்புல நான் சும்மா சாப்பிட முடியாது இல்லை. புரிஞ்சுடுச்சு தம்பி”

“ஐயோ சித்தப்பா” ரகுராம் பதறிவிட்டான். கண்களில் நீரும் அவனுக்கு நிறைந்துவிட்டது.

ராமமூர்த்தி பின்னால் கை கட்டி விறைப்பாய் நிற்க, “மன்னிச்சுக்கோங்க சித்தப்பா” அவரை கட்டிக்கொண்டான். இளகாத மனிதரை அவன் சமாதானம் செய்ய சிலபல மாதங்களே ஆனது.

“பாரதிக்கு துணை போய் நீ கஷ்டப்பட நானும் ஒரு காரணமாகிட்டேன். அதனால உன்னை விடுறேன்” என்று நேர்மையான மனதுடன் இறங்கி வந்தார் மனிதர்.

இப்போது மட்டுமில்லை எப்போது அதை நினைத்தாலும் அவரின் மேல் மகனுக்கு பாசம் பொங்கும். பாரதி மேல் அவர் வைத்திருக்கும் கோவமும் அவனுக்காக தானே? மற்றபடி அவருக்கு பாரதி என்றால் கொள்ளை ப்ரியமாகிற்றே.

சொந்தங்களே புதிர்கள் தான்! எப்போது, எங்கு, யார்பக்கம் தராசு சாயும் என்பது அனுமானிக்கவே முடியாது! பெருமூச்சுடன் நினைத்து கொண்டான் ரகுராம்.

இப்படியே மேலும் இரு வாரங்கள் சென்று, ஒரு மாதமே முடிந்துவிட்டது. திருப்பூரில், அன்று காலை ராஜேஸ்வரி  மகன் முன் ஒரு கவரை வைத்தார். “இந்த ஜாதகம் ரொம்ப அருமையா என் பேத்தி ஜாதகத்தோட பொருந்தி போகுது” என்றார்.

அதிகாலையிலே ஜோசியரிடம் போய் வந்தாகிவிட்டது. பாரதி அமைதியாக நிற்க, தணிகைவேல் எடுத்து பார்த்தார். “பையன் அழகா இருக்கான். புதுசா கம்பெனி தொடங்கி இருக்கான். லாபம் இன்னும் இல்லை. அப்படியே அது போனாலும் பிரச்சனையில்லை. பத்து தலைமுறைக்கு சொத்து இருக்கு. முழுசா விசாரிச்சுட்டேன் எந்த கெட்ட பழக்கமும் இல்லை” என்றார் ராஜேஸ்வரி.

தணிகைவேல்க்கு அவர்களின் குடும்பம் நன்கு தெரியும். இவர்களை விட பாரம்பரியமிக்கவர்கள். மகளுக்கு வெகு பொருத்தமாக இருக்கும். ஆசை முளைத்தது.

“நானும் ஒரு முறை விசாரிச்சுகிறேன்ம்மா” என்றார் மகிழ்ச்சியுடன்.

“விசாரிச்சுக்கோ. ஆனா லேட் பண்ணிடாத. பர்வீன் கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு” என்றார்.

தணிகைவேல் உணவை கூட மறந்து, மறுத்து அந்த கவருடன் கிளம்பிவிட்டார். ராஜேஸ்வரி மருமகளை சவாலாக பார்த்து சென்றார்.

“என் பேத்தி ராக்கியை கட்டிக்கலைன்னா கூட பரவாயில்லை. உன் அண்ணன் மகனை கட்டிக்கவே கூடாது” என்ற உறுதியுடனே இந்த ஒரு மாதத்தில் மாப்பிள்ளை தேடி, முடிவும் செய்துவிட்டார்.

தணிகைவேல் அவர் பங்குக்கு ஒரு வாரம் நேரம் எடுத்து விசாரித்து, மகளுக்கு அந்த வரனை நிர்ணயித்தார். அவ்வளவு தான் இனி மகளிடம் பேச வேண்டும். போனில் சரியாக வராது. ஊருக்கு வருவதும் கஷ்டம். மகளுக்கு ஏதோ முக்கியமான ப்ரொஜெக்ட்.

“பேசாம நானே நேர்ல போய் பேசிட்டு வரேன்” என்றார் இரவு உணவு நேரம் எல்லாம் இருக்கும் போது.

“நல்லது.. நாளைக்கே கிளம்பு” என்றார் ராஜேஸ்வரி.

“ஏங்க நானும்” என்று பாரதி ஆரம்பிக்கும் போதே,

“கூடாது. நீ உன் மகன் யாரும் கூடாது” என்றார் பாட்டி வேகமாக.

“ஏன்.. நான் ஏன் போக கூடாது? என் தங்கச்சி கல்யாண விஷயம் பேசும் போது நான் இருக்க  கூடாதா?” என்று ப்ரவீன் கேட்க,

“அப்போ நானும் வருவேன். என் பேத்தி கல்யாணம் பேசும் போது நானும் இருக்கலாம்” என்றார் வில்லி பாட்டி.

தணிகைவேலோ, “யாரும் கிடையாது. நான் மட்டும் தான் போறேன்” என்று முடித்துவிட்டார். மறுநாள் சொன்னது போல் சென்னையும் கிளம்பிவிட்டார்.

Advertisement