Advertisement

அழகியல் 1

கந்தன் திருவுருவ படத்திற்கு சந்தனம் குங்குமம் இட்டு, பூ மாலை சூடினார்  பாரதி. அடுத்து வெள்ளி சிலைகளில் வீற்றிருந்த தெய்வங்களுக்கு அலங்காரம் முடித்தவர், விளக்கேற்றினார்.

பிரம்மாண்ட மாளிகைக்கு ஏற்ப வெள்ளை நிற பூஜை அறை விளக்குகளின் ஒளியில் ஜொலித்து மனதை நிறைத்தது.

நொடி நின்று கண்ணார கண்டவர், நேரம் ஆவதை உணர்ந்து  தீபாராதனைக்கான ஏற்பாடுகளை மடமடவென செய்து வைக்க, அவரின் கணவர் தணிகைவேல்  சரியாக வந்தார். உடன் பாரதியின் மாமியார் ராஜேஸ்வரியும்.

தணிகைவேல் தீபாராதனை காட்ட, பாரதியிடம் தீவிர வேண்டுதலுடன், கண்ணோரம் துளி நீரும் மின்னியது.

பூஜை முடிய, கணவரும்,  மாமியாரும் ஹாலுக்கு சென்றனர்.  பாரதி இருவருக்கும் காபி எடுத்து வர, பெரிய மகன் ப்ரவீனும் வந்திருந்தான்.

கையில் இருந்த காபியை மாமியாருக்கு நீட்ட, அவரோ, “முதல்ல பேரனுக்கு கொடு” என்றதுடன் எடுத்து அவன் கையில் கொடுக்கவும் செய்தார்.

“பாட்டி நீங்க குடிங்க, அம்மா எனக்கு கொடுப்பாங்க” ப்ரவீன் சொல்ல,

“உன் அம்மா எடுத்து வரதை நான் குடிச்சிக்குறேன், நீ இதை குடி கண்ணு” என்றார் அவர். பேரன் தோள் குலுக்கி குடிக்க செய்ய, பாரதி கணவருக்கு கொடுத்து, மாமியாருக்கு எடுத்து வந்தார்.

“இன்னைக்கு என் மக வரா, காலையில டிபன் மெனு அவளுக்கு பிடிச்சதா பார்த்துக்கோ” என்றார் பாரதியிடம்.

“சரிங்கத்தை..” பாரதி சொல்ல,

“பொங்கல் சீர் கொடுக்க நாம போலாம் நினைச்சா, என் மாப்பிள்ளை உனக்கு சீர் கொடுக்க வரார்” என்றார் சிரிப்புடன்.

அந்த சிரிப்பின் பின்னால் இருக்கும் பாவத்தில் பாரதி முகம் இயல்பில் இருந்து மாற, தணிகைவேலோ “மாப்பிள்ளைக்கு பாரதி மேல பாசம் அதிகம்ன்னு நமக்கு தெரியாதாம்மா. வருஷா வருஷம் நாம அவங்களுக்கு சீர் கொடுக்கிறோமோ இல்லையோ அவர் சரியா பாரதிக்கு கொடுத்திடுறார்” என்றார்.

“பாரதி கேட்டு வந்தவ வேலா. எல்லாம் அவளுக்கு கை மேல கிடைச்சிடுது. எதுவும் செய்யவும்  வேணா, கொண்டு வரவும் வேணா” என்றார் ராஜேஸ்வரி.

பாரதிக்கு சுருக்கென, அவரின் கணவருக்கு அப்படி ஏதும் தெரியவில்லை போல. அம்மாவின் பேச்சை சிரிப்புடன் ஆமோதித்து கொண்டிருந்தார்.

ப்ரவீன் மட்டும் அம்மாவின் முக மாற்றத்தில் அவரை கவலையாக பார்த்தான். பாரதி அதற்கு மேல் அங்கு நிற்காமல், கிச்சனுள் சென்றுவிட்டார்.

சரியாக காலை உணவுக்கு அந்த வீட்டு பெண் வேணி கணவருடன் வந்துவிட்டார். பாரதி முன்னின்று அவர்களை வரவேற்று உணவுக்கு அமர வைத்தார்.

ராஜேஸ்வரி மகளுடன் மென் குரலில் பேசி கொண்டிருக்க, ஆண்கள் தொழில் பற்றி உரையாடி கொண்டிருந்தனர். இறுதியாக காபி குடித்து முடிய, “பாரதி வாம்மா” என்றார் வேணியின் கணவர் சுந்தரம்.

பாரதி கொஞ்சம் நெகிழ்ந்த மனதுடனும், கடினப்பட்ட சிரிப்புடனும் அவர்கள் முன் நின்றார். “வேணி பொங்கல் சீர் கொடுமா” என்று மனைவிக்கு சொன்னார் சுந்தரம்.

வேணி பெரிய தாம்பூலத்தை கையில் எடுத்தவர், “என் புருஷன் கூட பிறக்கலைன்னாலும் எங்க வீட்டு பொண்ணான உங்களுக்கு எங்க வீட்டு சீர் அண்ணி” என்றபடி பாரதியிடம்  கொடுத்தார்.

பாரதி மடங்கிய கையை வலுக்கட்டாயமாக நீட்டி அந்த சீரை பெற்று கொள்ள, “இதென்ன வேணி கூட பிறக்கலைன்னாலும், பாரதி என் தங்கச்சி தான்” என்றார் சுந்தரம்.

“அதான் மாப்பிள்ளை என் பொண்ணும் சொன்னா. பாரதிக்கு பிறந்த வீடு இல்லை. அவ பிறந்த வீட்டு சீருக்காக ஏங்கிட கூடாதுன்னு நீங்க  வருஷா வருஷம் அவளுக்கு சீர் கொடுத்திட்டு இருக்கீங்களே. எங்க மருமக கொடுத்து வைச்சவ” என்றார் ராஜேஸ்வரி.

“அதென்னம்மா.. பிறந்த வீடு இல்லன்னு சொல்லிட்டீங்க. அண்ணி கஷ்டப்பட போறாங்க” வேணி சொல்ல,

“பிறந்த வீடு என் மருமகளை கழிச்சு விட்டுட்டாங்கன்னா சொல்ல முடியும் வேணி? நீ இதை சொல்லு நாங்க சீர் கொடுக்க எத்தனை மணிக்கு வரணும்?” என்று ராஜேஸ்வரி கேட்க,

“அத்தை.. இப்போவே கொடுத்திடுங்க. நீங்க வேற அலையணுமா?” என்றார் சுந்தரம்.

“என்ன மாப்பிள்ளை இப்படி சொல்லிட்டீங்க? எங்க வீட்டு பொண்ணுக்கு சீர் கொடுக்க வரது எங்களுக்கு அலைச்சலா? எங்க பொண்ணு எங்களுக்கு எவ்வளவு முக்கியம். அவளை கொண்டாடுற வீட்ல தான் அவ பிறந்திருக்கா. நாங்க குடும்பத்தோட வந்து சீர் செஞ்சிட்டு வரோம். அதான் என் மகளுக்கு மரியாதை” என்றார் ராஜேஸ்வரி.

“அம்மா சரியா சொல்றாங்க மாமா. நாங்க வந்தே கொடுத்துட்டு வரோம்” தணிகைவேல் சொல்ல,

“சரி மச்சான் நான் இருக்க மாட்டேன். முக்கியமான மீட்டிங். நீங்க பார்த்துக்கோங்க” என்றார் சுந்தரம்.

“என்ன மாப்பிள்ளை இது சீர் கொடுக்க வரும் போது நீங்க இல்லன்னா எப்படி” என்று ராஜேஸ்வரி வருத்தபட,

“அதுக்கு தான் சொல்றேன்த்தை. இங்கேயே கொடுத்திடுங்க” என்றார் சுந்தரம்.

இவர்களுக்கும் வேறு வழி இல்லை. “மருமகளே. என் பொண்ணுக்கு பொங்கல் சீர் எடுத்துட்டு வா..” என்று ராஜேஸ்வரி சொல்ல, பாரதி சென்று எடுத்து வந்தார்.

பட்டு துணியில் இருந்து நகை, பூ, ஸ்வீட், அலங்கார பொருட்கள், பிள்ளைகளுக்கு உடை என்று ஏழு தாம்பூலம் நிரப்பினார். “வைர அட்டிகை எங்க பாரதி” ராஜேஸ்வரி கேட்க,

“அண்ணி கேட்ட டிசைன் நாளைக்கு தரேன் சொல்லியிருக்காங்க அத்தை” பாரதி சொல்ல,

“அவன் அப்படி தான் சொல்வான். நீ முன்னாடியே கேட்டிருக்கணும்” என்றவர், “என்ன ஒரு புடவை தான் இருக்கு” என,

பாரதி விழித்தார். சென்றமுறை இரண்டு வைத்ததற்கு சீர்க்கு ஒன்னு கொடுத்தா போதும் என்றிருந்தார்கள்.

“விடுங்கம்மா.. அண்ணி நம்மகிட்ட வந்து தான் சீரே பார்க்கிறாங்க. நாம தான் அவங்களுக்கு சீரும் கொடுக்கிறோம். இதெல்லாம் அவங்களுக்கு வராது” வேணி சொல்ல, பாரதி முகம் மாறாமல் கட்டுப்படுத்தி நின்றார்

ஆண்கள் வர, தணிகைவேல்  கையால் சீர் கொடுக்கப்பட்டது. வேணி மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் வாங்கி கொள்ள, சுந்தரம் பாரதியை பொங்கலுக்கு அழைத்து கிளம்பினார்.

தணிகைவேல் மாப்பிள்ளையுடன் நடக்க, சீர் பொருட்கள் ஆட்கள் மூலம் காருக்கு சென்றது. “பொங்கலுக்கு வழக்கம் போல எங்க வீட்டுக்கு வந்துடுங்க அண்ணி. அப்புறம் தான் நான் என் அம்மா வீட்டுக்கு வர முடியும். என்ன தான் அடிக்கடி வந்து போனாலும் பண்டிகைக்கு அம்மா வீட்டுக்கு வந்து போற சந்தோஷமே தனி தான். என்ன அண்ணி” என்றவர், “சாரி அண்ணி உங்ககிட்ட போய் இதை சொன்னேன் பாருங்க. உங்களுக்கு தான் அம்மா வீடு போற வழியே இல்லையே?” என,

“அம்மா வீட்டுக்கு வழி இருக்கு. கூப்பிட ஆள் இல்லை. ஏதோ நம்ம வீடுங்கிறதால உன் அண்ணிக்கு அந்த குத்தல் பேச்சு இல்லை. நீ கிளம்பு வேணி, மாப்பிள்ளை காத்திருப்பார்” என்று மகளை வழியனுப்ப சென்றார் ராஜேஸ்வரி.

அங்கேயே தேங்கிவிட்ட பாரதிக்கு இந்த பேச்சுக்கள் எல்லாம் இன்னமும் பழகவில்லை. பல வருடங்களாக கேட்டு கொண்டிருக்கிறார். ஆனாலும் புதிதாக குத்தும் அதே சுருக் வலி. வலியில் இவருக்கு கண்ணீர் தேங்கவில்லை. வைராக்கியம் மட்டுமே.

இவர்கள் பேச்சு எல்லாம் வேறிடத்தில் தான் சென்று சேர்ந்து கொண்டிருந்தது.

அதற்கேற்றாற் போல் அவரின் போன் ஒலிக்க, கேட்ட செய்தி அவரின் வைராக்கியத்தை சூடேற்றி விட்டது. “அப்போ நான் அவ்வளவு கேட்டது?” என்ற கேள்வி.. வேள்வியாய் அவரை மாற்றிவிட, அவர் செய்ய நினைத்ததை செய்துவிட்டார்.

Advertisement