அத்தியாயம் 49

தர்ஷன் அமர்ந்து உவ்வா..என்று சிரித்து மழலை பேச்சில் அனைவரையும் அவன் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தான். ஆத்வியும் தாட்சுவும் அவனை கொஞ்சிக் கொண்டிருக்க, அதீபன் அவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தான். நிதின் போனில் ஆர்வமாக இருக்க, எழிலன் செழியனுடன் பேசிக் கொண்டிருந்தான்.

காவியன் அனைவரையும் பார்த்துக் கொண்டே வந்தான். ஹே வந்துட்டியா? வாடா..என்று எழிலன் காவியன் கையை பிடித்து இழுத்து சென்று விடாது பேசினான்.

நிதின் அவனை பார்த்து, ரொம்ப ஆக்டிவா இருக்க? நீ நிலையத்துக்கு போனேல்ல என்ன நடந்தது? என்று கேட்க, என்ன நடந்தது? வெண்பாவை சமாதானப்படுத்திட்டு வந்தேன்.

சமாதானமா? எனக்கு அப்படி தெரியலையே? என்று அதீபன் எழிலன் அருகே வந்து அவனை உற்று பார்க்க, “நகர்ந்து போங்க” என்று எழிலன் அவனை தள்ளினான்.

அண்ணா, ஏதோ செஞ்சிட்டு வந்திருக்கான்? அதீபன் அதிரதனிடம் சொல்ல, எழிலன் காவியனை பார்த்தான்.

காவியன் புருவத்தை உயர்த்த, சாப்பிடலாம் என்று ரவிக்குமார் சொல்ல, வாங்க என்று அனைவரும் உணவு மேசைக்கு சென்றனர். அதிரதன் தர்ஷனை பார்த்து விட்டு, அத்தை தர்ஷூ சாப்பிட்டானா? அதிரதன் கேட்க,

மாப்பிள்ள, பையனுக்கு இன்னும் சாப்பாடு கொடுத்து பழக்கலை போல கூழா தான் கொடுத்தேன். அதையே துப்புறான். பால் தான் குடிச்சான் என்றார்.

மாமா, இவனை ஒரு மாதமாக கடத்தியதாக சொன்னாங்க? இவனுக்கு எதற்கும் ஹெல்த் செக் அப் பண்ணிட்டு சாப்பிட கேட்டுட்டு கொடுக்கலாமே? தாட்சாயிணி கேட்க, ஆமா இவ பத்து புள்ள பெத்து வளர்த்தவ? பாட்டி திட்டினார்.

பாட்டி, நீ தான் என்னோட செல்ல தர்ஷனை ஏத்துக்கலைல்ல? பேசாதீங்க என்றாள் ஆத்வி கோபமாக.

உன்னோட செல்ல தர்ஷனா? நிதின் கேட்க, அவன் என் செல்லமா இருந்தா உனக்கென்னடா? ஆத்வி கேட்க, “நோ..உனக்கு செல்லம் நான் தான்” என்று சொல்ல,

மாமா, முதல்ல நிதுவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருங்க. இல்ல எல்லாரும் முன்னும் ஆரம்பித்து விடுவான் எழிலன் சொல்ல, நிதுவா? “அண்ணா சொல்லு” என்றான் நிதின்.

“அண்ணா ஒன்று தான் குறைச்சல்” என்றான் எழிலன்.

நீங்க எல்லாரும் சாப்பிடுங்க. நான் அக்காவை பார்த்துட்டு வாரேன் என்று காவியன் எழ, எழிலனும் எழுந்தான்.

சாப்பிட்டு உங்க அக்காவை பார்க்க போங்க. முதல்ல நாங்க பார்த்துட்டு வாரோம் என்ற அதிரதன் தர்ஷூவை துக்க, ஊ..ஊ..என அவன் பேச முயற்சி செய்தான்.

யசோதா அதிரதனிடம் வந்து, கண்ணா பையனுக்கு உன்னிடம் பேசணுமாம். சத்தத்தை பாரேன் என்று சொல்ல, பாட்டி முறைத்தார். அதிரதன் புன்னகையுடன் தர்ஷனுக்கு முத்தம் கொடுத்தான். தர்ஷூ அதிரதன் கன்னத்தில் அவனது பிஞ்சு கையை வைத்து, ஊ..ஊ..என ஏதோ சொன்னான்.

கண்டிப்பாக கடத்திய இடத்திலும் இவனை பார்த்துக்க பொண்ணுங்க இருந்திருக்காங்க. அதான் இவ்வளவு தெளிவாகவும், எல்லா குழந்தைகள் போலும் இருக்கான் என்றாள் தாட்சாயிணி.

ம்ம்..தனியா ஒரே பொண்ணால சமாளிக்க முடியுறதும் கஷ்டம். ஒரு மாதம் அம்மா, அப்பா இல்லாமல், தாய்ப்பால் இல்லாமல் பார்த்திருக்காங்க என்று யசோதா சொல்ல,

ஆமாம் குழந்தை தன் அம்மா, அப்பாவை நான்கு மாதத்திலே தெளிவாக பார்க்க ஆரம்பித்து இருக்கும் என்றார் ரேவதி.

அதிரதன் சிந்தனையுடன் அமர்ந்தான். அப்படின்னா அந்த பொண்ணுங்க யாருன்னு தெரிஞ்சா கொலைகாரனை கண்டுபிடிக்கலாம்ல்ல மாமா காவியன் கேட்டான்.

அதிரதன் அவனை பார்த்து புன்னகையுடன், நான் ஏற்கனவே கொலைகாரனை கண்டுபிடித்து விட்டேன். ஆனால் எங்க இருக்கான்னு தான் தெரியல. அவன் நமக்கு துரோகம் செய்திருக்கான். பக்கமிருந்தே..என்று நிறுத்திய அதிரதன், அத்தை சாப்பாடு இரு தட்டில் எடுத்து தாங்க, நாங்க வினுவுக்கும் அம்மாவுக்கும் சாப்பாடு கொண்டு செல்கிறோம் என்று எழுந்தான்.

அனைவரும் அதிர்ச்சியுடன் இருக்க, யார் அந்த கொலைகாரன்? என்று செழியன் கேட்க ஆரம்பிக்க, மற்றவர்களும் கேட்டனர். காவியன் மட்டும் அமைதியாக அதிரதனை பார்த்தான். அதிரதன் கண்ணில் வலி தெரிந்தது.

“மாமா, நீங்க சாப்பிடுங்க. நான் தர்ஷூவை வச்சிருக்கேன்” என்றான் காவியன்.

நாங்க அவனிடம் என்ன கேட்டுக் கொண்டிருக்கோம். நீ சாப்பிட சொல்ற? ரேவதி கேட்க, சித்தி அதி மாமா நம்மிடம் கொலைகாரனை பத்தி சொல்லலைன்னா ஏதாவது காரணம் இருக்கும். முதல்ல அவர் சாப்பிடட்டும் என்று காவியன் அவனிடம் வர, நீ சாப்பிடு மச்சான். எனக்கு பசிக்கலை. முதல்ல அவங்க சாப்பிடட்டும் என்று அத்தை..என ரேவதியை அழைத்தான்.

விழித்து எழுந்தது போல் இருந்த ரேவதி, உண்வை தட்டில் இட்டு அவனிடம் கொடுக்க, அண்ணா நீ பையனோட போ. நான் உணவை எடுத்திட்டு வாரேன் என்று ஆத்விகா அதிரதன் பின் உணவை எடுத்து சென்றாள்.

நேத்ராவும் சிவநந்தினி நிலையை புரிந்து கொண்டு மன்னித்து சகஜமாகவே பேசினாள். தர்ஷூவை பற்றி இருவரும் பேசிக் கொண்டிருக்க அதிரதன் தர்ஷனுடன் வருவதை பார்த்த நேத்ரா மகிழ்ச்சியாக அவனை துக்க ஆர்வமாக எழ,

வினு..மெதுவா, எதுக்கு இவ்வளவு அவசரம்? சிவநந்தினி உரிமையாக பேச, அதிரதனும் ஆத்வியும் அவர்களை பார்த்தனர். ஆனால் நேத்ரா தர்ஷூவை வாங்கி முத்தமிட்டு அவனிடம் பேச, அவனும் அவளுடன் விளையாட ஆரம்பித்தாள்.

மூவரும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அம்மா..சொல்லு என்று நேத்ரா கேட்க, ம்மா..ம்மா..என்று தர்ஷூவின் கண்ணீர் தேங்கி அஷ்வினியை தேடியது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவன் அழுகை சத்தம் அதிகமாக அவனை மார்ப்போடு அணைத்து நேத்ராவும் அழுதாள்.

சிவநந்தினி நேத்ராவிடமிருந்து அவனை வாங்கி அவர் தோளில் போட்டு அவனுடன் பேசிக் கொண்டே உலவினார்.

தர்ஷூ அமைதியாக தூங்கினான். அவனை படுக்கையில் போட்டு அதிரதனையும் ஆத்வியையும் போக சொன்னார். ஆத்வி சென்று விட, அதிரதன் மட்டும் அமர்ந்தார்.

“பப்பூ, சாப்பிட போ” சிவநந்தினி சொல்ல, அவன் நேத்ராவை பார்த்தான். அவள் கண்ணீருடன் மீண்டும்  படுத்து விட்டாள். அவளுக்கு அவள் காலியான வயிறு அவள் மனதை வலிக்க செய்தது. தர்ஷூ இவர்களுடன் நன்றாக சிரித்தாலும் விளையாடினாலும் அவன் அம்மா, அப்பாவை தானே தேடுகிறான் என்று அவளுக்குள் ஓர் போராட்டம்.

அதை புரிந்து கொண்ட சிவநந்தினி அதிரதனை பார்த்து விட்டு, வினு..அவனுக்கு நேரம் வேண்டும்மா. அவன் அழைக்க அவனுடைய அம்மாவும் அப்பாவும் இல்லை. இனி அவனுக்கு நீங்க தான் அம்மா, அப்பா கண்டிப்பாக அழைப்பான். கொஞ்சம் காத்திரும்மா. அவன் சிறுபிள்ளை என்று சொல்ல, நேத்ரா அவரை அணைத்து அழுதாள். அவள் மனதின் வலியை புரிந்து கொண்ட அதிரதன் கண்ணீருடன் அவள் கையை பிடித்தான்.

“செள்ளியன் சொன்னதை மறந்துறாத வினு” என்ற அதிரதன், அந்த குழந்தை கொலைகாரன் குழந்தை என நினைவுபடுத்த, அவள் மேலும் அழுதாள். தானும் அவளை காயப்படுத்துக்கிறோமே? என்று எழுந்த அதிரதன் கையை பிடித்த சிவநந்தினி, சாப்பிட்டாயா? என கேட்டார்.

“இல்லை” என்று அவன் தலையசைக்க, “உட்காரு” என்று இரு தட்டில் இருந்த உணவையும் சேர்த்து நேத்ராவிற்கும் அதிரதனுக்கும் ஊட்டி விட்டார். வெகு வருடத்திற்கு பின் தன் அம்மா கையால் சாப்பிடும் அதிரதனுக்கு வேகமாக உணவு உள்ளே இறங்கியது. ஆனால் நேத்ரா அவன் கொலைகாரன் மகனாக இருந்தாலும் “தன் மகன்” என்ற அழுதவாறு சாப்பிட, அவள் கண்ணீரை தன் முந்தானையால் துடைத்த சிவநந்தினி, வினு, நீ அழுதா கண்டிப்பா உன்னோட பையன் முழிச்சிருவான். பக்கத்துல இருக்கான். உனக்கு தெரியுதா? கோபமாக கேட்டார்.

ம்ம்..என்று நேத்ரா சமாளித்து இருவரும் உணவை முடித்தனர்.

“பப்பூ நீ இருவரையும் பார்த்துக்கோ. நான் என் வேலைய முடிச்சிட்டு வாரேன்” என்று உணவு தட்டோடு வெளியே வந்தார் சிவநந்தினி.

காவியன் சிவநந்தினியிடம் வந்து, அக்கா மாமா சாப்பிட்டாங்களா? எனக் கேட்டான்.

அவன் தலையில் கை வைத்து, அவங்க சாப்பிட்டாங்க. நீங்க சாப்பிட்டீங்களா? எனக் கேட்டார்.

“சாப்பிட்டேன்” என்றான். இங்க வாங்க என்று எழிலன், காவியனை சமையலறைக்கு சிவநந்தினி அழைத்து சென்று, உங்க அப்பாவுக்கு ஓர் பழக்கம் இருக்கு என்று சாப்பிட்ட பின் பழம் ஏதாவது சாப்பிட்டு தான் தூங்குவான் என்று ஆப்பிளை எடுத்து கட் செய்து அவர்களுக்கு கொடுத்தார்.

அத்தை, நான் பார்த்தவரை அப்பா சாப்பிட்டதில்லை எழிலன் கேட்க, அவனது வலி நிறைந்த வாழ்க்கை அவனது பழக்கத்தையும் விட வைத்திருக்கும் என்றார் கண்ணீருடன்.

எழிலன் சிவநந்தினி கண்ணீரை துடைத்து விட, இதை வெளியே வரிசையாக நின்று அனைவரும் பார்த்தனர். செழியன் கண்ணில் கண்ணீர் பெருகியது.

வினு..அதிரதன் அழைக்க, ம்ம்..என்றாள்.

“சாரிம்மா, ஒரு டென்சன்ல்ல அப்படி பேசிட்டேன்” என்று அவளருகே வந்து அமர்ந்தான்.

பரவாயில்லை, உண்மையை தான் நினைவுபடுத்துனீங்க? ஆனால் அது என்னுடைய குழந்தையும் தானே? என்று அவள் அழ, அவளருகே அதிரதனும் படுத்துக் கொண்டு அவளை அணைத்தான். அவளும் அவன் மார்பில் புதைந்து அழுதாள். அதிரதனும் கண்ணீருடன் அவளை அணைத்துக் கொண்டான். இப்பொழுது அதிரதனுக்கு அவள் குழந்தையை மறைத்தது பெரியதாக தெரியவில்லை. நேத்ரா உறங்க, அவளை நகர்த்தி விட்டு படுக்கையிலிருந்து நகர்ந்து அமர்ந்து நேத்ராவையும் தர்ஷனையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

நிதின் மெதுவாக கதவை திறந்தான். அதிரதன் கண்ணீருடன் இருவரையும் பார்ப்பதை கவனித்து உள்ளே நுழைந்தான். நிதினை பார்த்தவுடன் அதிரதன் அவனை அணைத்து அழுதான்.

“எனக்கு இருவரையும் எப்படி சமாளிக்கன்னு தெரியல நிது” என அழுதான். ஷ்..தூங்குறாங்க ரதா என்றான் நிதின்.

சிவநந்தினி வரும் வரை அங்கே இருந்து விட்டு இருவரும் வெளியேறினர். இரவில் இடையிடையே தர்ஷன் அழும் சத்தம் கேட்டது. மாறி மாறி அந்த இரவிலும் வீட்டினர் பார்த்து விட்டு சென்றனர்.

மறுநாள் காவியன் கல்லூரிக்கு தயாராகி வர, ரணாவும் வந்தாள். ஆனால் அவள் முகம் சரியில்லாது இருக்க, குட்டிம்மா, “நீ இன்னும் இருநாள் கூட ஓய்வெடுத்துக்கோ” என்றான் அதிரதன்.

இல்லண்ணா, “நாங்க கிளம்பணும்” என்று காவியனை பார்த்தாள். வீட்டிலிருந்தே அவளுடைய வக்கீல் கோர்ட்டுடன் அவள் கிளம்ப, என்ன இது ஆச்சர்யம்? என அதீபன் அவளை கேலி செய்தான்.

போடா..என்று ரணா அவள் அம்மாவை தேட, அம்மா..தர்ஷனுக்கு பால் கொடுத்துட்டு இருக்காங்க. வருவாங்க என்றார் ரவிக்குமார். அவள் எல்லாரையும் பார்த்து விட்டு உணவு மேசையில் அமர்ந்தாள். காவியன் அவளருகே வந்து அமர்ந்தான்.

ஆத்விகா அனைவரையும் அழைக்க, சாப்பிட அமர்ந்தனர். தாட்சாயிணியும் ஆத்விகாவும் அனைவருக்கும் உணவு பரிமாறினார்கள்.

பின் கல்லூரியில் காவியனும் ரணாவும் ஒரே காரிலிருந்து இறங்கினர். கல்லூரி முழுவதும் அவர்களது குடும்பம் பற்றிய பேச்சே எழுந்தது. அவர்கள் எப்பொழுதும் போல் நண்பர்களிடம் சென்று அமர்ந்தனர்.

ஆராவும் மற்றவர்களும் காவியனுக்கு குடும்பம் கிடைத்ததால் அவனுக்கு வாழ்த்தை கூற, எப்படியும் யசோதா திருமணமாகாமல் தானே காவியனை பெற்றெடுத்தார். அவரை பற்றி பசங்க சிலர் தவறாக பேச காவியன் அவர்களுடன் சண்டைக்கு சென்றான்.

காவியா, “அமைதியா இரு” என்று அனைவரும் அவனை தடுக்க, ரணா மயங்கி விழுந்தாள். யாரும் அதை பார்க்காமல் காவியனுடன் இருந்தனர். அந்த சீனியர், “காவியா ரணாவ பாரு மயங்கிட்டா” என்று கத்த, அவர்களை விட்டு அவளை பார்க்க காவியனும் நண்பர்களும் அவளிடம் வந்தனர்.

தண்ணீர் தெளித்து அவளை எழுப்பி அமர வைத்தனர். அவளுக்கு யாரோ தன் அறைக்கு வருவதும் துர்க்கேஷின் இழப்பும் பெரிதும் பாதித்து இருந்தது. காவியன் அவளை திட்டிக் கொண்டிருந்தான்.

அமைதியான காவியனின் இந்நடத்தை ரணா மீது அவனுள் இருந்த காதலை எல்லாருக்கும் வெளிகாட்டியது. அப்படி திட்டிக் கொண்டிருந்தான். ரணாவும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

புன்னகையுடன் அவனை அழைத்த ரணா, எல்லார் முன்னும் என்னோட அம்மா மாதிரியே திட்டுற? என்று கேட்டாள். அவன் அமைதியாக அமர்ந்து கொண்டான். பின் அனைவரும் வகுப்பிற்கு சென்று முடிந்து வெளியே வந்தனர்.

மதிய உணவிற்காக அதிரதன் இருவரை ஓரிடத்திற்கு வர வைத்தான். இருவரும் சாப்பிட்ட பின் கை தட்டினான். இருவரும் அவனை பார்க்க, அங்கே வந்தனர் துர்கேஷின் அம்மாவும் அண்ணாவும்.

குட்டிம்மா, இவங்க உன்னிடம் ஏதோ பேசணுமாம். நீ பேசு என்று காவியனை பார்த்தான் அதிரதன். காவியன் எழ, எங்க போறடா என்று அவனது வெள்ளை சட்டையை பிடித்து இழுத்து ப்ளீஸ் என்றாள்.

அதிரதன் சைகை செய்ய காவியனும் அவளுடன் அமர்ந்தான். அவர்கள் அவளை பார்த்து, புள்ளைக்கு யாரையோ பிடிச்சிருக்குன்னு சொன்னான்ம்மா. நான் கூட கூவத்து பொண்ணா இருப்பான்னு நினைச்சேன். ஆனா..இப்படி தேவதையாட்டம் இருக்குற பொண்ண அவன் பிடிச்சிருக்குன்னு சொன்னது தான் நம்பவே முடியலைம்மா..

நான் தான் அவனை பணத்துக்காக இந்த வேலைக்காக அனுப்பினேன். அதான் இப்படியாகிச்சு. தாயி நீங்க அவனுக்காக கவலப்படுறன்னு அந்த தம்பி சொல்லுச்சு. ரொம்ப சந்தோசம்மா. எங்களையெல்லாம் பெரிய வீட்டு  பிள்ளைக அருவருப்பா தான் பார்ப்பாங்க. அவனுக்கு அதனால உங்கள மாதிரி பொண்ணுங்களே புடிக்காது. அந்த தம்பி உன் அண்ணனாம்மா அது பேசுறத வச்சு தான் என் புள்ளைக்கு ஏன் உங்கள பிடிச்சதுன்னு தெரிஞ்சது என்று அவர் சொல்ல ரணா காவியன் தோளில் சாய்ந்து அழுதாள்.

எதுக்கு தாயி அழுற? என் பிள்ள சந்தோசமா தன் உயிரை விட்டுருக்கான். எப்படியும் என்னிக்காவது அவன் உயிர் போகிறது தான் தாயி. உங்களுக்காக போனது நல்லது தான் என்று அழுது கொண்டே அவர் சொல்ல நிமிர்ந்து அவரை பார்த்தாள் ரணா.

ஆமா தாயி, அவனுக்கு பெருசா சண்டை போடவெல்லாம் வராது. நா.தான்..அவனை வம்படிக்கு போக வச்சிட்டேன். நீ உன் மேல இழுத்து போட்டு வச்சிக்காத தாயி. உன் வாழ்க்கையை பார்த்து போ. நீ நல்லா இருக்கணும் தாயி. அவனுக்கு பொண்ணுங்க அழுறது பிடிக்காது. அவனுக்கு பிடிச்ச பொண்ணு தாயி நீ. எப்பொழுதுமே அழக்கூடாது தாயி என்று அழுது கொண்டே அவர் அதிரதனை பார்த்து கும்பிட்டு சென்றார்.

அழுத ரணா முகத்தை துடைத்து விட்டு காவியனை பார்த்தாள். அவனும் அதிரதனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கல்லூரிக்கு போகலாமாடா? என்று காவியனை பார்த்து கேட்டு விட்டு, அதிரதனிடம் “தேங்க்ஸ்” சொல்லி அவனை அணைத்தாள்.

குட்டிம்மா, தேங்க்ஸ் எனக்கு வேண்டாம். அவனுக்கு சொல்லு. அவன் தான் சொன்னான். நான் செய்தேன். அவ்வளவு தான் என்றான் அதிரதன்.

தேங்க்ஸ்டா என்று காவியனை நோக்கி ரணா வர, மாமா கிளம்பலாமா? என்று அவன் அதிரதன் பக்கம் திரும்பினான். ரணா முகம் சுருங்கினாலும் தனக்காக சிந்தித்து இருக்கான் என்று மகிழ்ச்சியானாள். முன்பு போல் அவள் செயல்பட காவியனும் அவளுக்கு தெரியாமலே அவளை ரசித்து பார்த்தான்.

இரு வாரத்திற்கு பின் நேத்ரா யார் உதவியும் இல்லாமல் நடக்க ஆரம்பித்தாள். தர்ஷனும் குடும்பத்துடம் ஒன்றி விட்டான். பாட்டியும் அவனை ஏற்றுக் கொண்டார். அவரால் குழந்தையை வெகு நாட்கள் தள்ளி வைக்க முடியவில்லை. அனைவருக்கும் நன்றாக சென்றது. அதிரதனும் நேத்ராவும் முன் போல் பேசிக் கொண்டனர்.

அதிரதன் கார்ட்ஸ் அனைவரையும் அனுப்பி விட்டு தன் குடும்பத்தை அவனாகவே கவனித்துக் கொண்டான். அவனும் ஆபிஸ் சென்று வந்தான். வீட்டில் அவன் நன்றாக இருந்தாலும் வேலை என்றதும் அதே ஸ்ரிட் ஆபிசர் தான்.

கொலைகாரனும், பரத்தும் தனக்கான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தது. காவியனும் ரணாவிடம் நன்றாக பழகினாலும் காதலை மட்டும் கூறவில்லை. வாரங்கள் மாதங்களாகியது.

இரு மாதம் கடந்து நேத்ரா பழைய நேத்ராவாகவும், அதிரதனும் நன்றாக வேலையையும் வீட்டையும் கவனித்தான். செழியனும் மகிழ்ச்சியாக அவ்வப்போது தர்ஜூவுடன் விளையாடுவார். நாட்கள் அழகானது.

நிலையத்து பிள்ளைகள் அனைவரும் பள்ளிக்கு சென்றனர். தேர்வை எழுதிய மாயா, வெண்பா, தேவா அவர்களின் நண்பர்கள் அனைவருக்கும் தனி ஆசிரியர் அமைத்து, அதிரதன் நடத்தும் நிறுவத்தின் கீழ் பரீட்சைகள் வைத்து படிக்காத பிள்ளைகள் என்ற பெயரை மாற்றி அமைத்தனர். திருந்திய தன்வந்த்தும் ஜீவாவும் நண்பர்களானார்கள். தன்வந்த் மறுபடியும் நிலையத்திற்கே வந்தான்.

பொண்ணுங்களும் பசங்களும் தனித்தனியே இருக்க, தனி கட்டிடங்கள் அமைக்கும் ஏற்பாட்டை அதிரதன் பார்த்துக் கொண்டிருந்தான். அதீபன் இசைக்குழுவில் சேர்ந்து அவனுக்காக கனவை அடையும் இலக்கை நோக்கி பயணித்தான். தாட்சாயிணியுடன் போனில் காதலுடனும், முழு முயற்சியுடன் எப்படியாவது இசையில் சாதிக்க முயன்றும் கொண்டிருந்தான். அவனுக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டிருந்தான்.

தன் அண்ணா அதிரதனின் திருமணத்திற்காக மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தான் அதீபன். அவனை கண்ட தாட்சாயிணி அவனை ஓடி வந்து தழுவிக் கொண்டாள். சிவநந்தினியும் ரேவதியும் மகிழ்வுடன் அவனை வரவேற்றனர்.

நேத்ரா கூறியது போல் அவளுக்கும் அதிரதனுக்கும் அவளது சொந்த ஊரில் அவள் வீட்டில் ஒரு வாரம் தங்கி அங்கேயே திருமணம் முடிக்கும் திட்டத்திற்காக வீட்டினர், காவியன் நண்பர்கள், யுவனும் கிளம்பினர். திருமணம் முடிந்த பின் மீடியாவிற்கு சொல்லலாம் என்று முடிவெடுத்து அதிரதன் சொல்ல, அனைவரும் ஒத்துக் கொண்டனர்.

அழகான பசுமை நிறைந்த தேனீ மாவட்டத்தின் ஓர் கிராமத்து பகுதியில் இருந்த அழகான ஊரில் பாரம்பரியம் நிறைந்த வீட்டின் முன் வரிசையாக கார்கள் வந்து நின்றது. அவ்வூரின் பிரசிடென்ட்டும் அவரின் ஆட்களும், அவ்வூர் மக்களும் அவர்களை வரவேற்க நின்று கொண்டிருந்தனர்.

முதல் காரிலிருந்து செழியன், சிவநந்தினி, அதிரதன், ஆத்விகா, பிரணவி, யுவியும் இரண்டாவது காரில், ரவிக்குமார் குடும்பமும், மூன்றாவது காரில் அதீபன், நேத்ரா, எழிலன், யசோதா, காவியனும், கடைசி காரில் காவியன் நண்பர்கள் நால்வரும் வந்திருந்தனர்.

ஊரார் அனைவரும் சிவநந்தினி, காவியனை பார்த்து அவர்களுக்குள் குசுகுசுவென பேசிக் கொண்டிருந்தனர். பிரசிடென்ட் செழியனை வரவேற்றார். நேத்ரா கையில் தர்ஷனுடன் அதிரதன் அருகே வந்து, இங்க என்ன நடக்குது? என்று கேட்டாள். மற்றவர்களும் புரியாமல் அவனை பார்த்தனர்.

வினு, நானும் அப்பாவும் முன்பே இவர்களிடம் வந்து பேசி விட்டோம். பிரச்சனை கூட பெரியதாக இருக்காது என்ற அதிரதன், எழிலா உங்க ஊர் கோவில் திருவிழா நடக்குமென்று நீ சொல்லவேயில்லை அதிரதன் கேட்க, நேத்ரா அவனை முறைத்தாள்.

“வினு, நீ நினைப்பது நடக்காதே!” என்று அதிரதன் சொல்லும் போதே நேத்ரா வீட்டின் அருகே இருந்த பாட்டி சத்தமிட்டுக் கொண்டிருந்தார்.

சிவநந்தினி கண்ணீருடனும், செழியனும் அந்த பாட்டி வீட்டிற்குள் செல்ல, அச்சிறிய வீட்டினுள் செல்ல முடியாமல் சிலர் மட்டும் உள்ளே சென்றனர்.

அத்தை வேண்டாம் என்று நேத்ரா அவர்களும் முன் வேகமாக சென்று பாட்டி முன் நின்று, பேச்சி பாட்டி, “நந்தினி அத்தை வந்துருக்காங்க” என்றாள்.

அவள எதுக்குடி வீட்டுக்குள்ள விட்ட? அவ வரக்கூடாது. அவ தான் செத்துட்டால்ல..என்று பாட்டி கத்த, சிவநந்தினி அழுது கொண்டே “அம்மா, என்னை மன்னிச்சிருங்க” என்று அவர் கையை பிடித்தார்.

பாட்டி கோபத்தில் சிவநந்தினியை தள்ளி விட, அவர் கீழே விழுந்தார். எல்லாருக்கும் கோபம் வந்தது. பாட்டி நிறுத்துறியா? எதுக்கு இப்ப அத்தைய கீழ தள்ளி விட்ட? நேத்ரா சத்தமிட்டான்.

எல்லாத்தையும் மறந்துட்டியாடி? பாட்டியும் அவளிடம் கத்த, மறக்கல பாட்டி. எதுவுமே மறக்கல? அத்தை, மாமா மேல மட்டும் தப்பு இல்லை. தாத்தா, பாட்டி மேலும் தப்பு இருக்கு என்று அவள் சொல்ல, அங்கே கார் ஒன்று வந்தது. அதிலிருந்து நேத்ரா அம்மாவை பெற்றவர்கள் வந்திருந்தனர்.

அவர் என்னடி தப்பு செய்தார்? பாட்டி சத்தமிட, அம்மா என்றும் பாட்டி என்றும் இருவர் பாட்டியிடம் வந்தனர்.

மாரி பாருடா நம்ம நேத்ரா எப்படி பேசுறார்? பாருடா என்று பாட்டி அழுதாள்.

“பாட்டி, சும்மா பழசையே பேசாதீங்க” என்றான் அவர் பெயரன் கலையரசன்.

“பழசா? ரெண்டு உயிரு போச்சுடா” பாட்டி கோபமாக சொல்ல, சிவநந்தினி மேலும் அழுதார். அதிரதன் முன் வர, அவன் கையை பிடித்து தடுத்த நேத்ரா,

ஆமா பாட்டி, உங்களோட தோழியும் அவர் கணவரும் இறக்க இவங்க தான் காரணம்ன்னா..ஒரு வேலை அத்தை மாமாவுடன் போகாமல் இங்கிருந்து என்னை மாதிரி கஷ்டப்பட்டாலோ தற்கொலை செய்து கொண்டாலோ நீ நந்தினி அத்தை பக்கம் நின்றுப்பியா? கேட்க,

வினு, என்ன பேசுற? அதிரதன் சத்தமிட, யாரும் பேசாதீங்க. நான் தான் பேசுறேன்ல்ல என்று நேத்ரா அதிரதனை முறைத்தாள்.

சொல்லு பாட்டி, அப்ப நீ அத்தையிடம் என்ன சொல்லி இருப்ப தெரியுமா? புருசன் தான் எல்லாமே அவன் என்ன செய்தாலும் அவனுடன் தான் இருக்கணும்ன்னு சொல்லி இருப்ப? அத்தை தவறான முடிவெடுத்திருந்தால் அவங்கள முட்டாள்ன்னு சொல்லி திட்டியிருப்ப..சொல்லு இதை தான செய்திருப்ப? என்று கோபமாக நேத்ரா பாட்டியிடம் கேட்டாள்.

“நேத்ரா வேணாம், பாட்டிய நாங்க பார்த்துக்கிறோம்” என்றான் அவர் பெயரன் கலையரசன்.

இல்லடா கலை. நான் நந்தினி அத்தை மகனை தான் திருமணம் செய்யப் போகிறேன். பாட்டி ஆசிர்வாதம் எனக்கு ரொம்ப முக்கியம்டா.

பாட்டி, தாத்தா போன பின் எனக்கும் அப்பாவுக்கும் எல்லாமே பாட்டியும் அப்பாவும் தான. அம்மா வீட்ல பாட்டி, தாத்தாவுக்கு என்னை பிடிக்காது. கண்டுகொள்ளவே மாட்டாங்க. அப்பா வீட்ல யாருமே வந்து எட்டி கூட பார்க்கலை. எனக்கு எல்லாமே நீங்க தான கலை பண்ணீங்க?

பாட்டி, எல்லாமே நல்லா பார்த்த நீ அப்பாவை சரியா புரிஞ்சுக்கலையே? என்று காவியனையும் யசோதாவையும் அவர் முன் நிறுத்தினாள்.

நான் தூக்கிய வளர்த்த பிள்ளன்னு அப்பாவை பெருமையா பேசுவ? அப்பாவும் இவங்களும் காதலிச்சாங்க. ஆனா அம்மா அப்பாவுக்காக உதவ வந்தாங்கன்னு கல்யாணம் பண்ணி வச்சிட்டியே? அப்பாவுக்கு அம்மாவை பிடிச்சதான்னு கேட்டியா? நீ அம்மா இடத்துல இருந்து பணத்தை தவிர அப்பாவுக்கு எல்லாமே செஞ்ச.

பாட்டி, யசோதாவை பார்த்து நீ ஏம்மா முன்னாடியே என் பிள்ள வாழ்க்கையில வராம போன? என்று அவரை அணைத்து அழுதார். காவியனிடம் வந்து அவனை தொட்டுப் பார்த்து, என் பிள்ளை என்னை விட்டு போகவேயில்லை. என் முன்னாடி தான் இருக்கான் என்று அழுதார்.

பாட்டி, காதல்ன்னா எதுக்கு தான் இப்படி பயப்படுறீங்களோ? மாமா, அத்தைய பொண்ணு கேட்டப்ப பாட்டி, தாத்தா ஒத்துக்கிட்டு இருந்தா இந்த அளவு பிரச்சனை வந்திருக்காது.

பெரிய இடம்ன்னு பயந்துட்டாங்கடா? என்று பாட்டி சொல்ல, பெரிய இடம்ன்னா கஷ்டப்படுத்த தான் செய்வாங்களா பாட்டி? என்று கேட்ட நேத்ரா எனக்கும் அப்பாவுக்கும் பெரிய இடமா முடிஞ்சது? நாங்க என்ன சந்தோசமாகவா இருந்தோம்?

“காதல் இருக்கிற இடத்துல தான் பாசம் இருக்கும்ன்னு மாமா நிரூபிச்சுட்டாங்க. மாமா அத்தைய அப்படி பார்த்துக்கிட்டு இருக்காங்க” என்று நேத்ரா செழியன் சிவநந்தினியை பாட்டி முன் நிற்க வைத்தாள்.

பிரச்சனை முடிந்து அனைத்தும் சரி வர, நேத்ரா அம்மாவின் பாட்டியும், தாத்தாவும் உள்ளே வந்தனர்.

“எங்கள மன்னிச்சிரும்மா” என்று நேத்ராவை பாட்டி அணைக்க, அவர்களை விலக்கிய நேத்ரா, “என்னால என்னோட அம்மாவையே ஏத்துக்க முடியல. என்னால உங்கள ஏத்துக்க முடியாது. நீங்க என்னை மன்னிச்சிருங்க” என்று செழியன் அருகே சென்று நின்று கொண்டாள்.

பாட்டியை பார்த்து அவர்கள் மன்னிப்பு கேட்க, இனி மன்னித்து என்ன ஆகப் போகுது? புள்ளைங்க ரெண்டுமே இல்லையே? என்று வருந்தினார். யசோதாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, அவர்கள் எழிலனை பார்த்துக் கொண்டே கண்ணீருடன் வெளியேறினர்.

பாட்டி, தாத்தா நில்லுங்க என்று எழிலன் வெளியே ஓடி வந்தான். அவர்கள் நின்று அவனை பார்த்தனர். இருவரையும் அணைத்த எழிலன், ஊருக்கு வரும் போதெல்லாம் நம்ம வீட்டுக்கு வாரேன் பாட்டி. வருத்தப்படாதீங்க நான் இருக்கேன் என்றான்.

உன்னோட அம்மா போல என்னை நீங்களும் அநாதை ஆக்கிடுவீங்கன்னு பயந்துட்டேன்டா என்று அவனை அணைத்துக் கொண்டு அழுதனர். அனைவரும் அவர்களை பார்ப்பதை கவனித்த தாத்தா..எல்லாரும் வீட்டுக்கு வாங்க என்றார். அவர்கள் அமைதியாக இருந்தனர்.

“அக்காவையும் உன்னோட அத்தை குடும்பத்தையும் முடிந்தால் அழைச்சிட்டு வா” என்று அவர்கள் கண்ணீருடன் கிளம்பினர்.

சின்னப்பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டு பாட்டி..என்று நேத்ரா அணைத்தாள்.

“நேத்ரா பார்த்து..பாட்டி உன்னோட கல்யாணத்தையும் நிறுத்திடாமல்” என்று கலையரசன் கிண்டல் செய்தான்.

போடா, பாட்டி அத்தை எங்க? காணோமே? நேத்ரா கேட்க, அவளோட அம்மாவுக்கு உடல்நலமில்லைன்னு பார்க்க போயிருக்காம்மா. நாளைக்கு வந்துருவா? என்று பாட்டி சொல்லி விட்டு, உன்னோட புருசனோட பையனை நீ வளர்க்க போவதாக எல்லாரும் சொன்னாங்க என்று அவர் கேட்க, பாட்டி அவன் ஒன்றும் என் புருசனே இல்லை.

“பாட்டி அவர் நம்ம நேத்ராவோட எக்ஸ்” என்றான் கலையரசன்.

அது என்னடா எக்ஸ், ஒய், இசெட்ன்னு? பாட்டி கேட்க, அவன் ஒன்றும் என்னோட எக்ஸும் இல்லை என்று அவள் உண்மையை மறந்து சொல்ல வந்த போது தர்ஷனை ரேவதியிடமிருந்து வாங்கி வந்து அதிரதன் நேத்ரா கையை பிடித்தான்.

பாட்டி அவரை பார்க்க, சிவநந்தினி அவரிடம் வந்து என்னோட மூத்த புள்ளம்மா அதிரதன். நம்ம வினுவை கட்டிக்க போறவன் என்றார். இருவரும் அவரை பார்த்து,..ம்ம்..என்றார். இருவரும் அவர் காலில் விழுந்து ஆசி வாங்க, அவர்களை நிமிர்த்தி நல்லா இருங்கப்பா என்று அதிரதன் கன்னத்தை பிடித்து, நேத்ராவை அழ வச்ச..நீ அழ வேண்டி இருக்கும் என்றார்.

அவ தான் பாட்டி இப்பவே அழ வைக்கிறா? என்று சொல்ல, என்னடி சொல்றாரு? பாட்டி கேட்க, நான் எங்க உங்களை அழ வச்சேன்?

நான் கேட்டவுடன் நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியா? அவன் கேட்க, என்னோட நிலைமையில் ஒத்துக்க முடியலை என்றாள்.

என்ன நிலைமையோ? அவன் சொல்ல, அவன் கையில் நறுக்கென கிள்ளினாள். ஆ..என்ற அதிரதன், பாட்டி பார்த்தீங்கல்ல. உங்க முன்னாடியே என்ன பண்றா பாருங்க. நீங்க எனக்காக தான் பேசணும் என்றான். அனைவரும் சிரித்தனர்.

ஏன்டி, என் பேரனை கிள்ளுற? பாட்டி கேட்க, பாட்டி நீ இப்படியெல்லாம் கட்சி மாறக் கூடாது என்று அவள் சொல்ல, குட்டிப்பையனை பார்த்தார்.

அவன் அம்மா, அப்பா, அத்தை, மாமா தவிர ஏதும் சொல்லவில்லை.

நேத்ராம்மா..பிள்ளையோட நல்லா பேசு. சகஜமா பேச வச்சிருக்க வேண்டாமா? பாட்டி கேட்க, அதான் சொல்லீட்டீங்க. பேசிறுவான் பாட்டி என்றாள்.

அதீபா, சிவநந்தினி சத்தமிட வெளியே காற்றோட்டமாக நின்று கொண்டிருந்த அதீபன் உள்ளே வந்தான். ரேவா தாட்சுவை எங்க? என்று சிவநந்தினி கேட்க, இங்க தான் இருக்கேன் அத்தை என்று முன் வந்தாள். அதீபனும் வந்தான்.

ஆத்விகாவை அழைத்து, இரண்டாவது பொண்ணு என்று ஆத்விகாவையும் நிதினையும் அவர் அறிமுகப்படுத்த, பாட்டி இது கோல்டா? உங்களுக்கு வெயிட்டா இல்லையா? என்று குறும்புடன் பாட்டி காதில் கை வைத்தான் நிதின்.

டேய், நீ ரொம்ப சுட்டியா இருப்ப போல? பாட்டி கேட்க, பாட்டி நிது சுட்டி இல்லை. கேடி என்றான் எழிலன்.

எழிலா என்று நிதின் நகர இருந்தவனை முறைத்தே நிறுத்தினான் ஆத்விகா. பாட்டி எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க என்று காலில் விழுந்து எழுந்தனர்.

அதீபனை தன்னுடைய மூன்றாவது மகன் என சொல்லி தாட்சாயிணியையும் அறிமுகப்படுத்த கண்கலங்கிக் கொண்டே காலில் விழுந்தான் அதீபன்.

உன்னை எங்கோ பார்த்தது போல் இருக்கே? பாட்டி கேட்க, பாட்டி இவரை தெரியலையா? நீ பார்க்கும் இசை நிகழ்ச்சியில் இறுதி சுற்றில் வந்தவர் என்று கலையரசன் சொல்ல, அட ஆமா, எல்லா பேரனுகளும் டிவியில் வருவாங்களோ? என்று பாட்டி கேட்டு விட்டு, தீபனா?..நாம அப்புறம் பேசலாம் என்றார் பாட்டி. தாட்சாயிணி அவன் கலங்குவதை பார்த்து அவன் கையை இறுக பற்றினாள்.

பின் ரணாவை முன் நிறுத்தி கடைசி பொண்ணு என்றார். ம்ம்..மகாலட்சுமி மாதிரி இருக்கு புள்ள? ஆனால் இது என்ன ஆடை பாட்டி கிண்டல் செய்ய, சும்மா இருப்பாலா ரணா?

பாட்டி, உனக்கும் எடுத்து வந்திருக்கேன். நீயும் போட்டுக்கோ. நீயும் பியூட்டி குயின் ஆகிடுவ என்று சொல்ல, எனக்கு எதுக்குடி? நீ இனி இது போல் போடக்கூடாது என்று பாட்டி கண்டிப்புடன் சொல்ல,

அதான பார்த்தேன். அப்படியே அம்மா சொல்றது போல இருக்கு. பாட்டி நீ தான் அம்மாவுக்கு பயிற்சி கொடுத்து அனுப்பினாயா? உன்னை மாதிரி தான் பேசுவாங்க என்று சிவநந்தினியை பார்த்தாள். அவர் கண்கலங்கினார்.

பாட்டி என்னையும் ஆசிர்வாதம் பண்ணு என்று அவளும் விழ, எல்லாரும் காவியனை பார்த்தனர்.

காவியா, பாட்டிகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ என்று யசோதா சொல்ல, எழிலனும் அவனுடம் சேர்ந்து காலில் விழ அனைவரும் சிரித்தனர்.

வெயிட் பண்ணி வாங்க வேண்டியது தானடா காவியன் கேட்க, இப்ப அதனால என்னடா?

எல்லாரும் ஜோடியா வாங்கும் போது நாம சேர்ந்து வாங்கினால் காவியன் நிறுத்த, இங்க யாரும் உங்கள தப்பா எடுத்துக்க மாட்டாங்க. நீங்க அண்ணன் தம்பின்னு இங்க எல்லாருக்கும் தெரியும். ஆனால் வெளி ஆட்களுக்கு தெரியாது தப்பா தான் எடுத்துப்பாங்க காவியா என்று ரணா சிரித்தாள். எல்லாரும் அவளை முறைத்தனர்.

எழுந்த காவியன் அவளை முறைத்துக் கொண்டு கோபமாக வெளியே சென்றான். எழிலன் போல் காவியனால் ரணா பேசியதை ஜோக்காக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

தர்சு மாமாவை சமாதானப்படுத்துவோமா? என்ற அதிரதன் குட்டிம்மா வா என்று அழைக்க, அவர்கள் பாட்டியிடம் சொல்லி விட்டு சென்றனர்.

செழியன், ரவிக்குமார் குடும்ப பெரியவர்களும் அதிரதன் பாட்டியும், பேச்சி பாட்டியிடம் பேசி விட்டு வெளியே வந்தனர். ரணாவிடம் கோபமாக இருந்தாலும் சமாதானம் ஆனான் காவியன்.

வினு, இதான் சின்ன வீடா? நிதின் கேட்க, உங்க வீடு மாதிரி வராதுல்ல. ஏசியெல்லாம் இங்கே இருக்காது என்று நேத்ரா பேசிக் கொண்டே கதவை திறந்தாள். அந்த காலத்து தூண்களுடன் அமைக்கப்பட்ட பழமையான பெரிய வீடு. கீழே ஐந்து அறைகளும் மேலே ஐந்து அறைகளும் இருந்தது.

சிவநந்தினி அவரது சிறுவயது நினைவுகளுடன் உள்ளே வந்தார். எழிலா..மேலே அப்பா அறை எடுத்திருக்கானோ? சிவநந்தினி கேட்க, ஆமா அத்தை. நீங்க என்றாவது வருவீங்கன்னு தான் செய்தார். அவர் இல்லாத போது வந்திருக்கீங்க? என்று வருத்தமுடன் அவர் அறையை பார்த்தான்.

நேத்ரா அனைவருக்கும் எழிலனது அறையையும், அவளது அறையையும் காட்டி விட்டு மற்ற அறையையும் காட்டினாள். கீழிருக்கும் அறை வேண்டாம். நாம எல்லாருமே மேலுள்ள ஐந்து அறையையும் பிரித்துக் கொள்ளலாம் என்று நேத்ரா சொல்ல, அக்கா நீ உன்னோட அறையில தான் இருக்க போற? எழிலன் கேட்க, இல்ல..அதை தவிர எந்த அறையாக இருந்தாலும் ஓ.கே தான்.

அப்படியா வினு? என்று அதிரதன் அருகே வந்தான். சிவநந்தினியும் ரேவதியும் ஒன்றாக அவனை மறித்து, பொண்ணு அறைக்கு வரக்கூடாதுப்பா. இரு நாட்களுக்கு பின் வாழ்நாள் முழுவதும் ஒரே அறையில் தான இருப்பீங்க?

அண்ணி, உங்க அறையை நான் எடுத்துக்கவா? ரணா கேட்க, பிரணா..நீ, ஆத்வி, தாட்சு, நேத்ரா தர்ஷன் ஓர் அறையிலும், பப்பூ, தீபன், நிதின், யுவன் ஓர் அறையிலும் ,காவியன், எழிலன் நண்பர்கள் ஓர் அறையிலும், நான், அத்தை, ரேவா ஓர் அறையிலும், உங்க அப்பா, அண்ணா ஓர் அறையிலும் இருந்துப்போம் என்று அறையை காட்டினார். நேத்ரா அறையை சிவநந்தினி ஆட்களும், எழிலன் அறையில் காவியன் மற்றவர்களும் இருந்து கொண்டனர்.

வலது கடைசி பொண்ணுங்களுக்கும், இடது கடைசியில் அதிரதன் ஆட்கள் அறையையும் கொடுத்து விட்டனர். அதிரதன் நேத்ராவை பார்த்துக் கொண்டே நின்றான்.