Advertisement

அத்தியாயம் 4

மூவரும் ஹாஸ்பிட்டலுக்கு செல்ல, ரணா நீ வீட்டுக்கு போ..மணிய பாரு இப்பவே எட்டாகுது. ராகவ் இல்லை யாரையாவது வரச் சொல்லு என்று காவியன் சொல்ல, இந்த நேரம் தனியே போக வேண்டாம். நீயும் வா..என்று நேத்ரா அவளையும் இழுத்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

பாட்டி அழுது கொண்டிருந்தார். நேத்ராவை பார்த்து பதட்டமாக பேசினார். அவள் வெளியிருந்து அவனை பார்க்க டாக்டர் வெளியே வந்தார். கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிந்து விடும்.

அந்த பையனோட அம்மா எங்க? டாக்டர் கேட்க, நான் தான் அவனுக்கு பொறுப்பு என்று நேத்ரா உள்ளே செல்ல, பாட்டி, ஆனந்தி, மல்லிகா அக்காவும் பின்னே சென்றனர். அவன் இருந்த அறையிலிருந்து காவியனும் அவனுடைய நண்பர்களும் அவனை பார்க்க, ரணாவும் எட்டிப் பார்த்து..

இந்த சின்னப்பையனா ப்ளட் வாமிட் செய்தான்? கேட்டாள். அவன் நண்பர்கள் எல்லாரும் இருவரையும் பார்த்தனர்.

ஆமா, ரணா. ஏற்கனவே வயிறு வலி அடிக்கடி இருக்கும். அதுக்கு சென்று காண்பித்த போது அல்சர்ன்னு சொன்னாங்க. ஆனால் இப்ப..என்று அவன் யுவியை பார்த்தான்.

நண்பர்கள் அவளை பார்ப்பதை பார்த்து, அவர்களை ரணாவுக்கும், ரணாவை அவர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தான். அவள் என்ன தான் நல்லா பேசி பழகினாலும், இந்த குட்டிப்பையனை பார்த்து அவள் மனம் கனமானது. அவளுக்கு அழைப்பு வர, எல்லாரும் அவளை பார்த்தனர்.

அலைபேசியை காதில் வைத்தவளால் பேச முடியல. அவளை மீறி கண்ணீர் உருண்டோட, அதை துடைத்து விட்டு நகர்ந்து சென்றாள்.

அம்மா, நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கேன். நான் வாரேன். ப்ரெண்டோட பிரதர்க்கு பிராபிளம். அம்மா, நான் பார்த்துட்டு வரவா? என கேட்டுக் கொண்டே அழுதாள்.

பிரணா, எதுக்கு அழுற? அம்மா..குட்டி பையன் ப்ளட் வாமிட் பண்ணி இருக்கானாம். நான் அவன் நல்லா இருக்கானான்னு பார்த்துட்டு வாரேன் என்றாள்.

நீ அழுற? அம்மா வரவாடா? சிவநந்தினி கேட்க, அம்மா, நான் பார்த்துட்டு கால் பண்றேன் என்று அலைபேசியை வைத்து விட்டு அமர்ந்தாள். முகத்தை சரி செய்து விட்டு உள்ளே வந்தாள்.

பையனுக்கு நாங்க ஸ்கேன் செய்தோம். அவனுக்கு சாதாரண அல்சர் இல்லை. அவனுக்கு கல்லீரல் பாதிப்படைந்து இருக்கு. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யணும். அதுவும் சீக்கிரம் செய்யணும். இல்லையெனில் கல்லீரலில் இருந்து செல்லும் உணவு குழாய் வெடித்து, அந்த பையன் இறக்க நேரிடும் என்று அவர் சொல்ல, எல்லாரும் அழுதனர்.

சின்ன புள்ளப்பா, கொஞ்சம் நல்லா பாருங்களேன் பாட்டி அழ, சார் அவனுக்கு அம்மா, அப்பா யாருமில்லை. நாங்க ஆசிரமத்துல அவனை வளர்த்து வாரோம் என்றார் மல்லிகா அக்கா.

அக்கா, சும்மா இருங்க என்ற நேத்ரா, சார் எவ்வளவு செலவாகும்? இப்பவே செய்யணுமா? அவள் கேள்விகளை அடுக்கினாள்.

லாக்ஸ் கணக்கில் செலவாகும். வேற கல்லீரல் வேண்டும். அதற்கு, அதை தருபவருக்கு, சிகிச்சைக்கானது, அவன் தங்க, மருந்து மாத்திரை, குட்டிப்பையன் என்பதால் ஒரு வாரம் இங்கிருக்கணும். அதற்கான செலவு அனைத்தையும் சேர்த்து முப்பதிலிருந்து, நாற்பது ஆகும் என்றார்.

சார், என்று கண்கலங்கினாள்.

சீக்கிரம் செய்தால் உயிரோட இருப்பான். பார்த்துக்கோங்க. இப்பொழுதைக்கு மாத்திரைகள் தருகிறேன்.

“சீக்கிரம் என்றால்?”

“ஒரு வாரத்திற்கு மேல் பையன் தாங்க மாட்டான்” அவர் சொல்ல, அவளும் அழுதாள்.

அழாம, என்ன செய்யலாம்ன்னு பாருங்க. உங்க ஆசிரம நிர்வாகியை பாருங்க என்றார் டாக்டர்.

“தேங்க்யூ சார்” என்று அவனை கூட்டிட்டு போகலாமா டாக்டர்? கேட்டாள்.

அரை மணி நேரமாகும். முதல்ல பையன் விழிக்கட்டும். கூட்டிட்டு போங்க என்றார்.

பாட்டியையும் மற்றவர்களையும் பார்த்து, வெளிய ஒரு பொண்ணு இருக்கா. அவ முன்னாடி எதையும் காட்டிக்காதீங்க. அவ போன பின் பசங்ககிட்ட சொல்லிக்கலாம்.

ஏம்மா?

பெரிய இடத்து பொண்ணு மாதிரி இருக்கா என்ற நேத்ரா, நாம நாளைக்கு மேம்கிட்ட பேசலாம் என்றாள்.

அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா உதவி செய்வால்ல?

ஆமா, அதான் வேண்டாம்ன்னு சொல்றேன். நமக்கு உதவி நம்ம முதலாளி வீட்ல இருந்து தான் செய்யணும். இல்ல அவங்க ஏதாவது நம்ம ஆசிரமத்தை மூடிட்டா பிரச்சனையாகிடும் என்று அவள் சொல்ல, அனைவரும் கண்ணை துடைத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

காவியனும் நண்பர்களும் அவளிடம் வந்தனர். அக்கா..ஒன்றுமில்லையே? என்று காவியன் கேட்க, வயித்துல புண்ணு அதிகமா இருக்கிறதால தான் இப்ப வாமிட் செய்திருக்கான் என்று நேத்ரா ரணாவிடம், உன்னோட பேர் என்ன? என்று கேட்டாள்.

அவள் பெயரை கூற, நேத்ராவும், காவியன் நண்பர்களும் அவனை பார்த்தனர்.

என்னக்கா?

ஒன்றுமில்லை. அந்த பொண்ணை வீட்ல விட்டுட்டு வா..

இல்லக்கா. நானே போயிடுவேன் என்றாள் ரணா.

ரொம்ப நேரமாகிடுச்சும்மா. போடா, ரணாவ விட்டுட்டு நீ நம்ம இடத்துக்கு வந்திரு என்றாள்.

நீங்களும் வாங்கக்கா. நாங்க உங்கள விட்டுட்டு போறோம் என்றாள்.

இல்லடா. நீங்க கிளம்புங்க. அவன் விழித்தவுடன் நாங்க வாரோம் என்றாள் நேத்ரா.

அக்கா, நான் உள்ள போய் பார்த்துட்டு வரலாமா? ரணா கேட்க, சரி என்று நேத்ரா தலையசைக்க உள்ளே சென்று அவனது பிஞ்சு கைகளை தொட்டு பார்த்தாள். பின் அவள் கழுத்திலிருந்த லக்கி லாக்கெட்டை கழற்றி அவனுக்கு மாட்டி விட்டு, “உனக்கு ஒன்றுமில்லை” என்று முத்தமிட்டு வெளியே வந்தாள்.

நேத்ராவும் மற்றவர்களும் அவளை வெளியேயிருந்து பார்த்து விட்டு தயங்கி அவளிடம், அந்த செயின்? என்று நேத்ரா கேட்க, அது அதிகமா போகாதுக்கா. ஆனால் அது என்னோட லக்கி ஸ்டார் லாக்கெட். அவனுக்கு கொடுக்க தோன்றியது. கொடுத்தேன். அவனிடமிருந்து யாரும் எடுக்கக்கூடாது என்று எல்லாரையும் பார்த்தாள்.

அய்யோ..தப்பா எடுத்துக்காதீங்க. நான் லக்கி லாக்கெட்டை சொன்னேன் என்றாள்.

காவியா கிளம்பு என்று நேத்ரா சொல்ல, அக்கா உங்களையும், அவனையும் நல்லா பார்த்துக்கோங்க என்று அவளை அணைத்து விட்டு, காவியா உனக்கு டிரைவ் பண்ண தெரியுமா? கேட்டாள்.

ம்ம்..பண்றேன் என்றான்.

உனக்கு எப்படிடா தெரியும்?

மறந்துட்டியா? மேமிற்காக பள்ளி படிக்கும் போதே செல்வானே? சுபிர்தன் சொல்ல, சரி பார்த்து போயிட்டுவாய்யா என்று பாட்டி சொல்ல, மல்லிகா அக்காவை திரும்பி பார்த்துக் கொண்டே அவன் சென்றான். அனைவர் முகத்திலும் நன்றாக வித்தியாசம் உணர்ந்தான் காவியன்.

காரில் ஏறிய காவியன் வண்டியை எடுக்க, அவன் பக்கத்தில் அமர்ந்தாலும் ரணா பேச்சே இல்லாது வெளியே பார்த்துக் கொண்டே வருவதை பார்த்து, நீ ஓ.கே தான? கேட்டான். அவள் கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

என்னாச்சு ரணா? என்று காரை பிரேக்கிட்டு நிறுத்தினான் காவியன்.

ப்ளீஸ், காரை எடேன் என்றாள்.

என்ன ஒருமாதிரி பேசுற? அவன் கேட்க, அவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. எனக்கு தெரியக்கூடாதுன்னு உன்னோட அக்கா மறைக்கிறாங்க.

இல்ல ரணா.

அவனை பார்த்து, உனக்கு தோன்றவில்லையா? கேட்டாள். அவன் அமைதியாக இருந்தான்.

விரக்தி சிரிப்புடன், உனக்கு தெரியுமா? நான் பிறந்த போது எனக்கு ப்ளட் அளவு கம்மியா இருக்குன்னு. என்னோட ப்ளட்டுக்காக அலைஞ்சாங்க. நான் உயிரோட இருப்பதே கஷ்டம் என்ற நிலையில் தான் இருந்தேன். ஆனால் மாமா.. என்னோட மாமா தான் இரத்தம் கொடுத்திருக்கார். ஆனால் அம்மா, அப்பா முன் வரலை. அவசர நிலை என்பதால் எல்லாரும் என்னிடம் தான் கவனம் செலுத்தி இருக்காங்க. அவரை மிஸ் பண்ணிட்டாங்க. நான் பிழைத்த பின் தான் அவர் பெயரை வைத்து என் அம்மாவின் தம்பி தான் வந்தார்ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சது.

அவங்களுக்கும் அப்பாவுக்கும் ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். அதான் அவரை நான் பார்த்ததேயில்லை. யாரிடம் கேட்டாலும் சொல்லவே மாட்டாங்க. அவரை நான் பார்த்ததேயில்லை.  பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை. அப்பாவும் அவரை பற்றிய எண்ணத்தை மாற்றிக் கொண்டார். இப்ப வரை தேடியும்  அம்மா இருந்த ஊரிலும் அவர் இல்லை. அவரை கண்டுபிடிக்கவும் முடியலை.

இப்ப யுவி கையை பிடிக்கவும், அவர் என் கையை பிடித்தது போல் ஓர் எண்ணம் தோன்றியது. இது அவருடையது தான். அவர் தான் அன்று எனக்கு போட்டு சென்றுள்ளார். அன்றிலிருந்து எனக்கு பெரியதாக அடிபட்டதில்லை. அது என்னை பாதுகாத்ததை போல் உணர்ந்தேன். இப்ப அது என்னை விட யுவிக்கு தேவைன்னு தோன்றியது என்று கண்கலங்கினாள்.

உன்னோட மாமா உனக்கு கொடுத்ததை கொடுத்துட்ட கஷ்டமா இல்லையா?

எனக்கு யுவியை பார்த்தால் என்னை பார்ப்பது போல் இருந்தது. நான் பிறந்து ஒரு நாள் கூட இருந்திருக்காது. எனக்கு அவர் உருவம் தெரிந்தது. ஆனால் முகம் நினைவில்லை. என் அம்மா அவங்க பேமிலி நினைவு வரும் போது அழுவாங்க. முதல்ல ஏதும் தோணலை. போக போக எனக்கும் அவரை பார்க்கணும் ஆசை வந்தது. அம்மாவுக்காக கூட அப்பாவிடம் பேசி தேட சொன்னேன் என்னுடைய பத்தாவது வயதிலே. ஆனால் இப்ப வரை அவரை பார்க்க முடியலை என்று அழுதாள்.

இந்த வருடமாவது பார்த்தால் நல்லா இருக்கும்ன்னு தோணுது என்றாள். அவள் வீடு வர, உள்ளே சென்று காரை நிறுத்தினான்.

வருத்தப்படாத. நீ பார்க்கணும்ன்னு இருந்தா கண்டிப்பா அவரை பார்ப்ப என்று அவளை பார்த்து, எதையும் நினைக்காமல் தூங்கு. யுவிக்கு ஏதும் ஆகாமல் நாங்க பார்த்துக்கிறோம் என்று அவன் செல்ல கண்ணை துடைத்து விட்டு, ஓடிச் சென்று அவன் கையை பிடித்து, நில்லு வாரேன் என்று கார் டிரைவரை அழைத்து அவனை விட்டு வரச் சொன்னாள்.

நான் போய்ப்பேன் ரணா.

இல்ல அக்காவையும் பார்த்துக்கணும். அங்க யாருக்கும் விசயம் தெரியாதுல்ல. சீக்கிரம் போ என்று அனுப்பி விட்டு உள்ளே வந்தாள்.

“யாருடி இந்த நேரத்துல யாரோ ஒரு பையனோட வர்ற?” அவள் பாட்டி திட்ட, அவள் அம்மாவை பார்த்து அழுது கொண்டே ஓடிச் சென்று அணைத்தாள்.

“பிரணா, என்னாச்சும்மா?” என்று அவள் அம்மா, பாட்டி, யசோதா அத்தை அவளிடம் வந்தனர். அம்மா, மாமா நினைவாவே இருக்கு என்றாள்.

“என்னடி இத்தனை நாள் இல்லாம திரும்பவும் ஆரம்பிச்சிட்ட? என் மருமகள விட நீ தான்டி அவனை நினைச்சு அழுற?” பாட்டி திட்ட, அத்த..ப்ளீஸ் என்றார் சிவநந்தினி.

ஒன்றுமில்லைடா பிரணா? வா..சாப்பிடலாம் என்று அவளை அணைத்து சாப்பிட அழைத்து சென்றார் யசோதா. சிவநந்தினி கண்ணீருடன் போகும் தன் மகளை பார்த்துக் கொண்டே, என் பிள்ளை முன் அன்று வந்ததற்கு பதில் என் முன் வந்திருக்கலாம். நீ நேரம் கழித்து வந்தால் நான் என்ன செய்வது? பாரு பிரச்சனையாகி விட்டது என கலங்கினார்.

ஹாஸ்பிட்டலில் காவியனும் ரணாவும் கிளம்பிய பின், நேத்ரா யுவியை பற்றி கூற, பசங்க அழுது கொண்டே வேற வழியேயில்லையாக்கா? கேட்டனர்.

என்னால நம்ம முதலாளி கம்பெனி வரை வர முடியாது. விசயத்தை சொல்லி நீங்க அப்பாயிண்ட் வாங்கிட்டு வாங்க. அப்புறம் நான் பார்த்துக்கிறேன் என்றாள். அனைவரும் அமைதியாக அமர, அவளது ஸ்கேன் ரிப்போட்டை பாட்டியிடம் காட்டி விசயத்தை சொல்லி கட்டிக் கொண்டு நேத்ரா அழுதாள்.

அனைவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர். அக்கா, என்ன செய்றது? அருள் கேட்க, பாட்டி, உங்களால எனக்கு பார்க்க முடியுமா? கேட்டாள்.

அம்மா, இப்ப முடியுமான்னு தெரியலை. ஸ்கேன் அதிகமா இல்லாம..நானே உன்னை பத்திரமா பார்த்துக்கிறேன். பிரசவம் மட்டும் ஹாஸ்பிட்டல்ல பார்த்துக்கலாமேம்மா? என்றார்.

சரிம்மா. நம்மை தவிர யுவி பத்தி யாருக்கும் தெரியக்கூடாது. புரியுதா? நேத்ரா கேட்க, அக்கா..விஷ்வா சார்கிட்ட உங்களை பத்தி சொல்லி உதவி கேட்கலாமா?

இல்ல, கண்டிப்பா அவனுக்கு தெரியக்கூடாது என்று அவனிடம் யுவி பற்றி சொல்லலாம் என்று அவள் சொல்ல மற்றவர்களும் ஒத்துக் கொண்டனர். யுவன் விழித்து அழுதான். அனைவரும் உள்ளே ஓடிச் சென்று அவனை சமாதானப்படுத்தினர். அதே நேரம் காவியனும் அங்கு வர, அனைவரும் சேர்ந்தே நிலையத்திற்கு சென்றனர்.

மாயா, ஜெயந்தி மட்டும் விழித்திருக்க, நடுஇரவில் அங்கே வந்தனர் நேத்ராவும் மற்றவர்களும். மாயா யுவியை பார்த்து ஓடி வந்தாள். காவியன் அவளை பார்த்துக் கொண்டே நின்றான். அவன் நண்பர்கள் அவனை தட்ட, ம்ம் என்று அவளை பார்க்க,

மாயா என்று அழைத்தான். எல்லாரும் அவனை திரும்பி பார்க்க, “என்னாச்சு காவியன்?” கேட்டாள் மாயா.

இல்ல..ஒன்றுமில்லை என்று ஜெயந்தி அக்காவை பார்த்தான். கண்டு பிடிச்சுட்டான்னோ? என்று அவர் பார்க்க, அவன் இருவரையும் பார்த்துக் கொண்டே சென்றான். அவர்களும் இவனை பார்த்து பேசிக் கொண்டே செல்ல, இங்கே ஏதோ நடந்துள்ளது என்று புரிந்து கொண்டான். நம் காவியனுக்கு மாயா மீது காதல். அனைவரும் ஓய்வெடுக்க மறுநாள் அனைவருக்கும் விடுமுறை என்றாலும் அதே நேரத்திற்கு தயாராகி வந்தனர்.  நேத்ராவால் எழ முடியவில்லை.

அக்கா, நீங்க ஓய்வெடுங்க பார்க்கலாம் என்றான் அருள். அவள் ஓய்வெடுக்க பாட்டி தான் இறை வழிபாட்டை முடித்து அனைவரையும் சாப்பிட வைத்தார்.

சாப்பிட்டு ஒவ்வொருவராக வந்தனர். நேத்ராவும் எழுந்து வந்தாள். காவியன் நேற்று நடந்ததை விசாரித்து இருப்பான். அவன் தனியே அமர்ந்திருந்து எல்லாரையும் பார்த்துக் கொண்டிருந்தான். தன்வந்த்திடம் யாருமே பேசவில்லை என்பதையும் கவனித்தான். அவன் அடிக்கடி மாயாவை பார்ப்பதையும் பார்த்தான்.

காவியன் எழுந்து அவன் முன் வந்து நிற்க, அவன் விலக, அவனை செல்ல விடாது மறித்து நின்றான்.

நேற்று சார், என்ன பண்ணீங்க? கேட்டான்.

அண்ணா, நான் எதுவுமே செய்யலை. அவங்க தான்..

யாரு? நாங்களா? வெண்பா சண்டைக்கு வந்தாள். அனைவரும் தன்வந்த் செய்ததை சொல்ல, நேத்ரா கோபமாக. இப்படி பேச எங்கடா கத்துட்டு வந்த? அவளை பற்றி தெரிந்தும் இப்படி பேசி இருக்க? அவள் கையை ஓங்க, அக்கா அடிக்க வேண்டாம். அதான் ஏற்கனவே வாங்கிட்டானே? என்று அவனை இழுத்து வந்து மாயா முன் நிறுத்தினான் காவியன்.

மன்னிப்பு கேளு என்றான்.

அவளை பார்த்த தன்வந்த், எல்லாரும் அவனை பார்ப்பதை பார்த்து “முடியாது” என்றான்.

கேளுன்னு சொன்னேன்..கேளு என்றான் விடாபிடியாய் காவியன்.

காவியா, அவனை விடு என்று செல்ல இருந்த மாயா கையை பிடித்து, நில்லு..சத்தமிட்டான். அனைவரும் காவியனை அதிர்ந்து பார்க்க, சம்பவமாகப் போகுது என்று சுபிர்தன் இடையிட்டு “கேட்டுத் தொலையேன்டா” என்றான்.

நான் கேட்க முடியாது. ஏன் அண்ணா? உங்களுக்கு வலிக்குதா? தன்வந்த் கேட்க, காவியன் அவன் கையை விட்டான்.

என்ன சொல்ற? மாயா கேட்க, ஹே..தெரியாத மாதிரி நடிக்காத அவன் மறுபடியும் ஆரம்பிக்க, வெண்பா கோபமாக அவனிடம் வந்தாள். அவனை நிறுத்திய மிதுன் “அமைதியா இரு” என்று நிறுத்தினான்.

காவியனுக்கு உன் மேல விருப்பம் இருக்கு. தெரியாத மாதிரியே பண்ற? அவன் கேட்க, காவியன் இவன் என்ன சொல்றான்? மாயா கேட்க, காவியன் அமைதியாக நின்றான்.

“சொல்லுடா” என்று அவனருகே அவள் வந்தாள். ஆமா மாயா, எனக்கு உன்னை பிடிக்கும் என்றான்.

ஏன்டா? என்னால அந்த மாதிரி உன்னை நினைக்க முடியாது என்றாள்.

அப்படின்னா? எங்க எல்லாரையும் அண்ணான்னு கூப்பிடற? அவன் மட்டும் ஸ்பெசலா? அருள் கேட்க,

“அய்யோ, ப்ரெண்டா இருந்தாலும் பேர் சொல்லி அழைக்கலாமே?” அவள் சத்தமிட, அவளை நெருங்கிய காவியன், நான் ப்ரெண்டு மட்டும் தானா? என்று கண்ணீருடன் அவளது கையை எடுத்து அவனது நெஞ்சில் வைக்க, அவன் கையை உதறிய மாயா “ப்ரெண்டு மட்டும் தான். என்னால உன்னை காதலிக்க முடியாது” என்று அவளும் அழுதாள்.

“ப்ளீஸ் அழாத மாயா” என்று அவளிடம் காவியன் கண்ணீருடன் வர, நில்லுடா என்ற நேத்ரா அவள் தான் தெளிவா சொல்லிட்டால்ல. அவளை கட்டாயப்படுத்தாத.

அக்கா, நான் அவளை கட்டாயப்படுத்தலை. அழாதன்னு தான் சொன்னேன்.

நான் என்ன செய்தால் உனக்கென்ன? போ..ப்ளீஸ் போ..என்று அவள் மீண்டும் அழுதாள். காவியன் நேத்ராவை பார்த்து விட்டு, சாரி மாயா என்று அங்கிருந்து ஓடினான்.

டேய் காவியா, நில்லுடா என்று மிதுன் ஓடினான். அவர்கள் பின் செல்ல இருந்தவர்களை நிறுத்தினாள் நேத்ரா. அவனுக பேசிட்டு வரட்டும். நீங்க அங்க போய் பார்த்துட்டு வாங்க என்று உள்ளே சென்று ரிப்போட்டை எடுத்து மற்ற மூவரிடமும் கொடுத்து தனசேகரனையும் அனுப்பி வைத்தாள்.

சிறிது நேரத்திலே அவர்கள் திரும்பி வந்தனர். அண்ணா, அதுக்குள்ள வந்துட்டீங்க? நேத்ரா கேட்க, அவங்க ஒரு மாதத்துக்கு பின் தான் பார்க்கவே அப்பாயின்மென்ட் தர்றாங்க.

பிரச்சனையை எடுத்து சொன்னீங்களா? அவள் கேட்க, சொன்னோம் அக்கா. ஆனால் அவங்க ஒரு மாதத்திற்கு பின் தான் சேர்மனை பார்க்க முடியும்ன்னு சொல்லீட்டாங்க என்றான் அருள். யோசனையோடு நேத்ரா அமர்ந்தாள்.

டேய், நீங்க காவியனை போய் பாருங்க என்று ரிப்போர்டை வாங்கி விட்டு, சுபி..நீ மட்டும் இருடா என்று அவனை நிற்க வைத்து உள்ளே சென்று யுவனை அழைத்து வந்தாள்.

அண்ணா, எல்லாரையும் பார்த்துக்கோங்க என்று பாட்டியை பார்த்தாள்.

எங்கம்மா போற? ஜெயந்தி அக்கா கேட்க, நான் மேம்மை வீட்ல போய் பார்த்துட்டு வாரேன் என்று மாயாவை பார்த்து, எல்லாமே சீக்கிரம் சரியாகும் என்று அவளுக்கு ஆறுதலளித்து விட்டு சுபியுடன் கிளம்பினாள்.

அதிரதன் வீட்டின் வாட்ச்மேனிடம், “சிவநந்தினி மேம்மை பார்க்கணும்”ன்னு நேத்ரா சொல்ல, அம்மா வீட்ல இல்லைம்மா என்றார் அவர். அவள் நிலையை கூறி கேட்க, அவர் உள்ளே அழைத்து சென்றார்.

முதலில் வந்தது நிர்மலா தான். அவளை பற்றி அறியாத நேத்ரா விசயத்தை சொல்ல..

ஏம்மா, பணத்துக்காக இப்படியா ஏமாத்தி உள்ள வருவ? கேட்க, அவள் பொறுமையாக நோ..மேம் என்று ரிப்போர்ட்டை காட்டினாள். அதை பார்த்த நிர்மலா அதை தூக்கி எறிந்து விட்டு, ஏதோ ஒன்றை கொண்டு வந்து பணம் பிடுங்க பார்க்கிறாயா? கத்தினாள்.

மேம், நீங்க அதிகமா யோசிக்கிறீங்க? “உங்க நிலையத்துல்ல கஷ்டப்படுற குழந்தைக்காக தான் பேசுகிறேன்” என்றாள் அவள். சுபிர்தனுக்கு கோபம் ஏறியது.

இந்தா இதுக்கு தான வந்த என்று பணத்தை தூக்கி எறிந்தார் நிர்மலா. அந்நேரம் உள்ளே வந்தான் அதீபன். அவர்களை பார்த்துக் கொண்டே படியில் ஏறினான்.

மேம், உங்க மரியாதையை நீங்களே கெடுத்துக்கிட்டீங்க என்று சொல்லிக் கொண்டே கீழே கிடந்த பணத்தை பொறுக்கி எடுத்தாள். சுபி கோபமாக, “அக்கா” இந்த பணம் நமக்கு எதுக்கு? வாங்க என்று அவள் கையை பிடித்து இழுத்தான்.

சுபி..நகருடா என்று சத்தமிட்ட நேத்ரா, எல்லாவற்றையும் எடுத்து வந்து நிர்மலா முன் வந்து அவளை பார்த்துக் கொண்டே அவர் முகத்திலே பணத்தை விட்டெறிந்தாள். பாட்டியும், யசோதாவும் வீட்டிற்குள் வந்தனர். அதீபன் நின்று வேடிக்கை பார்த்தான்.

இங்க பாருங்க. நான் உங்க பணத்துக்காக தான் வந்தேன். ஆனால் இந்த பணத்தை விட எங்களுக்கு மானம் தான் பெரியது. ஆனால் நீங்க உங்க நிலையத்துக்கு செய்ய வேண்டியதை நாங்களாகவே நிறைய சமாளித்து இருக்கோம். ஆனால் இந்த குட்டிப்பையோட உயிருக்காக தான் வந்தோம்.

நாங்க யாரிடம் பேசணுமோ அவங்ககிட்ட பேசிக்கிறோம். ஆனால் இவனுக்கான பொறுப்பு இந்த குடும்பத்தோடது. நீங்க தான் அவனோட சிகிச்சைக்கான பணத்தை தரப் போறீங்க. தர வைப்பேன் என்று கோபமாக செல்ல,

“யாரும்மா நீ? எங்க வீட்டுக்கு வந்து எங்க வீட்டு பிள்ளைய மிரட்டிக்கிட்டு இருக்க?” பாட்டி கேட்டார்.

“சோ..இன்ட்ரஸ்டிங்” என்று அதீபன் கீழிறங்கி வந்து, பாட்டி அவங்க மேல தப்பு இல்லை என்று நேத்ராவை மேலிருந்து கீழாக பார்த்தான். சுபி கோபமாக அவனை முறைத்து விட்டு “வாங்கக்கா..”என்று அவனை இழுக்க,

பேட் ஆன்ட்டி, என்று நிர்மலா காலில் தன் பிஞ்சு கையால் குத்தி விட்டு யுவி நேத்ராவிடம் வந்து, அக்கா..தூக்கு என்றான். அவனை தூக்கிக் கொண்டு கோபமாக வெளியே வந்தாள் நேத்ரா.

ஏய், குட்டிப்பையன் அழகா இருக்கான். யாரும்மா அது? பாட்டி நிர்மலாவிடம் கேட்க, பாட்டி நான் சொல்கிறேன் என்று அதீபன் நடந்ததை சொன்னான்.

அந்த பொண்ணை கூப்பிடுடா.

வேண்டாம் பாட்டி. அதான் சொன்னாலே எப்படியும் வருவா. பார்க்கலாம் என்றான் அசால்ட்டாக. பாட்டியும் யசோதாவும் நிர்மலாவை முறைத்து விட்டு உள்ளே சென்றனர்.

நேத்ரா வெளியே செல்லும் போது தான் சிவநந்தினியின் கார் உள்ளே வந்தது. ஆனால் இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை. யாரும் நேத்ரா வந்ததை பற்றி சிவநந்தினியிடம் கூறவில்லை.

வெளியே வந்து கவலையுடன் அமர்ந்தாள். “அக்கா, இப்ப என்ன செய்றது?”

சேர்மனையும் பார்க்க முடியலை. மேம்மையும் பார்க்க முடியலை. இப்ப நாம் ஒருவரிடம் தான் உதவி கேட்க முடியும் என்ற நேத்ரா அலைபேசியை எடுத்து அங்கிள்..என்று தான் அழைத்தாள். பயங்கரமாக அவளை திட்டினார் அவளது அங்கிள் தினகரன்.

அங்கிள், ப்ளீஸ், உன்னோட தம்பின்னு ஒருத்தன் இருக்கான்னு உனக்கு நினைவிருக்கா? இல்லையா? உன்னை பார்க்க முடியாமல் எவ்வளவு கஷ்டப்படுறான் தெரியுமா?

புரியுது அங்கிள். நான் சொல்வதை கேட்டுட்டு திட்டுங்க.

என்ன கேட்கணும்? இப்பவே நீ எங்க இருக்கன்னு சொல்லு? என்றார். இல்ல டிராக் பண்ணி வந்துடுவேன்.

அங்கிள், நான் பிரக்னென்ட்டா இருக்கேன் கத்தினாள். அந்த பக்கம் சத்தமே இல்லை.

அங்கிள், உண்மைதான். அதை விட எனக்கு பெரிய பிரச்சனை ஒன்று இருக்கு. எனக்கு அதிரதன் சார் எங்க இருக்கார்ன்னு தெரியணும்? கேட்டாள்.

“அக்கா” சுபி சத்தமிட,

“இருடா” என்று “அங்கிள் ஏதாவது பேசுங்க”.

அவரை பற்றி நீ எதுக்கு கேட்கணும்?

அங்கிள், அவரால் தான் இப்ப எங்களுக்கு உதவ முடியும்? பிரச்சனை முடியவும் நான் உங்களை பார்த்து சொல்றேன். “ப்ளீஸ் அங்கிள்” கெஞ்சினாள்.

அந்த ஸ்கேண்டிலை பார்த்தும்மா அவரை பார்க்கணும்ன்னு சொல்ற?

எஸ் அங்கிள். அவர் தப்பு செய்யலை. யாரோ அவரை மாட்டி விட்டுருக்காங்க.

எனக்கும் தெரியும். நீ இப்ப பார்க்க போனா. உன்னை பற்றியும் எழுதுவாங்களே?

அங்கிள், இது எல்லாத்தையும் விட உயிர் சம்பந்தப்பட்ட விசயம். “ப்ளீஸ் சொல்லுங்க”

தினகரன் அதிரதன் கம்பெனியின் முக்கிய லாயர். அவனுடைய குடும்ப லாயரும் அவர் தான். அவர் நேத்ரா அப்பாவின் நண்பரும் கூட.

வினும்மா, எங்களுக்கும் தெரியலம்மா. சேர்மனாலும் கண்டுபிடிக்கவே முடியலை என்றார் அவர்.

யோசித்த அவள், அவர் ஃபாரின்ல இருந்து வந்தவுடன் கண்டிப்பாக அவருக்கென ஏதாவது வாங்கி இருப்பார். ஏதும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்க மாட்டார்.

சரியா தான்ம்மா சொல்ற? நான் விசாரித்து விட்டு சொல்லவா? கேட்டார்.

அங்கிள் சாரை இன்றே பார்க்கணும். இப்பவே மதியமாகப் போகுது. கொஞ்சம் சீக்கிரம் சொன்னீங்கன்னா. நாங்க அவரை பார்த்துட்டு சீக்கிரமே போயிடுவோம் என்றாள்.

சரிம்மா..என்று அவர் போனை வைக்க, மூவரும் நிலையத்திற்கு சென்றனர்.

மாயாவும் வெண்பாவும் அவர்களது வேலையில் மும்பரமாக இருக்க, காவியனும் அவன் நண்பர்களும் அங்கு தான் இருந்தனர். அவனால் மாயாவை பார்க்க முடியாமல் வருத்தமுடன் அமர்ந்திருந்தான்.

நேத்ராவை பார்த்தவுடன் அவர்கள் அவளிடம் வர, ஷ்..உள்ள போய் பேசிக்கலாம் என்று மல்லிகாக்கா என்று யுவியை அவர்களிடம் விட்டு, எல்லாரும் உள்ளே சென்றனர்.

சுபி நடந்ததை சொல்ல, இந்த பணக்காரவங்களே இப்படி தான் இருப்பாங்க கிருஷ்ணன் சொல்ல..

அக்கா, உங்க அங்கிள் முதலாளி வீட்டு கம்பெனில தான் வேலை பார்க்குறாங்களா? சுபி கேட்டான்.

ஆமா, ஆனால் யார் வைத்தும் உள்ளே போனால் நமக்கு அவப்பெயர் தான் மிஞ்சும் என்றாள் நேத்ரா.

அக்கா, ஆனால் அவர் மகனை பார்க்க போவது சரியாக படவில்லை அருள் சொல்ல, ஆமாக்கா..என்று மிதுனும் சொன்னான். அவள் காவியனை பார்த்தாள். அவன் அமைதியாக இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.

“என்ன காவியா போக வேண்டாமா?” நேத்ரா கேட்க, அவளை பார்த்து, “நீங்க தான் முடிவெடுக்கணும்” என்றான்.

என்னடா இப்படி பேசுற? பாட்டி கேட்க, ஆமா அவன் தான் லவ் தோற்ற கவலையில் இருக்கானே? நமக்கு உதவ வருவானா? நேத்ரா கேட்க, அவளை பார்த்தான்.

அவள் அலைபேசி ஒலிக்க, “அங்கிள் பார்த்துட்டீங்களா?” கேட்டாள்.

ம்ம்..என்று அவர் இடத்தை சொல்லி விட்டு, சேர்மனுக்கு கூட தெரியாம சொல்றேன்ம்மா. பார்த்து ஏதும் பிரச்சனையாகிடாமல் செய்யும்மா என்றார்.

“தேங்க்ஸ் அங்கிள். கண்டிப்பா பிரச்சனை ஆகாது” என்று அவள் அலைபேசியை  வைத்து விட்டு எழுந்தாள்.

“அம்மா, நீ கண்டிப்பா போகணுமா? எந்த இடம்?”

நீங்க கவலைப்படாம இருங்கம்மா. நான் பார்த்துக்கிறேன். அவர் தனிமைக்காக தான் சென்றிருப்பார். அதான் நம்ம பசங்க இருக்காங்கல்ல என்றாள்.

தம்பிகளா! தேவையில்லாம கோபமாவோ, இல்லை சண்டைக்கோ செல்லக்கூடாது. தனியா வேற இருப்பார். அதான் கொஞ்சம் பதபதப்பா இருக்கு என்றார் பாட்டி.

சுற்றி ஆள் இல்லாமலா இருக்க போறாங்க. நாங்களும் இருக்கோம் அருள் சொல்ல, நேத்ரா அவனை பார்த்தாள்.

போகலாமாக்கா..என அனைவரும் எழ, காவியனும் வெளியே வந்தான். மாயா எதிரே அவனை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றாள். அவன் அவளை பார்த்துக் கொண்டே கண்ணீருடன் முன் நகர, அவனை மறித்த நேத்ரா வர்றேல்ல கேட்டாள்.

இல்லக்கா. நான் ஹாஸ்டலுக்கு போறேன்.

அப்படியா? நீ போக முடியாது என்று கையிலிருந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை வைத்திருந்த பையை தூக்கி அவன் மேல் போட்டு, இதை தூக்கிட்டு வா.

அக்கா, இவனுக இருக்கானுகல?

இருக்கானுக?

நீ தூக்கிட்டு வர முடியாதா?

“வாரேன்க்கா” என்று காவியன் ஒத்துக் கொள்ள, யுவியை பார்த்துக் கொண்டே நேத்ரா நகர்ந்தாள்.

மங்கிய கதிரவனின் ஒளியில் அக்கடற்கரை ரம்மியமாக காட்சியளித்தது. ஆறு பேரும் அதை ரசித்தவாறு நடந்தனர். ஒட்டியிருந்த பங்களாவை பார்த்து அவர்களின் கால்கள் நின்றது. சுற்றிலும் வீடெதுவுமில்லை. யாருமில்லை.

அக்கா, இங்க தானா? அருள் கேட்க, ஆமாம் என்று தலையசைத்தாள். அதான் அப்பொழுது என்னை ஒருமாதிரி பார்த்தீங்களா?

“அக்கா, சீக்கிரம் போய் பார்த்துட்டு கிளம்பணும்” என்றான் மிதுன்.

“ரொம்ப பயப்படுறீங்க போல?” நேத்ரா கேட்க, அக்கா..சத்தம் போட்டால் கூட எந்த சத்தமும் இந்த அலை சத்தத்தில் கேட்காது. நமக்கு டேஞ்சர் தான் என்றான் சுபிர்தன்.

காவியன் அவன் பாட்டுக்கு கேட் கதவை திறந்து உள்ளே சென்றான்.

“டேய், காவியா பர்மிசன் கேட்காம போற?” மிதுன் சத்தமிட்டான்.

நாம கூப்பிட்டா உள்ள இருக்கிறவங்களுக்கு எப்படியும் கேட்காது. அலை சத்தம் மட்டுமல்ல. வீடும் பெருசா இருக்கே. “முதல்ல அவர் உள்ள எங்க இருக்கார்ன்னு தேடணும்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

“நில்லுடா நானும் வாரேன்” என்று நேத்ரா வேகமாக நடக்க, “அக்கா” என்று நால்வரும் கத்தினர்.

“என்னடா” என்று திரும்பி பார்க்க, முதல்ல மாதிரி ஓடாதீங்க. மெதுவா போங்க. பாப்பா பாவம்ல..என்றான் கிருஷ்ணன்.

டேய் கிருஷ்ணா, ரொம்ப தான்டா அக்கறை.

“அக்கறை இல்லாமல் போகுமா?” அருள் கேட்க, அவள் மனதில் சந்தோசமாக இருந்தாலும் எதையும் சட்டை செய்யாது காவியன் பின் சென்றாள்.

Advertisement