Advertisement

அத்தியாயம் 15

அதீபன் சினமுடன் வெளியே செல்ல, அவன் பின் ஓடிய நிர்மலா..எங்கடா போற? என்று அவன் கையை பிடித்தார்.

ச்சீ..என்னை தொடாதே. எல்லாரையும் புண்படுத்தும்படி பேசுவது உன் இயல்புன்னு தான் அமைதியா இருந்தேன். இப்படி கேவலமான காரியத்தை செஞ்சு வச்சிருக்க? இதுக்கு மேல எப்படி இங்க இருக்க முடியும்?

நான் உனக்காக தான்டா எல்லாமே செஞ்சேன்.

எனக்காகவா இல்லை உனக்காகவா? கத்தினான்.

உனக்கு தான் நிர்மலா தயங்க, எனக்கு கை, கால் எல்லாமே நல்லா இருக்கு. நான் என்னோட மியூசிக் பேண்டுல சேர்ந்திருந்தா. இப்படி வெட்டியா இருந்திருக்க மாட்டேன். எப்ப பாரு ரதன் அண்ணாவுக்கு போட்டியாகவே என்னை நிற்க வைக்கிற. உனக்கும் சரி உன் புருசனுக்கும் சரி நான் கம்பெனிக்கு போகணும். எனக்கு என்ன பிடிச்சிருக்குன்னு உங்களுக்கு தோணவேயில்லை.

என்னோட இன்ஸ்டூமன்ட் எல்லாமே செழியன் அப்பாவும் ரதன் அண்ணாவும் தான் வாங்கி தந்தாங்க. எனக்கு பிடிக்கும்ன்னு..ஆனால் நீயோ? இல்லை அவரோ ஒன்றாவது ஆசையாக வாங்கி கொடுத்திருக்கீங்களா?

இன்று கம்பெனிக்கு போனது ஆத்வி அக்காவுக்கு ஏதும் ஆகக் கூடாதுன்னு தான். உனக்கு பணம் ரொம்ப முக்கியம்ன்னா நான் சம்பாதிக்கிறேன். என் வழியில் போக விடுங்க என்று நிதினை பார்த்து, நமக்கு அம்மா, அப்பா இருந்தும் நம்மை புரிந்து நடந்த அம்மா, அப்பா இவங்க தான் என்று செழியனையும் சிவநந்தினியையும் சொல்ல,

நிர்மலா கோபமாக, நான் உன் நல்லதுக்காக சொன்னேன். இப்ப நான் யாரோ மாதிரி பேசுறடா. அவங்க உனக்கு வாங்கி கொடுத்தது நீ கம்பெனிக்குள்ள வரக்கூடாதுன்னு என்று கத்தினார்.

அவர் கன்னத்தில் அறைந்த சிவநந்தினி, அவன் உன்னோட பிள்ளையா இருந்தாலும் என் கையால சாப்பிட்டு மடியுறங்கியவன்டி. அவன இப்ப கம்பெனிக்கு வரச் சொல்லு ரதன் அவனோட எல்லாத்தையும் அதீபனுக்கு மாற்றி விடுவான்.

உனக்கு கொஞ்சமாவது மனசு இருக்கும்ன்னு நினைச்சேன். இல்லன்னு காண்பிச்சுட்ட. பாவம் அந்த சின்ன பிள்ளைங்க. இப்ப வளர்ந்த பிள்ளைகள எப்படி படிக்க வைக்கிறது? அவங்க எதிர்காலத்தையே அழைச்சிட்டு இப்படி மத்தவங்க மேல பழி போடுற? உனக்கு உறுத்தவே இல்லையா? என்று கண்ணீருடன் நிதினிடம், அந்த குட்டிப் பையனை பார்க்கலாமா? கேட்டார் சிவநந்தினி.

இல்லம்மா. வேண்டாம், இதுக்கும் மேல அவங்க மத்தவங்களால கஷ்டப்படுறத பார்க்க என்னால் முடியாது. அந்த பொண்ணு பார்த்துப்பா.

எப்படிடா? அவளும் சின்னப் பொண்ணுடா.

நிதின் வெற்றுப் புன்னகையுடன், இரு வருடமாக அந்த பசங்களுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து அவளுக்கு வரும் சம்பளத்தையும் கொடுத்து எதையும் பொருட்படுத்தாமல் அனைத்து பிரச்சனையையும் தனியாக சமாளிக்கும் அந்த பொண்ணு சின்னப் பொண்ணா? கேட்டான்.

அதீபனுக்கும் தாட்சாயிணிக்கும் அந்த இரு வருடம் என்பதில் அவனை சந்தேகமாக பார்த்தனர்.

இல்லடா. அந்த பையன் நம் நிலையத்தில் வளரும் குட்டிப்பையன். அதான் கேட்டேன்.

அம்மா, அதுக்கான ஏற்பாட்டிற்காக அவள் அந்த பையனுடன் அவளும் பணம் கொடுப்பதாக சொன்னவனுடன் தான் வேலைக்காரியாக இருக்கிறாள் என்றான் வெறுமையுடன்.

என்னடா சொல்ற? எங்க இருக்கா? போய்..கூட்டுட்டு வா. நாம அந்த பையனுக்காக முழுசெலவையும் ஏத்துப்போம் செழியன் சொல்ல,

அன்று இதை கேட்டு தான் உங்க கம்பெனிக்கும் வந்திருக்காங்க. வீட்டுக்கும் வந்திருக்காங்க. இப்ப நீங்க போனா, உங்களுக்கு தான் அவமானம் என்றான்.

ஒரு உயிரை விட மானம் அவமானம் முக்கியமாக போய் விட்டதா? பாட்டி கேட்க, ஆமா, அந்த பொண்ணு எங்க இருக்கான்னு சொல்லு, நான் அவளை கூட்டுட்டு வாரேன் யசோதா சொல்ல..

அவங்கள விடுங்க. அவ ரொம்ப ரோசக்காரி. அவள் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கவில்லை. மீண்டும் இவ்விடம் அவள் வர மாட்டாள். நீங்களே சென்றாலும் அவள் மனதுக்கு தோன்றுவதை தான் செய்வாள்.

அந்த பொண்ணை பத்தி இவ்வளவு விவரம் உனக்கு எப்படி தெரியும்? அதீபன் கேட்டான். விஷ்வா மூலம் அறிந்து கொண்டேன்.

உனக்கும் அவனுக்கும் தான் ஆகவே ஆகாதே? செழியன் கேட்க, சார் இது வேலை சம்பந்தப்பட்ட விசயம். அது எங்க பர்சனல் என்றான். அவரும் இவனை ஒருமாதிரி பார்த்தார்.

நீ வெளிய போடி..என்று ராமவிஷ்ணு நிர்மலாவை இழுத்து செல்ல..அதி பாருடா..என்று அவர் அழுதார். அவன் அமைதியாக நின்றான்.

அத்தை, நான் போகலை. நான் எங்கே போவேன்? மாமா..என்று ஒவ்வொருவராய் நிர்மலா அழைக்க, மாமா..ஒரு நிமிஷம் என்று நிதின் ராமவிஷ்ணுவை அழைத்தான்.

நிர்மலா நிதினிடம் ஓடி வந்து, நான் இங்கேயே இருக்கேன். நான் என் அம்மா வீட்டுக்கு போனால் யாரும் கண்டுக்கவே மாட்டாங்க என்று அவன் கையை பிடித்து அழ, நான் இதுக்காக அழைக்கவில்லை.

நீ எங்களிடம் சொன்னதை கோர்ட்டுல சொல்லணும் என்றான் நிதின்.

கோர்ட்டில்லா? அதிர்ந்து அவனை பார்த்தார் நிர்மலா.

எனக்கு ரதன் பாதுகாப்பா இருக்கணும். இந்த தயாளன் மட்டும் வெளிய வந்தால், ரதனை கொல்லாமல் விடமாட்டான். அவன் உள்ளே செல்ல ரதன் தான் காரணம். தீக்சியும் வெளிய வந்துருப்பான்னு நினைக்கிறேன்.

தயாளன் எக்காரணத்திலும் வெளியே வரக்கூடாது. இப்படி நீங்கள் செய்தால் உங்களை மன்னிப்பதை பற்றி எல்லாரும் யோசிக்கிறோம் என்று நிதின் மற்றவர்களை பார்க்க,

பிரணா தயங்கியவாறு, நிது மாமா..என்று அழைத்தாள். அனைவரும் அவளை பார்த்தனர்.

என்ன? நிதின் கேட்க, அண்ணாவை தீக்சியும் கொல்லும் முடிவில் தான் இருக்கா?

தீக்சியா? அவள் நினைப்பது உனக்கு எப்படி தெரியும்? நிதின் கேட்க, பிரணா கண்கலங்க, அவ என்னோட காலேஜூக்கு வந்தா.

உன்னோட காலேஜூக்கு அவ எதுக்கு வந்தா? செழியன் கேட்க, அப்பா..நம்மை சுற்றி நடக்கும் அனைத்தையும் சொன்னாள்.

நிது கல்யாண விசயத்தை சொல்லி,உன்னோட ஆத்வி அதை நினைச்சே செத்து போயிருவா அப்ப தான் உன் அண்ணா வெளிய வருவான். அவனை வர வைக்கிறேன். கொல்லாமல் விடமாட்டேன்னு மிரட்டினா..என்று பிரணா அழுதாள்.

நிதின் அவளிடம் வந்து, வேற என்ன சொன்னா?

அவளை எங்கே அவன் பேச விட்டான்? அவள் வீடியோ..நிது நீ பார்க்கலையா? “அண்ணா நேம் கிளியர் ஆகிடிச்சு” என்று புன்னகைத்தாள்.

ஆமா, பார்த்தேன்.

அதை காட்டி தான் என்னோட ப்ரெண்டு அவளை அங்கிருந்து விரட்டினான். அவன் தான் தீக்சியோட வீடியோவை இணையத்தில் வெளியிட்டு அண்ணா பெயரை சரி செய்திருக்கிறான் என்றாள்.

உன்னோட ப்ரெண்ட்ஸ் அவ்வளவு புத்திசாலியா இருக்க மாட்டாங்களே? நிதின் கேட்க, ஏய்..எனக்கு புத்தி இல்லைன்னு சொல்றியா? அவள் கேட்க,

இல்ல, நிஜமாகவே தான் சொல்றேன். நாங்க முயன்றும் எங்களால் முடியாததை செய்திருக்கிறான் நிதின் கேட்க,

“இட்ஸ் மை நியூ ப்ரெண்டு” என்றாள்.

ஓ..அப்படியா? அதான பார்த்தேன். பழசு எல்லாம் உன்னுடன் ஊர் சுத்திக்கிட்டு தானே இருக்கும்.

ஆமாடா. ஆனால் இவன் வித்தியாசமாக தான் இருக்கான் என்று காவியனை பற்றி அவள் புகழுரைக்க, சிவநந்தினிக்கு அவள் இரவில் காவியனுடன் பேசியது நினைவு வந்து,

போதும் நிறுத்துடி, உன் நண்பன் பெருமையை..எரிந்து விழுந்தார்.

அதீபன், பிரணாவை கூர்ந்து பார்த்து சிக்கிட்டா போலவே என மனதினுள் நினைத்தான். நிதினும் தாட்சாயிணியும் அவள் புன்னகையை பார்த்து, “அழுத பிள்ளை சிரிச்சுச்சாம் கழுதை பாலை குடிச்சுச்சாம்” என கிண்டல் செய்ய, அதீபன் பார்வை அவன் அம்மாவை ஏறிட்டது.

இன்னும் என்னவெல்லாம் செஞ்சு வச்சுருக்கீங்க? அதீபன் நிர்மலாவிடம் கேட்க, தன் கணவனை பார்த்துக் கொண்டே கம்பெனி பணம் ஒரு முறை காணாமல் போனதே? என்று ராமவிஷ்ணுவை பார்த்தார்.

திருட்டு கழுத..அவர் கழுத்தை பிடிக்க, விடுங்க என்று சிவநந்தினி அவன் கையை தட்டி விட்டு, தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். எல்லாரும் அவரை முறைத்துக் கொண்டிருந்தனர்.

நிர்மலா நீரை குடித்து விட்டு, நேராக ரவிக்குமாரிடம் வந்து மண்டியிட்டு மன்னிச்சிருங்கண்ணா என்று அழுதார்.

என்னம்மா பண்ற? அவர் எழுந்தார்.

அவர் கையை பிடித்து இழுத்த அதீபன், இன்னும் என்ன செஞ்சீங்க? அதட்டினான்.

உங்க கம்பெனி பற்றிய ரகசிய பைல்லை ஒருவன் என்னிடம் கொடுத்து இங்க வைக்க சொல்லி நிறைய பணம் அனுப்பி இருந்தான்.

அப்படின்னா..நம்ம இரு குடும்பமும் பிரிய காரணம் நீ தானா? அதீபன் சீறினான். அனைவரும் அதிர்ந்து நிர்மலாவை பார்த்தனர்.

இன்னும் என்ன செஞ்சு வச்சிருக்க? ராமவிஷ்ணு கத்தினார்.

அது வந்து..என்று இழுத்து சிவநந்தினியை பார்த்தார்.

என்னம்மா பண்ணீங்க? அதீபன் மேலும் சீற, நிர்மலா பயத்துடன் நகர்ந்து ஓரிடத்தில் அமர்ந்து அழுதார்.

சொல்லுங்க? அவன் கத்த, ரவிக்குமார் குடும்பமும், செழியன் குடும்பமும் ஓய்ந்து அமர்ந்து அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நந்துவும் அதியும் பிரிய காரணமானவனை பற்றி தவறாக சொன்னது நான் தான். அதிலிருந்து தான் அதி அக்காவிடம் பேசவில்லை என்றார்.

அனைவருக்கும் மனம் விட்டுப் போனது. என் பிள்ளைகிட்ட என்னடி சொன்ன? கதறினார் சிவநந்தினி.

அவருடன் சேர்ந்து மாமாவுக்கு து..துரோகம் பண்றீங்கன்னு உங்க மேல இருந்த கோபத்தில் வாய்ப்பாக எடுத்து கொண்டு சொல்லிட்டேன் என்று சொல்ல.. சிவநந்தினி கதறி அழுதார்.

அன்று என்ன தான்ம்மா நடந்தது? யார் அந்த ஆள்? செழியன் கேட்க மேலும் அழுதார் சிவநந்தினி.

உன்னை நம்பி தான் கேட்கிறேன். உனக்கு தெரிந்தவனா? செழியன் கேட்க, அவர் அழுதாரே தவிர பதில் சொல்லவே மாட்டேன்னு சொல்லீட்டார்.

அம்மா, என்ன காரியமெல்லாம் செஞ்சிருக்கீங்க? அதீபன் மேலும் கோபமாக, பாட்டி எழுந்து நிர்மலாவிடம் வந்து, உனக்கு என்னடி பாவம் செய்தோம்? இப்ப என் பிள்ளைகள் எல்லாரையும் பிரிச்சு கஷ்டப்படுத்தி இருக்க..மனுசியாடி நீ? ச்சீ..தூ..என்று காரி உமிழ்ந்தார்.

நிர்மலா அங்கேயே அமர்ந்தார். ராமவிஷ்ணு அவரை தரதரவென இழுத்து வந்து, வெளிய போடி என்று தள்ளினார். நிர்மலா அழுது கொண்டிருக்க அதீபனும் வெளியே செல்ல, செழியன் அவனை நிறுத்தி..எங்க போற? கேட்டார்.

என்னால இங்க இருக்க முடியாதுப்பா என்றான்.

ஆமாடா, ஒருவன் என்னிடம் பேசவே மாட்டேன்னு கங்கனம் கட்டிக்கிட்டு இருக்கான். மற்றவனுக்கு குடும்பம் வந்திருச்சுன்னு போயிட்டான். இப்ப நீயும் போறியா? என்று சிவநந்தினி அழுதார்.

அதீபன் அவரை பார்க்க, யசோதா, பாட்டி, ரணா அவன் முன் வந்து போகக்கூடாதுன்னு சொன்னார்கள்.

இங்கிருந்தால் சரியா இருக்காது பாட்டி. அம்மா கேவலமான காரியமெல்லாம் செய்து வச்சிருக்காங்க. ரொம்ப அசிங்கமா இருக்கு என்று அழுதான்.

பசங்க, அழலாமாடா? செழியன் அவனை அணைக்க, அப்பா ரொம்ப கஷ்டமா இருக்கு என்று அவனும் அணைத்தான். இதை பார்த்த ராமவிஷ்ணு வெளியே செல்ல,

நீ எங்கடா போற? எனக்கு பொண்டாட்டியும் சரியில்லை, பிள்ளையும் சரியில்லை. நான் இங்கிருந்தால் நம்ம வீட்ல எந்த நல்ல காரியமும் நடக்காது என்று கண்ணீருடன் சொல்ல..

இல்லங்க, நீங்க இருங்க. நான் தானே தப்பு செய்தேன். நானே போயிடுறேன் என்று அனைவரையும் பார்த்து கை கூப்பி மன்னிப்பு கேட்டு விட்டு நிர்மலா தன் மகனை பார்த்துக் கொண்டே வெளியேறினார்.

நிதின் அவர் பின் ஓடிச் செல்ல, அதீபனும் மற்றவர்களும் வெளியே வந்து பார்த்தனர்.

உனக்கென்ன? நான் ஆதாரத்திற்காக சொல்லணும். அவ்வளவு தானே என்று அவன் போனை பிடுங்கி அவராகவே எல்லாத்தையும் சொல்லி கொடுத்து விட்டு மீண்டும் நடந்தார்.

அம்மா..அதீபன் அழைக்க, அவர் நின்றார். அவன் பைக்கை எடுத்து வந்த அதீபன், வா…நானே உன்னை பாட்டி வீட்ல விட்டுட்டு வந்திடுறேன் என்றான். நிர்மலா முகம் வாடியது.

நிதின் அவனிடம் கண்ணசைக்க, வாரேன் என்று அனைவரையும் பார்த்து விட்டு அவன் கிளம்பினான். எல்லாரும் உள்ளே வந்தனர். ரவிக்குமாரும் செழியனும் அணைத்துக் கொண்டனர். ரவிக்குமார் செழியனிடம் மன்னிப்பு கேட்டார்.

சரி, என் மருமகள கண்ணுல காட்டவே மாட்டேங்கிறீங்க? ரவிக்குமார் கேட்டார்.

முகத்தை கழுவி விட்டு வந்த சிவநந்தியை பார்த்த நிதின், அம்மா என ஏதோ கேட்பது போல் வந்த நிதின்..பிரணாவை பார்த்து, தீக்சி வேற எதுவும் சொன்னாலா? நல்லா யோசிச்சு சொல்லு.

அவளும் யோசித்து, அவள் முகம் சுருங்க, அவள் சுயரூபத்தை வெளிக்கொண்டு வந்த என்னோட ப்ரெண்டை சும்மா விட மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டா. கொஞ்சம் பயமா தான் இருக்கு பிரணா சொன்னாள்.

நாம எதுக்கு வந்தோம்? நீ என்ன செஞ்சுகிட்டு இருக்க? ரேவதி கேட்க, மணிய பாருங்க. இரவாகிடுச்சு. இனி அவ தயாராகி வந்து, தட்டை மாத்த விடிந்து விடும் என்றான் நிதின்.

பரவாயில்லை விடிந்தாலும் நாம பார்த்துட்டு வந்த வேலையை முடிச்சிட்டு போகலாம் ரவிக்குமார் சொல்ல, அப்பா..நல்ல நேரம்ன்னு இருக்குல்ல..நிதின் கேட்க, நிது சொல்றதும் சரிதானே? பாட்டி சொல்ல..

அம்மா, இப்ப என்ன எல்லாருக்கும் பிரச்சனை இன்னும் பத்து நிமிசத்துல நல்ல நேரம் இருக்கும். அப்ப தட்ட மாத்திக்கலாம். ஆத்வி மெதுவா தயாராகி வரட்டும். எல்லாரும் சாப்பிட்டு போகலாமே? செழியன் கூற, இதுவும் சரியா தானே இருக்கு ரேவதி சொன்னார்.

என்னாச்சும்மா, ரொம்ப அமைதியா இருக்கீங்க? உங்களுக்கு விருப்பமில்லையா? நிதின் சிவநந்தினியிடம் கேட்டான்.

எனக்கு சந்தோசம் தான் நிது. ஆனால் மூத்தவன் இல்லாமல்..என்று அவர் சொல்ல, அம்மா..ரதன் இல்லாமல் எதுவும் நடக்காது.

என்னடா, சீக்கிரம் கல்யாணம் பண்ணிடலாம்ன்னு நினைச்சா? இப்படி சொல்ற? ரேவதி கேட்க, அம்மா..ரதன் இல்லாமல் எங்களுக்கு திருமணமே வேண்டாம் என்றான்.

அப்படின்னா,..என்று ரவிக்குமார் செழியனிடம், நம்ம தாட்சாயினிக்கு அதிரதனை முடிக்கலாமா? அவர் கேட்டவுடன் நிதின் எழுந்து, நோ..என்றான். சரியாக உள்ளே வந்தான் அதீபன். இவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர், ரதன் ஒத்துப்பானா? கேட்டார் ராமவிஷ்ணு.

 அவன் ஒத்துப்பது ரொம்ப கஷ்டம் என்றான் நிதின்.

ஏன், அப்படி சொல்ற? செழியன் கேட்க, அவன் பெயர் இப்ப தான சரியாகி இருக்கு. அதனால் வேண்டாமே?

பெயர் சரியாகி இருக்கு. இது நல்ல சகுணம் தான? ரேவதி கேட்க, எதுவாக வேண்டுமானாலும் பப்பூவிடம் பேசிட்டு முடிவு எடுங்க என்றார் சிவநந்தினி.  அவர் அருகே வந்து அமர்ந்தான் அதீபன்.

ஆமா, அவனிடம் கேட்டு தான் முடிவு செய்யணும் என்றார் செழியன்.

அப்படின்னா, போன் செய்து அவரை வர வையுங்கள் என்று ரவிக்குமார் சொல்ல, அவனுக்கு லைன் கிடைக்காது. அவன் அந்த கொலைகாரனை பிடிக்காமல் வர மாட்டான். எப்படியும் ஆறு மாதமாகும் என்றான் நிதின்.

லைன் கிடைக்காதா? டேய் செழியா, உன்னிடம் கூட பேச மாட்டாரா? ரவிக்குமார் கேட்க, அவர் நிதினை பார்த்தார்.

நோ..சொல்லுங்க என்று கையசைத்து காட்டினான் நிதின்.

என்னிடம் பேசலை என்றார் அவர்.

சரி, அப்புறம் பேசிக்கலாம் என்று ரேவதி சொல்ல,அப்பாடா என்று மூச்சிழுத்து விட்டான் நிதின். செழியனும் அதீபனும் அவனை பார்த்தனர்.

நான் ஆத்வியை அழைச்சிட்டு வாரேன்..என்று சிவநந்தினி சொல்ல, கொஞ்ச நேரம் பொறும்மா..என்று செழியன் கை தட்ட, ஒருவர் தாம்பலத்தட்டை எடுத்து வந்தார். இருவரும் தட்டை மாற்றி நிச்சயத்தை உறுதி செய்து கொண்டனர்.

நான் ஆத்வியை அழைச்சிட்டு வாரேன் என்று தட்டுடன் சிவநந்தினி எழுந்தார்.

அம்மா, இருங்க நாம் முதல்ல அவளுக்கு சர்பிரைஸ் பண்ணிட்டு வாரேன். அப்புறம் நீங்க போங்க என்று நிதின் எழுந்தான்.

டேய், பொண்ணோட அறைக்கு போகக் கூடாது என்றார் ரேவதி.

அம்மா, நான் அவளை ஒன்றும் செய்யப் போறதில்லை. கவலைப்படாமல் இருங்க. நான் பார்த்துட்டு வாரேன் நிதின் நகர, மாமா நானும் வாரேன் என்று எழுந்த பிரணாவை பாட்டி நிறுத்தி, அப்புறம் உன் அக்காவை பார்க்கலாம் என்று நிறுத்தினார்.

அனைவரும் அதீபன் பக்கம் திரும்பி, அவன் அம்மாவை விசாரிக்க, தாத்தா முதலில் கோபத்தில் அடிக்க வந்தார். பாட்டி தான் அம்மாவுக்கு தண்டனையாக என்னையும் அப்பாவையும் சில வருடங்களுக்கு வரக் கூடாதுன்னு சொல்லீட்டாங்க என்று அவன் வருத்தமாக கூற,

சிவநந்தினி அவனிடம், உன் அம்மா உன்னை பார்க்காமல் ஒரு வருடம் கூட இருக்க மாட்டாள் என்று அவன் தலையை கோத, அவன் கண்ணீருடன் சிவநந்தினியை அணைத்து அழுதான்.

பிரணாவும் தாட்சண்யாவும் துருதுருன்னு எல்லாரையும் வம்பு செய்து கொண்டிருக்கும் அதீபன் அழுவதை பார்த்து வருத்தமடைந்தனர்.

ஆத்விகா அறை அருகே வந்த நிதின் அவர்களது சிறுவயது முதல் சந்திப்பிலிருந்து இப்பொழுது வரை நடந்ததை நினைத்துக் கொண்டு அறைக்கதவை திறந்தான்.

அறை அவ்வளவு அமைதியும் சுத்தமாகவும் இருந்தது. மேசையின் மேல் சில சாப்பிடும் பொருட்கள் இருந்தது. அதை பார்த்துக் கொண்டே அவளை பார்த்து நின்றான்.

அவள் ஆடையை கூட மாற்றாமல் அதே மார்டன் உடையில் கன்னத்தில் கண்ணீர் தடத்துடன் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனுக்கு ஏனோ கடற்கன்னியே அவளுருவில் இருப்பது போல் இருந்தது. கண் சிமிட்டாமல் அவளை ரசித்துக் கொண்டிருந்தான். அவன் மூளை அவனை எச்சரித்தது.

இப்படியே நின்றால் அவளிடம் பேச கூட நேரம் தர மாட்டாங்க என்ற எச்சரிக்கை மணியை துளைத்து அவன் கண்கள் அவனிடமே மீண்டன.

பின் அவளை பார்த்துக் கொண்டே ஏசியை அதிகப்படுத்தினான். அவள் மெதுவாக அசைய மேலும் அதிகப்படுத்தினான். அவள் கைகள், முழக்காலின் கீழ், வயிற்றுப்பகுதியில் ஆடையற்று இருக்க..குளிர்தாங்க முடியாமல் கண்ணை மூடிக் கொண்டே அம்மா..எதுக்கு ஏசியை அதிகமாக்குறீங்க? ரொம்ப குளுருது. நான் தூங்கணும். தொந்தரவு செய்யாம போங்க என்று மீண்டும் படுத்தாள்.

அவன் மேலும் அதிகரிக்க..அம்மா..என்று கோபமாக எழுந்து அமர்ந்து அவனை பார்த்து..ராஸ்கல், உன்னை என்று ஆரம்பித்து..ஹா..அம்மா, அந்த இடியட் என்னை டிஸ்டர்ப் பண்ணிகிட்டே இருக்கான் என்று அவள் அழுது கொண்டே படுத்தாள். மறைத்திருந்த கையை தூக்கி மேலும் அதிகமாக்கினான்.

அவள் எழுந்து அவனை பார்த்து, ஹே…நீ நிஜமில்லைன்னா இப்ப போயிருக்கணுமே? என்று குழப்பமுடன் படுக்கையில் இருந்து எழுந்து அவனிடம் வந்தாள்.

நல்லா தூங்குற போல அவன் கேட்க, நீ என்னோட அறையில் என்ன செய்ற? அம்மா என கத்தும் முன் அவள் வாயை அவன் கைகொண்டு அடைத்து விட்டு,

ஷ்..அமைதியா இரு. இல்லை இப்பவே என்னை வெளிய தள்ளிருவாங்க.. என்றான்.

போடா..எதுக்கு வந்த? என்னை தள்ளி விட்டு கண்டுகொள்ளாமல் அம்மா, அப்பாவை கஷ்டப்படுத்திட்டு போனேல்ல. எதுக்கு வந்த? என்று அவன் ஆடையை பார்த்து..

உன்னோட கல்யாணம் அதுக்குள்ள முடிந்ததா? என்று அவள் பாவமாக கேட்க, நிதின் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான்.

சிரிக்காதடா என்று கோபமானாள்.

கோபப்படாத..என்னோட பொண்டாட்டியும் இங்க தான் இருக்கா என்று அவன் சொல்ல, தலையணையை அவன் மீது துக்கி அடித்துக் கொண்டே அழுதாள்.

அச்சோ, ஆத்விகுட்டி அழுறாங்களே? அவன் சொல்ல, அவனை பார்த்த ஆத்விகா…வெளியே போ என்று அவள் மேலும் அழுதாள். இதற்கு மேல் அழ விடக் கூடாதுன்னு நினைத்த நிதின், ஆத்வி சொல்லறத கேளு என்றான்.

உடனே கல்யாணம் பண்ணிட்டேல்ல. நான் சொல்ல வந்ததை கேட்க கூட உனக்கு விருப்பமில்லைல்ல. நான் என்னடா செஞ்சேன்? என்று அழுது கொண்டே அவள் அவனை வெளியே தள்ள, சுவற்றை பிடித்து நின்ற நிதின் அவளை வேகமாக தள்ளினான். அவள் படுக்கையில் பொத்தென விழுந்தாள்.

அவளருகே வந்த நிதின், அவனது ஒரு காலை படுக்கையில் வைத்து அவளை நெருங்கினான்.

நிது..வெளிய போ..எல்லாரும் தப்பா நினைக்க போறாங்க என்றாள்.

நினைச்சா நினைச்சிட்டு போகட்டும் என்று நிதின் சொல்ல,

டேய்..என்ன பேசுற? இன்றே விவாகாரத்தாகி விடாமல் அவள் சொல்ல, அவன் புன்னகையுடன் அவள் என்னை விவாகரத்து செய்தாலும் எனக்கு அவள் தான் வேண்டுமே? என்று அவனது கையை அவளது கன்னத்தில் வைக்க, அவள் சத்தம் குறைந்து, கண்ணீர் வந்தது. அவன் மெதுவாக அவள் கண்கள், மூக்கு, இதழ்கள், கழுத்து, மார்பு வரை அவனது கையை கொண்டு வந்து அவளை காதலுடன் பார்த்தான்.

கண்ணீர் தேம்பலாக, நீ என்னோட பொண்டாட்டியை பார்க்கிறாயா? என்று அவள் காதில் சொல்லிக் கொண்டே அவனது மீசையால் காதில் குறுகுறுக்க செய்தான்.

இல்ல, வேண்டாம் நிது என்னால தாங்க முடியாது. நீ போறியா? ப்ளீஸ் என்று அழுதாள்.

நீ பார்க்காமல் எப்படி? என்று அவளை துக்க, அவள் பதறி என்ன பண்றடா? விடு. அவங்க தப்பா எடுத்துப்பாங்க. ப்ளீஸ் போயிடு என்றாள். அவன் அதையெல்லாம் காதில் வாங்கவேயில்லை.

நேராக அந்த ஆளுயர்ந்த கண்ணாடி முன் நிறுத்தினான். மூடிய கண்களை ஆத்விகா திறந்து பார்க்க, நிதின் அவளுக்கு பின் நின்று கண்ணடித்தான்.

நிது..உன்னோட வொய்ஃபை காட்டுறேன்னு கண்ணாடிய காட்டுற? அவள் கேட்க, அவன் புன்னகையுடன் அதான் கண்ணாடியில் தெரிகிறாளே? வளர்ந்த என் செல்ல ஆத்வி..என்று அவளை பின்னிருந்து அணைத்தான். அவள் கண்ணாடியில் இருவர் உருவத்தையும் பார்த்துக் கொண்டே வாயில் கை வைத்து ஆனந்தகண்ணீர் வெள்ளமாய் மாற, அழுது கொண்டே இல்லை சிரித்துக் கொண்டே, எதுவாக வேண்டுமாலும் வச்சுக்கோங்க. திரும்பி அவனை பார்த்தாள்.

சிறுவயதிலிருந்து பழகி இருந்தாலும் இது தான் அவர்களின் முதல் நெருக்கமான சூழல். நிது…நீ என்னையா சொல்ற? அவள் திக்கிக் கொண்டே கண்ணீருடன் கேட்க, அவள் கூந்தலை ஒதுக்கி அவள் கண்களை பார்த்துக் கொண்டே இந்த நாளுக்காக தான் பதினேழு வருசமா காத்துக் கொண்டிருந்தேன் என்றான்.

பதினேழு வருசமா?

ஆமா..ஆத்வி. நாம அப்ப தான மீட் பண்ணோம்.

ஆனால்..என்று அவனை விலக்கி விட்டு அவள் திரும்ப..கண்ணாடி முன்னிருந்தது.

ஆனால் என்ன? அவன் அவளை பார்த்துக் கொண்டே கேட்க, அது வந்து..வினு டார்லிங்? என்று கேள்வியுடன் நோக்கினாள்.

வினு எனக்கு பிடிக்கும். என் முதல் காதல் நீ தான். கொஞ்சம் அவள் பக்கம் சாய்ந்தேன். ஆனால் அவள் இல்லாமல் இருந்து விட்டேன். ஆனால் உன்னை பார்க்காமல் என்னால இருக்க முடியலை என்று அவளை அணைக்க, அவள் விலகி அப்படின்னா நீ அவளையும் காதலிக்கிற? என்னையும் ..என்று நிறுத்தினாள்.

எதுக்கு நிறுத்துற? நீ தான் என் காதல்ன்னு புரிந்து கொண்டேன். நீ என்னை நம்பவில்லையா? அவன் கேட்க, நிது..அவள்? என்று வினு பக்கமே ஆத்விகா செல்ல..

அவளுக்கு மேரேஜ் முடிந்து விவாகரத்தும் ஆகிடுச்சு. அவள் எப்போதும் என்னை ப்ரெண்டா மட்டும் தான் பார்த்தா. நான் தான்..என்று ஆத்விகாவை பார்த்தான்.

இல்ல நிது..வேண்டாமே? என்று அவள் சொல்ல, அவளை திருப்பிய நிதின்..வினு வேற, நீ வேற. இப்ப அவள் எனக்கு ப்ரெண்டு மட்டும் தான் என்றாள். அவள் கண்கள் பயத்தை உணர்த்தியது.

அவள் கன்னத்தில் கை வைத்த நிதின், அவளை இழுத்து அவளது செவ்விதழ்களில் அவன் இதழ் பதித்தான். அமைதியாக நின்ற ஆத்விகாவும் முத்தம் கொடுத்தாள்.

அவளை விடுவித்த நிதின், இப்ப நம்புறியா? கேட்டான். அவள் அமைதியாக இருக்க, அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவளை அமர வைத்து அவளருகே அமர்ந்து வினுவிற்கு போன் செய்து ஸ்பீக்கரில் போட்டான்.

ஹலோ..என்றவுடன் நேத்ரா படபடவென பேச ஆரம்பித்தாள்.

நிது..சூப்பர் எஸ்கேப்டா. நான் கூட உண்மையிலே அந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணிப்பியோன்னு பயந்துட்டேன். தப்பிச்சுட்ட..நீ எப்படா சாரோட தங்கச்சிட்ட லவ்வ சொல்லப் போற? கேட்டாள்.

வினு, என்னை பேச விடேன் அவன் சொல்ல,

என்ன பேசப் போற? நேத்ரா தொனி மாறியது. இல்ல வினு பழைய படி தொந்தரவு செய்ய மாட்டேன் என்றான்.

ம்ம்..இது தான் சரி. நிது காதலுக்கும் ப்ரெண்ஷிப்பிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இதையே இத்தனை வருசம் கழித்து தான் புரிஞ்சுக்கிட்ட. பாவம் சாரோட தங்கச்சி..உன்னை வச்சிக்கிட்டு எப்படி சமாளிக்க போறாங்களோ?

உன்னையே ஒருவன் சமாளித்தான்னா..என்று உலறிய வாயை நிறுத்தினான். நேத்ரா கண்ணீருடன் அமைதியானாள்.

வினு..சாரி. சாரி வினு..ஏதோ ப்ளோல்ல சொல்லீட்டேன் என்றான். அவள் அழும் சத்தம் கேட்க, டேய்..எதுக்கு அழுறாங்க? என்று அஸ்கி வாய்சில் ஆத்விகா கேட்க..

ஷ்..என்ற நிதின், வினு..பேசு..பேசு வினு என்று அழைத்தான். அழுகை நின்று அமைதியான நேத்ரா..நான் டின்னர் செய்யணும். நாளைக்கு பேசலாம் என்றாள்.

வினு..நான் அதிரதன் வீட்ல அவள் தங்கச்சி அருகே தான் இருக்கேன். அம்மா, அப்பா பேசி நிச்சயமாகிடுச்சு என்று பட்டென நிதின் கூற, என்ன சொல்றீங்க? அப்படின்னா வெளிய உங்க அம்மா, அப்பா இருக்காங்களா? ஆத்விகா உணர்ச்சி வசப்பட்டு பேசி விட,

நிது, நீ எங்க இருக்க? லூசுப்பயலே ஸ்பீக்கர்ல்ல போட்டா பேசுற? இனி எனக்கு போன் செஞ்ச அவ்வளவு தான் என்று நேத்ரா சத்தமிட, அவளருகே வந்த அதிரதன் அவள் போனை பிடுங்கி,

அடேய் நாயே, வீட்டுக்கு ஆத்விய பொண்ணு பார்க்க போனதையே என்னிடம் சொல்லாம இவளிடம் பேசிக்கிட்டு இருக்க? நான் அவளுக்கு அண்ணன்டா.. விட்டா கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போயிடுவ போல.. அதிரதன் பேச, அனைவரும் அதிர்ந்தனர்.

அண்ணா, நீ எங்க இருக்க? நிது..நீ வினு கூட தான பேசுன? இப்ப அண்ணா பேசுறான்? என்னடா நடக்குது? ஆத்விகா தலையை பிடிக்க,

ஓ…போச்சு போச்சு, வினு நீ முதல்லவே சொல்லி இருக்கலாமே?

சார், இது என்னோட அறை. நீங்க வருவீங்கன்னு தெரியாதே?நேத்ரா உலற, என்னது? ஒரு பொண்ணோட அறையில என் அண்ணன் இருக்கானா?

டேய், நிது..இப்படி ஷாக் குடுக்குறீங்க? எனக்கு மயக்கம் வருவது போல் இருக்கே என்று அவள் சொல்ல, வினு…என்று அதிரதன் சத்தமிட்டான்.

வினுவா? அண்ணா..நீயும் இவனை மாதிரி அவங்கள வினுன்னு கூப்பிடுவியா? இல்ல வினு டார்லிங்கா? என்று நிஜமாகவே மயங்கி நிதின் மீது சரிந்தாள் ஆத்விகா.

ஆத்வி..ஆத்வி..இங்க பாரு..நிதின் பதற, என்னாச்சுடா அதிரதன் கேட்க, ஆத்வி நிஜமாகவே மயங்கிட்டாடா..என்று தலையில் கை வைத்தான்.

நிது..என்ன பண்றீங்க? நீ பேசணும்ன்னு சொன்னதால தான் உங்களை தனியே விட்டோம். கதவை திற. பேச எதுக்கு கதவை பூட்டின? சிவநந்தினி வாய்ஸ் கேட்க,

டேய் மச்சான், ஏதாவது ஐடியா சொல்லுடா? நிதின் கேட்க, ஆத்வி அறையிலா இருக்க? அதிரதன் கேட்க, ஆமாடா..

ப்ளடி இடியட், கதவை பூட்டிக்கிட்டு என் தங்கச்சிய என்ன பண்றடா? நான் வந்தேன் கொல்லாம விட மாட்டேன் அதிரதன் போனில் கத்த, சிவநந்தினி வெளியே சத்தமிட்டுக் கொண்டிருந்தார்.

போனை படுக்கையில் போட்டு..அவளை நேராக படுக்க வைத்து நிதின் கதவை திறந்தான். அவளை பார்த்து, டேய் என் பிள்ளைய என்னடா பண்ண? அவர் கேட்க, மூவரும் விழித்தனர். அதிரதனும் நேத்ராவும் நடப்பதை போனில் கேட்டுக் கொண்டிருந்தனர்.

டேய், உன்னிடம் தான் கேட்கிறேன்.அம்மா..நான் ஒன்றுமே செய்யலை என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டு..இப்படி தான் முத்தம் கொடுத்தேன். அவள் மயங்கீட்டா என்று சொல்ல, அவனை முறைத்து தண்ணீரை எடுத்து தெளித்தார்.

ஆத்விகா விழித்தவுடன், அம்மா அண்ணா..அந்த பொண்ணுஎன்று உலற, ஆமாடி இதை தான் நான் சொல்றேன் உன் அப்பா கேட்க மாட்டேங்கிறார். உன் அண்ணா இல்லாமல் எப்படி நிச்சயம் செய்வது? நீ தான் நிறுத்தணும் என்று அவர் நிதினை பார்க்க, அவன் பார்வை ஆத்விகாவிடம் இருந்தது.

நிது, அவளை அப்படி பார்க்காத..வெளிய போ. கல்யாணம் முடியும் வரை ஆத்வி அறைக்கு நீ வரக்கூடாது கண்டிப்புடன் நந்தினி கூற, சரிம்மா..என்று ஆத்வியிடம் கையை காட்டினாள்.

ஹே, “கெட் அவுட் ஆஃப் அவர் ரூம்” சிவநந்தினி சொல்ல, அம்மா வேண்டாம், நானே போயிடுறேன் என்று போனை மறந்து சென்றான் நிதின்.

அம்மா, நீ இங்கிலீஸ் பேசுறியா? ஆத்விகா கேட்க, அப்பாவால கத்துக்கிட்டேன்.

“மை க்யூட் அம்மா” என்று அவள் அம்மாவிற்கு ஆத்விகா முத்தமிட, புடவை மாத்திட்டு வா. ஏற்கனவே ரொம்ப நேரமாகிடுச்சு என்றார்.

சரிம்மா..நீ போ வாரேன் என்றாள்.

அம்மா, அண்ணா உனக்கு கால் பண்ணனா? ஆத்விகா கேட்க, பக்கத்துல இருந்தாலே அவனுக்கு நான் இருப்பதே தெரியாது. எனக்கா போன் செய்வான்? அவன் நல்லா இருக்கான்னு என் மனம் சொல்லுது. அதுவே போதும். சீக்கிரம் வா. அவங்க வீட்டுக்கு போக ரொம்ப நேரமாகிடும் என்று செல்ல இருந்தவர் ஆத்விகாவிடம் வந்தார்.

கண்ணீருடன் ஆத்விகாவை அணைத்து, “ஆல் தி பெஸ்ட்ம்மா” என்றார்.

அம்மா, உனக்கு பாட்டி, தாத்தா நினைவு வந்துருச்சா?

ஆமாம்மா.

ரொம்ப கஷ்டமா இருக்கா?

ம்ம்..என்று அவருக்கு தொண்டை அடைக்க, ஒரே ஒரு முறை அம்மா மடியில் படுக்கணும் போல இருக்கு. அப்பா கை பிடிக்கணும் போல இருக்கு என்று அழுது விட்டு, அவங்கள பார்த்து முதல்ல மன்னிப்பு கேட்கணும் என்றார்.

அம்மா..உன்னோட ஊர் பேரை சொல்லு. நான் தாத்தா, பாட்டிய உன் முன் நிறுத்துகிறேன்.

இல்லம்மா. உன் அப்பாவை மீறி நான் ஏதும் செய்வதாக இல்லை.

ஏம்மா? உன்னோட அப்பா என்னை உடுத்திய ஆடையுடன் அழைத்து வந்து விட்டார். நீங்க யாராவது அங்கே போனால் கோபப்படுவாங்க. எல்லாரும் தப்பா பேசுவாங்கடா. இதெல்லாம் வேண்டாமே?

அம்மா, தாத்தா பாட்டிக்கும் அவமானமாகி இருக்குமே? என்று கேட்க, முகத்தை மூடிக் கொண்டே அங்கேயே அமர்ந்து அழுதார்.

அம்மா, ப்ளீஸ் அழாத. நாம கண்டிப்பா தாத்தா, பாட்டிய பார்க்க போகலாம்.

இல்லடா. மனசுல இருக்குற குற்றவுணர்ச்சி போகவே மாட்டேங்குது. சும்மாவே அப்பா கோபக்காரர். பப்பூ போல..அவருக்கு தப்புன்னு பட்டா..என்னன்னு யோசிக்க கூட மாட்டார். உடனே கோபம் வந்திடும்.

உன் அண்ணா பேசும் வரை அப்பாவை நான் மிஸ் பண்ணலை. அவன் என்னை விட்டு விலகிய பின் தான் என் உலகின் முக்கால்வாசி பக்கம் காணாமல் போனது. ஆனால் ரொம்ப கஷ்டம். நான் கூட நீ நிதுவால கஷ்டப்படுவியோன்னு நினைச்சேன். நல்ல வேலையாக உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தாம சீக்கிரம் உன்னை புரிஞ்சுக்கிட்டு வந்துட்டான்.

சரிடா, நீ புடவையை மாத்திடுவியா. அம்மா உதவவா?

அம்மா, நானே பார்த்துக்கிறேன். கண்ணை துடைச்சிட்டு போங்க. இல்ல அப்பா என்னை தொலைச்சு எடுத்துடுவார் என்றாள் ஆத்விகா.

புன்னகையுடன் அவர் நகர, இதை கேட்டுக் கொண்டிருந்த இருவரும் தற்போது தான் அவர்கள் இருக்கும் இடத்தை கவனித்தனர். நேத்ரா அறை படுக்கையில் அவள் அமர்ந்திருக்க, அதிரதன் அவளருகே அமர்ந்திருந்தான்.

அவனை பார்த்து அவள் பதற, அவன் கண்கலங்கி இருந்தாலும் இவள் சத்தத்தில், ஏய்..என்ன? கேட்டான். போனை பார்த்த ஆத்வி..அதை எடுத்து காதில் வைக்க, ஒன்றுமில்லை சார் என்று எழுந்தாள். அவள் கையை பிடித்த அதிரதன் நீ நிறைய வளையல் போட்டுருக்க. இங்கே வரும் போது வளையல் போடலையே? அவன் கேட்க,

சார், கையை விடுங்க சினமுடன் நேத்ரா சொல்ல, விடுறேன். நீ இங்கே தான் அமரணும் என்றான்.

என்ன?

நான் சொல்லும் அனைத்தையும் நீ செய்யணும்? மறந்துட்டியா? அவன் கேட்க, சார் ப்ளீஸ் டின்னர் தயார் செய்யணும். யுவிக்கு பசிக்க ஆரம்பித்து விடும் என்றாள்.

அவன் எங்கே?

மறந்துட்டேனே? டிவி பார்த்துக்கிட்டு இருந்தான் என்று அவள் செல்ல எத்தனிக்க, இரு..என்று எட்டிப் பார்த்தான். அவன் ஆர்வமாக கார்டூனை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கான். நீ இங்க வா. நான் பேசணும் என்றான்.

“என் அண்ணனா இவ்வளவு தன்மையா அழகா பேசுகிறான் வேற பெண்ணிடம்” ஆத்விகா மனதினுள் நினைக்க, சொல்லுங்க சார். வேலை இருக்கு என்றாள் நேத்ரா.

வினு, எனக்கு ஸ்கூல்ல உன்னை பார்த்த நினைவேயில்லை.

சார், என்னை மட்டுமா? உங்களுக்கு புத்தகம் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும்?

ஸ்கூல்லா? ஆத்விகா சிந்தித்தாள்.

நீ நிது கூட தான காலேஜ் படிச்ச?

ஆமா சார். அதனால என்ன?

இல்ல உன்னோட மேரேஜூக்கு கூட நீ அவனிடம் சொல்லலை?

சார், ப்ளீஸ் முடிஞ்சத பத்தி பேசாதீங்க? கைய விடுங்க என்றாள்.

என்னால விட முடியாது. உண்மையிலே நிதினை நீ காதலிக்கலையா?

இல்ல சார், அவனை பார்த்த நாளிலிருந்து அவன் எனக்கு தோழன் மட்டும் தான். அவனிடமும் நிறைய முறை சொல்லி இருக்கேன்.

அப்ப உனக்கு காதல் யார் மீதும் வரவில்லையா?

அவள் அமைதியாக இருந்தாள். நாம ஒரே வகுப்பு தான. உனக்கு யார் மீதோ கிரஷ் இருக்குன்னு காவியனிடம் சொன்னேல்ல யார் அது? அவன் கேட்க,

எனக்கு வேலை இருக்கு சார், விடுங்க என்றாள்.

நீ அந்த கிரஷ்ஷை வைத்து சொன்னதை பார்த்தால் நானாக இருப்பேனோன்னு தோன்றுகிறதே? என்றான். நேத்ரா முகம் மாற அவளாகவே அவனை நெருங்கினாள். அவன் அவளது அருகாமையில் சொக்கி கிடந்தான்.

நான்..நான்..என்று அவன் முகத்தின் அருகே வந்து, எனக்கு உங்களை போலிருக்கும் பணக்காரப் பசங்களை பிடிக்காது என்று அவன் அசந்த நேரத்தில் கையை எடுத்து கொண்டு ஓட எண்ணினான். அவள் கை எடுப்பதை உணர்ந்த அதிரதன் அவளது புடவை முந்தானையை பிடித்தான்.

சார், என்று அவள் பதட்டமாக கையில் முந்தானையை சுருட்டி அவளை இழுத்தான். அவள் குத்திய பின்னை பிடித்தாள். அவன் இழுத்ததில் அவனருகே அவள் வர..கேட்கிறேன்ல்ல சொல்லீட்டு போ..என்றான்.

அது உங்களுக்கு தேவையில்லாத விசயம்.

யாருக்கு தேவையில்லாதது? எனக்கா? வினு..எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு என்றான்.

சார், வேண்டாம். என்னை விட்டுருங்க. என்னை பற்றிய உண்மை தெரிந்தால் நீங்க ரொம்ப கஷ்டப்படுவீங்க. அதை விட என்னால் ஏத்துக்க முடியாது.

அவன் அவள் சொல்வதை கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு உன்னை முதல் முறையாக பார்த்த போதே எங்கோ பார்த்தது போல் இருந்தது அவன் சொல்ல, அவள் அவனை பார்த்தாள்.

சார், எல்லார் மாதிரியும் பேசாதீங்க.

இல்லை, நிஜமா தான் சொல்றேன். உன்னை எங்கோ பார்த்தது போல் இருக்கு என்றான். பள்ளியில் அதிரதனை பார்த்த வினு நேத்ராவிற்கு அப்படி தான் தோன்றி இருக்கும். அவள் அதை சிந்திக்க..உனக்கும் அப்படி தான் இருக்கா? கேட்டான். ஆத்விகா அதிர்ந்து நின்றாள்.

Advertisement