Advertisement

அத்தியாயம் 14

நேத்ரா விழிக்க யுவன் சிரிக்கும் சத்தம் அதிகமாக கேட்டது. வேகமாக எழுந்த நேத்ரா வெளியே சென்றாள். அதிரதனும் யுவனும் கையில் தண்ணீர் துப்பாக்கியில் தண்ணீர் அடித்து விளையாண்டு கொண்டிருந்தனர். இருவரும் பார்த்துக் கொண்டிருந்த நேத்ரா, யுவன் சிரிப்பதை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின் சுயம் வந்து அவர்களை பார்க்க, இடம் முழுவதும் தண்ணீரை சிந்தி இருவரின் சட்டையும், தலையும் நனைந்து இருந்தது.

யுவி..நேத்ரா கத்த, இருவரும் துப்பாக்கியை நீட்டியவாறே இருவரும் அவளை பார்த்தனர். அவள் கவனிக்காமல் வேகமாக நடந்து வந்து தண்ணீரில் காலை வைத்தாள். பின் பதட்டமாக சார்..என்று அவனிடம் தானாக கையை நீட்டினாள். அதிரதனும் தண்ணீரில் இறங்கி அவள் கையை பிடித்து இழுத்து நிற்க, அவன் கால் வழுக்க..அதை சமாளிக்க நீரில் ஸ்கேட் செய்தான். அவள் கையை விடுத்து அவள் இடுப்பை பிடித்து அவன் சுற்ற, அவளுக்கு தலை சுற்றியது. பயத்தில் அவனது தோள்ப்பட்டை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு,

சார், விட்றாதீங்க ப்ளீஸ் என்றாள் பயத்துடன். விழுந்தால் குழந்தைக்கு ஏதும் ஆகிடுமோ என்று பயத்தில் அவள் சொல்ல, அதிரதனுக்கு அவள் பயம் தெரியவில்லை. மாறாக விட்றாதீங்கன்னு சொன்னதை மட்டும் அவன் கவனித்து அவளை ரசித்துக் கொண்டே நிறுத்தினான். அவன் நிறுத்தவும் பயத்தில் அவனை கட்டிக் கொண்டாள். அவனுள் காதல் உணர்வுகள் பிறப்பெடுத்தது. நேத்ராவிற்கு தலை சுற்றல் மெதுவாக நிற்க, அவனை விட்டு அவள் விலக, அவன் அவளை இறுக்கமாக அணைத்தான்.

சார்..விடுங்க என்று அவனை தள்ளி விட்ட நேத்ரா, தன் மீது தவறு உள்ளதை எண்ணி கண்ணீருடன் சாரி சார், நான் பயத்தில் கட்டிப் பிடிச்சுட்டேன் என்று அவள் கண்ணீருடன் சாரி கேட்க..பெரிய தவறு செய்ததை போல் சாரி சொல்கிறாளே? கட்டி தான பிடிச்சோம் அவன் நினைக்க, அவன் அவளை அணைத்த விதத்தில் தன்னால் அதிரதன் மாறியதாக உணர்ந்தாள். பொண்ணுங்க கட்டிப்பிடிக்க என்ன?.. கையை கொடுத்தால் கூட மதிக்கவே மாட்டான். அப்படிப்பட்டவன் அவனாக தன்னை அணைத்ததை எண்ணி பயந்து சாரி சொல்லி விட்டு கண்ணீருடன் யுவியை துக்கினாள்.

அக்கா..ஈரமா இருக்கு யுவி சொல்ல, கண்ணீரை துடைத்து விட்டு துவாலையை எடுத்து அவனை சோபாவில் நிறுத்தி துவட்டி விட்டு அவன் ஆடையை களைந்து ஆடையை எடுக்க சென்றாள். அதிரதன் அவளை பார்த்துக் கொண்டே நின்றான். இவளது சில செய்கைகள் அவனுக்கு அவன் அம்மாவை நினைவுபடுத்தியது. அம்மா மீது கோபமாக இருந்தாலும் அவன் அத்தை யசோதாவை அம்மா செய்யும் எதையும் செய்ய விட்டிருக்க மாட்டான். ஒரு தோழி மாதிரி தான் அவருடன் பழகி இருப்பான். இவள் யுவிக்கு தலையை துவட்டும் போது அவனை மீறி அவன் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது.

அவன் கண்ணீரை பார்த்து சோபாவிலிருந்து இறங்கிய யுவி, அங்கிள் எதுக்கு அழுறீங்க? கேட்டான்.

மண்டியிட்டு அவனை அணைத்த அதிரதன், நான் அம்மாவை மிஸ் பண்றேன் என்றான். யுவி ஆடையை எடுத்து வந்த நேத்ரா அவன் பேசுவதை கேட்டு அங்கேயே நின்றாள்.

அம்மா, சாமிகிட்ட போயிட்டாங்களா? யுவன் கேட்க, இல்லை..இல்லை..வீட்ல தான் இருக்காங்க. ஆனால் நான் தான் பேசுறதில்லை.

எதுக்கு அங்கிள் பேச மாட்டிக்கிறீங்க? அம்மா…நம்மை குளிக்க வைப்பாங்களாம், நமக்கு சாப்பாடு ஊட்டுவாங்களாம், தூங்க பாட்டு பாடுவாங்களாம் என்றான்.

அதிரதன் அவன் அப்பாவை விட அம்மாவிடம் தான் நெருக்கம். அன்று அவனுக்கு பயங்கர காய்ச்சல். தூங்கிக் கொண்டிருந்தவன் விழித்து பார்த்தால் அருகே அம்மா இல்லை. அவரை தேடி அறையை விட்டு வெளியே வந்த போது தான் அந்த காட்சியை பார்த்திருப்பான்.

அவன் அம்மா ஒருவரிடம் இதை எடுத்துட்டு சீக்கிரம் கிளம்பு. அவர் வந்தால் பிரச்சனையாகும் என்று பெரிய பையை அவரிடம் கொடுத்து அவரை வெளியே அனுப்பினார். அன்று அம்மா மீது வந்த தவறான எண்ணம். அதனால் அவரை தவிர்த்தவன்.  அவர் பேசியதை அனைவரிடமும் கூற, யாருமே அவனை நம்பவில்லை. அவனுள் கோபம் அதிகமாகி அம்மா மீது வெறுப்பை வளர்த்தவன் தான். இன்று அவன் அம்மாவுடனான நெருக்கம் நினைவு வர, அவனுள் இருந்த குட்டி அதிரதன் வெளியே வந்து அழுகையை கட்டுப்படுத்தினாலும் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.

நேத்ரா அவன் முன் நிற்க உணர்ந்தவன் அவளை பார்க்க, நோ..என்று உதட்டசைவுடன் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள். அதிரதன் அருகே கையை கட்டிக் கொண்டு யுவன் ஏதோ சைகையில் கூற..அவள் அவனை முறைத்துக் கொண்டு தலையை அதே போல் ஆட்டினாள்.

அதிரதன் கவனிப்பதை பார்த்த யுவன்..அக்கா, வா..அங்கிளுக்கு தலையை துவட்டி விடு என்று நேராக கூற, அவள் அதிர்ந்து அதிரதனை பார்த்தாள். அழுது கொண்டிருந்தவன் யுவி பேசுவதை கேட்டு அவளை பார்த்தான். மனம் படபடவென அடித்தது.

யு..யுவி..இங்க வா..சட்டையை போட்டுக்கலாம் பேச்சை மாற்றினாள்.

அக்கா, எனக்கு மட்டும் துவட்டி விட்டேல்ல. அங்கிளுக்கும் துவட்டி விடு. அதான் அங்கிள் அழுகிறார் என்றான்.

இல்லை யுவி. அவர்..என்று அவள் பேசும் முன் எழுந்தான் அதிரதன்.

சார், என்று துவாலையை அவள் அவனிடம் நீட்ட, அவள் முன் வந்து மண்டியிட்டு தலையை காட்டினான். அவள் அதிர்ந்து அவனை பார்க்க, அவன் கண்ணீர் அவள் காலில் பட்டது.

சார்..எல்லாமே சீக்கிரம் சரியாகிடும் என்று அவன் தலையில் கையை வைத்தாள். அவளை இடுப்போடு அணைத்து உடல் குலுங்க அழுதான். அவள் அப்படியே நிற்க, அவள் கையிலிருந்த துவாலையை யுவி தட்டி விட, அதிரதன் தலையில் விழுந்தது. அவள் கை தானாக அவன் தலைக்கு சென்று விட, நிலையுணர்ந்தாலும் அவனை பாவமாக பார்த்து தலையை துவட்டினாள். அவன் அணைப்பு இறுகியது. அவள் கண்களை மூட, அவள் கண்ணிலிருந்து நீர் கசிந்தது.

சார், நீங்க ரொம்ப இறுக்குறீங்க? என்று அவள் சொல்ல, சாரி..சாரி..என்று அவளிடமிருந்து நகர்ந்தான்.

கண்ணீரை தட்டி விட்டு யுவிக்கு நேத்ரா சட்டையை அணிவிக்க, அக்கா, அங்கிள் சட்டையும் நனைஞ்சிருக்கு. அவருக்கும் போட்டு விடு என்றான். அதிரதன் உடனே யுவியை பார்த்தான்.

யுவி, உள்ளே போ. சார் ஆடையை மாற்றி விட்டு வாங்க. நான் தேனீர் தயார் செய்கிறேன் என்று சமையலறைக்குள் விரைந்தாள் நேத்ரா.

வீட்டிற்கு வந்த நிதினை மூவரும் முறைத்துக் கொண்டிருந்தனர்.

இதுதான் வேகமாக வரும் லட்சணமா? அம்மா கேட்க, கொஞ்சம் முக்கியமான வேலை வந்துருச்சு என்று எல்லாரும் தயாரா இருக்கீங்களா? ஐந்தே நிமிடம் வருகிறேன் என்று குளித்து ஆடை மாற்றி தயாராகி வந்து கிளம்பலாமா? கேட்டான்.

“வாங்க, இதுக்கு மேலன்னா நல்ல நேரம் கடந்து விடும்” என்று ரேவதி சொல்ல நால்வரும் கிளம்பினர்.

செழியன் வீட்டில் பிரணவி அப்பொழுது தான் வீட்டில் நுழைந்து கல்லூரி பையை தூக்கி சோபாவில் போட்டு விட்டு, அம்மா டீ என்று அமர்ந்தான்.

வந்துட்டியா? இரு கொண்டு வாரேன் என்றார்.

அம்மா, அக்கா என்ன செய்றா?

தூங்குறா? இரு உனக்கு எடுத்து வாரேன் என்று சமையலறைக்குள் செல்ல, பாட்டி அவளிடம் வந்து நீயும் போட்டு பழகலாமேடி என்றார்.

நானா? நான் போட்டால் நீ குடிப்பியா பாட்டி?

அச்சோ, நான் என் பேரன், பேத்திக்கு பிள்ள பிறக்கிற வரை இருக்கணும் என்றார்.

பார்த்தேல்ல..நான் போட்டு நானே குடித்தால் நல்லா இருக்காது. அம்மா போட்டால் தான் சூப்பராக இருக்கும் என்று அவள் சொல்ல, அவள் அம்மா டீயை அவளுக்கு கொடுத்தார். அப்பொழுது உள்ளே வந்தார் செழியன்.

என்னாச்சுங்க? சொல்லாம திடீர்ன்னு வந்திருக்கீங்க? சிவநந்தினி கேட்க, ரவிக்குமார் திடீர்ன்னு வாரேன்னு சொன்னான் என்று அவர் பதட்டமாக கூற,

அப்பா தப்பு செஞ்சவங்க தான் பதறணும். நீங்க இல்லை என்றாள் பிரணா.

இல்லம்மா, திடீர்ன்னு வாரேன்னு சொல்றான். நம்ம நிதுவுக்கு வேற மந்திரி பொண்ணை முடிவு பண்ணி இருக்கான். அவன் பக்கம் வரக்கூடாதுன்னு எச்சரிக்க வந்திருப்பானோ! கொஞ்சம் பயமா இருக்கு. எப்படி நிதுவை யாரோ போல் பார்ப்பது? கண்கலங்கினார்.

உள்ளே வரலாமா? என்று சத்தம் கேட்க, எல்லாரும் எழுந்து பார்த்தனர். நிதின் குடும்பத்தோட வந்து நின்றான்.

எல்லாரும் விழித்து பார்க்க, பிரணா..தாட்சாயிணியை பார்த்து, சீனியர் முதல் முறையாக வீட்டுக்கு வந்திருக்கீங்க. வாங்க என்று முன் சென்றவள் நிதினை பார்த்து கோபமாக..

டேய், நீ தானடா சொன்ன? எங்களுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு அம்மா, அப்பா கஷ்டப்படுவாங்கன்னு கூட பார்க்காமல் பெரிய இவன் மாதிரி பேசுன, இப்ப எதுக்குடா வந்த? என்று பக்கமிருந்த தலையணையை எடுத்தாள்.

குட்டிம்மா…வேண்டாம். மாமா..பாவம்ல சொல்லிக் கொண்டே, அவன் வீட்டிற்குள் வர, அவள் அவன் மீது தூக்கி எறிந்து மற்றொன்றை எடுத்தாள்.

அக்கா கதவை பூட்டிட்டா. திறக்க வைக்க மட்டும் தானடா பேச சொன்னேன். அது எப்படி? போனை வை..ன்னு டப்புன்னு போனை வச்சுட்ட என்று அவனை விரட்டினாள்.

பிரணா நில்லுடி, பிள்ள மாமான்னு சொன்னான் சிவநந்தினி சொல்ல, மாமாவாம்..மாமா..என்று கையை ஓங்கிய பிரணா, நிறுத்தி..மாமாவா? என்று அவன் குடும்பத்தை பார்த்தாள். கையில் தாம்புலத் தட்டுடன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வாங்க என்று மற்றவர்கள் உள்ளே அழைக்க, புரியாமல் செழியனும் அவர் குடும்பமும் ரவிக்குமார் குடும்பத்தை பார்த்தனர். நிதின் பிரணாவை பார்த்து கண்ணடித்து, அவன் அப்பா அருகே வந்து அமர்ந்தான். அவளும் அமைதியாக  அவள் பாட்டி அருகே வந்து நின்று கொண்டாள்.

ஏம்மா, உனக்கு இவ்வளவு கோபமா? ரேவதி கேட்க, ஆன்ட்டி அது வந்து இவன்..என்று நிதினை பார்க்க, சொல்லு என்றான் அவன். அவள் செழியனை பார்த்தாள்.

விசயம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா? செழியன் கேட்க, கையில் வச்சிருக்கிறதை வைத்தே உனக்கு தெரியலையா? பாட்டி கேட்க,

அது தெரியுதும்மா. இவருக்கு தான் நம் மீது கோபமாயிற்றே. நம்பிக்கை அற்று இருக்கிறார்களே? செழியன் சொல்ல,

அண்ணா, அப்படியெல்லாம் இல்லை என்ற ரேவதி, தன் கணவனை பார்த்தார். நாங்க எங்க பையன் நிதினுக்கு உங்க பொண்ணு ஆத்விகாவை பொண்ணு கேட்டு வந்திருக்கோம் என்றார்.

உங்க பையனுக்கு மந்திரி பொண்ணை பேசியது தான் ஊருக்கே தெரியுமே? செழியன் கேட்க, நிதின் அவரிடம் வந்து அலைபேசியை காட்டினான். மந்திரியை அரெஸ்ட் செய்ததது பற்றியும், அந்த பொண்ணு அவர் பொண்ணு இல்லை என்று மட்டும் வந்திருந்தது.

செழியன் நிதினை பார்க்க, அவன் புன்னகையுடன் கண்ணசைத்து சிவநந்தினியை பார்த்தான். அவர் கோபமாக இருந்தார்.

நீங்க பேசுங்க. நான் தேனீர் எடுத்துட்டு வாரேன் என்று அவனை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றார்.

நந்தினிம்மா..ரவிக்குமார் அழைக்க, என்னதுண்ணா? என்று திரும்பி பார்த்தார்.

சுகர் கம்மியா போடும்மா..என்றாள்.

சுகர் வந்துருச்சாண்ணா..அவர் கேட்க, ஆமாம்மா..நீ எடுத்துட்டு வா. பேசலாம் என்றார்.

ரவிக்குமாரிடமும் ரேவதியுடமும் நான் அம்மாவிடம் பேசிட்டு வரவா? நிதின் கேட்டான்.

போ..என்று ரவிக்குமார் சொல்ல, ரேவதி அமைதியாக இருந்தார். அவன் சமையற்கட்டுக்குள் சென்று அம்மா..என்று அழைத்தான். சிவநந்தினி பேசாமல் இருக்க..

பேச மாட்டீங்களா? கோபமா இருக்கீங்களா? கேட்டான்.

அதற்கும் அமைதியை பதிலாக அவர் இருக்க, அம்மா..நான் தேனீர் போடவா?

என்னை சமாதானப்படுத்த பார்க்காதே? என்றார்.

சிவநந்தினியை அவன் பக்கம் திருப்பிய நிதின், அவர் கையை பிடித்து..அடிச்சிருங்கம்மா. பேசாம மட்டும் இருக்காதீங்க என்று அவர் கையை இழுத்து அவனை அவனே அடித்தான்.

விடு நிது என்று கண்கலங்கினார். நீ பேசியது எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா?

சாரிம்மா. இனி அவ்வாறு பேச மாட்டேன் என்றான்.

சரி..என்னை விடு..ஆத்வி சாப்பிடவே இல்லை என்று அவர் சொல்ல, அவ சாப்பிடலைன்னா இவனுக்கு என்னவாம்? பிரணா கேட்டுக் கொண்டே அவர்களிடம் வந்தாள்.

ஓய்..நான் கோபத்துல பேசிட்டேன். அதுக்கு இப்படியா அடிப்ப? இங்க பாரு தலையில வீங்கிருச்சு.

எங்கடா வீங்குச்சு? அவள் கேட்க, சமையல் பொருட்களை நகர்த்தி விட்டு  அடுப்பின் அருகில் அமர்ந்த நிதின் தலையை பிரணாவிடம் நீட்ட..

பிராடு..பிராடு..பொய் சொல்றான் பாருங்கம்மா. தலையணை அடி இவனுக்கு வீங்கிடுச்சாம் என்றாள்.

சரி, விடும்மா..என்று அவள் அம்மா சொல்ல, இவர்களை வெளியே நின்று பார்த்த ரேவதி, தாட்சாயிணி முகம் மாறியது. இதுவரை அவன் சரியாக பேச கூட இல்லை. இவர்களிடம் மட்டும் உரிமையாக பழகுகிறான் என்று நினைத்தனர்.

அவர்களை பார்த்த நிதின், வாங்கம்மா..என்று சொல்ல, இருவரும் உள்ளே வந்தனர். தாட்சாயிணி தோளில் கை வைத்து கீழே குதித்தான்.

டேய், சீனியர் தோள்ப்பட்டை வலிக்க போகுது பிரணா சொல்ல, போடா..வாடா இல்லாமல் மாமான்னு கூப்பிடும்மா என்று ரேவதி பட்டென சொல்ல, பிரணாவுக்கு ஒருமாதிரி ஆனது.

அம்மா, நான் வெளிய இருக்கேன் என்று அவள் செல்ல, குட்டிம்மா..நில்லு என்று ரேவதியை நிதின் முறைத்துக் கொண்டு அவள் பின் சென்றான். சிவநந்தினி முகமும் மாற, நான் எடுத்துட்டு வாரேன் என்று பேச்சை தவிர்க்க, அவர்களும் வெளியே வந்தனர்.

நிதின் அமைதியாக இருபக்கமும் இல்லாமல் தனியே சென்று அமர்ந்தான்.

இங்க வாடா..ரவிக்குமார் அழைக்க, அப்பா நான் இங்கேயே இருக்கேன் என்றான் கோபமாக. சிவநந்தினி தேனீர் எடுத்து வர, அதை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

நிதின் எழுந்து இரு குடும்பம் முன்னும் வந்து நின்றான். தொழிலில் இரு குடும்பத்திற்கும் பிரச்சனைன்னு தெரியும். எப்படி? என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது என்று ரவிக்குமார், ரேவதி, தாட்சாயிணியை பார்க்க, நிர்மலாவும் அதீபனும் வந்தனர்.

நிதினை பார்த்த நிர்மலா, இங்க என்னடா பண்ற? சத்தமிட, நிம்மி..சும்மா இரு பாட்டி சத்தம் கொடுத்தார். அவர் அமைதியாக அருகே வந்து ரவிக்குமாரையும் அவர் குடும்பத்தையும் பார்த்தார்.

அதீபன் தாட்சாயிணியை பார்த்து, அட..நம்ம ஸ்வீட் பொட்டேட்டோ என்றான்.

என்ன? ரவிக்குமார் கேட்க, அவன் சாதாரணமாக பேசினான். அங்கிள் நாங்க ஒரே வகுப்பு தான். அவளோட நிக் நேம்..ஸ்வீட் பொட்டேட்டோ என்றான். அவர் தாட்சாயிணியை பார்க்க, அவள் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அது என்னடா நிக் நேம்? நிர்மலா கேட்க, என்னம்மா, இது கூட தெரியாம..”கல்லுக்குள் இனிப்பு” என்றான்.

பிரணா சிரிப்பை அடக்கிக் கொண்டு அதீபனை பார்த்தாள்.

அவன் பிரணாவை பார்த்து, லூசு..உன்னோட உதட்ட எதுக்கு கடிக்கிற? இரத்தம் வரப் போகுது. சிரிப்பு வந்தால் சிரிக்க வேண்டியது தானே.

“போடா டொமேட்டோ” என்று சொல்லி விட்டு வாயை மூடினாள். இப்பொழுது தான் நிதினை பார்த்தான்.

உன்னை யாருடா உள்ள விட்டது? உன்னால தான் எங்க ஆத்வி அழுதா? என்று அவனை அடிக்க வந்தான் அதீபன்.

டேய்..என்று பிரணா இடையே வர, நிதின் அவன் கையை பிடித்து அடி அவள் மீது படாமல் பார்த்துக் கொண்டான்.

அதீபா, அமைதியாக உட்காரு என்றார் செழியன்.

அப்பா எங்க? அவனை வரச் சொன்னேனே? செழியன் அதீபனிடம் கேட்க, பெரியப்பா..இப்ப வந்திருவார் என்று சொல்லும் போதே அவன் அப்பா ராமவிஷ்ணு  வந்தார்.

அனைவரையும் பார்த்து, வாங்க என்று சொல்லி விட்டு செழியனை பார்த்தார். நம்ம பொண்ணை கேட்டு வந்திருக்காங்க என்றார். ராமவிஷ்ணு நிதினை பார்த்து, எதுக்கு நிக்குறீங்க மாப்பிள்ள? கேட்டார்.

நான்..என்று இரு குடும்பத்தையும் பார்த்தவன் அவன் தற்போதைய குடும்பத்தை பார்த்து, நான் இங்கே தான் வளர்ந்தேன்னு உங்களுக்கு தெரியும். நாங்க இப்படி தான் பேசி, பழகி இருக்கோம். அதை யாரும் மாற்ற நினைக்கக் கூடாது.

அம்மா..என்று ரேவதியை பார்த்து, நான் உங்க பையன் தான். அதை யாராலும் மாற்ற முடியாது. நான் உடனே உங்களிடம் நந்தினி அம்மாவிடம் பேசுவதை போல் பேசுவேன். ஆனால் நீங்க அதே போல் பேச மாட்டீங்க. நான் உங்களுக்கு நேரம் கொடுத்திருக்கேன். நான் பேசுவதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் இவர்களை போல் இப்பொழுதே நெருங்குவேன் என்று ரவிக்குமாரை பார்த்தான்.

ஆமா, சட்டென யாருடனும் பழகிட மாட்டா. நிறைய விதி முறைகளை வகுத்து வைத்திருப்பாள். அப்படி தானம்மா..என்று ரேவதியிடம் கேட்க, அவரும் சிரித்து வைத்தார். தாட்சாயிணிக்கு இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.

பொண்ணு எங்க? ரேவதி கேட்க, அவள் அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நிதினை பாட்டி பார்த்தார். அவரிடம் ஓடி வந்து அவர் காலை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டான் நிதின்.

“நல்லா இருப்பா” பாட்டி சொல்ல, நான் உன்னிடம் பேசணும் என்று செழியன் சொல்ல, வாங்க சார் பேசலாம் என்று நிதின் சொல்ல..

இங்கேயே பேசலாமே? ரேவதி கேட்க, செழியன் தயங்கினார்.

அம்மா, சும்மா இருங்க. நான் பேசிட்டு வாரேன் என்றான் நிதின்.

யோசித்த செழியன் சரி, இங்கேயே பேசலாம் என்று நிதினிடம், உனக்கு ஆத்வியை பிடித்து தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றீயா?

ஆமா சார்.

திடீர்ன்னு உனக்கு அவளை எப்படி பிடித்தது? நீ வேற பொண்ணு பின்னாடி தான சுற்றின?

அதுவந்து சார், அவளுக்கு திருமணமாகிடுச்சு என்றான்.

வாட்? நிஜமாகவா?

ஆமா சார் என்றான்.

அந்த பொண்ணுக்கு திருமணம் முடிந்ததால் ஆத்விய கட்டிக்கிறேன்னு சொல்றியா? கோபப்பட்டார்.

நோ..சார், எனக்கு அந்த பொண்ணை பார்க்கும் முன்னே ஆத்வியை தான் பிடிக்கும். நான் நம்ம வீட்டுல இருந்து வெளியேறியதே ஆத்வியால் தான்.

என்னோட அக்கா என்ன செஞ்சா? அதீபன் கேட்டான்.

நான் யாருமில்லாத அநாதை பையன் என்று நிர்மலாவை பார்த்துக் கொண்டே, ஆத்வியை காதலிக்கும் தகுதி கூட இல்லாமல் இருந்தேன். அவளை விட்டு விலகி இருந்தால் அவளை மறக்கலாம்ன்னு நினைச்சேன். அதான் போனேன்.

சிவநந்தினி கோபமாக, உன்னை அநாதை மாதிரியா நாங்க பார்த்தோம்? என்று கேட்டார்.

எப்படியும், நான் உங்க பையன் இல்லதானம்மா என்று குற்றம் சாட்டும் பார்வையை ரேவதி மீது வைத்தான். அவர் கலங்கிப் போனார்.

ஏன்டா, இப்படி பேசி கஷ்டப்படுத்துற? ரேவதி கேட்க, நான் கஷ்டப்படுத்தலம்மா. நான் கஷ்டப்பட்டேன். பெற்றோர் கண்கலங்கினர்.

ஆனால் இப்ப எனக்கு குடும்பம் இருக்காங்க. அம்மா, அப்பா, தங்கை எல்லாரும் எனக்கு இருக்காங்க. அதான் இப்ப ஆத்வியை விட முடியாம வந்துட்டேன்.

எங்ககிட்ட காதல் இல்லன்னு சொன்ன? ரவிக்குமார் கேட்க, ஆத்வி மேல காதல் இருக்குன்னா நீங்க இங்க இப்ப வந்திருக்க மாட்டீங்கப்பா. அவளை யார் பயன்படுத்தினாலும் எனக்கு பிடிக்காது என்று தாட்சண்யாவை பார்த்தான்.

எனக்கு தெரியும் அண்ணா. ஆத்விக்கு உன்னை பிடிப்பது போல் உனக்கும் அவளை பிடிக்கும்ன்னு என்றாள் தாட்சாயிணி.

என்னடி சொல்ற? உனக்கு எப்படி தெரியும்? ரேவதி கேட்க, அம்மா ஆத்வி என்னோட சீனியர். அதை விட அமைதியா இருப்பா..

ஆத்வியோட கடைசி வருட படிப்பின் போது நடந்த “பிரியா விடை”யில் அதி மாமாவும், அண்ணாவும் வந்திருந்தாங்க.

அண்ணா, ஆத்வியிடம் இடைவெளியுடன் இருந்ததை பார்த்தேன். ஆனால் பிரணாவோட, மற்றவர்களிடமிருந்து பழகுவதை விட வித்தியாசமாக தெரிந்தது. ஆத்வி அண்ணாவை காதலிப்பது எனக்கு நன்றாக தெரியும். அண்ணாவிற்கும் அவள் மீது ஆர்வம் இருக்குமோ என்று ஆத்வியை பின் தொடர்ந்தேன்.

ஆத்வி அவள் தோழன், தோழிகளுடன் ரெஸ்டாரண்டு செல்லும் போது இவனும் வந்தான். உள்ளே போகாமல் வெளியே தான் இருந்தான். நான் உள்ளே சென்றேன். சற்று நேரத்தில் அண்ணா ஒரு பொண்ணுடன் வந்தான். ஆத்வியை பார்த்து, சாதாரணமாக ஹாய் சொல்லீட்டு அமர்ந்தான். ஆத்வி இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒருவன் கையில் மோதிரத்துடன் ஆத்விக்கு திருமண பிரப்போர்சலை வைத்தான். அதை பார்த்த அண்ணன் கண்கள் கலங்கியது.

காரமா இருக்கா என்று அண்ணாவுடன் வந்த பொண்ணு தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். அண்ணா, உனக்கு நினைவிருக்கா? தாட்சாயிணி கேட்க, அவன் தலைகவிழ்ந்து கண்ணீருடன் அமர்ந்திருந்தான்.

ஆத்வி அண்ணாவை பார்த்தாள். அவன் கண்டுகொள்ளாதது போல் இருக்க, சட்டென எழுந்து எனக்கு பசிக்கலை என்று கிளம்பி விட்டாள். அண்ணாவும் சாப்பிட்டு கிளம்பினான்.

அவ்வப்போது அந்த பொண்ணுடன் வேண்டுமென்றே ஆத்வி முன் வருவான். ஆனால் ஆத்வி அந்த பொண்ணை பார்க்க நினைத்தாலும் ஏதாவது செய்து அவளை நகர்த்தி விடுவான். அந்த பொண்ணை அண்ணா காதலிக்கலை. பயன்படுத்தி தான் இருக்கான் என்று நிதினை பார்த்தாள்.

நான் பயன்படுத்த தான் அழைத்து வந்தேன். ஆனால் அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆத்வி என்னோட முதல் காதல்ன்னா அவள் இரண்டாவது என்றான்.

என்னடா சொன்ன? அதீபன் அடிக்க வந்தான்.

அடிடா..நல்லா அடி. எல்லாமே உன்னோட அம்மாவால தான். எனக்குள்ள தாழ்வு மனப்பான்மையை வளர்த்து விட்டுட்டாங்க என்று நிதின் கத்த, அதீபன் கையை இறக்கினான். எல்லாரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.

என்னடா. என் மேல பழிய போடுற? இதுக்கு தான் இவனைm உள்ள விடக்கூடாதுன்னு சொன்னேன் என்றார் நிர்மலா.

நிம்மி, அமைதியா இருக்கிறதா இருந்தா இரு. இல்ல அறைக்கு போ சிவநந்தினி சத்தமிட்டார்.

உன்னோட அம்மா அமைதியா இருந்திருந்தா வெளிய போயிருந்தாலும் தினமும் ஒரு முறையாவது வீட்டிற்கு வந்திருப்பேன். எப்ப பாரு அநாத பயலே..ன்னு சொல்லி சொல்லியே என்னை வர விடாம, ஆத்வியிடம் பேச முடியாம பண்ணிட்டாங்க.

ஒரு வேலை ஆத்வியிடம் பேசிப் பழகி இருந்தால் நான் அவள் பக்கம் போயிருக்க மாட்டேன். என்னை அநாதன்னு பேசுறவங்க வீட்ல இருக்கிற பொண்ண நான் எப்படி காதலிப்பது? கை பிடிப்பது? சொல்லுடா..உன்னால முடியுமா? என்று அதீபனிடம் கத்தினான் நிதின்.

இரு வருடங்களுக்கு பின் அவளை மீண்டும் பார்த்தேன். யோசிக்கவேயில்லை.. உடனே என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன்?

ஏன்டா? கல்யாணம் ஆனவங்கன்னு சொன்ன? பிரணா கேட்க,  ஆமா திருமணமாகி இரு மாதத்திலே கணவனை பிரிந்து என்று பெயரை கூறாமல் நேத்ராவிற்கு நடந்ததை கூறினான்.

இதுல முக்கியமான விசயம். அவள் என்னை பார்த்ததிலிருந்து தோழன் என்பதை மீறி என்னை பார்த்ததேயில்லை.

என்ன சொன்னாங்க? தாட்சாயிணி கேட்க, எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை. நீ எப்பொழுதும் தோழன் தான் என்று சொல்லி முடித்து விட்டாள்.

ஓ..அதனால தான் குடிச்சியா? செழியன் கேட்க, இல்ல சார் அவளுக்காக குடிக்கலை. ஆத்வியை நினைத்து தான் குடிச்சேன்.

ஆத்விக்காகவா? செழியன் கேட்க, ஆமா சார், எனக்கு இரண்டாவது லவ் தோல்வியில் பெரியதாக கவலையில்லை. நீங்க தான் ஆத்விக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை ஆரம்பித்து விட்டீர்களே? அந்த வருத்தத்தில் தான் குடித்தேன்.

நிம்மி அத்தை என்னை அநாதைன்னு சொல்லும் போது அம்மா..சொல்லாதன்னு அவங்கள திட்டுவாங்க. அதோட அதை அவங்களும் விட்டுருவாங்க. யாராவது எனக்காக பேசி அவங்களுக்கு புரிய வச்சீங்களா? என்று செழியனை பார்த்தான்.

அவங்க பேசுவதாலே வீட்டுக்கு வரணும்ன்னு எண்ணமே இல்லாம போச்சு. அம்மாவுக்காக தான் வந்தேன். இல்லை வராமலே இருந்திருப்பேன் என்று நிர்மலாவை பார்த்து,

அநாதை என்ன? வானத்தில்ல இருந்து குதிக்கவா செய்றாங்க? அவங்களுக்கும் அம்மா, அப்பா இருக்காங்க. உங்களை மாதிரி பக்கத்துல இருந்து பார்த்துக்கிறதில்லை அவ்வளவு தான். அவங்க பெற்றோர் இறந்திருக்கலாம். பிரிந்திருந்து பார்த்துக் கொள்ள முடியாமல் இருக்கலாம். பெரியவங்க தப்புக்கு குழந்தைக்கு கிடைக்கும் நல்ல பெயர்ல்ல ஆன்ட்டி. உங்க அதிய யாராவது இப்படி சொன்னா சும்மா விடுவீங்களா?

என்னை விடுங்க, நம்ம அன்பு நிலையத்துல ஒரு குழந்தை உயிர் போகும் நிலையில் இருக்கான். யாருக்காவது தெரியுமா? கத்தினான். நிர்மலா பார்வையை தாழ்த்தினார்.

சொல்லுங்க ஆன்ட்டி, வீட்டுக்கு உதவி கேட்டு வந்தவங்ககிட்ட என்ன பேசுனீங்க? சொல்லுங்க என்று கத்தினான்.

நிது..என்ன சொல்ற? குழந்தை உயிர் போகும் நிலையா?

ஆமாம்மா. உங்களை கூட நிலையத்தை வழிநடத்தும் பொண்ணுக்கு தெரியுமாமே? அந்த பொண்ணு உங்களை பார்க்க வீட்டுக்கு வந்து அந்த குட்டிப்பையனுக்காக சிகிச்சைக்காக பணம் கேட்டிருக்கா. ஆனால் இவங்க பணத்தை பிச்சை மாதிரி தூக்கி எறிஞ்சிருக்காங்க. அவ கோபமாக பணத்தை இவங்க மேல போட்டுட்டு போயிருக்கா நிதின் கூற,

அடியேய், நான் கேட்டதுக்கு அவ ஏமாத்துறான்னு சொன்ன? என்று கேட்டுக் கொண்டே யசோதா வந்து நிர்மலாவை முறைக்க, பாட்டி சினமுடன்.. எந்திருடி..என்று சத்தமிட்டார்.

அத்தை, இவன் சொன்ன மாதிரி ஏதும் நடக்கலை நிர்மலா சொல்ல, அம்மா..பொய் சொல்லாதீங்க. நானும் ஆரம்பத்திலிருந்தே பார்த்தேன் அதீபன் சொன்னான்.

நிர்மலா எந்திரிக்க, ராமவிஷ்ணு அவரை ஓங்கி அறைந்தார்.

டேய், அது என்ன பொண்டாட்டிய கை நீட்டுற? பாட்டி கேட்க, இவள் செய்த வேலைக்கு இதெல்லாம் பத்தாது என்றார்.

இப்ப அந்த குட்டிப் பையனுக்கு என்னாச்சு? பாட்டி கேட்க, இருக்கான். இன்னும் சிகிச்சை ஆரம்பிக்கலை. வேற ஒருவர் உதவுவதாக சொல்லி இருக்கார். சீக்கிரம் சிகிச்சையை ஆரம்பிப்பாங்க என்றான்.

சிவநந்தினி போனை எடுக்க..விஷ்வாவுக்கு தான கால் பண்ண போறீங்க? அது வேஸ்ட் என்றான் நிதின் சினமுடன்.

செழியன் எழுந்து, உனக்கு தெரிந்திருந்தால் சொல்லி இருக்கலாமே?

நானா? நான் தான் அநாதையாச்சே. எப்படி சொல்லுவேன்? அவன் கேட்க செழியன் அவனை அறைந்து விட்டு, இதுக்கு மேல அநாதைன்னு சொல்லாத என்று சத்தமிட்டார்.

சார், இத்தனை வருடங்களாக நான் அநாதை தான். அப்ப இவங்க சொல்லும் போது அமைதியாக தான இருந்தீங்க. நான் சொல்லும் போது கோபம் வருதா? கேட்டார். அவர் கண்கலங்க, யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ எப்பொழுதும் எங்க வீட்டு பையன் தான். எங்களுள் ஒருவன் தான் என்று நிதினை அணைத்தார்.

எங்க பிள்ளைய அநாதன்னு சொல்லி கஷ்டப்படுத்தி இருக்கீங்களா? ரேவதி சத்தமிட, அம்மா…மத்தவங்க பேச முதல் காரணமே நீங்களும் அப்பாவும் தான்.

ரவிக்குமார் கண்கலங்க மகனை பார்த்தார்.

உனக்காக தானடா?

எனக்காகவா? நான் இவங்க எல்லாருடனும் சந்தோசமா இருந்தாலும் எனக்குன்னு குடும்பம் இல்லைன்னு நிறைய முறை கஷ்டப்பட்டிருக்கேன். கண்ணுக்கு தெரியாத கொலைகாரன் ஒருவனுக்காக என்னை காப்பாற்றுகிறேன்னு என்னோட வலியை அதிகப்படுத்தி இருக்கீங்க இரு குடும்பமுமே..என்றான். கண்ணீருடன் பெற்றோர் நால்வரும் நிதினை பார்த்தனர். சற்று நேரம் அமைதி நிலவியது.

விஷ்வா, அந்த குட்டி பையனை பற்றி என்னிடம் ஏதும் சொல்லவில்லையே? சிவநந்தினி கேட்க, அது எப்படி சொல்லுவான்? உங்களுக்கு தெரியாத நிறைய விசயம் இருக்கும்மா? என்று சிவநந்தினி அருகே வந்து, அன்பு நிலையத்தில் எதற்கெல்லாம் கஷ்டப்படுறாங்க? அதை எப்படி சமாளிக்கிறா நேத்ரா என்று அவள பெயரை கூறாமல், பசங்களின் படிக்க முடியாத நிலையையும் எடுத்துரைத்தான்.

நிது, என்ன சொல்ற? எல்லாவற்றிற்கும் மாதா மாதாம் சரியாக பணம் அனுப்புகிறேன். பள்ளியில் செக்கரட்டரி மூலம் அனைத்து பசங்களுக்கும் பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் செழியன்.

ஆமாப்பா. நாங்க சரியா தான் செஞ்சுகிட்டு இருக்கோம் என்ற சிவநந்தினி, அந்த பொண்ணு என்னிடம் இதெல்லாம் செல்லவில்லையே?

எப்படிம்மா சொல்றது? உயிருக்கும் போராடும் குழந்தைக்கே இங்கே பணம் கொடுக்க மனமில்லாது இருக்க, மத்த செலவுகள், படிப்பு விசயத்தை எப்படி சொல்லுவாங்க?

இப்ப இல்லை. இருபது வருசமா இந்த கஷ்டத்துல தான் இருக்காங்க.

நான் அனுப்பிக் கொண்டிருக்கும் பணம்? என்று செழியன் கேட்க, கேட்க வேண்டியவர்களிடம் கேளுங்க சார்.

அப்புறம் அந்த பொண்ணுக்கு நீங்க பணம் அனுப்பிய எதுவுமே தெரியாது. உங்களை பற்றி அங்கிருப்பவர்கள் தவறாக தான் எண்ணிக் கொண்டிருப்பர்.

இருபது வருசமா நான் அனுப்பும் பணம் எங்க தான் போகுது? செழியன் சத்தமிட்டார். நிதினும் அதீபனும் நிர்மலாவை பார்த்தனர்.

அம்மா, நீ எதுவும் செய்தாயா? அதீபன் கேட்க, நிர்மலா முகம் வியர்த்தது.

ராமவிஷ்ணு நிர்மலா அருகே வந்து, சொல்லு..நீ தான? என்ன பண்ண? அவர் சத்தமிட, அது வந்துங்க..என்று கண்ணீருடன் அனைவரையும் பார்த்தார்.

சின்ன பசங்களோடதுல கையை வச்சிருக்கியேடி என்று பாட்டியும் நிர்மலாவை அடிக்க, நான் கொஞ்சம் தான் எடுத்தேன். எல்லாமே தயாளன் தான் வச்சிருக்கான். விஷ்வாவை மிரட்டி தான் செய்தான்.

மிரட்டினானா? செழியன் கேட்க, விஷ்வா அம்மாவுக்கு விபத்துன்னு உங்களிடம் சொன்னானே சார் நினைவிருக்கா? அது விபத்து இல்லை. அவனை மிரட்ட இவர்கள் செய்த செயல் நிதின் சொல்ல, நிர்மலாவை அனைவரும் கோபமாக பார்த்தனர்.

 

 

 

Advertisement