Advertisement

அத்தியாயம் 13

அதிரதன் கோபமாக அங்கிருந்த பொருட்களை தட்டி விட்டு செல்ல, நேத்ரா கண்ணீருடன் யுவியை அணைத்து, சாரி யுவி என்று அழுதாள்.

பிரச்சனையா வினு? நிதின் கேட்க, யுவியை தூக்கிக் கொண்டு அதிரதன் அறைக்கு வெளியே நின்றாள் நேத்ரா.

தயங்கிக் கொண்டு, சாரி சார்..ஆனால் நாங்க இப்படி இருப்பது தான் நல்லது என்று அவள் சொல்ல அதிரதன் கோபம் அதிகமானது. சட்டையை கழற்றி விட்டு பஞ்சிங் பேக்கை அடித்து கொண்டிருந்தவன் அவள் சொன்னதில் கோபமாக அடித்தான். அந்த பஞ்சிங் பேக்கே கிழிந்து விழுந்தது..

அவன் சட்டையில்லாது வெற்று மார்ப்போடு அதே சினமுடன் வெளியே வந்த அதிரதனை பார்த்து பயந்து நேத்ரா நிற்க, ரதா..என்ன பண்ற? என்று நிதின் அவனிடம் வந்தான். அவன் கையில் அடிபட்டி இருப்பதை பார்த்து யுவனை இறக்கி விட்ட நேத்ரா, மருந்தை எடுத்து அவனருகே வர..நில்லு..உனக்கு என்ன தான் பிரச்சனை? கத்தினான்.

சார், முதல்ல கையை கொடுங்க என்று அவனிடம் வந்தாள். வினு அதை கொடு நிதின் கேட்க, அவள் அதையும் கேட்காமல் சார்..கையை கொடுங்க. இதுக்கெல்லாம் கோபப்பட்டால் நானெல்லாம் என்ன செய்வது? அவளும் கத்தினாள்.

சொல்லு? பிரச்சனை என்ன? யுவிக்கு ஆப்ரேசன் தான உனக்கு பிரச்சனை? பார்க்கலாம் என்றான்.

சரி சார், கையை குடுங்க என்று அவனருகே வந்து அவளாகவே கையை பிடித்து இழுத்து மருந்திட்டாள்.

ரெண்டு பேரும் என்ன பண்றீங்க? நிதின் வாயில் கையை வைத்தான்.

நாங்க என்னடா பண்றோம்? மருந்து தான போட்டு விடுறேன். வெட்டியா நிக்கிற சாருக்கு தண்ணீர் எடுத்துட்டு வா என்று நேத்ரா சொல்ல, அவள் அதிரதன் கையை பிடித்த நிமிடம் அவன் அமைதியானான்.

இது சரியில்லையே? என்று இருவரையும் நிதின் பார்க்க, அவள் மருந்திட, அதிரதன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். யுவி அவனிடம் வந்து அவனுக்கு காயமிட்ட இடத்தில் ஊதி விட, அதிரதன் அவனை தூக்கினான். நேத்ரா அதிரதனை முறைக்க, யுவி அதை பார்த்து தானாக விலகினான்.

இவள் இவனிடம் பணம் வாங்க வந்த மாதிரி இல்லையே? குடும்பம் நடத்துவது போல் அல்லவா இருக்கு? என்று நிதின் தண்ணீர் எடுத்து வந்து, “மகாராஜா, இந்த நீரை பருகினால் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்க நம் வினு போன்ற பெண் கிடைப்பாள்” என்றான்.

என்னடா சொன்ன? என்று நேத்ரா அவன் வாயில் குத்தி விட்டு உள்ளே அவள் வேலையை கவனிக்க சென்றாள்.

ஏன்டா, அவள் முன்னாடி யோசித்து பேச மாட்டாயா? சும்மாவே என் மேல கோபத்துல இருந்தா. இப்ப சண்டை வேற போட்டிருக்கோம். எனக்கு அடிபட்டதுக்கு மருந்து போட்டதே பெரிய விசயம். இதுல நீ வேற? என்று அதிரதன் சமையலறை பக்கம் பார்த்தான்.

டேய் ரதா, நீ வினுவை பார்த்ததிலிருந்து ஒரு மார்க்கமா தான் இருக்க? பார்த்துடா, “என்னை போல் அவள் உன்னை அடித்து விடாமல்” என்றான் நிதின். அதிரதன் மெலிதான புன்னகையை உதிர்த்தான்.

டேய்..அடிச்சாலா? உன்னை அடிச்சாலா? உன்னையே அடிச்சிட்டாலா? சூப்பர்டா..நல்லா வாங்கு. ஆமா, வினு சும்மாவெல்லாம் அடிக்க மாட்டாளே?

கோபத்தில் அருகே செல்லும் போது அவள் இடுப்பில் தெரியாமல் கை பட்டு விட்டது. அதான் அடிச்சா..

வாட்? மவனே..ஒழுங்கா குட்டிப் பையனுக்கு பணத்தை கட்டு. அவளை நிலையத்திலே நான் விட்டுட்டு போறேன்.

முடியாது. அவள் இங்க தான் இருக்கணும். அவளை நான் விட மாட்டேன்.

விட மாட்டியா?

ஆமா, ஆறு மாதம் கான்ட்ராக்ட் போட்டிருக்கோம். யுவிக்கு சிகிச்சை முடிந்து அவன் சென்றாலும் இவள் என்னுடன் தான் இருப்பாள் அதிரதன் சொல்ல, நிதின் அவனை அடித்தான்.

அவளே சைன் பண்ணி கொடுத்துட்டா என்று அழுது கொண்டே அவள் பேசியதை சொன்னான்.

அது கூட இருக்கட்டும். உனக்கு வினுவை பிடிச்சிருக்கா?

ஏன்டா கேக்குற? ஆத்வி, பிரணா தவிர எந்த பொண்ணையும் உன் பக்கம் கூட வர விட மாட்ட. வினுவுடன் நார்மலா பேசுற? உரிமை எடுக்கிற மாதிரி தெரியுதுடா. வேண்டாம் ரதா. அவளை கஷ்டப்படுத்திறாத.

எனக்கும் அதே சந்தேகம் தான் காதல் இருந்தா எப்படி கண்டுபிடிக்கணும்? அதிரதன் கேட்க, “முடிவு பண்ணிட்ட போல!” நிதின் கோபமாக கேட்க,

எதுக்குடா கோபப்படுற? நான் காதலிக்கக் கூடாதா?

காதலி. தாராளமாக காதலி. உன்னை போல் பணக்கார பொண்ணா பார்த்து காதலி. வினுவை விட்டுரு.

எனக்கு அவளை பிடிச்சிருக்கு. அது காதலா? என்னவென்று நாளையே கண்டு பிடித்து விடுவேன் என்று அதிரதன் சொல்ல..ரதா இது நீ தானா? நம்பவே முடியலடா. நீ ரோபோ மாதிரி இருப்படா.

அது அப்படா. அப்ப நான் வினுவை பார்க்கலையே?

அடப் போடா, ரெண்டு பேருக்கும் செட் ஆகும். ஆனால் ஸ்டேட்டஸ் இடிக்கும். அடுத்தவங்க அவ கஷ்டப்படுற மாதிரி பேசுவாங்களே?

அப்படி நடக்காம நான் பார்த்துக்கிறேன் அதிரதன் சொல்ல, நீ செஞ்சாலும் செய்வ? என்று நிதின்.. “இனி எனக்காக நீ வேண்டாம். உனக்காக வாழு” என்று கூறி விட்டு வினுவை அழைத்தான். அவள் அலைபேசியும் அவளை அழைத்தது.

அலைபேசியை எடுத்த நேத்ரா, என்ன அதியசமா இருக்கு? கால் பண்ணி இருக்க? என்று கேட்டுக் கொண்டே அதிரதன், நிதினுக்கு எதிரே அமர்ந்தாள். யுவன் ஓடி வந்து அவள் மடியில் அமர்ந்தான்.

அக்கா..அக்கா..என்று மறுமுனையில் பதட்டமாக, நேத்ரா முகம் மாறியது.

மிதுன்..அங்க யாருக்கும் ஏதும் பிரச்சனையா? தன்வந்த் பிரச்சனை ஏதும் பண்றானா? அவள் கேட்க, இல்ல இங்க காலேஜ்ல..சீனியரை..என்று நிறுத்தினான்.

சீனியரா? மிதுன் எழிலா?

ஆமாக்கா, அவரை கொல்ல ரௌடிகள் காலேஜூக்கு வந்தனர்.

என்ன சொல்ற? கொலையா? எழிலனையா? அவனுக்கு ஒன்றுமில்லையே? பதட்டமுடன் அவள் கண்ணீர் வந்தது.

இல்லக்கா..பசங்க எல்லாரும் உடன் இருந்ததால் கொல்ல வந்தவனை பிடிச்சாச்சு. அவனை போலீஸ் இழுத்துட்டு போயிருக்காங்க. சீனியருக்கு கால்ல தான் கத்தியால் கீறல் பட்டிருக்கு. கட்டு போட்டாங்க. பிரின்சிபுல் அவரை பேச வர சொல்லி இருக்காங்கன்னு போயிருக்காங்க என்றான். நேத்ரா அழுதாள்.

வினு..என்று அதிரதனும், நிதினும் அழைத்து ஒருவரை ஒருவர் பார்க்க, எதுக்குக்கா அழுற? யுவன் அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

அக்கா அழாதீங்க..என்று மிதுன் சொல்ல, அலைபேசியை பிடுங்கிய அதிரதன் என்னவென்று கேட்க, மிதுன் சொல்வதை கேட்டு வினுவை பார்த்தான்.

எந்த ஸ்டேசன்ல அவன் இருக்கான்னு தெரியுமா? அதிரதன் கேட்க,..தெரியல சார் என்றான் அவன்.

“அவனை அரெஸ்ட் பண்ண போலீஸை பற்றி விசாரித்து சொல்” என்று அலைபேசியை வைத்து அவளருகே வந்து அமர்ந்தான். அவள் அவனை பார்த்து விட்டு எழுந்து நிதினிடம் சென்று, ஏதோ சொல்ல வந்தாள்.

எழிலையா கொல்ல வந்திருக்காங்க? யாரா இருக்கும்ன்னு உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா? நிதின் கேட்க, தெரியலை என்று தலையசைத்து, நீ அவனை பார்த்துட்டு கால் பண்றீயா? நேத்ரா நிதினிடம் கேட்டாள்.

இப்பவாது..அவனை பார்க்கலாமே வினு? இப்ப அவனுக்கு மத்தவங்கள விட நீ இருந்தா தான் ஆறுதலாக இருக்கும் நிதின் சொல்ல..

ப்ளீஸ் போ. சுஜிய கூட்டிட்டு போ. ஆனால் என்னை பற்றி ஏதும் அவனுக்கு தெரியக்கூடாது. சுஜியிடமும் சொல்கிறேன். சீக்கிரம் கிளம்பு. காலேஜ்ல பிரின்சிபுல் பேச அவனை அழைத்ததாக வேற மிதுன் சொன்னான். பிரச்சனையாகாமல் பார்த்துக்கிறியா? அவள் கேட்க,

நான் பார்த்துக்கிறேன். அழுவதை நிறுத்துறியா? நிதின் கேட்க, அதிரதன் அலைபேசிக்கு மிதுன் போன் செய்தான். அவன் வந்த போலீஸை பற்றி சொல்ல..

அவனுக்கு வேற பிரச்சனை இல்லையே? அதிரதன் கேட்க, சார் அக்காவிடம் பேசணும் என்றான் அவன்.

ஏன்? என்னிடம் சொல்லக்கூடாத விசயமா?

அப்படியில்லை சார். இதே மாதிரி மறுபடியும் ரௌடிகள் கல்லூரிக்குள் வந்தால் கல்லூரி பெயர் கெட்டு விடுமாம். அதனால் ஒரு மாதம் சஸ்பண்டு செய்து பிரச்சனை முடிந்தால் தான் கல்லூரிக்கு வரணும்ன்னு சொல்லிட்டாங்களாம். ஹாஸ்ட்டல்லயும் விட்டு கிளம்ப சொல்லீட்டாங்க. எங்க போகன்னு தெரியாம எல்லாத்தையும் பேக் பண்ண போயிருக்காங்க என்றான் மிதுன்.

“நான் உனக்கு கால் பண்ணும் வரை கல்லூரி விட்டு அவன் வெளியே வர வேண்டாம்” என்றான் அதிரதன்.

சார், அவனுக்கு ஒன்றுமில்லையே? அதிரதனிடம் பதறி வந்த நேத்ரா அவன் கையை பிடித்தாள்.

போனை வைத்து விட்டு அவளிடம் அவன் விசயத்தை சொன்னான்.

அதான் கொல்ல வந்தவனை பிடிச்சிட்டு போயிட்டாங்கல்ல அப்புறம் எதுக்கு சஸ்பெண்டு பண்றாங்க? அவள் கேட்க, அதுவும் நல்லது தான். அவனை கொல்ல நினைப்பவர்கள் யார்? என்று கண்டுபிடிக்கலாம் என்ற அதிரதன் அவள் கை மீது கையை வைத்தான். கையை எடுத்து நகர்ந்து அமர்ந்தாள்.

“நடத்துங்கடா” என்று நிதின் மனதில் நினைத்தவாறு “வினு, எழிலை நிலையத்தில் பசங்களுடன் தங்க வைக்கலாமே?” நிதின் கேட்டான்.

அங்க சின்ன பசங்க எல்லாரும் இருக்காங்க. அவங்களுக்கும் ஆபத்து வந்து விட்டால் நேத்ரா கேட்க,

அதெல்லாம் ஏதும் ஆகாது. நிது சொல்றது சரி தான். பசங்களோட பசங்களா அவனும் இருக்கட்டும். பாதுகாப்புக்கு ஆள் போடலாம் என்றான் அதிரதன்.

இருக்கட்டும் சார், நான் பார்த்துக்கிறேன் நேத்ரா சொல்ல, வினு..சும்மா இரு. ரதன் பார்த்துப்பான். நான் எழிலை சற்று நேரம் பார்த்துக்கிறேன். இரவானதும் யாருக்கும் தெரியாமல் அவனை அங்கே விடலாம். வெளியே அவன் வராமல் உள்ளே இருக்கட்டும் என்றான் நிதின்.

நிது, இதற்கு முன் நீ இருந்த அறை காலியாக தானே இருக்கும்? நேத்ரா கேட்க,

அது பாதுகாப்பு இல்லை. தனியா இருந்தா ஈசியா உள்ள வந்துடுவானுக என்ற அதிரதன் மிதுன் சொன்ன போலீஸூக்கு போன் செய்து கேட்டான்.

பெரிய பிரச்சனை மாதிரி தான் தெரியுது? உங்களுக்கு அந்த பையனை எப்படி தெரியும்? அவர் கேட்க, அவன் வினுவை பார்த்து, அவனை இப்ப தான் தெரியும்.

நீங்க விசாரிச்சீங்களா? என்ன சொன்னான்?

சார், அவனுக்கு யாரோ பெரிய ஆள் தான் ஆர்டர் கொடுத்திருக்காங்க. யாருன்னு கேட்டா சொல்லவே மாட்டேங்கிறான். இதுக்கு மேல அடிச்சா அவன் செத்துருவான் என்று அவர் சொல்ல..

பெரிய ஆளா? ஆனால் இவனுக்கும் பெரிய ஆளுங்களுக்கும் என்ன சம்பந்தம்? அதிரதன் வினுவை பார்க்க, அவள் பாவமாக அவனை பார்த்தாள்.

போனை வைத்த அதிரதன்..வா, நாமும் கிளம்பலாம் அதிரதன் சொல்ல, ரதா நீங்க அங்க வந்தா? இப்ப தான் உன்னோட பேரு சரியாகி இருக்கு. இப்ப வினுவோட சேர்த்து யாராவது உன்னை பார்த்தால் தப்பாகிடும் நிதின் கூற, ஆமா சார்..வேண்டாம்.

வேறெதுவும் செய்ய வேண்டாம். எனக்கு அவன் பாதுகாப்பாக இருந்தால் போதும் என்றாள்.

வினு..எழிலுக்கு என்னையும் சுஜியையும் நினைவிருக்குமா? நிதின் கேட்டான். அவன் ரொம்ப சார்ப். ஒரு முறை பார்த்து விட்டால் மறக்கவே மாட்டான் என்று அதிரதனை பார்த்தாள்.

வினு, அவனுக்கு என்னையும் தெரியுமா? அதிரதன் கேட்டான்.

உன்னை எப்படிடா அவனுக்கு தெரியப் போகுது. நாங்க வினுவுடன் சுத்துவோம். அதனால அவனுக்கு தெரியும். அப்ப அவன் ரொம்ப சின்னப் பையன் நிதின் சொல்ல, தெரியும் என்றாள் நேத்ரா.

வினு, என்ன சொன்ன? நிதின் கேட்க, எழிலுக்கு சாரை நன்றாக தெரியும் என்று அவனை பார்த்தாள். அவன் நிதினை பார்த்து, எப்படி? என்று காலரை தூக்கி விட்டான்.

ப்ளீஸ், கொஞ்சம் சீக்கிரம் கிளம்புறியா? அவனுக்கு அடிபட்டிருக்கு. சுஜிய கூட்டிட்டு போய் அவனை பாரு என்று அவள் மீண்டும் அழுதாள்.

இவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த யுவன்..அவளிடம் வந்து, அக்கா சாப்பிடலாமா? என்று கேட்டுக் கொண்டே அவள் கண்ணீரை துடைத்து விட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவளும் அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.

நான் கிளம்புகிறேன் என்று நிதின் கிளம்பினான். அதிரதன் வினுவை பார்க்க, சாப்பிட வாங்க சார் என்று அவள் அழைக்க, அவளை பார்த்துக் கொண்டு அவள் பின்னே சென்றான்.

சாப்பிட்டவுடன் சுஜிக்கு போன் செய்து விசயத்தை சொல்லி, நம்ம நிலையத்தில்  என்னை பற்றி யாரும் அவன் இருக்கும் வரை பேசக்கூடாதுன்னு பசங்களிடம் சொல்லி வை என்றாள்.

வினு, நீ என்னிடம் எதையும் மறைக்கிறியா? சுஜி கேட்க, இல்ல சுஜி என்றாள்.

அப்படின்னா உன்னோட குழந்தை? என்று கோபமாக சுஜி கேட்க, திடுக்கிட்டு அதிரதனை பார்த்தாள். அவன் அவளை தான் கவனித்துக் கொண்டிருந்தான்.

வேகமாக எழுந்து அறைக்குள் நேத்ரா சென்று கதவை அடைத்தாள். அவன் சந்தேகமாக அவளை பார்த்து அவளறை முன் வந்து, வினு…கதவை திற அழைத்தான்.

சார், நான் ஓய்வெடுக்கணும் என்றாள்.

யுவியை நான் என் அறைக்கு அழைத்து போகவா?

இல்ல சார் என்று சுஜி ஒரு நிமிசம் வெளியே வந்து யுவனை அழைத்தாள். அவனும் அவளுடன் செல்ல, இவள் எதையோ மறைக்கிறாள் என்று அதிரதனுக்கு தெளிவாக தெரிந்தது.

கேட்பதை விடுத்து, சரி நல்லா ஓய்வெடு என்று அவன் அறைக்கு சென்றான்.

சுஜியிடம் விசயத்தை சொல்லி விட்டு, நிதின் உன்னை அழைக்க வருவான். அவனுக்கு குழந்தை விசயம் தெரிய வேண்டாம். தெரிந்தால் சாருக்கும் தெரிந்து விடும். அப்புறம் கான்ட்ராக்ட்ட மாத்தணும்ன்னு சொல்லுவாரு நேத்ரா சொல்ல,

வினு, இந்த குழந்தை அவசியமா? சுஜி கேட்க, என்னடி பேசுற? இது என்னோட குழந்தைடி. விஷ்வாவும் உன்னோட கணவனை பற்றி சொன்னான். உன்னுடையதாக இருந்தாலும் அவனுடையதும் தானே?

என்னோடது சுஜி. அவனுடையதாக இருந்தாலும் அவன் இனி என் வாழ்க்கையில் கிடையாது. தயவு செய்து கலைக்க சொல்லாத. என்னால முடியாது என்று அழுதாள்.

சரி, கவனமா இரு. ரதன் உன்னை ஏதும் செய்ய மாட்டான் இருந்தாலும் கவனமா இரு. உன்னையும் பத்திரமா பார்த்துக்கோ என்று சுஜி தன் தோழிக்கு அறிவுரை கூற,

சரிடி, எழிலை நல்லா பார்த்துக்கோ. சின்ன வலிய கூட தாங்க மாட்டான். ரொம்ப அடிபட்டிருக்கு அழுது கொண்டே கூறினாள் நேத்ரா.

எதுக்குடி அழுற? அவன் எனக்கும் தம்பி தான். நான் பார்த்துக்கிறேன். நீ கவலைப்படாமல் இரு என்று அலைபேசியை வைத்தாள் சுஜி.  நேத்ரா கண்ணீருடன் அமர்ந்தாள்.

வெளியே போகலாமாக்கா? என்று யுவி கேட்க, கதவை திறந்து, இங்கேயே விளையாடணும். வேறெங்கும் செல்லக் கூடாது என்று சொல்லி அறைக்குள் நுழைந்து கதவை திறந்து வைத்து கண்ணீருடன் படுத்தாள்.

நிதின் நிலையத்திற்கு வர, சுஜியுடன் விஷ்வாவும் இருந்தான். நிதின் அவனை முறைத்து விட்டு, சுஜி நேரமாகுது கிளம்பணும் என்று இருவரையும் காரில் அழைத்து சென்றான்.

நளனும் மிதுனும் எழிலனை தாங்கியவாறு நடந்து வர, கையில் அவனது பையை எடுத்துக் கொண்டு ஒரு பொண்ணும் உடன் வந்தாள். அங்கே வந்து காரில் இறங்கியவர்களை திகைத்து பார்த்தான் எழிலன்.

விஷ்வாவையும் நிதினையும் ஒருவாறு பார்த்த எழிலன்..சுஜியை பார்த்து, அக்கா உங்களுக்கு எப்படி தெரியும்? கேட்டான்.

சட்டென சிந்தித்த மிதுன், எனக்கு சுஜி அக்காவையும் விஷ்வா சாரையும் தெரியும். அக்காவுக்கு நான் தான் போன் செய்தேன் என்றான். அவனை பார்த்து விட்டு, நிதினிடம் உங்களுக்கு எப்படி தெரியும்? கேட்டான்.

சுஜி தான் சொன்னா.

எல்லாரும் ஒரே இடத்திலா வேலை செய்றீங்க? அவன் கேட்க, அப்படி சொல்ல முடியாது. நீ வா தெரிஞ்சுப்ப என்றான் விஷ்வா.

அவனை பார்த்து அவனிடம் ஏதும் பேசாமல் நிதினிடம், கையை நீட்டி..”கங்கிராட்ஸ்” என்றான்.

என்ன? புரியாமல் எல்லாரும் பார்க்க, உங்க மேரேஜூக்கு என்றான் எழிலன்.

முதல்ல உட்காரு என்று அவனை அவர்களிடமிருந்து நகர்த்தி எழிலை உட்கார வைத்தான் நிதின். விஷ்வா முகம் சுருங்கியது. அவன் கையை பிடித்து அழுத்தம் கொடுத்த சுஜி..எழிலனிடம் கண்ணை காட்டினாள். அவன் அவளை பார்த்து விட்டு நிதினை பார்த்தான்.

நான் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலை. எனக்கு வேறொரு பொண்ணை பிடிச்சிருக்கு. இன்று குடும்பத்தோட பேச போறோம் என்றான் எழிலனிடம் நிதின்.

யார சொல்றீங்க? அவன் கையை எடுத்து விட்டு கோபப்பட்டான் எழிலன்.

வினு இல்லை. உனக்கு அதிரதன் நினைவிருக்கா? கேட்டான் நிதின்.

ம்ம்..நல்லா தெரியும். அவரோட பிரச்சனை முடிஞ்சதுல்ல. அப்புறம் ஏன் இன்னும் அவர் வெளிய வரலை? எழிலன் கேட்க, காரணம் இருக்கு என்ற நிதின் அவனோட தங்கை ஆத்விகாவை தான் கல்யாணத்துக்கு பேச போறோம் என்றான்.

புன்னகைத்த எழிலன் முகம் மாற, அக்காவை யாராவது பார்த்தீங்களா? எங்க இருக்கா? என்ன செய்றா? என்று அனைவர் முகத்தையும் ஏக்கமுடன் பார்த்தான்.

இல்ல எழிலா. எங்களுக்கு அவளை பற்றி ஏதும் தெரியலை. ஆனால் அவள் பாதுகாப்பா இருப்பான்னு தோணுது என்று நிதின் சுஜியை பார்த்தான்.

உங்க ப்ரெண்டு எங்க இருக்கார் தெரியுமா? எழிலன் நிதினிடம் கேட்க, அனைவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர் மிதுன் உட்பட..

யாரை கேட்கிறாய்? சுஜி கேட்க, அதிரதன் என்றான் அவன்.

அவனை தான் தேடிகிட்டு இருக்கோம் என்றான் நிதின்.

உங்க கம்பெனில்ல பிரச்சனை வந்தப்ப கூட பேசினாராமே? கேள்விப்பட்டேன்.

நீ எதுக்கு அவனை கேக்குற எழிலா? சுஜி கேட்க, உங்க யாராலையும் அக்காவை கண்டுபிடிக்க முடியலைல்ல. அவரிடம் உதவி கேட்கலாம்ன்னு நினைச்சேன்.

ட்ரேஸ் பண்ண கூட முடியலை. அவனை கண்டுபிடித்தால் சொல்கிறேன் என்றான் நிதின்.

வா..கிளம்பலாம் என்று விஷ்வா அழைக்க, நான் இவரிடம் தனியா பேசணும் என்று எழிலன் விஷ்வாவிடம் பேச கேட்டான்.

எல்லாரும் அவனை பார்த்து நகர்ந்து சென்றனர்.

இன்னும் என் அக்காவை தான் காதலிக்கிறீங்களா? எழிலன் கேட்க, “என்னால் கருவை கலைக்க முடியாது. இதோட என்னை கல்யாணம் பண்ணிப்பியா?” என்று விஷ்வா நேத்ரா கேட்டதை நினைத்து பார்த்தான்.

இல்லை. அவள் மீது காதல் இருந்தது உண்மை தான். ஆனால் இதுக்கு மேல முடியாது என்றான் கண்ணீருடன்.

ஏன் முடியாது? எழிலன் கேட்க, அம்மா கல்யாணம் பண்ணிக்க சொல்லி தொந்தரவு பண்றாங்க. வினு எங்க இருக்கான்னு தெரியலை. நானும் ரொம்ப டயர்டாகிட்டேன் என்றான் சோர்வுடன்.

பொண்ணு பார்த்துட்டாங்களா? எழிலன் கேட்க, இல்லை பார்த்துக்கிட்டே இருக்காங்க என்றான்.

உங்களுக்கு சுஜி அக்காவை பிடிக்குமா? எழிலன் கேட்க, விஷ்வா அவளை பார்த்தான். அவள் மிதுனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

தெரியல எழில். ஆனால் அவள் இப்பொழுதைக்கு கல்யாணம் பண்ணிக்க மாட்டா என்று அவளை பார்த்துக் கொண்டே கூறினான்.

ஏன் பண்ணிக்க மாட்டாங்க? என்று எழிலன் கேட்க, அவளுக்கு நடந்ததை விஷ்வா அவனிடம் கூறினான். எழிலன் திரும்பி சுஜியை பார்த்தான்.

என்ன எழில்? உன்னை பார்ப்பது போல் இருக்கா? விஷ்வா கேட்க, கண்ணீருடன் எழிலன் அவனை அணைத்து அழுதான். அவன் அழுவதை பார்த்து மற்றவர்கள் அவனிடம் வந்தனர்.

அவனிடம் என்ன சொன்ன? எதுக்கு அழுகிறான்? என்று நிதின் சினமுடன் விஷ்வாவிடம் கையை ஓங்கினான்.

வேண்டாம். அவர் ஏதும் சொல்லலை நிது என்றான் எழிலன். கையை கீழிறக்கிய நிதின், எப்படி அழைத்த?

நிது. அக்கா அப்படிதான கூப்பிடுவா என்று எழிலன் சொல்ல, அவனை அணைத்தான் நிதின். எனக்கு நெருக்கமானவங்க தான் இப்படி கூப்பிடுவாங்க என்றான்.

அதனால எதுக்கு இவ்வளவு எமோஸ்னல் ஆகுறீங்க? கேட்டான்.

கிளம்பலாமா? நேரமாகுது. நான் பசங்கள பார்த்துக்கணும். பொண்ணுங்க தனியா இருப்பாங்க.

தனியாவா? அக்கா எல்லாரும் எங்க போனாங்க? மிதுன் கேட்டான்.

அவங்க பேமிலைய பார்த்துட்டு வர்றதா போனாங்க. நைட் வந்திருவாங்க. பாட்டி இருக்காங்க. இருந்தாலும்..நாம கூட இருந்தா தான அவங்க பாதுகாப்பா இருப்பாங்க என்றாள் சுஜி.

எங்க போக போறோம்? எழிலன் கேட்க, எங்களோட நிலையத்துல தான் இந்த ஒரு மாசம் இருக்க போறீங்க என்று மிதுன் சொன்னான்.

அங்கேயா? என்று நளனை பார்த்தான் எழிலன். அவன் கையை உயர்த்தி, “எஞ்சாய்” என்று முணுமுணுத்தான். எழிலன் புன்னகைத்தான்.

நான் அங்கே தான் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன் சுஜி சொல்ல, மிதுன் சொன்ன அக்கா நீங்க தானா? என்று எழிலன் கேட்க, எல்லாரும் மிதுனை பார்த்தனர். இவர்களது பார்வை நளனுக்கு வித்தியாசமாக பட்டது. ஆனால் அவன் எதையும் கேட்கவில்லை.

அவர்கள் எழிலனை அழைத்து செல்ல, நளனும், மிதுனும், அந்த பொண்ணுடன் வகுப்பிற்கு சென்றனர்.

நிலையத்தில் ஜீவா பசியில் புலம்பிக் கொண்டு அமர்ந்திருந்தான். வெண்பாவும் மயூரியும் அவனை வேண்டுமென்றே அவன் முன் வந்து சாப்பாட்டை சாப்பிட்டு அதன் பெருமையை பாட, அவன் பொறுமை பறந்து அவர்களிடம் சாப்பாட்டை பிடுங்க, பாட்டி திட்டிக் கொண்டிருந்தார்.

வெண்பாவும் மயூரியும் சாப்பாட்டு தட்டை எடுத்து ஓடிக் கொண்டிருந்தனர். ஜீவா அவர்களை விரட்டிக் கொண்டிருந்தான்.

ஓடி வந்த வெண்பா விஷ்வாவை இடித்து, சாரி சார்..என்று அவன் பின் நின்று, காப்பாத்துங்க சார்..காப்பாத்துங்க என்று கத்தினாள்.

என்னடா பண்றீங்க? சுஜி கோபமாக கேட்க, அக்கா..அவன் எங்க சாப்பாட்டை திருட விரட்டுறான் என்று மயூரி சொல்ல, ஜீவா..யாரையும் கண்டுகொள்ளவில்லை..

ஏய், நெய்க்குழம்பு…நில்லு..என்று வெண்பாவிடம் கபடி ஆடினான். அவன் காதை பிடித்து விஷ்வா இழுத்தான்.

சார், என்னை விடுங்க. நான் சொல்வதை கேளுங்க என்று அவன் சொல்லிக் கொண்டே வெண்பா பின் நின்று கொண்டிருந்த நிதின் எழிலனை பார்த்து, சார், நீங்களா? உங்க காலுக்கு என்னாச்சு? கேட்டுக் கொண்டே எழிலன் அருகே வந்தான் ஜீவா.

வெண்பாவும் மயூரியும் அவனை திரும்பி பார்க்க, எழிலனும் அவர்களை பார்த்தான். வெண்பா தொண்டை ஏறி இறங்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஓடியதில் அவளுக்கு மூச்சு வாங்கியது.

ஜீவா எழிலனிடம் பேச, எழிலை உங்களுக்கு தெரியுமா? விஷ்வா கேட்டான்.

வெண்பாவுக்கு அன்று உதவியது இவரும், இன்னொரு சாரும் என்றான் ஜீவா.

எதுக்கு ஓடிக்கிட்டு இருக்கீங்க? என்று சுஜி கேட்டுக் கொண்டே வெண்பா கையிலிருந்த சாப்பாட்டு தட்டை பார்த்தாள்.

டேய், ஜீவா…இங்க வா..சுஜி அழைக்க, சார், அக்காவை உங்களுக்கு தெரியுமா? எழிலனிடம் கேட்க, தெரியும் என்றான்.

சாப்பாடு போட மாட்டேங்கிறாங்க என்று அழாத குறையாய்..போட சொல்லுங்களேன் என்றான். எல்லாரும் சுஜியை பார்த்தனர். கை விரல்களை சப்பியவாறு வெண்பா எழிலனிடம் வந்து, சார்..என்னாச்சு? ரொம்ப பெயினா இருக்கா? எப்படி இப்படி ஆச்சு? கேட்டிக் கொண்டிருக்க, நல்ல வாய்ப்பு. யாருமே பார்க்கலை என்று வெண்பா தட்டில் அவள் வைத்திருந்த மீதி அப்பளத்தை எடுத்து ஓடினான்.

டேய், ராஸ்கல்..என் சாப்பாட்டுல கை வைக்கிறியா? என்று சினமுடன் அவள் வேகமாக திரும்ப, அவளது கூந்தல் எழிலன் மீது பட, அவன் அவளை பார்த்துக் கொண்டே நிதின் மீது சாய்ந்தான்.

டேய், என்னையும் சேர்த்து தள்ளி விட்டுறாத? என்று நின்ற நிதின் எழிலனை பிடிக்க, அவன் வெண்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

எழிலா..என்று நிதின் சத்தமாக அழைக்க, அவனை பார்த்த எழிலன் நிமிர்ந்து நின்றான்.

மயூரி ஓரமாக அமர்ந்து வேக வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஓடிக் கொண்டிருந்த வெண்பா.. அய்யோ..என்னால முடியலக்கா என்று சுஜியிடம்  வந்து மூச்சு வாங்கி நின்று, அவனுக்கு சாப்பாடு போட்டுருங்க அக்கா. இவன் அளவுக்கு என்னால ஓட முடியாது. தடியன் என் அப்பளத்தை சாப்பிட்டான் என்று ஜீவாவை வெண்பா திட்ட..

தடியனா? என்று கோபமாக அவனிடம் வந்த ஜீவா முன் விஷ்வா வந்தான்.

சார், அவள் என்னை தடியன்னு சொல்றா?

எரும மாதிரி வளர்ந்துட்டு ஓடி பிடிச்சு சண்டை போடுறீங்க அவன் இருவரையும் திட்ட,

சார் என்னை எருமன்னு திட்டுறாரு என்று வெண்பா அழுதாள்.

நல்லா அழு..அக்கா..இவளும் மயூரியும் தான் சாப்பாட்டை காட்டி வெறுப்பேற்றினார்கள் என்று ஜீவா புகார் அளிக்க, அக்கா அவன் பொய் சொல்றான்..வேணும்ன்னா பாட்டிகிட்ட கேளுங்க என்று வெண்பா சொல்லி விட்டு, மயூ..நீயும் சொல்லு என்று அவளை பார்த்தாள்.

அடிப்பாவி..இங்க சம்பவம் நடந்துக்கிட்டு இருக்கு. என்னை விட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்க என்று அவளிடம் வர, அவள் சாப்பாட்டை வழித்து விழுங்கி விட்டு..

சாரி, வெள்ளெலி..என் வேலை முடிந்தது என்று அவள் சென்றாள். ஜீவா வெண்பாவை பார்த்து சிரித்தான்.

எதுக்குடா பல்ல காட்டுற? வெண்பா எரிச்சலாக கேட்க, அவள் உன்னை வெள்ளெலின்னு சொன்னது கூட பரவாயில்லை. அங்க பாரு..என்று தட்டை காட்ட, இவள் ஓடிய ஓட்டத்தில் சாப்பாடு கீழே கொட்டி விட்டது.

ஜீவாவிடம் வந்து, உன்னால தான் கொட்டிருச்சு என்று அவள் அடிக்க, அவன் அவளை மேலும் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான்.

எதுக்கு அவனுக்கு நீ சாப்பாடு கொடுக்கல? விஷ்வா சுஜியிடம் கேட்க, அவள் நடந்ததை சொன்னாள்.

சாப்பாடு மட்டுமல்ல இவனோட உறக்கத்தையும் சேர்த்து கட் பண்ணனும் என்றான் விஷ்வா.

சார், மாயாவுக்கு மட்டும் சாப்பாடு தாராங்க..என்று அவன் கேட்க, இந்த முறை இவனை விடும்மா. சாப்பிடட்டும் பாட்டி சொன்னார்.

கண்டிப்பா முடியாது. நாளை வரை சாப்பாடு கிடையாது என்று கண்டிப்புடன் சுஜித்ரா சொல்ல, அக்கா..நான் பாவம்ல்ல என்று ஜீவா முகத்தை பாவமாக வைத்தான்.

நீயாடா பாவம். மூஞ்சிய பாரு என்று வெண்பா திட்ட, உனக்கு வாய் ரொம்ப அதிகமாயிடுச்சு என்று ஜீவா அவள் முடியை பிடிக்க, எழிலன் உணர்ச்சி வசப்பட்டு ஏய்..என்று சத்தமிட்டான். எல்லாரும் அவனை பார்க்க, வெண்பா அவனது முடியை பிடித்து இழுத்து அவன் தலையை ஒரு வழி செய்தாள்.

ஏய், பைத்தியக்காரச்சி..விடுடி..அவன் கத்தி அவளை தள்ளி விட, அவள் எழிலன் மீது விழ, எழிலன் நிதின் மீது விழுந்து மூவரும் கீழே விழுந்தனர். ஆ…என்று எழிலன் கத்தினான். அனைவரும் வாயில் கை வைத்து பார்க்க, ஜீவா ஓடி வந்து வெண்பாவை தள்ளி விட்டு எழிலன் தோளில் கையை போட்டு தூக்கி விட்டான்.

அவனை முறைத்துக் கொண்டே எழிலன் எழ, சாரி சார் என்று நிதினை பார்க்க, அவன் படுத்தவாறே ஜூவாவை முறைத்தான்.

அக்கா, யார் இந்த அங்கிள்? என்னை இப்படி முறைக்கிறார்? ஜீவா கேட்க, சுஜி விழுந்து விழுந்து சிரித்தாள்.

அங்கிள், எழுந்திருக்கிறீங்களா? என்று சுஜி கேலியுடன் நிதினுக்கு கையை கொடுத்தாள்.

ஏன்டா சின்னப்பயலே, “என்னை பார்த்தால் அங்கிள் போலா தெரியுது?” நிதின் கோபமாக சுஜி கையை தட்டி விட்டு எழுந்தான். அவனை பார்த்த எழிலன்..நிது, அவனுக்கு உங்களை பற்றி தெரியாமல் கேட்டான் என்று அவனும் சிரிக்க..

எழிலா..நீயுமா? என்று அவனிடம் வந்து, உனக்கு நல்லா நேரம் போகும் என்றான்.

ஜீவா கையை எடுத்து விட்டு எழிலனை நிதின் ஓரிடத்தில் அமர வைத்து, உன்னை கொல்ல வந்தவனை பார்த்தாயா? கேட்டான்.

கொலையா? என்று வெண்பாவும் ஜூவாவும் அதிர்ந்து எழிலனிடம் வந்தனர். பாட்டி சுஜியை பார்த்தார்.

அவர்களை பார்த்தவன்..பார்த்தேன் நிது. ஆனால் இதற்கு முன் அவனை பார்த்ததில்லை. அவனை பற்றிய அடையாளத்தை கூறிய எழிலன்..அவனை தான் அரெஸ்ட் பண்ணிட்டாங்களே? கேட்டான்.

யாரோ பெரிய ஆள் சம்பந்தப்பட்டு இருக்கிறதா சொன்னாங்க. அதனால கவனமா இரு. நாங்க இங்க பாதுகாப்பிற்கு போலீஸ் யாரையாவது அரேஜ் பண்ணுறோம்.

சமீபமாக ஏதாவது யாருடனாவது பிரச்சனை வந்ததா? நிதின் கேட்க, காலேஜ் சேர்ந்ததிலிருந்தே படிப்பை தவிர இதுவரை எதையும் யோசித்ததில்லை நிது என்று வெண்பாவை பார்த்தான். அவன் கவனம் வெண்பா மீது இருப்பதை கவனித்த நிதின்..

அப்படியா? வேற எதிலுமே கவனம் இல்லையா? நிதின் கேட்க, அவன் அதை தானடா சொன்னான் விஷ்வா சொல்ல, நான் உன்னிடம் பேசவில்லை என்று நிதின் கோபமாக..

இதுக்கெல்லாமாடா சண்டை? நீங்க இருவருமே மாறவேயில்லை சுஜி சொல்ல..நீ ரொம்ப மாறிட்ட பாரு என்ற நிதின், “நீ நடந்ததை நினைச்சு கஷ்டப்படாம இரு” என்றான். அவள் எழிலனை பார்த்தாள்.

நிது சொன்னார்க்கா..வருத்தப்படாதீங்க என்று எழுந்து, அவன் தவற நிதினும் ஜீவாவும் அவனை பிடித்தனர்.

கால் ரொம்ப பெயினா இருக்கா? சுஜி அவன் காலை தொட, அவன் விலகி அக்கா..எழுந்திருங்க..முதல்ல இவங்க பிரச்சனைய முடிங்க என்றான்.

என்னத்த முடிக்க? வெண்பா, மயூரி உள்ள போங்க.

அக்கா..யுவி நல்லா இருக்கானா? நிலு அவனை தேடுறான் என்றாள் வருத்தமுடன் வெண்பா.

அவன் சீக்கிரம் சரியாகி நம்மிடம் வந்திருவான். எல்லாரும் உள்ள போய் வேலைய பாருங்க என்று அவர்களை அனுப்ப, ஜீவா பாவம் போல் சுஜியை பார்த்தான்.

ஓய்..என்ன? உனக்கு தனியா சொல்லணுமா? அவள் கேட்க, அமைதியாக உள்ளே சென்றான் ஜீவா.

சுஜி பார்த்துக்கோ. வேலை இருக்கு என்று நிதினும், விஷ்வாவும் கிளம்பினர்.

தேவா..இங்க வா என்று சுஜி அழைக்க, ஜீவா போல் ஒருவன் வந்தான். இந்த அண்ணாவை உள்ள கூட்டிட்டு போ..என்று எழிலனது பையை எடுத்து அவர்கள் பின் சுஜி சென்றாள்.

Advertisement