Advertisement

அத்தியாயம் 10

அதிரதன் நிதினிற்கு கால் செய்ய அவன் எடுக்கவில்லை.

என்ன தான் செய்றடா? அவன் சத்தமிட, “சார், நான் கால் பண்றேன்” என்று வினு நேத்ரா நிதினிற்கு அழைப்பு விடுக்க, பசங்களும் அதிரதனும் அவளை பார்த்தனர்.

போனை எடுத்த நிதின், வினு டார்லிங் “நீ என்னை எதுக்கு வேண்டாம்ன்னு சொன்ன? என்னை பார்த்தால் பாவமாக இல்லையா?” என்று கேட்டான் உலறலுடன்.

டார்லிங்ன்னு சொன்ன பல்ல உடைச்சிருவேன் என்று சுருதி குறைந்த நேத்ரா, டேய்..குடிச்சிருக்கியா? கேட்டாள்.

குடிச்சிருக்கானா? என்று அதிரதன் சத்தமிட, வேகமாக அவனிடம் வந்து அவன் வாயை அவள் கையால் அழுந்த மூடினாள்.

போனை நகர்த்தி சார், கொஞ்சம் அமைதியா இருங்க என்று அவனை பார்க்க, அவன் அவளது கையை பார்த்தான். விரைந்து விலகிய நேத்ரா “சாரி சார்” என்று அவனை தவிர்த்து,

எரும..எரும..உன்னோட பேமிலி..பேமிலின்னு சொல்லுவ. அவங்க எல்லாரும் எவ்வளவு பெரிய பிரச்சனையில இருக்காங்க. அவங்களுக்கு துணைக்கு நிற்காம ஏன்டா என் உயிர வாங்குற?

வினு..நான் கொஞ்சம்..கொஞ்சமா..குடிச்சிருக்கேன்.

அய்யோ..லூசு, அர மெண்டல், நான் பேசுவதே உன் காதில் ஏறலையா? சத்தமிட்ட நேத்ரா, பைத்தியமே நீ எல்லாரையும் போல என்னோட ப்ரெண்டு தான். உன்னையெல்லாம்..என்று கையை கோபமாக இறுக மடக்கினாள்.

இப்ப மட்டும் என் முன்னாடி வந்துருந்த உன்னை அடிச்சே கொன்றுவேன் கோபமாக சத்தமிட்டாள். எல்லாரும் வியந்து அவளை பார்த்தனர்.

வினு, ஆத்விக்கு என்னை பிடிக்கும்ன்னு எனக்கு தெரியாது. “டார்லிங், எனக்கு அவளை பிடிக்கும்” என்றான்.

வாட்? என்று அதிரதனை நேத்ரா பார்த்தாள். அவன் புருவத்தை உயர்த்த..ஹே..நிது..என்ன சொன்ன? மறுபடியும் சொல்லு என்று போனை ஸ்பீக்கரில் போட்டு அதிரதன் முன் வந்து போனை காட்டினாள்.

ஓய், டார்லிங் நான் தான குடிச்சிருக்கேன். நீ குடிச்சிருக்கியா? அடுத்த முறை இருவரும் சேர்ந்து குடிக்கலாமா? நிதின் கேட்க,

ஹா..என்னையா குடிக்க கூப்பிடுற? மவனே என் முன்னாடி வந்த நீ செத்தடா.

ஆஆஆ…என்று சத்தமிட்டு நிதின் அழ, பசங்க எல்லாரும் சிரித்தனர்.

“டேய், வாய மூடுங்கடா” என்று நேத்ரா பசங்களை அரட்டி விட்டு, இப்ப ஏதோ சொன்னேன்ல்ல அத சொல்லு.

என்ன சொன்னேன்? அவன் யோசிக்க, அதான் ஆத்வின்னு ஏதோ சொன்னீயே? என்று நேத்ரா கேட்க, அதிரதன் நேத்ராவை பார்த்தான்.

மீண்டும் நிதின் அழ, டேய் என்னோட பொறுமைய சோதிக்காதடா என்ற நேத்ரா..சொல்லித் தொலை. எனக்கு நிறைய வேலை இருக்கு.

வேலையா?

இல்ல உன்னோட மூஞ்சி. இப்ப நீ சொல்லலை. நான் நீ இருக்கிற இடத்துக்கே வந்து உன்னை அடிப்பேன்.

அவன் மீண்டும் அழுதான். சரி, நீ ஆத்வி பத்தி எதுவுமே சொல்ல வேண்டாம் என்றாள் எரிச்சலாக.

வினு டார்லிங்..

ஷ்..டார்லிங்குன்னு சொல்லாத நேத்ரா சொல்ல, உன்னை பார்க்கும் முன்னிருந்தே எனக்கு ஆத்விய தெரியும்.

அதுதான் எல்லாருக்கும் தெரியுமே? சொல்லறத ஒழுங்கா சொல்லித் தொலை என்றாள்.

எனக்கு சின்ன வயசிலயே ஆத்விய ரொம்ப பிடிக்கும். ஆனால் வளர்ந்த பின் தான் நா செய்றது தப்புன்னு தெரிஞ்சது. அவளோட சித்தி பேசியதை வைத்து நான் தவறு செய்வதாக உணர்ந்தேன்.

நந்தும்மாவும் சாரும் ரதனுக்கு என்னவெல்லாம் செய்வாங்களோ எல்லாமே வித்தியாசம் பார்க்காமல் செய்வாங்க பழகுவாங்க. நான் அவளை விட்டு தள்ளி இருக்க தான் விடுதியில் வந்து சேர்ந்தேன். பின் தான் உன்னை பார்த்தேன். உன்னை எனக்கு பிடித்ததன் காரணமே தீக்சி தான். அவளுக்கு அப்படியே எதிராக இருப்பாய். அன்று அவளுக்கு குடுத்தியே ஒரு பஞ்ச் அதில் தான் விழுந்தேன்.

வாட்? அவள் விழிக்க,

ம்ம்..எனக்கு உன்னோட அமைதி, அளவான பேச்சு, தைரியம், உன் தம்பி மேல் நீ வைத்திருந்த பாசம், சுஜிக்காக அன்று அந்த முரட்டு சீனியர் அகரன் முன் நின்றது..இன்னும் சொல்லலாம். ரொம்ப பிடிக்கும் என்று நிதின் சொல்ல அவள் கண்கள் கலங்கியது.

ஆனால் வினு, நீ கூட என்னை வேறொருவனாக தான பார்க்கிறாய்? அந்த விஷ்வாவுடன் என்னை சேர்த்து திட்டிட்ட. நீ சில விசயங்களில் மாறி இருக்க.

யாரு வினு அவன்? சொல்லு? அவனை சும்மா விடக்கூடாது வினு. நீ சொல்ல மட்டும் செய். நான் அவனை பார்த்துக்கிறேன். ஆனால் அவனை மட்டும் நீ மறைக்கல. நீ பெருசா எதையோ மறைக்கிற? சொல்லு வினு. வேறென்ன பிரச்சனை? ஆத்வி இன்னும் என் மனசுல தான் இருக்கா. ஒரு ப்ரெண்டா கெல்ப் பண்றேன்..என்று சீரியசாக பேசிய நிதின் உவாக்..உவாக்..என்று வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு, கண்ணீரை துடைத்து..

நிது, நீ இப்ப எங்க இருக்க? வினு கேட்க, ஓர் ஆணின் குரல் கேட்டது.

அண்ணா, அவன் எங்க இருக்கான்? நேத்ரா கேட்க, யாரும்மா இந்த பையன் பழக்கமில்லையோ? சின்ன பாட்டில்ல பாதி தான் குடிச்சான்.. கூப்பிட வரும் போது கையில பணம் எடுத்து வாங்க. அவனிடம் பணமேயில்லை என்றார்.

பணமில்லையா? அதிரதன் கேட்க, அட..ஆமாப்பா, பணமில்லாமல் வெறும் கையை வீசிட்டு வந்திருக்கான். இதுல வாந்திய வேற எடுத்து இடத்தை பாழாக்கி வச்சிட்டான் என்று அவர் இடத்தை கூற, வாரோம் சார் என்றான் அதிரதன்.

அவன் நேத்ராவை பார்க்க, அவள் விஷ்வாவிற்கு போன் செய்ய, எடுத்தவுடன்.. சொல்லு வினு?

ஒரு கெல்ப் வேணும்டா என்றாள்.

அதான பார்த்தேன். உனக்கு தேவை என்றவுடன் தான கால் பண்ற? நான் கெல்ப் பண்ணனும்ன்னா..நீ என்னோட ஹாஸ்பிட்டல் வரணும்? என்றான்.

முகத்தை கடுகடுவென வைத்த நேத்ரா, “இடியட்” என்று கோபமாக கூறி விட்டு அலைபேசியை வைத்தாள்.

என்னாச்சுக்கா? விஷ்வா சாருக்கா கால் பண்ணீங்க? காவியன் கேட்க, ஆமா, அவனை விடு என்ற நேத்ரா அதிரதனை பார்த்து, நிதுவை உங்களுக்கு தெரிஞ்ச பசங்க யாரிடமாவது சொல்லி அழைத்து செல்ல சொல்லுங்களேன் என்றாள்.

அதிரதனை போனை எடுத்து, அதீபனிடம் விசயத்தை கூற, அவன் அங்கு சென்றான்.

உஃப் என்று காற்றை ஊதி விட்டு அமர்ந்தாள் நேத்ரா. அவளுக்கு எதிரே அமர்ந்த அதிரதன், நான் உன்னை தப்பா நினைச்சிட்டேன் சாரி என்றான்.

அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையில்லை சார். சார், நிதுவை நீங்க உங்க தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்களா? நேத்ரா கேட்க, அவன் சிரித்தான்.

எதுக்கு சார் சிரிக்கிறீங்க? கிருஷ்ணன் கேட்க, எங்க வீட்ல எல்லாருக்கும் அவனை பிடிக்கும். சொல்லப் போனால் அவன் இல்லாமல் அவர்கள் இல்லை. என்னை பார்க்காமல் கூட இருந்து விடுவார்கள். ஆனால் வாரம் ஒரு முறை கண்டிப்பாக அவன் வீட்டில் இருக்கணும் என்றான் புன்னகையுடன்.

சார், நீங்க தான் அப்படி சொல்றீங்க? சுபிர்தன் பேச, நேத்ரா அவனை முறைத்தாள். அவன் பேசுவதை நிறுத்தினான்.

“என்னாச்சு சொல்லு?” அதிரதன் கேட்க, சுபிர்தன் நேத்ராவை பார்த்தான்.

எதுக்கு அவள பாக்குற? இங்க வா..என்று அவனை அருகே அமர வைத்து சுபிர்தனை அவன் பக்கம் திருப்பினான் அதிரதன்.

சார்..என்று அவன் தயங்க, இல்ல உங்க வீட்ல இருக்கிற ஒருத்தவங்களுக்கு மனுசுங்க மேல கொஞ்சமும் மரியாதையே இல்லை. உங்க ப்ரெண்டு சொன்னாரே சித்தி என்று அவன் மீண்டும் நேத்ராவை பார்க்க, அவள் முறைத்தாள்.

எதுக்கு இப்ப அவனை முறைக்கிற? நீ சொல்லு..உனக்கு எப்படி எங்க சித்தியை தெரியும்? அதிரதன் கேட்க, அவன் நிர்மலா நேத்ராவிடம் நடந்து கொண்டதையும், நேத்ரா பதிலுக்கு செய்ததையும் சொல்ல அதிரதன் புன்னகையுடன் நேத்ராவை பார்த்தான்.

ஏன் சிரிக்கிறீங்க?

இல்ல, சில நேரம் ரொம்ப அமைதியா இருக்க. கோபம் வந்தால் எப்படி பட்டாஸை பொரிந்து தள்ளுற கேலியுடன் அவன் வினவ, அவனை முறைத்தாள்.

உங்க சிரிப்பை பார்க்க நேரமில்லை. உங்க குடும்ப விசயத்தை நீங்களே பார்த்துக்கோங்க என்று எழுந்த நேத்ரா, வாங்கடா கவரை பிரிங்க. நிறைய கர்டைன்ஸை மாட்டணும்.

அக்கா,..சில பெயிண்டிங்ஸ் வாங்கி சுவற்றில் மாட்டி இருந்தா நல்லா இருக்கும் மிதுன் சொல்ல, ஆமாடா..வேலை செய்ய வந்த இடத்துல நாம இதெல்லாம் வாங்கக் கூடாது. அதெல்லாம் ஓனர் தான் பார்த்துக்கணும் என்று அதிரதனை பார்த்தாள். அவன் அவளை பார்த்தாலும் அமைதியாக இருந்தான்.

சொல்ற வேலைய மட்டும் பாருங்கடா என்று நேத்ரா சொல்ல, அவளுக்கு மற்றவர்கள் உதவினர். அதிரதன் காவியனை பார்த்துக் கொண்டே இருந்தான். அவனருகே வந்த யுவன்..அங்கிள் எதுக்கு அண்ணாவை எப்பொழுதும் முறைக்கிறீங்க? கேட்டான்.

நான்..என்று சிந்தித்த அதிரதன், எனக்கு தெரிந்த ஒருவர் போலே இருக்கிறான் என்று காவியனை பார்த்தான்.

தெரிந்தவர் போல் இருந்தால் முறைக்கணுமா?

எனக்கு பிடிக்காத ஒருவர் தான் என் கண்முன் வருகிறார். அதான் முறைக்கிறேன் என்றான்.

காவியன் அண்ணா, ரொம்ப ரொம்ப நல்லவங்க. முறைக்காதீங்க என்றான். அவனை பார்த்து விட்டு எழுந்து உள்ளே சென்றான் அதிரதன்.

அதீபன் மறைந்து மறைந்து நிதினை அவனறைக்கு அழைத்து வந்தான். அம்மாகிட்ட மாட்டி இருந்தேன் செத்தேன். சும்மாவே இவனை அவங்களுக்கு பிடிக்காது. நான் அழைத்து வருவதை பார்த்தால் என்னை திட்டி தீர்த்து விடுவார் என்று புலம்பியவாறு அதீபன் நிதினை பார்த்துக் கொண்டான்.

எல்லா வேலைகளையும் முடித்த மிதுன், சுபிர்தன், கிருஷ்ணா, அருள் அனைவரும் அறையில் சென்று படுத்து விட, நேத்ரா ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்ய சென்றாள்.

காவியன் மட்டும் தனியே அமர்ந்திருந்தான். யுவனும் அவர்களுடன் தூங்கி விட்டான். சமையல் வேலையை முடித்து அனைவரையும் பார்த்த நேத்ரா, அதிரதனுக்கு டீயையும், ஸ்நாக்ஸையும் எடுத்து வைத்து விட்டு காவியனுக்கும் அவளுக்கும் எடுத்துக் கொண்டு வெளியே வந்து அவனருகே அமர்ந்தாள். அவள் பின் வந்த அதிரதனும் இருவரையும் கவனிக்க ஆரம்பித்தான்.

“சன் செட்” நல்லா இருக்குல்ல காவியா நேத்ரா கேட்க, அவனிடம் பதிலில்லை. அவனை திருப்பிய நேத்ரா..இன்னும் நீ அதையே நினைச்சுக்கிட்டு இருக்கியா? அதட்டினாள்.

“எப்படிக்கா ஒரே நாளில் எல்லாத்தையும் மறக்க முடியும்?” என்று கேட்டுக் கொண்டே அவன் அழுதான்.

காவியா..அழுறியாடா? ஏன்டா, இதுக்கு தான் முதல்லவே சொன்னேன் கேட்டியா? இந்த காதல் எந்த அளவு சந்தோசப்படுத்துதோ? அந்த அளவு அழ வைக்கும். உனக்கு மட்டும் பிடிச்சா போதுமா? அவளுக்கும் பிடிக்க வேண்டாமா?

என்றாவது ஒரு நாள் அவளுக்கு என்னை பிடிக்கும்ன்னு நினைச்சு தான் சொல்லாம இருந்தேன். எங்களுக்கு யாரும் தான் இல்லை. காதலிக்க கூட கூடாதா? என்று அவன் அழ, நேத்ரா அவனை அணைத்து அவள் கண்ணில் வழிந்த கண்ணீரை அவனிடம் மறைத்தாள்.

அவளை அவளே சமன் செய்து கொண்டு, ப்ளீஸ் அழாதடா. கஷ்டமா இருக்கு நேத்ரா சொல்ல, கண்ணீரை துடைத்து அவளை விலக்கினான்.

மாயாவிற்கு அவனை பிடிக்க, தன்வந்த்திடம் என்ன தான் இருக்கு? எப்ப பாரு திட்டிக்கிட்டே இருக்கான். அவளை அவமானப்படுத்திக்கிட்டே இருக்கான்.

காதல் நம்முள் கலந்த உணர்வு. அது யார் மேல் எப்ப வரும்ன்னு சொல்ல முடியாது. அவளுக்கு அவன் மீது வந்ததில் அதிசயமில்லை.

இல்லக்கா, அவன் குணத்திற்கு மாயா ரொம்ப கஷ்டப்படுவா?

ம்ம்..நீ சொல்றதும் சரி தான். அவள் கஷ்டப்பட்டாள், கஷ்டப்படுகிறாள். இது அவள் விருப்பம். காதல் சொல்ல முடியாத உணர்வு. அவளுக்கு அவன் மீது ஏதோ ஈர்ப்பாக இருக்கலாம். இல்லை தன்வந்திடம் நம்மால் காண முடியாத குணத்தை அவள் கண்டிருக்கலாம்.

காவியா, இத்தனை நாள் அவளிடம் பேசிட்டு காதலை வைத்து பேசாம மட்டும் இருந்திருறாத. அவ ரொம்ப கஷ்டப்படுவா? நிதின் பேசியதை பார்த்தேல. அவன் மட்டுமல்ல..விஷ்வா என்னிடம் சின்சியரா தான் இருக்கான்னு புரியுது. என்னால இருவரையும் ப்ரெண்டுன்னு தாண்டி போக முடியலை. நிதினை கூட சமாளிக்க முடியும். ப்ரெண்ட்ஷிப் மெயின்டைன் பண்ணிடலாம். ஆனால் இந்த விஷ்வாகிட்ட ரொம்ப கஷ்டம். பிடிவாதம் அவனுக்கு அதிகம். இப்ப போன் செய்தப்ப கூட ஓவரா பேசுறான்.

அக்கா, சார்கிட்ட நான் பேசவா?

அதெல்லாம் தேவையில்லை. என்னோட ப்ரெண்ட்ஸ நான் பார்த்துப்பேன். நீ மாயா மேலுள்ள காதலை விடுத்து அவளிடம் சாதாரணமாக பேசி பழகு. கஷ்டமா இருந்தாலும் அது தான் இருவருக்குமே நல்லது என்று அவனை பார்த்தாள்.

நான் முயற்சி செய்கிறேன் அக்கா..

டீயை குடி. ஆறப் போகுது என்றாள்.

அதிரதன் உள்ளே கிளம்ப, காவியனின் கேள்வி அவனை உள்ளே செல்ல விடாமல் நிறுத்தியது.

ஒருவாய் வைத்த காவியன் நேத்ராவை பார்த்து, அக்கா நீங்க காதலிச்சிருக்கீங்களா? அவன் கேட்க, அவள் கையில் இருந்த தம்ளரை இறுக பற்றினாள்.

என்னாச்சுக்கா? தப்பா ஏதும் கேட்டுட்டேனா? காவியன் கேட்க, நிதானமான நேத்ரா காதல்ன்னு சொல்ல முடியாது. கிரஸ் இருந்தது.

யாருக்கா அது? தயவு செய்து உங்க கணவன்னு சொல்லீடாதீங்க?

அவள் புன்னகையுடன், என்னோட கணவன்னு நீ நினைக்கிறியா?

இல்ல..இருந்தாலும்..என காவியன் இழுத்தான்.

எனக்கு அவன் மீது காதல் இருந்தால் அவன் என்ன செய்தாலும் எதிர்த்து கேள்வி கேட்டு அவனருகே யாரையும் நிற்க கூட விட மாட்டேன். அம்மா, அப்பாவுக்காக நடந்த திருமணம். முதலில் அவன் யாரென்று கூட தெரியாது.

அக்கா..அந்த ஆள விடுங்க. நீங்க கிரஸ்ஸூன்னு சொன்னீங்களே? அவர் யார்? என்ன செய்கிறார்? அவர் எப்படி சொல்லுங்க?

எதுக்கு உனக்கு?

உங்களுக்கு செட் பண்ணலாம்ல.

என்னோட சூழ்நிலை புரிந்தும் கல்யாணத்தை பற்றி பேசாத காவியா.

அக்கா, இதனால ஒன்றுமில்லை. சும்மா தான கேட்கிறேன்.

போ..நான் உள்ளே போறேன் என்று நேத்ரா எழ, அவளது கையை பிடித்து நிறுத்திய காவியன், அக்கா..நான் எதுவும் செய்யலை. நீங்க சொல்லீட்டு மட்டும் போங்க.

அவள் அவனை முறைக்க, ப்ளீஸ்க்கா..என்றான்.

அவள் அமர்ந்து சொல்ல ஆரம்பிக்க, அங்கிள் இங்க என்ன பண்றீங்க? குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர். அதிரதனை பார்த்து நேத்ரா எழுந்தாள்.

சார், எதுவும் சொல்ல மாட்டார். நீங்க என்னிடம் தான சொல்றீங்க? சொல்லுங்க என்று அவளை அமர வைத்தான். யுவன் நேத்ராவிடம் வந்து அமர்ந்து அவளை பார்க்க..அவள் தயக்கமுடன் காவியனை பார்த்தாள். அதிரதனும் அவர்கள் முன் வந்து அமர்ந்தான்.

சார், நீங்க உள்ள போங்க..நேத்ரா கூற, “இது என்னோட வீடு எங்க வேண்டுமானாலும் நான் அமர்வேன்” என்று யுவன் அருகில் வந்து அமர்ந்தான்.

யுவனும் காவியனும் அவனை பார்க்க, என்ன இவர் புதுசா நடந்துக்கிற மாதிரி இருக்கே? யாரும் அருகே சென்றால் கூட எழுந்து சென்று விடுவார். இப்ப ஏதோ..வித்தியாசமாக இருக்கே என்று மனதினுள் பேசுகிறேன் என்று எண்ணி வெளிப்படையாக நேத்ரா சொல்ல, நான் எப்பொழுதும் அதே போல் இருக்க முடியுமா? அதிரதன் கேட்க,

சார்..என்று அவனை பார்த்து எழுந்தாள்.

“சும்மா இருங்க சார்” என்ற காவியன் அவனை கண்டுகொள்ளாது, அக்கா..சொல்லுங்க என்றான்.

யுவன் இருக்கான். எப்படி சொல்றது?

யுவி காதை மூடிக்கோ காவியன் சொல்ல, அவன் காதை மூடினான். அவன் கையை எடுத்து விட்ட நேத்ரா, என்ன சொல்லணும்?

யாரு? எப்படின்னு சொல்லுங்க?

உன்னை நம்பி யாருன்னு சொல்ல முடியாது. நாங்க ஒரே கிளாஸ் தான். ரிசர்வ் டைப் தான். அதிகமா பேச மாட்டான். அதனால பிடிக்கும் போதுமா? என்று நேத்ரா எழ,

அக்கா,..என்று காவியன் அவளை பிடித்து அமர வைத்து, எப்படி இருப்பார்ன்னு சொல்லுங்க?

அப்ப கேக்குறியா?

அப்படின்னா..இப்ப அவரை பார்த்தீங்களா?

அய்யோ, வாயை விட்டுட்டோமே? என்று வாயில் கை வைத்தாள். அதிரதனும் ஆர்வமுடன் கவனித்தான்.

அக்கா, பார்த்தீங்களா?

புருவத்தை சுருக்கியவள்..புன்னகையுடன் ஆம் என்றாள்.

சரி, இப்ப எப்ப பார்த்தீங்க? எங்க பார்த்தீங்க? எப்படி இருக்கார்?

அவனுக்கென்ன நல்லா தான் இருக்கான். நான் டிவியில தான் பார்த்தேன்.

நடிகரா? அவன் கேட்க,

இல்ல..இல்ல..

யாருக்கா?

ஏய், நான் தான் யாருன்னு சொல்ல மாட்டேன்னு சொன்னேன்ல.

யாருன்னு சொல்ல வேண்டாம். ஹைட், வெயிட்.. அப்புறம்..காவியன் கேட்க,

காவியா போதும். அவன் உயரமா இருக்கான். வெயிட்லாம் இல்லை. எனக்கு சொல்லத் தெரியாது. என்னை விடுடா..

அக்கா, மாமா..அங்கிள் மாதிரி இருப்பாரா? என்று அதிரதனை காட்டி யுவன் கேட்க, யுவி இவ்வளவு நேரமா கேட்டுக்கிட்டா இருந்த? மாமாவா? என்று அவனிடம் கோபமாக வந்தாள்.

அக்கா, வேணாம் என்று அவன் உள்ளே ஓட, செல்ல இருந்தவளை தடுத்த அதிரதன், அவன் கேட்டதுக்கு பதில் சொல்லீட்டு போ..என்றான்.

அவனை பார்த்து காவியனை பார்க்க, சார் உங்கள மாதிரின்னு சொல்ல முடியாது இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனால் உங்களை விட ரொம்ப அழகா இருந்தான் என்று சொல்லி விட்டு அவள் உள்ளே செல்ல,

அக்கா, ஸ்கூல்ல படிச்சவரா? காவியன் கேட்க, ஆமாம் என்று அவள் மறைந்தாள்.

காவியன் அதிரதனை பார்க்க, அவளுக்கு என்ன தைரியம்? என்னை விட அழகா இருப்பானாமே? அவன் கோபமாக கேட்க,

உங்களுடன் தானே அக்கா படிச்சாங்க. உங்களுக்கு அவரை தெரியுமா? காவியன் கேட்க, எனக்கு அவளையே தெரியாது. அவளோட கிரஸ்ஸ எனக்கு எப்படி தெரியும்? அதிரதன் கேட்க,

உங்களுக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியும். நான் கேட்டது உங்களை விட அழகான பசங்க உங்களுடன் படித்திருந்தால் அவங்க லிஸ்ட் தாங்களேன்.

என்னை விட அழகா யாரும் எனக்கு தெரியாது என முறைத்து விட்டு அவன் சென்றான். கேட்டதுக்கெல்லாம் முறைக்கிறார்?

போங்க சார், போங்க..நான் கேட்க வேண்டியவங்களிடம் கேட்டு தெரிஞ்சுக்கிறேன் என்று காவியனும் உள்ளே வந்தான். அவள் செய்து வைத்ததை சாப்பிட்டு விட்டு பசங்க நேத்ராவிடம் ஆயிரம் பத்திரம் சொல்லி விட்டு கிளம்பினர். அவளுக்கு பசங்க இருந்தவரை அதிரதனுடன் இருக்க தயக்கம் கூட இல்லை. இப்பொழுது அதிரதனுடனான தனிமை பயத்தை வர வைத்தது. அதிரதன் என்ன தான் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவன் யாராக இருப்பான்? என்று யோசித்துக் கொண்டே இருந்தான்.

இரவு குளித்து விட்டு அதிரதன் கதவை திறக்க, ஓடி வந்த யுவன் அதிரதன் காலை பிடித்துக் கொண்டு அவன் பின் ஒளிந்தான். அவனை விரட்டி வந்த நேத்ரா யுவனை குறி வைத்து வந்ததில் அதிரதன் மீது மோத அவளது கம்மல் அவனது செயினில் மாட்டியது.

ஷ் ஆ…அவள் சத்தமிட்டுக் கொண்டே அவன் சட்டையை இறுக பற்ற, அவன் அவளை பார்த்தான்.

சார், நகராதீங்க..என்று அவள் எடுக்க முயன்று கொண்டிருக்க, அவளது கையை பிடித்து நிறுத்திய அவன் குனிந்து அவளது கம்மலை எடுத்து விட, அவன் குனிந்தே இருந்தான். அவள் நிமிர்ந்து அவனை பார்க்க இருவர் இதழ்களும் உரசும் நெருக்கம் வந்தவுடன் பதறி விலகினாள். அவன் பார்வை மாறுபட்டு அவள் மீது படிவதை பார்த்த நேத்ரா, யுவி..வா..என்று அழைக்க, நான் வந்தா அடிப்ப..என்று அவன் பாவமாக அதிரதனை பார்த்துக் கொண்டே கையிலிருந்த கேரட் அல்வாவை வாயில் வைத்தான்.

ஏய்..என்று சத்தமிட்ட நேத்ரா அதிரதனை கண்டு கொள்ளாமல் யுவியை பிடித்து இழுத்து தூக்கினாள். காவியா..அக்கா என்னை தூக்குறாங்க என்று அவன் கத்தினான்.

யுவி டிராமா பண்ணாத? காவியன் இங்க இல்லைன்னு தெரியும்ல. உன்னை சாப்பிடக் கூடாதுன்னு சொன்னேன்ல. அது சாருக்கு மட்டும் தான் என்று அவள் கூற,

“ஒரு ஸ்பூன் தான சாப்பிட்டான்?” அதிரதன் கேட்க, அவளிடமிருந்து இறங்கிய யுவன் அதிரதனிடம் ஏற, யுவி சாரை தொந்தரவு செய்யாத சத்தமிட்டாள்.

“சின்ன பையன் தான” என்று அதிரதன் யுவியை தூக்கினான். அவள் அதிரதனை ஆச்சர்யமுடன் பார்த்தாள்.

சார், உங்களுக்கு சின்ன பசங்களே பிடிக்காதே?

அது எப்படி உனக்கு தெரியும்?

“உங்களை பற்றி இல்லாத நியூஸ்ஸா?” அவள் கேட்க, அவன் முகம் மாறியது.

சாரி சார், நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை. எல்லாத்தையும் நான் நம்பமாட்டேன். என் மனசுக்கு சரின்னு தோன்றியதை மட்டும் தான் நம்பினேன்.

உன் மனசுக்கு என்னை பற்றி என்ன தெரியும்?

சார், நான் யாரை பார்த்தாலும் ஆழ்ந்து கவனிப்பேன். உங்களுக்கு உங்க பேமிலி ரொம்ப பிடிக்கும். ஆனால் அதிகமா பக்கம் செல்ல மாட்டீங்க. உங்களோட கோபமான முகம் எந்த சின்ன பிள்ளைகளையும் கண்டிப்பாக உங்களருகே நெருங்க விடாது.

சரியா கணிக்கிறியே? ஆனால் இவன் என்னிடம் வாரான் என்று யுவனை பார்த்தான் அதிரதன்.

சார், நாங்க வந்ததிலிருந்து உங்களுடைய பழைய முகம் தெரியவில்லை. நார்மலா பேசுறீங்க? சிரிக்கிறீங்க? கேர் பண்ணிக்கிறீங்க? இது இருந்தாலே எல்லாருக்கும் பிடிக்கும். அதனால் யுவியும் உங்களிடம் வாரான். நீங்க அவனிடமே பேசிப் பாருங்க என்றாள்.

அப்படியா? என்று அதிரதன் யுவியை பார்த்தான். அவன்தலையசைக்க, யுவி இங்க வா..என்று நேத்ரா அருகே வர, ஆ..வென யுவன் கத்தினான்.

நேத்ரா புன்னகையுடன் ஷ்..யுவி கத்தாத என்று அதிரதனை நெருங்க அவனுக்கு படபடவென அடித்தது. அதிரதன் கையிலிருந்த யுவி வயிற்றில் அவளது மென்மையான கைகளால் கிச்சுகிச்சு மூட்ட யுவி சிரித்துக் கொண்டே அவளிடம் தாவினான். யுவியை அதிரதனிடமிருந்து வாங்கும் போது அவன் கையையும் இழுத்ததை மறந்து இருவரும் விளையாட, அதிரதன் கை யுவியுடன் நேத்ரா உடலில் பட்டது. அவன் கையை இறுக மடித்துக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

தற்செயலாக அவனை நெருக்கமாக பார்த்த நேத்ரா பயந்து நகர, அவன் அவள் மீது விழ வந்தவன் அவனை அவனே சரி செய்து கொண்டு அவன் கையை இழுக்க, நேத்ரா அவன் மார்பில் முட்டி நகர்ந்து விழ சென்றாள்.

யுவி பயந்து கத்த, அதிரதன் அவளை இடுப்போடு அணைத்து அவளை இழுத்து தூக்கி நிற்க வைத்தான். அவள் இதயம் துடிக்க அவனை அதிர்ந்து பார்த்தாள். யுவி அவளை அணைத்து இருந்தான். மூச்சடைக்க நின்ற நேத்ராவை பார்த்து அவளது தோளை தட்டினான். அவள் யுவியை பார்த்து விட்டு, அவன் நன்றாக இருக்கான் என்றதும் அவள் கை தானாக அவளது வயிற்றுக்கு சென்றது.

என்ன? அவன் கேட்க, சா..சா..சாரி சார்..திக்கினாள்.

சாப்பிடலாமா? அவன் நகர, அவள் குனிந்து தன் வயிற்றில் இருந்த குழந்தையை தொட்டுப் பார்த்தாள்.

பின் அதிரதனை பார்க்க, அவன் டைனிங் டேபிளில் அமர்ந்து அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். யுவியை கீழே விட்டு அவனுக்கு சாப்பிட எடுத்து வைத்தாள். ஆனால் அவன் கண்கள் அவளை தான் கவனித்துக் கொண்டிருந்தன. பின் யுவியையும் சாப்பிட வைத்தாள். மூவரும் தூங்க சென்றனர். நேத்ரா, அதிரதனுக்கு இருவரின் அந்த சில நிமிடங்கள் வந்து வந்து சென்றது.

மறுநாள் காலையில் அதீபன் அறையிலிருந்து சாதாரணமாக கீழே இறங்கி வந்தான் போதை இறங்காமல் நிதின். அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க அவர்களை பார்த்து திகைத்து,

நான் எங்க இருக்கேன்? என்று பதட்டமுடன் அவன் மேல் அடித்த மது வாடையில் அப்படியே நின்றான்.

டேய், இங்க என்ன பண்ற? என்று நிர்மலா நிதினை பார்த்து சத்தம் கொடுத்தார். அதீபன் எழுந்து அவனிடம் வர, பக்கத்துல வராத? என்று வாய் உலற அவனிடம் சத்தமிட்டான் நிதின்.

அவனிடம் என்னடா சத்தம் போட்டு கிட்டு இருக்க? வா..சாப்பிட வா செழியன் அழைக்க, சார்..நான் அப்புறம் வாரேன் என்று ஓட இருந்தவன் சட்டை காலரை பிடித்து இழுத்து அவர்களிடம் இழுத்து சென்றான் அதீபன்.

டேய், என்ன பண்ண? பேடு ஸ்மல்..உவாக் என்று பிரணா சொல்ல, சார் நான் அப்புறம் வாரேன் என்று அவன் தடுமாறி நடக்க..

பெரியப்பா..சார், குடிச்சிருக்கார். குடின்னா..குடி.. அப்படியொரு குடி..இவனை இங்க இழுத்திட்டு வர்றதுக்குள்ள. என் உயிரை வாங்கிட்டான் அதீபன் சொல்ல,

நீ எதுக்குடா அவனை கூட்டிட்டு வரப் போன? அவன் அம்மா திட்டினார்.

அம்மா, என்னால முடிஞ்ச சோஷியல் சர்வீஸ் என்றான் அதீபன்.

நம்ம நிதுவா குடிச்சிருக்கான்..என்று சிவநந்தினி அருகே வர, அம்மா..வராதீங்க என்று கையை நீட்டி நிறுத்திய நிதின், சார்..நான் கிளம்புகிறேன் என்று தள்ளாடி நடக்க,

இப்படியே போய் எங்கேயும் அடிபட்டு சாகாத என்று நிர்மலா சொல்ல, பாட்டி அவரை அறைந்து, என்ன பேச்சு பேசுற? என்று திட்டினார்.

செழியன் எழுந்து, நிது..நில்லு என்று அழைக்க, நோ..சார் நான் நிற்க மாட்டேன் என்று சுவற்றில் முட்ட இருந்தவனை கை வைத்து தடுத்தாள் ஆத்விகா. அவளை பார்த்ததும் அவள் கையை எடுத்து விட்டு அவன் நகர, செழியன் அவன் வழியை தடுத்தார்.

அங்கிள், என்னை போக விடுங்க என்று எதையோ புலம்பிக் கொண்டு அவர் மீதே சாய்ந்தான்.

ஹே..என்னடா பண்ற? ரணா சத்தமிட, “நிதின் உன்னை இங்க அழைச்சிட்டு வந்ததே தப்பா போச்சு” என்று அதீபன் ஓடி வந்தான்.

இரு..நானே பார்த்துக்கிறேன் என்று செழியன் அவர் அறைக்கு அவனை இழுத்துச் சென்று சவரில் குளிக்க வைத்தார்.

ஏங்க என்னாச்சு? பிள்ளைக்கு ஒன்றுமில்லையே? கேட்டுக் கொண்டே சிவநந்தினி அறைக்கு வர, ஆத்விக்கு அழுகையும் கோபமும் அவன் மீது வந்தது. அவள், ரணா, அதீபன் அவர் அறைக்குள் வர, அதீபனை உதவிக்கு அழைத்தார்.

இருவரும் அவனுக்கு போதையை தெளிய வைத்தனர். நிதினை நிர்மலா வெளியே அர்ச்சித்துக் கொண்டிருந்தார்.

அவன் போதையிலிருந்து வெளியே வந்தாலும் எழ முடியாமல் இருந்தான். அவனை இழுத்து ஆடையை மாற்ற சொல்ல, நீங்க போங்க பெரியப்பா. இவனை நான் பார்த்துக்கிறேன் என்று அதீபன் சொல்ல, நகர இருந்தவர் கையை பிடித்த நிதின், வெரி சாரி சார் என்றான்.

அவர் வெளியே வந்து அமர, இவன் எதுக்கு குடித்திருப்பான்? நேற்றே இவன் முகமும் சரியில்லை என்று அவர் அனைவரையும் பார்க்க, ஆத்விகா கண்கலங்க நின்றிருந்தாள். அதை பார்த்த அவர் அமைதியானார்.

அதீபன் வெளியே வந்தான். நீ தான் அவனை அழைத்து வந்தியா? அவர் அவனிடம் விசாரணை நடத்த, அதிரதன் சொல்லி செய்ததாக அதீபனும் நடந்ததை விளக்கினான்.

நிதினுக்கு குடிக்கும் பழக்கமெல்லாம் இல்லையே? என்னவென்று உனக்கு தெரியுமா? என்று அதீபனிடம் கேட்டார். அவன் ஆத்விகாவை பார்க்க, அவரும் அவளை பார்த்தார்.

பெரியப்பா, லவ் தான் என்றான்.

லவ்வா?

ஆமா பெரியப்பா. அந்த பொண்ணு அவனை ரிஜெக்ட் பண்ணிட்டாலாம்.

நம்ம பையனை எந்த பொண்ணுடா வேண்டாம்ன்னு சொன்னா? சிவநந்தினி கேட்க, யாருன்னே தெரியல பெரியம்மா.

ரிஜெக்ட் பண்ணிட்டாளா? அவனுக்கு ஸ்கூல் டேஸ்ல இருந்தே அந்த பொண்ணை ரொம்ப பிடிக்கும் என்று வாயை விட்டாள் ஆத்விகா.

உனக்கு தெரியுமா ஆத்வி? செழியன் கேட்க,

அப்பா, அதுவந்து..என்று அவரை பார்க்க, மொத்த பேமிலியும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிவநந்தினி அவளிடம் வந்து, பொண்ணு அழகா இருப்பாளா? என்ன படிச்சிருக்கா? என்று விசாரிக்க, ஆத்விகா அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

நந்து..என்று செழியன் சத்தமிட, அவர் விலகி நின்றார்.

தெரியும்ப்பா. ரொம்ப நாள் கழித்து இன்று அந்த பொண்ணுக்கு ஏதோ பிரச்சனைன்னு பதறி தான் போனான். ஆனால் இவன்..என்று நிறுத்தினாள்.

அவளை பார்த்த அதீபன், பெரியப்பா..நிதின் அவன் காதலித்த பொண்ணுக்காக குடிக்கலை. அவன் காதல்..என்று ஆத்வியை பார்த்தவன், அவனை காதலிக்கும் பொண்ணை நினைத்து தான் குடித்திருக்கான். நேற்றே ரொம்ப புலம்பினான்.

என்ன அவனை ஒரு பொண்ணு காதலிக்குதா? பாட்டி கேட்க, பாட்டி அவனுக்கு நான் சொன்ன பொண்ணு மேல காதல் இல்லை. இன்று அந்த பொண்ணு அதை இவனுக்கு புரிய வச்சிட்டா. ஆனால் இவனை காதலிக்கும் பொண்ணு தான் இவனை சரியா புரிஞ்சுக்கலை.

என்னடா சொல்ல வர்ற? ஒன்றுமே புரியலை ரணா தலையைசொரிந்தாள்.

அதான் எனக்கும் புரியலை. நீங்க அவன் எழவும் அவனிடமே கேட்டுக்கோங்க.

அவன் இன்னும் எழவில்லையா? ஆத்விகா கேட்க, இல்ல ஆத்வி அவனால் மனசுல நினைக்கிறத யாரிடமும் சொல்ல முடியாமல் கஷ்டப்படுகிறான்னு தான் தோணுது.

ஏன்டா, நாமெல்லாம் இல்லையா? சிவநந்தினி கேட்க, அதீபன் அவன் அம்மாவை பார்த்து விட்டு, பெரியம்மா..இங்க இருக்குற எல்லாரும் உங்கள மாதிரி இல்லை. ஒரு வேலை உங்களை மாதிரியே எல்லாரும் இருந்தால் தைரியமா ஃபேஸ் பண்ணி இருப்பான்.

என்ன ஃபேஸ் பண்ணனும்? ரணா கேட்க, செழியன் தன் மகள் ஆத்விகாவையே பார்த்துக் கொண்டிருந்தார். அவள் கண்கள் அவன் இருக்கும் அறைப்பக்கமே அலைப்புறுவதை கண்ட அவர்..எல்லாரும் உங்க வேலைய பாருங்க. அவனிடம் நான் பேசிக்கிறேன் என்றார்.

இல்லங்க, நான் வேண்டுமானால் நிதுவை எழுப்பவா? சிவநந்தினி கேட்க, இல்லம்மா..நீ ஸ்ட்ராங்கா டீ போட்டு எடுத்து வா என்று ஆத்விகாவை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றார்.

அவளுக்கு அதீபன் பேசியது புரியவில்லை என்றாலும் நிதினை இந்நிலையில் பார்க்க மனம் பாராமாகிப் போனது. அவளுக்கு போக மனமின்றி ஹாலில் சோபாவிலே அமர்ந்தாள்.

செழியன் நிதினை எழுப்பி அமர வைத்து ஏதோ பேசிக் கொண்டிருக்க, சிவநந்தினி வரும் சத்தம் கேட்டு இருவரும் அமைதியானார்கள்.

நிது, உனக்கு ஒன்றுமில்லையே பாசமாக சிவநந்தினி அவன் தலையை கோத, அவன் எவ்வித உணர்வுமில்லாது அமைதியாக இருந்தான்.

இருவரையும் பார்த்து, என்ன பிரச்சனை? அவர் கேட்க, நந்து..நீ போ. அப்புறம் அவனுடன் பேசிக்கோ என்றார் அவர்.

என்னாச்சுங்க? என்று கேட்டார் சிவநந்தினி.

நான் சாரிடம் தனியா பேசணும். எனக்கு எதுவும் வேண்டாம். கிளம்புங்க என்று முகத்திற் அடித்தாற் போல் சிவநந்தினியிடம் பேசினான் நிதின்.

நிது..என்று அவர் அழைக்க, போறீங்களா? கத்தினான் நிதின். அனைவரும் அங்கே வந்தனர். சிவநந்தினி கண்ணீருடன் வெளியே வந்தார். அவர் மகனும் எப்பொழுதும் கோபமாக தான் பேசுகிறான். அவனுக்கு பிடித்த இரண்டாவது செல்ல மகனாக நிதினை வளர்த்தார். அவன் கோபம் அவரை மேலும் வருத்தியது. அவர் கண்ணீர் அழுகையாக அவர் அறைக்குள் சென்று கதவை அடைத்தார்.

அம்மா, என்று ஆத்வியும், பிரணாவும் கதவின் வெளியே இருந்து அழைத்தனர். சிவநந்தினியின் அழும் சத்தம் கேட்க, பிரணா கோபமாக அவள் அப்பா அறைக்குள் செல்ல, நிதின் அளவிற்கு மிஞ்சிய கோபமுடன் வெளியே வந்தான்.

டேய், அம்மாகிட்ட என்னடா பேசுன? அம்மா அழுறாங்க என்று சத்தமிட்டாள்.

“ஒழுங்கா வழிய விடு இல்ல நான் இருக்கும் கோபத்தில் உன்னை அடிக்க கூட தயங்க மாட்டேன்” என்றான் நிதின். அவனை இந்த அளவு கோபமாக யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பிரணா அவனை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள். அவள் அப்பா கண்ணீருடன் அமர்ந்திருந்தார்.

அப்பா, என்னாச்சு? அவள் கேட்க, அவன் இனி வர மாட்டான்டா என்று பிரணா தோள் மீது சாய்ந்து அழுதார்.

சத்தம் வெளியே கேட்க, ஆத்விகாவை பார்த்துக் கொண்டே சென்ற நிதினை பார்த்த அவள், நிது..நில்லு..என்று அவன் பின்னே ஆத்விகா செல்ல, அவன் தானாகவே நின்றான்.

நிது, எங்க போற? அம்மா அழுறாங்க?

அதுக்கு என்னை என்ன செய்ய சொல்ற? என்று சத்தமிட்டான்.

உனக்கு என்னாச்சுடா? என்று ஆத்விகா அருகே வர, பக்கத்துல வராத..உன்னோட அப்பனை எவ்வளவு நம்பினேன். ஆனால் அவன்..ச்சே, இத்தனை வருடங்களாய் என்னை ஏமாற்றி இருக்கான். நான் அநாதையாக வாழ்ந்திருக்கேன். என்னோட குடும்பத்தை பற்றி தெரிந்தும் அவர் சொல்லலை. உங்க சுயநலத்துக்காக என்னை பயன்படுத்திக் கொண்டீர்கள் என்று கத்தினான்.

இருக்காது நிது, அப்பா அப்படி செய்திருக்க மாட்டாங்க. நீ எங்களுள் ஒருவன் என்று அவள் கண்ணீருடன் சொல்ல..

இல்லை என்று கத்திய நிதின், நீங்க வேற. நான் வேற. நான் இந்த வீட்டுப்பிள்ளையாக என்றும் வர முடியாது.

ஏன்னா, உங்க குடும்பத்தோட பகையுடன் இருக்கும் ரவிக்குமாரின் மூத்த மகன் நான் தான் என்று கத்தினான். ஆத்விகாவிற்கு மூச்சே நின்றது போல் ஆனது.

இல்ல நிது, நீ போகக்கூடாது என்று அவன் கையை பிடிக்க, அவளை தள்ளி விட்டு கண்ணீருடன், சாரி ஆத்விம்மா..என்று மனதில் எண்ணியவாறு திரும்பி கூட பாராது வெளியேறினான் நிதின்.

அவள் அங்கேயே அமர்ந்து அழ, அவள் அம்மா, பாட்டி, அதீபன் அவளை வந்து தூக்கினர். அவர்கள் கையை தட்டி விட்ட ஆத்விகா, வேகமாக அவள் அப்பா அறைக்குள் சென்று விசயத்தை கேட்க,

ஆமாம்மா, நிதின் ரவிக்குமாரின் மகன் தான். நான் தான் அவனை யாரும் அறியாமல் அழைத்து வந்து, நம் வீட்டினுள் வைத்து வளர்த்தேன்.

ஏன்ப்பா, இப்படி செஞ்சீங்க? முன்னாடியே அவனிடம் சொல்லி இருக்கலாமே? இனி அவன் வர மாட்டேன்னு போயிட்டான் என்று கதறி அழுதாள்.

அக்கா என்று ரணா ஆத்வியை அழைக்க, நீ எதுக்குடி இப்படி அழுற? நிர்மலா சத்தமிட, ஏன்னா நான் அவனை காதலிக்கிறேன் என்று மேலும் அழுதாள்.

அவனை காதலிக்கிறியா? உனக்கு வேற பசங்களே கண்ணுக்கு தெரியலையா? நிர்மலா சத்தமிட, சிவநந்தினி தன் பொண்ணின் கஷ்டத்தில் பங்கெடுத்து அவளை அணைத்துக் கொண்டார்.

அப்பா, அவனை வரச் சொல்லுங்க. அவன் அங்க போயிட்டான்னா வர மாட்டான் என்று ஆத்விகா அவர் அப்பாவிடம் சென்று அழ, ஆறுதலாக தன் மகளின் முடியை கோதிய செழியன், அவன் கண்டிப்பா வருவான்ம்மா. நம்மை பார்க்காமல் அவன் இருக்க மாட்டான்டா என்று கண்ணீருடன் அவர் கூறினார்.

எதுக்குடா, இப்படி செஞ்ச? பாட்டி கேட்க, அது தானாகவே தெரிய வரும். அப்பொழுது பார்த்துக்கோங்க என்று ஆத்விம்மா, நீ ஸ்ட்ராங்கா இருக்கணும்..என்ற அவள் அப்பா, ரதனோட எல்லாத்தையும் நீயும் அதீபனும் தான் பார்க்கணும்.

பெரியப்பா..அவன் சத்தமிட, என்னடா..அதான் மாமா சொல்லீட்டார்ல. நீயும் போ…பார்த்துக்கோ என்று நிர்மலா அவனை திட்ட, “போம்மா நீ வேற” என்று அவன் சென்றாலும் முதலில் அவன் தான் ஆத்விக்காக தயாராகி வந்தான்.மனதை திடப்படுத்திய ஆத்வியும் கம்பெனிக்கு கிளம்பினாள்.

 

Advertisement