Advertisement

அத்தியாயம் 29

வினு ஆதரவாக சாரு தோளில் கையை வைத்து, அண்ணா இருக்காங்கல்ல? எதுக்கு இவ்வளவு எமோஸ்னல் ஆகுற? என்று கேட்டாள்.

இல்ல வினு, அவன் வீட்ல இல்லை. அவன் திருமணம் முடிந்த பின் ரொம்ப மாறிட்டான். அண்ணிக்கும் அம்மாவுக்கும் சுத்தமா ஆகலை. அவன் சமாளிக்க முடியாமல் எங்கு போனான் என்றே தெரியல. அண்ணி வீட்லயும் அவன் இல்லை. போயிட்டான். அப்பா இறந்த பின் அம்மா அந்த வயதிலும் யார் கையையும் எதிர்பார்க்காமல் எங்களை ரொம்ப சிரமப்பட்டு தான் வளர்த்தாங்க. ஆனால் அவன் கொஞ்சமும் அதை யோசிக்கலை. இத்தனைக்கும் அம்மாவுக்கு தேவையானதை செய்துட்டு தான் நான் வேலைக்கே போவேன்.

காலை சாப்பாடு கூட சேர்த்து அண்ணி செய்ய மாட்டாங்களாம். அதுக்கு தான் இருவருக்கும் சண்டை முற்றி அம்மா அண்ணியை அடிச்சிட்டாங்க. ஆனால் அதுக்காக அண்ணன் மொத்தமாக விட்டுட்டு போவான்ன்னு நினைக்கவேயில்லை. அம்மா அடிச்சது தப்பு தான். ஆனால் எப்படி எங்களை விட்டு அவனால் போக முடிஞ்சதுன்னு தெரியலை. இதனால அம்மா வருத்தப்பட்டு பிரஸ்ஸர், சுகர் அதிகமாகிடுச்சு. பிரஸ்ஸரை கூட நான் ஏதாவது பேசி அவங்கள திசை திருப்பி குறைச்சிடுவேன். ஆனால் சுகர் ரொம்ப அதிகமா இருக்கு. கொஞ்சம் பயமா தான் இருக்கு. வீட்டு நிலையை சமாளிக்க கூட பணம் போதவில்லை. இதில் அவங்களுக்கு சேதுவை பற்றி வேற தெரிஞ்சு போச்சு என்று அழுதாள் சாரு.

சாரு, பள்ளியிலே நல்லா தானே போச்சு வினு கேட்க, ஆமா வினு அம்மா கூட நல்லா பேசி பழகினான். காலேஜ்ல அவன் வேற பொண்ணு கூட சுத்தி இருக்கான். நான் நர்சிங் பக்கம்  போனதால் அவனுக்கு தோதா போச்சு. இடியட் நல்லா ஏமாத்திட்டான். எனக்கு எப்ப தெரிஞ்சது தெரியுமா? என்று சாரு அழுது கொண்டே படிப்பு முடிந்து ஹாஸ்பிட்டலில் சேர்ந்த முதல் நாளில் நான் பார்த்த முதல் கேஸ் அவன் தான். அவன் ஒரு பொண்ணோட கருவை கலைக்க சொல்லி வந்து நின்றான். குரல் கேட்டு தான் அவனை பார்த்தேன். அப்பவே உடைஞ்சி போயிட்டேன். பின் தான் அண்ணாவும் சென்றான்.

அம்மாவுக்கு இப்ப என்னை பற்றிய கவலை அதிகமாயிருச்சு வினு. ரொம்ப டென்சன் ஆறாங்க. இப்ப கூட தனியா விட்டு வர ரொம்ப பயம் தான். ஆனால் எனக்கு நைட் ஷிப்ட் என்பதால் காலை முழுவதும் அவங்களுடன் தான் இருந்தேன். அப்ப தான் பெரிய டாக்டர் எனக்கு போன் செய்து இந்த மாதிரி குட்டிப்பையனை உடனிருந்து பார்த்துக்கணும். பணம் அதிகம் கிடைக்க வாய்ப்பிருக்கு என்றார்.

பணம் என் வங்கிக்கணக்கில் அதிகம் இருந்தாலாவது என் அம்மா என்னை நினைத்து கவலைப்பட மாட்டாங்க என்று தான் வந்தேன். ஆனால் அதிரதன், நிதின், உன்னை பார்ப்பேன் நினைக்க கூட இல்லை என்று வினுவை அணைத்து அழுதாள்.

சாரு, மேரேஜ் பத்தி யோசிக்கலையா?

அம்மா, பார்த்துக்கிட்டு தான் இருக்காங்க. என் விதிமுறைக்கு எவன் கட்டுப்படுவான்? இரண்டு பேர் வந்து பார்த்துட்டு போயிட்டானுக.

போயிட்டானுகளா? அப்படி என்ன விதிமுறை வச்ச? ஜீவா கேட்டான்.

என் அம்மாவும் என்னுடன் தான் இருப்பாங்கன்னு சொன்னேன் என்று அவள் சொல்ல, ஜீவா புன்னகையுடன் நீ பைத்தியம் என்பதை தெளிவா காட்டுற?

என்னடா தப்பு? என்னோட அம்மா என்னை சிறு வயதிலிருந்து பாதுகாப்பாக பார்த்துக்கிட்டாங்க. அதே போல் என் அம்மாவை நான் பார்த்துக்கணும்ன்னு நினைக்கிறது தப்பா? அண்ணன் இருந்தாலாவது பரவாயில்லை. உடம்பு சரியில்லாத அம்மாவை விட்டு போறது என்னால முடியாது. அதுக்கு நான் கல்யாணமே பண்ணிக்காம இருந்திடுவேன் என்று கத்தினாள்.

கத்தாத? நான் சும்மா தான் கேட்டேன்? ஆனால் உன் அம்மாவை யாராவது ஏதாவது சொல்லுவாங்க. உன் அம்மா ஒத்துக்கிட்டாங்களா?

அது எப்படி ஒத்துப்பாங்க? நான் தான் மிரட்டி வச்சிருக்கேன். என்னுடன் நீ இருந்தால் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு. இல்லைன்னா..என்னை பார்க்க வருபவனுக்கு காபில உப்பை போட்டு கொடுத்திடுவேன்னு சொன்னேன். ஆனால் வினு அம்மா கொஞ்சமும் சீரியசா எடுக்கல.

ஒருவன் குடும்பத்தோட வந்தான். பெரிய இவனாம். கால் மேல் கால் போட்டு அவ்வளவு திமிரு காட்டினான். அவன் அம்மா அதுக்கு மேல திறந்த நகைக்கடை போல வந்திருந்தாங்க. அவங்க வசதி பிடிச்சு அம்மாவும் முடிவே பண்ணிட்டாங்க.

நான் அப்ப தான் வேலை முடிந்து வீட்டினுள் நுழைந்தேன். அவர்களை பார்த்தவுடனே புரிந்தது. இதில் இவனுக்காக அலங்காரம் பண்ணனுமாம். கொய்யால, அவன் சாகாம வீட்டிலிருந்து போனது நல்லது.

அவனை பத்தி அவனே தற்பெருமை பேசிறான். அப்பா..நம்ம அதிரதனுக்கு அப்படியே எதிர்ப்பதம். நம்ம அதி யாரும் அருகே வரக்கூடாது என்பதற்காக திமிரு காட்டுவான். ஆனால் பொண்ணுங்க பக்கம் வர வைக்க என்ன செய்யணுமோ அவ்வளவும் செய்வான் போல.

நீ என்ன செஞ்ச? ஜீவா கேட்க, நல்ல மாடர்ன் உடையில் வந்து நின்றேன். அப்படியும் அவன் அசரவேயில்லை. பிளேடு போட்டான். இவன் பேசக்கூடாதுன்னு முடிவு செய்து, காபியில் மிளகாய்ப்பொடியை தட்டி நானே அவனுக்கு என் கையாலே பருக வைத்தேன். செத்தான் அவன். பின் வாயை பேச திறக்கவில்லை. அழுதான், கதறினான்.

எப்படி ஓட விட்டேன் பாரு என்று சாரு இல்லாத காலரை தூக்கி விட, அம்மா உன்னை சும்மாவா விட்டாங்க வினு கேட்க, அடி வெளுத்துட்டாங்க. அவங்க அழுதாங்க. அப்ப தான் அவரை மடக்கி கேள்விகளை தொடுத்தேன். அம்மா அமைதியானார்கள். இப்ப கூட பார்த்துக்கிட்டு தான் இருக்காங்க.

எவன்ம்மா வருவான்னு கேட்டா? சொல்றாங்க. கோடில்ல ஒருத்தன் தான் அவங்க மருமகனாம் என்று வருத்தமானாள்.

எனக்கு பயமே அம்மா தான் வினு. மத்தபடி என்னால எதையும் மேனேஜ் பண்ண முடியும் என்று அவள் தோளில் சாய்ந்தாள்.

வினு, உன்னோட ஹஸ்பண்டு வக்கீல்ன்னு சொன்னாங்க? என்று சாரு கேட்க, வினுவும் அனைத்தையும் சொன்னாள்.

என்னடி, இப்படி பண்ணிட்ட? விருப்பமில்லாமல் எதுக்கு ஒத்துக்கிட்ட? கொஞ்சம் நேரமாவது கேட்டிருக்கலாம். இல்லை அவனை பற்றி நன்றாக விசாரித்து இருக்கலாம்.

ஏய், அஷ்வினியா? நம்ம அதிரதன் மீது பழி சுமத்தியவளா? சாரு கேட்க, ஆமா சாரு அவள் தான். உனக்கு நினைவிருக்கா?

பக்கத்து பள்ளி பொண்ணு நடன போட்டியில் என்னுடன் போட்டிக்கு நின்று தோற்றாளே அவள் தான்.

அட, அந்த ராங்கியா? அவளையெல்லாம் ப்ரெண்டா வச்சிருந்திருக்க?

ப்ரெண்டு இல்லடி. கேட்டா பதில் சொல்லுவேன். அவ்வளவு தான். அவள் தான் கிளப்பி விட்டுருக்கா. இப்ப இவன் அவளை பற்றி விசாரித்த போது ப்ரெண்டு லிஸ்டுல என் பேரையும் அதிரதனிடம் கொடுத்திருக்காங்க. நிதினும் அதை கவனிக்காமல் இருந்திருக்கான்.

அதை விடு. நிதினுக்கு காதல் வெற்றியானது போல? நல்ல வேலை அவன் வலையில் நீ மாட்டிப்பியோன்னு நினைச்சேன்.

இல்லடி, ம்ம்..எனக்கு தெரியுமே? என்று எழுந்தாள் சாரு.

சாரு, என்ன தெரியும்? வினு பதட்டமாக, எல்லாமே தெரியும்.

வினு, நீ கர்ப்பமா தான இருக்க? சாரு கேட்க, ஜீவா அதிர்ந்து வினுவை பார்த்தான்.

உனக்கு எப்படி தெரியும்? வினு கேட்க, உன் முகம் சோர்வா இருக்கு. அப்புறம் சில விசயங்கள் இருக்கு. அதை வைத்து தான் கண்டுபிடித்தேன் என்று அவள் ஜீவாவை பார்த்தாள்.

ஜீவா, ப்ளீஸ் அதிரதனிடம் சொல்லிடாத. அவன் ரொம்ப கோபப்படுவான் என்ற வினுவை பார்த்து, அவனுக்கு உன் மேல் காதல் வந்து விட்டது போல. ஒரு வேலை குழந்தை விசயம் தெரிந்தும் அவன் உன்னை ஏற்றுக் கொண்டால் அவனை கல்யாணம் செய்து கொள்வாயா? சாரு கேட்டாள்.

இல்லை. கண்டிப்பாக முடியாது சாரு. என்னால் மறுபடியும் அந்த வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்து யாரையும் இழக்க முடியாது என்றாள் கண்ணீருடன்.

ஆனால் இது உனக்கான வாய்ப்பு, சந்தோசம், உன்னோட ஆசை, போதும் நிறுத்து சாரு. நான் ஓய்வெடுக்கணும் என்று எழுந்தாள் நேத்ரா.

சரி வினு. உன்னை தொந்தரவு செய்யலை. ஆனால் அதிரதனுக்கு அவன் முடிவை மாற்றி பழக்கமில்லை தெரியும் தானே?

தெரியும் சாரு. ஆனால் ஆறு மாதம் முடியட்டும். அவனே என்னை பிடிக்கலைன்னு சொல்ல வைப்பேன் என்றாள்.

என்னமும் செய். ஆனால் குழந்தையை மறைக்க முடியாது. இப்ப எத்தனை மாசமாகுது?

அவள் சொல்ல, அடுத்த மாதம் உன் வயிரு பெரியதாகும் போது அவனுக்கு தெரிய தான் போது. அதனால் அவனிடம் நீயாக சொல்லிடு என்றாள்.

அதிரதன் ஹாஸ்பிட்டலில் வைத்து தொப்பை பெரியதாக இருப்பதாக வினுவிடம் கேட்டது நினைவுக்கு வந்தது.

சொல்லிடுவேன் சாரு. சரியான நேரத்திற்காக தான் காத்திருக்கேன் என்று சமையலறைக்கு அவள் செல்ல, வினு நீ ஏற்கனவே ரொம்ப சோர்வா இருக்க. நீ ஓய்வெடு, நான் முடிச்சிட்டு யுவன் அறைக்கு போகிறேன் என்றாள்.

வினுவும் சோர்வுடன் அதிரதன் அறைக்கு வந்து அவனது படுக்கையில் அமர்ந்து, சாரி அதி என்னால நீ ரொம்ப கஷ்டப்பட போற? என்று வருத்தமாக அவன் தலையை கோதினாள். வெளியே நின்று இருவரும் அவளை பார்த்தனர்.

பின் அவள் அங்கிருந்த சோபாவில் படுத்துக் கொண்டாள். அவள் தூங்கவும் உள்ளே வந்த சாரு இருவரையும் பார்த்து விட்டு, குளுக்கோஸ் பாட்டிலை மாற்றி விட்டு, அதி நீ அன்று செய்ததற்கு இன்று அனுபவிக்க போற என்று சாரு சொல்லி விட்டு வெளியே வந்தாள்.

ஜீவா ஹாலில் இருந்த சோபாவில் தூங்க, அவனை எழுப்பி ஓர் அறையை காட்டி அங்கே தங்கு என்றாள் சாரு.

நீ இன்று தான வந்தாய்? நீ உன்னோட வீடு மாதிரி நடந்துக்கிற?

அவன் அப்பொழுதே இதற்கான சாவியை சொன்னான். நான் கூட எனக்கு தான் என்று நினைத்தேன். உள்ளிருந்த செட்அப்பை பார்த்து தான் உனக்கு என்று அறிந்து தான் உன்னை எழுப்பினேன்.

போ..ஓய்வெடு என்று அவள் செல்ல, ஜீவா அவளை செல்லும் வரை அவளை பார்த்து விட்டு அறைக்குள் நுழைந்தான். ஜிம் செட் அப், பஞ்சிங் பேக் எல்லாம் இருந்தது.

வாவ், சூப்பரா இருக்கு என்று மகிழ்வுடன் அனைத்தையும் தொட்டு பார்த்து விட்டு படுக்கையில் சாய்ந்தான் ஜீவா.

சாரு வேலை முடியவும் நிதினுக்கு கால் செய்து அதிரதனுக்கு ஒன்றுமில்லை என்று சொல்லவே அவன் வீட்டிற்கு சென்றான்.

அதிகாலை நான்கு மணியளவில் அதிரதன் அலைபேசி ஒலிக்க, அவன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். தயங்கினாலும் எழுந்து வினு போனை எடுத்தாள்.

நான் அண்ணாவிடம் பேசணும் என்றான் அதீபன்.

சார், தூங்குறார். இப்ப எழமாட்டார் என்றாள்.

ரொம்ப முக்கியமான விசயம். ப்ளீஸ் அண்ணாவிடம் கொடு என்றான்.

சொன்னா புரிஞ்சுக்கோங்க என்று அவள் சொல்ல, அவனை எழுப்பினால் உன்னை விட்டு வந்துருவான்னு பயமா இருக்கா? என்று அதீபன் கேட்டான்.

வினு அழுது கொண்டே, நான் பணத்துக்காக என்னை சாரிடம் விற்க வரலை. ஆனால் இப்ப அவர் பேச மாட்டார். அவர் மயக்கத்தில் இருக்கார். அவருக்கு அடிபட்டிருக்கு என்று சொல்லி விட்டாள்.

என்ன சொல்றீங்க? அண்ணனுக்கா அடிபட்டிருக்கு? அதீபன் கேட்க, ஆமா சார், இங்க நான் மட்டும் இல்லை. பாடி கார்டு ஒருவரும் நர்ஸ் ஒருவரும், என்னோட யுவியும் இருக்கான். நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லை. சார் நான் அவர் அறையில் இருக்க சொன்னார். அதுக்கும் காரணம் உள்ளதால் தான் நான் இங்கே இருக்கேன். நான் அவர் பக்கம் கூட செல்ல மாட்டேன். என்னால் செல்லவும் முடியாது என்று அழுது கொண்டே அலைபேசியை வைத்தாள்.

அதீபன் மீண்டும் அழைக்க, காதில் வைத்தாள் அமைதியாக.

அண்ணா உயிருக்கு ஏதுமில்லையே?

இல்ல, ஒரு வாரத்துல சரியாகிடுமாம். நர்ஸ் எங்க ப்ரெண்டு தான். அவள் தான் சிகிச்சை செய்தாள்.

சரி, அண்ணா எழுந்தவுடன் நியூஸ் பார்க்க சொல்லுங்க. பெரிய பிரச்சனை என்று அதீபன் அலைபேசியை வைத்து விட்டான்.

ரவிக்குமார் கம்பெனி பாமால் தகர்க்கப்பட்டது. நல்ல வேலையாக மனிதர்கள் யாருமில்லா சமயத்தில் நடந்ததால் பெரிதாக ஏதுமில்லை. கட்டிடம் தான் சுக்கு நூறாய் ஆனது. நிதின் முன்னே அனைத்தும் நடந்தது. தாட்சாயிணியும் திடீரென காணவில்லை. அவளை செழியன், ரவிக்குமார், அதீபன், நிதின் தான் கண்டுபிடித்து கடத்தியவர்களிடமிருந்து அழைத்து வந்திருந்தனர். அதன் பின் தான் பாம் வெடிப்பு நடந்தது.

தாட்சாயிணி தூங்கும் போது மயக்க மருந்தை அவள் மூக்கில் வைத்து மயக்கமடைய செய்து கடத்தியிருப்பர். ரேவதி தற்செயலாக வந்தவர்கள் கடத்தும் போதே பார்த்து ரவிக்குமாரை எழுப்ப, அதற்குள் அவர்கள் அவளை தூக்கி சென்றனர். அவளை ஏதும் செய்யவில்லை. ஆனால் அவளை மிரட்டி அடித்து இருக்கிறார்கள். இதை அறிந்து போலீஸுடன் நிதினும் வந்து தான் எல்லாருடனும் சேர்ந்து காப்பாற்றினார்கள். இப்பொழுது எல்லாரும் செழியன் வீட்டில் தான் இருந்தனர்.

காலை உதயமாக நிதின் அவனறை கதவை திறக்க, காத்திருந்த அதீபன் எகிறி குதித்து நிதினை உள்ளே தள்ளி விட்டு கோபமாக அவனை நெருங்கினான். நிதின் அறை பக்கம் தான் தாட்சாயிணி அறையும் அப்பொழுது தான் அவளும் வந்தாள்.

அதீபன் குதித்து அவள் அண்ணன் அறைக்கு செல்வதை பார்த்து, அவளும் உள்ளே செல்ல, அவள் பார்த்தது. நிதினை அடிக்கும் அதீபனை.

டேய், உனக்கென்ன பைத்தியமா? தாட்சாயிணி அவனிடம் சத்தமிட, எனக்கா பைத்தியம்? சொல்லுடா அண்ணாவுக்கு என்ன ஆச்சு? என்று நிதினை மேலும் அடித்தான். இதை அங்கே வந்த ரணாவும் ஆத்வியும் கேட்டு விட்டு உள்ளே வந்தனர்.

என்ன தான் நடக்குது? ரணா கேட்க, ஆத்வி கதவடைக்க வெளியே சென்றாள். அனைவரையும் அழைத்து விடுவாளோ? என்று நிதின் அதீபனை தள்ளி விட்டு ஆத்வி கையை பிடித்து உள்ளே இழுத்தான்.

அய்யோ, காலங்காத்தால என்ன பண்றான் பாருங்க புள்ளைய? என்று பாட்டி நிதின் ஆத்வியை இழுத்ததை பார்த்து சத்தமிட்டார்.

ஆத்வி, சிவநந்தினி குரல் கொடுத்தார். உள்ளிருந்தவர்கள் இருவரையும் பார்த்தனர். ஆத்வி வாயை மூடி. அம்மா ஒன்றுமில்லை. நம்ம கம்பெனி விசயமா தான் பேசுகிறோம் என்றான்.

நிது, மறந்திட்டியா? நீ உங்க கம்பெனிய தான பார்த்துக்கிட்டு இருக்க? சிவநந்தினி கேட்க, அம்மா நானும் உள்ள தான் இருக்கேன். ஆத்வியிடமும் நான் கேட்கணும் அதீபன் சத்தம் கேட்டு,

அத்த, தீபனும் உள்ள தான் இருக்கான் என்றார்.

மதினி, என் பொண்ணை பார்த்தீங்களா? காலையில் தேனீர் அருந்தாமல் அவளுக்கு வேலையே ஓடாது. அறையிலும் இல்லை. ஒரு வேலை நேத்து மாதிரி பொண்ண? என்று அவர் சொல்ல,

அம்மா, கண்டதையும் யோசிக்காத. நானும் இங்க அண்ணாவுடன் தான் இருக்கேன்.

எல்லாரும் என்ன செய்றீங்க? கதவை திறங்க பாட்டி சொல்ல,

நாங்க இப்ப வந்துருவோம். பேச விடுறீங்களா? ரணா கத்த, அடியேய் உனக்கு என்ன எல்லாருடனும் வேலை? சிவநந்தினி குரல் கொடுத்தார்.

அதான அம்மா, உனக்கு என்னை குறை சொல்லாம திட்டாம இருக்க முடியாதுல்ல. நான் ஒன்றும் சின்னபுள்ள இல்லை. நான் வக்கீல் ஆகப் போறேன் என்று சத்தம் போட்டாள் ரண .

அவ எங்கடி குற சொன்னா? எல்லாரோட என்ன பண்றன்னு தான கேட்டா? இதுல என்ன இருக்கு? பாட்டி கேட்க, ஏதும் பேசாமல் கோபமாக ரணா அமர்ந்தாள்.

அம்மா, நாங்க வந்துருவோம். அவளை விடுங்க. நாங்க பார்த்துக்கிறோம் என்றான் நிதின். அவர்கள் செல்ல, சரிம்மா..நீ பேச்சிட்டு சீக்கிரம் வெளிய வா. காலேஜூக்கு கிளம்பணும் என்று சிவநந்தினி சொல்லி விட்டு கிளம்ப,

பிரணா, அம்மா கூட இன்னும் எத்தனை நாள் தான் இப்படி சண்டை போடுவ? நிதின் கேட்க, நீ முதல்ல அண்ணனுக்கு என்னன்னு சொல்லு? என்று ரணா கோபமாக எழுந்தாள்.

ரதனுக்காக ஒன்றுமில்லையே? நிதின் சொல்ல, அதீபன் அவன் வாயில் குத்த வரும் போது, அவனை தடுத்தாள் தாட்சாயிணி.

அண்ணா, மாமாவுக்கு என்ன ஆச்சு? சொல்லப் போறீயா? இல்ல எல்லாரையும் கூப்பிடவா? அவள் மிரட்ட, நடந்ததை நிதின் சொன்னான்.

உனக்கு சொல்லகூட தோணலையா? ஆத்விகா கொதித்தாள்.

இருக்கும் பிரச்சனையில் இதை சொன்னால் மேலும் கஷ்டமா இருக்கும். எல்லாரும் ரொம்ப வருத்தப்படுவாங்க என்று நிதின் சொல்ல, சரி வா. அண்ணா இருக்கும் இடத்துக்கு கூட்டிட்டு போ என்று ரணா அவன் கையை பிடித்து இழுத்தாள்.

இல்ல பிரணா, இப்ப யாரும் எங்கேயும் போக வேண்டாம். அண்ணா பாதுகாப்பா தான் இருக்கான் என்றான் அதீபன்.

பாதுகாப்பா? நீ அண்ணாவை பார்த்தாயா?

இல்ல, நான் நம் பிரச்சனையை சொல்ல அலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

எப்படி இருக்கான்? நல்லா இருக்கானா? ஆத்விகா கேட்க, என்னால அவனிடம் பேச முடியல. அவன் மயக்கத்தில் இருக்கானாம். அதனால் அவனிடம் பேச முடியவில்லை என்று நிதின் தாட்சாயிணியை பார்த்தான்.

யாரிடம் பேசுன? தாட்சாயிணி கேட்க, செவிலியர் ஒருவருடன் பேசினேன் என்று அதீபன் பொய் சொன்னான்.

பாடி கார்ட்ஸ் இத்தனை பேர் இருக்கும் போது அவனுடன் ஏன் ஒருவன் மட்டும் இருக்கான்? அதீபன் நிதினிடம் கேட்க, காரணம் இருக்கு. அதுவும் அங்கிருப்பவர்கள் பாதுகாப்பிற்கு தான்.

ஒருவன் பாதுகாப்பு தருவானா?

ஆமா, அவனை தவிர இவனுகளையும் முழுசா நம்ப முடியலை. அப்புறம் பிரணா, நீ கவனமா இரு. தேவையில்லாமல் யாருடனும் பேசாத. யாரிடமும் வம்பு வச்சுக்காத என்று அக்கறையுடன் பேச, என்ன திடீர்ன்னு கரிசனம்? ஆத்வி கேட்க, நிதின் அமைதியாக நின்றான்.

அதீபன் கோபமாக அவன் சட்டையை பிடிக்க, ரணா நிதினை பார்த்துக் கொண்டே நின்றாள்.

சொல்லுடா? அதீபன் கேட்க, உங்க அண்ணனை அந்த பரதேசி பையன் மிரட்டி இருக்கான். அவனோட இப்பொழுதான குறி நம் ரணா தான் என்று விபத்தின் போது அவன் ரணாவை பார்த்ததை சொன்னான்.

என் கண்ணுக்கு யாருமே தெரியலையே? ரணா கேட்டாள்

உன்னோட நொல்ல கண்ணுக்கு என்ன தான் தெரியும்? யாருடா அவன்? அதீபன் கத்தினான்.

என்னடா சத்தம்? வெளியிலிருந்து செழியன் சத்தம் கொடுக்க, ஒன்றுமில்லைப்பா என்று கதவை திறந்து கோபமுடனும் வேகமாகவும் அறைக்கு சென்றான் அதீபன்.

ஏய், நில்லுடா என்று தாட்சாயிணி அவன் பின் ஓடினாள்.

நீங்களே மேனேஜ் பண்ணி இருக்கலாம்ல்ல. அவனிடம் ஏன்டா சொன்ன? ஆத்விகா கேட்க,

அவன் கத்தியது உன் காதில் விழவில்லையா? நிதின் கேட்க, சண்டை போடாதீங்க. நான் அண்ணாவிடம் பேசலாமா? ரணா கேட்க, கொஞ்ச நாள் தான். எல்லாமே சரியாகிடும். அண்ணா சோர்வா இருப்பான். நான் உன்னை பேச வைக்கிறேன். அவனுக்கு சரியாகட்டும். யாரிடமும் சொல்லாதீங்க. தெரிஞ்சா எல்லாரும் அவனை பார்த்தே ஆகணும்ன்னு நிப்பாங்க. இப்பொழுதுள்ள நிலை ரொம்ப மோசமா இருக்கு.

ரணா, நீ கண்டிப்பா காலேஜூக்கு போகணுமா? நிதின் கேட்க, அவள் கண்ணீரை பார்த்து கவலைப்படாத. நான் உன் பக்கம் தான் என்றான்.

“தேங்க்ஸ் மாமா” அம்மாகிட்ட சொல்லிட்டேன். ஆனால் அவனை பற்றி முழுதாக தெரியாது என்றாள்.

இருவரும் என்ன பேசுறீங்க? அவனா? யாரு? கொலைகாரனா? ஆத்வி கேட்க, அக்கா என்று ரணா அவளை பார்க்க, நீ முதல்ல கிளம்பு என்று நிதின் ஆத்விகாவை பார்த்துக் கொண்டே வெளியேற, அவளும் அவன் பின் வந்தாள்.

வெளியே வந்த ரணா, செழியனை பார்த்து அப்பா, நான் இன்று மட்டும் கல்லூரிக்கு போகலை என்று அவரை அணைத்து அழுதாள்.

இதுக்கா அழுவாங்க? இன்னும் சின்ன பிள்ள மாதிரியே பண்றடா பாப்பா என்று சிரித்தார்.

கட்டிடத்தை சீர் செய்ய முடியாது. என்ன செய்றதுன்னே தெரியலை ரவிக்குமார் புலம்ப, அதான் இன்சூர் பண்ணி இருப்பீங்களே? அதிலிருந்து பணம் எடுத்து நல்ல இடம் வாங்கி கட்டிட வேலைய ஆரம்பிங்க. நஷ்டம் தான் அப்பா. ஆனால் இனி ஏதும் நடக்காமல் பார்த்துக்கிறேன் என்றான் நிதின்.

ம்ம்..இதுக்கு தான் பிள்ளை வேணும்கிறது என்றார் ரவிக்குமார். நிதின் முகம் சரியில்லாததை பார்த்து சிவநந்தினி அவனிடம் வந்து பேசினார். அவன் எதையோ கூறி மழுப்பி விட்டான்.

அப்பா, நான் அறைக்கு போய் ஓய்வெடுக்கிறேன் என்று ரணா அறைக்கு ஓடினாள். நிதின் அவளை பார்க்க, என்ன பாப்பா இன்று காலை எழுந்ததில் இருந்தே சரியில்லை? என்று செழியன் கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லைங்க என்று சிவநந்தினி சமாளித்தார்.

சினத்துடன் அறைக்குள் நுழைந்த அதீபன் தன்னுடைய பஞ்சிங் பேக்கில் அவன் கோபத்தை காட்டிக் கொண்டிருந்தான்.

நந்தினி, அங்க பாரு பாட்டி சொல்ல, சிவநந்தினியும் மற்றவர்களும் தாட்சாயிணியை பார்த்தனர். அதீபன் அறைக்குள் போகலாமா? வேண்டாமா? மெதுவாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நிதின் சண்ட போட்டீங்களாடா? செழியன் கேட்க, ஆமா சும்மாவே இருக்க மாட்டேங்கிறான். என்னோட சண்டை போடலைன்னா அவனால தூங்கவே முடியாதுல.

நீ என்ன செஞ்ச? இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டு சிவநந்தினி கேட்க, நான் ஒன்றுமே செய்யலம்மா நிதின் பாவமாக சொல்ல, என்னம்மா நடிக்கிறான்? என்று ஆத்வி வாயில் கையை வைத்து நிதினை பார்த்தாள்.

நீ ஏதும் செய்யாமல் அவன் இப்படி கோபப்பட மாட்டானே? அவர் கேட்க, நான் சொன்னால் நம்பவே மாட்டீங்க என்று அவன் சொல்ல, முடிவெடுத்தவளாய் தாட்சாயிணி உள்ளே சென்றாள்.

அவன் அறைக்குள் இருந்த மற்றொரு அறையில் இருந்தான். அவன் பின் நின்று “எப்படி கூப்பிட?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள். மீண்டும் அவனை நெருங்க அவன் பஞ்ச் செய்ய கையை பின் கொண்டு வந்து அவள் கையை இடித்தான்.

அவள் தடுமாறி கீழே இருந்த தம்பிள்சில் முட்ட சென்றவளை அவள் இடையிட்டு இழுத்து அவளை நகர்த்தினான்.

வியர்வையில் குளித்து அவளை பிடித்திருந்த அதீபன், என்ன செய்ற? முறைத்தவாறு கேட்டான்.

நான்..நான்..என்று பயந்து அவன் கையை எடுத்து விட்டு பதட்டமுடன் நகர்ந்தாள்.

ஏய், விழுந்திருறாத. கண்ண எங்க வச்சிட்டு நகருற? பிரணா போல தான் இருப்பியா? அவன் கேட்க, அவள் ரோசமுடன் நான் யார் மாதிரியும் இல்லை என்றாள்.

எனக்கு அப்படி தெரியவில்லையே என்று அமர்ந்து துவாலையால் அவனது வியர்வையை துடைத்தான்.

நான் அப்படி தான்.

சரி, இருக்கட்டும். நீ எதுக்கு வந்த? எல்லார் முன்னுமா வந்த? என்று அவளை அவன் பார்க்க, அச்சோ போச்சு போச்சு. இந்த இரவு உடையில் வந்துட்டேனா? என்று அவனை பார்த்து, நீ ஓ.கே தான? கேட்டாள்.

நான் ஓ.கே தான் என்று அவளை பார்த்து, ஹே “ஸ்வீட் பொட்டேட்டோ” நீ இந்த ஆடையெல்லாம் அணிவாயா? அவன் கேட்க, இவன் அறைக்கு வந்தது தப்போ? என்று இரவு தூங்கும் போது அணிவேன் என்று சொல்லி விட்டு நகர்ந்தாL. அவன் அறை திறந்திருக்க, அம்மா கேட்டா என்ன சொல்றது? இவனை பார்க்க நான் ஏன் வந்தேன்? என்று புலம்பிக் கொண்டே நகர்ந்தாள்.

அவள் முன் வந்து, ஆமா எதுக்கு நீ வந்த? என்று அவளை நெருங்கினான்.

அச்சோ, மாட்டுனேனா? என்று வேகமாக யோசித்து, நீ என்னோட சீனியர்ல்ல. நீ கோபமா இருந்தியா? என்ன செய்றன்னு பார்க்க ஆர்வமாக இருந்ததா? அதான் வந்தேன்.

“நம்பும் படி இல்லையே!” என்று அவள் கையை பிடித்து, உள்ள வா என்று இழுக்க, இல்ல சீனியர். நான் அப்புறம் வரேனே! என்று அசட்டு புன்னகையை உதிர்த்தாள். அவன் முறைக்க வேகமாக கதவை பாராது முட்டி கீழே விழ இருந்தவள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதீபனின் பனியனை அவள் பிடிக்க, இருவரும் கீழே விழுந்தனர்.

அவள் மீது அவன் விழுந்து அவளை பார்த்துக் கொண்டிருக்க, அதீபா என்று அவள் கண்கள் வெளியே நோக்கியது. அவனும் திரும்பி பார்த்தான். ராமவிஷ்ணு இருவரையும் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவன் அப்பொழுதும் எழவில்லை.

நான் போகணும் என்று அவள் சொல்ல, போ..என்றான்.

எழுந்தால் தானே போக முடியும்?

நீ எங்க போகணும்? என்று குரல் கம்ம கேட்டான். அவளும் அவனை போலே, என்னோட ப்ரெண்ட்ஸோட போகணும் என்ற அவளது இதழ்களை அவன் கையால் பிடித்தான்.

என்ன பண்ற? என்று அவள் அவனை தள்ள, முடியுமா? அவளால். உஃப் என்று அவள் காற்றை தள்ள தென்றலாய் அதை உணர்ந்தான் அதீபன். பின் அவன் அப்பா முகம் நினைவில் வர, வேகமாக திரும்பி பார்த்தான்.

அவர் எங்க போனார்? அதீபன் கேட்க, கீழ தான் போயிருப்பார். அவர் எல்லாரிடமும் சொல்லிடுவாரா? திட்டுவாரா? அவள் பாவம் போல் கேட்க, அதெல்லாம் பார்த்துக்கலாம் என்று வேகமாக எழுந்து சீக்கிரம் நீ போ. நான் வாரேன் என்றான் பதட்டமாக.

என்ன ஆச்சு? பிரச்சனையா? அவள் கேட்க, ஒரு நிமிடம் என்று கீழே எட்டி பார்த்தான். அவன் அப்பா பார்வை சிவநந்தினி மேல் இருந்தது. அவர் நேற்று நடந்து கொண்ட விதம் நினைவு வந்து, இன்று என்ன செய்யப் போகிறாரோ? என்ற பயம் தொற்றிக் கொண்டது.

ஓ..செட் என்று வேகமாக உள்ளே வந்து நீ போ. நான் குளிச்சிட்டு வாரேன் என்று அவன் செல்ல, தாட்சாயிணியும் கீழே எட்டி பார்த்தாள். அவளுக்கு ஏதும் புரியவில்லை. தோளை குலுக்கி விட்டு அவள் கீழே செல்ல, எல்லாரும் அவளை பார்த்தனர்.

நேராக சிவநந்தினி அருகே வந்து மெதுவாக, ஆன்ட்டி அவன் வித்தியாசமா நடந்துக்கிற மாதிரி இருக்கு. சும்மா சும்மா பதட்டமாகிறான் என்று அவள் சொல்ல, அவர் ராமவிஷ்ணு தன்னையே பார்க்கிறான் என்ற பதட்டத்தில் இருந்திருப்பார்.

பார்க்கிறேன்ம்மா என்று அவர் பேச்சும் குழற, அவரை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே அறைக்கு சென்று தயாராகி வந்தாள் தாட்சாயிணி.

அனைவரும் சாப்பாட்டு மேசையில் தயாராக அமர்ந்திருந்தனர். டீ சர்ட்டை போட்டுக் கொண்டே அதீபன் வந்து அவர்களுடன் சாப்பிட அமர்ந்தான். எல்லாரும் இருவரையும் பார்த்தனர். ஆனால் அவர்கள் ஒவ்வொரு சிந்தனையுடன் அமர்ந்திருந்தனர். தாட்சாயிணி மட்டும் அவ்வப்போது அவனை பார்த்தாள்.

எப்பொழுதும் போல் சிவநந்தினி அனைவருக்கும் சாப்பாடு பரிமாற, விஷ்ணு அவரை அது வேணும், இது வேணும் என்று சிவநந்தினி அருகே இருக்கும் படி செய்தான். அதீபன் அவரை சீற்றத்துடன் பார்த்தான். இதனை தாட்சாயிணி, அவள் அம்மா ரேவதி, ரணா, முக்கியமாக நிதினும் கவனித்தான்.

பாட்டி ராமவிஷ்ணு செய்வதை பார்த்து, எதுக்கும்மா அங்கேயும் இங்கேயும் போயிட்டு வர்ற? முதல்ல சின்னவன் முடிக்கட்டும். அங்கே இருந்து பரிமாறு. புள்ளைக்கு ரொம்ப பசிக்குது போல என்றவுடன் அதீபன் கோபமாக பாட்டியை முறைத்தான். சிவநந்தினி பயத்துடன் நின்றார். நிதினுக்கும் அவர் செய்கை வித்தியாசமாக இருந்ததால் அவனும் கவனிக்க ஆரம்பித்தான்.

எனக்கு அந்த சாம்பார் என்று அவர் அருகே இருந்த சாம்பாரை காட்டுகிறேன் என்று சிவநந்தினி மீது தட்டி விட்டு, அய்யோ சாரி..சாரி..சூடா இருக்கா? என்று அவர் எழ, அனைவரும் பதறினர். செழியன் அவரை பார்த்து விட்டு, உனக்கு பசக்குதுல்ல சாப்பிடு.

நந்து, உனக்கு அடிபடலையே? என்று செழியன் எழுந்தார்.

எனக்கு ஒன்றுமில்லை. நீங்க சாப்பிடுங்க. நான் வாஷ் பண்ணிட்டு வாரேன் என்று அவர்கள் அறைக்கு சிவநந்தினி செல்ல, எனக்கு போதும்மா. பசி போயிருச்சு என்று எழுந்த விஷ்ணு கையை வாஷ் பண்ணிட்டு அனைவரும் சாப்பிடும் இடத்திற்கு வந்து,

அண்ணா, நியூ பிராஜெக்ட் விவரம் கொடு. பசங்க வேகமாக வர்றதா சொன்னாங்க. கிளம்பணும் என்றார்.

அது, என்னோட அறையில் மேசை மீது தான் இருக்கு. எடுத்துக்கோ என்றார்.

நமட்டு புன்னகையுடன் அறைக்குள் சென்று நேராக குளியலறைக்கு சென்றார் ராமவிஷ்ணு. சிவநந்தினி வாஷ் செய்து விட்டு பார்த்தால் இடுப்பிற்கு கீழே முழுவதும் ஆடை ஈரமாகி இருந்தது. ஆடையை மாற்றலாம் என்று நகர்ந்தார். அந்நேரம் குளியலறைக்குள் வந்த ராமவிஷ்ணுவை பார்த்து பயந்து பின்னே சென்றார். சவர் ஆன் ஆக பயந்து விலகினார். சிவநந்தினி ஆடை முழுவதும் நனைய, அவரை மேலிருந்து கீழாக அவர் பார்த்தார்.

இதற்கு மேல் முடியாது என்று சிவநந்தினி சத்தம் போடுவதற்குள் அவர் வாயை அடைத்து அவரை உணர்ந்தார் விஷ்ணு. சிவநந்தினி கண்ணீருடன் அவரை அடிக்க, மறு கையால் சவர் லாக்கை உடைத்து விட்டார். நீர் அதிகமாக விழுந்தது. சிவநந்தினிக்கு மூச்சே நின்றது போல் இருந்தது.

செழியன் எழ, அதற்குள் பொறுக்க முடியாமல் அதீபன், நான் அம்மாவை பார்த்துட்டு வாரேன் என்று முனைப்புடன் பேசி விட்டு செல்ல, என்னாச்சு இவனுக்கு? என்று பாட்டி கேட்க, நானும் அம்மாவை பார்த்துட்டு வாரேன் என்று நிதின் எழ, ரணாவும் தாட்சாயிணியும் எழுந்து ஏதும் கூறாமல் சென்றனர்.

என்னடி புள்ளைங்க சாப்பிடாம எங்க போறாங்க? பாட்டி கேட்க, ரேவதி கண்களும் அவர்கள் சென்ற திசையில் இருக்க, செழியன் புன்னகையுடன் அமர்ந்தார்.

அதீபன் தண்ணீர் சத்தம் கேட்டு குளியலறைக்குள் சென்று பார்த்தான். யாரோ வருகிறார்கள் என்றவுடன் சிவநந்தினியை விட்டு அந்த சவரின் லாக்கை சரி செய்வது போல் நடித்தார் ராமவிஷ்ணு.

நடுங்கிக் கொண்டிருந்த சிவநந்தினி அதீபனை பார்த்து ஓடி வந்து சிறு பிள்ளை போல் அணைத்து அழுதார்.

இங்க என்ன பண்றீங்க? மிரட்டுவது போல் அதீபன் சத்தமிட்டான். நிதின் இருவரும் நனைந்து இருப்பது, சிவநந்தினி அழுவதை பார்த்து அவனுக்கு புரிந்தது. அவன் அவரை விடாது முறைத்துக் கொண்டு, முதல்ல வெளிய வா அதீபா என்று சத்தமிட்டான்.

பசங்களுக்கு தெரிந்து விட்டது புரிந்தும் பயமேயில்லாது அவ்வப்போது சிவநந்தியை அவர் பார்க்க, இருவரும் மனதினுள் கொந்தளித்தனர். ரணாவும் தாட்சாயிணியும் புரியாது விழித்துக் கொண்டிருந்தனர்.

அம்மா, உனக்கு அடிப்படலைல்ல. ரொம்ப சுட்டுருச்சா என்று விஷ்ணுவை பார்த்தாள் ரணா.

நீங்க கிளம்பலாம் என்று நிதின் ராமவிஷ்ணுவை பார்த்து சொன்னான். அவர் அவனை முறைத்துக் கொண்டே சென்றார்.

ஏன் சித்தப்பா, வாயிலே வேணும்ன்னு சொல்லி இருந்தா அம்மா சாம்பாரை எடுத்து கொடுத்திருப்பாங்கல்ல? என்று ரணா கேட்க, புன்னகைத்தபடி சென்றவரை நிறுத்தி வெளியே இருப்பவர்களுக்கு கேட்கும்படி வந்த வேலைய மறந்துட்டீங்களா சார்? நியூ பிராஜெக்ட் பைல் தேவையில்லாயா சார்? நிதின் கேட்க, அது அண்ணா சொன்ன இடத்தில் இல்லையே? என்று அவர் சாதாரணமாக வெளியேற, ஆமா நான் தான் மறந்துட்டேன் என்று செழியன் சொன்னார்.

சார்..என்று திகைத்து நிதின் அவரை பார்க்க, அதீபனும் கோபமாக பல்லை கடித்தான். செழியன் கண்ணை மூடி திறந்தார்.

செழியனுக்கும் தன் தம்பிக்கு தன் மனைவி மீது கண் என்பது முன்பே தெரிந்து தான் இருக்கிறது. அவர் அம்மா மனம் உடைந்து போகக்கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தார். இதுவரை பார்வையை மட்டும் செலுத்திய விஷ்ணு தன் மனைவியை நெருங்க நினைப்பது தெரிந்து தான் செய்தார். அதற்கும் காரணம் உள்ளது. ஆனால் பசங்க தான் அறியவில்லை.

செழியன் விஷ்ணுவை பார்த்து, தம்பி பிராஜெக்டை பார்த்து கையாளு. ஓனர் வெறியானால் நம்ம பிராஜெக்ட் கை நழுவி விடும் என்று அவரை முறைத்து விட்டு அறைக்குள் சென்றார்.

சிவநந்தினியை செழியன் பார்க்க, அவர் அதீபனை அணைத்து அழுவதை நிறுத்தவில்லை. அம்மா, அழாதீங்க என்று “என்ன நடக்கிறதென்று கூட தெரியாமல்” அவருக்கு ஆறுதலாக அவர் தோளில் ரணா கையை வைத்தாள்.

தன் கணவனை பார்த்த சிவநந்தினிக்கு அழுகை மேலும் கூடியது. அழுது கொண்டே அவரை அணைத்தார்.

“ஒன்றுமில்லைம்மா” என்று சமாதானப்படுத்தி அவர் நெற்றியில் முத்தமிட்டு அவர் அம்மாவை அழைத்தான். விஷ்ணு கண்கள் குரூரமாக செழியனை எறிக்க, அம்மா இவளை உங்கள் அறைக்கு அழைச்சிட்டு போய் ஆடை மாற்றி விடுங்கள்.

நந்தும்மா, ரொம்ப சூடு பட்டுருச்சா? பாட்டி அக்கறையுடன் தன் மருமகளை ஆராய்ந்தார்.

அம்மா, கூட்டிட்டு போங்க என்று செழியன் சத்தமிட அவர் சென்றார். ரவிக்குமார் அவர்களிடம் வர, முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னேல விஷ்ணு, நீ கிளம்பு என்று படுக்கையில் சாய்ந்தார் செழியன்.

என்னடா கிளம்பலையா? ரவிக்குமார் கேட்க, இல்லடா, நேரமாகுது நீ கிளம்பு என்று வெளியே நின்ற கார்ட்ஸை அழைத்தார் செழியன்.

தங்கச்சிக்கு ஒன்றுமில்லையே?

இல்லடா. நான் பார்த்துக்கிறேன் என்று அவரை அனுப்பி விட்டு அதீபனையும் நிதினையும் பார்த்தார். அவர்கள் இருவரும் கோபமுடன் அவரை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரணா, தாட்சாயிணியும் சிவநந்தினியுடன் சென்றனர். பின் ரணா நிதினை அழைக்க வந்த போது, செழியன் சத்தம் கேட்டு ஒட்டு கேட்க ஆரம்பித்தாள். அவளை தேடி வந்த தாட்சாயிணி வாயை பொத்தி அவளையும் தன்னுடன் கேட்க வைத்தாள்.

அப்பா, என்ன நடக்குது? என்னோட அப்பா பார்வை, செய்கை ஏதும் சரியில்லை அதீபன் கேட்க, ரணாவும் தாட்சாயிணியும் பார்த்துக் கொண்டனர்.

Advertisement