Advertisement

அத்தியாயம் 27

நந்து, பாப்பா எங்க? செழியன் ரணாவை பற்றி கேட்டார்.

அவளுக்கு சோர்வா இருக்காம். தூங்கிட்டா. எல்லாரும் சாப்பிட வாங்க என்று ராசு எல்லாத்தையும் எடுத்து வை என்றார் சிவநந்தினி. அந்த அக்கா எடுத்து டைனிங் டேபிளில் எடுத்து வைக்க, அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.

எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, எனக்கு சாம்பார் வேணும், அது வேணும் இது வேணும் என ராமவிஷ்ணு சிவநந்தினியிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.

சும்மா சும்மா அங்கேயேயும் இங்கேயும் சுத்தி சுத்தி வரதுக்கு அங்கேயே நின்னு விஷ்ணு சாப்பிட்ட புறவு இங்கிட்டு வாடி என்றார் பாட்டி.

சரிங்க அத்தை என்று அவரும் எடுத்து வைக்க, அவ்வப்போது அவரும் சிவநந்தினியை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே சாப்பிட்டார். யாரும் இதை சரியாக கவனிக்காமல் விட்டனர்.

எல்லாரும் சாப்பிட்டு சென்ற பின், ராசு பாத்திரத்தை விலக்கி விட்டு நீ கிளம்பு. நாளை பார்த்துக்கலாம் சிவநந்தினி சொல்ல, வேலைக்காரம்மா ராசு அவர் வேலையை ஆரம்பிக்க, சிவநந்தினி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அம்மா, வேலை முடிஞ்சது. நீங்க சாப்பிட்ட பின் இதையும் முடிச்சிட்டு கிளம்புறேன்ம்மா என்றாள் அவள்.

புள்ளைக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னேல்ல. நீ போய் கவனி. இதை நான் முடித்து விடுவேன். நீ கிளம்பு என்று அவரை அனுப்பி விட்டு அவர் சாப்பிட்டதை சமையலறைக்கு எடுத்து சென்று அவர் வேலையை கவனித்துக் கொண்டிருந்தார்.

ஹாலில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ராமவிஷ்ணு சமையலறைக்கு வந்து ஒரு நிமிடம் சிவநந்தினியை நின்று பார்த்துக் கொண்டிருந்தார். தண்ணீரை திறந்து விட, நீர் சிவநந்தினி ஆடையில் பட்டது. கழுவி விட்டு, சொருகி இருந்த புடவையை எடுத்து உதறிக் கொண்டே திரும்பினார். ராமவிஷ்ணு நெற்றியில் இடித்து நின்றார்.

அவர் நெருக்கத்தை கூட உணராது அய்யோ, ரொம்ப வலிக்குதா? என்று சிவநந்தினி அவர் நெற்றியில் கை வைக்க, அவர் கையை பிடித்த விஷ்ணுவின் பார்வையோ அவரது நனைந்த இடையிணைந்த புடவையில் பட, வேகமாக விலகினார் சிவநந்தினி. ஆனால் விஷ்ணு நந்தினி கையை விடவில்லை.

விஷ்ணு, கையை விடு..

எனக்கு தேனீர் வேணும் என்று நந்தினி கையை விட்டார். அவர் பயத்தில் பின்னே சென்று பாத்திரத்தில் இடிக்க, பாத்திரம் கீழே விழுந்தது.

தற்செயலாக அறையை விட்டு வெளியே வந்த அதீபன் சத்தம் கேட்டு சமையலறை பக்கம் வந்தான்.

ஏய், பார்த்து என்று அவர் அருகே செல்ல, இல்லை நீ அங்கேயே நில்லு. நான் நல்லா தான் இருக்கேன். நான் தேனீர் எடுத்து வாரேன். நீ போ என்றார் சிவநந்தினி.

சரி, என்னோட அறைக்கு எடுத்துட்டு வா என்றார் ராமவிஷ்ணு.

அறைக்கா? அதெல்லாம் என்னால முடியாது. என்னோட பிள்ளைய நான் பார்க்க போகணும்.

எந்த பிள்ளைய சொல்ற?

அதீபனை பார்க்க போகணும். இரண்டே நிமிடத்தில் கொண்டு வாரேன். ஹாலில் இரு. வந்து தாரேன் என்றார்.

அவன் என்னோட..நம்ம பிள்ளை தான?

போறீயா? ஒரு நாளாவது மரியாதையா அண்ணின்னு கூப்பிட்டு இருக்கியா? அவர் கேட்க, அண்ணியா? உன்னை அண்ணி என்று நான் அழைக்கணுமா? நெவர். சரி நீ எடுத்துட்டு வா. நான் அறைக்கு போகிறேன்.

இங்கேயே குடிக்கிறதா இருந்தா நான் போடுகிறேன். இல்லைன்னா நான் பையனை பார்க்க போறேன்.

தாராளமாக போ. நானும் அருகே தானே இருப்பேன் என்றார்.

உனக்கு என்னாச்சு? என்று கண்ணீருடன் சிவநந்தினி கேட்க, விஷ்ணு புன்னகையுடன் நந்தினி கண்ணீரை துடைத்து விட்டு, இதுக்கே அழுதாள் என்ன செய்வது? என்று அவர் கன்னத்தை பிடித்தார்.

சிவநந்தினி அவரை தள்ளி விட்டு கண்ணீருடன் வெளியே வந்தார். அதீபன் மறைந்து கொண்டான். வெளியே புன்னகையுடன் வந்த தன் அப்பாவை முறைத்துக் கொண்டிருந்தான்.

வெளியே வந்த சிவநந்தினி அதீபன் அறைக்கு செல்ல மாடி ஏற முனைந்தார். வெளியே வந்த அதீபன், செழியன் அறையிலிருந்து வருவது போல் பாவனை செய்து “அம்மா, எங்க போறீங்க?” சத்தமிட்டான். ராமவிஷ்ணு ஏதும் அறியாதது போல் அவனிடம் வந்து, வா..அறைக்கு போகலாம் என்று அழைத்தார்.

இல்ல, நான் செழியன் அப்பா, அம்மா அறையில் இருக்கேன் என்றான். சிவநந்தினி கண்ணீரை நன்றாக துடைத்து விட்டு அதீபனிடம் வந்தார்.

என்னை பார்க்க தான் போறீங்களா? நான் உங்கள் அறையில் உங்களை தேடினேன் என்றான் அதீபன்.

சிவநந்தினி அதீபனை அணைத்துக் கொண்டார்.

என்னாச்சும்மா? ஆடை ஈரமாக இருக்கு?

அது..என்று நந்தினி பதட்டமாக, ராசக்கா எங்க? உங்கள வேலை பார்க்க விட்டுட்டாங்களா?

இல்லய்யா, அவ பிள்ளைக்கு உடம்பு சரியில்லை. அதான் நான் போக சொன்னேன்.

வாங்க முதல்ல ஆடைய மாத்திக்கோங்க. எனக்கு இந்த ஆடை பிடிக்கவேயில்லை என்று அவன் அப்பாவை பார்த்துக் கொண்டே அதீபன் சொல்ல, அவர் முறைத்தார்.

வாங்கம்மா, நாங்க போகலாம் என்று செழியன் அறைக்கு அழைத்து சென்று அன்று அவர்களுடனே இருந்து விட்டான் அதீபன். அவன் மனதில் பாட்டி வீட்டில் வைத்து அம்மா இதை தான் சொன்னாங்களோ! என்று நினைத்தான்.

அதீபன் அம்மா நிர்மலா, நான் வந்து விட்டால் பிரச்சனை முடியாது. இனி தான் ஆரம்பம் என்று கூறி இருப்பார். அதை நினைத்துக் கொண்டே தூங்கிப் போனான். ஆனால் சிவநந்தினி கண்ணீருடன் தூங்காமல் இருந்தார்.

திடீரென விழித்த செழியன் தன் மனைவி கண்ணீரை பார்த்து பதறி அமர்ந்து, என்னாச்சு நந்து? கேட்டார்.

பயமா இருக்கு. பிரச்சனை பெருசா இருக்கிற மாதிரி இருக்கு என்று ராமவிஷ்ணு செயல்களை மறைத்தார்.

அதெல்லாம் யாருக்கும் ஏதும் ஆகாது. என் மீது உனக்கு நம்பிக்கையில்லையா?

அப்படியில்லங்க. பாம் வரை போயிருக்காங்க. நம்ம பசங்க..பயமா இருக்கு என்று அவரை அணைத்து அழுதாள்.

செழியன் அவரை சமாதானப்படுத்தி தூங்க வைத்து விட்டு அவரும் தூங்கினார்.

அதிரதனும் நிதினும் வீட்டிலிருந்து நேராக நிலையத்திற்கு வந்தனர். சுஜி அவர்களை பார்த்து, இந்த நேரத்துல வந்துருக்கீங்க? எனக் கேட்டாள்.

பசங்க எல்லாரும் எங்க?

எல்லாரும் தூங்க போயிட்டாங்க. சிலர் மட்டும் படிக்க ஹாலில் இருக்காங்க.

எழிலன் இருக்கானா? அதிரதன் கேட்டான்.

ஆமா, பசங்க படிக்க அவன் தான் உதவுகிறான்.

பார்க்கலாமா?

இது என்ன கேள்வி? வாங்க பார்க்கலாம் என்று இருவரையும் அழைத்து சென்றாள்.

எழிலன் ஜீவா, தேவா அருகே அமர்ந்து எல்லாருக்கும் விளக்கி கொண்டிருக்க, வெண்பா தூங்கி வழிந்து கொண்டிருந்தாள். அவன் கோபமாக கையிலிருந்த சாக்பீஸை அவள் மீது தூக்கி எறிந்தான்.

அவள் விழித்து, எழிலா கொஞ்சம் நேரம் என்று கேட்க எழுந்து அவளிடம் வந்து, அவளது புத்தகத்தை பிடுங்கி உயரமான செல்ஃப் ஒன்றின் மீது வைத்து, முதல்ல இதை எடு. அப்புறம் படிக்கலாம் என்றான். எல்லாரும் படிங்க என்று சத்தமிட்டு கையை கட்டி அவளை பார்த்துக் கொண்டிருந்தான் எழிலன்.

எழிலா, என் செல்லம்ல்ல. நீயே எடுத்துக் கொடுத்திடேன் அவள் கொஞ்ச, அவன் அவளை முறைத்தான். என்ன செய்தாலும் மசிய மாட்டேங்கிறானே? என்று ப்ளீஸ்..ப்ளீஸ்..என்று அவன் கையை பிடித்து கெஞ்சினாள்.

ஏய், அந்த செல்ஃப் மேல ரொம்ப பெரிய மரப்பல்லிய பார்த்தேன். அது எவ்வளவு விசம் தெரியுமா? அதை தொட்டால் செத்து போயிருவோமாம் என்று படிக்கும் இடத்திலிருந்து ஒருவன் சத்தமாக குரலெழுப்பி வெண்பாவை பயமுறுத்தினான்.

எவன்டா அது? படிக்கிற வேலைய பாருங்கடா எழிலன் சத்தமிட, பேசியவன் தலையில் ஓர் அடி போட்டான் நளன்.

அதெல்லாம் ஒன்றுமே இல்லை. நீ எடு என்றான் எழிலன்.

நீ ரொம்ப மோசம்டா. இப்படியெல்லாம் யாராவது தண்டனை கொடுப்பாங்களா? நான் மட்டும் அந்த பல்லியை தொட்டு செத்து போனால் ஆவியை வந்து உன்னையும் கொன்னுடுவேன் என்று அவனை திட்டுகிறேன் என்ற பெயரில் எதையோ செய்து கொண்டே நாற்காலியை எடுத்து போட்டு ஏறினாள்.

சுஜி அவளிடம் செல்ல வர, அதிரதன் அவளை தடுத்து அவர்களை எல்லாரும் பார்த்துக் கொண்டிருந்தான்.

வெண்பா எக்கி கையை மேலே தூக்கி சரியாக புத்தகத்தை தொட்டாள். அதே நேரம் மாயா பல்லி என்று வேகமாக எழுந்தாள். அவளருகே வந்த பல்லியை பார்த்து அவள் சத்தமிட்டு எழ,

அடியேய், பல்லி இல்லடி புத்தகம் தான்டி. கத்தியே என்னை சாவடிச்சிருவ போல வெண்பா புலம்பிக் கொண்டே புத்தகத்தை எடுக்க, கீழே பசங்க பல்லியை விரட்டி விட்டு மாயாவை பார்க்க, அவள் ஜீவா கையை பிடித்து அவன் பின் மறைந்து கொண்டு இவர்கள் விரட்டுவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

டேய், ஜீவா “பிடிச்சாலும் பிடிச்ச புளியங்கொம்பா தான் பிடிச்சிருங்க” . இந்த சின்ன பல்லிக்கே பயப்படுறா. அங்க பாரு நம்ம வெண்பாவை “பல்லியாவது கொக்கா” என்று தேவா நண்பன் சொல்லி முடிக்க, எடுத்த புத்தகத்தின் மேலிருந்த பல்லியை பார்த்து புத்தகத்தை கீழே போட்டு அவளும் கீழே சரியாக எழிலன் மீதே விழுந்தாள். விழுந்த வேகத்தில் அவன் கன்னத்தில் “உம்மா” கொடுத்து விட்டு, அய்யய்யோ..என்னோட முதல் முத்தம் இப்படி போச்சே என்றாள்.

அடியேய் என்று சுஜி வேகமாக அவர்களிடம் ஓடினாள். அனைவரும் கலகலவென சிரித்தனர்.

தேவா நண்பன் எழுந்து இருவர் அருகே வந்து, இப்ப தான வெள்ளெலி உன்னை பத்தி பில்டெப் கொடுத்தேன். உனக்கு மாயாவே பரவாயில்லை.

அண்ணா, இப்படியே ரொமான்ஸ் செய்தால் எப்படி? எழுந்திருங்க அவன் கூற, டேய் அவனுக்கு குறுக்கெலும்பு உடைஞ்சிருக்கும் போ என்று நளனும் அருகே வந்தான்.

வெண்பா, கொட்ட கொட்ட விழிக்காமல் முதல்ல எழுந்திரு. அவனுக்கு என்னாச்சுன்னு பார்க்கணும் என்று சுஜி அவளை பிடித்து இழுத்து தள்ளி விட்டு எழிலா ஒன்றுமில்லையே? பதறினாள்.

அவன் எழுந்து அமர்ந்து அக்கா, ஒன்றுமில்லை என்று சொல்ல, அவன் கன்னத்தில் வெண்பா இதழ் எச்சிலாக லேசாக தெரிய, சுஜி அவளை திட்டிக் கொண்டே எழிலனை நிற்க வைத்து, இப்பொழுது தான் தனியே நடக்க ஆரம்பித்தான். அதுக்குள்ளவா? சுஜி புலம்ப, அக்கா கையை எடுங்க. எனக்கு ஒன்றுமில்லை. தேவையில்லாம அவள திட்டாதீங்க என்று நகர்ந்து அவளை பார்த்தான்.

அவளை பயமுறுத்திய பல்லியை விரட்டிக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து எழிலன் புன்னகைக்க, ரதா அந்த பொண்ணை அவனுக்கு பிடிச்சிருக்கு என்றான் நிதின்.

பார்த்தாலே நல்லா தெரியுது என்ற அதிரதனும் புன்னகையுடன் அவர்களிடம் வந்தான். ஏதும் உதவி வேணுமா? அவன் கேட்க, சார் இந்த நேரத்துல வந்துருக்கீங்க? நேரமாகுதே! தேவா கேட்க, எல்லாரும் நல்லா இருக்கீங்களான்னு பார்க்க வந்தேன் என்றான் அதிரதன்.

அதிரதனை பார்த்துக் கொண்டே எழிலன் ஓரிடத்தில் அமர்ந்தான். அதிரதன் அவனை நோக்கி வர, வெண்பா அவனை கடந்து எழிலன் அருகே வந்து அமர்ந்து, எழிலா உனக்கு ஒன்றுமில்லையே? வெண்பா கேட்க,

விழுந்தப்ப தூக்கி கூட விடாம நீ எங்க போன?

இல்ல. அந்த பல்லி மறுபடியும் பயமுறுத்தினா நீ தாங்க மாட்டேல்ல. அதான் அதை விரட்ட போயிருந்தேன்.

அப்ப என்னை விட பல்லி முக்கியமா போச்சா? அவன் கேட்க, டேய் என்னடா இருவரும் லவ்வர்ஸ் மாதிரி பேசிக்கிறாங்க ஜீவா நண்பன் கேட்க, வெண்பா அவனை பார்த்துக் கொண்டே எழிலன் கையை பிடித்து, சாரி எழிலா பல்லிய உனக்காக தான் விரட்டினேன். நான் பல்லிக்கெல்லாம் பயப்பட மாட்டேன். ஆனால் திடீர்ன்னு வந்ததா. அதான் பயந்து உன் மேல விழுந்துட்டேன். நீ நல்லா தான இருக்க? உனக்கு ஒன்றும் இல்லையே? அவள் கேட்க,

நான் நல்லா தான் இருக்கேன். என் கையை விட்டு புத்தகத்தை எடுத்துட்டு வா என்றான். அவள் முகம் சுருங்கியது.

நம்ம கையை எப்ப வேண்டுமானாலும் பிடிச்சுக்கலாம். ஆனால் ஒரு மாதம் உனக்கான நேரம் நான் சொன்னது உனக்கு நினைவிருக்குல்ல? எழிலன் கேட்க, ஆமா..ஆமா..என்று எழுந்து புத்தகத்தை எடுத்தாள். அனைவரும் இருவரையும் ஆவென பார்த்தனர்.

நீ சந்தேகமா தான கேட்ட? அவங்க இருவருமே லவ் பண்றோம்ன்னு நிரூபிச்சுட்டாங்க. போதுமா உனக்கு? எங்களுக்கு முன்பே தெரியும் என்று அருணா சொல்ல,

உனக்கு முன்னாடி தெரியுமா? லவ்வ சொல்லிட்டானா? என்னிடம் சொல்லவேயில்லை என்று நளன் எழிலனை பார்த்தான். அவன் நளனை பார்த்து புன்னகைத்தான்.

ஃபிகர் வந்தா ப்ரெண்டு கண்ணுக்கு தெரிய மாட்டான்னு சொல்றது உண்மைதான் போல. டேய் ஆனாலும் நம் நட்பு இருபது வருடமானது. இப்படி சொல்லாம விட்டுடியேடா நளன் வருத்தப்பட, அருணா புன்னகையுடன்”இந்த மூஞ்சி தான் பாக்க பக்கா காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருக்கு” என்று கேலி செய்ய, அவன் அவளை முறைத்தான்.

அதிரதன் எழிலன் அருகே அமர, நிதினுக்கு முன் சுஜி அவனிடம் அமர்ந்து, எழிலா வெண்பாவை காதலிக்கிறாயா? அவள் அதிர்ச்சியுடன் கேட்டாள்.

ஏன்க்கா, நாங்க காதலிக்க கூடாதா? மற்றவர் போல் யார் என்னை காதலிக்கிறாங்கன்னு தெரியாம புத்தகத்தோட நான் இருக்கமாட்டேன் என்றான் எழிலன்.

சுஜி அதிரதனை பார்த்தாள். என்னடா சொல்ற?

ஒரு பொண்ணோட காதல் கூட தெரியாமல் புத்தகமும் கையுமாவா? யாரை சொல்ற? நிதின் கேட்க,

அது உங்க யாருக்கும் தெரிந்து ஏதும் ஆகப் போறதில்லை என்று அதிரதனை பார்த்து, என்ன பேசணும்? கேட்டான்.

பேச ஏதாவது இருந்தால் தான் வரணுமா? அதிரதன் கேட்க, உங்களுக்கு தான் நிறைய வேலை இருக்குமே மிஸ்டர் அதிரதன் என்றான்.

முதல் முறை பார்த்த போது உன்னிடம் ஏதோ என்னை பார்த்தது போல் தெரிந்தது. ஆனால் இப்பெல்லாம் என்னிடம் கோபமா பேசுற மாதிரி இருக்கு? நான் உன் அக்காவை காதலிப்பது பிடிக்கவில்லையா? அதிரதன் கேட்டான்.

அவனை பார்த்த எழிலன், அப்படியில்லை. அக்கா விருப்பப்பட்டால் கல்யாணம் பண்ணிக்கோங்க. அவள் தான் என்னை தம்பியாகவே நினைக்கலையே? அவள் விசயத்தில் நான் எப்படி தலையிடுவது? அவன் கேட்க, சுஜி கோபமாக, எழிலா அதிகம் பேசாத. அவ எல்லா கஷ்டத்தையும் உனக்காக தான் தாங்கிக்கிட்டு இருக்கா என்றாள்.

எனக்காகவா? சும்மா பேசாதீங்க அக்கா. அவளும் எங்க அப்பா மாதிரி தான் நடந்துக்கிறா. அவர் தான் பிரச்சனையில பொண்ணு மாட்டீறக் கூடாதுன்னு அவள பள்ளி விடுதியில் சேர்த்தார். கடைசியில் அவள் மனசுல இருந்த கஷ்டத்தை சொல்லாமல் பைத்தியமா தான் ஆனால். இப்ப கூட பைத்தியம் தெளில அவன் சொல்ல, நிதின் அவனை ஓங்கி அறைந்தான்.

அவளுக்கு ஆறுதலா நீ இருந்திருந்தா அவளுக்கு இந்த அளவு பிரச்சனை வந்திருக்காது என நிதின் கத்தினான்.

நீங்க பேசாதீங்க சார். அவள் வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு தெரியாம பின்னாடியே சுத்தியவர் தான நீங்க. எங்க அம்மா, அப்பா இருக்கும் போதே டிவோர்ஸ்க்கு அப்பளை செய்து ஆறு மாதம் கழித்து தான் டிவோர்ஸ் கிடைச்சது.

இனி என்னோட பொண்ணு கஷ்டப்படாம அவள பக்கத்திலே வச்சிக்கணும்ன்னு அப்பா..கம்பெனிய விக்கிறத பத்தி பேசினாரு. அங்க போனா வர நேரமாகும். எங்களுடன் நேரம் செலவழிக்க முடியாதுன்னு தான் விற்க தான் பேச உங்க அப்பா கம்பெனிக்கு வந்தார் என்று நிதினிடம் சொன்னான்.

யார சொல்ற?

ரவிக்குமார் சாரை தான் சொல்றேன். அவருக்கு உங்க ரெண்டு பேரோட அப்பாவையும் நன்றாக தெரியும். ஆனால் எப்படின்னு? தெரியாது. அம்மாவும் போய்ட்டு வாரேன்னு தான் போனாங்க. ஆனால் அவங்க அக்கா வீட்ல இறந்து கிடந்தாங்க. என்ன நடந்தது? எனக்கு ஏதும் புரியவில்லை. அந்த வக்கீலும் அங்கே இல்லை. அவனை பார்க்க நான் அவன் ஆபிஸிற்கு சென்றேன். நான் பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்ததால் உள்ளே யாரும் விடவில்லை.

அந்த அஷ்வினியை தேடிப் பார்த்தேன். அவளும் கிடைக்கவில்லை. அவன் அக்காவுடன் இருந்த வீட்டிற்கு போகவில்லை. நான் இரு நாட்களாக சென்று பார்த்து வந்தேன். அவன் வரவேயில்லை. ஆனால் யாரோ அப்பாவை மிரட்டி வர வச்சிருக்காங்கன்னு மட்டும் தெரிந்தது.

மிரட்டினாங்களா? யாரு? மிரட்டினாங்கன்னு உனக்கு எப்படி தெரிய வந்தது? அதிரதன் கேட்டான்.

அப்பா போனில் தான் பார்த்தேன். அக்கா அப்பா நினைவிலே வீட்டிலிருந்து வெளியே வரவேயில்லை. நானும் விட்டுட்டேன். ஆனால் மூன்றாவது நாள் அவளும் வீட்டில் இல்லை. கடிதம் எழுதி வைத்து விட்டு போயிட்டா. எங்க போனா? என்ன செய்றா? பாதுகாப்பா இருக்காலா? என்று அனுதினமும் தூங்காமல் காத்திருந்தேன். ரொம்ப கஷ்டமா இருந்தது. அம்மா, அப்பா தான் போயிட்டாங்கன்னு இவள் என்னோட இருந்திருக்கணுமா? இல்லையா?

இப்ப தான் எவனோ அவளை மிரட்டியது தெரிந்தது. அப்படி எவனோ ஒருவன் மிரட்டினால் விட்டு போயிருவாலா? சேர்ந்து பிரச்சனையை பார்த்திருக்கலாம்ல? எனக்கு என் நிலையை விட அவளை நினைத்து தான் ரொம்ப கஷ்டமா இருந்தது. நான் எங்க ஊர்ல தான் இருந்தேன். அந்த வக்கீலை பார்க்க தான் வந்து வந்து சென்றேன்.

ஆனால் அவளுக்கு பதில் தினகரன் அங்கிள் தான் கால் பண்ணி பேசினார். அக்கா நல்லா இருக்கா என தேற்றி நளன் என் பக்கம் இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.

தினகரனா? அவரை உங்களுக்கு தெரியுமா? அதிரதன் கேட்க, அப்பாவும் அவரும் ப்ரெண்ட்ஸ் என்றான்.

ஆமா, சங்கீதன் சொன்னான்ல என்ற அதிரதன்..சரி, இவனை உனக்கு தெரியுமா? என்று விக்னேஷ்வரன் புகைப்படத்தை காட்டி கேட்டான்.

தெரியும். எங்க ஊர்தான். அவனுக்கும் அக்காவை பிடிக்கும்.

அவனை பற்றி உனக்கு தெரிந்ததை சொல்லு அதிரதன் கேட்க, எதுக்கு இவனை கேக்குறீங்க?

இவன் தான் பிரச்சனை செய்பவன் போல் தெரியுது என்று அதிரதன் சொல்ல, எழிலன் சிரித்தான்.

ஏன்டா சிரிக்கிற? நிதின் கேட்க, அப்புறம் என்ன? அக்காவுக்கு சின்னதா அடிப்பட்டா கூட அப்படி தாங்குவான். அவள் அழுதால் அப்பாவுக்கு முன்  அவன் வந்து நிற்பான். அக்கா மீது அவ்வளவு பிரியமானவன். அவனால் அக்கா அழுவதை பார்க்கவே முடியாது. இவன் அக்காவை கஷ்டப்படுத்துவானா?

அவனோட தங்கை இறந்து போனதால் கூட மாறி இருக்கலாமே? நிதின் கேட்டான்.

தங்கையை அவனுக்கு பிடிக்கும் தான். ஆனால் அந்த பொண்ணு அவனோட உண்மையான தங்கை இல்லை. சித்தி பொண்ணு தான். அவங்களும் இல்லை. அவங்களுக்கு அம்மா இல்லை. அப்பா மட்டும் தான். அந்த பொண்ணை அவன் நல்லா பார்த்துப்பான். ஆனால் அந்த பொண்ணுக்கு அவனை பிடிக்காது.

அக்கா படிப்பு முடிந்தவுடன் இவனுக்கு தான் அக்காவை மணமுடிக்கணும்ன்னு அம்மா, அப்பா இருவருக்குமே ஆசை. ஆனால் போக போக அவன் நடவடிக்கை மாறி குடிபழக்கமெல்லாம் வந்து விட்டது. அதனால் அவனை வீட்டினுள் சேர்க்காமலே அப்பா விட்டுட்டாங்க. பின் தான் இந்த வக்கீலை முடித்து வைத்தாங்க. அவன் அதுக்கும் மேல நம்பர் ஒன் பொறுக்கி.

எங்க நேரமோ என்னமோ? என்று நொந்து கொண்டான் எழிலன்.

கடைசியா அவனை எங்க பார்த்த? அதிரதன் கேட்டான்.

அவனோட வீட்ல தான் இருந்தான். ஒரு மாதத்திற்கு முன் கூட நான் எங்க வீட்டுக்கு போனேன். ஆனால் அவன் வீடு பூட்டியே இருந்தது. மனம் கேட்காமல் விசாரித்த போது அவன் எப்பாவது வருவான் செல்வான். ஆனால் அதிகம் தங்க மாட்டான்னு சொன்னாங்க. வர்ற நேரமும் தெரியாது போகிற நேரமும் தெரியாது என்றான் எழிலன்.

அவன் மாறின்னான்னு சொன்னேல்ல. அப்ப அவன் ஏன் உன் அக்காவை கஷ்டப்படுத்த நினைத்திருக்க கூடாது?

ஆமா, அதுவும் பாயிண்ட் தான். ஆனால் அவனால் அக்கா அழுவதை பார்க்க முடியாது என்பது மட்டும் உறுதி என்றான் எழிலன்.

அவனுக்கு வலது புருவத்தின் மேல் தழும்பு ஏதும் இருக்குமா? அதிரதன் கேட்டான்.

இல்லையே? அவனுக்கு வெளியே தெரியும் அளவு தழும்பி ஏதுமே கிடையாது என்றான்.

வினு கல்யாணத்தோட வந்தானா? நீ பார்த்தாயா? ஆமா வந்தானே? பார்த்த நினைவு கூட இருக்கே என்று அவன் அலைபேசியை எடுத்து புகைப்படத்தை அலசிக் கொண்டிருந்த எழிலன் அதிர்ச்சியோட, இதுக்கு வாய்ப்பே இல்லை என்று பதறினான்.

மூவரும் புகைப்படத்தை பார்க்க, அதில் விக்னேஷ் வலது புருவத்தின் மேல் தழும்பு இருந்தது. மூவரும் அவனை கேள்வியுடன் நோக்கினர்.

இல்லை, சிறுவயதிலிருந்தே அவனுக்கு அங்கே தழும்பு இல்லை. திடீரென எப்படி வந்திருக்கும்? எழிலன் கேட்க, நீ பார்க்காத சமயத்தில் கூட வந்திருக்காலாமே? சுஜி கேட்க,

அக்கா, வாய்ப்பே இல்லை. கல்யாணத்துக்கு முதல் கூட அவனை பார்த்தேன். அந்த எங்கேஜ்மென்ட் புகைப்படம் என எடுத்து காட்ட, அனைவரும் அதிர்ந்தனர்.

ஹேர்ஸ்டைல், ஸ்மைல், தழும்பில்லாத புருவம் என இருந்தான். இதை விட முக்கியமான விசயம். இவனும் வேறொரு பொண்ணும் காதலிச்சாங்க. அந்த பொண்ணையும் அழைச்சிட்டு சந்தோசமா வந்திருந்தான் என்றான் எழிலன். அவர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி.

அப்ப, இவன் விக்னேஷ் இல்லையா? நிதின் கேட்க, ஆமா சார். கண்டிப்பா இவன் வேறோருவன். அச்சோ அந்த பொண்ணு யாராக இருக்கும்? அப்படின்னா உண்மையான விக்னேஷ் எங்க இருக்கான்? எழிலன் பதட்டமாக கேட்டான்.

இப்ப கூட ஆத்வியுடன் காரில் வரும் போது வினு அவனாக இருக்க வாய்ப்பில்லைன்னு தான் புலம்பிக் கொண்டிருந்தாள் என்றான் நிதின்.

சரி, நீ ரெஸ்ட் எடு. நாங்க பார்த்துக்கிறோம். இது என்னோட நம்பர். இதுக்கு எல்லா புகைப்படத்தையும் அனுப்பு. உதவி தேவைன்னா மறக்காம கூப்பிடு என்று அதிரதன் கூறி விட்டு நிதினுடன் கிளம்பினான். எழிலன் அவனை பார்த்துக் கொண்டே, எல்லாரும் அக்காவை பார்க்கும் முன் நீ பார்த்திருக்கலாமே? என்று மனதில் நினைத்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

ஹாஸ்பிட்டலுக்கு வந்த அதிரதன் நேராக காவியன் இருக்கும் அறைக்குள் நுழைந்து சினத்துடன் அமர்ந்தான். மிதுனும் காவியன் அவனை பார்க்க, அவன் பின் வந்த நிதின் வினுவ பார்க்க போலையா? கேட்டான்.

இல்ல. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. தழும்பிருக்கும் விக்னேஷ் தான் கொலைகாரனா? இல்லை வினுவுடன் சிறுவயதிலிருந்து பழகியவன் கொலைகாரனா?

ஒன்று நாம வினுவோட கனெக்ட் ஆகிறோம் இல்லை அவள் நம்முடன் கனெக்ட் ஆகிறாள். அவளை காதலிப்பதால் தான் கொலைசெய்கிறானா? ஆனால் அந்த தழும்புள்ளவன் தான் பிரணாவை பார்த்து புன்னகைத்தவனா? என்று அதிரதன் தன் சிந்தனைகளை சொல்ல, ரணா இதில் எப்படி வந்தாள்? என்று காவியன் அதிரதனை பார்த்தான்.

ரதா, கொஞ்சம் அமைதியா இரு என்று அலைபேசியை எடுத்து நான் அனுப்பிய படத்தில் இருப்பவனை தான் நீ பார்த்தவனா? நன்றாக சிந்தித்து சொல்லு என்று நிதின் சங்கீதனிடம் கேட்க, பார்த்துட்டு சொல்றேன் என்று அவன் வைத்து விட்டு பார்த்தான்.

சார், என்ன பேசுறீங்க? காவியன் கேட்க, நீ ஓய்வெடு. நாங்க பார்த்துப்போம் என்றான் அதிரதன்.

ரதா, இதை பாரு அந்த கட்டிடத்திலிருந்து தள்ளி விட்டு கொலை செய்தவன் தழும்புள்ளவன் தான் நிதின் சொல்லிக் கொண்டிருக்க அவன் அலைபேசி அழைத்தது. அதிரதன் அதனை பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னடா மாமா, எப்படிடா வினுவ விட்ட? நண்பனுக்காக விட்டு கொடுத்துட்டியா? உன் நண்பன் எந்த அளவு வினு அருகே நெருங்குகிறானோ? அவனுக்கு ஆபத்து தான். பாரேன் அவனோட தங்கச்சி கூட நல்லா தான் இருக்கா. அழுதா ஆனாலும் அவ்வளவு அழகு என்னோட நேத்து மாதிரி.

உன்னோட நேத்துவா? கொன்றுவேன் பார்த்துக்கோ நிதின் சத்தமிட, வெடுக்கென பிடுங்கிய அதிரதன் உங்களுக்கெல்லாம் என்ன தான் பிரச்சனை?

எனக்கு பிரச்சனையா? ம்ம்..ஆமாடா. பிரச்சனை தான்.

அதெல்லாம் தெரியுது. உனக்கு வினு தான் வேணும்ன்னு. ஆனால் அது உன்னால முடியாது.

அவன் பயங்கரமாக சிரித்தான். அப்புறம் ஏன்டா இவ்வளவு கோபத்தோட இருந்த? செம்ம சீறலான நடை தான். ஆனால் என்னை உன்னால் ஏதும் செய்யமுடியாது. உனக்கு எப்படிடா காதலெல்லாம் வந்தது? ஆமா, என் நேத்து தான் அவ்வளவு அழகாச்சே. காதல் வராதா?

என் நேத்துவா? அதென்னடா உனக்கு அவள் மீது அவ்வளவு உரிமை?

அவளை விடு ? உன்னோட குட்டிம்மா. செம்ம க்யூட்டா இருக்கா? அதான் அவளை கண்ணுக்கே காட்டாம வச்சிருந்தீங்களோ?

ஹேய், என்ன பேசுற? உறுமினான் அதிரதன்.

அழும் போது கூட அழகு தான். எனக்கு நேத்து வேணும் தான். ஆனால் உன்னோட தங்கச்சிய ஒருநாள் வச்சிக்க நினைக்கிறேன். என்ன மச்சான் அனுப்புறீங்களா? என்று அவன் நகைத்தான்.

டேய், யாரை யாரோட அனுப்புறது? என கத்திய அதிரதன் அங்கிருந்த பொருட்களை உடைத்தான். நிதினும் சங்கீதனும் அவனை நிறுத்த முயற்சித்தனர். காவியன் எழுந்து அவன் அலைபேசியை வாங்கி காதில் வைத்தான்.

யாருடா நீ?

யாருப்பா அது? காவியனா? கையில காயமெல்லாம் சரியாகிடுச்சா. உனக்கு நான் குறியே வைக்கலை. ஆனா நீயும் உன் அக்காவிடமிருந்து தள்ளி இரு. இல்ல ஆள் அனுப்ப வேண்டி இருக்கும்.

அப்புறம் உன்னோட ரணா இப்ப செத்து போயிருக்க வேண்டியது. ஆனால் உங்க ப்ரெண்ட்ஸ் இருக்காங்களே. படு ஷார்ப் டா. அவள் சாவதில் எனக்கும் விருப்பமில்லை. அவளை வச்சிக்க தான் உன் மச்சானிடம் கேட்டேன். என்னம்மா கோபப்படுறான்.

அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை காவியன் சொல்ல, இருக்கு. இருக்குப்பா. ஆனால் பாவம் உங்களுக்கு தான் தெரியல. அவள் உன்னிடம் சின்சியரா இருக்கா. நீ தான் அவள கஷ்டப்படுத்துற..

உங்க கதைய நீங்களே பார்த்துக்கோங்க. காவியா உன் அறையில் அருகே இருக்கும் உன் மச்சானிடம் போனை கொடு கோபத்தை அதிகப்படுத்தலாம் என்றான்.

மச்சானா? என்று அதிரதனை காவியன் பார்த்தான். பார்த்தது போதும் குடுப்பா என்றான் அவன்.

அலைபேசியை அணைத்து விட்டு காவியன் அதிரதனை பார்த்து, அவனுக்கு நாம் என்ன செய்கிறோம்ன்னு கூட தெரியுது? அவன் இங்கே தான் இருக்கான் என்றான்.

இங்கேயா?

ஆமா, அவன் நம்மை பக்கமிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறான். இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து தான் சார்.

சீக்கிரம் அக்காவை அழைச்சிட்டு போங்க.

யோசனையாக தன்னை நிதானப்படுத்தி, யாரும் வெளிய வராதீங்க என்று அதிரதன் மருத்துவரை பார்க்க சென்றான்.

காவியன் அறைக்கு வந்து இப்பொழுதே இங்கிருந்து கிளம்புகிறோம் என்று அதிரதன் சொல்ல, அவன் அலைபேசி அவனை அழைத்தது.

எழிலன் அதிரதனை அழைத்து, அவனை பேசவிடாமல் மாயா சொன்ன விசயத்தை சொன்னான். இவர்கள் பேசியதை படித்துக் கொண்டிருந்த பசங்க அனைவரும் கவனித்தனர். அவள் அவளுக்கு தோன்றியதை சுஜியிடம் சொன்னாள்.

தழும்புள்ளவன் தான் கொலைகாரனாக இருக்க முடியும். அவன் விக்னேஷ் மாதிரி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றிக் கொண்டாலும் அந்த தழும்பை மாற்றாமல் இருக்கான். அப்படின்னா அவனுக்கு அந்த தழும்பினால் ஏதோ காரண காரியம் இருக்கும். அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கணும்.

பிளாஸ்டிக் சர்ஜரி சாத்தியமா? எழிலன் பக்கமிருந்த சுஜி கேட்டாள்.

அவளருகே இருந்த மாயா பேச ஆரம்பித்தாள். கண்டிப்பாக சாத்தியம் அக்கா. பணமிருந்தால் போதும். அழகுக்காக நடிகர், நடிகைகள் கூட மூக்கு, உதடு என அனைத்து உறுப்புகளைகளையும் மாற்றி இருக்காங்க. இவனும் கண்டிப்பாக வசதி படைத்தவனாக தான் இருப்பான். இல்லையெனில் அவனால் ஆட்களை கூட்டு சேர்க்க முடியாது. பணமில்லாமல் இவ்வுலகில் யாரும் யாருக்காகவும் ஏதும் செய்ய மாட்டாங்க. அதுவும் கொலைகாரன் பக்கம் எவன் இருப்பான்?

கண்டிப்பாக அக்காவுடன் உண்மையான விக்னேஷையும் தொடர்ந்து கவனித்து கொண்டு தான் இருந்திருக்கான். அவன் அசந்த நேரம் பார்த்து அவனை தூக்கிட்டு இவன் அவ்விடம் வந்திருக்கான்.

அசந்த நேரமா? எழிலன் யோசனையுடன் அந்த பொண்ணு மீதான காதலாக இருக்குமோ? கேட்க, இருக்கலாம் என்றாள் மாயா.

எழிலா புகைப்படத்தை அனுப்பு. நான் பார்க்கிறேன். அவனுடன் இருந்த பொண்ணை உன் அக்கா திருமணத்தோட பார்த்திருக்க. இருவர் வீடும் பக்கம் தானே? நீ உன் அக்கா திருமணத்தின் முன் அந்த பொண்ணை அவனுடன் பார்த்திருக்கிறாயா?

இல்லையே. எனக்கு பார்த்த நினைவேயில்லை. அவன் இதற்கு முன் சொல்லவும் இல்லை. அக்கா திருமணத்தோட அவன் சொன்னதே எனக்கு அதிர்ச்சி தான். அப்பொழுதிலிருந்த நிலையில் அவனுக்காக மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அந்த பொண்ணை நான் முன்னும் பார்த்ததில்லை. பின்னும் பார்க்கவில்லை.

ஒரே நாள்ல எப்படி லவ் வரும்? அதிரதன் கேட்க, காதலிக்கு நேரம், இடமெல்லாம் தெரியாது. பார்த்தவுடனே கூட வரும் என்று எழிலன் வெண்பாவை பார்த்தான்.

டயலாக் எல்லாம் பெருசா இருக்கே? நளன் கேட்க, சும்மா இருடா. காதலிக்கிறவங்களுக்கு தான் இதெல்லாம் புரியும். புத்தகமும் கையுமாக சுத்துனா எப்படி தெரியும்? என்றான் எழிலன் .

உனக்கென்ன என் கோபமா? அதிரதன் கேட்க, எழிலன் மனதினுள் உன்னால தானே என் அக்கா ரொம்ப கஷ்டப்பட்டா என்று எண்ணிக் கொண்டிருக்க,

என்னடா சத்தத்தையே காணோம்? மனதிற்குள் திட்டுவது போல் இருக்கே? அதிரதன் கேட்க, ஆமா திட்டிக் கொண்டு தான் இருக்கேன்.

நான் என்னடா செய்தேன்?

உங்களோட பேச எனக்கு நேரமெல்லாம் இல்லை.

எனக்கு அந்த பொண்ணு மேல சந்தேகமா இருக்கு? அவன் காதலிக்கும் பொண்ணும் மறுநாள் வரலை தழும்புள்ளவன் தான் வந்தான். ஒரு வேலை அவனுக்கும் இதில் சம்பந்தம் இருக்குமோ? கேட்டான் எழிலன்.

யாரை சொல்ற எழிலா? அதிரதன் சீரியசாக கேட்டான்.

அதான் என்னோட அக்காவை கல்யாணம் பண்ணானே அவன் என்றான் எழிலன். அதிரதன் யோசனையுடன் இருந்தாலும் அவனுக்கு மரியாதை கூட இவன் கொடுக்கலை என்ற அற்ப சந்தோசம் அதிரதன் மனதினுள்.

அவனுக்கு என்ன?

அவன் அக்கா கேட்டவுடன் யோசிக்ககூட இல்லை. உடனே கையெழுத்திட்டு கொடுத்திட்டான்.

நிஜமா தான் சொல்றீயா? என்று அதிரதன் அதிர்ச்சியுடன் கேட்க, ஆமா உடனே கொடுத்துட்டான்.

சரி, அவனையும் பார்க்கிறேன் என்று அதிரதன் சொல்ல எழிலன் அலைபேசியை அணைத்து விட்டு முகம் வாட அமர்ந்திருந்தான்.

என்னாச்சுடா? சுஜி கேட்க, “அக்கா வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே?” அவன் வருத்தப்பட, ஏய் நல்லதுன்னு நினை. அவன் மட்டும் விவாகரத்து செய்யலைன்னா வினு ரொம்ப உடைஞ்சு போயிருப்பா என்றாள் சுஜி.

“தேங்க்ஸ்க்கா” கஷ்டப்படும் போது உதவியா இருக்கீங்க என்றான் அவன்.

ஆமாடா, நானெல்லாம் உன் கண்ணுக்கே தெரியலைல்ல? நளன் கேட்க, என்னடா இப்படி சொல்லீட்ட? நான் இப்ப எல்லார் முன்னும் உயிரோட நிற்கவே நீ தான் காரணம். நீயில்லைன்னா நான் இல்லாமலே போயிருப்பேன் என்றான் எழிலன். இருவரது நட்பையும் அனைவரும் மகிழ்ச்சியாக பார்த்தனர்.

நிது, கிளம்ப நீ இவங்களுக்கு உதவு. டாக்டர் யுவிக்கு செவிலியர் ஒருவரை அரேஞ் பண்றதா சொன்னாங்க. நான் பார்த்துட்டு வரவேற்பு பொண்ணிடம் லட்ஜரில் விக்னேஷ் பெயர் இருக்கான்னு பார்த்துட்டு வாரேன் என்றான் அதிரதன்.

இருக்காது என்றான் காவியன். மூவரும் அவனை பார்த்தனர்.

ஆமா, விக்னேஷ் பற்றி நேத்ரா அக்காவுக்கும் அவங்க தம்பிக்கும் தெரியும். அதனால் கண்டிப்பாக லட்ஜரில் அவன் உண்மையான பெயர் தான் வைத்திருப்பான். நீங்க லெட்ஜரை பார்ப்பதை விட யுவியை நேரத்தை கணக்கிட்டு இந்த ஹாஸ்பிட்டல் ஓனரிடம் பேசண்ட் விவரத்தை அவர்கள் பாதுகாத்து வைத்திருக்கும் கணினி பெட்டகத்தில் பார்க்க கேளுங்க. இன்று சேர்ந்தவர்கள் பட்டியலை அதில் புகைப்படத்துடன் வச்சிருப்பாங்க. அதை பார்த்தால் அவனை கண்டுபிடித்து விடலாம் என்றான்.

நல்ல ஐடியா தான். ஆனால் அவர் அவன் ஆளாக இருந்தால் என்ன செய்வது? மிதுன் கேட்க, வேறேன்ன அங்கு இருப்பவனை திசை திருப்பி நாமே பார்க்கணும் என்றான் காவியன்.

திருட்டுத் தனமாக அது எப்படி முடியும்? நிதின் கேட்க, அது நீங்களா தான் செய்யணும். எல்லாத்தையும் நானே சொல்ல முடியுமா? காவியன் கேட்க, ஜீனியஸ்டா நீ? அதிரதன் அவன் தோளில் தட்ட, ரதா அவன் திருட்டுத்தனமா உன்னை பார்க்க சொல்றான் நிதின் சொல்ல,

நமக்கு தேவை கொலைகாரன் இருக்கும் அறை தான். அதை நேர்வழியில் போனால் பார்க்கவே முடியாது. அவனுக நம்மள போட்டுட்டு போய்க் கொண்டே இருப்பானுக. இவன் சொல்வது தான் சரி. இன்று ஆட்கள் அதிகமாக சேர்ந்தது போல தெரியவில்லை. ஒரே நொடியில் பார்த்துட்டு வந்திடலாம் என்றான் அதிரதன்.

நிதின் அவனை ஆச்சர்யமாக பார்த்தான்.

பார்க்கும் போது அவனது பெயர் முடிந்தால் விவரத்தையும் பார்த்துட்டு வாங்க சார் என்றான் காவியன். அவன் மனதில் இவர் எனக்கு மச்சானா? இவன் என்னை குழப்பப் பார்க்கிறான். ஒரு வேலை ரணா என்னை காதலிப்பதால் சொல்லி இருப்பானோ?

முதல்ல வினுவிடம் விசயத்தை சொல்லி விட்டு பார்த்துட்டு வாரேன். தயாரா இருங்க என்று வினு அறைக்கு அவன் செல்ல, நிதினை நெருங்கிய காவியன் என்ன நடந்தது? ஏதோ நடந்துருக்குல்ல என்று கேட்க, சங்கீதன் எதுக்கு அப்படி சொல்லணும்? என அவன் கேள்விகளை எழுப்ப, நிதின் ரணாவை கொல்ல வந்ததை சொன்னான்.

அவளுக்கும் என்னோட ப்ரெண்ட்ஸூக்கும் ஏதும் ஆகலைல்ல? காவியன் கேட்க, மற்ற இருவரும் அவனையே பார்த்தனர்.

எதுக்கு இப்படி பாக்குறீங்க?

இல்ல, ரணா உன்னோட ப்ரெண்டே இல்லன்னு சத்தம் போட்ட. அதுவும் ப்ரெண்ட் லிஸ்ட்ல இல்லாம ஸ்பெசலா அவளை தனியா கேக்குற? மிதுன் கேட்டான்.

இல்லையே? அவள் ப்ரெண்டில்லை என்பதால் தனியாக கேட்டேன் என்று சமாளித்தாலும் அவளிடம் பேச வேண்டும் போல் இருந்தது காவியனுக்கு. இருவரும் அவனை சந்தேகமாக பார்த்தனர்.

 

 

 

 

 

 

 

Advertisement