Advertisement

இருவரும் மேலே வந்தனர்.

யோகி அப்படியே சோபாவில் அமர்ந்துக் கொண்டான்.. இலகுவாக. இருவருக்கும் முகம் பார்க்க முடியாத.. சங்கடம். உணர்வுகளை சமாதானம் செய்து பேசினால் மட்டுமே பேச்சு வரும்.. இல்லை, கோவத்தில் அடி.. காதலில் முத்தம்.. என எது முந்துகிறதோ.. அந்த உணர்வு வந்துவிடும். 

மிர்த்திக்கா, தனதறைக்கு சென்றுவிட்டாள்.

யோகி “மிர்த்தி..” என அழைத்தான். அவளுக்கு கோவம் என எண்ணி, அவளை அழைத்தான்.

மிர்த்திக்கா முகம் கழுவி வந்தாள்.

யோகி “எங்கடி போன” என்றான்.

மிர்த்திக்காவிற்கு என்னமோ குழப்பமான மனநிலை “என்ன வேண்டும் உங்களுக்கு சொல்லுங்க..” என்றாள்.

யோகி “ஏன் டி, கத்தற” என்றான்.

மிர்த்திக்கா அமைதியாக கிட்சென் சென்று விட்டாள்.

யோகிக்கு, கோவத்தில்.. அவள் தன் முகம் பார்த்து பேசாத எரிச்சலில் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டான்.

மிர்த்திக்கா காபி கலந்துக் கொண்டு வந்து பார்க்க, யோகி அங்கே இல்லை. அப்படியே உட்கார்ந்து அழ தொடங்கினாள் சத்தமில்லாமல் பெண்.

மீண்டும் இருவருக்குள்ளும் கோல்ட் வார். பேசவில்லை.

இரண்டு மாதங்கள் கடந்தது. 

யோகியின் பிறந்தநாள் வந்தது. அதிகாலையில், பெண்ணவள் அழைத்தாள். யோகி எடுக்கவில்லை.

எல்லாம் அவன் விருப்பம்.. அவனை மனதில் இடித்துக் கொண்டாள்.

யோகி, அதிகாலையில்தான் உறங்க தொடங்கினான். வேலை. அதனால், அவனின் போன் அழைத்தது.. காதில் விழவில்லை. அசந்து உறங்கிவிட்டான். 

பின் காலையில், அவசமாக எழுந்து கோர்ட் கிளம்பிவிட்டான். அப்புறம் பேசலாம்.. அப்புறம் பேசலாம்.. என எண்ணி, அன்றைய பொழுது கடந்துவிட்டது.

மிர்த்திக்காவிற்கு, காலையிலேயே மூட் ஆஃப். போன வருடம் நடந்தது எல்லாம் அப்படியே பசுமையாக ஞாபகம் வந்தது பெண்ணுக்கு.

காலையில் உணவு இறங்கவில்லை. மதியம் மட்டும் உணவு எடுத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பினாள்.

ஜெகன், இவர்களின் எந்த நிகழ்வுகளுக்குள்ளும் வருவதில்லை. அதனால், என்ன நடக்கிறது என அவன் கண்டுக் கொள்ளவில்லை.

இரவு யோகி வீடு வரும் போதே பனிரெண்டு. கொண்டாட்டங்கள் ஏதும் இல்லை. தன் சீனியரோடு டிஸ்கஷன்.. அதனால், நேரமாகிவிட்டது. 

யோகிக்கு, தன்னவளிடம் பேச வேண்டும் போல இருந்தது. யோசிக்கவில்லை அழைத்தான்.

மிர்த்திக்கா உறக்கம் வராமல்.. விழித்து இருந்தவள் இப்போதுதான் கண் அசர தொடங்கினாள். போன் அழைத்தது. அவனை தவிர யார் இந்த நேரத்தில் அழைக்க முடியும்.. அவன்தான் என.. தூக்க கலக்கத்திலும் எண்ணம் மிர்த்திக்கு.

‘எப்போது கூப்பிட்டாலும் எடுக்கணுமா’ எனதான் எண்ணம்.. பெண்ணவளுக்கு, அப்படியே கண் மூடிக் கொண்டாள்.

ஆனாலும், விடாமல் அழைத்தான்.. நான்கு முறை. எடுக்கவில்லை பெண். உறக்கமும் இல்லை, அவளுக்கு. அமைதியாகியது போன். மிர்த்திக்கு, அவஸ்த்தை.. பேசுவதா.. வேண்டாமா.. என யோசனை.

மீண்டும் அழைப்பு வந்தது.

மிர்த்தி ஒரு பெருமூச்சோடு அவனின் அழைப்பை ஏற்றாள்.

யோகி “மிர்த்தி.. என்ன உண்மையாகவே தூங்கிட்டியா” என்றான்.

மிர்த்தி “ம்.. இல்லை..” என்றாள் இரண்டும்மாக.

யோகி “நாளைக்கு மதியம் உன் ஆபீஸ் வருவேன்.. உன் ஆதார் கார்ட் T.C  எடுத்து வைச்சிக்கோ, நான் வந்து வாங்கிக்கிறேன்” என்றான்.

மிர்த்தி “எதுக்கு” என்றாள்.

யோகி “ம்… ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு அப்ளே பண்ணனும். அப்போதான் ஒருமாசம் டைம் கிடைக்கும். உங்க அப்பாக்கு டைம் வேண்டும் தானே.. அதான். மறந்திடாத எடுத்துட்டு வந்திடு” என்றான்.

மிர்த்திக்கா “என்ன விளையாடுறீங்களா” என்றாள், எழுந்து அமர்ந்துக் கொண்டாள்.. தூக்கம் எல்லாம் களைந்து போனது.

யோகி “ம்… அர்த்தராத்திரியில், தூங்கறா மாதிரி நடிக்கிற உன்னை எழுப்பி.. கதை பேசனும்ன்னு வேண்டுதல்.. அதுவும் போனில்.. டென்ஷன் ஆக்காத” என்றான்.

மிர்த்தி “யோகி, விளையாடாதீங்க” என்றாள்.

யோகி “ஹேய்.. எவ்வளவு ஓப்பெனா சொல்லிட்டு இருக்கேன்.. எனக்கு கல்யாணம் செய்துக்கணும் உன்னைன்னு. நீ விளையாடுறேன்னு சொல்ற” என டென்ஷனாக அவளையே திரும்ப கேட்டான்.

மிர்த்திக்கு, அவன் தன்னை தேடுகிறான் என்பது அத்தனை ஆனந்தம்தான் ஆனால், இப்படி ரிஜிஸ்டர் மேரேஜ்.. என்பது தவறுதானே.. ஆனால், இவன் சும்மா சொல்லுகிறான் என நினைத்தாள்.. இவனின் பிறந்தநாள்.. நான் அழைத்தும் எடுக்கவில்லை.. இரவில் இந்த நேரத்தில் அழைத்து.. நாளைக்கு இதெல்லாம் எடுத்து வந்திடு.. என்கிறான். குரலே பிடிவாதமாக இருக்கு.. இது தப்பு.. என மனம் சிந்தனைக்கு சென்றது, பெண்ணுக்கு.

யோகியின் குரல் அவளின் சிந்தனையை தடுத்து.. “என்ன டி, யோசிக்கிற, இன்னமும் உங்க அப்பா பேச்சுதான் முக்கியமா. எத்தனை மாசம் ஆகுது. உன் அப்பா.. கல்யாண பேச்சை எடுக்கவே இல்லை. என்ன எதிர்பார்க்கிறார் அவர். காலிலும் விழுந்தாச்சு டி..” என்றான் கோவமாக.

மிர்த்திக்கா “யோகி, இப்படி எல்லாம் பேசாதீங்க. அப்பா கண்டிப்பா சம்மதிப்பார். இன்னும் கொஞ்சநாள் வெயிட் பண்ணலாமே” என்றாள்.

யோகி “இதுக்குதான் நான் உன்கிட்ட பேசறதே இல்லை. எ.. எனக்கு எப்படி சொல்லி உனக்கு புரிய வைக்கிறதுன்னு தெரியலை. எனக்கு பாமிலி வேணும்.. ரொம்ப வருஷமா தனியாவே இருக்கேன். உனக்கு புரியாதா? இல்ல, புரிஞ்சிக்க மாட்டேன்கிற.. உன்கிட்ட சொல்றேன் பாரு..” என்றான்.

மிர்த்திக்கா “யோகி, நான் அப்பாகிட்ட பேசுறேன். கொஞ்சம் டைம் கொடுங்க.. ப்ளீஸ். அதற்காக இப்படி எல்லாம் யோசிக்காதீங்க. அது தப்புதானே.” என்றாள்.

யோகி “என்னமோ செய்.. எனக்கு ஒரு வாரத்தில் சொல்லு.” என்றான்.

மிர்த்திக்கா “ப்ளீஸ் யோகி” என்றாள்.

யோகி “நிறைய வெயிட் பண்ணிட்டேன்” என்றான்.

மிர்த்தி “நான் மட்டும் என்னவாம்.. என்னை யோசிக்கவே மாட்டிங்களா” என்றாள்.

யோகி இரண்டு நொடி அமைதியானான்.. பின் “நிறைய யோசிக்கிறேன். அதனால்தான் சொல்றேன். சீக்கிரம் கல்யாணம் செய்துக்கணும். ம்..” என்றான்.. தொண்டையில் எதோ நெருடல் போல.. இத்தனை நேரம் சண்டைகட்டிக் கொண்டிருந்தவனின் குரல் கரகரத்தது.. நான்கே வார்த்தைகளில்.. தன்னுடைய ஆதங்கத்தை சொன்னான், அவளவன்.

மிர்த்திக்காவிற்கு அவனின் குரலில்.. என்னமோ செய்தது. கண்கள் மின்ன “கல்யாணம் செய்துக்கலாம்ன்னு அப்படின்றத கூட இவ்வளவு டெரரா சொல்றீங்க. என்ன பர்த்டே ஸ்பெஷல்லா” என்றாள்.

யோகி தளர்ந்து அமர்ந்தான்.. “ச்சு.. பெரிய பர்த்டே. ஒண்ணுமேயில்ல.. கோவில் கூட போக முடியலை. உன்னை பார்க்க முடியலை. என்ன.. பர்த்டே..” என சொல்லிக் கொண்டே.. மல்லாந்து படுத்துக் கொண்டான்.

மிர்த்தி அமைதியானாள்.

யோகியே மீண்டும் “நீ எப்படி இருக்க.. காலையில் உன் கால்ஸ் எடுக்க முடியலை. வொர்க்.” என்றான்.

மிர்த்திக்கா “ம்.. இல்ல, உங்களுக்கு கோவம்” என்றாள்.

யோகி மறுக்கவில்லை “ம்.. இருக்குதான். ஆனால், நீ சொல்றமாதிரி சண்டை போடுற எண்ணம் போயாச்சு. ஆனால், ஒன்னு கேட்கனும்.. என்னை விட இன்னமும் உன் அப்பாதான் உனக்கு முக்கியம். ம்…” என்றான்.

மிர்த்திக்கா அவசரமாக “யோகி..” என்றாள் யாசிக்கும் குரலில்.

யோகி “என்ன டி.. உண்மையை சொல்லு. சொல்லமாட்ட.. ஆனாலும் எனக்கு புரியுது. எனக்கு எல்லாம் பழக்கம்தான்.. அம்மா பாசம் இல்லை.. அப்பாவும் இல்லை.. கூடபிறந்தவங்க அன்பு இல்லை.. நிவிதான், அப்போ அப்போ என்கிட்ட பேசுவாள். என்னை அனாதையாக்காமல் வைத்திருக்கிறாள். ஆனால், நான் அன்னிக்கு அனாதையாகிட்டேன் டி. ரொம்ப நேரம் வெயிட் பண்ணேன். ஆனாலும், பாரேன்.. உன்னைத்தான் தேடுறேன். என்ன ஜென்மமோ நான்.” என்றான், ஆர்பாட்டமே இல்லாமல் தன்னவளின் மனதை கீரி காயம் செய்துக் கொண்டிருந்தான்.

மிர்த்திக்காவிற்கு கண்களில் கண்ணீர் வந்தது.. பேச முடியவில்லை எத்தனை பெரிய வார்த்தை.. அதை அவன் சொல்லும் விதம்.. இன்னமும் வலிக்கிறது பெண்ணுக்கு.

யோகி “நீ அப்படியே இரு.. உங்க அப்பா பெண்ணாவே இரு. நான் இப்படியே இருந்துக்கிறேன்.” என்றான்.

இன்னமும் வார்த்தைகள் வரவில்லை பெண்ணுக்கு.. பேச முடியவில்லை. இன்னமும் அமைதிதான் மிர்த்திக்கு.

யோகி “சரி.. என்ன சொன்னாலும் நீ கேட்கமாட்ட.. தூக்கிட்டு போய்தான் கல்யாணம் செய்யணும் போல.. அதுவும் நடக்குமா தெரியலை.” என்றான்.

மிர்த்தி “ எல்லாம் நடக்கும் யோகி.. நீ..ங்க.. எதுவும் நினைக்காதீங்க” என்றவள் “நான் வைக்கிறேன்” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

அன்று இரவு முழுவதும் உறக்கமே இல்லை மிர்த்திக்காவிற்கு. யோகிக்கு நல்ல உறக்கம்.. கொட்டி தீர்த்துவிட்டானே.. அதான் நல்ல உறக்கம். பெண்ணவள் அவன் சொல்லிய அநாதை என்ற வார்த்தையில் அப்படியே உறைந்து போனாள்.. வேறு யோசனையே இல்லை அவளுக்கு.

காலையில் எழுந்ததும்.. தம்பியிடம் சொல்லி.. தன்னை திருச்சிக்கு பஸ் ஏற்றிவிட சொன்னாள். ஜெகன் ‘என்ன அக்கா.. அங்க எதுக்கு போற.. அப்பா உன்னை திரும்ப விடமாட்டார் அக்கா.. வேண்டாம், நீ யோகி சொல்றதை கேளு அக்கா.. அப்புறமா சமாதானம் செய்துக்கலாம் அப்பாவை’ என எடுத்தது சொன்னான்.

மிர்த்திக்கா காதிலேயே வாங்கவில்லை.

காலை, எட்டு மணிக்கே பஸ் ஏறிவிட்டாள்.

 

Advertisement