Advertisement

நீ என் அலாதிநேசம்!

25

வாசு, பெண்ணினை மேலும் மேலும் சோதித்தார் எனலாம்.. 

வாசு, மகனிடம் சொல்லி வைத்தார்.. தன் அக்காவிடம் சொல்லி வைத்தார். மகன் எப்படியும் அங்கே செல்ல கூடாது என்பது அவரின் விருப்பம். அதற்காக, கடுமையாக சொல்லி வைத்தார். 

ஜெகன் தன் அக்காவிடம் ஏதும் தந்தை சொன்னது பற்றி பேசிக் கொள்ளவில்லை. ஆனால், காமாட்சி அத்தை மிர்த்தியிடம் பேசும் போதெல்லாம் “அதெப்படி அவங்க கூப்பிடலாம் உன்னை. இதெல்லாம் சரியில்லை. ஜெகன் சொன்னான். அவனிடமும் சொல்லி வைச்சிருக்கேன். இன்னமும் உன் அப்பன் கோவப்பட்டு.. அவனுக்கு ஏதாவது ஆகிட போகுது. இன்னும், உங்க அப்பா மனசு மாறலை. நமக்கு அப்பாதானே முக்கியம் கண்ணம்மா.. அத்தோட, ஒரு திவசத்திற்கு எப்படி உன்னை கூப்பிடலாம்.. ஏதாவது நல்லதாக இருந்தால் சரி. எனக்கு தோணுது.. நீ அங்கெல்லாம் இப்போ போகாத டா.. அப்பா இன்னமும் கோவிச்சுக்குவான். அது நல்லதும் கிடையாது மிர்த்தி.” என பல்வேறு வார்த்தைகளால் மிர்த்தியிடம் சொல்லிக் கொண்டே இருந்தார் காமாட்சி அத்தை.

மிர்த்திக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அத்தையின் அழைப்பு வந்தாலே.. பயந்து போனால் பெண். இவள் அவரிடம் பேசி அப்பாவிடம் சொல்லுங்கள் என்ற நிலை மாறி.. அவர், இவளிடம்..  யோகியை விளக்கி வைக்கும் நோக்கில் பேச்சுகள் செல்ல தொடங்கியது.

யோகி வெளியூர் சென்றிருந்தான்.. நான்கு நாட்களுக்கு ஒருமுறை அழைத்தான். மிர்த்திக்கா, எதை பற்றியும் சொல்லவில்லை. 

யோகி, சென்னை வந்து சேர்ந்தான், திதியின் முதல்நாள். அன்று காலையிலேயே மிர்த்திக்கு அழைத்து பேசினான் “அத்தை கூப்பிட்டாங்களா.. உங்க அப்பாவையும் கூப்பிடுறேன்னு சொன்னாங்க.. என்னமோ பண்ணுங்கன்னு சொல்லிட்டேன். நீயும் ஜெகனும் கண்டிப்பா திதிக்கு வந்திடுங்க.. நீ மோர்னிங் போயிட்டு.. ஆப்டர்நூன் போல வந்தால் போதும் மிர்த்தி” என பேசினான்.

மிர்த்திக்காவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. தன்னவனிடம்.. எப்படி சொல்லுவது என அமைதியாக தலையாட்டிக் கொண்டாள்.

யோகி அதன்பின் அவளை அழைக்கவில்லை.

மறுநாள், யோகி.. பிசி.. எல்லா காரியங்களும் முறைப்படி செய்தான், தன் மாமா சீனிவாசனுக்கு. ஆத்மிகா வந்திருந்தாள் குழந்தைகளோடு.. தமிழரசியின் உறவுகள்.. சீனிவாசனின் நண்பர்கள் என எல்லோரும் இருந்தனர். 

யோகி, உண்ணாமல் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் மிர்த்திக்காவை. ஆனால், மணி மூன்று இன்னும் அவள் வரவில்லை. அழைத்து கேட்கவும் ஏதோ தடுக்கிறது. யோகிக்கு, மனது சங்கடமாகி போனது. 

தமிழரசி முதற்கொண்டு எல்லோரும் யோகியிடம் “சப்பிடு.. சாப்பிடு… காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. நேரம் ஆகுது.. நீ சாப்பிட்டால்தான் சடங்குகள் நல்லவிதமாக முடியும்.. காரியம் செய்தவனின் வயிறு வாட கூடாது டா” என்றார் அங்கிருந்த முதியவர்கள் வரை அனைவரும்.

யோகிக்கு, அதற்குமேல்.. காத்திருப்பது சரியில்லை என தோன்ற அமர்ந்தான் உண்பதற்கு. அந்த நேரம்தாம் ஜெகன் வந்து சேர்ந்தான்.

தமிழரசி “வா ஜெகன்” என அழைக்கும் குரல் கேட்கவும். 

யோகிக்கு, மனதின் சங்கடம் தள்ளி நின்றது.

ஜெகன், சீனிவாசனின் புகைப்படம் பார்த்து வணங்கிவிட்டு திரும்பினான்.

தமிழரசி தன் தம்பிக்கு.. பெண்களுக்கு என எல்லோருக்கும் ஜெகனை அறிமுகம் செய்தார்.. கவனமாக, யோகியின் பிறந்தஊர் நண்பன் என.

அடுத்து, அவனை உண்பதற்கு அழைத்து சென்றார். யோகியின் அருகே அமர்த்தினார் தமிழரசி.

யோகி தலையசைத்தான்.. ஜெகனை பார்த்து.

ஜெகன் புன்னகைத்தான்.. “இப்பதான் சாப்பிடுறீங்களா மாம்ஸ்” என்றான்.

யோகிக்கு, உள்ளுக்குள் கோவம் ‘உன் அக்காவை எதிர்பார்த்தேன்’ என தனக்குள் சொல்லிக் கொண்டு.. “ம்.. சாப்பிடு” என்றான்.

ஜெகனுக்கு என்ன பேசுவது என தெரியவில்லை. உண்ணத் தொடங்கினான்.

முடித்து.. ஜெகன் யோகியோடு நின்றுக் கொண்டான். 

தமிழரசியின் நெருங்கிய உறவுகள் மட்டும் இருந்தனர். மற்ற எல்லோரும் கிளம்பியிருந்தனர்.

ஜெகனோடு யோகி தனது அறைக்கு வந்தான்.. வேட்டி அணிந்திருந்தான். அதை மாற்றிக் கொண்டு ஷார்ட்ஸ் மாற்றிக் கொண்டான். ஒரு ஆரெஞ்சு வண்ண டீ ஷர்ட் அணிந்துக் கொண்டான். 

ஜெகன், யோகியின் கட்டிலில் அப்படியே சாய்ந்தான்.

யோகி “எங்க டா.. உன் அக்கா” என்றான்.. வார்த்தைகள் மென்று துப்பினான் எனலாம்.

ஜெகனுக்கு அந்த கடிந்த வார்த்தைகளின் ஒலி அவனது காதுகளை நெருடியது.. லேசாக சாய்ந்தவன்.. மாம்ஸ் கோவமாக இருக்கிறார் என எண்ணி எழுந்து அமர்ந்தான் “இல்ல, மாம்ஸ்.. பெர்மிஷியன் கிடைக்கலை” என்றான்.

யோகி அவனின் அருகே நன்றாக அமர்ந்துக் கொண்டு “உண்மையை சொல்லுடா..” என்றான்.. ஜெகனை நேராக பார்த்து.

ஜெகன் “இல்ல மாம்ஸ்.. அவள் வரணும்ன்னுதான் இருந்தாள். அத்தைதான், எதோ முதல் முதலில் போகிறவள்.. நல்லதுக்குதான் போகனும்.. அப்புறம் போன்னு சொல்லிட்டாங்க..” என்றான்.

யோகி தலையை கோதிக்கு கொண்டே.. “ஓ.. இது ஒரு காரணம்.” என்றான்.

ஜெகன் “மாம்ஸ்” என்றான்.

யோகி கேள்விகளாக கேட்டான் “என்ன, உங்க அப்பா சொன்னாரா.. போக கூடாதுன்னு. நீ மட்டும் வந்திருக்க” என்றான்.

ஜெகன் “மாம்ஸ்.. விடுங்க.. அவள் பேசுவாள்.” என்றான்.

யோகிக்கு கோவம் ஒன்றும் பேசாமல்.. “ரெஸ்ட் எடு.. நான் வெளியே போயிட்டு வரேன்” என்றான்.

ஜெகன் “இல்ல மாம்ஸ் நான் கிளம்பறேன், அக்காவை கூட்டிட்டு அப்படியே கிளம்புவேன்” என சொல்லி கிளம்பினான்.

அன்றைய தினத்தின் இரவில், மிர்த்திக்கா.. தமிழரசிக்கு அழைத்து பேசினாள்.

யோகிக்கு, அழைத்தாள்.. அழைப்பை ஏற்றிடுவானா அவன். பார்த்துக் கொண்டே இருந்தான். ஆனால், அவளின் அழைப்பை ஏற்கவில்லை.

மிர்த்திக்காவிடம் ஜெகனும் சொல்லியிருந்தான்.. அதனால், அவன் எடுக்க மாட்டான் என தெரிந்தது பெண்ணுக்கு. ஆனாலும், விடமால் நான்கு முறை அழைத்தாள்.

அழைப்பை எடுக்கவில்லை யோகி, மிர்த்திக்கா போனை வைத்துவிட்டு.. உறங்க முயன்றாள்.

யோகிக்கு கோவம் இருக்கும் என புரிந்ததால் மிர்த்திக்கா, திரும்ப அழைத்து அவனை தொந்திரவு செய்யவில்லை. அவன் தன்னை பார்க்கவும் வரவில்லை. பேசுவதும் இல்லை. அன்று வரவேண்டும் என அழைத்தான்.. அதேபோல எப்போது என்னிடம் பேசனும்ன்னு தோணுதோ அழைக்கட்டும் என ஓய்ந்து போய் அமர்ந்து விட்டாள்.

அத்தை காமாட்சி ஜெகனுக்கு அழைத்து கேட்டுக் கொண்டார்.. மிர்த்திக்கா அங்கே சென்றாளா என. ஜெகனும் “நீங்க இரண்டு பேரும் சேர்ந்து போக கூடாதுன்னு சொல்லிட்டீங்களே.. எப்பத் போவா.. அது ஒரு லூஸு. எங்கயும் போகலை. உன் தம்பிகிட்ட சொல்லிடு” என எரிச்சலாக பேசி அழைப்பை துண்டித்தான் ஜெகன்.

நாட்கள் கடந்தது.

யாரிடமும் பேசுவதில்லை பெண். அலுவலக வேலையில் கவனம் செலுத்தினாள். ஒருமாதிரி மனம் வெறுத்துவிட்டது பெண்ணுக்கு. அப்பா பேசுவதில்லை.. காதலன், நினைத்தால் கூப்பிடுவான். அத்தை, அழைத்தாலே.. அப்பா பாவம் என ப்ரைன் வாஷ் செய்கிறார்.. என ஒரு வெறுத்த மனநிலை. இழுத்து பிடித்து போராட முடியவில்லை. தன் வேலை சமையல்.. சாப்பாடு, தோழிகள் என நாட்களை கடத்தினாள்.

யோகிக்கு, தன்னவளின் மௌனம்.. முதல்முறை பயத்தை தந்தது. எப்போதும், அவள் தன்னை விடாமல் அழைப்பாள்.. மெசேஜ் செய்வாள்.. மீறியும் நான் அழைக்கவில்லை என்றால்.. தானும் அவளும் இருக்கும் புகைப்படத்தை அனுப்பி வைப்பாள்.. என்னமோ, நானும் அவளும் சேர்ந்திருப்பதை பார்த்தாலே.. அவளிடம் மனது சென்றிடும், நானும் அழைத்திடுவேன். இன்னும் அவள்.. என்னை அழைக்கவில்லை.. செய்தி போட்டோ என ஏதும் வரவில்லை என தோன்ற.. இப்படி எந்த குறிப்பும் இல்லாமாலும்.. அவளை நான் சிந்திப்பேன் என எண்ணிக் கொண்டு.. மதியம் கிளம்பி, நேராக அவளின் அலுவலகம் வந்து நின்றான் யோகி.

வேலை நாள்.. இன்று மிர்த்திக்காவிற்கு.. மீட்டிங். அவள் வருவதற்கு ஏழு மணி ஆகிற்று. அவளை எதிர்பார்த்து.. எதிர் கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தவன்.. அவள் வருவதை பார்த்தான்.

அவசரமாக காசு கொடுத்துவிட்டு.. அவள் பஸ் ஏறுவதற்கு முன்.. வண்டியை எடுத்துக் கொண்டு அவள் அருகே நின்றான்.

மிர்த்திக்கா, அனிச்சையாய் அருகே வண்டி வரவும்.. இரண்டடி பின்னால் சென்றாள். பின் வண்டியை பார்க்கவும்.. வந்திருப்பது தன்னவன் என புரிந்தது. மூளை, அவன் உனக்கு போன் செய்யவில்லை.. உன் போனை எடுக்கவில்லை என.. செய்தி அனுப்புவதற்குள்.. கண்கள் குளம் கட்டிக் கொண்டது. அன்பு நேசம் எல்லாம் மூளைக்கு கட்டுப்பட்டது அல்லவே. காதலின் சாட்சியை கண்களில் வைத்துக் கொண்டு “ஞாபகம் வந்திடுச்சா” என்றாள்.

யோகி, தலையை கோதிக் கொண்டான். அவனுக்கும் சாட்சி இருக்கிறது.. தொண்டையில்.. ம்.. குரல் கரகரக்க “வா.. உட்கார்” என்றான்.

பெண்ணவளுக்கு கோவம் உண்டு.. அவன் மேல் வருத்தம் உண்டு.. விட்டால் எட்டு கட்டையில் அவனை வசை பாடி.. வில்லு பாட்டு பாடும் அளவிற்கு குறைகள் உண்டு. ஆனால், அமைதியாக ஏறி அமர்ந்தாள் அவனின் வண்டியில்.

யோகி நேராக அவளின் வீட்டிற்கு வந்தான்.

Advertisement