என்று இருவரும் ஸ்கூட்டியில் ஏறி, அடுத்து இருவரும் சென்று நின்ற இடம், ‘வேற எங்கேயும் இல்ல பக்கத்துல இருந்த மெக்கானிக் ஷாப் தான்.’
ரூத் முகத்தில் ஒற்றை கை வைத்தபடி இருக்க, பிறை அவளை நன்றாக முறைத்தபடி அருகில் நின்றிருந்தாள்.
பிறையின் பார்வையில் “ப்ச், இப்போன்னு பார்த்துதா இந்த ஸ்கூட்டி இப்படி சொதப்பணுமா? இவ வேற இப்படி முறச்சி வைக்குறா ” என்று நொந்தபடி நிமிர்ந்து அந்த கடை அண்ணாவை பார்த்து விட்டு,
“அச்சோ, இப்ப இவர்கிட்ட வேற பேசணுமா? எனக்குன்னே எல்லாம் வருதே, ஓ… ஜீசஸ்!” என்று கண்களை மூடி திறந்தவள்.
கைகளை இறுக மூடி திறந்தபடி “அண்ணா…..” என்று அழைத்தது கண்டிப்பாக அவருக்குக் கேட்டிருக்காது. உடனே ரூத் மீண்டும் சத்தமாக “அண்ணா….” என்று அழைக்க, அவர் அப்போதுதான் சத்தம் கேட்டு இவள் பக்கம் வந்தார்.
“பைக்..ச்சீ… இல்ல ஸ்கூட்டி என்ன ஆச்சி ண்ணா..”
“அது ஒன்னும் இல்ல ம்மா, பேட்டரி போயிடுச்சு, அதை மாத்துனா போதும்”
“ஓ… அப்போ ஓகே, மாத்திடுங்க ண்ணா, எவ்ளோ நேரம் ஆகும்?”
“நாளைக்கு சாயங்காலம் ரெடி ஆகிடுமா”
“என்னது நாளைக்கா…. அண்ணா இப்போ உடனே எதுவும் பண்ண முடியாதா?”
“இல்ல ம்மா, கடைக்கு போய் பேட்டரி வாங்கிட்டு வந்து போடனும், உடனே முடியாது” என்றதும் தலையை தொங்க போட்டு யோசித்த ரூத்.
“சரி ண்ணா, நாளைக்கே வந்து எடுத்துக்கிறேன்” என்று வண்டியில் இருந்த நோட்டையும் பெணாவையும் எடுத்து விட்டு வர பிறை.
“என்னடி ஸ்கூட்டிக்கு இப்படி ஆகிடுச்சு? இப்போ வீட்டுக்கு எப்படி போவ?”
“அதெல்லாம் போன்ல பாத்தே இறங்கிடுவேன் நீ பயப்படாத.”
“என்னமோ பண்ணு….. வீட்டுக்கு பத்தரமா போனா சரி. அப்படியே வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணு பக்கி. நீ கால் பண்ண லேட் ஆச்சு, நான் உங்க அக்காக்கு கால் பண்ணிருவேன், பார்த்துக்கோ!”
“சரிடி பிறை…” என்று அவளை இழுத்துக்கொண்டு இருவருமாக பஸ் ஸ்டாப் சென்றனர்.
இவர்கள் செல்லவும் ரூத்தின் பஸ் வரவும் சரியாக இருக்க, பிறை அவளை பஸ்ஸில் ஏற்றி விட்டு, ரூத் சீட்டில் அமர்ந்ததை பார்த்து விட்ட பிறகே சிறிது ஆஸ்வாசம் அடைந்தாள்.
ரூத் இது வரை பஸ்ஸில் சென்றதே இல்லை. கல்லூரி முதல் ஆண்டு அக்காவுடன் ஸ்கூட்டியில் வருபவள், லைசன்ஸ் எடுத்த பின் இவளே ஸ்கூட்டியை ஓட்டி வருவாள்.
இதுவே அவளின் முதல் பஸ் பயணம், அதுனாலயே பிறைக்கு அவளை நினைத்து பயமாக தான் இருந்தது. இத்தனைக்கும் நான்கு பஸ் ஸ்டாப் தள்ளி தான் ரூத்தின் ஸ்டாப்பிங், அதற்கே இத்தனை போறாட்டம்.
அடுத்து அவளுக்கும் பஸ் வந்துவிட, அவளும் ஏறி சென்றாள்.
ரூத் ஒரு பெரியவர் அருகே தான் அமர்ந்து இருந்தாள். பஸ் சற்று கூட்டமாக இருக்கவும் வேறு சீட்டு இவளுக்கு கிடைக்காமல் போனதால் அவர் அருகிலேயே அமர்ந்து விட்டாள்.
இவள் அமர்ந்ததில் இருந்து அந்த பெரியவர் அடிக்கடி தலையை திருப்பி திருப்பி இவளைப் பார்ப்பதும் திரும்புவதுமாக இருக்க ரூத்திற்கு பயம் பிடித்து கொண்டது.
“யார் இந்த தாத்தா? இப்படி நம்மளையே பார்த்துட்டு இருக்காரு. காது வரை மீசை வச்சிட்டு பாக்கவே பயமா இருக்காரே!”
என்று மனதோடு புலம்பியவள், வெளியில் தைரியமாக இருப்பது போலக் காட்டிக்கொண்டு காதில் ஹெட்செட் போட்டு போனில் முகத்தை புதைத்துக்கொண்டாள்.
ஆசை அசையாக முதல் பஸ் பயணம் என்று ஏறியவள் அந்த பயணத்தை ரசிப்பதற்கு பதிலாக அவளின் ஸ்டாப்பிங் வரும் வரை தலையை நிமிர்த்தாமல் ஒரு பயத்துடனேயே அந்தப் பயணத்தை செய்தாள்.
பெண்ணிற்கு பலமே தைரியம் தான், அந்த தைரியம் அவளுக்கு சொல்லி தந்து வருவது இல்லை. அது அவள் பழகும் மக்கள் பார்க்கும் செய்தி கடந்து போகும் கஷ்டம் என்று அடி பட பட தான் எதையும் எதிர்க்கும் தைரியம் பிறக்கும்.
அப்படி இருக்க தங்கக் கூண்டு கிளியாக வளர்ந்த ரூத்திற்கு எப்படி அது இருக்கும்? என்ன தான் ஸ்டெல்லா அவளுக்குச் சிறுவயதில் இருந்து அவளைப் பாதுகாக்கச் சொல்லி கொடுத்து வளர்த்தாலும்,
அதை மக்களிடையே அவள் உபயோகிக்கும் சூழ்நிலையை ஸ்டெல்லா அவளுக்கு வர வைத்தது இல்லை. பள்ளி முதல் கல்லூரி வரை ஸ்டெல்லாவின் கண்காணிப்பில் மிக பத்திரமாக வளர்ந்தவள்.
கூட்டமான இடம், பொது போக்குவரத்து, உறவினர் விசேஷம், நண்பர்கள் வீடு, பள்ளிச் சுற்றுலா என்று எங்கும் ரூத் தனித்துச் சென்றது இல்லை. அவளை ஸ்டெல்லாவும் விட்டது இல்லை.
ரூத் ஆசைப்படும் முன் அவள் நினைத்த இடத்திற்கு அவளோடு மிகப் பத்திரமாக அழைத்துச் சென்று விட்டு வந்துவிடுவாள்.
அதனாலேயே அவளும் ஒரு விஷயத்திற்காக எப்போதும் ஸ்டெல்லாவிடம் அடம் பிடித்தது இல்லை. அதனால்தானா இல்லை, அடம்பிடித்தாலும் அது கிடைக்காது என்று தெரிந்தது நாளா அது அவளுக்கு தான் தெரியும்.
அதன் விளைவு, இன்று பஸ்ஸில் இருந்து இறங்கியவள் அவளுடன் அந்தத் தாத்தாவும் இறங்கியதைப் பார்த்து விட்டு மிகவும் பயந்து போனவளாக நடக்கத் தொடங்கினாள்.
ஆயிரம் முறைக்கு மேலாக இந்தத் தெருவில் பைக்கில் சென்றிருக்கிறாள்; அன்று எல்லாம் மிக மெதுவாக ஆமை வேகத்தில் அந்தத் தெருவில் ஸ்கூட்டியை உருட்டிய படி சாலையின் இருபுறமும் மறைத்து உயர்ந்து நிற்கும் மரத்தைப் ரசித்து விட்டுச் செல்பவள்.
இன்று பைக்கில் செல்லும் வேகத்தை விட மிக வேகமாக மூச்சிரைக்க நடந்து சென்று கொண்டிருந்தாள். பின்னே அந்த வயதான தாத்தாவைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஒருவித பயம் கலந்த பதட்டத்தில் நடந்தவள்.
“பேசாமல் அக்காவைக் கூப்பிடலாமா? ஆனா அக்கா வர லேட் ஆகுமே, ரைட் வாட்சை அமிக்குவோம், அதை அமுக்கினா பக்கத்தில இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலர்ட் போகும் ன்னு ஸ்டெல்லா சொன்னாலே…” என்று யோசித்தவளாக வாட்சை அமிக்கக் கையை பார்க்க அங்கே கையில் வாட்சைக் காணவில்லை.
அதில் மேலும் பயம் அதிகமாக, பாக்கெட்டில் இருந்த போனை அவசர அவசரமாக எடுத்தபடி நடக்க தொடங்கினாள், “பாம்….பாம்…..” என்று திடிரென்று கேட்ட பைக் சத்தத்தில்
“ஸ்டெல்லா…..” என்று கத்தியபடி தொப் என்று கீழே விழுந்து விட்டாள் ரூத்.
குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் தான், ஆனால் அதற்கு என்று அவர்களின் சுதந்திரத்தைப் பறித்துவிடக் கூடாது; இரண்டும் அவசியமே.