வெங்காயத்தை பொடி பொடியாக வெட்டியபடி, போனில் ஒரு கண், கத்தியில் ஒரு கண் என்று இருந்த ரூத்தின் தலையில் தட்டிய மணியம்மாள்
“வெங்காயத்தை இங்க தான் உட்கார்ந்து வெட்டணுமா? எனக்கு கண்ணெல்லாம் எரியுது டி, ஒரு சீரியல் பார்க்க விடுறியா?” என்றவரை முறைத்த ரூத்
“ஏன்… நீ மட்டும் சீரியல் பார்த்தா போதுமா, நான் பார்க்க வேணாம்மா பாட்டி?”
“நீ எங்கடி டீவிய பாக்குற? உன் கண்ணு முழுக்க அந்த போன்ல தான இருக்கு” என்று சரியாகச் சொன்னவரைச் சற்று ஜெர்க் ஆகிப் பார்த்தவள்.
“அது எங்க…. பாட்டு டீச்சர் மெசேஜ் பண்றேன்னு சொன்னாங்க, அதான்…” என்று சமாளித்து இவள் வெங்காயம் வெட்டுவது போலத் திரும்பி கொண்டாள் .
இப்போது எல்லாம் பொய் பேச நன்றாகவே பழகி இருந்தாள் ரூத் பாட்டியிடம், என்ன ஸ்டெல்லாவைப் பார்த்தாள் மட்டும் சற்று உறுத்தலாக இருக்கும்; அதையும் அவளை இப்போதெல்லாம் தாண்டி வரப் பழகி வைத்து விட்டான் ஆதிஷ்.
“என்னவோ… என்ன பாட்டு சொல்லித் தராளோ? நேர்ல சொல்லித் தரத விட்டுட்டு போன்ல சொல்லித் தந்துட்டு இருக்கா” என்று முனங்கியவர், டிவி ரிமோட்டை எடுத்து அதன் சத்தத்தைக் கூட்டவும் ரூத்
“பாட்டி…, ஸ்டெல்லா தூங்கிட்டு இருக்கா, டிவி சத்தத்தைக் குறைங்க, அவ எழுந்திருவா” என்று ரூத் ஞாபகப்படுத்திய பின் தான், அவருக்குமே ஸ்டெல்லா வந்து இரண்டு நாட்கள் ஆகிறது என்று நினைவு வந்தது
“என்ன அதிசயம், உங்க அக்கா வேலைக்கு போகாம வீட்டுல தூங்கிட்டு இருக்கா, என்ன ஆச்சு?” என்று இவர் ஆச்சரியமாக கேட்கவும்
“அது அவ சிங்கப்பூர் போயிட்டு வந்த டயர்ட், அதான் இரண்டு நாள் லீவ் கேட்டுருக்கா”
“ம்க்கும்… போல்லாத டயர்டு, என் பேரன்னும் தான் போனா, அவன் இன்னைக்கு வேலைக்கு கிளம்பி போல….” என்று பேசியவரைப் பார்த்து ரூத் முறைக்கவும்
“என்னடி முறைக்கிற? சில்லாட்ட, போ… போய் சமைக்கிற வேலையைப் பாரு” என்றதும் இவளும் முகத்தை வெட்டிக்கொண்டு எழுந்து சமையலறை சென்றவள்.
முட்டையை உடைத்து அதை வெங்காயம், பச்சை மிளகாயுடன் கலந்து ஆம்லெட் போடத் தயார் செய்ய ஆதிஷிடமிருந்து அழைப்பு வந்தது.
அதை முகம் முழுக்க மலர்ந்த புன்னகையுடன் எடுத்தவள், அட்டென்ட் செய்து காதில் வைக்க, அந்தப் பக்கம் ஆதிஷ்
“ரூத்…” என்றவனின் குரலில், அவள் உதட்டில் வந்து ஒட்டிக்கொண்ட புன்னகையுடன்
“சொல்லுங்க ஆதி, எப்படி இருக்கீங்க?”
“ம்ம்ம், எப்பவும் போல குட் ரூத், நீ என்ன பண்ற? கிளாஸ்க்கு கிளம்பிட்டியா?” என்றவனுக்கு “ அச்சோ… இவங்க கிட்ட சொல்ல மறந்திட்டோமே “ என்று முனங்கியவள்
“அது…..இன்னைக்கு போக முடியாது ஆதி….. நாளைக்கு தான் போகணும். இன்னைக்கு ஸ்டெல்லா வீட்டுல இருக்கா”
“என்னது, ஸ்டெல்லா ஆபிஸ் போகலையா?”
“ஆமா, டூ டேஸ் ரெஸ்ட் எடுக்க லீவ் போட்டுருக்கா ஆதி” என்று ரூத் சொன்னதை நம்ப முடியாத ஆதிஷ், “அவ இப்படி லீவ் போட மாட்டாளே” என்று யோசித்தவன் பின், “அவ என்ன பண்ணா நமக்கு என்ன” என்று அதை விட்டவன்
“அப்பறம் ரூத் என்ன பண்ற?”
“ம்ம்ம், ஆம்லெட் போடுறேன்”
“ம்ம்ம்…ம்ம்ம், சமைக்க வேற தெரியுமா ரூத் உனக்கு? நான் ரொம்ப லக்கி தான் போலையே” என்றவனுக்கு அவளை பற்றி அவளுக்கு தெரியாதது கூட இவனுக்கு தெரியும், இருந்தும் தெரியாதது போல பேசினான் .
“நான் சமைச்சனா நீங்க ஏன் லக்கி ஆதி?” என்று அவனிடம் போட்டு வாங்க இவள் கேட்கவும், அதை புரிந்தவனாக
“உன் பிரண்டுல நானு…., ஏன் ரூத்? எனக்குலாம் சமைச்சுத் தர மாட்டியா என்ன, அத வச்சு தான் நான் லக்கினு சொன்னேன். இப்போ சொல்லு, நான் லக்கி தான ரூத்?”
என்று ஆதிஷ் சொன்னதை கேட்டு உதட்டைச் சுளித்தவள், “ஆமா ஆமா… லக்கி தான்” என்று அவள் அழுத்திச் சொல்வதைக் கேட்டவன், மெல்லியதாக உதட்டை விரித்து சிரித்து
“ஓகே ரூத், அப்புறம் கால் பண்றேன்” என்று வைத்துவிட்டான். ஆதிஷ் போன் கட் செய்ததும் போனை உற்றுப் பார்த்த ரூத்
“இவனுக்கு நம்ம மேல இன்ட்ரஸ்ட் இருக்கா இல்லையா? இல்ல நம்மளே சொல்லணும்னு பாக்குறானா? நல்லா பேசுறான் இருந்தும் குளப்புறானே ” என்று குழம்பியவள் அவனை பற்றி யோசித்த படி அப்படியே சமைக்கத் தொடங்கினாள்.
அவனும் இதை தானே எதிர் பார்க்கிறான், ரூத் இவனை பற்றியே யோசிக்க வேண்டும், இவன் அருகில் இல்லை என்றாலும் இவனை பற்றியே நினைத்து உருகவே, இவற்றை எல்லாம் செய்கிறான்.
இது தெரியாது இவனின் வளையில் சிக்க தயறானது இந்த மென்மையான அலர்.
அன்று முழுவதும் அவள் ஸ்டெல்லா உடனே இருந்து நேரத்தைக் கடத்தியவள் மனதில், ஆதிஷ் நினைத்த படி அவனின் எண்ணமும் ஒரு ஓரமாக ஓடி கொண்டு தான் இருந்தது.
மறுநாள் ஸ்டெல்லா ஆபிஸ் சென்றதும் முதல் வேலையாக அவள் நடனம் பயிலும் இடத்திற்குச் சென்றுவிட்டாள்.
ஸ்கூட்டியில் வந்து சேர்ந்தவள் சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்தாள். ஒரு வாரமாக இங்கு தான் நடனம் கற்றுக்கொண்டு இருக்கிறாள். முழுதாகத் தொடக்கத்தில் இருந்து பயிலாமல் குறிப்பிட்ட ஒரு பாட்டுக்கு மட்டும் சில நடன அசைவுகளை மட்டும் கற்றுக்கொள்கிறாள்.
முதல் நாள் மிகவும் பயமாகத்தான் இருந்தது; சரியாக எந்த நடன அசைவும் வரவில்லை. மதுவின் முன் நடனமாட வேறு கூச்சமாக இருந்ததால் பல தவறுகள் செய்தாள்.
பின் செல்லச் செல்ல ஓரளவு நடன அசைவுகளை கற்றுக்கொண்டாள். இன்றும் எப்போதும் போல உள்ளே நுழைந்த ரூத், அங்கே சோபாவில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த மதுவைப் பார்த்து சிரித்தவள்,
“அக்கா… போகலாம்மா…” என்று ஆர்வமாக நின்றவளைத் திடுக்கிட்டுப் பார்த்த மது, “ஏன்ம்மா இப்படி…” என்று திடீரென்று கேட்ட குரலில் பயந்து அவளைப் பார்க்க, தலையைச் சொறிந்த ரூத்.
“சாரி அக்கா… டூ டேஸ் கழிச்சி உங்களைப் பார்த்ததும் ஒரு ஆர்வத்தில கத்திடேன்” என்றவளைத் தலையை அசைத்துத் பார்த்தவள்
முதல் நாள் குடிக்கத் தண்ணீர் கேட்கவே மிக நேரம் யோசித்துத் தயங்கி நின்ற பெண்ணா இது என்று யோசித்தபடி இருக்க ரூத்,
“அக்கா…. அக்கா…. மேலே போலாம்மா… அக்கா…”
என்று ரூத் உலுக்கியதில் நினைவு பெற்றவளாக,
“நீ மாடில போய் பிராக்டிஸ் பண்ணிட்டே இருமா, நான் பின்னாடியே வரேன்” என்று ரூத்தை மட்டும் போகச் சொல்ல, அவளும்
“ம்ம்ம் சரி அக்கா, சீக்கிரம் வாங்க” என்று கூறிவிட்டு மாடிக்கு ஓடிவிட்டாள்.
ரூத் வருவது மதியம் என்பதால் வேறு யாரும் அந்த நேரத்தில் மேலே இருக்க மாட்டார்கள்; நார்மலாக நடனம் ஆடுபவர்கள் சாயங்காலம் தான் வருவார்கள்.
அவர்கள் வருவதற்குள் இவள் ஆடிவிட்டுச் சென்று விடுவாள்; அதுவே இவளுக்கு நல்ல வசதியாகப் போய்விட்டது
மாடி சென்றவள் அறையின் விளக்குகளை ஆன் செய்துவிட்டு உள்ளே ஒரு முறை சுற்றிப் பார்த்தாள்.
ஆட வசதியாக ஒரு பெரிய ஹால், ஒரு ஓரத்தில் மியூசிக் பிளேயர் இவைகள் மட்டுமே அந்த அறையில் இருந்தது.
அதைப் பார்த்தபடி சென்று மியூசிக்கைப் போட்டவள், மது வரும் வரை அவள் சொல்லித் தந்த அசைவுகளை ஆடிப் பார்க்கலாம் என்று ஆடத் தொடங்கிவிட்டாள்.
அப்போது பார்த்து கரண்ட் போய்விட, “ப்ச்… இந்த பவர் கட் வேற…. இப்போ தான் கட் ஆகணுமா?” என்று சலித்துக் கொண்டவள்.
அறையைப் பார்த்தாள், நல்ல வெளிச்சமாகத்தான் இருந்தது. பின் மாடியில் இருந்து கீழே எட்டிப் பார்த்தபோது, மது வெளியில் காய்கறி வண்டியில் காய் வாங்கி கொண்டு இருப்பதை பார்த்தாள் . அதை எட்டி பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.
மது வர வெகு நேரம் ஆகவும் சும்மா இருக்கப் பிடிக்காமல் மது சொல்லித் தந்த நடன அசைவுகளை மியூசிக் இன்றி ஆடத் தொடங்கினாள்.
முதலில் ஆடும்போது மனதில் தான் பாட்டைப் பாடி ஆடினால் பின் அவள் வாய் சும்மா இருக்காமல் மெல்ல அந்தப் பாடலைப் சத்தமாக வாய் விட்டு பாடத் தொடங்கினாள்.
“திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில்
வந்தவனே வேல்விழி
மொழிகள் கேளாய் அற்றைத்
திங்கள் அந்நிலவில் கொற்றப்
பொய்கை ஆடுகையில் ஒற்றை
பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..”
என்று பாடலைப் பாடிக்கொண்டே ஆடிக்கொண்டிருந்தவள் சுழன்று சுற்றித் திரும்ப அங்கே மதுவும் ஆதிஷும் இவளைத்தான் பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர்.