இரவில் ஒளிரும் சூரியனைப் போலப் பல மின் விளக்குகளால் அந்த இடமே தங்கம் போல ஒளிர்ந்து கொண்டிருக்க; அதோடு மெல்லிய இசை காதுகளுக்கு இனிமை தரும் வகையில் அந்த இடத்தை நிரப்பி கொண்டிருந்தது.
எங்கு பார்த்தாலும் பல வண்ணப் பூக்கள், விலையுயர்ந்த பொருட்கள் என அந்த ஹால் முழுவதிலும் பணத்தின் செழுமை கொட்டித் கிடந்தது.
அதற்குப் போட்டி போடும் விதமாக மேடையில் தங்கம், வைரம் என அனைத்தையும் உடல் முழுதும் அணிந்து கொண்டு, உதட்டில் புன்னகையுடன் நாளை நடக்க இருக்கும் திருமணம் எங்களுக்குத்தான் என்று காட்டும் வகையில் இருவர் நின்று கொண்டிருந்தனர்.
அது ஒரு வரவேற்பு நிகழ்வுதான் என்பதே மேடையில் நின்று கொண்டிருப்பவர்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ளும் அளவில் அந்த ஹால் இருந்தது.
ஆங்காங்கே குழு குழுவாக நின்று கொண்டு மது அருந்தியபடி சிலர், புதிதாகத் தொடங்கும் பிசினஸ் மற்றும் ஏற்கனவே இருக்கும் பிசினஸ் என்று அதைப்பற்றிப் பேசும் சிலர், டிஜே முன் குடித்துவிட்டுப் பெண்களுடன் நடனம் ஆடும் சிலர் என்று அங்கு அனைவரும் பிஸியாக இருந்ததால், மாப்பிள்ளை பெண்ணைக் கண்டு கொள்ளத்தான் யாருக்கும் அங்கு நேரம் இல்லாமல் போனது.
அப்போது கருப்பு மற்றும் வெள்ளை உடையில், ஒற்றைக் காதில் கருப்பு ஸ்டட் ஒன்று அணிந்து கொண்டு, கையில் பரிசோடு அங்கிருந்த கூட்டத்தில் யாரையோ தேடியபடி மேடைக்கு ஏறியவன்; அவன் தேடிய நபர் கிடைக்காமல் போக,
“ப்ச்…” என்று சலித்துக்கொண்டு தலைகோதி, இருவருக்கும் பரிசை நீட்டி வாழ்த்தையும் சொல்லியவன், மாப்பிள்ளை பக்கம் திரும்பி,
“த்ரூவ இன்வைட் பண்ணலையா நீ?” என்று மெல்ல விசாரித்தான்.
“அவன பண்ணாம எப்படிடா?, என்னதான் நம்ம எதிரி அவனா இருந்தாலும்… பிசினஸ் ஷேர்ஸை ஹோல்ட் பண்ணி வச்சிருக்கான்டா, கூப்டு தான ஆகணும்” என்று பேசியபடி மூவருமாகப் போட்டோ எடுத்துக்கொள்ள அவன் கீழே இறங்கினான்.
அப்போதும் அவன் தோளில் திடீரென்று யாரோ கைவைக்கவும் யார் என்று திரும்பிப் பார்க்க,
“ஹே…. மதி…” என்றவனை, நன்றாக முறைத்தவன், அவன் கையை முதுகுப் பக்கம் திருப்பி நன்றாக முறுக்கிப் பிடித்துக் கொள்ள, அதில் அவன் வலி தாங்காமல்,
“டேய்…. மதி விடுடா கை வலிக்குது…பிஞ்சி உடம்புடா உன்ன மாதிரி பாடி பில்டர்லாம் நான் இல்லடா “ என்று அவன் கத்தினாலும் அதைக்கண்டு கொள்ளாதவன்,
“உன் ஃபோன் எங்க டா? எத்தனை வாட்டி உனக்கு கால் பண்றது?”
என்று கோபமாக கேட்க அதற்கு அவன் பதில் சொல்லாது கையை அவனிடம் இருந்து காப்பாற்றுவதிலயே குறியாக இருக்க, அதைப்பார்த்து போனால் போகுது என்பது போல கையை விட்டவன்.
“இப்போ வாய திறந்து பேசப் போறியா இல்லையா?” என்று மிரட்டியவனைப் பார்த்து பயம் வந்தாலும் அதை வெளியில் காட்டாதவன்,
“என்ன சொல்றடா? எனக்கு கால் பண்ணியா?” என்றபடி பக்கெட்டில் இருந்த ஃபோனை எடுத்துப் பார்க்க, அது சார்ஜ் இல்லாமல் இருந்தது.
“அச்சோ சார்ஜ் இல்ல போல!”
“எப்படி டா ரெண்டு நாளா சார்ஜ் போடவே இல்லயா நீ?”
“என்னது ரெண்டு நாளா கால் பண்ணியா? அப்படி என்னடா அவசர விஷயம்?”
“முதல்ல ரெண்டு நாளா நீ எங்க இருந்தேன்னு முதல்ல சொல்லுடா வினோ!”
“என்ன கூப்டலயே அவன்? நானும் அவன் ஃபிரண்டு தானே?” என்று சந்தேகமாக அவனைப் பார்க்க,
“பொண்ணுங்க பார்டினா நீ எங்க விடுவ, அதான் உன்ன கலட்டி விட்டான் போல” என்று கைகளை விரித்தவனை முறைத்த மதி.
“கல்யாணத்தை வச்சிட்டு என்ன கண்டாவியா டா பண்றான் அவன்?” என்று திரும்பிப் பார்த்து முறைக்க, இவன் முறைக்கும் காரணம் தெரியாது; கல்யாண மாப்பிள்ளை சாகித் இழித்து வைக்கவும்.
பல்லைக் கடித்த மதி, “இவன் மேட்டர் அந்தப் பொண்ணுக்கு தெரியுமாடா?”
“தெரியும்தான் நினைக்கிறேன்டா, இவங்க மேரேஜ் பிசினஸுக்காகத் மட்டும் தான்டா! சோ பிரச்சனை இருக்காது.”
“என்ன கண்டாவியோ அதை விடு, நான் ஏ.எஸ் கம்பெனி ப்ராஜெக்ட் பத்தி கேட்டேனே, என்ன ஆச்சு?” என்றதும் திருடன் போல முழித்தவன்.
“அது வந்து மதி…, நைட் இல்ல மார்னிங் அனுப்பிடுறேன் டா” என்றவன் கழுத்தைப் பிடித்த மதியழகன்.
“உன்ன அப்படியே கொன்னு போட்டுறட்டாடா? உன்ன நம்பி ஒரு வேலைய கொடுத்தேன் பாரு…, என்ன சொல்லணும்!”
“டேய் மதி…. விடு..டா, வலிக்குதுடா… டேய் விடுடா!“ என்று அவன் கத்திய பிறகே அவன் கழுத்தை விட்டான்.
“என்னமோ தெரிஞ்ச கம்பெனி, நிறைய ஸ்பை இருக்காங்கன்னு சொன்னியேடா! உன்ன நம்புன என்ன எதைக் கொண்டு அடிக்க, ஒரு வேலையா ஊட்டி வரை போறன்னு சொல்லித் தான்டா போன. உன்ன போய் பார்ட்னர வச்சேன் பாரு, என்ன சொல்லணும்!“
என்று தலையைப் பிடித்துக்கொண்டவனுக்கு ஏதோ தோன்றவும், நிமிர்ந்து வாசலை பார்க்க அங்கே வாசலில் கருப்பு நிற லேண்ட் ஓவர் கார் ஒன்று வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
அந்த காரில் வந்திருப்பது யார் என்று தெரிந்துகொண்ட மதி, அவன் வந்தது தெரியாதது போல நிமிர்ந்து கால் மீது கால் போட்டு அமர்ந்து கொண்டான்.
அவன் நினைத்தது போலவே காரில் இருந்து இறங்கினான் த்ரூவ். கருப்பு பார்மல் ஷர்ட் மற்றும் வெள்ளை ஜீன்ஸ் அணிந்திருந்தவன், ஒரு கையில் கிப்ட் மற்றோரு கையில் போன் என்று இறங்கியவன் மீது தான் பலரின் கண்கள் இருந்தன.
அந்தப் பலரில் மதியும் ஒருவன். ஆஹா ஓஹோ என்று எல்லாம் வராமல் நார்மலாக ஆபிஸ்க்குச் செல்வது போலத்தான் வந்திருந்தான், ஆனால் அதிலயே அனைவரையும் ஈர்த்து விடுவது போலத்தான் இருந்தான் அவன்.
த்ரூவ் நல்ல உயரம், நல்ல நிறமும் கூட; அவன் அம்மா போல அவனுக்கு நிறம் அதிகம் என்று அவனைப் பார்க்கும் பல பேர் கூறியிருக்கின்றனர்.
அளவான மீசை, அடர்ந்த தாடி என்று இருப்பவனை ஏதோ இந்தி நடிகன் போலத்தான் பார்த்து வைப்பார்கள்.
இவன் பிசினஸில் கால் வைக்காத இடமே இல்லை; அத்தனை திறமை வாய்ந்தவனுக்குப் பெண்கள் விசிறிகள் மிக அதிகம்.
அதற்கு காரணம் அவன் பெண்களுக்காக நடத்தும் பல உதவி மையங்களா? இல்லை பெண்கள் ஆசிரமமா? இல்லை, ஒரு பிரச்சனை என்றாள். அவர்களுக்காகக் குறள் கொடுப்பது நாளா என்பது அவர்களுக்கு தான் தெரியும்.
ஆனால் இவனுக்கு அவர்கள் மத்தியில், அதுவும் இளம் வயதினர் மத்தியில் ஃபேன் கிளப் வைத்து நடத்தும் அளவு விசிறிகள் அதிகம்.
“எப்படிடா மதி….., ஒரே மேட்சிங் மேட்சிங்! உங்களப் பார்த்த காம்படிட்டர்ஸ் மாதிரி இல்ல. ஏதோ ட்வின் பிரதர்ஸ் மாதிரி இருக்கீங்க. என்ன கலர்ல தான் நீ கொஞ்சம் கம்மி?”
என்று த்ரூவைச் கண்களால் சுட்டிக்காட்டி பேச, மதி அவனை முறைத்தபடி தலையைத் திருப்பிக்கொண்டான்.
“உண்மையத் தான சொல்றேன், அதுக்கு போய் முறைக்கிறான். காதுல போட்டுருக்க ஸ்டட் முதற்கொண்டு ஒரே போல இருந்தா….. நான் என்ன பண்ண? எனக்கு இப்படித் தான் தோணுது“ என்று அவனும் தலையைத் திருப்பிக் கொண்டான்.
இங்கு த்ரூவ் மேடை ஏறிப் பரிசைக் கொடுத்துவிட்டு, தன் கடமை முடிந்தது என்பது போல வெளியே நடந்து சென்றவன்.
மதியைக் கடக்கும் போது அவனைப் பார்க்கக் கூடாது என்று வேண்டும் என்றே அவன் பக்கம் திரும்பாமல் விறுவிறுவென்று நடந்து சென்றுவிட்டான்.
அதில் மதி அவனை முறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பார்வையை வினோ பார்த்துவிட்டு
“மதி, நான் எப்பவும் சொல்றது தான், நீ ஓகேன்னு சொல்லு. அவன் வச்சி நடத்துற பெண்கள் ஆசிரமத்துல விபச்சாரம் நடக்குதுன்னு தப்பா ப்ராஜெக்ட் பண்ணிடலாம். அவன் பேர் தப்பா போனா போதும், அவங்க அம்மாவே அவன கொன்னுருவாங்க!“
“பீச்… இப்படிப் பேசாதன்னு எத்தனை வாட்டி சொல்றது வினோ! அவன எனக்குப் பிடிக்கல நாளும் அவன் பண்ற நல்லது அதை கொடுக்கணும்னு எப்பவும் நினச்சது இல்லை. அவ்ளோ காசு இருந்தும் நம்மலால பண்ண முடியாத பல நல்லத அவன் தனியால பண்றான். பண்ணட்டுமே விடு!“
என்று த்ரூவ் காரையே பார்த்துக்கொண்டிருந்தான் மதி. மதி பேசியதை கோபமான முகத்துடன் கேட்ட வினோ.
“ரொம்ப தான்!. அவன் என்னன்னா, பெண்கள் நாட்டின் கண்கள்னு சேவை பண்ணிட்டு இருக்கான். இவன் என்னன்னா வாழ்க்கை முழுசுக்கும் ஒருத்தியத் தான் தொடுவன்னு சீன் போட்டுட்டு இருக்கான்.
ம்ஹூன்…. இதுல அவன் ஹீரோ, இவன் வில்லனாம்.
போங்கடா…. பொண்ண… ஒரு வாட்டி தோட்டுப் பார்த்தா தான் தெரியும் அது எவ்வளவு பெரிய போதைன்னு. பாக்குறேன் ரெண்டு பேரும் எத்தனை நாள் சாமியார் மாதிரி நடிக்கிறீங்கன்னு.”
என்று முனங்கியவன் எழுந்து சென்றுவிட, மதி தலையைத் பிடித்தபடி அமர்ந்துவிட்டான்.
“இந்த வினோவ போய் நம்பின பாரு, ப்ச்! இப்போ என்ன பண்ண? இந்த ப்ராஜெக்ட் அவனுக்கு கிடைக்கவே கூடாது. டூ டேஸ்ல என்ன பண்ண…” என்று எண்ணியபடி திரும்பிப் பார்க்க அங்கே வினோவைக் காணவில்லை.
“ப்ச் …. அச்சோ…. இவன வச்சிட்டு…” என்று கோபமாக இவனும் எழுந்து சென்றுவிட்டான்.
மதி என்ற மதியழகன் பரம்பரை பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன். கேஎம்பி ஷோட்டல்களின் வாரிசு. இப்போது அந்த ஹோட்டல்கள் மட்டும் இன்றி அதனோடு பல புதுத் துறை பிசினஸ்களையும் தொடங்கியிருக்கிறான்.
முப்பத்தி மூன்று வயது நிரம்பியும் சிங்கிளாகத் தான் இருப்பேன் என்று த்ரூவை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு வலம்வரும் முரட்டு ரக்கர்ட் பாய் வில்லன் என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு சுற்றுபவன்.
த்ரூவின் பேரை கெடுத்து அவனை இவன் காலில் விழ வைக்க வேண்டும் என்று ஒரு அற்புதமான கனவு கண்டு வருகிறான் நம் டம்மி பாவா.
இங்கு காரில் ஏறிய த்ரூவ், காரின் கண்ணாடி வழியே மதி புலம்பியபடி எழுந்து செல்வதைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன், முன்னால் இருந்த அவன் பிஏவிடம் கண் காட்டி வண்டியை எடுக்கச் சொல்லி சீட்டில் தலை சாய்த்துக்கொண்டான்.
முன்புறம் காரை ஓட்டிக்கொண்டிருந்த தருண், கண்ணாடி வழியே த்ரூவைப் பார்ப்பதும் போனைப் பார்ப்பதுமாக இருந்தான். பின் முடிவு எடுத்தவனாக மூச்சை இழுத்து பிடித்தபடி,
“சார், ஸ்டெல்லா இதோட அஞ்சு வாட்டி கால் பண்ணிட்டாங்க சார்” என்று சொல்ல முடித்துவிட்டு, கண்ணாடி வழியே த்ரூவைப் பார்க்க அவன் அதே நிலையில் இருந்தபடி,
“மேம்…. மேம்னு சொல்லு தருண்” என்று கடினமான குரலில் பதில் வரவும், எச்சிலை விழுங்கியவன்,
“அந்த ஸ்டெல்லா என்னென்ன, என் ரோல் உங்களுக்கு கீழ தான, பேர் சொல்லி கூப்பிடுங்கன்னு சொல்றாங்க. இவர் என்னன்னா மேம்னு கூப்பிடுன்னு சொல்றாரு. இவங்கள வச்சிட்டு…” என்று சலித்துக்கொண்டவன்,
“சாரி சார்… மேம் இதோட அஞ்சு வாட்டி கால் பண்ணி மெசேஜும் பண்ணிட்டாங்க. என்ன பண்ணட்டும் சார்? கால் கனெக்ட் பண்ணவா?”
“நோ… சார், பிஸினு மெசேஜ் மட்டும் சென்ட் பண்ணு.”
“ஓகே சார், இப்போ நான் எங்க போகட்டும் சார்?”
“மெயின் ஆபிஸ்க்கு போ தருண்.”
“போச்சி…. இன்னைக்கு நான் வீட்டுக்கு போன மாதிரி தான். இவங்க ரெண்டு பேரு கிட்டயும் இன்னைக்கு நான் நல்லா மாட்டிட்டேன்.”
என்று மூச்சை இழுத்து விட்டுக்கொண்டவன், காரை அடுத்த அரை மணி நேரத்தில் அலுவலகம் முன் நிறுத்தி இருந்தான்.
கார் நின்றதும் பாக்கெட்டில் இருந்த சிவிங்கத்தை எடுத்து வாயில் போட்டபடி த்ரூவ் உள்ளே நடந்து செல்ல, அவன் பின்னேயே தருண் சென்றான்.
த்ரூவைப் பார்த்துவிட்டு அனைவரும் எழுந்து நிற்க, அனைவருக்கும் ஒரு தலையசைப்பை கொடுத்தபடி உள்ளே அவன் அறையை நோக்கி சென்றான்.
அத்தனை வேகமாக கடைசி தளத்திற்கு வந்தவன், அவன் அறை கதவைத் திறந்து உள்ளே செல்ல போன கால்கள் அசையாமல் நின்றுவிட அப்படியே உறைந்து நின்று விட்டான்.
த்ரூவ் திடீரென்று நிற்பான் என்று எதிர்பார்க்காத தருண் அவன் மீதே மோதிவிட, அது கூட தெரியாமல் நின்றிருந்தான் த்ரூவ்.
த்ரூவ் மீது மோதிய பதட்டத்தில் தருண், “சாரி சார், தெரியாம மோதிட்டேன்”
என்று அவனைப் பார்த்துவிட்டு, “என்ன சார், உள்ள போகாம அப்படியே நிக்கிறாங்க?” என்று எட்டி உள்ளே பார்க்க, அங்கே ஸ்டெல்லா த்ரூவுக்காக சேரில் அமர்ந்து இருப்பதை பார்த்துவிட்டவன் ஜெர்க் ஆகி வாயை மூடிக்கொண்டான்.