அலரை அணைக்கும் அனல்

மாலை வெயில் அதன் வெப்பத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு செல்லத் தயாராகி கொண்டிருந்த நேரம் அது.

அந்த நீண்ட அகலமான தெருவில் இருந்த உயர்ந்த கட்டிடம், ஷிவானி ஆர்ட்ஸ் அகாடமி என்ற பெயரைத் தாங்கி நின்றிருந்தது அந்த ஐந்து மாடி கட்டிடம்.

கீழே பழ வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்க, பல்வேறு மனிதர்கள் அந்த கட்டிடத்திற்குள் போவதும் வருவதுமாக இருந்தனர்.

அந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு வகையான வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

தரைதளத்தில் டிராயிங் வகுப்பு, முதல் தளத்தில் கீபோர்டு, இரண்டாம் தளத்தில் கர்நாடக இசை வகுப்பு, மூன்றாம் தளத்தில் வயலின், மற்ற இரண்டு தளங்கள் நடனத்திற்கு என்று தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற ஆர்ட்ஸ் அகாடமி அது.

அந்த அகாடமியின் கடைசி தளத்தில் இருந்த அந்தப் பெரிய அறையில், பாட்டின் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

அந்த சத்தத்தை தாண்டி ஒரு பேச்சி குறளும் இன்றி அமைதியாக அங்கிருந்த அனைவரும் ஒன்று போல அமர்ந்த படி அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கு கண்ணாடியின் முன், கைகளை வளைத்து, கால்களைச் சுழற்றி, அனைவரின் கண்களையும் தன்வசம் கட்டி வைத்து நடனமாடிக்கொண்டிருந்தவன் மீது தான் அனைவ‌ரின் பார்வையும் இருந்தது.

“காதல்……. நெஞ்சில் தேன் ஊற்றுதே…… காற்றில் மெல்ல யாழ் மீட்டுதே……
கண்ணாளா நீ காதல் பச்ச
குத்த நெஞ்செல்லாம் பஞ்சாகி  போனதென்ன….

காற்றோடு  காற்றாகும் காற்றாடி போல்
காதல் உன்னோடு தான்…..

ஹே பெண்ணே, பெண்ணே

உன்னை கண்ட
பின்னே நேரம் நல்ல நேரம்
என்று தோன்றுதே….

ஓ மின்னும் பொன்னே கண்ணுக்குள்ளே
உந்தன் பிம்பம் எங்கோ என்னை
கொண்டு போகுதே…..

அடிக்கற வெயில
போல் உத்து பாக்குற…
அடிக்கடி குளிர போல்
வந்து ஈர்க்குற…..

வேரெல்லாம்….. பூக்கிறதே….
பூவெல்லாம்… வோ்கிறதே….
கோளாறு இதயத்திலே….
காதல் தித்திக்குதே….”

என்ற பாடல் வரிகளில் மூழ்கி ஆடிக்கொண்டிருந்தவனின் நினைவெல்லாம் அவளிடம் தான் இருந்தது.

அவளின் முகத்தை கண் முன் கொண்டு வந்து நடனம் ஆடியவனின் கண்ணில் காதல் அருவியாக ஊற்றிக் கொண்டிருந்தது.

சுழன்று மூச்சிரைக்க ஆடி முடித்து நின்றவனை அங்கிருந்த அத்தனை பேரும் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்ய, அதற்குச் சின்னச் சிரிப்பையும் தலையசைப்பையும் பதிலாகக் கொடுத்தபடி, அவனின் தோள் வரை இருந்த முடியை கையில் மாட்டி இருந்த பேண்டில் போட்டுக் கொண்டிருந்தான் ஆதிஷ்.

அந்த நடனப் பள்ளியில் இருந்த மாணவர்களுடன் பேசியபடி இருந்தவனை, கண் இமைக்க மறந்து பார்த்தாள் அவள்.

“ஏய்… நிஷா, என்னடி அவனை அப்படிப் பார்த்து வைக்குற?” என்றவளின் கேள்வியை கண்டு கொள்ளாது

“அவனோட பேர் என்ன சொன்ன?” என்றவளின் கண்கள் என்னமோ என்னும் அவனைத் தான் ரசித்து தின்றுகொண்டிருந்தது.

“அவன் பேரா? ஆதிஷ் டி…., நீ அவன எவ்வளவு பக்கனுமோ பார்த்துக்கோ, அவனைப் பார்க்க மட்டும் தான் முடியும் நம்மளால” என்று பெருமூச்சு விட்டவளின் பக்கம் திரும்பிய நிஷா.

“ஏன்?… அவனைப் பார்க்க மட்டும் தான் முடியும்னா புரியல?”

“அவனுக்கு ஆல்ரெடி ஆல் இருக்கு டி.”

“ப்ச்….அவ்வளவு தானா….இவ்வளவு அழகா, ஃபிட்டா, ஹேட்சம்மா இருக்குறவனுக்கு ஆல் இல்லாம இருந்தா தான் ஆச்சரியம், யார் அவ?”

“நோ ஐடியா டா…” என்று தோள்களை உலுக்கியவளைப் புரியாமல் பார்த்த நிஷா.

“நோ ஐடியா னா?”

“யார் அந்தப் பொண்ணுன்னு தெரியாது டி. இங்க அஞ்சு வருஷமா வரேன், எல்லார் பத்தியும் ஃபிங்கர் டிப்ல டீடைல்ஸ் வச்சிருக்கேன், ஆனா இந்த ஆதிஷ் மட்டும் வயை திறப்பேனான்னு இருக்கான். ஒரு வார்த்தை பேச ஓராயிரம் வாட்டி யோசிப்பான், உமகோட்டான்.”

“அவனைப் பார்த்த நல்ல ஜாலியான ஆள் மாதிரி தான் தெரியுது” என்று சிரித்து பேசிக்கொண்டிருந்தவனைப் பார்த்தபடி அவள் கேட்க,

“ப்ச்! மத்த விஷயம் எல்லாம் நல்லா தான் பேசுவான், ஆனா அவனைப் பத்தி ஒன்னு கேட்டா போதும், வாயில கம் போட்ட மாதிரி முடிப்பான்.”

“எனக்குத் தெரிஞ்ச வரை…. அவன் சிங்கில் தான் தான்னு நினைக்கிறேன், உங்க எல்லார் கிட்டயும் தப்பிக்கத்தான் இப்படிப் பொய் சொல்றானோ என்னமோ” அதை கேட்டு ஏதோ யோசித்தவள்.

“ஒரு வேலை இருக்குமோ?”

“என்ன இருக்குமோ?”

“அதான்டி நீ சொன்ன மாதிரி இருக்குமோ?. ஆதிஷ் வீக் எண்ட்னா இங்க வந்துருவான், மத்த நாள் வொர்க்னு போய்டுவான்.

இங்க டான்ஸ் கோரியோகிராபி அப்போ ஒரு மெசேஜ் இல்ல கால் ம்ஹூம் எதுவும் வராது அவன் ஃபோனுக்கு. அப்படி மீறி வந்தாலும் அது அவனோட வொர்க் கால்லா தான் இருக்கும்.”

“அப்போ நான் சொன்ன மாதிரி தான் போல, உங்க கிட்ட ஏதோ சொல்லி இத்தனை நாள் தப்பிச்சிருக்கான் போல பையன்.”

“நீ இங்க வந்து ஒன் மாந்த் தான் ஆகுது, இன்னைக்கு தான் பர்ஸ்ட் டைம் ஆதிஷை பார்க்கிற அன அவனை பார்த்ததும் கண்டுபிடிச்சிட்ட டி நீ செம போ…, அவன் உனக்குன்னு தான்னு இருந்துருப்பான் போல,” என்று பெருமூச்சு விட்டவளை சிரித்த முகமாக பார்த்த நிஷா.

“நீ வேணா பாரு, இன்னைக்கு அவனை என் கூட டூயட் ஆட வச்சி காட்டுறேன்.”

என்றபடி செல்ல போனவளை தடுத்தவள்.

“என்னது டூயட்டா? ஆதிஷ் எப்பவும் சிங்கிளா தான் டி ஆடுவான்.”

“இன்னைக்கு ஆடுவான் பாரு, நான் எப்படியாவது ஆட வைக்கிறேன்” என்று சிரித்தபடி ஆதிஷ் அருகே சென்றவள்

“ஹாய்… ஐ அம் நிஷா…” என்று கைகளை நீட்டி நின்றவளை ஒரு நிமிடம் புருவம் சுருக்கி பார்த்தவன், பின் அவள் கைகளைப் பற்றி குலுக்கி,

“ஹாய்… ஐ அம் ஆதிஷ்…” என்று அழகாக சிரித்தவனை தான் கண் இமைக்காமல் பார்த்து நின்றாள் நிஷா.

தோள் வரை தொட்டிருந்த முடி, அழகிய மீசை, அதனுடன் அளவான தாடி, அதன் நடுவே எப்போதும் சிரித்தபடி இருக்கும் சிவந்த உதடு. ஜிம் போவதற்குச் சாட்சியாக கைகளில் சதை முறுக்கேறி இருக்க, நல்ல நிறத்துடன் உயர்ந்து நின்றவனைப் பார்த்து மயங்காதவர் உண்டோ என்பது போல நிஷா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் பார்வையில் எரிச்சல் வந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் அதே சிரித்த முகத்துடன் ஆதிஷ்,

“ஹலோ… நிஷா, என்ன…?” என்று அவள் முன் கைகளை ஆட்டவும்

“ஹா….அது… அது…” என்று தயங்கி சிரித்துக்கொண்டவள்,

“கேன் யூ டான்ஸ் வித் மீ?” என்று ஆர்வமாக அவன் முகத்தைப் பார்த்து நின்றாள் நிஷா. அவள் கேட்டதும் சிறிதும் யோசிக்காத ஆதிஷ் பட்டென்னு

“நோ நிஷா, நான் டூயட் ஆடுறது இல்ல.” என்று சொல்லிவிட, அவன் பதிலில் முகம் கருத்த நிஷா

“ஏன் ஆடுறது இல்ல? டான்ஸன்னா எல்லாம் டான்ஸ் தான?”

“அது புரொஃபஷனலா… இத வாழ்க்கையா நினைச்சு ஆடுறவங்களுக்கு. ஆனா நான் அப்படி நினைச்சு ஆடுறவன் இல்லயே, டான்ஸ் எனக்கு ஒரு ஹாபி மட்டும் தான், அதை எனக்கு பிடிச்ச மாதிரி சிங்கிள்ளா ஆடுறேன்,”

என்று தோள்களை உலுக்கியவனை என்ன செய்வது என்று பார்த்தவள், அவன் அருகே இவர்கள் பேசுவதைக் கேட்டபடி கேலி சிரிப்புடன் நின்றிருந்தவர்களைப் பார்த்துவிட்டு

“இப்போ இவன் கூட ஆடம போனா எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்ட மாதிரி ஆகிடும், சோ ஒரு டான்ஸ் ஆவது ஆடிடனும்,” என்று யோசித்தவளாக,

“ஹாபியா இருந்தாலும் ஆசைப்பட்டது நாள தானே, ஆடுறீங்க ஆதிஷ். அதே மாதிரி ஒரு டூயட் இப்போ என் கூட ஆடுங்களேன். ப்ளீஸ்…. ஜெஸ்ட் ஒரு குட்டி டான்ஸ் ஜூனியருக்கு சொல்லி கொடுக்குறதா நினைச்சுக்கோங்க,”

என்று நிஷா பாட்டுக்கு கொஞ்சிய படி பேசிக்கொண்டே போக, ஆதிஷிற்கு அவள் பேச்சில் எரிச்சல் தான் கூடியது,

அந்த எரிச்சலை கட்டுப்படுத்திக் கொண்டு கையில் இருந்த வாட்சைப் பார்த்தவன் மெல்ல,

“பச்… டைம் ஆயிருச்சு,” என்று முணுமுணுத்துக்கொண்டு,

“இதோ பாருங்க…” என்று நெற்றியை ஆதிஷ் யோசனையாகத் தட்டவும், அதில் நிஷாவின் முகம் மாற,

“நிஷா…” என்று மறுமுறை அவள் பெயரைச் சொல்ல

“அ…. நிஷா… இது என்னோட டேன்ஸ் அகாடமி இல்ல, உங்களுக்கு நியூ டான்ஸ் கத்துக்கணும்னா போய் மாஸ்டர் கிட்ட கேளுங்க, என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க, ஓகே”

என்று பேசிவிட்டு, அவன் பாட்டுக்கு அவன் பைக்கை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் வீட்டை நோக்கிச் சென்றுவிட.

நிஷா முகம் கோபத்தில் சிவக்க, அவன் போவதைத் தான் முறைத்துப் பார்த்திருந்தாள். அங்கிருந்த அனைவரும் அவளைப் பார்த்து சிரிப்பது போலத் தெரிய மிகுந்த கோபத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

அப்போது அவள் தோள் மீது கை வைத்தாள் அவள் தோழி சாந்தி.

“ஃபீல் பண்ணாத நிஷா, ஆதிஷ் எப்பவும் அப்படித் தான். இங்க டான்ஸ்னு வந்தாலும், டான்ஸ் முடிஞ்சதும் கிளம்பிடுவான். என்ன டான்ஸ் இம்பாட்டன் ரீஹர்சல் நாளும் டைம்க்கு வீட்டுக்கு போய்டுவான்.”

“ஏன், படத்துல வர்ற மாதிரி பேய் பயமா என்ன?” என்று எரிச்சலாக நிஷா கேட்க

“அது எனக்குத் தெரியல, ஆனா அவனுக்கு லவ்வர் இருக்குறது உண்மை தான் நிஷா. பக்கத்துல இருக்க கர்நாடிக் மியூசிக் கிளாஸ்ல இருக்கப் பொண்ணுன்னு சொல்றாங்க. சோ, அவன கண்டுக்காதடி, அவன் கிடக்குறான் வேஸ்ட்டு பீஸு.”

என்று சாந்தி மெதுவாக கூறியது அவள் காதில் எங்கே விழுந்தது. இவள் மனம் எல்லாம் இவளை அசிங்கப்படுத்திக் கொண்டு சென்ற ஆதிஷ் மீது தான் இருந்தது.

இங்கு பைக்கில் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்த ஆதிஷோ, இவை எதைப் பற்றியும் கவலை இன்றி, அவன் சற்று முன் நடனம் ஆடிய பாட்டை முணுமுணுத்தபடி சென்று கொண்டிருந்தான்.

ஆதிஷ் கட்டிட வடிவமைப்பாளராக ஒரு பெரிய கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறான். ஆகாயவாணி மற்றும் கண்ணப்பன் இருவருக்கும் பிறந்த ஒரே செல்ல மகன்.

ஒற்றை மகனாக இருந்ததாலேயே, அவனை அத்தனை செல்லம் கொடுத்து தான் வளர்த்தனர். ஆதிஷுக்கும் அவன் குடும்பம் என்றால் அத்தனை பிடிக்கும்.

அவர்களுக்காகவே இவர்கள் இருந்த பழைய வீட்டை, வேலை கிடைத்த அடுத்த வருடமே இடித்து, அத்தனை திறமையையும் போட்டு ரசித்து வடிவமைத்திருந்தான். அதில் அவன் அம்மா அப்பாவுக்கு அத்தனை பெருமையும் கூட.

இருபத்தி ஆறு வயது, சுற்றி ஆடித் திரியும் வயதிலும், வேலை, வீடு, டான்ஸ் கிளாஸ் என்று இவர்களையே சுற்றித் திரியும் மகனைத் தலையில் வைத்து தான் கொண்டாடினர்.

அவன் அந்த வீட்டையே சுற்றி வரும் உண்மை காரணம் தெரிந்தால், ஆதிஷ் நிலை என்ன ஆகுமோ?.

வீட்டின் முன்னே வண்டியை நிறுத்திய ஆதிஷ், மின்னலென வீட்டின் உள்ளே நுழைந்தான். நுழையும் முன் அவன் கண்கள் ஒரு முறை பக்கத்து வீட்டின் முன் புறம் இருந்த வண்டியைப் பார்த்து விட்டு உள்ளே செல்லவும் மறக்கவில்லை.

ஹெல்மெட்டை கழற்றியபடி உள்ளே நுழைந்த ஆதிஷ், “மதர்… ஒரு காபி…” என்று கத்தியபடி மாடிக்குச் சென்றுவிட,

“இவன… வந்ததும் இங்க கொஞ்சம் உட்காருவோம்னு யோசிக்கிறானா? அப்படி மாடியில என்னத்த தான் அட காத்து வைக்கிறானோ?”

என்று அவர் கூறியது போல அவன் அடைகாக்கத்தான் போகிறான்; என்ன அவன் காதலியை அடைக்காக்கப் போகிறான் என்பது தெரியாமல் அவர் பாட்டுக்கு புலம்பியபடி காபி போட்டார்.

மேலே மாடிக்குச் சென்ற ஆதிஷ் நேராக அவன் அறைக்குள் புகுந்து கொண்டான். மேலே இவன் அறை, அதோடு விருந்தாளிகள் தங்குவதற்கு ஒரு அறை என்று இரு அறைகள் மட்டுமே இருக்க, மாடி முழுதும் அவன் ஆட்சிதான்.

அறைக்குள் வந்த ஆதிஷ் பால்கனிக்குச் சென்று அங்கு போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தவன், கண் என்னமோ எதிரில் இருந்த அந்த ஆழ் உயரக் கண்ணாடியில்தான் பதிந்து இருந்தது.

அந்தக் கண்ணாடியைச் சுற்றி கொடி போல செயற்கை செடிகளை வைத்துப் படர விட்டிருந்தான். காலை சூரிய ஒளி பட்டு அறைகுள் பல வண்ணங்களில் ஒளிக்கீற்றுகள் சிதறி, அழகாகப் படும் படி அதைச் செட் செய்து வைத்திருந்தான் என்றுதான் வீட்டில் அனைவரும் நினைத்திருந்தனர்.

ஆனால் அந்த கண்ணாடி அங்கு இருக்கக் காரணமே வேறு. ஆதிஷ் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அவனின் அம்மா காப்பியை எடுத்துக்கொண்டு மேலே வந்திருக்க.

அதை கவனித்த ஆதிஷ் உடனே கைப்பேசியைப் பார்ப்பது போலத் தலையைத் குனிந்து கொண்டான்.

“அப்படி அந்த இடத்துல என்னதான் இருக்கோ? இந்த வீட்டை கட்டுன நாலுல இருந்து உன்ன இங்க மட்டும் தான்டா பார்க்க முடியுது.

வீட்டுல இருந்தாளே, இங்க ஓடி வந்து உட்கார்ந்துற? அப்படி இங்க என்னதான் இருக்கு?” என்று பேசியபடி காப்பியை அவன் முன்னே இருந்த மேஜையில் வைக்க,

“இங்கதான் மொபைல் சிக்னல் சூப்பரா கிடைக்குது ம்மா…, வீட்டுல வேற எங்கயும் டவரே கிடைக்கல.”

“அப்படியா டா? எனக்குக் கீழதான் நல்லா டவர் கிடைக்குது, உனக்கு மட்டும் கீழ கிடைக்க மாட்டேங்குது? என்ன சிம் யூஸ் பண்ற? அதைத் தலைய சுத்தி தூக்கி எறி!”

“அட அம்மா, அந்த நம்பரத் தான எல்லாருக்கும் கொடுத்து வச்சிருக்கேன், அதப் போட்டுட்டா நான் என்ன பண்ண?”, என்றவன் பேச்சை எமந்து போய் ‘அட ஆமா’ என்று தலையசைத்து யோசித்தபடி கேட்டுச் சென்றார் வாணி.

அதே நம்பரில் வேறு சிம் மாற்றலாம்; ஏன், இவர் பயன்படுத்தும் அதே கம்பெனி சிம் தான் அவனும் உபயோகிக்கிறான். இது எதுவும் தெரியாமல் அவரும் சென்று விட, ஆதிஷ் வாணி சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டவன்,

மெல்ல நிமிர்ந்து கண்ணாடியைப் பார்த்தான். அதில் அவளின் விம்பம் தெரியக் கண் இமைக்க மறந்து பார்த்தான் ஆதிஷ்.

அரை மணி நேரமாக அவளையே பார்த்திருந்தவன், அவள் சென்ற பிறகே திரும்பி நேரத்தைப் பார்த்துவிட்டு கீழே சென்றான்.

இன்று நேற்று என்று இல்லை, பல வருடங்களாக ஒருதலைப்பட்சமாக அவளை நேசித்துக்கொண்டிருக்கிறான். அவளை நினைத்தே அனைத்தையும் செய்பவன், அவளை எண்ணித்தான் இந்த அறையையும் வடிவமைத்தான்.

அவளுக்காவே பல முடிவுகளையும் இவன் வாழ்க்கையில் எடுத்து அதைச் செய்தும் கொண்டிருக்கிறான். அப்படி ஒரு பைத்தியக்காரக் காதல் இது. ஆம், அப்படித்தான் பெரும்பாலும் அவனுக்கே இது தோன்றும்.

என்னதான் படித்து நல்ல வேலை கிடைத்தாலும், எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்தாலும், அவள் என்று வரும்போது அவனை அவனாலயே தடுக்க முடியாமல் போகிறது.

அவற்றில் ஒன்றுதான் இப்படி அவளுக்குத் தெரியாமல் அவளை மறைந்து நின்று ரசிப்பது. தினமும் ஒரு முறை அவளைப் பார்க்காமல் போனாலும் பைத்தியம் பிடிக்காத நிலைதான் அவன் நிலை.

இது காதலா அல்லது அடிக்ஷனா அல்லது அப்சர்ஸனா என்று புரியாத நிலையில் தான் அவன் இருக்கிறான். அவள் வேண்டும் என்ற ஒன்று மட்டுமே அவளை நினைக்கும் போது எல்லாம் இவனுக்குத் தோன்றும்.

அவன் நிலை அவனுக்கே புரிந்தாலும், அதை மாற்றப் பிடிக்காமல் அதையே ரசித்துச் செய்து கொண்டிருந்தான் இந்தத் கள்ளன்.

இப்படி ஒரு காதல்…. இல்லை, அடிக்ஷன் இல்லை அப்சர்ஸன் எதுவோ….. இதன் முடிவு என்னவோ?.

அவளைப் பார்க்காமல் இருந்தாலே பைத்தியம் ஆகும் நிலையில், அவள் இவனுக்கு இல்லை என்றாள். இவன் நிலை? இவன் காதலைப் பிரிக்க நினைத்தவர்களின் நிலை? என்ன செய்வான் இந்த காதல் அரக்கன்?.

இந்த அலரை அணைக்குமா அந்த அனல்? இல்லை அமைந்து போகுமா?