அறியாமல் தொலைந்தேனே -9

அத்தியாயம் -9

தன்னுடைய குற்றச்சாட்டில் அதிர்ந்த மீராவை கண்கள் இடுங்க பார்த்தார் பைரவ் மஜூம்தார். 

ஐஸக்கிடம், “என்ன நடந்ததுன்னு கேட்டு சொல்லு” என பணித்தார். 

தனக்கு நடந்ததை மீரா சொல்லவும் அவளை பாவமாக பார்த்தார் ஐஸக். 

இங்கு சஞ்சய் அவளுக்கு உதவியதையும் அப்படியே அவள் சொல்ல, “என்னம்மா சொல்ற நீ? சஞ்சய் தம்பியும் நீயும் ஒருத்தரையொருத்தர் விரும்பலையா?” என குழப்பத்துடன் கேட்டார் ஐஸக். 

“ஐயையோ அதெல்லாம் இல்லைங்க அங்கிள். நான் கனடா போக ட்ரை பண்ணிட்டு இருக்கேன். அவர் கூட சென்னைக்கு அவர் வீட்டுக்கே போக போறதா சொன்னார். நாங்க வெறும் ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தான்” என்றாள் மீரா. 

ஏற்கனவே இருவரும் காதலர்கள் என தாதாவிடம் அறிவித்து விட்ட ஐஸக், இப்போது அப்படி இல்லை என சொல்வது  சரியாக படுமா என யோசனையுடன் அவரிடம் சென்றார். 

“சொல்லு, நீ ஒரு கதை சொல்ற, அந்த பொண்ண தேடி கண்டுபிடிக்க சொன்னவன் வேற கதை சொல்றான். ரெண்டுல எது உண்மை?” சற்றே கடினத் தொனியில் வினவினார் பைரவ். 

இப்போது தான் சொன்னதை மாற்றிச் சொன்னால் தன் மீது நம்பிக்கை ஏற்படாமல் சஞ்சய்க்கு உதவாமல் போவதுடன் மீராவுக்கும் ஏதும் வில்லங்கம் ஆகி விடுமோ என பயந்து விட்டார் ஐஸக். 

ஆகவே மீரா சொன்னதை சொல்லி, “இந்த பொண்ணு பாவம், நீங்க வேணும்னா நல்லா விசாரிங்க பாபு. அந்த ராஜசேகரனோட பையன் நல்லவன் கிடையாதாம், முழு நேர குடிகாரனாம். இந்த பொண்ணோட அண்ணன் சரியில்லை, அதை உபயோகிச்சு இந்த பொண்ணு வாழ்க்கையை நாசமாக்க பார்க்கிறாங்க. மீராவை காப்பாத்ததான் சஞ்சய் தம்பி இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்திடுச்சு. நம்ம ஊரை நம்பி வந்தவங்க ரெண்டு பேரும், நீங்கதான் உதவனும்” என பணிவாக கேட்டுக் கொண்டார். 

ஐஸக் வாயிலாகவே மீராவின் அண்ணன் ராஜசேகரன் மூலமாக இடம் வாங்கினானா, அவனது கடன் அடைக்க பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் கேட்டார் தாதா. 

மீரா எதையும் மறுக்கவில்லை. ஆமாம் என்றவள் அதெல்லாம் அண்ணனின் தனிப்பட்ட வேலை என்பதையும் சொன்னாள். சிறு வயதிலிருந்து அம்மா உழைப்பில்தான் குடும்பம் நடப்பதாக சொன்னவள் அண்ணனின் ஊதாரித்தனத்தையும் குடிப் பழக்கத்தையும் பற்றி கூட சொன்னாள். 

மீரா சொல்வதை ஐஸக் மொழி பெயர்த்து சொன்னாலும் பைரவ்வின் பார்வை அவளிடமே இருந்தது. அவள் உண்மையைத்தான் சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்டார் அவர். 

இயல்பாகவே பெண்கள் என்றால் கனிவு கொண்டவர். மீராவின் கதையை கேட்டு அவளின் மீது அவருக்கு இரக்கமாக இருந்தது. அக்மார்க் நல்லவர் இல்லையென்றாலும் அவருக்கென்று சில கொள்கைகள் உள்ளன. அதில் ஒன்று பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு போதும் அவர் செய்ய மாட்டார். அதைவிட தன்னிடம் பொய் புரட்டு சொல்லி உதவி கேட்பவர்களை அவர் மன்னிக்கவே மாட்டார். 

ராஜசேகரன் பொய் சொல்லி தன்னை அநியாயம் செய்ய வைக்க பார்த்தானா என கோவம் கொண்டார். 

ஆனாலும் ராஜசேகரனை பற்றி அவருக்கு முழுதாக எதுவும் தெரியாதே. மீராவின் கூற்றை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கொண்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என தீர்மானித்தவர், தனது ஆளிடம் ராஜசேகரின் விவரங்கள் வேண்டும் என பணித்தார். 

அது உடனே நடக்கக் கூடியது இல்லை. அதுவரை சஞ்சயை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்க முடியாதே. மீராவின் விஷயத்தை தற்காலிமாக தள்ளி வைத்தவர் சஞ்சய் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார். 

காவல் நிலையத்துக்கு அழைத்து பேசினார் பைரவ். அந்த இன்ஸ்பெக்டர் சௌரப் கோஷ் எதில் என்ன லாபம் பார்க்கலாம் என இருக்கும் ஆள். ஏற்கனவே பைரவ்க்கும்  அவனுக்கும் இடையில் பனிப்போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

சஞ்சய் எப்படி சிக்கினான் என்பதை கேட்டறிந்து, திருட்டு ஜோடியை முதலில் அழைத்துச் சென்ற டாக்ஸி டிரைவரை கண்டுபிடித்து அவனோடு தன் லாயரையும் அனுப்பி வைத்தார் பைரவ். அதற்குள் நேரம் பதினொன்று ஆகி விட்டது. 

ஆனால் முன்கூட்டியே கான்ஸ்டபிள் ஒருவரின் வாயிலாக சஞ்சயை அழைத்து வர ஏற்பாடு நடக்கிறது என்ற செய்தி அவனை சென்றடைந்திருந்தது. சஞ்சய் பயத்தில் இருப்பான் என எண்ணி ஐஸக்தான் அவனுக்கு தகவல் தர பைரவ்விடம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆகவே சஞ்சயும் தன் வீட்டினர் யாரையும் தொடர்பு கொள்ள முயலாமல் தைரியமாகவே காவல் நிலையத்தில் காத்திருந்தான். 

டாக்சி டிரைவரை அழைத்து வர பைரவ்வின் ஆட்கள் சென்றிருந்த சமயத்தில் மீராவும் ஐஸக்கும் கடையொன்றில் காலை உணவை முடித்துக் கொண்டனர். 

‘நானே சஞ்சயை அழைத்துக் கொண்டு போய் வீட்டில் விடுகிறேன், நீ மருத்துவமனை போ’ என ஐஸக் சொல்லியும் மீரா கேட்கவில்லை. அவனை ஒரு முறை நேரில் பார்த்து சென்றால்தான் அவளுக்கு  சமாதானமாக இருக்கும்.

காவல் நிலையத்திற்கு வெளியிலேயே காத்திருந்தாள் மீரா. 

சஞ்சயை விசாரித்த சற்று நேரத்துக்கெல்லாம் சௌரப் கோஷ்’க்கு அவன் அப்பாவி, அவன் மீது தவறில்லை என்பது விளங்கி விட்டது. பணக்கார பையன், தனியாக இங்கு வசிக்கிறான் என்பதும் தெரிய, அவனை வைத்து நல்ல தொகையாக தேற்ற திட்டமிட்டுத்தான் அவனை உடனே விடுவிக்காமல் காலம் தாழ்த்தினான். 

ஆனால் பைரவ் அனுப்பிய வக்கீல் வரவும் தான் நினைத்தது நடக்கவில்லையே என ஏகத்துக்கும் கோவம் கொண்டான். வேறு வழியின்றி சஞ்சயை விடுவித்தான். பைரவ் வாயிலாக உதவி பெற்றதாலோ என்னவோ சஞ்சய் மீது சம்பந்தமே இல்லாமல் அவனது மனதில் வன்மம் உண்டானது. 

அரை மணி நேரத்தில் வெளியில் வந்தான் சஞ்சய். லாயரும் டாக்சி டிரைவரும் அங்கிருந்த படியே சென்று விட்டனர். 

ஐஸக்கிற்கு நன்றி சொன்னான் சஞ்சய். 

“நல்ல பையன்ப்பா நீ! இப்படியா வம்பை வழியக்க போய் வாங்குவ? மீரா பத்தி கூட நீ எதுவுமே சொல்லலை. இன்னிக்குத்தான் எனக்கு தெரிய வந்துச்சு” என ஐஸக் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களிடம் வந்தாள் மீரா. 

அவள் இங்கிருப்பது சஞ்சய்க்கு தெரியாது. 

“நீயும் இங்கதான் இருக்கியா?” என வியப்பாக கேட்டான். 

அவனது நலுங்கிய தோற்றத்தை கவலையாக பார்த்துக் கொண்டே, “ம்ம்… ஏதாவது சாப்பிடுறீங்களா சஞ்சய்?” எனக் கேட்டாள். 

“ம்ம்… நல்ல பசி” என்றான் சஞ்சய். 

“என்ன தம்பி இது, சாப்பாடு கூட தரலையா இவனுங்க?” காவல் நிலையம் பக்கமாக கோவமாக பார்த்துக் கொண்டே கேட்டார் ஐஸக். 

“ஃபூட் வாங்கி கொடுத்தாங்க அங்கிள். எனக்குத்தான் அந்த செட்டப்ல சாப்பிட பிடிக்கல. பசி இருந்தாலும் இப்பவும் சாப்பிட தோணல. எனக்கு முதல்ல ரெஃப்ரெஷ் ஆகணும்” என்றான். 

“நீங்க கிளம்புங்க சஞ்சய், நானும் ஆஃப்டர்நூன் ஷிஃப்ட் சேஞ்ச் பண்ணிட்டேன். நான் ஆட்டோல ஹாஸ்பிடல் போயிடுவேன், வீட்டுக்கு போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க, நைட் பேசுறேன்” என்றாள் மீரா. 

சஞ்சயும் சரி என்றான். 

“இல்லையில்லைமா, சஞ்சய் சாப்பிட்டதும் போரோ பாபுவை போய் நேர்ல பார்த்து நன்றி சொல்லிட்டு வரணும். நீயும் கூட இருக்கணும்” என்றார் ஐஸக். 

மீரா சங்கடமாக சஞ்சயை பார்த்தாள். 

“மீரா எதுக்கு அங்கிள்? நாம மட்டும் போலாமே” என்றான் சஞ்சய். 

சஞ்சயின் சோர்வான நிலையை கண்ட ஐஸக், “முதல்ல வீட்டுக்கு போலாம் தம்பி, நான் விவரமா சொல்லுறேன், மீராவும் வந்துதான் ஆகணும்” என்றார். 

சஞ்சய் ஏதோ பேசப் போனான். 

“அங்கிள் சொல்ற படி செய்யலாம் சஞ்சய்” என மீராவும் சொல்லி விட்டாள். 

சஞ்சயும் மீராவும் அவனது பைக்கில் புறப்பட்டனர். ஐஸக் சாப்பாடு வாங்கிக் கொண்டு வருவதாக சொல்லி ஆட்டோவில் கிளம்பினார். 

ஐஸக் உணவு பார்சலுடன் சஞ்சயின் வீட்டுக்கு வரும்போது குளியலறையில் இருந்தான் சஞ்சய். 

அன்று விடுப்பு எடுப்பதற்கு பேசிக் கொண்டிருந்த மீராவை கவலையாக பார்த்த ஐஸக், உணவை வைத்து விட்டு வெளியே சென்று விட்டார். 

சஞ்சய் வந்து சாப்பிடும் வரை மீரா அமைதியாக மட்டுமே இருந்தாள். வேகமாக சாப்பிட்டு முடித்த சஞ்சய், “ஸாரி மீரா, நான் உனக்கு ரொம்ப ட்ரபிள் கொடுத்திட்டேன்” என்றான். 

ராஜசேகரன் தான் இங்கு இருப்பதை கண்டுபிடித்து, தன்னை ஊருக்கு கொண்டு வர பைரவ்வை நாடியிருக்கும் விஷயத்தை சொன்னாள் மீரா. 

அதிர்ந்த சஞ்சய், “நீ ஒன்னும் கவலை படாத. அப்படிலாம் உன்னை அழைச்சிட்டு போக நான் விட மாட்டேன்” என்றான். 

“இல்லை சஞ்சய், அந்த தாதாவே என்னை அனுப்பி வைக்கிறதா இல்லை” என்றவள் மேலும் விளக்கி சொன்னாள். 

அப்போது உள்ளே வந்த ஐஸக், “ராஜசேகரன் பத்தி பாபுவே விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டுத்தான் முடிவு பண்ணுவார். அதனால மீராவுக்கு ஆபத்து ஏதும் வராதுன்னு நம்புவோம்” என்றார். 

“ஓ நல்ல தாதாவா இருக்காரே, அப்போ கண்டிப்பா அவரை மீட் பண்ணி தேங்க்ஸ் சொல்லித்தான் ஆகணும்” என்றான் சஞ்சய். 

“ஒரு விஷயம் உங்க ரெண்டு பேருக்கும் சொல்லணும் நான்” என்ற ஐஸக், இருவரையும் காதலர்கள் என தான் சொல்லி வைத்திருப்பதை சொன்னார். 

“என்ன அங்கிள் நீங்க? நான் எப்போ அப்படி சொன்னேன்?” என குறையாக கேட்டான் சஞ்சய். 

“எந்தப்புதான் சஞ்சய். ஆனா ரயில்வே போலீஸ்ல கூட அபப்டித்தான் சொல்லிருக்காங்க” என்றார் ஐஸக். மீரா கலக்கத்துடன் பார்வையை தழைத்துக் கொண்டாள். 

“ஹேய் மீரா! டோன்ட் ஒர்ரி. அப்படிலாம் இல்லைனு சொல்லிட்டா போச்சு” என்றான் சஞ்சய். 

“அப்படி சொன்னா இன்னும் சிக்கல் ஆகும் தம்பி. அதை சொல்லத்தான் உள்ள வந்தேன்” என்றார் ஐஸக். 

சஞ்சயும் மீராவும் ஒன்றும் புரியாமல் அவரை பார்த்தனர். 

“ஒரு விஷயம் இப்படித்தான்னு பாபுகிட்ட சொல்லியாச்சு. இப்போ மாத்தி பேசினா நாம சொன்ன மத்த உண்மை கூட பொய்யா இருக்குமோன்னு அவருக்கு சந்தேகம் வராதா?” எனக் கேட்டார் ஐஸக். 

“அது உங்களோட மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ன்னு சொல்லிட்டா போச்சு அங்கிள். இல்லாத ஒன்ன எப்படி இருக்குனு சொல்ல முடியும்?” என்றான் சஞ்சய். 

“நான் இங்க பொழப்பு தேடி வந்ததிலேருந்து பாபுவை எனக்கு தெரியும். ஒருத்தருக்கு செய்யணும்னு நினைச்சிட்டா என்ன வேணா செய்வார். இல்லைனு ஒதுங்கிட்டா அவ்ளோதான். இங்க நிம்மதியா வாழ அவரோட தயவு வேணும். நீயும் உன் ஊருக்கு திரும்ப போறதா மீரா சொல்லுச்சு. இந்த பொண்ணு வெளிநாடு போகவும் காலம் எடுக்கும். அதுவரை மீராவுக்கு உதவ அவர் ஒருத்தராலதான் முடியும். அப்போ மீரா மேல அவருக்கு முழு நம்பிக்கை இருக்கணும்”  என்றார் ஐஸக். 

தலையில் கை வைத்துக் கொண்டான் சஞ்சய். 

“மீரா வெளிநாடு போய்ட்டு வரட்டும், அதுக்குள்ள சஞ்சய் தம்பியும் நல்ல வேலை கிடைச்சி, தான் வீட்லேயும் சம்மதம் வாங்கி வச்சிடும்ன்னு அவர்கிட்ட சொல்லிக்கலாம்” என இருவருக்கும் பொதுவாக சொன்னார் ஐஸக். 

மீராவும் சஞ்சயும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 

“நீ நாளைக்கு உன் ஊர் போயிடுவ தம்பி, மீராவும் ஒரு நாள் இங்கேருந்து போயிடும். ஆனா என் பொழப்பு சாகுற வரைக்கும் இங்கதான். ஒரு தடவ என் வார்த்தைல பாபுக்கு நம்பிக்கை இல்லாம போயிடுச்சுன்னா அடுத்த தடவ என் பேச்சை கேட்கவே மாட்டார். ரெண்டு பேரும் விரும்புறதா சொல்றதால உங்களுக்கு எந்த நட்டமும் ஏற்பட போறதில்ல. உண்மைய சொன்னா நம்ம மூனு பேருக்குமே அது நல்லதில்ல” என்றார் ஐஸக். 

ஒரு முழு நிமிட யோசனைக்கு பின் தோள்களை குலுக்கி “ஓகே” என்றான் சஞ்சய். 

மீராவுக்கு இப்படி பொய் சொல்வதில் துளியும் உடன்பாடு இல்லை. உண்மையை சொன்னாலே பைரவ் புரிந்து கொள்வாராக இருக்கும் என்றுதான் தோன்றியது. அதை சொல்லவும் செய்தாள். ஆனால் ஐஸக்தான் ஒத்துக் கொள்ளாமல் தன் பிடியிலேயே நின்றார். 

“நானும் இங்க இல்லாத நேரத்துல இந்த பொய் உனக்கு பாதுகாப்பு தரும்னா சொல்லிட்டு போவோமே மீரா. என்னாகிட போகுது? லவ், பிரேக்கப்,  அப்புறம் இன்னொரு லவ்னு போயிட்டிருக்க காலத்துல இதெல்லாம் ஒரு மேட்டரா?” எனக் கேட்டான் சஞ்சய். 

முடியாது என்பது போல சஞ்சய், ஐஸக் இருவரையும் பார்த்தாள் மீரா. 

“சொல்லி புரிய வை தம்பி!” சலிப்பாக சொன்ன ஐஸக் வெளியேறி விட்டார். 

 “என்ன பயம் மீரா? இதால உன் ஃப்யூச்சருக்கு ஏதும் பாதிப்பு வரும்னு நினைக்கிறியா?” எனக் கேட்டான் சஞ்சய். 

மீராவுக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் இதற்கு உடன்படாதே என மனமும் மூளையும் வலியுறுத்தின. 

மீராவை ஆழ்ந்து பார்த்தவன், “இதை காம்ப்ளிகேட் பண்ண வேணாம் மீரா. நாமளா ஏதும் சொல்லல. ரயில்வே போலீஸ் நம்மள தப்பா நினைச்சுக்கிட்டாங்க. நாம எக்ஸ்பிளைன் பண்ணினோமா என்ன? ஐஸக் அங்கிள் கூட அப்படித்தான் நினைச்சார்ங்கிற விஷயமே நமக்கு இப்போதான் தெரியும். அப்படியே அந்த தாதா கூட நினைச்சிட்டு போகட்டும். ட்ரஸ்ட் மீ மீரா. இந்த பொய்யால என்னால எப்பவும் உனக்கு பிரச்சனை வராது. ஐஸக் அங்கிளும் பாவம் இல்லியா, ஹ்ம்ம்?” என்றான். 

அரைகுறையான மனதுடன் சரியென சொன்னாள் மீரா.