அறியாமல் தொலைந்தேனே -6

அத்தியாயம் -6

நடந்த நேர்காணலில் அப்படியொன்றும் பிரமாதமாக அவனது திறமையை காண்பித்திருக்கவில்லை சஞ்சய். ஆனால் சிபாரிசின் பெயரில் அவனுக்கு வேலை கிடைத்து விட்டது. ரித்தேஷ் அழைத்து வாழ்த்து சொல்ல, சஞ்சயிடம் மகிழ்ச்சியே இல்லை.

மீராவின் சம்பளத்தையே குறைவு என நினைத்தவன் அவளை விட குறைவான சம்பளம்தான் தனக்கு எனும் போது ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஏதோ ஒரு கோவத்தில் வீட்டை விட்டு வந்து விட்டான், சென்னையிலேயே நல்ல பிள்ளையாக இருந்திருக்க, அவனது நிலையே வேறு. இப்படி சொற்ப சம்பளத்துக்கு இன்னொருவரிடம் வேலை செய்ய வேண்டுமா என அவனது மனம் சுணங்கிப் போயிருந்தது.

“என்னடா உடம்பு சரியில்லையா?” எனக் கேட்ட ரித்தேஷிடம் தன் மனவோட்டத்தை சொன்னான்.

“ஹ்ம்ம்… கரெக்ட்தான், நாளைக்கே சென்னைக்கு கிளம்பு” என்றான் ரித்தேஷ்.

“அது… அதெப்படி அப்பா கூப்பிடாம போறது?”

“ஏன் அங்கிளா உன்னை வீட்டை விட்டு போக சொன்னார்?”

“இல்லை நானாதான் கோவத்துல வந்தேன், ஆனா அவர்தான் என் கோவத்துக்கு காரணம். செஞ்ச தப்ப உணர்ந்து அவரே கூப்பிட்டாதான் கெத்தா சென்னை போக முடியும்?”

“ஒரு வாரத்துக்கு முன்னாடி இதே வாய் வேற மாதிரில்ல பேசிச்சு”

“ம்ம்… என்னடா குத்திகாட்டுறியா?”

“ம்க்கும்! இப்போ என்ன செய்யலாம்னு நீயே சொல்லு. ஜாப் ஒழுங்கா போறதா இருந்தா போ, இல்லைனா போகாத. மவனே ஜாயின் பண்ணிட்டு பாதில ஓடி வரலாம்னு நினைச்ச… கொன்னு போட்ருவேன், என் கஸின் கஷ்ட பட்டு வாங்கி தந்திருக்கான், அவனுக்கு பதில் சொல்ல முடியாது. அவன் நம்மள மாதிரி கிடையாது”

“நம்மள மாதிரின்னு நம்மள நீயே குறைச்சு சொல்லலாமாடா?”

“இல்லடா நம்மள மாதிரி லைஃப் என்ஜாய் பண்ற ஆளு இல்லை அவன். சரியான பழம், ரூல்ஸ் பேசுவான். உன் வேலைக்கே ரெகமெண்ட்டஷனுக்கெல்லாம் ஒத்துக்கல அவன். இண்டர்வியூ நல்லா பண்ணினா தானா ஜாப் கிடைக்கும்னு சொன்னான். நான்தான் கஷ்ட படுற ஃபேமிலி, இந்த வேலை கிடைச்சாதான் வாழ்க்கைய ஓட்ட முடியும் அப்படி இப்படின்னு கதை சொல்லி சமாளிச்சேன்”

“வேலை வாங்கி தந்ததோட உன் கடமை முடிஞ்சது, பாதில விடக்கூடாது கமிட்டடா வேலை பாருன்னுலாம் நீ சொல்லக்கூடாது. அதெல்லாம் என் இஷ்டம்” என்ற சஞ்சயை வாய்க்கு வந்தபடி திட்டினான் ரித்தேஷ்.

சரிதான் போடா என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான் சஞ்சய்.

வீட்டில் அண்ணனிடம் மட்டும் வேலை கிடைத்து விட்டதை பகிர்ந்து கொண்டான். அடுத்தடுத்து அம்மா, அக்காக்கள், மாமாக்கள் என ஒரே அழைப்பு மழை. அடுத்த ஒரு மணி நேரம் அவர்களுடன் உரையாடுவதிலேயே கழிந்தது.

இனி ஓட்டல் வேண்டாம் என முடிவு செய்து வீடு பிடிக்க இணையத்தை குடைந்து ஒரு ஏஜென்ஸியிடம் பேசினான். அவசரத்துக்கு வீடு வேண்டுமென்றால் இரட்டிப்பு பணம் கேட்டனர். தம்பி ஓட்டல் சாப்பாடு சாப்பிடுகிறானே என்ற கவலையில் ‘நீ போ நான் பார்த்துக் கொள்கிறேன்’ என சொல்லி விட்டான் சஞ்சயின் சகோதரன்.

இவ்வாறாக அடுத்த இரண்டு நாட்களில் முழுவதும் ஃபர்னிஷ்டு செய்யப்பட்ட வாடகை வீடு ஒன்றுக்கு குடி பெயர்ந்திருந்தான் சஞ்சய்.

எப்படியிருந்தாலும் அவன்தானே சமைக்க வேண்டும். முதல் நாள் முயற்சித்து விட்டு அத்தோடு சமையலுக்கு பெரிய கும்பிடாக போட்டு விட்டான். அவனது ஜாகை வீட்டுக்கு மாறிய பிறகும் வெளியில்தான் சாப்பாடு, கொல்கத்தா வந்ததிலிருந்து ஓட்டல் சாப்பாடுதான், இப்போதும் அது தொடர, அதுவே அவனுக்கு எரிச்சலையும் ஆற்றாமையையும் ஏற்படுத்தியது.

இதில் வேலை செய்யும் இடத்தில் வேறு இவனுக்கு மேலே மாலினி சென் என ஒரு பெண் மிகவும் கறார் பேர்வழியாக இருந்தாள். பள்ளி, கல்லூரிகளில் சஞ்சய் சராசரிக்கும் அதிகமாக படிக்கும் மாணவன், ஆனால் விளையாட்டு, ஆடல் பாடல் என  வந்து விட்டால் அவனை கையில் பிடிக்க முடியாது. அத்தோடு சிரிக்க சிரிக்க பேசும் இயல்புடையவன் என்பதால் ஆசிரியர்களுக்கு செல்ல மாணவன்தான்.

ஏதாவது வம்பில் மாட்டிக் கொண்டால் கூட அந்த நேரம் கோவ முகத்தை காண்பித்தாலும் அடுத்த நாள் மறந்து விட்டு, “டேய் சஞ்சய்…” என இயல்பாக பேச ஆரம்பித்து விடுவார்கள்.

நண்பர்களை பற்றி கேட்கவே வேண்டாம். ஆகவே இந்த மாலினி சென்னின் கடுமையான தன்மை அவனை நன்றாக வெறுப்பேற்றியது.

தினம் மீராவிடம் சில நிமிடங்கள் பேசி விடுவான். ஆனால் அவளிடம் இதையெல்லாம் பகிரும் அளவுக்கு அவள் நேரம் கொடுப்பதில்லை. அதில் இவனுக்கு கொஞ்சம் கோவம் கூட.

அவள் என்ன செய்வாள் பாவம், மருத்துவமனையில் வேலை செய்து விட்டு விடுதிக்கு வரும் போதே உடம்பு சோர்ந்து போகிறது. கனடா செல்ல தன்னை தயார் படுத்திக் கொண்டிருப்பதால், அதற்காக படிப்பதில் மிச்ச நேரத்தை செலவு செய்கிறாள். அதைவிட சஞ்சயிடம் பகிர அவளுக்கும் பெரிதாக விஷயங்கள் இல்லையே.

ஒன்றுமே இல்லாமல் என்னவென மணிக் கணக்கில் அவனிடம் கைப்பேசியில் பேசுவாள்?

வீட்டையும் தன்னையும் தானே பராமரித்துக் கொள்வது சஞ்சய்க்கு இதுதான் முதல் அனுபவம். அதில் ஏனோ அவனுக்கு  சுய இரக்கம் ஏற்பட்டது.

அம்மாவின் குரலை கேட்கும் போதெல்லாம் சஞ்சய்க்கு தொண்டை அடைத்துக் கொண்டது. ஓடிப் போய் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டான். ஆமாம் சஞ்சய்க்கு ஹோம் சிக்னெஸ் வந்து விட்டது.

அவன் வீட்டினருக்கு மட்டும் இதில் மகிழ்ச்சியா என்ன? அனைவரும் சஞ்சயின் அப்பாவிடம், ‘நீங்கள் கூப்பிட்டால் வந்து விடுவான் மனமிறங்கி அவனை இங்கே வரவையுங்கள்’ என எவ்வளவோ கெஞ்சி விட்டனர்.

‘இப்போதுதான் சரியாக வாழ ஆரம்பித்திருக்கிறான், அவன் நன்றாக இருக்க வேண்டும் என உண்மையாகவே நீங்கள் நினைத்தால் அவனை அங்கேயே இருக்க விடுங்கள்’ என கண்டிப்போடு சொல்லி விட்டார் சஞ்சயின் தந்தை.

இப்போதைக்கு சஞ்சயின் பேச்சுத் துணைக்கு என இருப்பவர், அவனது வீட்டிற்கு வெளியில் மர நிழலில் தள்ளு வண்டியில் துணிகள் இஸ்திரி செய்யும் ஐஸக்தான். சின்ன வயதில் பிழைப்பு தேடி தமிழ்நாட்டிலிருந்து குடும்பத்தோடு வந்தவர் இங்கேயே இருந்து விட்டார். சஞ்சயின் துணிகளையும் அவர்தான் இஸ்திரி போட்டு தருகிறார்.

காலையில் வெயில் ஏறும் முன் வருபவர் பதினோரு மணிக்கு அவரது வீட்டுக்கு சென்று விடுவார், பின்னர் மாலையில் நன்றாக வெயில் தாழ்ந்த பிறகுதான் வருவார்.

பக்கத்தில் அபார்ட்மென்ட் இருக்கிறது, அங்குள்ள வீடுகளில் போய் துணிகள் வாங்கி வந்து இஸ்திரி போட்டு முடிக்கவும் திருப்பித் தந்து விட்டு வருவார்.

சஞ்சய்க்கு காலை ‘காபி டைம்’ அவரோடுதான். இரவிலும் அவரோடு பேசிக் கொண்டிருப்பான்.

சஞ்சய் பெரிய இடத்து பிள்ளை என்றெல்லாம் அவருக்கு தெரியாது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பையன், வேலைக்காக இங்கு வந்திருக்கிறான் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். இருவரும் தங்கள் சொந்த கதைகளை அதிகம் பேசிக் கொள்வதில்லை.  மீரா பற்றி மட்டும் ‘எனக்கு இங்கொரு தோழி இருக்கிறாள்’ எனும் அளவில் சொல்லியிருந்தான்.

ஐஸக் இந்த பக்கத்து மனிதர்கள் பற்றி நிறைய சொல்வார். அடிக்கடி பைரவ் மஜூம்தார் என்பவரை பற்றி சொல்வார். அடிமட்டத்தில் இருந்த அவர் இப்போது செல்வாக்கான மனிதராக உரு மாறிய கதையை சொல்வார்.

நிஜத்தில் நடந்ததைதான் ஐஸக் சொல்கிறாரா, அல்லது கற்பனை கலந்து கதை விடுகிறாரா என்பதில் சஞ்சய்க்கு தெளிவில்லை. ஏனெனில் அவர் சொல்வது கமர்ஷியல் தெலுங்கு படத்தின் கதை போலவே இருக்கும். ஆனால் அந்தக் கதை சுவாரஷ்யமாக இருக்க அவனும் கேட்டுக் கொள்வான்.

சஞ்சய் வேலைக்கு போய் வந்து ஐந்து நாட்கள்தான் ஆகின்றன. அதற்குள்ளாகவே பல மாதங்கள் கடந்து விட்டதோ என எண்ணும் அளவுக்கு ஆகி விட்டான்.

வார இறுதி அவனுக்கு விடுமுறைதான், மீராவுடன் எங்காவது வெளியில் செல்லலாம் என அவன் திட்டமிட, தனக்கு விடுப்பில்லை என சொல்லி விட்டாள் அவள்.

செவிலியர்களுக்கு சுழற்சி முறையில் வாரத்தின் ஏதாவது ஒரு நாள்தான் விடுப்பு கொடுக்கப் படும்.

தனியாக மால் சென்று, சினிமா சென்று, அண்ணன் தயவில் வாங்கிய புது பைக்கில் பயணம் செய்து என நேரத்தை ஓட்டினான். ஆனால் தனியாக இப்படி சுற்றுவது அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.