அவள் செல்லமாக முறைக்க, “நீதான் ஃபிரெண்ட்ஸ் மட்டும்தாங்கிறதுல ஸ்ட்ராங்கா இருக்கியே. எனக்கு ஊர் சுத்த கம்பெனிக்கு நல்ல கேர்ள் ஃபிரெண்ட் வேணும். இப்படி வெளில வந்தாதானே யாராவது நமக்கு சிக்குவாங்க” என தீவிர தொனியிலேயே சொன்னான்.

“பெங்காலி சரியா பேச தெரியல, அடுத்தவங்க பேசினாலும் புரியல, இந்த லட்சணத்துல பெங்காலி பொண்ணு கேர்ள் ஃபிரெண்ட்டா வேணுமா உங்களுக்கு?”

“ஓ மீரா! ஒரே லாங்வேஜ்ல பேசி லவ் பண்றதெல்லாம் போர்’டா. ரெண்டு பேருக்கும் பாஷை தெரியாம அப்படியும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறது எல்லாம்… ஹ்ம்ம்… போ உனக்கு சொன்னா புரியாது. யாருக்கு தெரியும், உனக்கு ஒரு நல்ல பெங்காலி பையனா மாட்டுவான், அப்போ தானா புரிஞ்சுக்குவ” என அவன் சொல்ல, ஏதோ அர்த்தத்துடன் சிரித்தாள்.

“ஏஏய் என்ன என்ன… என்ன நினைச்சு சிரிச்ச நீ, உண்மைய சொல்லாம விட மாட்டேன்” ஒரு விரல் காண்பித்து மிரட்டினான்.

“மொழி தெரிஞ்சே ஆயிரத்தெட்டு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ஸ் வருது. இதுல பெங்காலி பையனை கட்டி அவஸ்தை பட சொல்றீங்களா? எனக்கு வேணாம்” என்றாள்.

“ம்ம்… அப்போ நல்ல தமிழ் பையனா கிடைப்பான். கனடா போறப்போ அவனையும் கையோட கூட்டிட்டு போயிடு”

“நான் அவ்ளோ தூரம்லாம் யோசிக்கல. என் அம்மாவை கூட வச்சுக்கிற மாதிரி ஒரு லைஃப் அமைஞ்சா போதும் எனக்கு”

“அவ்ளோதானா வேற ட்ரீம்ஸ் இல்லையா உனக்கு?”

“ம்ஹூம், அம்மாவும் நானுமா நிம்மதியா இருக்கணும், அதுவே எனக்கு இப்போ எட்டாக்கனி”

“நோ நெகடிவ் ஸ்டேட்மெண்ட்ஸ்! இப்போ ஃபோகஸ்டா இரு, எப்படியும் வேலை கன்ஃபார்ம், ஆனா நீ நல்லா பெர்ஃபார்ம் பண்ணினா நல்ல பேக்கேஜ் கேட்டு வாங்கிக்கலாம்” என அவன் சொல்ல, தலையாட்டிக் கொண்டாள்.

கேப் புக் செய்து மருத்துவமனை சென்றனர். நேர்காணலுக்கு நூறு நபர்கள் போல வந்திருந்தனர்.

“ஹையோ இதென்ன ஹாஸ்பிடல்ல இப்போதான் நர்சிங் ஸ்டாஃப்ஸ் ஹயர் பன்றாங்களா என்ன?” வியப்பாக கேட்டான் சஞ்சய்.

“தௌஸண்ட் பெட்டெட் ஹாஸ்பிடல், மூனு ஷிஃப்ட்க்கு ஸ்டாஃப்ஸ் வேணும், யாரும் நிரந்தரமா ஒர்க் பண்ண மாட்டாங்க, நல்ல ஆஃபர்ஸ் வரும் போது ரிசைன் பண்ணி போயிட்டே இருப்பாங்க. இப்போ நிறைய வேகன்ஸி இருக்குமா இருக்கும்” என்றாள் மீரா.

“ம்ம்… கூட்டமா இருந்தாலும் பரவாயில்லை, பொழுது ஓடிடும்” பார்வையை வட்டமடித்துக் கொண்டே சொன்னான்.

“சஞ்சய்!” என கண்டிப்போடு அழைத்தாள். ஆமாம் கடந்த இரண்டு நாட்களாக அவளை படாத பாடு படுத்தி தன்னை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு கொண்டு வந்திருந்தான்.

“நீ உள்ள போ, நான் வெயிட் பண்றேன்” என நல்ல பிள்ளையாக சொல்லி அமர்ந்து கொண்டான். நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள் உள்ளேயும் அவர்களுடன் வந்தவர்கள் வெளியேயும் என அமர வைக்க பட்டிருந்தனர்.

மீராவுக்கு முன்னேரமாகவே நேர்காணல் முடிந்து விட்டது. சென்னையில் அவள் வாங்கிய சம்பளத்தை விட அதிகமே, அந்த வகையில் அவளுக்கு மகிழ்ச்சி.

இரண்டு நாட்களிலிருந்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாக பணியில் சேர்ந்து கொள்ள சொன்னார்கள். இப்போதே சேர சொல்லியிருந்தால் கூட மீரா சம்மதித்து விடும் மன நிலையில்தானே இருந்தாள்.

வெளியில் வந்தவள் சஞ்சயிடம் மகிழ்ச்சியாக தான் தேர்வாகி விட்டதை சொன்னாள். சம்பளத்தை தெரிந்து கொண்டவனுக்கு அத்தனை திருப்தியாக இல்லை. அவன் மாதம் செலவழிக்கும் தொகையில் நான்கில் ஒரு பங்கு. இதில் எப்படி இந்தப் பெண் வாழ்க்கையை ஓட்டுவாள் என்றே நினைத்தான்.

அவனைப் போல அல்லாமல் மீரா மகிழ்ச்சியாகவே தெரிய, அது பற்றி கேட்டுக் கொள்ளாமல் வாழ்த்துகள் மட்டும் சொன்னான்.

மருத்துவமனைக்கு சொந்தமான செவிலியர் விடுதியில் தற்போதைக்கு காலி இடமில்லை. ஆகவே அருகில் உள்ள மகளிர் விடுதிகளில் விசாரித்து பார்த்தனர். எல்லாமே நிறைந்து போய் விட்டதாம்.

ஆதலால் சற்று தூரமாக இருந்த விடுதியில் அறைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தான் சஞ்சய். காப்பாளராக தனது பெயரைத்தான் கொடுத்தான். விடுதிக்கு உண்டான முன்பணத்தையும் அவனே செலுத்த, இந்த கடனை எப்படி அடைப்பேன் என நெகிழ்ந்து போய் விட்டாள் மீரா.

கார்த்திகேயன் ஸார் சொன்னதால் செய்கிறான் என்று அவளால் நினைக்க முடியவில்லை, அவருக்கு தெரிந்தவனாக இல்லாமல் போனாலும் தனக்காக… தான் என்றில்லை, தன் இடத்தில் எந்த பெண் நிராதரவாக நின்றிருந்தாலும் செய்திருப்பான் என்பது அவளுக்கு உறுதியே.

முதல் சந்திப்பின் போது வசதியான வீட்டு பொறுப்பற்ற அடாவடியாக அறிமுகம் ஆன சஞ்சய், இப்போது மீராவின் மனதில் மிக உயரமான இடத்தில் இருந்தான்.

அன்றே ஓட்டல் அறையை காலி செய்து மகளிர் விடுதிக்கு புறப்பட்டனர். வழியில் புதிய கைப்பை வாங்கிக் கொடுத்து, “இது என்னோட கிஃப்ட்” என்றான்.

அவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை. அவளின் கையில் ஒப்படைக்கும் முன் அதற்குள் பணம் வைத்தான்.

“ஐயோ இது வேணாமே!” என பதறினாள் மீரா.

“சேலரி வர்ற வரை செலவுக்கு என்ன பண்ணுவ? நீதான் கணக்கு வச்சிருக்கியே, இதையும் வச்சுக்க” என சொல்லி, அவளின் தோளில் கைப்பையை மாட்டி விட்டான்.

இன்னும் அவளது கைப்பேசியில் ஜி பே ஆப் எல்லாம் இல்லை. கொல்கத்தாவிலேயே புதிய வங்கிக் கணக்கு தொடங்கலாம் என இருக்கிறாள். அதன் பின்னர்தான் வங்கிக்கான இணைய வழி சேவைகளை எல்லாம் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.

மீராவின் செலவுகளுக்கு கார்த்திகேயன் பணம் அனுப்புவதாக சஞ்சயிடம் கூறினார்தான். “செலவு பண்றத மீராவே எனக்கு திருப்பி தந்திடுறதா சொல்லியிருக்கா, இப்போ என்கிட்ட இருக்கு, தேவைப்பட்டா உங்கள்ட்ட கேட்கிறேன் ஸார்” என அவன் சொல்ல, அதற்கு மேல் கேட்டால் சண்டை போடுவான் என்பதால் அவரும் சரியென விட்டு விட்டார்.

விடுதியிலிருந்து மருத்துவமனைக்கு எந்த பேருந்தில் ஏற வேண்டும், எந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என எல்லாம் அவளுக்கு சொல்லிக் கொடுத்தான். தனியாக சமாளித்துக் கொள்வேன் என்ற தைரியம் அவளது விழிகளில் தெரிய அவனுக்கும் தைரியமாக இருந்தது.

சஞ்சய்க்கும் இன்னும் நான்கு நாட்களில் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் மனித வள துறை பணிக்கான நேர்காணல்.

“ஆல் த பெஸ்ட் சஞ்சய், கண்டிப்பா வேலை கிடைச்சிடும்” என்றாள் மீரா.

“கிடைக்கணும் இல்லைனா எங்கப்பா மூஞ்சுல முழிக்க முடியாது. இங்க எல்லாம் ஓகேவான்னு நைட் கால் பண்ணு” என்றான்.

அவள் தலையாட்டிக் கொள்ள விடைபெற்றுக் கொண்டு சென்றான் சஞ்சய்.

அவள் கல்லூரியில் படித்த காலத்தில் அவளது அம்மா கொண்டு போய் விட்டதோடு சரி. எண்ணி எண்ணி செலவுகள் செய்து அவளே அவளுக்கானதை பார்த்துக் கொள்வாள்.

சென்னையில் முதன்முதலாக வேலைக்கு சென்ற போதும் அவள் மட்டும்தான் தனியாக சென்றாள். அந்த நேரங்களில் அப்பா இல்லையே என்ற வேதனையும் அண்ணன் இருந்தும் பிரயோஜனம் இல்லையே என்ற ஆதங்கமும் அவளது மனதை கனக்க செய்திருக்கின்றன.

இன்று தனக்கு எந்த உறவும் இல்லாத ஒரு ஆண்மகன், இக்கட்டான சூழலில் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்து, மிகுந்த கண்ணியத்துடன் தன்னிடம் நடந்து கொண்டு, இத்தனை பொறுப்பாக தன்னை ஓரிடத்தில் விட்டுச் செல்கிறானே என நினைத்தாள்.

அபூர்வமான இவனுக்கு வாழ்க்கையில் எல்லாமே சிறப்பானதாகவே கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் தனது அறைக்கு நடந்தாள்.