அவள் முறைக்க, “பின்ன என்ன, நைட் ஒரு மனுஷன் உயிரை பணயம் வச்சு உனக்கு மெடிசின் வாங்கி தந்திருக்கான். இன்னும் யாரோ எவனோன்னு தள்ளி தள்ளி போனா… என் ஹார்ட் புஸுன்னு ஆகுமா ஆகாதா?” எனக் கேட்டான்.

“குட் மார்னிங்!” முணு முணுத்தாள் மீரா.

சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தான். “நைட் வரை இதே ட்ரெயின்லதான் டிராவல் பண்ணியாகனும். இந்த லாங் ஜர்னிலாம் எனக்கு அலர்ஜி. இப்படி தனியா டிராவல் பண்றது கூட இதுதான் ஃபர்ஸ்ட் டைம். அதை விட இந்த மௌன விரதம்லாம் நமக்கு செட் ஆகாது. ரயில் சிநேகிதர்கள் கேள்வி பட்டது இல்லை. அப்படி… நாம ஒருத்தருக்கு ஒருத்தர் கம்பெனி கொடுத்து இந்த ஜர்னியை ஹேப்பியா முடிப்போம், ஓகே?” என்றான்.

அவள் மறு பதில் சொல்வதற்குள், “ட்ரெயின்ல ஏதும் ஃபூட் வாங்காத, நைன் டிவெண்டிக்கு ட்ரெயின் நிக்கும் போது நான் ஸ்டேஷன்ல இறங்கி வாங்கிட்டு வரேன்” என்றான்.

‘ஐயோ!’ என அவள் பார்க்க, கண்களை சிமிட்டி, “ஓடுற ட்ரெயின்ல ஏறி இறங்கி ஏறி இறங்கி விளையாடலாம்” என வேடிக்கையாக சொல்லி ஓய்வறை உபயோகிக்க சென்றான்.

மீராவுக்கும் இரவு வரை அமைதியாகவே இருந்து, கண்டதையும் நினைத்து மனதை உளைச்சலுக்கு உள்ளாக்கிக் கொள்ள விருப்பமில்லை. சஞ்சயுடன் அதிகம் பேசா விட்டாலும் நட்புக்கரம் நீட்டியிருந்தாள்.

சொன்னது போலவே காலை உணவு அவளுக்கும் சேர்த்து வாங்கி வந்தான். ஆனால் அவளை பதட்டமடையச் செய்யாமல் சரியான நேரத்துக்கு ரயிலில் ஏறிவிட்டான்.

நிஜமாகவே அவன் வாங்கி தந்த உணவு நன்றாக இருந்தது. அதை சாப்பிட்டு முடிக்கவும் கொஞ்ச நஞ்சமிருந்த அவளது உடல் சோர்வும் நீங்கி விட்டது. மறக்காமல் உணவுக்கான பணத்தை கொடுத்து விட்டாள். அவனும் மறுக்காமல் சின்ன கிண்டல் சிரிப்புடன் வாங்கிக் கொண்டான்.

லேப்டாப்பில் படம் பார்க்க போவதாக சொன்னவன் அவளையும் பார்க்க அழைத்தான், ஆனால் அவள் மறுத்து விட்டாள். சற்று நேரம் படம் பார்த்தவனுக்கு அந்தப் படத்தில் ஈடுபாடு இல்லாமல் போகவும் மூடி வைத்து விட்டான்.

ஆந்திரா வரவும் சிலர் இறங்கிக் கொண்டனர், வேறு சில பயணிகள் ஏறினார்கள். ஸ்டேஷனில் இறங்கிய சஞ்சயை வெகு நேரமாக காணவில்லை. ரயில் புறப்படும் நேரம் உயர்தர உணவகத்திலிருந்து ஃபுல் மீல்ஸ் வாங்கிக் கொண்டு வந்தான்.

“கூலா சீட்ல உட்கார்ந்திருக்க? என்னைய தேடி கதவோரம் நின்னுட்டு இருப்பேன்னு நினைச்சேன், ஏமாத்திட்ட” என்றான். அதற்கு  அவளிடமிருந்து பதிலாக பற்கள் தெரிய ஒரு சிரிப்பு.

“புன்னகை மொழி… ஹ்ம்ம்? எனக்கு தமிழ் இங்கிலிஷ் ரெண்டு லாங்குவேஜ்தான் தெரியும். பெட்டெர் நீயும் அந்த பாஷையிலேயே என்கிட்ட பேசு. ஏன்னா எனக்கு புரியாத உன் புன்னகை மொழியை நான் தப்பு தப்பா படிச்சு புரிஞ்சுக்கிட்டா கஷ்டம் பாரு”

“இந்த லஞ்ச்க்கு எவ்ளோ பே பண்ணனும் நான்?” எனக் கேட்டாள்.

கன்னங்களை உப்பச் செய்து ஃப்ஃபூ என்ற சத்தத்துடன் உடனே வடிய விட்டவன், “நீ பேசாமலே இருக்கலாம்” என்றான். ஆனால் பணத்தை கொடுத்து விட்டுத்தான் உணவை கையில் வாங்கினாள் அவள்.

 இவர்களின் கூபேயில் தெலுங்கு பேசும் ஒரு குடும்பம் ஏறியது, இரண்டு சிறுவர்கள் இருந்தனர். இருவரும் நல்ல சுட்டிகள். சஞ்சய் பேச்சு கொடுத்து அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டான்.

மூவரும் ஒன்றாக அமர்ந்து ஏதேதோ விளையாடினார்கள். மனதில் நினைத்த பொருளை நடித்துக் காண்பித்து  அடுத்தவரை கண்டுபிடிக்க சொல்வது, ஏதாவது சேஷ்டை செய்து அடுத்தவரை சிரிக்க வைப்பது, ஸ்டோன் பேப்பர் சிஸர் என விதவிதமாக விளையாடினார்கள்.

கொஞ்சமும் சளைக்காமல் சிறுவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாடினான் சஞ்சய். அவர்களுக்கு விட்டும் தராமல் வெற்றிக்காக சண்டையிட்டு தர்க்கம் செய்து என சஞ்சயும் வளர்ந்த சிறுவனாகவே மீராவின் பார்வைக்கு தெரிந்தான்.

சஞ்சய் பேசும் அரைகுறை தெலுங்கு அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது. அவளையும் தங்களுடன் விளையாட அழைத்துப் பார்த்தான். இடவலமாக தலையசைத்து விட்டாள்.

“போதும் போதும் மெதுவா தலையாட்டு, கழுத்தும் சுளுக்கிடுச்சுன்னா என்கிட்ட உன்னால கம்யூனிகேட் பண்ண முடியாமலே போயிடும்” என அவளை கிண்டல் செய்து விட்டு மீண்டும் சிறுவர்களுடன் ஐக்கியமாகி விட்டான்.

கார்த்திகேயன் ஒரு முறை இவளுக்கு அழைத்து பத்திரமாக செல்கிறாளா என கேட்டறிந்து கொண்டார். அங்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்றே அவர் சொன்னாலும் அவள் நம்பவில்லை. இப்போது தனக்கு தெரிய படுத்தவும் மாட்டார் என்பதால் அவளும் விட்டு விட்டாள்.

நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு மேல் கொல்கத்தா ஸ்டேஷன் வந்தது. சஞ்சய் உயர்தர விடுதி ஒன்றில் அறை எடுத்திருந்தான். தனக்கு உதவி செய்ததற்காக இறுதியாக ஒரு முறை அவனுக்கு நன்றி சொன்னாள்.

எந்த சூழலில் அவள் இங்கே வந்திருக்கிறாள் என அவனுக்கு தெரியாத போதும், “உன்னை ரிசீவ் பண்ண யாரும் வருவாங்களா? எங்க போகணும் நீ?” எனக் கேட்டான்.

அந்த நேரத்திலும் ஜே ஜே என இருந்த அந்த பெரிய ஸ்டேஷன் அவளுக்கு மிரட்சியை கொடுத்தாலும் இன்னுமின்னும் அவனுக்கு தொந்தரவாக இருக்க அவள் விரும்பவில்லை. கார்த்திகேயன் ஸார் கொடுத்த கைப்பேசி எண்ணுக்கு ரயிலில் இருந்த போதே அழைத்திருந்தாள்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக வர தாமதம் ஆகும், ஆனால் வந்து விடுவேன் என சொல்லியிருந்தார் அந்த நபர்.

“ஆமாம், என்னை அழைச்சிட்டு போக ஆள் வந்திடுவாங்க. போகப் போற ஏரியா பேர் இனிதான் தெரியும்” என சஞ்சயிடம் கூறினாள் மீரா.

“போற இடத்தோட பேர் தெரியாதா?” திகைப்பாக கேட்டவன், “இடம் பேர் வாய்ல வராம இப்படி சொல்லுறியா?” என விசாரித்தான்.

அவள் ஆம் என தலையாட்டினாள். என்னவோ சஞ்சய்க்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. அவள் காண்பித்துக் கொள்ளவில்லை என்றாலும் அவளின் கண்களில் தெரிந்த எதுவோ ஒன்று அவனது மனதை இளக்கியது.

அவளாக ஏதும் கேளாமல் திரும்ப திரும்ப உதவி வேண்டுமா என கேட்கவும் அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆயினும், “நான் கிளம்பட்டுமா?” எனக் கேட்டான்.

“இப்போ நானும் கிளம்பிடுவேன், ப்ளீஸ் நீங்க கிளம்புங்க” என்றாள் மீரா.

சரி என்றவன் விடை பெற்றுக் கொண்டு வெளிப்புற வாயிலை நோக்கி நடந்தான். சில நிமிடங்களில் அவளது பார்வையிலிருந்து முற்றிலும் மறைந்து போனான்.

ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் பெரும்பாலோனோர் சென்றிருந்தனர். தன்னுடைய டிராலியை இழுத்துக் கொண்டு போய் சற்று தள்ளியிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

வட மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் அவளை கடந்து சென்றது. ஆடவன் நிறைய பயண பொதிகள் வைத்திருந்தான். கர்பபிணியாக இருந்த பெண்ணின் கையிலும் பை இருந்தது. மூன்று அல்லது நான்கு வயது மதிக்கத் தக்க பெண் குழந்தை அவளின் கை பிடித்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தது.

திடீரென அந்தக் குழந்தை கால் தடுக்கி விழுந்து விட்டது. பதறிப் போன மீரா வேகமாக அங்கே ஓடிச் சென்று குழந்தையை தூக்கி விட்டாள். குழந்தையை கவனியாமல் கணவனும் மனைவியும் மீராவுக்கு புரியாத பாஷையில் பேசி சண்டையிட்டுக் கொண்டனர்.

நல்ல வேளையாக குழந்தைக்கு பெரிய காயங்கள் இல்லை. குழந்தையை பாருங்கள் என அந்தப் பெண்ணுக்கு தன் மொழியில் சொல்லி விட்டு தன் இருக்கை வந்தாள் மீரா. அவளுடைய ட்ராலி பத்திரமாக இருக்க, கைப்பைதான் காணாமல் போயிருந்தது.