“என்னாச்சு உங்களுக்கு? கைல மெடிசின் இருந்தா போட்டுக்கலாமே” என்றான்.

தன்னுடைய நிலை இப்படியே தொடர்ந்தால்  விரைவிலேயே கவலைக்கு இடமாகி விடுவோம் என்பதை உணர்ந்தவள் அவனை சங்கடமாக பார்த்தாள்.

“என்ன? இப்படி வச்ச கண் வாங்காம பார்த்தா என்னன்னு நினைக்கிறது நான்?” என அவன் கேட்ட கேள்வியில் அவனிடம் ஏதும் உதவி கேளாமல் திரும்பி படுத்துக் கொண்டாள்.

“ஐயைய… ரொம்ப தொட்டா சிணுங்கியா இருக்கீங்க? ஏதும் ஹெல்ப் வேணும்னா கூப்பிடுங்க” என்றவன் அவனது இருக்கையில் படுத்து விட்டான்.

சில நிமிடங்களில் “ட்ரெயின் அடுத்து எங்க நிக்கும்?” என்ற அவளின் கேள்விக்கு பதில் தர அவன் விழித்திருக்கவில்லை.

ஏதாவது ஆகாரம் அவளுள் செல்லா விட்டால் காலையில் என்ன நிலைமையாகும் என சொல்ல முடியாது. மல்லுகட்டி எழுந்தவள் அவனை தொட்டு எழுப்பினாள். அன்று மருத்துவமனையில் கண் திறக்காமல் மற்றவர்களை படுத்தி வைத்தது அவளுக்கு நினைவு வந்தது. ஆனால் அன்று போல் அல்லாமல் இப்போது உடனே விழித்துக் கொண்டான்.

“சரியா சாப்பிடல நான். டீஹைட்ரேஷன் ஆகிட்டு வருது. எனக்கு ஓ ஆர் எஸ் கிடைச்சா உதவியா இருக்கும்” என்பதை சொல்லி முடிப்பதற்கே மிகவும் சிரம பட்டு விட்டாள்.

அவனும் எழுந்து கொண்டவன் கூகுள் செய்து பார்த்தான். அடுத்து பெரிய ஸ்டேஷன் வர அரை மணி நேரம் இருப்பதாக காட்டியது. சொன்னவன் தன்னிடம் இருந்த குளிர்பானத்தை கொடுத்தான்.

அவள் தயக்கமாக பார்த்தாள். அவள் கண் முன்னாலேயே இரண்டு வாய் குடித்தவன், “ஏதும் கலக்காத ட்ரிங்தான், ஓகே?” என சற்றே எரிச்சல் மேலிட கேட்டான்.

வாங்கிப் பருகியவள் படுக்காமல் சாய்ந்த படி அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

“ஜர்னி பண்ற அளவுக்கு இருக்கா உங்க ஹெல்த் கண்டிஷன்? இல்லைனா மெடிக்கல் ஹெல்ப்க்கு கேட்கலாம். டி டி ஆர் கிட்ட சொல்லலாம்” என்றான்.

நாளை இரவு தான் சந்திக்க வேண்டிய நபர் ஸ்டேஷன் வருவார், அதற்கு முன்பே வழியில் எங்கே எப்படி இறங்கி மீண்டும் எப்படி கொல்கத்தா பயணப் படுவது என்றெல்லாம் யோசித்தவளுக்கு இந்த பிரயாணத்தை தொடர்வதே சரியானதாக பட்டது.

கண்களை திறவாமலே, “இல்லை வேணாம், ஓ ஆர் எஸ் போதும்”  என உறுதியாக சொல்லி விட்டாள்.

இடைவெளி விட்டு இடைவெளி விட்டு அவன் தந்த பானத்தை மொத்தமாக அருந்தி முடிக்க, அவளுக்கு சற்றே தெம்பாக இருந்தது.

அடுத்த ஸ்டேஷன் வரவும் அவளிடம் சொல்லி விட்டு இறங்கினான் சஞ்சய். பத்து நிமிடங்கள் ரயில் அங்கே நிற்கும். ஆனால் மெடிக்கல் ஷாப் சற்று தள்ளி இருந்தது. கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்துக் கொண்டே ஓடிச் சென்றான் சஞ்சய்.

முதல் ஐந்து நிமிடங்களுக்கு சாதாரணமாகத்தான் இருந்தாள் மீரா. ஆறாவது நிமிடத்திலிருந்து வந்து சேர்வானா என பதட்டமாகி விட்டாள். கூபேயில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். வாயிலின் கதவருகில் போய் நின்று கொண்டு அவன் சென்ற பக்கத்தில் பார்வையை வைத்தாள்.

ஒரு வேளை அவன் வந்து சேரா விட்டால் அடுத்து என்ன செய்வது என யோசிக்கும் போதே மயக்கம் வருவது போலிருந்தது.

ரயில் புறப்படுவதற்கான அறிவிப்பு வர, மீராவின் இதயத் துடிப்பு எகிற ஆரம்பித்து விட்டது. அவனுடைய லக்கேஜையும் எடுத்துக் கொண்டு இறங்க வேண்டுமோ என அவள் கலவரத்துடன் நினைக்க, “அம்மா… விழுந்து கிழுந்து வச்சிடாம உள்ள வா” என சொல்லி சென்றார் ஓய்வறை உபயோகிக்க வந்த ஒரு பெரியவர்.

அவசர நிலை அட்ரீனலின் அதி வேகமாக சுரந்ததோ என்னவோ, அவளின் மயக்க நிலை மறைந்து சுதாரிப்புக்கு வந்திருந்தாள். வேகமாக உள்ளே வந்து அவனுடைய லக்கேஜை வெளியில் இழுக்க, ரயில் புறப்பட ஆரம்பித்திருந்தது. திகைத்தவளுக்கு அடுத்து என்ன செய்ய என்று தெரியவில்லை.

ஜன்னல் வழி சஞ்சய் ஓடி வருவது தெரிந்தது. இவளும் வேகமாக வாயில் பக்கம் சென்றாள். ஓடும் ரயிலில் ஏறப் போனவனின் கை நழுவியது, அவன் இடறி விழுந்த காட்சியை கண்ட மீரா பயத்தில் சத்தமாக அலறி விட்டாள்.

உறங்கியிருந்தவர்கள் எல்லாம் விழித்துக் கொள்ள, டி டி ஆர்’ம் வந்து விட்டார். சஞ்சய்க்கு ஏதும் ஆகவில்லை, முதலில் இடறினாலும் மீண்டும் முயன்று நல்ல படியாக ரயிலில் ஏறியிருந்தான்.

ஏன் இப்படி சத்தமிட்டாய் என மற்றவர்கள் விசாரிக்க, சஞ்சய்தான் விளக்கம் தந்தான்.

“ரெண்டு பேரும் ரிலேட்டிவ்ஸா?” எனக் கேட்டார் டி டி ஆர்.

“இல்லை, நாங்க ஃபிரெண்ட்ஸ்” என்றான் சஞ்சய்.

“ஏதும் பிராப்லம்னா என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே? அடுத்த ஸ்டேஷன்ல ட்ரெயின் அரை மணி நேரம் நிக்கும், அங்க இறங்கியிருக்கலாம்” என சொல்லி சென்றார் டி டி ஆர்.

மீண்டும் கூபே அமைதிக்கு திரும்பியது.

“பயந்து போயிட்டியா? டைம் கால்குலேட் பண்ணித்தான் போனேன் மீரா” என்றவன் அவளின் கூரிய பார்வையில், “ஃபிரெண்ட்ஸ்னு சொல்லிட்டேன், அப்புறமும் மரியாதையா கூப்பிட்டா டிஸ்டன்ஸ் ஆகுற ஃபீல் வருதில்ல, அதான். நீயும் என்னை சஞ்சய்னு கூப்பிடு” என்றான்.

உதவுகிறான் என்பதால் எல்லாம் அவனை பற்றி ஒன்றும் தெரியாமல் நண்பனாக ஏற்க அவள் தயாராக இல்லை. ஆனால் மறுத்து பேசாமல் புன்னகைக்க மட்டும் செய்தாள். அவன் வாங்கி வந்திருந்த வாந்தி மாத்திரை போட்டு, ஓ ஆர் எஸ் திரவத்தையும் பருகினாள். சற்று நேரத்தில் தெளிவு ஏற்பட்டதை உணர்ந்தவளுக்கு இனி இந்த பயணத்தை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

மனமார அவனுக்கு நன்றி சொல்லி அவன் வாங்கி வந்ததற்கான பணத்தை கணக்கிட்டு கொடுத்தாள். ஆச்சர்யமாக அவளை பார்த்தான் சஞ்சய்.

வீட்டில் அப்பாவுடன் அவனுக்கு மனஸ்தாபம். அன்றே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என முடிவாக இருந்தவன் விமான பயணம் செய்யத்தான் நினைத்தான். டிக்கெட் கிடைக்கவில்லை. ஆதலால்தான் இந்த ரயில் பயணம்.

நூறு ரூபாய்க்குள் உள்ள பணத்தை எண்ணித் தருபவள் அவளுக்கு விசித்திரமாகத்தான் பட்டாள். மறுத்தால் மீண்டும் எந்த உதவியும் கேட்க மாட்டாள், தானே வழியக்க உதவி செய்தாலும் அதை ஏற்க மாட்டாள் என புரிந்து வாங்கிக் கொண்டான்.

இருவரும் படுத்து விட்டனர். இந்த முறை மீராவுக்கு உறக்கம் கருணை காட்ட, நித்திரைக்கு சென்று விட்டாள்.

அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு சஞ்சய் துயில் களைய, அவனது கண்களுக்கு குளிர்ச்சியாக அமர்ந்திருந்தாள் மீரா.

மலர்ந்து சிரித்து, “குட் மார்னிங் மீரா!” என்றான். பதிலுக்கு தலையசைத்து முறுவலித்தாள் அவள்.

“ஓ உன் வாய்ல சுளுக்குல்ல, மறந்திட்டேன்” என தீவிர தொனியில் சொன்னான்.