“போடி மண்டி!” என்ற மினி வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

மாலினிக்கும் புடவைக்கட்டு புதிது, அசௌகர்யமாக இருந்ததால் ஆடியது போதும் என வந்து விட்டாள். அப்போதும் சஞ்சய் வராமல் மற்ற இளம் பெண்களுடன் சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தான்.

இயல்பாக மீராவின் பக்கத்தில் வந்தமர்ந்த மாலினி, அவளையும் இரண்டு நிமிடங்கள் சஞ்சயுடன் ஆடி வா என்றாள். அவளிடமும் மறுத்து விட்டாள் மீரா.

மினி வந்ததிலிருந்து மாலினியை கவனித்திருக்க, அவள் மீது நல்அபிப்ராயம். ஆகவே மீராவின் வெட்கம் பற்றி சொன்னாள்.

மீராவின் கையை பற்றிக் கொண்ட மாலினி, “டான்ஸ் உனக்காக ஆடு மீரா. வரப் போற வசந்த காலத்தை மகிழ்ச்சியா வரவேற்கிறோம். உன் முன்னாடி யாருமே இல்லை நீயும் சஞ்சயும் மட்டும் இருக்கிறதா மட்டும் நினைச்சி ஆடு, போ” என்றாள்.

“ஹையோ ரெண்டு பேரும் இளம் தம்பதி, வேற யாரும் இல்லைனு நினைச்சா நம்ம கதி என்னாகிறது, தப்பா அட்வைஸ் பண்ணாத” என்றாள் மினி.

மாலினி சிரிக்க, மினியை முறைத்தாள் மீரா.

“சஞ்சய் உன் கூட சேர்ந்து ஆடினதுலதான் மீரா ரொம்ப அப்செட்” என போட்டும் கொடுத்தாள் மினி.

“அப்படியா மீரா?” எனக் கேட்ட மாலினிக்கு வேகமாக மறுப்பு தெரிவித்து அபப்டித்தான் என காட்டிக் கொடுத்தாள் மீரா.

முதலில் திகைத்து பின் சிரித்த மாலினி, “சஞ்சய் ரொம்ப விளையாட்டு, நீ என்கிட்ட தள்ளியே நிக்கிறத பார்த்தா வேற என்னவோ சொல்லி வச்சிருக்கான் போல, என்ன?” எனக் கேட்டாள்.

சஞ்சயை விட்டுக் கொடுக்க விரும்பாத மீரா, அப்படியெல்லாம் ஏதும் இல்லை என்றாள்.

“சரி நீ எதுவும் சொல்ல வேணாம். ஆனா ஒரு உண்மையை தெரிஞ்சுக்க, நானும் சஞ்சயும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தான். அவனை விட ஒரு வயசு அதிகம் நான். எனக்கு அவன் தம்பி மாதிரி” என்றாள் மாலினி.

மீராவுக்கு எப்படி இருந்தது என வார்த்தையில் சொல்ல முடியாது.. வெளிப்படையாக காண்பித்துக் கொள்ளா விட்டாலும் அவளின் மனம் மாலினியிடம் இலகுவாக உணர்ந்தது.

மாலினி மீராவை உற்சாகப் படுத்த, மீராவும் தன் தயக்கத்தை உடைத்துக் கொண்டு சஞ்சயிடம் சென்றாள். அவ்வளவு கூப்பிட்டும் அப்போது வரவில்லைதானே என இப்போது மீராவிடம் போக்கு காட்டினான் சஞ்சய். ஒரு நிமிடம் கூட அங்கே நிற்கவில்லை மீரா, அவன் தன்னை கண்டுகொள்ளாமல் போகவும் கோபத்துடன் வந்து விட்டாள்.

“சஞ்சய்க்கு நேரம் சரியில்லை, இன்னிக்கு நைட் மங்களகரமான பூஜை மீராகிட்டேர்ந்து காத்திட்டு இருக்கு அவனுக்கு” என மாலினியிடம் கிண்டலாக சொன்னாள் மினி.

“அவரே ஆடட்டும் நான் ஓரமா இருக்கேன்” என சொல்லிக் கொண்டே பொத் என இருக்கையில் அமர்ந்து கொண்டாள் மீரா.

“அவனுக்குத்தான் இப்படி விளையாட தெரியுமா மீரா, நீயும் அவனுக்கு  சளைச்சவ இல்லைனு காட்ட வேணாமா?” எனக் கேட்டாள் மாலினி.

சற்று நேரத்தில் மினியின் தம்பியுடன் மீரா நடனமாட, பார்த்த சஞ்சய் அப்படியே நின்று விட்டான்.

“ஹஸ்பண்ட் கூட ஆட மறுத்தவளை இப்படி என் தம்பி கூட ஆட அனுப்பி வச்ச உன் பேச்சுத் திறமை என்னை வியக்க வைக்குது, இது நல்லதுக்கான்னுதான் தெரியலை. ரெண்டு பேரும் முட்டி மோதிக்க போறாங்க” என மாலினியிடம் சொன்னாள் மினி.

“சேச்ச சஞ்சய் அப்படி கிடையாது. ஆனா மீரா போய் நின்னும் கண்டுக்கலதானே, அனுபவிக்கட்டும் அவனும்” என்றாள் மாலினி.

அடுத்து என்னவாகும் என பார்த்திருந்த இரண்டு பெண்களுக்கும் சுவாரஷ்யம் கூடிப் போனது.

ஆரம்பத்திலிருந்தே பெங்காலி பாடல்களாகத்தான் ஒலித்துக் கொண்டிருந்தன. பாடியவர்களும் அப்படித்தான் அவர்களின் தாய்மொழியிலேயே பாடினார்கள். இப்போது பைரவ்வின் முக்கிய விருந்தினர் ஒருவர் வந்தார். அவருக்கு பூர்வீகம் வடக்குப் பக்கம். அவரை மகிழ்ச்சி படுத்தவென இந்தி பாடல்கள் ஒலிக்க விட்டார் பைரவ்.

மினியின் தம்பி மீராவை விட கூச்ச சுபாவி. மாலினிதான் பேசி பேசி அவனை மீராவுடன் அனுப்பி வைத்திருந்தாள். ஆனாலும் இசைக்கு ஏற்ப ஏதோ ஒப்பேற்றினார்கள் இருவரும்.

சஞ்சய்க்குள் பொறாமை பொங்க, வேகமாக மீராவிடம் சென்றான். அங்கே இரண்டு கூச்ச சுபாவிகளாலும் நடனத்தை மேலே எடுத்துச் செல்ல முடியாமல் நொண்டிக்கோடு அடித்துக் கொண்டிருந்தனர்

மினியின் தம்பியின் தோளை தொட்டான் சஞ்சய். மீராவின் கையை விட்டு சஞ்சயை பார்த்தான் அவன்.

மீராவை சுட்டிக் காண்பித்து, “மை வைஃப்” என்றான் சஞ்சய்.

மீராவின் கையை பிடித்து சஞ்சயின் கையில் கொடுத்து, “ஞான் டான்ஸ் களிச்சது மதி! இது பிடிச்சோளு ஸார்” (நான் ஆடியது போதும், இதை பிடித்துக் கொள்ளுங்கள் ) என சொல்லி ஓடியே சென்று விட்டான் அவன்.

சஞ்சயை முறைத்தவள் அவனிடமிருந்து தன் கையை உருவிக் கொள்ள முயன்றாள்.

“ஹஸ்பண்ட் கூட ஆட மட்டும் வெட்கப்படுவ, ஹ்ம்ம்… அவன் ஓடி தப்பிச்சிட்டான்” என்றான் சஞ்சய்.

“ஓ அப்போ நானும் உங்களோட ஆடினவங்கள எல்லாம் ஒரு கை பார்க்கவா?”

“ஏய் லூசு அதுக்குத்தானே அப்படி ஆடினேன், அவங்கள விடு என்னைய ஒரு கை பார்த்திருக்க வேண்டியதுதானே?” என அவன் கேட்க, அவளோ விழித்தாள்.

“முழிக்காத, இந்த டே’வை ஸ்பாயில் பண்ணாம ஒழுங்கா என் கூட வா” என சிரித்த முகமாக அழைத்தான் சஞ்சய். அவளால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை.

‘ராதா கைஸே ந ஜலே’ என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

“ஆஹா என்ன பொருத்தமான பாட்டு… பார்த்தியா?” எனக் கேட்டாள் மினி.

 ஆமோதிப்பது போல, “அன்பான பொறாமையும் அதனால வர்ற செல்லக் கோவமும்தானே இந்த பாட்டு, இந்த நொடி இவங்களுக்குத்தான் இது பொருத்தம்”என சொல்லி ஹைபை கொடுத்து சிரித்தாள் மாலினி.

சஞ்சய், மீரா இருவரின் விழிகளும் ஒருவரை விட்டு ஒருவர் அகலவே இல்லை. மீராவின் எளிமையான நடன அசைவுகளை சட்டென பிடித்துக் கொண்டு ஜாலம் செய்தான் சஞ்சய். சற்று நேரம் அங்கிருந்தோரின் கண்களையும் கருத்தையும் கவர்ந்து நிறைத்தனர் இந்த இளம் தம்பதியினர்.

பாடல் முடியவும் அவ்வளவுதான் என ஓடப் பார்த்தாள் மீரா. விடாமல் அவளின் தோளோடு தோள் அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினான் சஞ்சய்.

அடுத்தடுத்தும் பாடல்கள் ஒலிக்க, தங்கள் மேனியில் வியர்வை பூக்கும் வரை ஆடினார்கள். ஒரு கட்டத்தில் உற்சாக மிகுதியில் மீராவை இரண்டு கைகளாலும் தூக்கிப் பிடித்து சுற்றினான் சஞ்சய்.

சுற்றியிருந்தவர்களுக்கு அக்காட்சி கதிரவனின் சுடர் பட்டு தெறிக்கும் சூரிய காந்தி பூக்கள் சூழல்வது போன்ற பிரம்மையை உண்டாக்கியது. அந்த இடத்தின் நாயகன் நாயகி ஆகி விட்டனர் இருவரும்.

அவர்கள் வரவும் மாலினியும் மினியும் கைகள் தட்டி ஆரவாரம் செய்தனர். மீராவுக்கு ஒரே வெட்கம், சஞ்சய் தன்னை சமாளித்து தலை கோதிக் கொண்டே சிரிக்க, அமர்ந்த இடத்திலிருந்தே அவர்களுக்கு திருஷ்டி எடுத்தாள் மினி.

ஐந்து மணியை நெருங்கவும் நிறைய பேர் புறப்பட ஆரம்பித்தனர். மினி தன் குடும்பத்தினருடன் கிளம்ப, மாலினியும் எழுந்தாள். அவளை அணைத்துக் கொண்ட மீரா ஒரு நாள் வீட்டுக்கு வர வேண்டும் என உரிமையாக அழைப்பு விடுத்தே அவளுக்கு விடை கொடுத்தாள்.

‘இது எப்போது?’ என சஞ்சய் லேசாக வாய் பிளந்து பார்க்க, இரண்டு பெண்களுமே அவனை பார்த்து சொல்ல மாட்டோமே என்பது போல சிரித்தனர்.

வானிலை திடீரென மழைக்கு முன்னரான சுகந்தமான நிலைக்கு மாறியது. மீராவுடன் சஞ்சய் வீட்டை வந்தடைய, சின்ன சின்ன தூறல்கள் அவர்களை ஆசீர்வாதம் செய்வது போல தெளித்தன.

தன் கையில் மழை நீரை சேமிக்க முயன்றாள் மீரா. நல்ல மழை இல்லாத காரணத்தால் கை நனைய மட்டும்தான் செய்தது, நீர் சேகரம் ஆகவில்லை. கையின் ஈரத்தை அவனது கன்னத்தில் பூசினாள். அவள் கையெல்லாம் அவனது கன்னத்தின் வர்ணம் ஒட்டிக் கொண்டது.

அவனும் அவளை மழை நீரில் நனைக்க முயல இருவருக்கும் ஒரே சிரிப்பு. வீட்டுக்குள் வந்த பின்னும் அவர்களின் சிரிப்பு அடங்கவே இல்லை.

தேநீர் பருகலாம் என அடுப்பில் பால் வைத்தாள் மீரா. அதற்குள் தன்னை சுத்தப் படுத்தி ஆடை மாற்றிக் கொண்டு வந்தான் சஞ்சய்.

தேநீர் பருகியதும் அவளும் குளியலறை சென்றாள். தலையெல்லாம் வண்ணப் பொடி ஒட்டியிருக்க, தலைக்கே குளித்து விட்டு வந்தாள் மீரா.

பின்பக்கம் நின்று கொண்டிருந்தான் சஞ்சய். தூறல் கூட இல்லாமல் மண் வாசம் மட்டும் நிறைந்து போயிருந்தது காற்றில். அவனது கை வளைவில் கை கோர்த்துப் பிடித்து தோளில் தலை சாய்த்துக் கொண்டாள் மீரா. செல்லமாக அவளின் தலையில் முட்டியவன் அவளின் பிடியிலிருந்த கையை விலக்கி அவளின் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டான்.

இருவரின் மனங்களும் குதூகளித்துக் கிடந்தன. ஏதும் பேசாமல் வேடிக்கைதான் பார்த்திருந்தனர்.  அவளின் நெருக்கம் அவனை வசமிழக்க வைக்க, மீராவுக்குமே அப்படியானதொரு நிலைதான்.

தூரத்தில் இடி முழக்கம் கேட்க, மீராவை இரண்டு கைகளாலும் அள்ளியிருந்தான் சஞ்சய். பார்வையாலும் புன்னகையாலும் பேசிக் கொண்டனர். அவளை கைகளில் தாங்கிக் கொண்டே மெல்ல நடந்து படுக்கையறை நுழைந்தான் சஞ்சய்.

கணவனின் தழுவல்களிலும் முத்தங்களிலும் கரைந்தே போனாள் மீரா. அவளின் ரகசியங்களில் பித்தாகிப் போனான் சஞ்சய். ஜன்னலிடுக்கு வழியே ஊதக் காற்று உள் நுழைந்தும் அறைக்குள் அதி வெப்பமாகத்தான் இருந்தது.

காதலின் வேறொரு பரிணாமத்தை இருவருமே தங்களின் துணையிடம் வெளிப் படுத்த தவறவில்லை. சில மணித் துளிகள் இருவருமே தேன் அலை சுழலுக்குள் சிறு துரும்பாக சிக்கி, காணாமல் போய் மீண்டு வந்திருந்தனர்.

புதிதாக அறிந்ததும் புதிதாக அனுபவித்ததும் அவர்களின் சித்தங்களை இன்னும் மாய மயக்கத்திலேயே வைத்திருக்க, ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டு கிடந்தனர்.