அவனாக வருவான் என நினைத்து படுத்தே இருந்தவள் அரை மணி நேரம் கழித்துதான் அவனிடம் சென்றாள். அவன் கையிலிருந்த கைப்பேசியை பறித்து தள்ளி வைத்தவள், “நீங்க என்கிட்ட கோவப்பட்டா மட்டும் அது வேற டிபார்ட்மென்ட் இது வேறன்னு சொல்லி எலும்புல வலி எடுக்கிற அளவுக்கு என்னை போட்டு அமுக்குறீங்க, இன்னிக்கு மட்டும் என்னவாம்?” எனக் கேட்டாள்.

“என்ன இருந்தாலும் எனக்கு பெரிய மனசு, அதான் உடனே இறங்கி வர்றேன். நீ அப்படியில்ல” என அவன் அபண்டாமாக குற்றம் சொல்ல, வாயில் கை வைத்து அதிர்ந்தாள் மீரா.

“இல்லைன்னு சொல்றியா? இதே நீ இப்படி இங்க இருந்தா உன்னை தூக்கிட்டு போய் பெட்ல விட்டு கட்டிக்கிட்டு படுத்திருப்பேன்” என்றான்.

“இப்போ நானும் உங்களை தூக்கிட்டு போகணுமா?”

“ம்ஹூம்… நானே வர்றேன், ஆனா நீதான் என்னை கட்டிக்கணும்” என அவன் சொன்ன தொனியில் அவளுக்கு சிரிப்பு வந்தது. வேகமாக எழுந்தவன் அதே வேகத்தில் ஒற்றைக் கையாலேயே அவளை தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றான்.

அவளின் பதற்றம் குறைவதற்குள் அவளை படுக்கையில் தள்ளியவன் எம்பிக் குதித்து படுக்கையில் விழுந்தான்.

“பயந்திட்டேன் சஞ்சய்” நெஞ்சில் கை வைத்து சொன்னாள்.

“எங்க பயமா இருக்கு இங்கயா?” அவளின் கையை எடுத்து விட்டு அவன் கை வைத்து சோதனை செய்தான். அவனது கையை தட்டி விட்டவள், “ஃபங்ஷன் காலைல எட்டு மணிக்கு ஸ்டார்ட் ஆகும், எப்ப எழுந்து எப்ப போறதா ஐடியா?” எனக் கேட்டாள்.

“ஈவ்னிங் வரை நடக்கிற ஃபங்ஷன், எப்ப வேணா போயிக்கலாம். இப்போ உனக்குள்ள ஒளிஞ்சிருக்க பயத்தை விரட்டலாம், சொல்லு எங்க இருக்கு பயம்?” என இன்னும் விளையாடினான்.

அவனை தடுக்காமல் தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

“ம்ம்… இது வெட்கம் மாதிரி தெரியலையே. என்ன ஓடுது மைண்ட்ல?” என தீவிரத் தொனியில் கேட்டான்.

“உங்க ஆசை எனக்கு புரியுது, ஆனா நாம கவனமா இருக்கணும்” என்றாள்.

அவளின் முகத்தை நிமிர்த்தியவன், “பேபி வர்றது பத்தியெல்லாம் நெகடிவா யோசிக்காத. எங்கண்ணன் பொறந்தப்போ எங்கப்பாக்கு எவ்ளோ சம்பளம் தெரியுமா? அண்ணனுக்கு டாய்ஸ் வாங்கி தரக் கூட முடியாத நிலைமை. ஆனாலும் தைரியமா மூனு பசங்க பெத்துக்கிட்டாங்க. ஒருத்தவங்க அவங்க ஃபினான்ஸியல் ஸ்டேட்டஸ் வச்சு கல்யாணம் பண்றது குழந்தைக்கு பிளான் பண்றதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லாருக்குமே எல்லாத்தையுமே அனுபவிக்கிற உரிமை இருக்கு. என்னால பார்த்துக்க முடியும்னு உனக்கு நம்பிக்கை இல்லையா?” எனக் கேட்டான்.

“இனியொரு தடவ நம்பிக்கை இல்லையான்னு கேட்காதீங்க ப்ளீஸ். மேல மேல நாமளே பர்டனை ஏத்திக்க வேணாம்னுதான் சொல்றேன்”

“பசங்க வந்த பிறகுதான் எங்கப்பாக்கு முன்னேறணும்னு உத்வேகம் வந்திருக்கும். அப்படி  நம்ம குழந்தையும் என்னை பாசிட்டிவா முன்ன நகர்த்தி கொண்டு போகும். இன்னொரு முக்கியமான விஷயம்… எனக்கும் என் புள்ளைக்கும் நிறைய ஏஜ் கேப் இருக்க கூடாது. அப்புறம் எங்கப்பாக்கும் எனக்கும் ஒத்து வராத மாதிரி ஆகிடும். என் அண்ணனுக்கு எங்கப்பா கூட ஈஸியா செட் ஆகுதே ஏன், ஏன்னா… என் அளவுக்கு என் அண்ணன் யங் இல்லை. நானெல்லாம் என் பசங்களுக்கு ஃபிரெண்ட் மாதிரி இருக்கணும்” என அவன் சொல்ல சொல்ல அவனையே பார்த்திருந்தாள்.

“என்ன… என்ன மீரா?”

“ம்ம்… பேசி பேசியே டைம் பன்னெண்டு ஆக போகுது” என்றாள்.

“ம்ம்… இப்படி டென்ஷன்லேயே என்ன செய்யறது? பேசாம தூங்கலாம். இன்னொரு நாள் ரிலாக்ஸா இதை டிஸ்கஸ் பண்ணலாம்”

“எதை, குழந்தை உடனே வேணுமாங்கிறதையா?”

“போ மீரா, அதான் உடனே வேணும்னு சொல்லிட்டேனே. அந்த பிராஸஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம். எனக்கு நிறைய டவுட்ஸ் இருக்கு, எல்லாம் கிளியர் பண்ணிக்கணும்”

“என்ன டவுட்?” என தெரியாமல் கேட்டு விட்டாள். அவன் கேட்ட சந்தேகங்களில் வாயடைத்துப் போனவள் தலையணை கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள்.

“ஓ உனக்கும் ஆன்சர் தெரியாதா? கவலைப்படாத, நாம சேர்ந்து கண்டுபிடிக்கலாம்” என்றான்.

இதற்கு மேல் இவனை பேச விட்டால் காது மடல்களில் பிறந்திருக்கும் சிவப்பு வர்ணம் காலையில் கூட விட்டகலாது என்பதால் அவனை கட்டியணைத்து, “தூங்குங்க சஞ்சய்” என்றாள்.

அப்போதும் பேச்சை தொடர முயன்றவனை அதட்டி அடக்கி உறங்கச் செய்வதற்குள் மீராவுக்கும் உறக்கம் வந்து விட்டது.

ஆகவே இருவருக்கும் ஞாயிறு காலை தாமதமாகத்தான் விடிந்தது.

பைரவ்வின் மனைவி காலை உணவுக்கே வந்து விடும் படிதான் சொல்லியிருந்தார். சஞ்சய் உறக்கத்தில் இருந்ததால் வீட்டிலேயே சாப்பாடு செய்து விட்டாள். தான் குளித்து தயாரான பிறகுதான் அவனை எழுப்பி விட்டாள்.

இமை திறந்த உடன் அவளை கண்டவனின் விழிகளுக்கு நல்ல விருந்து. அத்தனை பொலிவாக இருந்தாள் மீரா.

“நேத்திக்கு இந்த சாரீல உன்னை இமாஜின் பண்ணி பார்த்தேன்தான், அதை விட டபுல்… ட்ரிபில்… ம்ஹூம்… சான்ஸே இல்ல ரொம்ப ரொம்ப அழகா இருக்க மீரா” என்றான்.

அவனது பாரட்டை உள்வாங்கி ரசித்துக் கொண்டவள், “நீங்களும் ரெடி ஆகுங்க” என்றாள்.

நேரத்தை பார்த்ததும் அவனும் வேகமாக கிளம்பச் சென்றான். வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன் மாலினிக்கு அழைத்துப் பேசினான். அவள் மதியத்திற்கு மேலே வந்து கலந்து கொள்வதாக சொன்னாள்.

பைரவ் வீட்டில் இவர்களுக்கு நல்ல வரவேற்பு. நூற்றுக் கணக்கில் ஆட்கள் இருந்தனர். சிலர் வருவதும் சிலர் கிளம்புவதுமாக இருக்க கூட்டம் மட்டும் குறையவே இல்லை.

பைரவ்வின் மனைவி மீராவின் கூந்தலில் மஞ்சள் நிற சாமந்தி பூக்களை அழகாக சூட்டி விட்டார்.

அப்போதே மதிய விருந்து ஆரம்பமாகியிருந்தது. கொஞ்ச நேரம் செல்லட்டும் என இவர்கள் வேடிக்கை பார்த்திருந்தனர். சிறியவர்கள் பெரியவர்கள் என பாகுபாடில்லாமல் வண்ணப் பொடிகளை மற்றவர்களுக்கு பூசி விட்டு ஆடி பாடி மகிழ்ச்சியாக காணப் பட்டனர்.

பைரவ்வின் மனைவி மீராவுக்கு வண்ணப் பொடி பூசி விட்டு சஞ்சய்க்கும் பூசி விடுமாறு சொன்னாள்.

மீராவுக்கு இதெல்லாம் புதிது என்பதால் சஞ்சயின் கன்னங்களில் பூசுவதற்குள் அவளின் முகத்தில் அத்தனை வர்ணஜாலம். சிரித்துக்கொண்டே மீராவின் கன்னங்களில் தன் கை வண்ணத்தை காண்பித்தான் சஞ்சய்.

மினி தன் குடும்பத்துடன் வந்தாள்.

மினியின் கணவன் சஞ்சயுடன் நன்றாக பேசினான். ஊரிலிருந்து வந்திருந்த தன் தம்பியையும் அழைத்து வந்திருந்தாள் மினி.

மீராவும் சஞ்சயும் மதிய உணவு சாப்பிடும் நேரத்தில் மாலினியும் வந்து சேர்ந்தாள். மீரா கற்பனை செய்திருந்ததை விட பேரழகியாக இருந்தாள் மாலினி. மீராவை நட்பாக கட்டியணைத்து முகமன் சொன்னாள். மீராவுக்குதான் அவளிடம் இயல்பாக பழக முடியாமல் ஏதோ தடை.

இப்போது நிறைய நபர்கள் வர ஆரம்பித்திருந்தனர். பாட்டுக் கச்சேரி களை கட்ட ஆரம்பித்தது. ஆணும் பெண்ணும் தங்களின் ஜோடிகளோடு சேர்ந்து ஆடினார்கள்.. பைரவ் மஜும்தார் அவரின் மனைவியோடு இரண்டு நிமிடங்கள் ஆட, அனைவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

சஞ்சய் மீராவின் கை பிடிக்க, அவளோ மினியின் பின்னால் பதுங்கிக் கொண்டாள்.

“போ மீரா, எல்லாரும் என்ஜாய் பண்ணும் போது உனக்கு மட்டும் என்ன?” என மினியும் சொல்லிப் பார்த்தாள். மீராவுக்கு ஆசை ஒரு பக்கம் இருந்தாலும் அதை மீறிக் கொண்டு கூச்சம் அவளை ஒதுங்க வைத்தது.

அழைத்துப் பார்த்து அழைத்துப் பார்த்து சோர்ந்து போன சஞ்சய், மீரா எதிர் பார்க்காத விதமாக மாலினியிடம் போய் அவளை அழைத்தான். தள்ளி நின்றிருந்த மாலினிக்கு நடந்தது தெரியாது, என்றாலும் மீராவுடன் ஆடு எனதான் சொன்னாள்.

“அவ ஷை ஆகுறா, நீ வா” என சஞ்சய் அழைக்கவும் அவளுக்கு தவறாக தெரியவில்லை. அனைவரின் மத்தியிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகத்தான் நடனத்தை பார்த்தாள். அத்தோடு வெகு மாதங்களுக்கு பின் அவளும் நல்ல உற்சாக மனநிலையில் இருக்க, அவனது கையை பற்றிக் கொண்டாள்.

மீராவின் முகம் கறுத்துப் போனது. “சஞ்சய் அவ்ளோ கெஞ்சியும் போகலைதானே நீ? அப்போ அனுபவி” என திட்டினாள் மினி.

“சேச்சி…”

“என்ன சேச்சி… சும்மா கைய காலை ஆட்டினா ஆச்சு, ட்ரை பண்ணி பார்த்திட்டு கூட டான்ஸ் வரலைன்னு சொல்லிட்டு வந்திருக்கலாம். புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரி இரு”  என இன்னும் கடிந்தாள் மினி.

“டான்ஸ்லாம் ஏதோ வரும். இப்படி எல்லார் முன்னாடியும் அவர் கூட ஆடத்தான் ஒரு மாதிரி இருந்தது” என சஞ்சய் மாலினியுடன் ஆடுவதை எரிச்சலாக பார்த்துக் கொண்டே சொன்னாள் மீரா.