மதிய உணவை அங்கேயே முடித்துக் கொண்ட பிறகு, அவனுக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க பயிற்சி கொடுத்தாள் மாலினி. முதல் நாள் அல்லவா, சஞ்சய் அதீத உற்சாகத்தில் அங்கிருந்து கிளம்புவது பற்றியே யோசிக்கவில்லை.

மீராவாக அழைத்து இன்னும் வரவில்லையா என கேட்ட பிறகுதான், “ஓ ஸாரி மீரா, டைம் பார்க்கவே இல்லை நான், இனி நான் கிளம்பி ஹாஸ்பிடல் ரீச் ஆகவே டைம் எடுக்கும்” என்றான்.

“எவ்ளோ நேரம் ஆகும்? நான் வெயிட் பண்றேன்” என்றாள் அவள்.

“நான் கொஞ்சம் பிஸிடா, இன்னிக்கு மட்டும் நீ பஸ்ல போயிடுறியா?”  எனக் கேட்டான் அவன்.

பேருந்தில் செல்வதெல்லாம் அவளுக்கு பிரச்சனை இல்லை. மாலினியின் வீட்டிற்கு நட்பு முறை சந்திப்பாகத்தானே சென்றான், காலையில் சென்றவனுக்கு இன்னும் அங்கே என்ன வேலை என மனம் சுணங்கியது.

“ஓய் ஒய் சைலன்ஸ்?” எனக் கேட்டவனுக்கு, “நான் பஸ்ல போயிக்கிறேன்” என சொல்லி வைத்து விட்டாள்.

மாலினி பக்கத்தில்தான் இருந்தாள்.

“ஒரே நாள்ல எல்லாம் கத்துக்க முடியாது சஞ்சய். நீ மீராவை கூப்பிட போயிருக்கணும், நைட் இருக்கு உனக்கு” என்றாள் மாலினி.

“இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் மீரா கோச்சுக்க மாட்டா. அவ எப்பவுமே பஸ்ல போறேன்னுதான் சொல்லுவா, ஒரு நாள்தானே? மேனேஜ் பண்ணிப்பா” என இலகுவாக சொல்லி விட்டான் அவன்.

மீரா வீடு வந்து சேரும் நேரத்தை கணக்கிட்டு பத்திரமாக வந்து விட்டாயா என விசாரித்தான்தான் சஞ்சய். பேசியவள், “வர இன்னும் லேட் ஆகுமா?” எனக் கேட்டாள். உடனே அவனை வரச் சொன்ன அவளின் மறைமுகச் செய்தியை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மீராவுக்கு அவன் மீது மனத்தாங்கல், உடல் அலுப்பும் சேர்ந்திருக்க  சமைக்காமல் போய் படுத்து விட்டாள்.

இருட்ட ஆரம்பிக்கவும் அவளுக்கு அழைத்தவன், “மாலினி வீட்ல நமக்கும் சேர்த்து டின்னர் செய்றாங்க, நீ சமைக்க வேணாம்” என்றான்.

  மீராவுக்கு நாள் முழுக்க பணி என்றதும் மாலினிதான் இப்படி சொல்லியிருந்தாள். இரவு சாப்பாடு எல்லாம் அவளின் வீட்டுக்கு வேலை செய்ய வரும் பெண்மணிதான் செய்வார் என்பதால்  அவளுக்கு சிரமம் ஏதுமில்லை.

ஒன்றும் சமைத்திருக்காத போதும், “இப்போ வந்து சொல்றீங்க சஞ்சய்? நான் ஏற்கனவே உங்களுக்கும் சேர்த்து சமைச்சு வச்சிட்டேன்” என காய்ந்தாள் மீரா.

“இப்பதான் மாலினி சொன்னா. நீ ரெஸ்ட் எடுக்காம ஏன் சமைச்ச? என்ன செஞ்ச, நாளைக்கு வச்சுக்க முடியாதா?” எனக் கேட்டான் சஞ்சய். இங்கே மாலினி சமைக்க சொல்லியிருக்க, மாற்றம் செய்ய விரும்பவில்லை அவன்.

“வச்சுக்க முடியாது சஞ்சய், அங்க உங்க மாலினி மேடம் செஞ்சத ஃப்ரிஜ்ல வச்சு காலைக்கு சாப்பிட சொல்லுங்களேன்” என பொரிந்தாள் மீரா.

“என்ன உனக்கு கோவம்?” என்ற சஞ்சய்க்கும் எரிச்சல் எட்டிப் பார்த்தது.

“அப்புறம் கஷ்ட பட்டு சமைச்சு வச்சா நீங்க அங்க சாப்பிடுவீங்களா?”

“வேலை முடிச்சிட்டு வந்து செய்ய உனக்கு கஷ்டம், இங்க வெரைட்டியா ஏதோ ஸ்டஃப்டு பராட்டா செய்றதா சொன்னாங்க. அதனால சரின்னேன். என்ன இப்போ… வீட்டுக்கே வர்றேன் போதுமா?” என சொல்லி கைப்பேசியை வைத்து விட்டான்.

மாலினி இவனிடம் வரும் போது ஏதோ யோசனையாக இருந்தான். அவளை கண்டதும், “எங்களுக்கு சாப்பாடு வேணாம் மாலினி, அவங்கள ஸ்டாப் பண்ணிடு, மீரா ஆல்ரெடி சமைச்சிட்டா. வேஸ்ட் ஆகிடும்” என்றான்.

அவனை உற்றுப் பார்த்தவள், “என்ன சண்டையா?” எனக் கேட்டாள்.

“சண்டையா? எங்களுக்குள்ள அதெல்லாம் வராது. நான் கிளம்பறேன்” என்றான்.

“ம்ம்… டோஸ் கொஞ்சம் அதிகம்தான் போல, கிளம்பு கிளம்பு” என கிண்டல் செய்தாள் மாலினி.

சஞ்சய் பாவமாக பார்க்க, “புதுசா கல்யாணம் ஆனவங்களுக்குள்ள சண்டை சண்டை வர வரத்தான் ரிலேஷன்ஷிப் ஸ்ட்ராங் ஆகும். சண்டைக்கு லிமிட் வச்சுக்க. என்ஜாய்!” என கண்களை சிமிட்டி சொன்னாள் மாலினி.

“நிஜமா சண்டையில்லை” என அவனும் குறும்பு சிரிப்போடு சொல்லி புறப்பட்டான்.

மீராவுக்கு வீம்பு. ஸ்டஃப்டு பராட்டா வகைகள் யூ டியூபில் பார்த்து உருளைக்கிழங்கு பராட்டா செய்யலாம் என ஆரம்பித்து விட்டாள்.

அவசரத்தில் ஸ்டஃபை மாவுக்குள் வைத்து சரியாக தேய்க்க வரவில்லை, அதற்குள் சஞ்சயும் வீடு வந்து சேர்ந்து விட்டான்.

குருமா ஒரு பக்கம் கொதித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மீரா சப்பாத்தி மாவோடு போராடிக் கொண்டிருந்தாள். முதலில் குழப்பமும் அதிர்ச்சியுமாகத்தான் பார்த்தான்.

மீரா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தலை குனியவும்தான் அவனுக்கு விஷயமே புரிபட்டது. அவளை கண்டனமாக பார்த்தவன் அறைக்கு சென்று விட்டான்.

மீண்டும் பராட்டா போட முனைந்தவளுக்கு சரியாக வரவே இல்லை.  சஞ்சயை கோவ படுத்தி விட்டோம், அவன் என்னை கேவலமாக நினைத்திருப்பான் என்ற நினைப்பில் அவளுக்கு அழுகை வந்து விட்டது. அப்படியே வைத்து விட்டவள் கண்களை மூடிக் கொண்டு நின்றாள்.

புறங்கையால் கண்களை துடைத்துக் கொண்டவள் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு மாவை தேய்க்க சுமாராக வந்தது. சமையலை முடித்து விட்டு அவனை அழைக்கச் சென்றாள்.

புறங்கையால் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தான் சஞ்சய். அவனருகில் சென்று அவனது தோள் பட்டையை சுரண்டி, “சாப்பிட வாங்க சஞ்சய்” என்றாள்.

“உன்னைத்தான் சப்பாத்தி போடாதேன்னு சொன்னேனே மீரா?” கண்களை திறக்காமலே கேட்டான்.

“நீங்க ஆசைப்பட்ட மாதிரி ஆலூபராட்டா செஞ்சிருக்கேன், நான் சாப்பிட்டு பார்த்தேன், நான் செய்ற பிளைன் சப்பாத்தி அளவுக்கு மோசமில்லை” என்றாள்.

கண்களை திறந்து அவளை பார்த்தவன், “சப்பாத்தி அளவுக்கு மோசமில்ல… ஹ்ம்ம்… அப்போ அதை விட மோசமா?” எனக் கேட்டான்.

அவளுக்கு விழிகள் கலங்கிப் போய் விட்டன. பதறிப் போய் எழுந்தவன், “என்ன கேட்டேன்னு இப்போ கண் கலங்குற நீ?” எனக் கேட்டான்.

மாலினியில் வீட்டு சாப்பாடு அவளுக்கும் வேண்டாம் சஞ்சய்க்கும் வேண்டாம் என மனதில் நினைப்பதை தைரியமாக இவனிடம் சொல்ல வரவில்லை. எனக்கு உன் எண்ணம் புரிகிறது என அவனும் வெளிப்படையாக சொல்லவில்லை.

“டயர்டா வேற தெரியற… ஹ்ம்ம்…  என்ன செய்யலாம்? ம்ம்… அழாம சிரிச்சிட்டே கூப்பிடு சாப்பிட வர்றேன்” என்றான்.

சஞ்சயை மகிழ்ச்சி படுத்தி விட வேண்டும் என அவளுள் ஆவல் பிறக்க, சட்டென அவனது கன்னத்தில் முத்தமிட்டு, “சாப்பிட வாங்க” என்றாள்.

இனிய அதிர்வோடு அவன் அவளைப் பார்க்க, அவள் வெட்கச் சிரிப்புடன் இருந்தாள். அவள் நெற்றியில் தன் நெற்றி கொண்டு முட்டியவன், “நீ சொன்னது சரியா காதுல விழலை, இன்னொரு முறை சொல்லு” என்றான்.

சின்னக் குரலில் அவள் சாப்பிட அழைக்க, “ப்ச் இப்படி இல்லை அப்படி” என சொல்லி தன் கன்னத்தை அவளுக்கு காண்பித்தான்.

இந்த முறை வேகமாக அல்லாமல் பொறுமையாக, அழுத்தமாக அவனது கன்னத்தில் முத்தமிட்டு சாப்பிட அழைத்தாள்.

சஞ்சயின் கோவமெல்லாம் எங்கே சென்றது என்றே தெரியவில்லை. அவளின் செயலில் நிறையவே உருகிப் போயிருந்தவன் அவளின் முகத்தைப் பற்றினான். இமைகள் பட படக்கும் விழிகளுக்கு அடுத்து அவனை வெகுவாக கவர்ந்தது அவளின் செவ்விதழ்கள்தான்.

நொடியில் அவனது மனவோட்டத்தை அவளும் புரிந்து கொண்டாள். மெதுவாக இமைகளை அடைத்து ஒரு அங்குலம் அவனை நோக்கி தன் முகத்தை நகர்த்தினாள்.

அவளின் இதழ்களில் தன் இதழ்களை கோர்த்தான் சஞ்சய்.

 காதல் முத்தத்தில் இனிமையாக தொலைய ஆரம்பித்தனர் இருவரும்!