இரவுக்கு சமைக்க வேண்டும் என நினைக்கும் போதே மீராவுக்கு கண்களை கட்டியது. இங்கு அவளுக்கு பெரிய பிரச்சனை இட்லி மாவு அரைத்துக் கொள்ள முடியாததுதான். வீட்டில் கிரைண்டர் இல்லை. ரெடிமேட் மாவு வகைகள் அவ்வளவு நன்றாக இருப்பதுமில்லை.

காலையில் செய்த கத்திரிக்காய் கத்தாசு ஃபிரிஜில் மீதமிருந்தது. அதை சூடு செய்து கொண்டவள் கோதுமை தோசை ஊற்றினாள். மாடிக்கு வேண்டாம் என சொல்லி விட்டாள். சஞ்சயும் அவளுக்கு காலை ஷிப்ட் இருக்கும் தினங்களில் மட்டும் மாடியேறலாம் என முடிவு செய்து கொண்டான்.

சாப்பிடும் போது ஏதும் சொல்வானோ என உள்ளுக்குள் நெருடல்தான். ஆனால் அவன் எதுவும் குறையாக சொல்லவில்லை.

“இது மார்னிங் செஞ்சதுதானே? இந்த காம்போவும் நல்லாருக்கு” என மட்டும் சொன்னான்.

உறங்க செல்லும் முன் அவளிடம் சின்ன அட்டைப் பெட்டியை கொடுத்தான். ஆவலாக வாங்கி பிரித்துப் பார்த்தாள். அழகான ஃபேன்சி வளையல்கள்.

அளவு கூட சரியாக இருக்க, அவனை வியப்பாக பார்த்தாள்.

“லஞ்ச் சாப்பிடும் போதே நினைச்சேன் உனக்கு ஏதாச்சும் வாங்கணும்னு. மாலினி கொடுத்த ஐடியா, அவளே செலக்ட் பண்ணியும் கொடுத்தா. அவ கை சைஸ்தான் உனக்கும்ன்னு சொன்னது நான்தான்” என்றான்.

அவளின் முகம் சுண்டிப் போனது. கள்ளச் சிரிப்புடன், “ஏன் டல் ஆகுற உனக்குத்தான் ஜெலஸ்லாம் வராதே” என்றான்.

“ஜெலஸ் இல்லை, திகு திகுன்னே எரியுது போதுமா?” என கோவமாக சொன்னாள்.

“ம்ம்… கம்மியா இருக்கே, இன்னும் எதிர்பார்க்கிறேன் உன்கிட்டருந்து” என நக்கலாக சொன்னான்.

“கொன்னுடுவேன் சஞ்சய்!” என கோவமாக சொன்னவள் உடனே தன் நெற்றியில் தட்டிக் கொண்டாள்.

அவளின் நாடியை உயர்த்திப் பிடித்து தன்னை பார்க்க செய்தவன், “உன் ஹாஸ்பிடல் பக்கத்துல  இருக்க கடை ஒன்னுல நானே வாங்கினேன். நிஜமா கோல்டுல வாங்கதான் ஆசை, இப்போ இவ்ளோதான்” என்றான்.

“எதுக்கு பொய் பேசினீங்க, பாருங்க திட்டிட்டேன் உங்களை” என வருத்தமாக சொன்னாள்.

“அப்புறம் சும்மா நீ எவளையும் பாரு உன்னையும் எவளும் பார்க்கட்டும்னே பேசினா காண்டாகுதா இல்லியா மனுஷனுக்கு?”

“எல்லாரும் அப்படித்தான் வைஃப்  இருக்கணும்னு நினைப்பாங்க, உங்களுக்கு மட்டும் காண்டு ஆகுதா?”

“மத்தவனை பத்தி எனக்கு கவலை இல்லை. என் வைஃப் இப்படித்தான் இருக்கணும்”

“எப்படியெப்படி இருக்கணும்னு சொல்லுங்க இருந்துக்கிறேன்”

“பேச்சு மாறக் கூடாது” எச்சரிக்கை போல சொன்னான்.

“ரொம்ப பில்டப் பண்ணாம சொல்லுங்க”

“நேத்து நான் மட்டும்தான் உன்னை கிஸ் பண்ணினேன். எனக்கு பதிலுக்கு ஒன்னு கூட கிடைக்கல. இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் என்னை தோக்கடிக்கிற அளவுக்கு இருக்கணும் நீ” என்றான்.

அவனை பாவமாக பார்த்தவள் தடுமாற்றதுடன் படுத்து விட்டாள். அவளின் முதுகின் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டவன், “என்ன மீரா இப்படி முதுகு காட்டி படுத்திட்ட, பிடிக்கலையா என்னை?” எனக் கேட்டான்.

“பிடிச்சிருக்குன்னு சொன்னேன்தானே?” என சின்னக் குரலில் சொன்னாள்.

“அப்புறம் உன்கிட்ட எனக்கு தோன்ற மாதிரி என்கிட்ட உனக்கு ஏதும் தோனலையா?” என கிசு கிசுப்பாக கேட்டான்.

மெல்ல அவன் பக்கமாக திரும்பியவள், “எனக்கு எந்த யோசனையும் இல்லை சஞ்சய். உங்க வீட்ல நம்மள அக்செப்ட் பண்ணிக்கல. என் அம்மா அண்ணி பத்தி யோசனை. நாமளும் ஸ்டெடி ஆகலையா…” என சொல்லி அவனைப் பார்த்தாள்.

“எவனுக்குதான் கஷ்டம் இல்லை? அதுக்காக வாழாம போயிட்டா பிரச்சனை சரியாகிடுமா என்ன? அந்தந்த வயசுல அதது கரெக்ட்டா நடக்கணும்”

“நமக்கொன்னும் அப்படி வயசாகிடல”

“எல்லாம் எல்லாத்துக்கும் ஏத்த வயசுதான்”

“குழந்தைலாம் வந்திட்டா சமாளிக்க கஷ்டம் சஞ்சய்”

“சமாளிக்க கஷ்டம்னு யார் சொன்னாலும் கடுப்பாகுது மீரா” என கோவமாக சொல்லி தள்ளி படுத்துக் கொண்டான்.

“அச்சோ சஞ்சய், நான் எதுவும் மீன் பண்ணல”

“பேசாம தூங்கு” என அவன் சலிப்பாக சொல்ல, அதற்கு மேல் என்ன பேசுவது எனத் தெரியாமல் அவளும் உறங்க முற்பட்டாள்.

கடந்த சில நாட்களாக அவளை அணைத்துக் கொண்டுதான் அவன் உறங்குவான். இன்று இப்படி தள்ளியிருக்கவும் அவளுக்கு வருத்தமாக இருந்தது. சற்று நேரத்தில் அவனாகவே வந்து அவளை அணைத்துக் கொண்டான்.

“கோவம் போச்சா சஞ்சய்?” எனக் கேட்டாள்.

“அதெல்லாம் அப்படியேதான் இருக்கு. அது வேற டிபார்ட்மென்ட் இது வேற டிபார்ட்மென்ட்” என அவன் சொல்ல, அவள் சிரித்துக்கொண்டாள்.

காலைப் பொழுது வழக்கம் போல அவர்களுக்கு செல்ல, ஐஸக் பர பரப்பாக உள்ளே ஓடி வந்தார். பைரவ் மஜும்தார் இவர்களின் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல் சொல்லவும், அவர்களிடமும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

பைரவ் அவரின் மனைவியோடு வந்தார். சஞ்சயின் பின்புலம் இப்போது அவருக்கு தெரிந்திருக்க, ஏன் முன்பே சொல்லவில்லை என உரிமையாக கோவித்துக் கொண்டார். மாலில் மீராவிடம் மந்திரியின் அக்கா மகன் அத்து மீறியதால்தான் சஞ்சய் அவனை அடித்து விட்டான் என்பதும் அவருக்கு இப்போதுதான் தெரிந்திருக்க, சஞ்சயை தவறாக நினைத்து விட்டதற்காக மன்னிப்பு கேட்டார்.

‘போரோ பாபுவா இது?’ என்பது போல வியந்து பார்த்திருந்தார் ஐஸக்.

ஏதாவது பருக தருகிறேன் என நகரப் போன மீராவை திருமதி பைரவ் விடவில்லை. மீராவுக்கு உதவாமல் போனதற்காக கணவரை கடிந்து கொண்டதாக அவர் சொன்னதை ஐஸக் மொழி பெயர்த்து சொன்னார்.

பைரவின் மனைவி சாந்திநிகேதனை பூர்வீகமாக கொண்டவர், அங்குள்ள பழக்கப் படி ‘பொஷொந்தோ உத்ஷொப்’ (வசந்த உற்சவம் ) பண்டிகையை சிறப்பாக இங்கு கொண்டாடுவார். கிட்டத்தட்ட ஹோலி பண்டிகை போலவே இருக்கும். அடுத்த வாரம் நடக்கவிருக்கும் விழாவுக்கு இருவரும் கண்டிப்பாக வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள் என பெரிய மனதுடன் சொல்லி மனைவியுடன் புறப்பட்டார் பைரவ்.

ஐஸக்கும் விழா பற்றி சொல்லி கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள் என சொல்லி சென்றார்.

“வீடு தேடி வந்து கூப்பிடிருக்காங்க, அன்னிக்கு ஆஃப் வேணும்னு இப்பவே சொல்லி வச்சிடு மீரா” என்றான் சஞ்சய்.

“எனக்கு இப்படி புது இடத்துல ஃபங்ஷன் அட்டென்ட் பன்றதெல்லாம் என்னவோ போல இருக்கும் சஞ்சய். சண்டே வேற…” என இழுத்தாள் மீரா.

“போகலைனா மரியாதையா இருக்காது, கூட நான் இருக்கும் போது நீ ஏன் ஷை ஆகற? கண்டிப்போ போறோம்” என முடிவாக சொல்லி விட்டான்.

அடுத்து வந்த சனிக்கிழமை சஞ்சய்க்கு விடுமுறை, மீராவுக்கு காலை ஷிப்ட்  என்பதால் அவளை மருத்துவமனையில் விட்ட கையோடு மாலினியின் வீட்டுக்கு சென்று விட்டான்.

மதியம் அவளை கூப்பிட வரவா என கைப்பேசிக்கு அழைத்து கேட்டான். திடீரென வார்டில் பணிச்சுமை அதிகமாக மீராவுக்கு அன்று ஜெனரல் ஷிப்ட்டாக மாற்றப் பட்டு விட்டது. அப்படி இரண்டு முறை ஜெனரல் ஷிப்ட் செய்தால் கூடுதலாக ஒரு நாள் விடுப்பு கிடைக்கும் என்பதால் மீராவும் ஒத்துக் கொண்டு விட்டாள்.

சரிதான் என மாலினியின் வீட்டிலேயே இருந்து விட்டான் சஞ்சய். மாலினியின் அம்மாவுக்கு இவனை மிகவும் பிடித்து விட்டது. காலையில் மாலினி வேறு வேலையாக இருக்க, அவளின் அம்மாவோடு சிறிது நேரம் பேசியவன் பின் பயிற்சி சம்பந்தமாக மாலினி பார்க்க சொன்ன காணொளிகளை பார்த்துக் கொண்டிருந்தான்.